62. தேவதாமூர்த்திகள் – அவதார புருஷர்கள் – பகுதி இருபத்து ஐந்து

தேவியின் திருவடித் தியானம்

படைப்பு, காத்தல், அழித்தல் என்ற மூன்று கிருத்தியங்களைச் செய்வதற்காக ஒரே பரமாத்மாதான் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என்று மூன்று ரூபம் கொள்கிறது. கிருத்யங்களுக்கு ஏற்றபடி அந்தந்த மூர்த்திக்கு குணம், வர்ணம், ரூபம் எல்லாம் இருக்கின்றன. இந்த மூன்று என்ற வட்டத்தைத் தாண்டும்போது இம்மூன்றுக்கும் காரணமான ஒரே பராசக்தி எஞ்சி நிற்கிறது. அந்த பராசக்தியான துரீய (நான்காம்) நிலையில் நம் மனத்தை முழுக்கினால் சம்ஸாரத் துயரிலிருந்து விடுபடுவோம்.

இப்போது இருக்கும்படியான லோக வழியில் இதைப் பற்றி யோசிக்கச் சாவகாசம் இல்லை; மந்திரத் தியானமோ, ரூபத் தியானமோ பண்ணுவதற்கான பக்குவம் இல்லை. ஏதாவது ஒரு மந்திரத்தை ஜபிப்பது, ஒரு உருவத்தைத் தியானிப்பது என்ற பழக்கம் மனசுக்கு வருவது கொஞ்சம் சிரமம்தான். ஆனாலும் முதலடி எடுத்து வைக்கத்தான் வேண்டும். நம் மனசுக்கு ஹிதமாக, ரஞ்சகமாக இருந்தால்தான் முதலடியே வைப்போம். அப்படி அத்யாத்ம மார்க்கத்தில் ஹிதமான ஒரு முதலடி இருக்கிறது. அதுவே அம்பிகையின் திருவடி. எவ்வித சிரமுமின்றி எவரும் தேவியினுடைய சரண கமலத்தைத் தியானிக்கத் தொடங்கலாம். அந்தச் சரணார விந்தத்தின் அழகையும் குளிர்ச்சியையும் நினைத்து விட்டால் அதில் தானாக மனசு நிலைத்து நிற்கப் பழகும். இப்படி எப்போதும் உபாஸித்தால் அவளுடைய கடாக்ஷத்தால் ஜனன நிவிருத்தி ஏற்படும். அல்லது முதலில் அவளது மகிமையைச் சொல்லும் துதிகளைப் படிக்கலாம். முதல்படி பாராயணம்; அதற்கப்புறம் ஜபம்; பின்பு தியானம் பண்ணுவது. அப்படி தியானம் பண்ணும் போது, ‘பராசக்தி! இந்த உடம்பிலிருந்து உயிர் போகும் தருணத்தில் நான் உன்னையே தியானம் பண்ணிக்கொண்டு உன்னிடமே மீண்டும் சேர்ந்து விடும்படியாக அநுக்கிரகம் செய்ய வேண்டும்என்று பிரார்த்தித்துக்கொள்ளவேண்டும். இப்படி ஒவ்வொரு நாளும் அவளுடைய சரணாரவிந்தத்தைப் பிரார்த்தித்து வேண்டிக்கொண்டால், உயிர் போகும் தருணத்திலும் அவனுடைய கடாக்ஷத்தினால் அவளுடைய தியானம் வரும். இந்த உடல் போனபின் இன்னோர் உடல் வராமல் அவளிடம் இரண்டறக் கலந்து சம்ஸாரத்திலிருந்து விடுபட்டுப் பேரானந்த மயமாகி விடலாம்.

தேவியும் குருவும் ஒன்றே. எனவே இருவரது திருவடியும் ஒன்றே. குரு பாதுகையும் தேவி பாதுகையும் ஒன்றே. குரு பாதுகையை சந்திர மண்டலத்தில் தியானம் செய்ய வேண்டும் என்பது சாஸ்திரம். அமிருதம் சந்திரனிலிருந்தே பொழிவதாக சாஸ்திரம்.

சூரியன் சுயமான பிரகாசத்தை உடையவனாக இருக்கலாம். நமக்கு அவன் ஒளி கொடுக்கிறான். என்றாலும், அவனால் தாபம் உண்டாகிறது. வேர்க்கிறது; தாகம் எடுக்கிறது. அம்பாளுடைய பிரகாசம் நமக்கு ஒளியும் கொடுக்கிறது. தாபத்தையும் நீக்குகிறது. எனவே அது சந்திரிகையின் ஒளி போல் இருக்கிறது. தாபசாந்தி பண்ணுவது அமிருதம்; அமிருதமாக நமக்குத் தாபத்தை நீக்கி சாந்தியைக் கொடுத்துக் கொண்டு பிரகாசிக்கிறது அம்பிகையின் கடாக்ஷமும் சரணார விந்தமும்.

உஷ்ணப் பிராந்தியத்தில் (Tropics) உள்ள நமது தேசத்தில் இருக்கிறவர்களுக்கு குளிர்ச்சியில் ஒரு பிரீதி. ‘அவன் குளுமையாக இருக்கிறான். குளுமையாகப் பேசினான், இப்போதுதான் என் வயிறு குளிர்ந்ததுஎன்று சந்தோஷ விஷயங்களுக்குச் சொல்வோம். மேல் நாட்டவர்களுக்கு இது நேர் மாறாக இருக்கிறது. அவர்களுடைய பிரதேசம் ஒரே குளிர்ச்சியானதால் அவர்களுக்கு உஷ்ணம்தான் ( Warmth) இன்பம் அளிக்கும். அவர்களுக்கு கோல்டு (Cold) என்றால் நம்முடைய எண்ணத்திற்கு நேர் விபரீதமான அர்த்தம். சரியாக வரவேற்காவிட்டால் cold reception என்பார்கள். நிர்த்தாக்ஷண்யமானவனை cold-hearted என்பார்கள்.

நமக்குச் சந்திர கிரணம் மாதிரி தாபத்தை நீக்கிக் குளுமையைக் கொடுத்து ஆனந்தத்தை அளிப்பவள் அம்பிகை. அம்பிகை சந்திர மண்டலத்தில் வாஸம் செய்வதாகப் பல இடங்களில் சொல்லியிருக்கிறது. நமக்கு இன்பம் கொடுக்கிற பெருநிதி அவள்தான். அந்த சாக்ஷாத் பரதேவதையின் சரணத்தைத் தியானம் பண்ணிப் பண்ணி சுத்தமாகி நித்திய க்ஷேமத்தை, ஆனந்தத்தை அடைவோமாக.

இயற்கை ஏமாற்றுகிறது! அம்பாள் ஏமாற்றுகிறாள்!

மனிதனுக்கு பலவிதமான இச்சைகள், பாசங்கள், ஆசைகள். தன் இச்சையைப் பூர்த்தி செய்து கொள்கிறான்; அதில் பூரித்துப் போகிறான்; ஆனால் இது சாசுவதமான பூர்த்தியா, பூரிப்பா என்றால் இல்லவே இல்லை. இன்னோர் இச்சை அப்புறமும் இன்னொன்று என்று பிரவாகமாக வந்து கொண்டே இருக்கிறது. இருந்தாலும் இந்த ஓயாத அலைச்சலுக்கு நடுவில் அவ்வப்போது இப்படி ஒரு பூரிப்பும் பெறுகிறான். இது ஒரு விதத்தில் அம்பாள் செய்கிற கிருபை! இன்னொரு விதத்தில் அவளே செய்கிற ஏமாற்று வித்தை!

தான் ஆசையும் பாசமும் வைப்பவர்கள், திருப்பித் தன்னிடம் ஆசையும் பாசமும் வைத்தால் ஒரேடியாகச் சந்தோஷப்படுகிறான். கல்யாணம் பண்ணிக்கொண்டு குழந்தை குட்டிகள் பெற்று இவ்வாறு தன் இச்சை பூர்த்தியானதாக சந்தோஷப்படுகிறான். குழந்தையை இவன் ஆசையோடு தூக்கிக் கொஞ்சும்போது அதுகளுக்என்று சிரித்தால், ‘அடடா என்னிடம் குழந்தை எத்தனை ஆசையாக இருக்கிறது?’ என்று ஒரே ஆனந்தம் அடைகிறான். அதை மேலும் அன்போடு கவனத்தோடு வளர்க்கிறான்.

மனிதன், இந்த காம இச்சை, வாத்ஸல்யம் எல்லாம் தன் சுகத்துக்காக என்று எண்ணிக் கொண்டிருக்கிறான். அதுதான் இல்லை. பல ஜீவர்கள் மறுபடி பிறவி எடுத்துத் தங்கள் கர்மத்தை அநுபவித்தாக வேண்டும். முடிவாகக் கர்மத்தைக் கழித்துக்கொண்டு மோக்ஷநிலையைப் பெற வேண்டும். அதற்காகத்தான் இவனுக்குக் காமமும் கலியாணமும் சந்ததியும். ஆனால், இவன் தன் இன்பத்துக்கென்று நினைத்து ஆனந்தப் படுகிறான். இப்படியாக மனுஷ்யனை இயற்கை ஏமாற்றுகிறது. இயற்கை என்றால் என்ன? அம்பாள் ஏமாற்றுகிறாள்.

இப்படி மநுஷ்யனை பலவிதத்தில் ஏமாற்றியாகிறது! பலவித வியஞ்சனங்களை ருசித்துச் சாப்பிட்டுவிட்டு இவன் சந்தோஷப்படுகிறானே; உணவு இவனது நாவின் சந்தோஷத்துக்காகவா ஏற்பட்டது? இல்லை. இவன் தன் கர்மாவை அநுபவிப்பதற்கு உடம்பை வளர்த்துக்கொள்ள வேண்டும். உடம்பு வளருவதற்கு ஆகாரம் வேண்டும். ஒரே ருசியில் ஆகாரம் இருந்தால் சாப்பிட அலுத்துப் போகும். அதனால்இயற்கைஅம்பாள்பலவித ருசிகளைக் காட்டி இவனைச் சாப்பிட வைத்து, இவனை, ‘ருசியாகச் சாப்பிட்டோம்என்று சந்தோஷப்படவும் செய்து, இவன் கர்மாவை அநுபவிக்க வசதியாக உடம்பை வளர்க்கிறாள்.

தன் குழந்தையிடம் உள்ள அபிமானம் பக்கத்து வீட்டுக் குழந்தையிடம் இவனுக்கு இல்லை. ‘எனது’; ‘எனதுஎன்று இந்தக் குழந்தையிடமே அலாதி வாஞ்சை காட்டிப் பூரித்துப் போகிறான். எல்லாக் குழந்தைகளிடம் இவனுக்கு ஒரே மாதிரியான அபிமானம் இருந்தால், இந்தக் குழந்தையைப் பார்த்துப் பார்த்து குளிப்பாட்டி, உணவூட்டி தூங்க வைத்து, அதற்காகவே உடல், பொருள், ஆவியைச் செலவு செய்து வளர்ப்பானா? அந்த குழந்தை வளர வேண்டும் என்பதற்காகவே அதனிடத்தில் இவனுக்கு விசேஷ அபிமானம் உண்டாகச் செய்திருக்கிறாள் அம்பாள்.

ஒரு சரீரம் பிறந்து வளருவதற்காக இவனிடம் கர்மத்தை வைத்து, பிறகு வாத்ஸல்யத்தைத் தந்திருக்கிறாள் அம்பாள். இவனுடைய சரீரம் வளருவதற்காகவே இவனுக்கு ருசி, பசி முதலியனவற்றை அம்பாள் வைத்திருக்கிறாள்என்று சொன்னேன். ‘சரி, இப்படி இவன் வாழ்வதாலோ, இவனால் இன்னொரு ஜீவன் பிறந்து வளர்வதாலோ என்ன பிரயோஜனம்? பழைய கர்மத்தை அநுபவிப்பது தவிர இதில் என்ன பயன்? இவனும் ஆத்ம க்ஷேமம் அடையக்காணோம்.பொதுவாக நாம் பார்க்கிற எல்லா ஜன்மாவும் வீணாகத்தானே போகின்றன? ஒவ்வொரு ஜன்மாவும் காம, குரோத, லோப, மோக, மத, மாத்சரியங்களை அதிகப்படுத்தி பாபத்தைப் பெருக்கிக் கொள்வதாகத்தானே ஆகிறது; கர்மத்தைக் கழித்துக்கொண்டு மோக்ஷத்துக்கும் போகிறவர்களாகக் கோடியில் ஒருத்தர் கூடத் தோன்றக் காணோமே!’ என்று சந்தேகம் வரலாம்.

இப்படிச் சந்தேகப்பட வேண்டாம். ஒரு மாமரத்தில் நிறையப் பழங்கள் உண்டாகின்றன. பழம் உண்டாவதன் பயன் அதன் கொட்டையிலிருந்து மீண்டும் ஒரு மரம் தோன்றுவதற்குத்தான். ஆனால் ஒவ்வொரு மாமரத்திலும் உண்டாகிற அத்தனை பழங்களில் உள்ள வித்துக்களும் மரமானால் உலகிலே வேறெதற்குமே இடம் இராதே. ஒரு மரத்தில் உள்ள நூற்றுக்கணக்கான பழங்களில் ஒரே ஒரு வித்து மரமானால் நாம் திருப்திப்படவில்லையா! பாக்கியெல்லாம் வியர்த்தமாயிற்றே என்றா வருத்தப்படுகிறோம்?

அப்படித்தான் லக்ஷக்கணக்கில், கோடிக்கணக்கில் நாம் இத்தனை பேரும், ஆத்ம க்ஷேமம் பெறாமல் வீணாகப் போனாலும் பரவாயில்லை. நம்மில் யாராவது ஒரு ஆத்மா பூரணத்துவம் பெற்றுவிட்டால் போதும். சிருஷ்டியின் பயன் அதுவே! அந்த ஒரு பூரண ஆத்மா நம் அனைவருக்கும் சக்தி தரும். அப்படிக் கோடானு கோடி ஜீவர்களில் ஒன்று தோன்றவே, இத்தனை காமமும், சஞ்சலமும் இன்ப துன்பமும் வைத்திருக்கிறது. நாம் இத்தனை பேரும் வாழ்வதன் பயனும் அந்த ஒருத்தன் தோன்றுவதுதான்.

உறியடி உத்ஸவத்தில் வழுக்கு மரத்தில் பலர் ஏறி ஏறிச் சறுக்கி விழுவார்கள். கடைசியில் ஒரே ஒருவன் ஏறி விடுகிறான்! அவன் ஒருவன் ஏறுவதற்காகத்தான், அத்தனை பேரையும் அத்தனை பிரயாசைப்படுத்தி விளையாட்டு நடக்கிறது! உலக விளையாட்டும் அப்படியே! நம்மில் பலர் சறுக்கி விழுந்தாலும் ஒருவன் பூரணத்தைப் பிடித்து விட்டால் போதும். எத்தனை முறை சறுக்கினாலும் உறியடியில் திரும்ப திரும்ப முயற்சி செய்தவனைப்போல், நாமும் பூரணத்துவத்தை அடைய முயன்று கொண்டேயிருப்போம். அம்பாள் நம்மில் யாருக்குக் கை கொடுத்து ஏற்ற வேண்டுமா, அவனை ஏற்றி வைப்பாள். அவன் ஒருத்தன் அதற்குப் பிற்பாடு இந்த ஏமாற்று வித்தையிலிருந்து தப்புவதே நம் இத்தனை பேருக்கும் போதும்.