முக்திக்கு முந்தைய நிலையில் பக்தி
ஒரு தகப்பனார் இருக்கிறார். தம் பெண்ணுக்கு நல்ல வரனாகப் பார்த்து கல்யாணம் செய்ய வேண்டும் என்று அலைகிறார். வரன் கிடைக்கிறான். கல்யாணம் நிச்சயமாகிறது. கல்யாணமானவுடன் பெண்ணை மாப்பிள்ளை அழைத்துக் கொண்டு போய்விடப்போகிறான். கன்னிகாதானம் செய்கிறபோது தகப்பனாரின் மனசு எப்படி இருக்கும்? பெண்ணுக்கு நல்ல வரன் கிடைத்ததே என்ற சந்தோஷம் ஒரு பக்கம் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதை அமுக்கிவிடுகிறமாதிரி, இத்தனை காலம் வளர்த்த பெண் நம்மை விட்டுப் போகிறாளே என்ற துக்கம்தான் அதிகமாக இருக்கும். இவரேதான் வரன் பார்த்தார்; தேடித்தேடிப் பார்த்தார்; கடன் கிடன் வாங்கி மனஸாரச் செலவழித்துக் கல்யாணமும் செய்கிறார். ஆனாலும் கன்னிகாதான சமயத்தில் அவருடைய மனஸை முறுக்கிப் பிழிகிற மாதிரி இருக்கிறது; கண்ணில் ஜலம்கூட வந்துவிடும்போல் இருக்கிறது.
முக்தி நிலையை அடைய அருகதை பெற்ற சாதனைகளை முமுக்ஷு என்பார்கள். இடையறாத பக்தி செலுத்திச் செலுத்தி ஒருவன் இந்த அருகதையைப் பெற்றுவிடுகிறான். அவனுக்கு முக்தி கிடைக்கிற சமயம் கைக்கு எட்டினாற்போல் வந்துவிடுகிறது. அப்போது அவன் ஒரு தர்ம சங்கடமான நிலையில் இருக்கிறான். கன்னிகாதானம் செய்து தருகிற தகப்பனாரின் மனநிலை மாதிரிதான் இவனுக்கும் இருக்கிறது. தகப்பனாரே வரன் தேடி அலைந்த மாதிரி இவனேதான் முக்திக்காகப் பெரிய பிரயாசை செய்து பக்தி மார்க்கத்தில் எல்லா அநுஷ்டானமும் செய்தான். அதனால் மனசு பூரணமாகச் சுத்தமாகிப் பரமாத்மாவில் இரண்டறக் கரைகிற நிலை வந்துவிட்டது. கரைந்தபின் பகவானும் இல்லை, பக்தியும் இல்லை. மணப்பெண்ணை வரனுக்குக் கொடுக்கிற தகப்பனாருக்கு அழுகை வருகிற மாதிரி மணப்பெண்ணை பரமாத்மாவுக்குத் தத்தம் செய்கிற முமுக்ஷுவுக்கும் பெரிய துக்கம் உண்டாகிறது.
இந்தத் துக்கத்தை சுலோகத்தில் வெளியிடுகிறார் ஒருகவி. ‘பஸ்மோத்தூளன பத்ரமஸ்து பவதே’ என்று ஆரம்பமாகும் சுலோகம் அது.
பரமேசுவரன் என் பக்தியில் மகிழ்ந்து என்னை மோக்ஷத்தில் சேர்க்க இருக்கிறான். இனிமேல் நான் விபூதி பூசிக் கொண்டும் ருத்ராக்ஷம் போட்டுக் கொண்டும், பூஜை ஜபம் முதலிய படிகளில் ஏறிப்போக வேண்டியதில்லை. “ஏ விபூதியே! போய் வா! உனக்கு க்ஷேமம் உண்டாகட்டும்! சுபமான ருத்ராக்ஷ மாலையே, உனக்கும் பிரியா விடை கொடுக்கிறேன்; ஹா, பக்தி மார்க்கப் படிகட்டுகளே, உங்களையும் விட்டுப் பிரிகிறேன். எனக்குப் பக்தி, பகவத் குணாநுபவம் என்கிற ஆனந்த பிரபஞ்சத்தையே தந்த உங்களை எல்லாம் சிதைத்துப்போடுகிற மோக்ஷம் என்கிற மகாமோகத்தில் தோய்ந்து போகிறேன்” என்கிறார்.
மோகத்தைப் போக்குவதுதான் மோக்ஷம். ஆனால் பக்தி இன்பத்தையும், அதற்கான சாமக்கிரியைகளையும் கைவிட்டு விட்டு மோக்ஷம் பெற வேண்டும் என்கிறபோது, இந்தப் பரம பக்தருக்கு மோக்ஷமே மோகமாகத் தோன்றுகிறது!
இதேபோல் ‘கிருஷ்ண கர்ணாமிருத’த்திலும் ஒரு சுலோகம் இருக்கிறது. பக்தி முற்ற முற்றக் கருமம் நசிக்கிறதைப் பற்றியது இந்த சுலோகம். (‘ஸந்த்யாவந்தன பத்ரமஸ்து பவதே, என்று ஆரம்பிக்கும் அது.) கிருஷ்ண பக்தி அதிகமாக ஆக லீலாசுகரால் ஸந்தியா வந்தனம், பித்ரு தர்ப்பணம் ஆகிய கர்மாநுஷ்டானங்களைக்கூடச் செய்ய முடியவில்லை. அவற்றிடமிருந்து பிரியா விடை பெறுகிறார்.
முதல் நிலையில் அவரவருக்கான கர்மத்தை சாஸ்திரப் பிரகாரம், ‘இது வேண்டுமா, வேண்டாமா?’ என்று எதிர்க்கேள்வி கேட்காமல் அநுஷ்டிக்க வேண்டும். இதனால் மனத்தில் விருப்பு வெறுப்பு குறைகிறது; சித்தசுத்தி ஏற்படுகிறது. அழுக்கு நீங்க நீங்க மனசு ஈசுவரனிடம் அதிகமாக ஈடுபட்டு ஒருமுகமாகத் தொடங்குகிறது. இதுதான் பக்தி! இரண்டாம் நிலை. பக்தி முற்றும்போது ஞானம் சித்திக்கிறது. இது இறுதி நிலை.
கர்மத்தையோ, பக்தியையோ நாமாக விடவேண்டியதில்லை. பழுத்த பழம் தானாகக் காம்பிலிருந்து விடுபடுகிற மாதிரி கர்மம், பக்தி எல்லாம் அததுவும் பூரணமடைந்தவுடன் தாமாகவே நழுவிப்போகும்.
பக்தியை விட்டு நேராக முக்திக்கு நாம் முயற்சி பண்ண வேண்டும் என்பதே இல்லை. பக்தி பண்ணிக்கொண்டிருந்தாலே போதும்; தானே அதுவாக முக்திக்கு அழைத்துப் போகும். எனவே முக்தி வேண்டும் என்று பிரார்த்திக்காமல் பக்தி வேண்டும் என்று வேண்டிக்கொண்டேயிருந்தால் போதும்! கோபால கிருஷ்ண பாரதியார் சொன்னபடி ‘பக்தி பண்ணிக் கொண்டிருந்தால் முக்தி பெறலாமே!’
“என்னையே எனக்குக் கொடு”
உண்மையான பக்தன் ஒருவன், பரமேசுவரனுக்குப் பூஜை செய்ய விரும்புகிறான். உடனேயே அவனுக்கு ஒரு பெரிய சந்தேகம் வந்துவிடுகிறது. ஈஸ்வரனிடமே கேட்கிறான்: “ஈச்வரா! நான் உனக்கு உபசாரம் செய்வதாக நினைத்துப் பூஜை செய்தாலும் உண்மையில் அபசாரம் அல்லவா செய்வதாகத் தோன்றுகிறது? திரிலோகமும் வியாபித்த உன் திருவடியை நான் ஓர் உத்தரணி தீர்த்தத்தால் அலம்ப முடியுமா? விசுவாகாரமான உன் சரீரத்திற்கு இந்த சிறிய வஸ்திரத்தைக் கட்டி மூட முடியுமா! உனக்கு நமஸ்காரம் பண்ணினால், என் காலை எந்தப் பக்கம் நீட்டினாலும் அங்கேயும் தான் நீ இருக்கிறாய். ஆனபடியால் உனக்கு நேரே காலை நீட்டிய தோஷம் அல்லவா எனக்கு ஏற்படுகிறது? சரி, பூஜையே வேண்டாம் என்று பிரார்த்தனை செய்யப் பார்த்தால், எல்லாம் அறிந்த ஸர்வக்ஞனான உன்னிடம் பிரார்த்திப்பதும் அபசாரமாக அல்லவா ஆகிறது? பிரார்த்தனை என்றால் உனக்குத் தெரியாதவற்றை நான் கேட்பதாகத்தானே ஆகும். நீ ஸர்வக்ஞன் என்பதற்கு என் பிரார்த்தனையே குறைவு உண்டாக்குகிறது. இருந்தாலும் பிரார்த்தனை செய்யவேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிற அளவுக்கு நான் குறை உள்ளவனாக இருக்கத்தானே செய்கிறேன்? அதனால் அந்தக் குறை நீங்குவதற்காக உன்னிடம் பிரார்த்திக்கிறேன். அது சரி, எல்லாமான உன்னிடம் எதைப் பிரார்த்திப்பது எல்லாமான நீயேதான் நானாகவும் ஆகியிருக்கிறாய் என்று தெரியாமல் என்னைக் குறைவு படுத்திக் கொண்டிருக்கிறேனே. இந்தக் குறையை நீக்கு என்றே பிரார்த்திக்கிறேன். நீ அகண்ட ஆனந்த ஸ்வரூபம்; உன்னைத் தவிர வேறில்லை என்று வேதம் சொல்கிறது. இருந்தாலும் பூரண ஆனந்தமாக உனக்கு வேறாக இப்படிக் கோணலும் மாணலுமாகக் குறையோடு நான் ஒருத்தன் இருப்பதுபோல் தோன்றுகிறதே? இல்லாவிட்டால் அழுதுகொண்டு இப்படி நான் பிரார்த்தனை பண்ண வரவேண்டியதே இல்லையே! இப்படி நான் உனக்கு வேறாக இருப்பதாகத் தோன்றுவதைப் போக்கடி. போக்கினால் நீ தான் எல்லாமும், நீதான் நானும். அதாவது நான்தான் எல்லாமும் என்று ஆகும். அதாவது உன்னிடம் நான் இதைத்கொடு அதைக்கொடு என்று வெளி வஸ்துக்களைக் கேட்கவில்லை. என்னையே எனக்குக் கொடு என்றே பிரார்த்திக்கிறேன்!” – இப்படிச் சொல்கிறார் அந்த பக்தர். இந்த ரீதியிலேயே ‘சிவ மானஸிக பூஜா’ என்ற ஸ்தோத்திரத்தில் பிரார்த்தித்திருக்கிறார் ஸ்ரீ ஸதாசிவ பிரம்மேந்திராள்.
மஹ்யம் தேஹி ச பகவன்
மதீயமேவ ஸ்வரூபம் ஆனந்தம்
‘என் ஆனந்த ஸ்வரூபத்தையே எனக்குக் கொடு’ என்கிறார்.
இப்போது நாம் எல்லோரும் நம் நிஜ ஸ்வரூபத்தை விட்டுவிட்டு வேஷத்தில் இருக்கிறோம். நமக்கு வேண்டியவர்களை விட்டுவிட்டால் தவிக்கிறோமே, நம்மையே விட்டுவிட்டதற்கு எவ்வளவு தவிக்க வேண்டும்? நம் ஆனந்த ஆத்ம ஸ்வரூபத்தோடு அதுவே நாமாக எப்போது கலக்கப்போகிறோம் என்ற தவிப்பும், அதைப்பற்றிய நினைப்பும் நமக்கு ஸதா இருக்கவேண்டும். பரமாத்மாவுடன் கலப்பதற்காக இப்படிச் சகிக்க முடியாமல் தவிப்பதுதான் உண்மையான பிரேமை. அந்தப் பிரேமைக்குத்தான் பக்தி என்று பெயர்.
இதற்கு முதல்படியாக வெளிப்பூஜை, கோவில் வழிபாடு எல்லாம் வேண்டியிருக்கிறது. உலக நினைப்பே ஓயாத காரியமாக இருப்பவர்களுக்கு ஆரம்பத்தில் இவைதான் பரமாத்மாவை நினைக்கச் சாதனங்களாகும். இந்தக் கட்டத்தில் ஸ்வாமி கோவிலில் மட்டுமின்றி எல்லா இடத்திலும் வியாபித்திருக்கிறார்; நாமும்கூட அவரேதான் என்று நாம் உணராவிட்டாலும் பரவாயில்லை. மூல விக்கிரகத்தில்தான் ஸ்வாமி இருக்கிறார் என்று நினைத்து, கோவில் தூணிலேயே நாம் பிரசாதக் கையை துடைத்துவிட்டு வந்தாலும் பாதகமில்லை. மூல விக்கிரகத்திலாவது ஸ்வாமி இருக்கிறார் என்று பயப்பட்டு அங்கே கையைத் துடைக்காத அளவுக்கு வந்திருக்கிறோமல்லவா? ஸ்வாமி இல்லவே இல்லை என்று நினைக்காமல் எங்கேயோ ஓரிடத்திலாவது ஸ்வாமி இருக்கிறார் என்று பயபக்தியுடன் ஆரம்பித்தாலே போதும் – சிரத்தை தளராமல், நம்பிக்கை மாறாமல், அப்பியாசம் செய்துகொண்தெயிருந்தால், நாளாவட்டத்தில் ஸ்வாமி எங்கும் இருக்கிறார், எல்லாமாக இருக்கிறார் என்பது புத்திக்குப் புரியும். புத்திக்குப் புரிவது அநுபவமாக ஆவதற்கு, “என்னையே எனக்குக் கொடு” என்று பிரார்த்தித்துக்கொண்டேயிருக்க வேண்டும். ஞானாம்பிகை கிருபை செய்வாள்.
பகவத்பாதர் தரும் பக்தி லட்சணம்
பக்தனாகி இருப்பவனும் பகவான்தான் என்ற உணர்வோடு, ஸாராம்ஸத்தில் அவன் வேறு, தான் வேறு அல்ல என்ற அநுபவ ஞானத்தோடு, ஈசுவரனை பக்தியோடு அநுபவித்த அத்வைத ஞானிகள் பலர் இருந்திருக்கிறார்கள். மதுஸூதன ஸரஸ்வதி, அப்பைய தீக்ஷிதர், ஸதாசிவ பிரம்மேந்திராள், பகவந்நாம போதேந்திராள் ஆகிய பரம ஞானிகள் இவ்விதத்திலேயே பக்தி செய்திருக்கிறார்கள். நிர்குணமாக இருக்கிற பிரம்மத்துக்கும் அனந்த கல்யாண குணம் கொண்ட ஈஸ்வரனுக்கும் இடையே இவர்கள் எந்த பேதமும் காணவில்லை. நிர்குணமாக, நிஷ்களமாக எந்த வஸ்துவை யோகிகள் தியானத்தில் அநுபவிக்கிறார்களோ, அதையே யமுனா தீரத்தின் மணல் வெளியில் நீலஜோதி வெள்ளமாக ஓடி விளையாடும் கண்ணனாக நான் கண்டு மகிழ்கிறேன் என்கிறார் மதுஸூதன ஸரஸ்வதி. ஞானிகள் எல்லாத் தெய்வ வடிவங்களும் ஒன்றேயான பிரம்மம்தான் என்று கண்டு கொண்டவர்கள். என்றாலும் அவற்றில் பூர்வ காலத்தில் தங்கள் மனத்தைக் கவர்ந்த ஒரு ரூபத்தில் ஞானம் வந்த பின்னும் விசேஷ பக்தி செலுத்தினார்கள்.
அத்வைத ஞான சமுத்திரமான சங்கர பகவத்பாதர்கள் அத்தனை தெய்வங்களையும் பிரம்ம ஸ்வரூபமாகவே வைத்து ஸ்தோத்திரம் செய்திருக்கிறார்.
பக்தியின் லக்ஷணத்தையும் பகவத் பாதர்கள் ‘சிவாநந்த லஹரியில்’ வெகு அழகாக வர்ணித்திருக்கிறார். ஐந்து உதாரணங்களைக் கொடுத்து வர்ணித்திருக்கிறார். ‘அழிஞ்சில் விதை எப்படித் தாய் மரத்துடனேயே ஒட்டிக் கொள்கிறதோ, ஊசி எப்படி காந்தத்தால் கவரப்படுகிறதோ, பதிவிரதை எப்படித் தன் பதியின் நினைவிலேயே ஆழ்ந்திருக்கிறாளோ, கொடி எப்படி மரத்தைத் தழுவி வளர்கிறதோ, நதி எப்படி சமுத்திரத்தில் கலக்கிறதோ அப்படியே பசுபதியின் பாதார விந்தங்களில் ஸதா சர்வ காலமும் மனத்தை அமிழ்த்திருப்பது தான் பக்தி என்பது’ என்கிறார் ஸ்ரீ ஆசார்யாள். (“அங்கோளம் நிஜ பீஜ” என்கிற சுலோகம்)
ஏறு அழிஞ்சில் என்று ஒரு மரம் உண்டாம். அதன் காய் முற்றியவுடன் பூமியில் விழுந்து உடையும். உடனே உள்ளே இருக்கிற விதைகள் ஏதோ ஓர் ஆகர்ஷண சக்தியால் நகர்ந்து நகர்ந்து வந்து மறுபடியும் தாய் மரத்தோடேயே ஒட்டிக் கொள்ளும். ஒட்டிக் கொண்டபின் மூலமான மரத்துக்குள்ளே மறைந்துவிடும் என்கிறார்கள். பகவானிடமிருந்து பிரிந்து வந்திருக்கிற நாம் இப்படியே எப்போதும் அவன் பக்கமாக நகர்ந்து நகர்ந்துபோய் முடிவில் அவனிடம் ஒட்டிக் கொண்டு ஒன்றாகிவிட வேண்டும். ஊசி காந்தத்தை நோக்கிப் பாய்த்து ஒட்டிக் கொள்வது அடுத்த உதாரணம். காந்தத்தில் சேர்ந்த ஊசிக்கும் காந்த சக்தி உண்டாகி அது மற்ற இரும்புப் பொருட்களை இழுப்பதுபோல், பக்தனுக்கும் பகவானின் குணங்களும் சக்திகளும் உண்டாகும் என்று இந்த உதாரணத்தால் காட்டுகிறார். அடுத்தது பதிவிரதையின் உதாரணம். பதிவிரதையின் நினைவு, பேச்சு, காரியம் அனைத்தும் பதியைச் சுற்றியே இருப்பதுபோல நம் மனோ, வாக்கு, காரியங்கள் பகவானையே பற்றி இருக்க வேண்டும் என்பது இதிலிருந்து தெரிகிறது. பதியை மூல சுலோகத்தில் ‘விபு’ என்கிறார். சர்வ வியாபகன் என்பது இதன் பொருள். இதனால் பகவானையே ஏதோ ஓர் இடத்தில் மட்டும் இல்லாமல், எங்குமாக எல்லாமாக இருப்பதாக பாவிக்க வேண்டும் என்று உணர்த்துகிறார். அடுத்தபடியாக கொடியின் உதாரணம். கொழு கொம்பைச் சுற்றிக் கொள்கிற கொடியை நாம் சிறிது விலக்கிப் பிரித்துவிட்டால்கூட அது படாத பாடு பட்டுக் கொஞ்ச நேரத்திலேயே மறுபடியும் கொம்பை வளைத்துச் சுற்றிக் கொண்டு விடும். நம் மனசை ஈசுவர ஸ்மரணையிலிருந்து அலைக்கழிக்கிற இடைஞ்சல்கள் எத்தனை வந்தாலும் நம் லக்ஷியத்தைப் பிடிவாதமாகப் பிடித்திருக்க வேண்டும் என்பதை இந்த திருஷ்டாந்தம் உணர்த்துகிறது. கடைசியில் நதி–சமுத்திர உபமானம். இதுவே பரம அத்வைதம். கடல்தான் மழையாக விழுந்து பிறகு ஆறாகியிருக்கிறது. இரண்டும் வேறு வேறு அல்ல. ஒரு நதியானது எந்த மலை உச்சியில் பிறந்தாலும், அலுக்காமல் சளைக்காமல் ஓடி ஓடி வந்து கடைசியில் கடலில் கலந்து தன்னுடைய தனிப் பெயரையும் உருவத்தையும் இழந்து கடலாகவே ஆகிவிடுகிறது. கடல் அதை எதிர்கொண்டு அழைத்துக் கொள்கிறது. இதனால்தான் நதி சங்கமங்களுக்கு சிறிது தூரம் இப்பாலே அந்த ஆற்றின் ஜலம் உப்புக் கரிக்கிறது. இப்படியே நாமும் நிஜமான பக்தி செலுத்தினால் கருணாசமுத்திரமான பகவான் முன்னே வந்து நம்மை ஆட்கொண்டு தானாக்கிக் கொள்வான்.
முதலில் பொருள் வேண்டும், பவிஷு வேண்டும் என்று வியாபார ரீதியில் பக்தி செய்ய ஆரம்பித்தாலும், பகவானின் குணவிசேஷம் காரணமாக அவனுக்காகவே அவனிடம் அன்பு செலுத்துகிற பக்குவத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பெறுவோம். கடைசியில் குண விசேஷம் எதுவும் இல்லாத பரமாத்மா ஸ்வரூபமாகவே நாமும் அவனில் கரைந்து அவனாகவே ஆவோம்.
லோக ரீதியில் நன்றாக வாழ்க்கை நடத்துவதற்கும் சரி, த்வைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் முதலிய ஸித்தாந்தங்களின் அநுபவத்துக்கும் சரி, பக்தி என்பது இன்றியமையாததாகிறது. மோக்ஷம் அடையப் பின்பற்றும் உபாயங்களில் தலைசிறந்தது பக்தியே என்கிறார் ஸ்ரீ பகவத்பாதர். ஆத்ம ஸ்வரூபத்தை உணர்வதுதான் பக்தி என்றும் அதையடுத்துச் சொல்கிறார்.
மோக்ஷஸா தன ஸாமகர்யாம் பக்திரேவ கரீசயஸீ |
ஸ்வஸ்வரூபா நுஸந்தானம் பக்திரித்யபிதீயதே ||