யோகி
துக்கம் என்பது தன்னைத் தொடாமல் எவன் ஒருத்தன் இருக்கிறானோ அவனே யோகி. பாவம், அதாவது மனஸின் அசுத்தம்தான், துக்கத்துக்குக் காரணம். மனசில் உள்ள அசுத்தங்கள் எல்லாம் நீங்கினால், அது தானாகவே பரமாத்மாவின் பக்கம் திரும்பிவிடும். ஒழுங்கினாலும் கட்டுப்பாட்டினாலும் தான் மனஸில் அசுத்தங்களை அகற்ற முடியும். இந்தச் சரீரக் கூட்டிலிருந்து ஆத்மா பிரிந்து போவதற்கு முன்பு, சரியான கல்வியின் மூலமும், அப்பியாசத்தின் முலமும், கட்டுப்பட்டு ஒழுங்காக வாழ்ந்து, அசுத்தங்களைப் போக்கிக்கொண்டு விட வேண்டும். அப்படிச் செய்து ஜயித்தால், கடைசியில் தேகவியோகமே பரமாத்மாவுடன் பிரியாமல் சேர்ந்து விடுகிற யோகமாகிவிடும்.
யோகிக்கு அடையாளம் என்ன? பரமாத்மாவைச் சேர்ந்துவிட்ட அவனது மனசு, வேறு எதையுமே சேர்த்துக் கொள்ள நினைக்காது.
மனசு அதற்கப்புறம் ஓடவே முடியக் கூடாது. அப்படி ஓடாமல் ஆகிவிட்டதால்தான், அதற்கப்புறம் இப்போது இந்த மனசினால் நமக்கு உண்டாகியிருக்கிற இத்தனை தொந்தரவுகளும் தொலைந்து போதும். அந்த நிலையைப் பெறுவதற்கு எதைச் சேர வேண்டும்? மனசு எதிலிருந்து உற்பத்தியாயிற்றோ அதைத்தான் சேரவேண்டும். மனசு அதன் மூலத்தில் சேர்ந்துவிட்டால், அங்கே அப்படியே கரைந்து போய்விடும். அப்புறம் ஓடாது. அதுவே சகல தொந்தரவுகளிலிருந்தும் விடுபட்ட நிலை.
நதி இருக்கிறது. அதன் மூலம்—உண்டான இடம்—என்ன? சமுத்திரம். சமுத்திர ஜலம் தான் ஆவியாகப் போய் வேறொரு இடத்திலிருந்து நதியாக ரூபம் எடுக்கிறது. அந்த ஆறு ஓடாத ஓட்டமில்லை. இப்படி ஓடி ஓடிக் கடைசியில் தன் மூலமான சமுத்திரத்தில் வந்து விழுகிறது. அப்புறம் அதற்குத் தனி ரூபம் உண்டா? ஓட்டம் உண்டா? ஒன்றும் இல்லை. இப்படி நதிகளுக்கெல்லாம் மூலமாக இருந்து, முடிவில் இவற்றைத் தன்னிலேயே சேர்த்துக் கொள்கிற சமுத்திரம் மாதிரி, நம் மனசுகளை எல்லாம் முடிவான சேர்க்கையில், யோகத்தில் தன்னோடு கரைத்துக் கொள்கிற ஒன்று இருக்கிறதா என்றால் இருக்கிறது. சமாதி நிலையில் ஞானிகள், யோகிகள் தங்கள் தனி மனசைக் கரைத்துவிட்டு வெளிப் பிரக்ஞையே இல்லாமல் இருக்கும்போதே, இந்த வஸ்துவிடம்தான் சேர்ந்திருக்கிறார்கள். சமாதி நிலைக்கு அப்புறம் ஒரு யோகி அந்த வஸ்துவை விட்டு விட்ட மாதிரி நமக்குத் தோன்றினால்கூட உண்மையில் இது நீங்காத சேர்க்கைதான். உள்ளூர அவருக்கு அந்தச் சேர்க்கையின் அநுபவமேதான் இருந்து கொண்டிருக்கும். அதனால்தான் அவர் வெளிப் பிரக்ஞையோடு இருக்கிற மாதிரி நமக்குக் தோன்றுகிற போதுகூட, அதை அடைய வேண்டும், இது அடைய வேண்டும் என்கிற ஆசை எதுவுமே அவருக்கு இல்லை. ஏதாவது ஒன்று தனக்கு வேண்டுமென்று கொஞ்சம் கொஞ்சம் ஒருத்தனுக்குத் தோன்றிவிட்டாலும்கூட அவன் யோகி இல்லை, அவன் ஸ்வாமியைச் சேரவில்லை என்றுதான் அர்த்தம்.
யோகியின் அடையாளத்தை வேறுவிதமாகவும் சொல்லலாம். அதாவது அவனுடைய சித்தம் பரமாத்மாவிடமே நிலைத்துவிட்டது என்றால், அதற்கப்புறம் எந்தப் பெரிய துக்கம் வந்தாலும் அது துளிக்கூட ஆடக் கூடாது, அசையக் கூடாது, அழக்கூடாது. இப்படியில்லாமல், சித்தம் துளித்துளி சலித்து விட்டால்கூட அவன் பரமாத்மாவை அடையவில்லை என்றே அர்த்தம்.
யோகிக்கு அநேக துக்கம் வரும்; அதாவது ஊர் உலகத்துக்கெல்லாம் அது துக்கமாகத் தோன்றும். ஆனால் அவனுக்குத் துக்கம் லவேசமும் தெரியாது. பட்ட கட்டை மாதிரி இருப்பான். பட்ட கட்டை என்பதுக்கூடச் சரியில்லை. அது உணர்ச்சியே இல்லாத நிலை அல்லவா? யோகி ஒருத்தன் தான் பூரணப் பிரக்ஞையோடு இருக்கிறவன். அவன் ஸதானந்தமாக இருக்கிறவன். அது வேண்டும், இது வேண்டும் என்பதேயில்லாமல் சதா ஆனந்தமாக உட்கார்ந்து கொண்டிருந்து விட்டால் அதுதான் யோகம்.
அவனுக்கு ஸ்வபாவமாகவே கருணை மாத்திரம் சுரந்து கொண்டிருக்கும். யாரிடத்திலும் கோபம், வெறுப்பு வராது. இன்னொரு பிராணிக்கு தன்னால் இம்மியும் ஹிம்ஸை வரக்கூடாது என்கிற எண்ணம் மட்டும் இருக்கும். வெளி உலகத்தின் பார்வைக்கு அவன் என்னென்ன காரியம் செய்தாலும், அதிலெல்லாம் அவனுக்குத் ‘தான் செய்கிறோம்’ என்ற அகங்கார எண்ணமே இராது. சொந்தப் பற்றே இல்லாமல், பரம காருண்யம் மட்டுமே அவனுடைய காரியங்களில் இருக்கும். சில சமயங்களில் வெளியிலே பார்க்கிற காரியம் நமக்குக் கடுமையாக இருந்தாலும்கூட, உள்ளுக்குள்ளே அதுவும் பரம காருண்யம் தவிர வேறாக இராது. மஹா யோகியான பரமேசுவரன் இப்படித்தான் சம்ஹாரம் செய்கிறார். நமக்கு அது கொடுமையாகத் தெரியலாம். ஆனால் ஒவ்வொரு ஜீவனும்—எத்தனை பாப ஜீவனாக இருந்தாலும்—சிறிய காலமாவது கர்ம கதியிலிருந்து விடுதலை அடைந்து தன்னிடம் லயித்திருப்பதற்காகவே அவர் சம்ஹாரம் செய்கிறார். தினமும் நமக்குத் தூக்கத்தைக் கொடுத்து அந்த வேளையில் சுக துக்கங்களிலிருந்து நமக்கு விடுதலை தருகிற மாதிரி. இந்தச் சரீரம் விழுந்த பின்னும் கொஞ்ச காலம் சிரம பரிகாரம் தருகிறார். தினம் தூங்கிவிட்டு மறுநாள் விழித்துக் கொண்டு பழையபடி நல்லது கெட்டதுகளில் விழுகிற மாதிரி, இச்சரீரம் போய்ச் சிரம பரிகாரம் ஆனபின், இன்னொரு சரீரத்தில் விழித்துக் கொள்கிறோம். இந்த அலைச்சல்—புனரபி ஜனனம், புனரபி மரணம்—கூடாது. இந்தச் சரீரம் போனால் இன்னொரு முறை சரீரம் வரக்கூடாது. அப்படிச் செய்து கொள்ள வேண்டும். கட்டுப்பாடு, ஒழுங்கு, பரம கருணை, தபஸ், பூஜை, யக்ஞம், தானம் எல்லாம் அதற்குத்தான். குழந்தையாக இருக்கிற காலத்திலிருந்தே இவற்றில் எல்லாம் பழக்க வேண்டும். அப்படிப் பழக்கினால்தான், கோடாநு கோடி ஜனங்களை இந்தமாதிரி படிப்படியாக உயர்த்துவதற்கு முயன்றால்தான், எங்கேயாகிலும் ஒரு யோகி, ஒரு ஞானியாவது பூரணமாக உண்டாவார். அப்படி ஒருத்தர் உண்டாவதுதான் இத்தனை மநுஷ்ய சிருஷ்டிக்கும் பலன்.
துக்க பரிகாரம்
ஒருவனுக்கு வியாதி வந்தால், அதற்குப் பலர் பல்வேறு காரணங்களைக் கூறுகின்றனர். தாது வித்தியாசத்தால் நோய் வந்தது என்பார் ஆயுர்வேத வைத்தியர். இங்கிலீஷ் டாக்டர் வேறு காரணம் சொல்வார். இதற்கும் மாறாக இன்னொறு ‘ஸைகலாஜிகல்’ காரணத்தை இந்நாட்களில் பிரபலமாகி வரும் மனோதத்வ நிபுணர் கூறுவார். மந்திர சாஸ்திரக்காரர், குறிப்பிட்ட தெய்வக் கோளாற்றால் இந்த வியாதி உண்டாயிற்று என்பார். ஜோதிஷர் இன்ன கிரகம் இன்ன இடத்தில் இருப்பதே நோய்க்குக் காரணம் என்பார். தர்ம சாஸ்திரம் அறிந்தவர்களோ பூர்வ கர்ம பலனாகத்தான் வியாதி ஏற்பட்டிருக்கிறது என்பார்கள்.
வியாதிக்கு மட்டுமின்றி நம் வாழ்வின் எல்லா விதமான சுக துக்கங்களுக்கும் இவ்வாறு பலவிதக் காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒரே விஷயத்துக்கு இப்படிப் பல காரணங்கள் சொன்னால் நமக்குக் குழப்பமாயிருக்கிறது. நம் சுக துக்கங்களுக்கு கிரகங்களின் போக்குத்தான் காரணமா? ஜோதிஷர் சொல்கிறபடி கிரகப் பிரீதி செய்வதா? அல்லது மாந்திரீகர் சொல்கிறபடி குலதெய்வத்துக்கோ அல்லது வேறு தெய்வத்துக்கோ கிராம தேவதைக்கோ செய்த அபசாரம் காரணமா? அந்தத் தெய்வத்துக்கு சாந்தி பரிகாரம் செய்வதா? நோய்நொடி என்றால் வைத்தியமும் செய்யத்தானே வேண்டும்? கடைசியில் எல்லாம் கர்ம பலன் என்றால், அது தீருகிறபோதுதான் தீரும் என்று வெறுமே, இருந்துவிட வேண்டியதுதானா? இப்படியாகக் குழப்பம் ஏற்படுகிறது.
பல காரணங்களில் எது சத்தியம் என்று யோசித்தால் எல்லாமே சத்தியமாக இருக்கும். ஆதி காரணம் நம் கர்மம்தான் என்பது நிச்சயம். அந்தக் கர்மம் ஒன்றே பலவிதமான விளைவுகளை உண்டாக்குகிறது; மழை ஒன்றுதான் – ஆனால் அதிலிருந்தே எத்தனை விளைவுகள் உண்டாகின்றன? பூமி முழுவதும் ஈரம் உண்டாகிறது; ஈசல் உண்டாகிறது; தவளை கத்துகிறது; சில செடிகள் பச்சென்று தழைக்கின்றன; வேறு சில அழுகுகின்றன. இத்தனையும் ஒரே மழைக்கு அடையாளங்கள். அதே மாதிரி மாந்திரீகமாகவும் ஜ்யோதிஷ ரீதியிலும் வைத்திய சாஸ்திரப்படியும் நாம் குணம் பெற வேண்டிய வியாதிக்கும் ஒரு கர்மாவே காரணம். இன்னும் வாழ்க்கையில் வியாதியைத் தவிர, பலவிதமான பிரச்னைகள்! பணத்தால், உத்தியோகத்தால், தேக பலத்தால், அறிவுசக்தியால் கவனிக்க வேண்டிய பிரச்னைகள் (Problems) எல்லையில்லாமல் இருக்கின்றன. இந்தப் பிரச்னைகள், கஷ்டங்கள் எல்லாவற்றுக்கும் காரணம் கர்மம்தான். ஸயன்ஸ்படி விளைவு (Effect) இருந்தால் காரணம் (Cause) இருந்தேயாக வேண்டும்.
ஜகத் முழுதும் காரணம்—விளைவு, செயல்—பிரதிச் செயல் (Action and Reaction) என்ற துவந்தத்துக்குள்தான் கட்டுண்டிருக்கிறது. பௌதிக சாஸ்திரம் (Physics) முழுதும் இந்த உண்மையைத்தான் விளக்குகிறது. ஜடப் பிரபஞ்சம் ஜீவப் பிரபஞ்சம் இரண்டும் ஒரே மூலத்திலிருந்தே வந்ததால் ஜகத்துக்கு உள்ள இந்த விதி மனித வாழ்விலும் உண்டு. நம் செயலுக்கெல்லாம் நிச்சயமாகப் பிரதி உண்டு. இன்று நாம் அநுபவிக்கின்ற சுகங்களுக்கும் கஷ்டங்களுக்கும் காரணம் நாம் முன்னமே இந்த ஜன்மாவிலோ, பூர்வ ஜன்மாவிலோ செய்த நல்லது கெட்டதுகள்தான். சில சமயங்களில் நம் சொந்த பாப புண்ணிய விளைவோடு, குறிப்பிட்ட வேறு சிலரது பாப புண்ணிய பலனும் நம்மைச் சேருவதாகச் சொல்வதுண்டு. உதாரணமாக, குழந்தைக்கு வியாதி வந்தால், மாதா பிதாவின் பாப பலன் என்பார்கள். அவர்கள் குழந்தைக்கு ஸதா சிசுருஷை செய்வதையும், மனத்தால் அந்தக் குழந்தைக்காக அவர்கள் வேதனைப்படுவதையும் பார்க்கும்போது இதுவும் நியாயம் என்றே தெரியும். எனக்கு இன்னொன்றுகூடத் தோன்றுகிறது. அதாவது, நமக்கு ஒரு கெடுதல் வந்தால் அது நம் சத்துருவின் புண்ணிய பலன் என்றும் சொல்லலாம்.
பிரபஞ்சத்தின் சகல ஆட்டத்துக்கும் காரணம் ஒரே ஒரு பராசக்திதான். அந்த ஒரே ஈசுவரனுடைய ஆக்ஞைப்படிதான் உலக இயக்கம் முழுதும் நடக்கிறது. அவன் பல விஷயங்களைச் சம்பந்தப்படுத்தி விடுகிறான். இந்த உலகத்தில் எதுவுமே தொடர்பில்லாமல் நடக்கவில்லை. நமக்குச் சம்பந்தமில்லாதவையாகத் தோன்றுவதை எல்லாம் உள்ளூறச் சம்பந்தப்படுத்தி வேடிக்கை பார்க்கிறான் ஸர்வேச்வரன்.
ஒருவர் செய்கிற கர்மம், அதன் பலன் இவையே மனித வாழ்வின் சுக துக்கங்களுக்கு முதற் காரணம். இதற்கே துணைக்காரணமாக—அல்லது அடையாளமாக—கிரகசாரம், தெய்வ குற்றம், ஆரோக்கியக்குறைவு முதலியன அமைகின்றன.
ஜாதக ரீதியில், வைத்திய ரீதியில், மாந்திரீக ரீதியில் எப்படி வேண்டுமானாலும் பரிகாரம் தேடிக் கொள்ளலாம். நம் கர்மா தீருகிறபோது அவை பலன் தரும். பகவான் விட்டவழி என்று பக்தியோடு நம் வாழ்க்கையை ஈஸ்வரார்ப்பணம் செய்துவிட்டுப் பேசாமல் கிடக்கிற பக்குவம் இருந்தால், எல்லாவற்றையும்விட அது சிலாக்கியம். அதுவே பெரிய பரிகாரம்; உண்மையான பரிகாரம்.
பூர்வ கர்ம சமாசாரம் எப்படிப் போனாலும் இனிமேலாவது கர்ம பாரம் ஏறாமல் பார்த்துக்கொள்வதே முக்கியம். பழையதற்குப் பரிகாரம் தேடுவதைவிட, புதிய சுமை சேராமல், பாபம் பண்ணாமல் வாழ்வதற்கு ஈசுவரனைத் துணைகொள்வதே முக்கியம்.
பூர்வ கர்மத்தால் இப்போது ஏற்பட்டுள்ள துக்கத்துக்கும் உண்மைப் பரிகாரம் ஈசுவர தியானம்தான்; இனிமேல் துக்கத்துக்கு விதை போட்டுக் கொள்ளாமல் இருக்கிற உபாயமும் ஈசுவர தியானம்தான். துக்கம் தருவதாக இன்னொரு வஸ்துவே இல்லை என்ற அத்வைத அநுபவம் சித்திப்பதே இதன் முடிந்த முடிவான துக்க பரிகார நிலை. அங்கே துக்கமும் இல்லை; சுகமும் இல்லை; இரண்டுக்கும் ஆதாரமான சத்தியம் மட்டும் ஸ்வயம் பிரகாசமாக இருக்கும்.
த்வைதம் + பௌத்தம் = அத்வைதம்
“பிரம்மம் பூரணமானது; உலகமும் பூரணமானது; பிரம்மம் என்ற பூரண வஸ்துவில் உலகம் என்ற பூரணம் உதயமாயிற்று; இந்த உலகம் என்ற பூரணத்தைப் பிரம்மம் பூரணத்திலிருந்து எடுத்துவிட்ட போதிலும் பிரம்மம் பூரணமாகவே இருக்கிறது” என்று ஓர் உபநிஷத மந்திரம் சொல்லுகிறது. பூரணம் என்றால் எல்லாம் என்று அர்த்தம். எப்படி இரண்டு வஸ்து எல்லாமாக முடியும்? பூரணத்திலிருந்து பூரணத்தைக் கழித்த பின்னும் எப்படிப் பூரணம் மிஞ்ச முடியும் என்ற கேள்வி எழுகிறது.
இந்த மந்திரத்தின் வாஸ்தவமான தாத்பரியம் என்ன? உலகம் உண்மையில் பிரம்மத்திலிருந்து வேறாகப் பிரிந்து வெளியே வந்துவிட்ட வஸ்து அல்ல. பிரம்மமேதான் உலகமாகத் தோன்றுகிறது. பிரம்மம் வேறேதோ பொருள்களைக் கொண்டு உலகை சிருஷ்டிக்க (Create) வில்லை. பிரம்மம் உலகமாக மாறிவிடவும் (Transform) இல்லை. பிரம்மம் உலகமாகத் தோன்றுகிறது (Appearance). அவ்வளவுதான். இருட்டிலே ஒரு மாலையைப் பார்த்துவிட்டுப் பாம்பு என்று நினைக்கிறோம். இப்போது மாலையே பாம்பாகத் தோன்றுகிறது. மாலை பாம்பாக மாறவில்லை. மாலை பாம்பைச் சிருஷ்டிக்கவும் இல்லை. பாம்பாக எண்ணியபோது அது முற்றிலும் (பூரணமாக) பாம்பாகத்தான் தெரிகிறது. மாலை என்று தெரிந்து கொண்டால் பூரணமாக மாலையாகவே இருக்கிறது. மாலை என்ற பூரணத்தில் பாம்பு என்ற பூரணம் உதயமானாற்போல், பிரம்ம பூரணத்தில் உலக பூரணம் தோன்றுகிறது. அதாவது ஒரு நிலையில் மாலையே பூரணம்; இன்னொரு நிலையில் பாம்பே பூரணம். ஆக, இரண்டு பூரணமில்லை. ஒரே பூரணம் இரண்டு சமயங்களில் இரு விதங்களில் பூரணமாகத் தெரிகிறது. மாலையில் பாம்பு என்ற தோற்றம் ஏற்பட்டதால் அப்போது அதன் எடை கூடிற்றா என்ன? இல்லை. பாம்பு என்ற தோற்றம் அழிந்து, இது மாலைதான் என்ற தெளிவு ஏற்பட்டபோது மாலையின் எடை குறைந்ததா? அதுவும் இல்லை. அப்படியே பிரம்மத்தில் உலகத்தைக் கூட்டினாலும் குறைத்தாலும் அது மாறாமல் பூரணமாகவே இருக்கிறது. மாலையில் தோன்றும் மாயப்பாம்பாக, “அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவாக” இருப்பதே உலகம் என்றார் கம்பர். அரவை (பாம்பை) அலங்கலிலிருந்து (மாலையிலிருந்து) கழித்த பின்னும் அது பூரண அலங்கலாகவே இருக்கிறது. இதுதான் உபநிஷத் சொன்னபடி பூரணத்திலிருந்து பூரணத்தைக் கழித்த பின்னும் பூரணம் மீதி இருப்பது.
மாலை ஏன் பாம்பாகத் தெரிந்தது? இருட்டினால் அப்படித் தெரிந்தது. மாயை என்கிற இருட்டில்தான் பிரம்மம் உலகமாகத் தெரிகிறது. ‘மாயா’ என்றால் “எது இல்லையோ அது” என்று அர்த்தம். இல்லாத வஸ்துவான மாயைதான் இருக்கிற ஒரே வஸ்துவான பிரம்மத்தைப் பலவான பிரபஞ்சமாகப் பெருக்கிக் காட்டுகிறது. இல்லாத வஸ்துவால் இப்படிச் செய்ய முடியுமா என்று கேட்பீர்கள். கணித சாஸ்திரப்படி பதில் சொல்கிறேன்.
பிரம்மத்தின் விஷயத்தில் கூட்டல், கழித்தல், கணித நியதி மேலே பார்த்தோம். கூட்டினாலும் ஜாஸ்தி ஆகாது. கழித்தாலும் பூரணமாகவே இருக்கும் என்ற விசித்திரத்தைப் பார்த்தோம். இப்போது பெருக்கல், வகுத்தல் கணக்கு ஒன்றும் சொல்கிறேன்.
ஓர் எண்ணை இன்னோர் எண்ணால் வகுக்கிறோம். வகுக்கிற எண் சிறியதாக சிறியதாக ஈவு அதிகமாகிக் கொண்டே போதும். பதினாறைப் பதினாறால் வகுத்தால் ஈவு ஒன்று; எட்டால் வகுத்தால் ஈவு இரண்டு; நாலால் வகுத்தால் நாலு; ஒன்றால் வகுத்தால் ஈவு பதினாறு. வகுக்கிற எண் சிறியதானால் ஈவு அதிகமாகிறது. வகுக்கிற எண் மிக மிகச் சிறியதாகி பூஜ்யமே (0) ஆகிவிட்டால் அப்போது ஈவு மிக மிகப் பெரியதான, எண்ணிக்கையிலேயே அடங்காத அனந்தமாகிறது (Infinity). பூஜ்யத்தால் எந்த எண்ணை வகுத்தாலும் கிடைக்கிற ஈவு அனந்தம்.
1/0 =அனந்தம்; 2/0 =அனந்தம்; 3/0 =அனந்தம்; கோடியைப் பூஜ்யத்தால் வகுத்தாலும் இதே அனந்தம்தான் ஈவு.
வகுக்கிற எண்ணால் ஈவைப் பெருக்கினால் வகுக்கப்படும் எண் கிடைக்கவேண்டும் என்பது கணித நியதி. 16/2 = 8; அதாவது 8 × 2 = 16 இந்த நியதிப்படி,
அனந்தம் × 0 = 1
அனந்தம் × 0 = 2
அனந்தம் × 0 = 3
இப்படி முடிவே இல்லாமல் போய்க் கொண்டே இருக்கிறது. ஒரே அனந்தமானது பூஜ்யத்தால் தன்னை ஒன்று, இரண்டு, மூன்று, கோடி, பத்துகோடி, என்று முடிவில்லாமல் பெருக்கிக் கொண்டே போகிறது.
இந்த ஒரே அனந்தம்தான் பிரம்மம். இல்லாத வஸ்துவான மாயைதான் பூஜ்யம். எது இல்லையோ அதுதானே ஸைஃபர்? மாயை என்றாலே அந்தச் சொல்லுக்கு ‘எது இல்லையோ அது’ என்றுதான் அர்த்தம். எனவே மாயைதான் ஸைஃபர், பூஜ்யம். அனந்தம் பூஜ்யத்தால் தன்னைப் பெருக்கிக் கொண்டு பலவாகக் காட்டிக் கொள்வதுபோல், பிரம்மம் மாயா சக்தியால் தன்னை எல்லையில்லாத பல வஸ்துக்களாகத் தோன்றுகிற இந்தப் பிரபஞ்சமாகக் காட்டிக் கொள்கிறது. வகுக்கப்படும் பிரபஞ்சத்துக்கு என்ன எண்ணிக்கை வேண்டுமானாலும் தரலாம். எந்த எண்ணிக்கை தந்தாலும் அதை வகுப்பது பூஜ்யமான மாயையாகையால் மாறாது. அனந்தப் பிரம்மமே ஈவு ஆகிறது. பிரபஞ்சம் என்பது இவ்விதம் எந்த எண்ணிக்கையை வேண்டுமானாலும் பெறலாம் என்கிற முறையில் எல்லையற்றிருப்பதால் அதுவும் அனந்தமாகிறது. சிருஷ்டியில் எத்தனை தினுசு? நம் மனசும் எத்தனை தினுசுகளில் ஓடுகிறது? இவற்றிற்கு முடிவே இல்லை. அனந்தம் தான். முதலில் சொன்ன உபநிஷத் மந்த்ரங்களில் பிரம்மத்தைப் பூரணம் என்று சொன்னபோது, அது மாறாத அனந்தம் என்றும், பிரபஞ்சத்தைப் பூரணம் என்கிறபோது அது மாறிக் கொண்டேயிருப்பதில் அனந்தம் என்றும் அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம்.
மாறிக் கொண்டேயிருக்கிற வஸ்து சத்தியமாக இருக்கமுடியாது. ஒன்று, இரண்டு, மூன்று, கோடி, பத்துகோடி என்று அதற்கு நாம் மதிப்புத் தந்தாலும், உண்மையில் அது அசத்தியம்தான்—இல்லாத வஸ்துதான்—அதாவது பூஜ்யம்தான். ‘எந்த எண்ணைப் பூஜ்யத்தால் பெருக்கினாலும் வருகிற விடை பூஜ்யம்தான்’ என்ற கணித நியதியை இங்கே எடுத்துக் கொள்ள வேண்டும். அனந்தம் (பிரம்மம்) × மாயை (0) = 1; 2; 3… என்றெல்லாம் மேலே உபசாரமாகச் சொன்னாலும், உண்மையில் அனந்தத்தை மாயையால் பெருக்கிக் கிடைக்கிற பிரபஞ்சமும் மாயா மயமான பூஜ்யம்தான் எனலாம்.
அனந்தமாக இருக்கிற பிரம்மம் ஒன்றே சத்தியம் என்கிறது அத்வைதம்; அனந்தமாகத் தெரிகிற பிரபஞ்சமும் சத்தியம் என்கிறது துவைதம்; பிரம்மம், பிரபஞ்சம் என்ற பேதமில்லாமல் எல்லாமே சூனியம், பூஜ்யம், மாயை என்கிறது பெளத்தம். அதாவது, பிரம்மம் என்பது சத்தியம் என்று சொல்வது அத்வைதம்; எல்லாம் மாயை என்பதோடு நிற்கிறது பெளத்தம்; பிரபஞ்சத்தை சத்தியமாகச் சொல்கிறது த்வைதம்.
பிரம்மம் × மாயை = பிரபஞ்சம் என்று நாம் மேலேகண்ட equation சூத்திரத்தை,
அத்வைதம் × பெளத்தம் = த்வைதம் என்று சொல்லலாம். அல்லது,
த்வைதம் ÷ பெளத்தம் = அத்வைதம் எனலாம்.
ஆசார்யர்களின் ஆக்ஞை
ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர்களின் பெயரில் வந்துள்ள பீடங்களில் இருக்கிற எங்களுக்கு, அவர் இட்டுள்ள முக்கியமான ஆக்ஞை என்னவெனில், நாங்கள் எப்போதும் ஈசுவர தியானம் செய்ய வேண்டும். மற்றவர்களையும் தியானம் செய்யுமாறு பண்ண வேண்டும் என்பதே. ஈசுவர தியானம் என்பது எதற்கு? அந்த ஈசுவரன்தான் நாமாக ஆகியிருக்கிறார். அதாவது நம்முடைய நிஜ ஸ்வரூபம் அவரேதானென்று கண்டுபிடித்துக் கொள்வதுதான் லட்சியம். நாம் என்னவென்று எப்படிக் கண்டுபிடித்துக் கொள்வது? தெரியவில்லையே என்றால், ஈசுவரன் என்று சகல கல்யாண குணநிலையனாக ஒருத்தனைச் சொல்கிறோமே அவனைத் தியானித்துக் கொண்டிருந்தாலே போதும். அவனும் நாமும் ஒன்று என்பதால், அவனே, நமக்கு நம்முடைய—அவனுடைய—நிஜ ஸ்வரூபத்தை அநுக்கிரகித்து விடுவான். அப்படி நாமும் அவனும் ஒன்றாகிறபோது ஸகல குணங்களும் போய் நிர்குணமாகிவிடும்.
குழந்தைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புகிறோம். அவர்கள் சரியாக நடக்காவிட்டால் உபாத்தியாயர் உபயோகமில்லை என்கிறோம். அப்படியே நீங்கள் சரியாக நடக்காவிட்டால் உங்களுக்கு ‘குரு’ என்று சொல்லப்படும் நான் உபயோகமில்லை என்று அர்த்தம்.
ஒருவனைக் கவனித்து நல்வழிப்படுத்துகிற பொறுப்பு இன்னொருத்தருக்கு இருக்கும்போது, அந்த ஒருவன் தப்புச் செய்தால், அந்தத் தப்பு அவனை நல்வழிப்படுத்தாதவரையே சேரும். ‘குடிகள் செய்யும் பாபம் அரசனைச் சேரும்; மனைவியின் பாபம் கணவனைச் சேரும்; சிஷ்யனின் பாபம் குருவைச் சேரும்’ என்று நீதி சாஸ்திரம் சொல்கிறது. சாதாரணமாக குரு என்றால் ஒரு சில சிஷ்யர்கள் இருப்பார்கள். அவர்கள் செய்கிற சிறிதளவு பாபம் குருவிடம் சேரும். ஒருவர் ஜகத்குரு என்றால் அவரிடம் எத்தனை பாபம் வந்து சேரும்? உலகின் அத்தனை பாபமும் வந்து சேரும்.
பாபம் நீங்க ஒரே வழி பகவத் தியானம்தான். இதனால்தான் பகவத்பாதாள் “ஜனங்களைத் தியானத்தில் ஈடுபடுத்துங்கள். அவர்கள் தியானம் செய்யாவிட்டால் அவர்களுக்காகவும் சேர்த்து நீங்கள் தியானம் பண்ணுங்கள்” என்று ஆக்ஞை செய்திருக்கிறார். அந்தக் கடமையை செய்ய என்னால் முடிந்த மட்டும் பிரயத்தனம் செய்து வருகிறேன். உங்கள் எல்லோருக்காகவும் தியானம் செய்ய முயலுகிறேன். ஆனால் நீங்களும், அவரவர்களே எவ்வளவுக்கெவ்வளவு தியானம் செய்கிறீர்களோ அவ்வளவுக்கு என் பாரம் குறையும்.
மனசு சுத்தமாவதற்காக, பழைய பாப கர்மப் பலனைத் தாங்கிக் கொள்வதற்காக, புதிய பாபம் செய்யாமலிருப்பதற்காக, எல்லோரும் முடிந்த மட்டும் தியானம் செய்ய வேண்டும். உறுதியாக சங்கற்பம் இருந்தால் காலம் கிடைக்காமல் போகாது. அநாவஸ்ய வம்பிலும், நியூஸ் பேப்பர் விமர்ஸனத்திலும் செலவாகிற காலத்தை மட்டுப் படுத்தினால் நித்திய சிரேயஸைத் தருகிற தியானத்திற்கு வேண்டிய அவகாசம் நிச்சயம் கிடைக்கும். தியானம் செய்வதே வாழ்க்கையின் முதலான காரியம் என்று கருத வேண்டும். ஐசுவரியம் இருந்தாலும், தாரித்திரியம் வந்தாலும், கஷ்டம் வந்தாலும், சுகம் ஏற்பட்டாலும், ஆரோக்யம் இருந்தாலும், வியாதி வந்தாலும்—எப்போதும் எத்தனை நாழிகை முடியுமோ அவ்வளவுக்கு தியானம் செய்ய வேண்டும்.
நாம் செய்வதோடு நம் பழக்கத்துக்கு உட்பட்டவர்களையும் தியானம் செய்யும்படி சொல்ல வேண்டும். செய்யவில்லை என்று கோபித்துக் கொள்ளக்கூடாது. அன்போடு அவர்களுக்குப் படும்படி சொல்ல வேண்டும். அன்போடு சொன்னால் எப்படிப்பட்ட மனமும் கரையும்.
“தியானம் செய்யுங்கள்; மற்றவர்களைச் செய்யச் சொல்லுங்கள்” என்று பகவத்பாதாள் எங்களுக்கு இட்ட ஆக்ஞையைத் தெரிவித்தேன். உங்களைத் தியானம் பண்ணுமாறு செய்கிறோனோ இல்லையோ, ‘தியானம் செய்யுங்கள்’ என்ற ஆதி ஆசாரியாள் ஆக்ஞையைத் தெரிவித்த அளவுக்காவது என் கடமையைச் செய்தவனாகிறேன். அதைச் சொல்லும் பாக்கியம் எனக்கு உங்களால் கிடைத்தது. ஸ்ரீ ஆசாரியாள் எதைச் சொல்ல ஆக்ஞைச் செய்தாரோ அதைக் கேட்கும் பாக்கியம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. உங்களால் என் கடமையில் ஒரு பங்கையேனும் செய்த லாபத்தை அடைந்தேன். நீங்களும் ஆத்ம லாபத்துக்கான உபாயத்தைக் கேட்டுக் கொண்டீர்கள்.நமக்குள் பரஸ்பர லாபம் உண்டாயிற்று.
இதை நன்றாக மனஸில் வாங்கிக் கொண்டு பூரண லாபம் பெறுங்கள். இந்த ஜன்மா முடிகிறபோது, “அப்பாடா, பிறவி எடுத்ததன் பலனை அடைந்து விட்டோம். இனி பயமில்லாமல் போய்ச் சேரலாம்” என்று உறுதியும் திருப்தியும் பெறுகிற அளவுக்கு நல்ல மார்க்கத்தில் நாம் செல்லப் பரமேசுவரன் எல்லோருக்கும் பூரண அநுக்கிரஹம் புரிவானாக!
மனம் கெட்டுப்போய் எவ்வளவோ பாபம் செய்திருக்கிறோம். குழந்தையாக இருந்ததிலிருந்து ஈசுவர தியானம் செய்திருந்தால் இவ்வளவு நாள் எவ்வளவோ பாபம் போயிருக்கும். இப்பொழுதோ மேலேயும் பாபத்தைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறோம். எத்தனை நாட்கள் ஈசுவர சரணாரவிந்த தியானம் செய்கிறோமோ அவ்வளவு நாட்களும் நம்முடைய பிறவிப் பயனை நாம் அனுபவித்தவர்களாகிறோம். இந்த ஜன்மத்தை எடுத்ததற்குப் பலன் அதுதான்.
நாம் எவ்வளவு நாழிகை தியானம் பண்ணுகிறோம் என்று அவரவரும் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டும். தினந்தோறும் பல காரியங்களைச் செய்து வருகிறோம். ஆனாலும் ஈசுவரத் தியானம் மிகவும் கொஞ்சந்தான் செய்திருப்போம். வம்பு, வீணில் செலவான காலமெல்லாம் ஈசுவரத் தியானத்தில் செலவழித்திருப்போமானால் இப்பொழுது பாப மூட்டைக்குப் பயப்பட வேண்டாம். இப்பொழுது மூட்டை வரவர ஏறிக்கொண்டே இருக்கிறது. நாம் பூலோகத்தில் வந்துவிட்டோம். இனி யாராக இருந்தாலும் போயாக வேண்டும்; இதுவரை இந்த லோகமானது அழுக்கை ஏற்றிக் கொள்வதற்கே இடமாக இருந்துவிட்டது. இப்படியிருந்தது போதும். இனிமேல் இது அழுக்கை அலம்புகிற இடம் என்று ஆக்கிக் கொள்வோம். தேஹம், மனசு, சாஸ்திரம், க்ஷேத்திரம், தீர்த்தம் முதலிய பல சௌகரியங்கள் இந்த உலகில்தான் இருக்கின்றன. நாம் வாக்கினாலும் மனத்தினாலும் கைகால் முதலியவற்றாலும் பாபம் செய்து இருக்கிறோம். அந்தப் பாபங்களையெல்லாம் வாக்கையும், மனசையும், அவயங்களையும் கொண்டே புண்ணியம் செய்து கரைத்துவிட வேண்டும். நாம் இந்த உலகை விட்டுப் போவதற்குப் ‘பாப மூட்டை’ இல்லை என்று சொல்லும்படி செய்து கொண்டால், அப்புறம் பஞ்சைப்போல் ஆனந்தமாகப் பறந்து போகலாம். எங்கிருந்து புறப்பட்டோமா அங்கேயே போய்ச் சேர்த்துவிடலாம். அப்புறம் மாறாத ஆனந்தமாகவே இருக்கலாம். ‘பாபிகளையும் பரமாத்மாவாக்குகிறவர்’ என்று கன்னட பாஷையில் நம் ஆசார்யாளைப் பற்றி ஒரு வசனம் இருக்கிறது. துராத்மா என்று நாம் சொல்கிறவனும் அந்தப் பரமாத்மாவைப் தவிர வேறில்லை என்று சொல்லி அந்த நிலையை இவன் அடைவதற்கு ஆசார்யாள் படிகட்டுப் போட்டுக் கொடுத்திருக்கிறார். இது கர்மத்தில் ஆரம்பித்து பக்தி வழியாகச் சென்று ஞானத்தில் முடிகிறது