சிவமயம் : ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்
எல்லா தேவதைகளும் ஒரே பரமாத்மாதான். சிவனும் விஷ்ணுவும் கொஞ்சம்கூட வேறு வேறில்லை. ஆனாலும் இரண்டையும் வழிபடுகிறபோது, கொஞ்சம் பிரித்து பக்தி செய்தால் அதிலும் ஒரு ரஸம் இருக்கத்தான் செய்கிறது. பலவாகப் பிரிந்தும் ஒற்றுமையுடன் இருப்பதுதான் (Unity in diversity) நம் மதத்தின் ஸாரம். இப்படியே சிவன், விஷ்ணு என்கிற இரண்டு மூர்த்திகளை வழிபடும்போது சாராம்சத்தில் அவை ஒன்றே என்ற உணர்ச்சி இருந்தாலும், ஒவ்வொரு மூர்த்தியை ஒவ்வொரு தத்துவத்துக்கு ரூபகமாக வைத்துக் கொண்டு பக்தி செய்வதில் ஒரு ருசி இருக்கத்தான் செய்கிறது.
இப்படிச் செய்யும்போது, சிவனை எல்லாவற்றுக்கும் அடிப்படையான, ஏகவஸ்துவான ஞானமாக பாவிக்கலாம்; அந்த ஏக வஸ்துவை நானாவிதமாகக் காட்டி ஜகத்தை நடத்தும் சக்தியாக விஷ்ணுவை பாவிக்கலாம். அதாவது சிவத்தைப் பரப்பிரம்மமாகவும் விஷ்ணுவைப் பராசக்தியாகவும் வைத்துக் கொள்ளலாம். அம்பிகையும் விஷ்ணுவும் சகோதரர்கள் என்று சொன்னாலும், அவர்கள் ஒன்றேதான் என்பது பரம ஞானிகளின் அநுபவம். “அரியலால் தேவி இல்லை ஐயன் ஐயாறனார்க்கே” என்று அப்பர் ஸ்வாமிகள் பாடியிருக்கிறார். சங்கர நாராயண வடிவத்தையும் அர்த்த நாரீசுவர வடிவத்தையும் பார்த்தால் இந்த உண்மை தெரியும். இரண்டிலும் வலப்பக்கம் பரமேசுவரனுடையது. ஒன்றிலே இடப் பக்கம் விஷ்ணு; இன்னொன்றில் அதே இடது புறம் அம்பாளுடையது.
இருக்கிற ஒன்றே ஒன்றை, இல்லாத பலவாகக் காட்டுகிற சக்தியே அம்பாள் அல்லது விஷ்ணு. அதாவது ஜகத் முழுதும் விஷ்ணு ஸ்வரூபம். ‘விச்வம் விஷ்ணு:’ என்றுதான் ஸஹஸ்ரநாமம் ஆரம்பிக்கிறது. ‘ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்’ என்கிற வாக்கும் இருக்கிறது. உலக பரிபாலனம் விஷ்ணுக்குரியது என்று சொல்கிறோம். உலகத்திலே இருக்கிற ஆனந்தங்களை, உணர்ச்சிகளை எல்லாம் தெய்விகமாக்குகிற பக்தி மார்க்கமும் விஷ்ணு சம்பந்தமாகவே அதிகம் தோன்றுகிறது. ஹரி கதை, ஹரி நாம சங்கீர்த்தனம் என்றெல்லாம் சொல்வது போல ஹர கதை, ஹர கீர்த்தனம் என்று சொல்வதில்லை. கதை பாட்டு இந்த ஆனந்தமெல்லாம் விஷ்ணுவிடமே அதிகம். ‘பாகவதர்’ என்றால் பகவானைச் சேர்ந்தவர் என்றே அர்த்தமாயினும் பொதுவாக, ‘பாகவதர்’ ‘பாகவதம்’ என்றெல்லாம் சொன்னால் விஷ்ணு பக்தர், விஷ்ணுவின் கதை என்றே எடுத்துக்கொள்கிறோம். பிரபஞ்ச சௌந்தரியங்களையெல்லாம் வைத்துப் பூஜை, பக்தி, பஜனை, கதை செய்வதெல்லாம் விஷ்ணு சம்பந்தமாயிருக்கிறது.
ஆனால் இந்தப் பிரபஞ்சத்தை விட்டு, இதற்கு ஆதாரமான சாந்தத்தில் திளைக்கும்போது சிவசம்பந்தம் அதிகம் தோன்றுகிறது. சிவஞானம், சிவயோகம் என்று சொல்கிற மாதிரி விஷ்ணு ஞானம், விஷ்ணு யோகம் என்பன காணப்படவில்லை. பலவாக இருக்கிற உலகனைத்தும் விஷ்ணு என்பதால் ‘ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்’ என்ற வாக்கு தோன்றியிருக்கிறது. பலவாகக் காண்கிறது போனால் ‘ஸர்வம்’ போய் விடும். ஏகம்தான் இருக்கும். ஏகம் இருக்கும்போது ‘ஸர்வம்’ என்ற வார்த்தைக்கு இடம் ஏது? அங்கே அந்த ஏகத்தை அநுபவிக்கிறவனைத் தவிர ஜகம் என்கிற ஒன்றும் தனியாக இல்லை. ஜகத்தும் அடிபட்டுப் போச்சு! சிவம் ஒன்றே எஞ்சி நிற்கிறது. இதனால்தான் “சிவமயம்” என்றே சொல்கிறார்கள்.
VIBGYOR- என்ற ஏழு நிறங்களில் வெளுப்பும் சேரவில்லை. கறுப்பும் சேரவில்லை. உண்மையில் வெள்ளைச் சிவன், கரிய திருமால் இருவருமே பிரபஞ்ச வர்ணங்களில் (லௌகிகத்தில்) சேராதவர்கள்தான்.
எதை எரித்தாலும் முதலில் அது கறுப்பு ஆகிறது. ஆனால் அப்போதும் எரிபட்ட வஸ்துவுக்கு நிறம் மாறினாலும் ரூபம் அப்படியே இருக்கும். நியூஸ் பேப்பரைக்கூடக் கொளுத்திவிட்டு உடனே அணைத்துவிட்டால் அது முழுக்கக் கறுப்பானாலும், அந்தக் கறுப்புக்குள்ளேயே அதைவிடக் கறுப்பாக எழுத்துக்களும் தெரியும். துணியும் இப்படியே மடிப்புகூடக் கலையாமல் நெருப்பில் கருகுவதுண்டு. முழுக்க நீற்றுப்போய் உருவம் இழப்பதற்கு முற்பட்ட நிலை இது. இதுதான் ‘ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்’. இந்த நிலையில் ஜகத் இருப்பதுபோல் இருக்கிறது. ஆனாலும் இந்திரிய சேஷ்டைகள் எரிந்து போய்விட்டன. உணர்ச்சிகள் ஆனந்தம் எல்லாம் இருப்பதுபோல் தோன்றினாலும் லௌகிகமாக இல்லாமல் தெய்விகமாக பக்தி ரூபத்தில் இருக்கின்றன. யோகத்திலும் ஞானத்திலும் மேலும் ஆன்மாவைப் புடம் போட்டால் அதுவும் நீற்றுப் போய் பஸ்பமாகிவிடும். எரிகிற வஸ்துக்கள் முதலில் கறுப்பானாலும், கடைசிவரையில் எரித்தால் எல்லாமே வெள்ளை வெளேரென்று நீறாகின்றன. இதுதான் ‘சிவமயம்’.
அரனை மறவேல்; திருமாலுக்கு அடிமை செய்
எரிந்த மரம் கரியாகிறது. அந்தக் கரியும் முதிர்ந்தால் பளிங்காக, வைரமாக ஆகிறது. உலகம் இருந்தபோதிலும் அதன் மாயை நம்மை தொடாமல் எல்லாம் விஷ்ணுமயமாகத் தெரிகிறபோது, நம் அஞ்ஞானம் எரிந்து கரியாகப் போன நிலையில் இருக்கிறோம். திருமாலும் இதனாலேயே கருமாலாக இருக்கிறார். கரி வைரமாகிறது போன்ற நிலைக்கு – ஸ்படிகமாகிற நிலைக்கு – சுத்த ஸ்படிக ஸங்காசமான பரமேசுவரன் தெய்வமாக இருக்கிறார். கரியும் வைரமும் வேறு வேறு அல்ல. இதுவேதான் அதுவாயிருக்கிறது. மஹா விஷ்ணுவும் பரமேசுவரனும் ஒருத்தரேதான். உலகத்தின் ஆசாபாசங்கள், இவற்றுக்குக் காரணமான மாயை ஆகியவற்றின் நானாவிதமான வர்ண ஆட்டங்கள் இருவரிடத்திலும் இல்லை. மஹாவிஷ்ணுவின் கறுப்பு, சிவனின் வெளுப்பு இரண்டுமே ஸயன்ஸ்படி ஏழு வர்ணங்களில் சேரவில்லை. சத்தியமான தத்துவம் மாயையால் வேறு விதமாக மாறித் தெரிகிறபோதுதான் வர்ணங்கள் உண்டாகின்றன. இருப்பதைப் பொய்யாக மாற்றிச் சொல்வதை இங்கிலீஷில் Coloured Version என்றே சொல்கிறார்கள் அல்லவா? கலர் வந்துவிட்டால் பொய்க்கு வந்துவிட்டோம் என்று அர்த்தம். கலர்களில் சேராத கறுப்பு விஷ்ணுவிடம் வெள்ளை சிவனிடமும் மனத்தை வைக்கிற வரையில் சத்தியத்தோடேயே ஒட்டிக் கொண்டிக் கொண்டிருக்கிறோம்.
இறுதியான வெண்மைக்கு அடையாளமாகவே கரியையும் எரித்த பின் கிடைக்கிற விபூதிச் சாம்பலைச் சைவர்கள் தரிக்கிறார்கள். என்றும் நிற்பது எதுவோ அதுவே நீறு; திருநீறு. விஷ்ணு மயமான உலகத்துக்கு அடையாளம் மண், மரம், செடி, கொடி எல்லாமே மண்ணிலே பிறந்து மண்ணிலே வளர்ந்து முடிவில் மட்கி மடிகிறபோது மண்ணே ஆகின்றன. எனவே மண்ணும் முடிவான நிலைக்கு அடையாளமாக இருக்கிறது. இதனால்தான் வைஷ்ணவர்கள் திருமண் இட்டுக்கொள்கிறார்கள். திருநீறும் திருமண்ணும் ஒரே தத்துவத்தைத்தான் காட்டுகின்றன. ஹரி–ஹர பேதம் இல்லாதது போல், அவர்களுக்குரிய சின்னங்களிலும் பேதமில்லை. ஜகத்தில் இருந்துகொண்டே மேல் நோக்கிப் போட்டுக் கொள்கிறார்கள். எல்லாம் சமமாகி விட்ட சிவயோக நிலையில், விபூதியை உயரவாட்டில் போடாமல் நெற்றியில் குறுக்கே தரித்துக் கொள்கிறார்கள்.
சிவனுக்கும் திருமாலுக்குமிடையே பேதம் கற்பிப்பது கொஞ்சம்கூடச் சரியில்லை. வைஷ்ணவ ஆழ்வார்களும், சைவ நாயன்மார்களும் உயர்ந்த பக்தி நிலையில் இரண்டையும் ஒரே ஸ்வரூபமாகக் கண்டு பாடியிருக்கிறார்கள். “பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து” என்று ஆழ்வார் பாடினால், அதை அப்படியே எதிரொலிக்கிற மாதிரி, “குடமாடியை இடத்தே கொண்டு” என்று சைவத் திருமுறை பாடுகிறது. (கோபிகைகளோடு குடத்தை வைத்துக்கொண்டு நர்த்தனம் செய்த கிருஷ்ண பரமாத்மாத்தான் குடமாடி.)
தமிழ்நாட்டில் ஆதிகாலம் முதற்கொண்டு இந்த ஸமரஸ பாவம் இருந்து வந்திருக்கிறது. அதனால்தான் இருபத்தேழு நக்ஷத்திரங்களுக்குள் சிவனுக்குரிய ஆதிரை, விஷ்ணுவுக்குரிய ஓணம் ஆகிய இரண்டுக்கு மட்டும் ‘திரு’என்ற கௌரவ அடைமொழி சேர்த்துத் திருவாதிரை, திருவோணம் என்று சொல்கிறோம். குழந்தையாக இருந்தபோதே இந்த ஸமரச உணர்ச்சி ஏற்படவேண்டும் என்பதால்தான் அவ்வைப்பாட்டி ஆத்திச்சுடியில் ‘அரனை மறவேல்’ என்றும், ‘திருமாலுக்கு அடிமை செய்’ என்றும் உபதேசம் செய்கிறாள்.
ஒரே தெய்வத்தை இஷ்ட மூர்த்தியாகக் கொண்டு வழிபடுவதே சித்த ஒருமைப்பாட்டுக்கு உதவுவதாகத் தோன்றலாம். இதில் நியாயம் உண்டு. இதனால் இன்னொரு மூர்த்தியைத் தாழ்வாக எண்ணக்கூடாது. தங்கள் இஷ்ட தெய்வத்தையே, பரம்பரையாக வந்த குலதெய்வத்தையே உபாஸிக்கலாம். ஆனால் அப்போதும், ரூபமற்ற பரமாத்மாவையே நாம் இந்த ரூபத்தில் வழிபடுகிறோம். எனவே இந்த மூர்த்தி பரமாத்மாதான். அந்த பரமாத்மா மற்ற ரூபங்களும் எடுத்துக் கொள்ள முடியும்; அதாவது ‘நம் தெய்வமேதான் மற்றவர்கள் வழிபடுகிற ஏனைய மற்ற தெய்வங்களாகவும் உருவம் கொண்டிருக்கிறது’ என்ற அறிவும் ஏற்படவேண்டும். நம் தெய்வமே தான் மற்ற தெய்வங்களாகவும் உள்ளது என்று நினைத்துவிட்டால், நமக்கு அந்த ரூபங்களில் பிடிப்பு உண்டாகாவிட்டாலும்கூட, அவை நம் தெய்வத்தை விடத் தாழ்ந்தது என்ற எண்ணம் வரவே வராது. சமயச் சண்டைகளும் உண்டாகாது. எல்லோரும் ஒரே பரமாத்மாவின் குழந்தைகளாக அன்போடு ஐக்கியப்படுவதற்காக ஏற்பட்ட மதத்தில், தெய்வங்களின் பெயராலேயே சண்டையும், துவேஷமும் உண்டாகிற நிலை மறைந்து, ஸெளஜன்யமும், சாந்தியும் நிலவும்.