பக்தியே பெரிய லக்ஷ்மி
“இதைத்தா, அதைத்தா,” என்று நாம் பிரார்த்திக்க வேண்டியதே இல்லைதான். நம் யோக்கியதைக்கு என்ன தரவேண்டும் என்று அம்பாளுக்கே தெரியும். இருந்தாலும் நடைமுறையில் இப்படி விவேகத்தோடு இருக்க முடிய மாட்டேன் என்கிறது. “இது வேண்டும். அதுவேண்டும்” என்பதற்காகத்தான் பிரார்த்தனை செய்கிறோம்.
யோசித்துப் பார்த்தால் இதை அடியோடு தப்பு என்று சொல்ல முடியவில்லை. கீதையில் பகவான் பக்தர்களை நாலு தினுசாகப் பிரித்துச் சொல்கிறார். அதிலே மோக்ஷத்தை விரும்பி உபாஸிக்கிற சாதகன், அந்த மோக்ஷ லட்சியத்தையே பிடித்துவிட்ட ஞானி ஆகிய இரு சாராரைச் சொன்னதோடு பகவான் நின்றுவிடவில்லை. நோய் நொடி முதலான துன்பங்கள் நீங்குவதற்காகப் பிரார்த்திக்கிறவன், பொருளை வேண்டிப் பிரார்த்தனை பண்ணுகிறவன் ஆகிய இரு சாராரைக்கூடச் சேர்த்துக் கொள்கிறார். இம்மாதிரி லௌகிக சௌக்கியத்துக்காக வழிபடுகிறவர்கூடத் தன்னை பூஜிப்பதாக பகவான் ஒப்புக் கொள்கிறார். பகவானே ஒப்புக்கொண்ட விஷயத்தை நாம் ஆட்சேபிப்பதற்கில்லை.
ஆனால், கீதா சாஸ்திரம் முதலிய எந்த ஞான நூலாகட்டும், சமய கிரந்தமாகட்டும், இகலோக சௌக்கியங்களைத் தள்ளிவிட்டு, சாசுவதமான பேரின்பத்தைத்தான் நாடவேண்டும் என்பதை லட்சியமாக வலியுறுத்துகின்றன. அப்படியானால் பகவானே முரண்படப் பேசுகிறாரா? அப்படி அர்த்தமில்லை. லௌகிக காரியங்களை எடுத்த எடுப்பில் யாராலும் விட்டுவிட முடிகிறதில்லை. ஆனாலும் இந்த நிலையில் இருக்கிற போதுகூட, “எல்லாம் நம்மாலேயே முடியும், நாம் நினைத்ததை எல்லாம் நாமே ராஜாவாக நடத்திக் கொள்ள முடியும்’ என்று நினைத்துவிடாமல், ‘நமக்கு மேலே ஒரு மகா சக்தி இருக்கிறது. அதற்குச் சக்தி இருப்பதோடு கருணையும் இருக்கிறது. நாம் தழைத்து வேண்டினால் அது அநுக்கிரகம் பண்ணும்’ என்கிற நம்பிக்கை இருந்தால், அது விசேஷம்தானே? பணம் வேண்டும், வீடு வேண்டும், பதவி வேண்டும் என்றெல்லாம் பிரார்த்தனை செய்கிறபோதுகூட, இப்படி ஒரு மகா சக்தியிடம் நம்பிக்கை வைத்து, அதனிடம் நம் அகங்காரத்தையெல்லாம் தாழ்த்திக் கொண்டு நிற்கிறோம் அல்லவா? அந்த மட்டில் இது நாஸ்திகத்தைவிட எத்தனையோ சிலாக்கியம்தானே? முதலில் ஏதேதோ வஸ்துக்களுக்காகப் பகவானிடம் போகிறோம். பூஜை, ஆலய தரிசனம், ஸ்தோத்திரம், ஜபம் என்று செய்கிறோம். கொஞ்சம் கொஞ்சமாக இதுகளில் பிடிப்பு உண்டாக உண்டாக, மற்ற வஸ்துக்களில் பிடிப்புக் குறைகிறது. கடைசியில் பகவானுக்காகவே பகவானைப் பக்தி பண்ண வேண்டும் என்கிற ருசி பிறக்கிறது.
அதனால்தான் லக்ஷ்மீ கடாக்ஷத்தை விரும்பியே பக்தி செலுத்துகிறவர்களைக்கூட, ‘அர்த்தார்த்தி’ என்று தனியாகச் சொல்லி, தன்னை பூஜிப்பவனாக பகவான் ஒப்புக் கொள்கிறார்.
“ஆசைக்கோர் அளவில்லை” என்றார்கள். முக்கியமாக செல்வம் வேண்டும் என்கிற ஆசைக்கு எல்லையே இல்லாமல் போய்விடுகிறது. இதனால்தான் அனர்த்தம் எல்லாம் வந்து விடுகிறது. ஞானம் வேண்டும், குணம் வேண்டும் என்றெல்லாம் பிரார்த்திக்கிறவர்கள் எங்கேயாவது துர்லபமாக இருப்பார்களோ என்னவோ? லக்ஷ்மீகடாக்ஷத்திற்கு மட்டும் பிரார்த்திக்காதவர் இல்லை. இதிலே எந்தக் கோடீஸ்வரனுக்காகவது திருப்தி வந்திருக்குமா என்றால் அதையும் காணோம்.
சௌக்கிய அநுபோகம் அதிகமாக ஆக, ஞானம் வேண்டும் என்ற எண்ணம் குறைந்து கொண்டே போகிறது. இதனால்தான் லக்ஷ்மி இருக்கிற இடத்தில் ஸரஸ்வதி இருப்பதில்லை என்று பொதுவில் வசனம் வந்துவிட்டது. இதற்கு வேடிக்கையாக ஒரு காரணம் தோன்றுகிறது. சாதாரணமாக மாமியாரும் மாட்டுப் பொண்ணும் ஒரே இடத்தில் ஒத்து இருக்க மாட்டார்கள். மஹாவிஷ்ணுவும், பிரம்மாவும் தகப்பனாரும் பிள்ளையும் ஆகிறார்கள் என்றால், அப்போது மஹா லக்ஷ்மியும் ஸரஸ்வதியும் மாமியார் – மாட்டுப் பெண் ஆகிறார்கள். இவர்கள் சேர்ந்து சௌஜன்யமாக இருக்க மாட்டார்களே! அதனால்தான் பொதுவில் லக்ஷ்மீ கடாக்ஷம் இருக்கிற இடத்தில், ஸரஸ்வதீ கடாக்ஷம் இருப்பதில்லை. அல்லது இதையே நல்லபடியாகச் சொல்லலாம். மாமியாரிடம் உள்ள மகா மரியாதை காரணமாகவே அவள் இருக்கிற இடத்தில் தான் முந்திரிக்கொட்டை மாதிரி தெரியக்கூடாது என்று ஸரஸ்வதி ஒதுங்கிப் போவதாகவும் சொல்லலாம்.
இதெல்லாம் வேடிக்கையாகச் சொல்கிற பேச்சு. வாஸ்தவத்தில் இருக்கிறது ஒரு பராசக்திதான். அவள்தான் எந்தெந்த சமயத்தில் எந்தெந்த விதமாக அநுக்கிரகம் செய்து பக்குவத்தைத் தரவேண்டுமோ அப்படிச் செய்வதற்காக மகாலக்ஷ்மியாக, ஸரஸ்வதியாக, ஞானாம்பிகையாக வருகிறாள். ஏதோ ஒரு ரூபத்தில் பக்தி என்று வைத்துவிட்டால் போதும். அப்புறம் நடக்க வேண்டியதை அவளே பார்த்துக் கொள்வாள். இந்தப் பக்திதான் நமக்குப் பெரிய செல்வம். அதுவே பெரிய லக்ஷ்மி.
நவராத்திரி நாயகியர்
நவராத்திரியில் பராசக்தியான துர்கா பரமேசுவரியையும், மகாலக்ஷ்மியையும், ஸரஸ்வதி தேவியையும் பூஜிக்கிறோம். மூன்று மூர்த்திகளாகச் சொன்னாலும், முப்பத்து முக்கோடி மூர்த்திகளாகச் சொன்னாலும், அத்தனையாகவும் இருப்பது ஒரே பராசக்திதான். இந்த உண்மையைத்தான் லலிதா ஸஹஸ்ரநாமம் பரதேவதையை வர்ணிக்கும்போது அவளே சிருஷ்டி செய்பவள் (ஸ்ருஷ்டிகர்த்ரீ – ப்ரஹ்ம ரூபா) அவளே பரிபாலனம் செய்பவள் (கோப்த்ரீ – கோவிந்த ரூபிணீ), அவளே சம்ஹாரம் செய்பவள் (ஸம்ஹாரிணீ – ருத்ரரூபா) என்று சொல்கிறது. லலிதையாக, துர்க்கையாக இருக்கிற பராசக்திதான் மஹாலக்ஷ்மியாகவும், ஸரஸ்வதியாகவும் இருக்கிறது. லக்ஷ்மி அஷ்டோத்தரத்தில் ‘பிரம்ம விஷ்ணு சிவாத்மிகாயை நம:’ என்று வருகிறது. ஸரஸ்வதி அஷ்டோத்தரத்திலும் இப்படியே ‘பிரம்ம விஷ்ணு சிவாத்மிகாயை நம:’ என்று வருகிறது. படைப்பு, அழிப்பு, காப்பு எல்லாம் செய்வது ஒரே சக்திதான் என்று இந்த நாமங்கள் நமக்கு நன்றாக உணர்த்துகின்றன. ஒரே பராசக்திதான் வெவ்வேறு வேஷங்களைப் போட்டுக்கொண்டு வெவ்வேறு காரியங்களைச் செய்கிறது. துர்க்கையாக இருக்கிறபோது, வீரம், சக்தி எல்லாம் தருகிறது. மஹாலக்ஷ்மியாகி சம்பத்துக்களைத் தருகிறது. ஸரஸ்வதியாகி ஞானம் தருகிறது.
ஆதிபராசக்தியான துர்க்கையைப் பொதுவாகப் பார்வதியோடு ஐக்கியப்படுத்திச் சொல்லலாம். அவள் ஹிமவானின் புத்திரியானதால் மலைமகள். மஹாலக்ஷ்மி பாற்கடலில் தோன்றியதால் அலைமகள். ஸரஸ்வதி சகலகலா ஞானமும் தருவதால் கலைமகள்.
பர்வதராஜ புத்திரியாக வந்த அம்பாளும், க்ஷீரசாகரத்திலிருந்து பிறந்த மஹாலக்ஷ்மியும், இரண்டு மஹரிஷிகளுக்குப் பெண்களாகவும் அவதரித்திருக்கிறார்கள்.
மஹாலக்ஷ்மியை மகளாகப் பெற்று, சீராட்டி வளர்க்க வேண்டும் என்று பிருகு மஹரிஷி தபஸ் செய்தார். அதற்கிணங்கவே லக்ஷ்மிதேவி அவருக்குப் புத்திரியாக உத்பவித்தாள். பிருகுவுக்குப் புத்திரியானதால் அவளுக்கு பார்கவி என்று பெயர் ஏற்பட்டது.
‘பார்கவி லோக ஜனனி க்ஷீரஸாகர கன்யகா’ எனறு ஸம்ஸ்கிருத அகராதியான ‘அமர கோசம்’ சொல்லும். இப்படியே காத்யாயன மகரிஷி சாக்ஷாத் பரமேசுவரியைப் பெண்ணாக அடைய வேண்டும் என்று விரும்பித் தபஸ் செய்தார். அம்பிகையும் அவருக்கு மகளாக ஆவிர்பவித்தாள். காத்யாயனருக்குப் பெண் என்பதாலேயே அவளுக்குக் காத்யாயனி என்ற பெயர் உண்டாயிற்று. துர்க்கைக்கு உரிய காயத்ரியிலே அவளைக் ‘காத்யாயனியாக தியானிக்கிறோம்’ என்று சொல்லியிருக்கிறது.
லோக மாதாக்களாக இருக்கப்பட்ட தெய்வங்களைக் குழந்தையாக வரச் சொன்னதில் நிரம்ப விசேஷம் இருக்கிறது. ‘குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே’ என்கிறோம். தெய்வமே குழந்தையாக வந்தால், ரொம்பக் கொண்டாட்டமாகும். குழந்தைக்கு நம்மைப் போல் காமமும் குரோதமும் துக்கமும் வேரூன்றி இருப்பதில்லை. இந்த க்ஷணத்தில் ரொம்பவும் ஆசைப்பட்ட ஒரு வஸ்துவை அடுத்த க்ஷணத்தில் தூக்கிப் போட்டுவிட்டுப் போகிறது. கோபமும் இப்படியே சுவடு தெரியாமல் நிமிஷத்தில் மறைந்து போகிறது. அழுகையும் இவ்வாறேதான். நாம்தான் உணர்ச்சிகளை ஆழ உள்ளுக்கு வாங்கிக்கொண்டு மனத்தைக் கெடுத்துக் கொள்கிறோம். உணர்ச்சிகள் வேரூன்றாமல் குழந்தைகள் போல் நாமும் ஆனந்தமாக இருக்க வேண்டும். இதனால்தான் உபநிஷதமும் ‘குழந்தையாய் இரு’ என்கிறது.
சாக்ஷாத் பராசக்தியைக் காத்யாயனியாகவும், மஹாலக்ஷ்மியை பார்கவியாகவும் குழந்தைகளாக்கி, அந்த பாவத்திலேயே வழிபட்டால், நமக்கும் குழந்தைத் தன்மை சாக்ஷாத்கரித்துவிடும். இந்த நாளில் வாட்டர்ஃப்ரூப் என்று சொல்வதுபோல், நாம் காம ப்ரூஃப், சோக ப்ரூஃப் எல்லாமாக, சாந்தமாக ஆவோம். குழந்தை ரூபத்தில் இருந்தாலும் ஞானப் பாலூட்டும் ஸ்ரீமாதாவாக இருக்கிற தேவி, நமக்கு இந்த அநுக்கிரகத்தைச் செய்வாள்.
குழந்தையாக வந்த காத்யாயனியைத் தமிழ் நாட்டுக் கிராம ஜனங்கள்கூட நீண்ட காலமாக வழிபட்டு வந்திருக்கிறார்கள் என்பது என் ஊகம். ‘காத்தாயி’ என்று சொல்கிற கிராம தேவதை காத்யாயனிதான் என்று நினைக்கிறேன்.
‘பட்டாரிகை’ என்று பெரிய ஸ்ரீவித்யோபாஸகர்கள் குறிப்பிடும் அம்பாளைத்தான், நம் கிராம மக்கள் ‘பிடாரி’ என்று சொல்லிப் பூஜிக்கிறார்கள். பழைய செப்பேடுகளில் ‘பட்டாரிகா மான்யம்’ என்பதைப் ‘பிடாரிமானியம்’ என்று திரித்துக் குறிப்பிடுவதிலிருந்து இதை உணரலாம்.
இவ்வாறே கிராம ஜனங்களும்கூட ஸரஸ்வதியை நீண்ட காலமாக வழிபட்டிருக்கிறார்கள். ‘பேச்சாயி, பேச்சாயி’ என்று சொல்கிற கிராம தேவதை பேச்சுக்கு ஆயியான வாக்தேவி ஸரஸ்வதியைத்தான் குறிப்பிடுகிறது.அம்பாளையும், மஹாலக்ஷ்மியையும், ஸரஸ்வதிதேவியையும் பூஜித்து எல்லாச் சக்தியும், சம்பத்தும், நல்ல புத்தியும் பெறுவோமாக!