சிவசக்தியின் ஐக்கிய ஸ்தானம்
“அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்று ஒளவைப்பாட்டி சொல்கிறார் என்றால், அந்தத் தெய்வமே அன்னையும் பிதாவுமாகி – ஒரு பாதி அன்னை, ஒருபாதி பிதா என்று – அர்த்தநாரீசுவரராக உட்கார்ந்திருக்கிறது. இது நமக்குப் பரம லாபம் என்று கிட்டே போகிறோம். போனால் அப்புறம் இதனாலேயே சில குழறுபடிகள், சண்டைகூட, உண்டாகிவிடுகின்றன. காலில் போய் விழலாம் என்றால், ஒரு கால் ஈசுவரனுடையது, மற்றது அம்பாளுடையது என்று இருக்கிறது. இப்படிக்கு ஒன்றுக்குமேல் ஆசாமி இருந்தால், உடனே நம்மையறியாமல் இது உசத்தியா அல்லது அது உசத்தியா, என்று ஒப்புப் பார்க்கிற எண்ணம் (Comparison) உண்டாகிவிடும். இது உண்டானால் அனர்த்தம்தான். எந்தக் காலில் விழுவது என்றே தெரியாது. அர்ச்சனை செய்யப்போனால். இவருக்கு ஒரு தினுசு புஷ்பத்தால் அர்ச்சனை பண்ண வேண்டும்; அவளுக்கு இன்னொன்றால் பண்ணவேண்டும் என்கிறார்களே, ‘இந்தப் பக்கத்துப்பூ அந்தப் பக்கத்தில் விழுந்தால் அபசாரமாகிவிடுமோ?’ என்று கலக்கமாயிருக்கிறது. ‘கடாக்ஷம் வேண்டும்’ என்று கேட்கிறபோதே வலது கண்ணா, இடது கண்ணா என்று குழப்பம்.
குழப்பம் போதாதென்று சண்டையே மூட்டிவிடுகிறார் ஒருகவி. அப்பைய தீக்ஷிதரின் வம்சத்தில் பிறந்து மதுரையில் மந்திரியாகப் பரிபாலனம் செய்த நீலகண்ட தீக்ஷிதர்தான் அவர். “ஆனந்த ஸாகர ஸ்தவம்” என்று மீனாக்ஷியைத் துதிக்க ஆரம்பித்தவர், பார்வதீ பரமேசுவரர்களான தம்பதியருக்குள் கலகம் மூட்டி சந்தோஷப்படுகிறார். “அம்மா! இதென்ன உன் பதி அக்கிரமக்காரராக இருக்கிறார்? உன் புகழையெல்லாம் அவர் அல்லவா திருடிக்கொண்டிருக்கிறார்? காமதகனர், மன்மதனை எரித்தவர் என்று பெயர் வாங்கியிருக்கிறாரே, எரித்தது நெற்றியின் நடுவில் இருக்கிற கண் அல்லவா? அது வலது இடது இரண்டுக்கும் பொது. எனவே உனக்கும் அந்த நெற்றிக் கண்ணில் பாதி உண்டு. வெற்றியிலும் பாதி உன்னுடையதாக இருக்க, அவர் மட்டுமே பேரை அடித்துக்கொண்டு போய்விட்டாரே! போனால் போகிறது. இதிலாவது பாதி உரிமை அவருக்கு இருக்கிறது. இதைவிட, அநியாயம் அவரைக் ‘காலகாலன்’ என்பதுதான். காலனை உதைத்தது எந்தக் கால்? இடது கால் அல்லவா! அது முழுவதும், நூறு பெர்ஸெண்டும் உன்னுடையதல்லவா? நீ செய்த கால சம்ஹாரத்தை, அவர் தமதாகத் தஸ்கரம் பண்ணியிருக்கிறாரே!” என்கிறார். ஜனனம், மரணம் இரண்டையும் கடக்க முறையே காமஜயம், காலஜயம் பண்ண வேண்டுமானால், அம்பாள் அருள் இன்றி முடியாது என்கிற பெரிய தத்துவத்தைக் கவித்வ ஸ்வாதந்திரியத்தோடு, ஸ்வாதீனத்தொடு இப்படிச் சொல்கிறார்.
ஆனால், அவர் ரொம்பப் பெரியவர். சண்டை மூட்டி விட்டதோடு அவர் நின்றுவிடவில்லை. எல்லாச் சண்டைகளும் (வாழ்க்கைப் போராட்டமே) தீர்ந்து போகும்படியான பரமப்பிரேமை, இந்த அர்த்தநாரீசுவரருக்குள் எங்கே ஊற்றெடுக்கிறது என்பதையும், ‘சிவலீலார்ணவ’த்தில் சொல்கிறார். (‘அசக்யமங்காந்தர’ என்று தொடங்கும் சுலோகம்). பரமாத்மாவின் அன்பு ஊற்றெடுக்கும் அந்த இடத்தை நினைத்து விட்டால் நமக்கு ஒரு குழப்பம், குறைவும் உண்டாகாது. அப்படியே அதில் ஊறிப்போகவே தோன்றும். அவர் இரத்தினச் சுருக்கமாகச் சொல்வதை விவரித்துச் சொன்னால்தான் நமக்குப் புரியும்.
அர்த்தநாரீசுவர ரூபத்திலிருந்து பார்வதி – பரமேசுவரர்களின் எல்லா அங்கங்களையும் பிரித்துப் பிரித்து பாகம் பண்ணுகிறோம். ‘மாதொரு பாகன்’ ‘உமையொரு பாகன்’ என்றெல்லாம் அவருக்கும், ‘பாகம் பிரியா’ என்றே அவளுக்கும் பெயர்கள் இருந்தாலும்கூட, இது இவர் கண்– அது அவள் கண்; இது இவர் காது – அது அவள் காது என்று இப்படிப் பாகம் பிரித்துப் பார்க்க முடிகிறது. இந்தக் கூறு இவருடையது; அந்தக் கூறு அவளுடையது என்று மொத்தத்தையும் பப்பாதியாக பிரிக்க முடிகிறது. இப்படி இரண்டு ஆசாமிகளைக் கொண்டுவந்தவுடனே ‘கம்பேர்’ பண்ணுகிற அனர்த்தம். ‘அடாடா, அப்படியானால் பிரித்துச் சொல்ல முடியாமல் ஒரிடமும் இவர்களிடம் இல்லையா?’ என்று தேடுகிறோம்.
பிரிக்க முடியாமல் இருப்பது எது? அணு (Atom) தான். அதற்கு மேலே பிரித்துக் காட்ட முடியாது என்று நம்மை நிறுத்தி வைப்பது அணுதான். (பிரிக்க முடியாத) அதைப் பிளந்துதான் இப்போது எத்தனையோ உற்பாதங்களைப் பண்ணியிருக்கிறார்கள்! இப்படி உபாதம் பண்ணுவதால் எதிர்த்தரப்பு, சுயத்தரப்பு என்ற பேதமில்லாமல் எல்லாம் சர்வ நாசமாகிவிடும் என்று இரண்டு கட்சிக்காரர்களுக்கும் தெரிந்தும்கூட, ‘அப்படியும் உண்டாகிவிடுமோ?’ என்று பீதியையாவது உண்டாக்கலாமே என்று உண்டாக்கி வருகிறார்கள். (இவ்விஷயம் இருக்கட்டும்) இப்படி அணு மாத்திரமாக ஒன்று அர்த்தநாரீசுவர ஸ்வரூபத்தில் இருந்து விட்டால் போதும், பிரச்னை தீர்ந்தது. அதை ஸ்மரித்து விடலாம். ஏனென்றால் ‘இவளுக்கு அவருக்கு’ என்று இதை பாகம் போட முடியாது. அது இரண்டு பேருக்கும் சொந்தமாயிருக்கும். ஒப்புவமை, ஒருத்தரை விட்டோம், ஒருத்தருக்கு அபச்சாரம் செய்தோம் என்கிற தோஷங்கள் உண்டாவதற்கில்லை. அப்படி அணுப்பிரமாணமாக ஒன்று இந்த இரண்டுக்கும் மத்யஸ்தானத்தில் இருந்துவிட்டால் போதும். எவ்வித மனக்கலக்கமும் இல்லாமல் அதைப் பிடித்துக் கொண்டு அம்மை அப்பனின் கூட்டு அநுக்கிரகத்தைப் பெற்றுவிடலாமே என்று தேடுகிறோம்.
இங்கேதான் கவி நமக்கு சகாயம் பண்ண வருகிறார். ஒரு சரீரத்துக்கு மத்தியில் இருக்கிற இருதயத்துக்கும் மத்தியில் ஒரு அணு இருக்கத்தான் செய்கிறது. அணு என்றுகூட அதைச் சொல்ல முடியாது. அணுவையாவது ரொம்பவும் நுண்ணிய மைக்ராஸ்கோப் வைத்துப் பார்த்துவிடலாம். உடனே மானஸிகமாகவாவது அதில் இரு பக்கங்களைப் பங்கு போடலாம். இருதய மத்தியில் இருக்கிற இந்த ‘அணு’வையோ எந்த சூக்ஷ்மதரிசினியாலும் காண்பிக்க முடியாது. ஆனால், இது இல்லாவிட்டால் மநுஷ்யனுக்கு எண்ணமே இல்லை. உணர்ச்சியே இல்லை.
இது என்ன? மனசு மனசு என்கிறோமே அதுதான். எந்த எக்ஸ் – ரேயிலாவது அதைக் காட்ட முடியுமா?
அர்த்தநாரீசுவரர் மட்டும் என்றில்லை. எந்த மூர்த்தியானாலும் அதன் மனசு என்று ஒன்று இருக்கிறதே அதைத் தியானிப்பதுதான் விசேஷம். உருவத் தியானம் ரொம்ப ரொம்ப அழகாகத்தான் இருக்கிறது. ஆரம்ப தசையில் அத்தியாவசியமாகத்தான் இருக்கிறது என்றாலும்கூட, இதிலும் நம் மனசு அந்தண்டை இந்தண்டை அசையாமல் ஒருமுகப்படுவதில்லை. ஆடத்தான் செய்கிறது. பரமேஸ்வர ஸ்வரூபம் என்றால் ஜடை, அதை விட்டு கங்கை, அதை விட்டு சந்திரன், நெற்றிக்கண், நீலகண்டம் இப்படி எண்ணமானது எதில் நிலைத்து நிற்பது என்று தெரியாமல் சலித்துக் கொண்டே இருக்கிறது. பரமாத்மாவின் மனசு என்று எடுத்துக் கொண்டாலோ அது ஒன்றாகவே இருக்கிறது. நம் மனசிலே நூறு கோடி எண்ணங்கள். அதில் முக்கால்வாசி தோஷமயமாகவே இருக்கும். தாயும் தந்தையுமாக இருக்கப்பட்ட அர்த்தநாரீசுவர மனசு இப்படியா இருக்கும்? அதில் பிரமப்பிரேமை என்கிற ஒரு எண்ணம் தவிர வேறென்ன இருக்கும்? கருணை ஒன்றே நிறைந்த அணுமாத்திரமான மனசு அது. அதைப் பிடித்துக் கொள்ளுங்கள் என்கிறார் கவி. அதிலே நம்மைக் கொண்டுபோய் நிறுத்துகிறவர்தான் குமாரஸ்வாமி. சிவ சக்திகளின் ஐக்கியத்தில் தோன்றிய அன்புக் குழந்தை.
தந்தையை மிஞ்சிய தனயன்
இமயமலை மகா பெரியதாக இருக்கலாம். கடுகு சின்னஞ் சிறியதாக இருக்கலாம். ஆனால், இமயமலைக்குள் இருக்கிற அத்தனை அவயவங்கள் கடுகுக்குள்ளும் இருக்கும். கடுகைக்கூட அப்படியே பிரித்துக் கொண்டே போகலாம். கடைசியில் ஒர் அணு வந்து நிற்கும். அப்புறம் பிரிக்க முடியாது. சர்வ வியாபகமாக, இத்தனை அண்ட சராசரங்களாகப் பிரிந்திருக்கிற சிவ – சக்திகளை பிரிக்க முடியாமல் ஓரிடத்தில் பார்க்க வேண்டும் என்றால், அது அவர்களது அன்பு ஊற்றெடுக்கிற இருதய மத்தியில்தான். பலவாக அவர்களிடமிருந்து விரிந்திருப்பதெல்லாம் ஒன்றாகக் குவிகிறது. இந்த அன்பு என்கிற அணுவில்தான்.
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ (து) ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவ (து) ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே
என்கிறார் திருமூலர். அன்பு ஒன்றே உள்ள அந்த மனஸைத் தெரிந்து கொண்டு விட்டால், அப்புறம் நம் மனஸும் நூறாயிரம் திசைகளில் ஒடாது; அன்பிலேயே முழுகிக் கரைந்து அன்பாகவே ஆகிவிடும். அருணகிரிநாதன் பெற்ற அநுபூதி இதுதான்.
பரமேசுவரன் வஸ்து (Matter); அம்பாள் அதன் சக்தி (Energy) என்ற ஸயன்ஸ் சூத்திரமெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். வஸ்துவின் ஸத்தை (சிவமயமான வெறும் இருப்பு) , அதன் மகாசக்தி (அம்பாளின் ஆற்றல்) இதுகளை மட்டும் சொல்லிக்கொண்டு நமக்கு என்ன பிரயோஜனம்? நம்மைக் கடைத்தேற்றப் போவது அவர்களுடைய அன்புதான், அருள்தான். இருவருடைய அன்பும் பொங்கிப் பெருகிக் கலந்த இந்த இடம்தான் அவர்களுடைய செல்லப் பிள்ளையான ஸுப்ரம்மண்யர். கடைக்குட்டி யாருக்குமே செல்வம்தானே? ‘செல்வ முத்துக் குமரன்’ என்றே வைத்தீசுவரன் கோவிலில் அவருக்குப் பெயர். உள்ளே ஒன்றாக இருந்த அன்பு, இரண்டாகப் பிரிந்து மறுபடி ஒன்றாகக் கலந்து இப்படி நாம் உபாஸிப்பதற்கு சுலபமாக சுப்ரம்மண்யமாக மூர்த்திகரித்திருக்கிறது.
சிவ – சக்தி ஜோதியில் ஜனித்த அவர் மகா தேஜஸ்வி; பரம பராக்கிரமசாலி; எவராலும் சம்ஹரிக்க முடியாத சூரன். தாரகன் முதலான அசுரர்களை வெல்லவே தோன்றிய மகா சக்திமான். சக்தி வேல் என்றே சொல்கிறோம். ஆனால், இந்தப் பராக்கிரம சக்தியோடு, அருட்சக்தியாக இருப்பதே அவருடைய விசேஷம்.
அறிவுச் சக்தியாக இருக்கிறவரும் அவர்தான். ‘ஞான பண்டிதன்’, ‘ஞானஸ்கந்தன்’ என்பார்கள். ஆதிகுருவான தகப்பனாருக்கே உபதேசம் பண்ணினவன். “ஸ்வாமி” என்று அமரத்தில் சொல்லப்படுகிற ஸுப்ரம்மண்யர் இந்த அவசரத்தில் (கோலத்தில்) ‘தகப்பன்சாமி’ எனப்படுகிறார். ‘ஸ்வாமி மலை’ என்றே அவர் சிவனுக்குப் பிரணவோபதேசம் செய்கிற ‘ஸுப்ரம்மண்ய’ ஸ்தலத்துக்குப் பெயர் இருக்கிறது. அங்கே அவரை ‘ஸ்வாமிநாதன்’ என்பார்கள்.
செல்லப்பிள்ளை! அதனால் தன்னைக் காட்டிலும் இந்தப் பிள்ளையை எல்லா அம்சங்களிலும் பெரியவனாகக் காட்டி பூரித்துப் போகிறார் பரமேசுவரன். ‘என்னை விட இவன் ஞானி’ என்று பிள்ளையிடமே தாழ்ந்து உபதேசம் வாங்கிக் கொள்கிறார். ‘வர பலம் பெற்றுள்ள தாரகன், சூரன் இவர்களை நான் வதைக்க முடியாது; என்னாலும் முடியாததைச் செய்ய – அதாவது என்னைவிடப் பெரியவனாக ஒருத்தன் வரவேண்டும்’ என்றே இந்தப் பிள்ளையைப் படைத்தார். அப்புறம் ஞானபலமும் அவனுக்கே அதிகம் என்று காட்ட அவனிடமே உபதேசம் பெற்றுக் கொண்டார். ‘எங்கேயும் தனக்கு வெற்றியைத்தான் விரும்ப வேண்டும். ஆனால் பிள்ளையிடத்தில் மட்டும் தோல்வியை விரும்ப வேண்டும்’ (புத்ராத் இத்தேச் பராஜயம்) என்பார்கள். அதாவது, ஒவ்வொரு பிதாவுக்கும் தன்னைவிடத் தன் பிள்ளை நன்றாக இருக்க வேண்டும், புத்திசாலியாக இருக்க வேண்டும் என்றுதான் இருக்கும். பரமேசுவரனுக்கே இப்படித்தான் இருந்திருக்கிறது! தானே அம்பாளோடு சேர்ந்து பிள்ளையாக வந்தான் என்றாலும் இப்போது வீரம், ஞானம், லாவண்யம் எல்லாவற்றிலும் முன்னைவிட அதிகமான பிரகாசத்தை எடுத்துக்கொண்டான்.
இங்கே லாவண்யத்தைச் சொன்னேன். ஈசுவரன் மன்மதனைத் தகனம் பண்ணியபின், மன்மதன் திமிரோடு பிரயோகம் செய்த அதே கரும்பு வில்லையும் புஷ்ப பாணத்தையும் அம்பாள் எடுத்துக் கொண்டு காமாக்ஷியானாள். ஈசுவரனைத் திமிரோடு நெருங்காமல் அன்போடு பார்த்து, அவரிடம் அடங்கி, இவற்றைப் பாதத்தில் அர்ப்பணம் செய்தாள். சண்டை போட்ட மன்மதனால் உண்டாக்க முடியாத அன்பு, இப்போது இவளது பணிவினாலேயே ஈசுவரனுக்கு உண்டாகி விட்டது. அதன் விளைவாகவே ஜனித்த குமாரன் இவன். இப்போது பார்த்தால், இவனே ஈசுவரன் பொசுக்கின மன்மதனுக்கு மன்மதனாக இருக்கிறான். தமிழில் ‘காமவேள்’ ‘செவ்வேள்’ என்று மன்மதன், முருகன் இவருக்கு மட்டுமே ‘வேள்’ என்கிற பதத்தைப் பொருத்துகிறார்கள்! அது அவனுடைய லாவண்யப் பெருமை.
‘முருகன்’, ‘முருகன்’ என்பது தமிழ்நாட்டில் வழங்குகிற வெகு சிறப்பானப் பெயர். ‘முருகன்’ என்றாலும் ‘அழகானவன்’, ‘என்றும் இளமை நலம் மாறாத சௌந்தர்யம் வாய்ந்தவன்’ என்பதே அர்த்தம்.
அழகு என்றால் அது வெறும் சரீர அழகு. அருளின் அழகுதான் இப்படி தேக காந்தியாக வந்திருக்கிறது. பரமேசுவரன் அம்பாள் சம்பந்தத்தோடு இப்படி குமாரனாக ஆவிர்பவித்தபோது வீரம், ஞானம், சௌந்தர்யம் இவற்றோடு அருளிலும் அதிகப் பிரகாசத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்.ஸத் – சித் ஆனந்தம் என்று சொல்வார்கள். அதுதான் பரம்பொருள். இதிலே ஸத் (இருப்பு) பரமேசுவரன்; இருக்கிறோம் என்பதை உணர்ந்து சக்தியைக் காட்டுகிற ‘சித்’ அம்பாள்; இப்படி உணர்ந்ததில் பேரானந்தம் பிறக்கிறது. இந்த ஆனந்தமே சுப்ரம்மண்யர். சிவம் என்கிற மங்களமும் அம்பாள் என்கிற காருண்யமும் கலந்த பரம உத்கிருஷ்டமான ஸ்தானம் அவர். ஸச்சிதானந்தத்தையே ‘சோமாஸ் கந்தர்’ என்று தமிழ் நாட்டுச் சிவாலயங்களில் எல்லாம் வைத்து உற்சவம் நடத்துகிறோம். ஈசுவரனுக்கும் அம்பாளுக்கும் நடுவே, இருவருக்கும் பொதுவான மத்ய ஸ்தானமாக, சுப்பிரமணியர் குழந்தை ரூபத்தில் இருப்பார். உமையோடும், ஸ்கந்தனோடும் கூடியவர் (ஸஹ உமா ஸ்கந்தர்) தான் ஸோமாஸ்கந்தரான பரமேசுவரன். ‘பிள்ளையார்’ என்று விக்நேசுவரரையே சொல்கிற தமிழ்நாட்டிலும் இங்கே மட்டும் ‘குமரன்’ என்று சிறப்பிக்கப்படுகிற இளைய பிள்ளையை மட்டும், தாய் தந்தையாரோடு வைத்து மூன்று மூர்த்தியாகச் செய்திருக்கிறார்கள். ‘பிள்ளை என்றால் இவன்தான்’ என்று எல்லோரும் பெருமைப்படுகிற மாதிரி, பிதாவே பெருமைப்பட்டு தோல்வியை ஒப்புக்கொள்கிற மாதிரி இப்படி உத்தம அம்சங்கள் எல்லாவற்றிலும் உச்சமாக இருக்கிறார் ஸுப்ரமண்யஸ்வாமி.