55. தேவதாமூர்த்திகள் – அவதார புருஷர்கள் – பகுதி பதினெட்டு

காலையில் திருமால், மாலையில் மஹாதேவன்

சிவபெருமான், திருமால் இரண்டு பேரையும் உபாஸிப்பதற்கு நீண்டகாலமாக ஒரு விதி இருக்கிறது. லோக விவகாரங்களை நாம் அழகாக, தர்மமாக நடத்துவதற்கு ஜகத் பரிபாலகரான மஹாவிஷ்ணுவையும், இந்த வியாபாரங்களிலிருந்து மனஸைத் திருப்பி ஆதார வஸ்துவில் ஒடுங்குவதற்கு சம்ஹார மூர்த்தியான பரமேசுவரனையும் தியானிக்கச் சொல்லியிருக்கிறார்கள்.

இதற்கேற்ப வெளியிலே பார்த்தாலும் மஹாவிஷ்ணுதானே திருபுவன சக்கரவர்தியாக இருக்கிறார்! பரமேசுவரனோ ஆண்டியாக பிச்சாண்டியாக இருக்கிறார். இருவரிடமும் இருக்கிற சொத்துக்களைக் கொஞ்சம் கணக்கெடுத்துப் பார்ப்போம். சிவனிடம் சாம்பல், எருக்கம்பூ, தும்பைப்பூ, ஊமத்தை, மண்டைஒடு, யானைத்தோல், பாம்புஇவைதான் இருக்கின்றன. இதற்கெல்லாம் யாரும் விலை கொடுக்கமாட்டார்கள். விலைபோகாத வஸ்துக்கள்தான் சிவனிடம் உள்ளன. மஹாவிஷ்ணுவிடமோ கிரீட குண்டலங்கள், முக்தா ஹாரங்கள், பீதாம்பரம், கௌஸ்துப மணி எல்லாம் இருக்கின்றன. இவற்றுக்கும் எவரும் விலை நிர்ணயிக்க முடியாது. சிவனிடம் உள்ளதற்கு விலை மதிப்பு இல்லை. (valueless); விஷ்ணுவிடம் உள்ளதோ விலைமதிக்க முடியாதது (invaluable). எல்லாவற்றுக்கும் மேலாக மஹா விஷ்ணுவிடம் ஐசுவரிய தேவதையான மஹா லக்ஷ்மியே இருக்கிறாள். பரமசிவனிடம் இருக்கும் அம்பாளுக்கோஅபர்ணாஎன்று பெயர். ஓர் இலை (பரணம்) கூட இல்லாதவள் என்று அர்த்தம். இலையைக்கூட உண்ணாமல் பரம தியாகியாகத் தபஸ் செய்தவள் அபர்ணா.

இதிலிருந்து லோகமெல்லாம் தர்மத்தோடு சந்தோஷமாக இருப்பதற்கு மஹாவிஷ்ணுவையும், வைராக்கியம் வருவதற்குப் பரமேசுவரனையும் ஆராதிப்பதில், பொருத்தம் இருப்பது தெரியும். மகாவிஷ்ணுவால் ஞானம் தரமுடியாது என்றோ, பரமேசுவரனால் லோக வியாபாரம் நன்றாக நடக்க அநுக்கிரகிக்க இயலாது என்றோ அர்த்தமில்லை. இரண்டு மூர்த்திகளை வழிபடுகிறபோது, இப்படி இரண்டு விதங்களில் ஆராதிப்பது ஒவ்வொரு விதத்தில் ஒவ்வொருவரிடம் சித்த ஒருமைப்பாடு (ஐகாக்ரியம்) கொள்வதற்கு உதவும்.

இந்த அடிப்படையில்தான் விடியற்காலையில் ஒவ்வொருவரும் எழுந்தவுடன்ஹரிநாராயண ஹரிநாராயணஎன்று கொஞ்ச காலமேனும் ஸ்மரணம் செய்ய வேண்டும் என்றும், சாயங்காலத்தில்சிவ சிவஎன்று சிறிது பொழுதேனும் ஸ்மரிக்க வேண்டும் என்றும் பெரியவர்கள் விதித்திருக்கிறார்கள். வெகு சுலபமான சாதனம். எல்லோரும் இதை அவசியம் செய்ய வேண்டும்.

காலையில் லோகம் முழுக்கத் தூக்கத்திலிருந்து விடுபட்டு மலர்ச்சி அடைகிறது; சூரியன் பலபல என உதிக்கிறான்; உலக காரியங்கள் எல்லாம் தொடங்குகின்றன. எனவே குளிர்ந்த வைகறைப் போதில் நீருண்ட மேகம்போல் குளிர்ந்த ஜகத் பரிபாலகரான விஷ்ணுவின் நாமங்களை உச்சரிக்க வேண்டும். மாலையில் அவரவரும் வேலை முடித்து வீடு திரும்புகிறார்கள். மாடுகள் கொட்டிலுக்கு திரும்புகின்றன. பட்சிகள் கூட்டுக்குத் திரும்பிவிடுகின்றன. சூரியனும் மலைவாயில் இறங்குகிறான். இப்படி லோக வியாபாரங்கள் ஒடுங்கத் தொடங்குகிற அந்தப்போதில், நம் ஆட்டங்களையெல்லாம் ஒடுக்கி அமைதி தருகிற ஞானமூர்த்தியான பரமேசுவரனின் நாமாவை உச்சரிக்க வேண்டும்.

அண்டம் பிண்டம் இரண்டும் அடிப்படையில் ஒரே சரக்கானதால், வெளி உலக நடப்புக்கும் நம் அக உணர்வுகளுக்கும் சம்பந்தம் இருக்கிறது. உலகில் அருணோதயத்துக்கு முன்பு பட்சி ஜாலங்கள் விழித்துக்கொண்டு கூவத் தொடங்குகிற வேளையில், ‘லோகமெல்லாம் நன்றாக இருக்கவேண்டும்என்ற எண்ணத்தை மனஸில் நன்றாகப் பதிய வைத்துக் கொண்டு, ஸாக்ஷாத் ஸ்ரீமந் நாராயணனைத் தியானிப்பது எளிதில் கைவரும். இதேபோல் வெளியுலகம் ஒடுங்கித் தன்மயமாகி, இருள் கவிந்து வருகிற அந்தி வேளையில், இந்திரியங்களை ஒடுக்கி, சாந்தமாக சிவபெருமானின் தியானத்தில் அமிழ்வது சகஜமாகவும் சுலபமாகவும் இருக்கும்.

நம்முடைய மனோபாவத்தைப் பொறுத்து, இப்படி இரண்டு விதத்தில் உபாஸித்தாலும் இரண்டு மூர்த்திகளும் ஒன்றேதான் என்ற நினைப்பு போகக்கூடாது. காலையில் பஞ்ச கச்சம் கட்டிக் கொண்டு சந்தியாவந்தனம் செய்த அதே மனிதர், பகலில் ஸுட் போட்டுக்கொண்டு ஆபீஸுக்குப் போகிறார். வெவ்வேறு காரியங்களுக்காக வெவ்வேறு வேஷங்களைப் போட்டுக் கொண்டாலும் ஆசாமி ஒருத்தர்தான். ஸ்வாமியும் ஒருத்தர்தான்.

ஒற்றுமை உணர்த்தும் உத்தமத் தலங்கள்

சிவவிஷ்ணு அபேதத்தைக் காட்டும் ஸ்தலங்கள் பல உள்ளன. திருநெல்வேலிச் சீமையில் சங்கர நாராயணன் கோவிலும், (‘சங்கர நயினார் கோயில்என்று தப்பாகச் சொல்கிறார்கள்.) மேற்கே ஹரிஹர க்ஷேத்திரத்திலும் இவ்விரண்டு மூர்த்திகளும் ஒன்றாக இணைந்த பிம்பங்கள் உள்ளன. குற்றாலத்தில் விஷ்ணு மூர்த்தியையே அகஸ்திய மஹரிஷி சிவலிங்கமாக மாற்றியிருக்கிறார். இவை பிரபலமான ஸ்தலங்கள். இவ்வளவு பிரபலமில்லாத ஒரு க்ஷேத்திரத்தைப் பற்றிச் சொல்கிறேன்:

திருப்பாற்கடல் என்று ஒரு ஊர் இருக்கிறது. காஞ்சிபுரத்திலிருந்து வேலூருக்குப் போகிற வழியில் இருபது மைலில் இருக்கிறது. முதலில் அந்த க்ஷேத்திரத்தில் ஒரு பெருமாள் கோயில்கூடக் கிடையாதாம். ஈசுவரன் கோயில்தான் இருந்ததாம். ஒரு ஸ்ரீவைஷ்ணவர் அநேக க்ஷேத்திரங்களுக்குச் சென்று விஷ்ணு தரிசனம் பண்ணிக் கொண்டு வருகிற காலத்தில் அந்த ஊருக்கு வந்தாராம். ஒவ்வொரு நாளும் ஊருக்குப் போகிற போது விஷ்ணு தரிசனம் பண்ணாமல், அவர் ஆகாரம் பண்ணுவதில்லை என்ற நியமத்தை வைத்துக் கொண்டிருந்தார்.

அவர் திருப்பாற்கடலுக்கு வந்துஎங்கே விஷ்ணு ஆலயம் இருக்கிறது? என்று ஒவ்வொரு கோயிலாகப் போனார். எல்லாம் சிவன் கோயிலாகவே இருந்தன. கடைசியில் விஷ்ணு ஆலயமாகத்தான் இருக்கும் என்று நினைத்து ஒரு கோவிலுக்குள் நுழைந்தார். உள்ளே போனால் ஈசுவரன் இருந்தார். உடனே வெளியே ஓடிவந்து விட்டார். ஆகாரம் பண்ணவில்லை. வயிறு பசியில் துடித்தது. அதைவிட மனஸிலேஇன்றைக்கு விஷ்ணு தரிசனம் பண்ணவில்லையே!’ என்று துடிதுடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது ஒரு கிழவர் அவருக்கு முன்னால் வந்துஎன்ன ஸ்வாமி! விஷ்ணு தரிசனம் பண்ண வருகிறீர்களா?” என்று கேட்டார்.

இந்தப் பிரயோஜனமில்லாத ஊரில் எங்கே ஐயா விஷ்ணு கோயில் இருக்கிறது?” என்று அவர் கோபமாகச் சொன்னாராம்.

அதோ தெரிகிறதே, அது சாக்ஷாத் விஷ்ணு கோயில்தான்என்று கிழவர் சொன்னார்.

அந்த கோயிலுக்குத்தான் அந்த வைஷ்ணவர் நுழைந்த பிறகு ஈசுவரன் இருப்பதைப் பார்த்துவிட்டு ஓடி வந்திருக்கிறார். அதனால், “ஏன் ஐயா பொய் சொல்கிறீர்? அது ஈசுவரன் கோயில்என்று சொன்னாராம்.

இல்லவே, இல்லை. நீர்தான் பொய் சொல்கிறீர். அது பெருமாள் கோயில்தான். வேண்டுமானால் உள்ள வந்து பாரும்என்று அவர் சொல்ல, “இப்போதுதான் நான் பார்த்தேன் என்று இவர் சொல்ல, கடைசியில் கிழவர்பந்தயம் கட்டும்;எதற்காகப் பொய் சொல்கிறீர்? ” என்று ஸ்ரீவைஷ்ணவரிடம் அடிதடிச் சண்டைக்குப் போய் விட்டாராம்.

இதற்குள் ஊரில் இருந்தவர்களுக்கு இது தெரிந்து, அவர்களுக்குள் மத்தியஸ்தம் செய்துவைக்க வந்தார்கள்.

எதற்காக இப்படி சண்டை போட்டுக் கொண்டிருக்கவேண்டும்? எல்லோரும்தான் போய் எது மெய்யென்று பார்க்கலாமே?” என்று ஊர் ஜனங்கள் சொன்னார்கள்.

நான் அந்த கோயிலுக்குள் நுழையமாட்டேன்என்று விஷ்ணு பக்தர் சொன்னாராம்.

வராவிட்டால் விட முடியாது. எப்படி நான் சொல்வது இவர் பொய் என்று இவர் பார்க்காமல் சொல்லலாம்? யார் பொய் என்று பார்த்துவிட வேண்டும்என்று அந்தக் கிழவர் வீம்பு பண்ணிக் கொண்டு, விடமாட்டேன் என்று மல்லுக்கு நின்றார்.

கடைசியில், ஊர் மத்தியஸ்தத்தின் பேரில் இவர்கள் எல்லோரும் கோவிலுக்குள் சென்றார்கள்.

வாஸ்தவத்தில் அங்கே போய்ப் பார்த்தால் சிவலிங்கம் மாதிரி இருந்தது. கீழ் பிரம்ம பீடமாகிய ஆவுடையார் இருந்தது. ஆவுடையாருக்கு நடுவிலிருந்து ஒரு மூர்த்தி எழும்பியதால் அசப்பில் சிவலிங்கமாதிரியே தோன்றிற்று. ஆனால் வாஸ்தவத்திலோ ஆவுடையாருக்கு மேலே தெரிந்தது லிங்கமல்ல. லிங்கத்தின் ஸ்தானத்தில் பெருமாள் நின்று கொண்டிருந்தார்.

அதைப் பார்த்தவுடன், ‘அடடா! நாம் ஏமாந்து போய்விட்டோமேமஹாவிஷ்ணு அல்லவா இங்கே இருக்கிறார்? என்று அந்த விஷ்ணு பக்தர் மிகவும் மனம் உருகி, அநேக ஸ்தோத்திரங்கள் பண்ணினாராம்.

கிழவரிடம் மன்னிப்புக் கேட்கத் திரும்பினால், அந்தக் கிழவரே விஷ்ணு மூர்த்திக்குள் கலந்து விட்டார். பெருமாளே கிழவராய் வந்திருக்கிறார்!

திருப்பாற்கடல் என்னும் ஊருக்குப் போனால் இப்போதும் பார்க்கலாம். ஆவுடையார் இருக்கும்; அதற்கு மேல் லிங்கம் இருக்கிற இடத்தில் பெருமாள் நின்றுகொண்டிருக்கிறார். இந்த க்ஷேத்திரமும் நமக்கு ஈசுவரன் வேறு மஹா விஷ்ணு வேறு இல்லை என்ற தத்துவத்தை விளக்குகிறது.