56. தேவதாமூர்த்திகள் – அவதார புருஷர்கள் – பகுதி பத்தொன்பது

இரண்டு ராஜாக்கள்

மஹாவிஷ்ணு மீனாக்ஷியை ஸுந்தரேசுவரருக்கு தாரை வார்த்துக் கொடுத்தார். மதுரையில் இந்த ஐதிஹ்யம் சிற்பத்தில் வெகு அழகாக இருக்கிறது. அம்பாள் பத்மநாப சகோதரியாகவும், பரமேசுவர சக்தியாகவும் இருப்பதை அப்படியே கண்ணுக்கு முன்னால் கொண்டுவந்து காட்டுகிறது இந்தச் சிற்பம். இதைப் பார்த்துக் கொண்டேயிருந்தால் நம் மனஸில் சைவ வைஷ்ணவ பேத பாவம் போயே போய் விடும்.

பிரம்மத்தில்தான் ஸர்வ சக்தியும் இருக்கிறது. அந்த சக்தியால்தான் சகல பிரபஞ்ச காரியங்களும் நடக்கின்றன. பிரம்மமே பரமேசுவரன்; சக்தியே அம்பாள்; அந்தச் சக்தியால் ஜகத்தை எல்லாம் பரிபாலிக்கிறவரே மஹா விஷ்ணு என்று பிரித்துச் சொன்னாலும், இவர்களும் கடைசியில் ஒருவருக்கொருவர், வித்தியாசமே இல்லாதவர்கள்தான் என்று தெரிகிறது. பிரம்மம், அதன் சக்தி, அந்தச் சக்தி செய்கிற காரியம் எல்லாம் வேறு இல்லை அல்லவா?அநேக தெய்வங்களுக்குள் தங்களுடைய பரமாத்ம ஸ்வரூபத்திலேயே எப்போதும் இருக்கிற மும்மணிகள்ரத்ன த்ரயம்இம்மூவரே என்று அப்பைய தீக்ஷிதர் நிலைநாட்டியிருக்கிறார்.

சாந்தமாக இருக்கிற பிரம்மம் சிவன், காரியங்கள் செய்து பரிபாலிக்கிறவர் மகாவிஷ்ணு என்று சொன்னாலும், இப்படிப்பட்ட வித்தியாசம் கற்பிப்பதுகூட முழுக்கச் சரியில்லை என்று உணர்த்துகிற வகையில் இரண்டு ராஜாக்களைப் பார்க்கிறோம். ஒருத்தர் ரங்கராஜா, மற்றவர் நடராஜா. ரங்கராஜா இருக்கும் ஸ்ரீரங்கத்தைத்தான் வைஷ்ணவர்கள்கோயில்’, ‘கோயில்என்று சொல்கிறார்கள். அதே மாதிரி சைவர்களின்கோயில்என்றால் அது நடராஜா இருக்கிற சிதம்பரம்தான். இந்த இரண்டு மஹா க்ஷேத்திரங்களில் உள்ள ரங்கராஜா, நடராஜா இரண்டு பேரும் தென்திசையையே பார்த்துக் கொண்டிருப்பது விசேஷம். தெற்கு யமனின் திக்கு. நமக்கு மரண பயமில்லாமல் நம்மை அமரமாக்குகிற மூர்த்திகளாதலால் யமனுக்கு எதிர் முகம் காட்டுகிறார்கள்.

ரங்கம் அல்லது அரங்கம் என்றால் சபை. சிதம்பரத்தில் நடராஜா இருக்கிற சந்நிதியை சபை என்றுதான் சொல்கிறோம்.

சபையில் நர்த்தனம் செய்வதுதான் பொருத்தம். ஆனால் இந்த இரண்டு சபைகளில் ஒருத்தர்தான் நர்த்தனம் செய்கிறார். சாந்த நிலையில் பிரம்மமாக இருக்கப்பட்டவர் என்று நாம் சொல்கிற சிவன்தான் நடராஜாவாக ஆனந்தக் கூத்தாடுகிறார். ஜகத் பரிபாலகரான மஹாவிஷ்ணுவையோ திருவரங்கத்தில் பரம சாந்தமாக உறங்குகிறார். சிவபெருமானுக்கும் திருமாலுக்கும் நாம் பங்கீடு செய்கிற தொழில்களின்படி பார்த்தால் இது தலைகீழாக அல்லவா இருக்க வேண்டும்? இதிலிருந்து என்ன தெரிகிறது? முத்தொழில், ஐந்தொழில் என்றெல்லாம் பிரித்து, நாம் ஒவ்வொன்றுக்கும் ஒரு மூர்த்தியைச் சொன்னாலும்கூட, இதுவும் நம் சிற்றறிவுக்கு எட்டுவதற்காக பராசக்தி எடுத்துக்கொண்ட பல தோற்றங்கள்தான். அந்த மூர்த்திகள் அடியோடு பிரிந்து பிரிந்து இருப்பதாக நினைக்கக்கூடாது. இதைத்தான் இரண்டு ராஜாக்களும் நமக்கு உணர்த்துகிறார்கள். இவருடைய காரியத்தை அவரும் அவருடைய காரியத்தை இவரும் செய்கிற மாதிரி இரண்டு சபைகளில் நடிக்கிறார்கள். எல்லாவற்றையும் ஒடுக்கிக்கொள்பவர் ஆட்டமாக ஆடுகிறார்; ஆட்டி வைத்துப் பரிபாலிக்க வேண்டியவரோ தூங்குகிறார்.

தெற்கே பார்த்துக்கொண்டிருக்கிற இன்னொருத்தர் தக்ஷிணாமூர்த்தி. இவர் பரமஞான மூர்த்தி. காரியமேயில்லாத ஏகவஸ்துவான சாக்ஷாத் பிரம்ம ஸ்வரூபம். அவருடைய சித் (ஞான) சக்திதான் அம்பாள். அந்த சைதன்யம்தான் சிவ விஷ்ணுவாக, மும்மூர்த்திகளாக, முப்பத்து முக்கோடி தேவதைகளாக, புல், பூண்டு, பசு, பட்சி, மநுஷ்யர்கள் உட்பட சகலமாகவும் ஆகியிருக்கிறது. இவற்றிலே குறிப்பாக பாரத தேசம் சிவபெருமான், திருமால் இவர்களை முழுமுதல் கடவுளாக வழிபடுவதால், நாம் பேத புத்தி இல்லாமல் இவ்விருவரையும் வழிபட வேண்டும். நாம் மனஸில் எந்நாளும் மறவாமல் பொறித்து வைத்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால்,

பராசக்தியின் மற்றொரு உருவமே திருமால்; பராசக்தியை விட்டுப் பிரிக்க முடியாத ஆதாரப் பொருளே சிவன்.

எல்லாவற்றுக்கும் உள்நின்று இயக்குகிற அந்தச் சக்தியை நாம் பக்தி செய்தால், தாயாக வந்து ஞானப்பால் கொடுத்து நம்மை ரக்ஷிக்கிற அம்பாளாகிறாள்.

அவளது அநுக்கிரகம் இல்லாவிட்டால், நாம் சவத்துக்குச் சமம்தான். நாம் செய்கிறதாக நினைக்கிற சகல காரியங்களுக்கும், எண்ணங்களுக்கும் அவள் தருகிற சக்திதான் காரணம். எவருக்குமே நம் சக்தியினாலேயே காரியங்களைச் செய்துகொள்கிறோம் என்று அகம்பாவம் படக் கொஞ்சம்கூட நியாயம் இல்லை. நம்மை நடத்தி வைக்கும் அந்தப் பராசக்தியை நினைத்து, நாள்தோறும் ஒரு நிமிஷமாவது, ‘என் சிறு சக்தி உன்னிடமிருந்து தெறித்த ஒரு திவலைதான்; இதை உன் சித்தப்படியே நடத்திவையம்மாஎன்று அர்ப்பணம் பண்ணுவோம்.

இதுவே மநுஷ்ய குணங்களில் முதலாவதாகச் சொல்லப்படுகிற நன்றி;

இதே பூஜை;

இதே ஸ்நானம்அகம்பாவ அழுக்கைத் துடைத்து நம் உயிரைச் சுத்தமாக்குகிற ஸ்நானம்.

பகவான் யார்?” பகவத் பாதர் பதில்

பரமேசுவரனும் ஸ்ரீமந் நாராயணனும் ஒரே வஸ்து; இரண்டல்ல. பெயர் வேறு. உருவம் வேறு, வேலை வேறு. ஆனால் உள்ளேயிருக்கப்பட்ட வஸ்து ஒன்றேதான். ஸ்ரீசங்கர பகவத் பாதர்களின் அபிப்பிராயம் இதுதான். கேள்வியும் பதிலுமாகப்ரச்னோத்தர ரத்னமாலிகாஎன்று அவர் ஒரு கிரந்தம் செய்திருக்கிறார். ப்ரச்னம்கேள்வி. (இப்போது அந்தப் பிரச்னை இந்தப் பிரச்னை என்கிறோமே. ‘பிரச்னைஎன்பதுப்ரச்னம்தான்) உத்தரம்பதில். ப்ரச்னம் உத்தரம் (கேள்வி பதில்) இரண்டும் சேர்த்து ப்ரச்னோத்தரம். மாலை மாதிரி கேள்வியையும் பதிலையும் தொடுத்துக் கொடுக்கிறார் ஆசார்யாள். ‘பண்டிதர்களுக்கு இது ரத்னமாலைஎன்று பிரச்னோத்தர ரத்னமாலிகாவை அநுக்கிரகித்திருக்கிறார்.

அதில் ஒரு கேள்வி: பகவான் யார்?

அதற்குப் பதில்: சங்கரனாகவும் நாராயணனாகவும் இருக்கிற ஒருவன்சங்கர நாராயணாத்மா ஏக:

இதிலிருந்து ஆசார்யாள் மனஸில் சிவன், விஷ்ணு என்ற பேதபாவம் கொஞ்சம்கூட இல்லை என்றாகிறது.

இதே மனோபாவத்தில்தான் அவரது சம்பிரதாயத்தைப் பின்பற்றும் ஸ்மார்த்தர்கள் எல்லோரும், ஒவ்வொரு காரியத்தையும்பரமேசுவரப் பிரீதிக்காகஎன்ற சங்கல்பத்துடன் ஆரம்பித்து, முடிவில்கிருஷ்ணார்ப்பணம்என்று பூர்த்தி பண்ணுகிறோம். ‘பரமேச்வர பிரீத்யர்த்தம்என்று தொடங்கி, ‘ஜனார்த்தன: ப்ரீயாதாம்என்று முடிக்கிறோம். ஒருத்தன் பிரீதிக்கு என்று ஆரம்பித்ததை இன்னொருத்தன் பிரீதிக்கு என்று எப்படி இருக்க முடியும்? இரண்டும் ஒன்றாகவே இருப்பதால்தான் முடிகிறது. பேர்தான் வேறு வேறு.

தீவிர வைஷ்ணவர்களைக் கேட்டால், விஷ்ணுதான் கடவுள்; சிவன் மற்ற ஜீவராசிகளைப் போல் என்பார்கள். இதே மாதிரி வீர சைவர்களைக் கேட்டால், சிவன் முழு முதல் தெய்வம். விஷ்ணு ஜீவகோடியைச் சேர்ந்தவர்தான் என்பார்கள். இவர்கள் ஒவ்வொருவரது சித்தாந்தப்படியும் சிவன் அல்லது விஷ்ணுதான் எல்லா ஜீவராசிகளின் இருதயத்துக்குள்ளும் அந்தர்யாமியாக இருக்கிறார். இப்படி வைத்துக் கொண்டாலும் ஒன்று சிவன் விஷ்ணுவின் இருதயத்தில் இருக்கிறார்; அல்லது விஷ்ணு சிவனின் இருதயத்தில் இருக்கிறார். எப்படிப் பார்த்தாலும் தங்கள் ஸ்வாமியை இருதயத்தில் வைத்துக் கொண்டிருக்கிற அந்த இன்னொருவரையும் பூஜிக்கத்தானே வேண்டும்.?

சித்தாந்தம் எனறு கட்சி பேசாமல் நடுநிலையிலிருந்து பேசக்கூடிய மகாகவியான காளிதாஸன், பாணன் முதலியவர்களுடைய வாக்கைப் பார்த்தால், ஒரே வஸ்துதான் பல தேவதைகளாக வந்திருக்கிறது என்று ஸ்பஷ்டமாகத் தெரியும்.

ஒரு மூர்த்திதான் உள்ளது. அதுவே மூன்றாகப் பிரிந்தது. இவை ஒன்றுக்கொன்று சமம். ஒன்று உயர்ந்ததுமற்றது தாழ்ந்தது என்றில்லைஎன்கிறார் காளிதாஸன்.

ஏகைவ மூர்த்தி: பிபிதே த்ரிதா ஸா

ஸாமான்யமேஷாம் ப்ரதமா வரத்வம்

பாணரும் இப்படியே சொல்கிறார். “எந்த ஒன்றே ரஜோ குணத்தால் சிருஷ்டி செய்கிற பிரம்மாவாகவும், ஸத்வ குணத்தால் பரிபாலிக்கிற விஷ்ணுவாகவும், தமோ குணத்தால் பிரளயத்தை உண்டாக்கும் ருத்திரனாகவும் இருக்கிறதோ, அந்தப் பிறப்பற்ற ஒன்றைமுத்தொழிலுக்கும் காரணமாக, மூன்று வேத ரூபமாக இருக்கிற முக்குண மூலத்தை நமஸ்கரிக்கிறேன்என்கிறார். *

ரஜோஜுஷி ஜன்மனி ஸத்வவ்ருத்தயே

ஸ்திதௌ ப்ரஜானாம் ப்ரளயே தம: ஸ்ப்ருசே |

ஆஜாய ஸர்க்க ஸ்திதி நாச ஹேதவே

த்ரயீமயாய த்ரிகுணாத்மனே நம: ||

ஒரு சித்தாந்தத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற வீம்பு இல்லாமல், உள்ளதை உள்ளபடி திறந்த மனஸோடு பார்க்கிற மகாகவிகள் இருவர் இப்படிச் சொல்கிறார்கள். பிரம்மா, விஷ்ணு, சிவன் விஷயத்தில் இவர்கள் சொல்கிற ஐக்கியம் அத்தனை தேவதைகளுக்கும் பொருந்தும்.

அநுபவ சிகரத்திலிருந்து பேசிய மகான்கள் தங்களுக்கென்று ஓர் இஷ்ட தெய்வம் இருந்தாலும்கூட, மற்ற தேவதைகளும் அதுவேதான் என்று தெளிவாகக் கண்டு கூறியிருக்கிறார்கள். ‘மகேசுவரனுக்கும் ஜனார்த்தனனுக்குமிடையே வஸ்து பேதம் துளிக்கூட இல்லாவிட்டாலும் என் மனசு என்னவோ சந்திரனைச் சிரஸில் சூடிய சிவபெருமானிடம்தான் விசேஷமாக ஈடுபடுகிறதுஎன்று ஸ்ரீ அப்பைய தீக்ஷிதர் கூறுகிறார். ‘நான் சைவன்தான்; சிவபஞ்சாக்ஷர ஜபம் செய்கிறவன்தான். இருந்தாலும் காயாம்பூ நிறத்து கோபிகாரமணனிடமே என் சித்தம் லயிக்கிறதுஎன்கிறார்கிருஷ்ண கர்ணாம்ருதத்தில் லீலாசுகர்.

இஷ்ட தெய்வம் என்று ஒன்று இருக்கலாம். ஆனால் அதுதான் எல்லாமாயிருக்கிறது என்பதால், அதுவேதான் மற்ற தெய்வங்களுமாயிருக்கிறது என்ற எண்ணம் இருக்க வேண்டும். ஒன்றைப் பிடித்துக் கொண்டதற்காக இன்னொன்றை நிந்திக்கக்கூடாது. விஷ்ணுதான் கடவுள், சிவன் ஒரு ஜீவன்அல்லது சிவன்தான் கடவுள், விஷ்ணு ஒரு ஜீவன்என்றால்கூட, ஒரு மூர்த்தியிடம் துவேஷம் பாராட்ட இடமில்லை. ஒருத்தர் ஸ்வாமி, இன்னொருத்தர் பக்தர் என்றாலும் பக்தருக்குரிய மரியாதையைச் செய்யத்தானே வேண்டும்? சிவன் விஷ்ணுவுக்குப் பக்தன்; அல்லது சிவனுக்கு விஷ்ணு பக்தன் என்றே சொல்கிறார்களே தவிர, இருவருமே பரஸ்பரம் துவேஷித்துக் கொள்ளும் விரோதிகள் என்று யாரும் சொல்லவில்லையே. அப்படியிருக்க அவர்களில் ஒருவரை நாம் ஏன் துவேஷிக்க வேண்டும்?

ஒரு புராணத்தில் சிவன் விஷ்ணுவை நமஸ்கரிக்கிறார்; இன்னொரு புராணத்தில் விஷ்ணு சிவனை நமஸ்கரிக்கிறார் என்பதால் இவர்கள் சின்னவர்களாகிவிடவில்லை. சிவனை நமஸ்காரம் பண்ணு என்று சிவனே சொல்லாமல், விஷ்ணு அதை நமக்குக் காரியத்தில் உபதேசிக்கிறார்; இப்படியே நமக்கு விஷ்ணு பக்தி உண்டாக்கவே, சிவன் விஷ்ணுவைப் பூஜிக்கிறார். ஜனங்களின் விதவிதமான ருசிக்குத் தகுந்த மாதிரி ஒரே பரமாத்மா வேறு வேறு ரூபத்தில் வருகிறார். அவரவருக்கும் தங்கள் இஷ்ட மூர்த்தியால் இந்த மூர்த்தியை நமஸ்காரம் பண்ணுகிறார். பகவானைப் பூஜிக்கிற மாதிரியே பாகவதர்களையும் பூஜிக்க வேண்டும் என்று வைஷ்ணவர்கள் சொல்கிறார்கள். சிவனைப்போலவே சிவனடியாரையும் வழிபட வேண்டும் என்று சைவர்களும் சொல்கிறார்கள். எனவே, இவர்களில் ஒருத்தர் இன்னொருத்தரைப் பூஜை செய்வபரையும் நாம் நமஸ்கரிக்கத்தான் வேண்டும்.

முன்னே சொன்னப்ரச்னோத்ர ரத்ன மாலிகாவில் இன்னோரிடத்தில்மேலான தெய்வம், பரதேவதை எது?’என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு, அதற்கும்சித்சக்திஎன்று பதில் சொல்கிறார் ஸ்ரீ ஆசார்யாள். சித்சக்தி என்பது தான் பரப்பிரம்மத்தின் பேர் அறிவு. அதுதான் அத்தனை தேவதைகளுமாயிற்று. அதுவே நமக்கு நல்லறிவு தரும் ஞானம்பிகை. அந்த ஞானாம்பிகைதான் நமக்கு எல்லா விதமான பேத புத்தியும் போவதற்கு அநுக்கிரகிக்க வேண்டும்.