63. தேவதாமூர்த்திகள் – அவதார புருஷர்கள் – பகுதி இருபத்து ஆறு

காமாக்ஷி

ஒரு காரியமும் இல்லாமல், தன்னைத்தானே அநுபவித்துக் கொண்டிருக்கிற பிரம்மத்தையே சிவன், சிவம் என்று சொல்கிறோம். காரியமில்லாமல், ரூபமில்லாமல், வருணமில்லாமல், குணமில்லாமல் இருக்கிற அந்த சாந்த மயமான பிரம்மத்திலிருந்தான் இத்தனை காரியங்கள், ரூபங்கள், வர்ணங்கள், குணங்கள் எல்லாம் உண்டாகியிருக்கின்றன. மாயா சக்தியினால் ஒரே பிரம்மம் இத்தனை உருவங்களும் குணங்களும் உள்ள பிரபஞ்சங்களாகவும், ஜீவராசிகளாகவும் தோன்றியிருக்கிறது. ஒன்றான பிரம்மத்தைப் பலவான பிரபஞ்சமாகக் காட்டுகிற அந்த மாயாசக்தியைதான் அம்பாள், அம்பாள் என்று சொல்லுகிறோம். இந்தச் சக்தியினால்தான், நாம் எல்லாம் தோன்றியிருக்கிறோம். உண்மையில் நாமும் பிரம்மத்தைத் தவிர வேறு இல்லை. ஆனால், வேறாக நினைக்கிறோம். இதற்குக் காரணம், பிரம்ம சக்தியான அம்பாளின் மாயைதான். இப்படி நம்மை மாயையில் போட்டு எடுப்பது அவளுடைய லீலை.

அவள் மாயையில் நம்மைக் கட்டிப்போடுகிறவள் மட்டும் அல்ல. மனமுருகி அவளை எந்நாளும் பிரார்த்தித்துக் கொண்டே இருந்தால், அவளே இந்த மாயை முழுவதையும் நீக்கி நமக்கு பிரம்ம ஞானத்தை அநுக்கிரகம் செய்வாள்.

ஞானம் பெறுவதற்கு சாக்ஷாத் அம்பாளைத் தவிர வேறுகதி இல்லை. அவள்தான் மாயையால் ஒரே பிரம்மத்தை மறைத்துப் பல வேறான பிரபஞ்சமாகக் காட்டுகிறாள். இந்தப் பிரபஞ்ச ஆட்டத்திலிருந்து விடுதலை பெற்று, ஸம்ஸாரத்திலிருந்துஜனன மரணச் சூழலிலிருந்துவிமோசனம் அடைந்து பிரம்மமாகவே நாம் ஆக வேண்டும் என்றால், எவள் இந்த மாயையைச் செய்தாளோ, அவளுடைய அநுக்கிரகம் ஒன்றினால்தான் முடியும். மாயா சக்தியாக இருக்கிற அம்பாளேதான் ஞானாம்பிகையாக வந்து நமக்கு மோக்ஷத்தையே அநுக்கிரகம் செய்கிறவளும் ஆவாள்.

மாயாஎன்றால்எது இல்லையோ அதுஎன்று அர்த்தம். இல்லாத வஸ்து எப்படி இத்தனை ஆட்டம் ஆட்டி வைக்கிறது. அது எப்போதுமே இல்லாதது அல்ல; எப்போதுமே இருக்கிறதும் அல்ல. ஞானம் வருகிற வரையில் மாயை இருக்கிறது. அதுவரையில் நானாவிதமான வஸ்துக்களைப் பார்த்து, எல்லாம் தனித்தனியாக உண்மையாக இருப்பதாக நினைக்கிறோம். அவற்றிடம் ஆசைதுவேஷம் முதலியவற்றை உண்டாக்கிக்கொண்டு பல விதங்களில் கர்மம் செய்கிறோம். இந்தக் கர்மத்தை அநுபவிக்க மறுபடியும் மறுபடியும் செத்து செத்துப் பிறக்கிறோம். அம்பாளை உபாஸித்து ஞானம் வந்துவிட்டாலும் நானாவிதமான இத்தனையும் ஒரே பேரறிவான அவளுடைய வேறு வேறு தோற்றங்கள்தான் என்று அனுபவ பூர்வமாகத் தெரியும். நாமும் அப்படி ஒன்றே; தோற்றங்கள் (appearances) இத்தனை இருந்தாலும், இவ்வளவும் உள்ளே ஒன்றுதான் என்று தெரியும். உள்ளே ஒன்றாக இருப்பதைத் தெரிந்து கொண்டபின், வெளியே மாற்றிக் கொண்டும், அழிந்துக் கொண்டும் இருக்கும் இந்தத் தோற்றங்களில் ஆசை, துவேஷம் எதுவும் ஏற்படாது; இதற்கெல்லாம் ஆதாரமாக எப்போதும் மாறாமலே இருக்கிற பேரறிவோடு அறிவாக நம் மனத்தைக் கரைத்து விடுவோம். அப்போது பிரபஞ்சமே நம் பார்வைக்கு இல்லாமல் போகிறது. மாயையும் அப்போது இல்லாமலே போகும். அந்த ஞான தசையில் எது இல்லாமல் போகிறதோ அதுஅதாவது மாயைதான், அதுவரை நம்மை ஆட்டி வைத்தது.

மாயைக்குக் காரணமாக பிரம்ம சக்தியான அம்பாள்தான் ஞானமும் தருகிறாள். அவளுடைய கருணையே இதற்குக் காரணம். இத்தனை மாயையைச் செய்தாலும், அதிலிருந்து விடுவிக்கிற கருணையும், அவளுக்கே பூரணமாக இருக்கிறது. மாயா லோகத்தில் நாம் உண்டாக்கிக் கொள்ளும் கஷ்டங்களுக்கும், துக்கங்களுக்கும் காரணம் நம்முடைய இந்திரியங்களும், மனசும்தான். இந்திரிய சுகங்களின் வழியிலேயே மனத்தை செலுத்தி நம்முடைய ஸ்வபாவமான ஆத்ம சுகத்தை மறந்திருக்கிறோம். ஐம்புலன்களும் மனசும் நம்மை ஆட்டிப் படைக்கின்றன. இவற்றைச் செய்தவள் மாயை. அவளே இவற்றைச் சுத்தப்படுத்தி, இந்திரிய விவகாரங்களிலிருந்தும், மனஸின் ஓயாத சஞ்சலங்களிலிருந்தும் ஜீவனை விடுவிப்பதற்காக சாக்ஷாத் காமாக்ஷியாகவே வருகிறாள்.

காமாக்ஷியின் நாலு கைகளில் ஒன்றில் ஒரு வில்லும், இன்னொன்றில் ஐந்து அம்புகளும் இருக்கும். அந்த வில் கரும்பினால் ஆனது. அம்புகள் புஷ்பங்களால் ஆனவை. சாதாரணமாக கெட்டியான இரும்பினால் வில் அமைந்திருக்கும்; இங்கோ மதுரமான கரும்பு அம்பாளுக்கு வில்லாக இருக்கிறது. கூரான அம்புகளுக்குப் பதில் மிகவும் மிருதுவான மலர்களைப் பாணங்களாக வைத்திருக்கிறாள். அந்தக் கரும்பு வில் மனஸ் என்ற தத்துவத்தைக் குறிப்பதாகும். மதுரமான மனம் படைத்த அம்பாள் நம் மனங்களையெல்லாம் இந்த வில்லைக் காட்டி வஸப்படுத்திக்கொண்டு விடுகிறாள். அவளுடைய ஐந்து புஷ்ப பாணங்களும் நம் ஐம்புலன்களை ஆகர்ஷித்துச் செயலற்றுப் போகும்படி செய்வதற்காக ஏற்பட்டவை. ‘மனோ ரூபேக்ஷூ கோதண்டாபஞ்ச தன்மாத்ர ஸாயகாஎன்று, இதையேலலிதா ஸஹஸ்ர நாமம்கூறுகிறது. நம்முடைய மனோவிருத்தியும், இந்திரிய விவகாரங்களும் அடங்குவதற்கே பராசக்தியானவள் காமாக்ஷியாகி கரும்பு வில்லும் மலர்ப் பாணமும் தாங்கிவந்திருக்கிறாள்.

மீதி இரண்டு கைகளில் பாசமும் அங்குசமும் வைத்திருக்கிறாள். பாசமானது நம் பாசங்களை, ஆசையை நீக்கி அவளோடு நம்மைக் கட்டிப்போடுகிற கயிறு. அங்குசம், நாம் துவேஷத்தில் கோபிக்கிறபோது, நம்மைக் குத்தி அடக்குவதற்காக, ஃபிஸிக்ஸில் பிரபஞ்ச இயக்கங்களின் அடிப்படைத் தத்துவங்களாகச் சொல்கிற கவர்ச்சி (attraction) , விலக்கல் (repulsion) என்பனதான், மநுஷ்ய வாழ்வில் முறையே ஆசையும் துவேஷமும் ஆகின்றன. இவற்றை அடக்கி நம்மை ஸம்ஸாரத்திலிருந்து மீட்கவே, அம்பாள் காமாக்ஷியாகி பாசாங்குசங்களைத் தரித்திருக்கிறாள். ‘ராக ஸ்வரூப பாசாட்யா’, ‘க்ரோதாகாராங்குசோஜ்வலாஎன்பதாக லலிதா ஸகஸ்ரநாமத்தில், பாசத்தை ஆசையாகவும், (ராகம்) அங்குசத்தை துவேஷமாகவும் (க்ரோதம்) சொன்னபோது இவற்றை அவை அடக்கி அழிக்கின்றன என்று அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டும். இப்படியாக, நாலு கைகளில் கரும்பு வில், புஷ்ப பாணம், பாசம், அங்குசம், இவற்றை தரித்துக்கொண்டு, நிறமே இல்லாத பிரம்மத்திலிருந்து செக்கச் செவேல் என்ற பரம கருணையின் நிறத்தோடு, உதய சூரியன் மாதிரி, மாதுளம்பூ மாதிரி, குங்குமப்பூ மாதிரி, செம்பருத்தி மாதிரி, காமேசுவரியான காமாக்ஷி அநுக்கிரக நிமித்தம் தோன்றியிருக்கிறாள்.

காமாக்ஷியின் சிவப்பு

கரும்பு வில்லும் புஷ்ப பாணமும் தரித்து, ஸமஸ்த லோகத்துக்கும் அநுக்கிரகம் செய்கிற திவ்ய மாதாதான் காமாக்ஷி. சகல ஜீவராசிகளையும் இந்திரிய சேஷ்டையிலிருந்து விடுவிப்பதற்காக மலர் அம்பும், மனஸின் ஆட்டங்களிலிருந்து விடுவிப்பதற்காக கரும்பாலான தனுஸையும் தாங்கியிருக்கிறாள். இதில் வேடிக்கை என்னவென்றால், மன்மதனும் இதேபோல் கரும்பு வில்லையும், புஷ்பத்தாலான ஐந்து பாணங்களையும்தான் வைத்திருக்கிறான். அவனுடைய காரியமோ அம்பாளுடைய காரியத்துக்கு நேர் விரோதமானது. அவன் இந்த வில்லையும் அம்பையும் வைத்துக்கொண்டுதான் ஸமஸ்தப் பிராணிகளுக்கும் இந்திரிய விகாரத்தைஅடங்காத காம வேகத்தைஉண்டாக்கி வருகிறான்.

அதுவும் பராசக்தியான அம்பாளுடைய லீலைதான். அவள்தான் மன்மதனுக்கு இப்படிப்பட்ட சக்தியை அநுக்கிரஹம் செய்திருக்கிறாள். பிஞ்சு கசப்பாக இருந்து, பிறகு துவர்ப்பாகி, அப்புறம் புளிப்பாகி, கடைசியில் பரம மதுரமாக பழுக்கிற மாதிரி, ஜீவர்களும் படிப்படியாக பலவித அநுபவங்களில் முன்னேறி முன்னேறி கடைசியில் பழமாகப் பக்குவம் பெற வேண்டும் என்றே அம்பாள் பிரகிருதி நியதிகளைஇயற்கை வேகங்களை உண்டாக்கியிருக்கிறாள். ஒரேயடியாக இவை நம்மை அடித்துச் செல்வதற்கு, நாம் இடம் தந்துவிடக்கூடாது. ஒரேயடியாக எடுத்த எடுப்பில் இந்த வேகங்களிலிருந்து தப்ப முடியாவிட்டால், அதற்காக வருத்தப்பட்டு மனமுடைந்து விடவும் கூடாது. அம்பாளைத் தஞ்சம் புகுந்தால், படிப்படியாக அவள் வழிகாட்டி விடுதலை தருவாள் என்ற நம்பிக்கையோடு, வேகங்களைக் குறைத்துக் கொள்ள அவளைப் பிராத்திக்க வேண்டும். சம்ஸாரம் என்பதில் ஈடுபட்டிருக்கும்போதே இதில் ஏதாவது ஸாரம் இருக்கிறதா என்றும் அடிக்கடி சிந்தித்து வரவேண்டும். இப்படிச் சிந்திப்பதே ஒரு ஸாரம்தான். அதனால்தான் சம்ஸாரத்திலிருந்து விடுபடுகிற விரக்தி உண்டாகிறது. அந்தந்தக் காலத்தில் அந்தந்தப் பிரகிருதி வேகங்கள்இயற்கை உந்தல்கள்ஏற்பட்டாலும், அதனால், மனம் கலங்காமல், பராசக்தியைப் பிரார்த்திக் கொண்டேயிருந்தால் பிஞ்சுகாயாகி, காய் கனியாகி, கனி தானே முற்றி மரத்திலிருந்து இற்று விழுந்துவிடுவதுபோல், கடைசியில் சம்ஸார விருக்ஷத்திலிருந்து விடுபட்டு அம்பாளின் சரணார விந்தத்தில் விழுந்து அதோடேயே சேர்ந்து விடுவோம்.

நம்மைப்போல் எத்தனையோ பிராணிகள் ஏகப்பட்ட பூர்வ கர்மாவைச் செய்து குவித்திருக்கின்றன. இந்த கர்மாவைக் கழித்துக்கொள்ள அவையெல்லாம் ஜன்மா எடுத்துத்தானாக வேண்டும். எடுக்கிற ஜன்மாவில் கர்ம மூட்டையைத் ஜாஸ்தியாக்கிக் கொள்ளலாம், அல்லது குறைத்துக் கொள்ளலாம். அது எப்படியானாலும் கர்மாவைக் கழித்துக்கொள்ள வேண்டுமானால் ஜன்மா எடுத்து அதைத் தர்ம வழியில் பிரயோஜனப்படுத்திக் கொள்வது தவிர, வேறு வழியில்லை. கடைசியில் கர்மம் முழுவதும் அழிந்தால் பிறப்பே இல்லாத நிலை அடைவோம். ஜீவர்களுக்கு ஜனன நிவிருத்தி உண்டாவதற்கே ஒரு பயிற்சிக் கூடமாக அவர்கள் ஜன்மம் எடுத்தாக வேண்டியிருக்கிறது. இவ்வாறு ஜீவர்களுக்கு ஜன்மம் ஏற்படுவதற்காகத்தான் அம்பாள் காமத்தை வைத்திருக்கிறாள். அதற்கு அதிகாரியாக மன்மதனை நியமித்திருக்கிறாள்.

ஆனால், எதுவும் தன் எல்லையறிந்து அடங்கி நிற்க வேண்டும். மன்மதன் பக்தர்களிடமும் ஞானிகளிடமும் தன் கைவரிசையைக் காட்ட அம்பாள் விடமாட்டாள். இவள் தான் மகா ஞானியான பரமேசுவரனை மட்டும் தன்னிடம் பிரேமை கொள்ளுமாறும் செய்தவள். மன்மதன் அவரிடம் தன் கை வரிசையைக் காட்டப் பார்த்தான். அவர் நெற்றிக்கண்ணைத் திறந்து அவனை பஸ்மீகரமாக்கி விட்டார். அப்புறம் ஆடாமல், அசங்காமல் பிரம்மமாக அமர்ந்துவிட்டார். அவர் அப்படியிருந்தால் அம்பாளுடைய பிரபஞ்ச லீலை எப்படி நடக்கும்? எனவே, அவள் மன்மதனுடைய கரும்புவில்லையும், புஷ்ப தனுஸையும் தானே தன் கைகளில் எடுத்துக் கொண்டு பரமேசுவரன் முன் வந்தாள். மன்மதனைப் போல், ‘அவரை ஜயிப்பேன்என்று அகங்காரத்தோடு வரவில்லை. அன்போடு அடக்கத்தோடு வந்தாள். உடனே, பரம ஞானியான பரமேசுவரனும் காமேசுவரனாக மாறிவிட்டான். இவள் அன்பு பொங்குகிற கண்களால் காமாக்ஷியாகி, காமேசுவரியாகி, அவரைப் பார்க்க அவரும் அன்பு மயமாகிக் காமேசுவரனாகிவிட்டார்.

பிரம்மமாகச் செயலற்று இருந்த வஸ்துவுக்கு லோகாநுக்கிரகம் என்ற பரம கருணை உதிப்பதைத்தான் காமாக்ஷி என்று சொல்கிறோம். சுத்த ஸ்படிக ஸங்காசமாக நிறமில்லாதிருந்த பிரம்மம், அப்போது சிவப்பு நிறத்தை அடைகிறது.

அன்பு, கருணை இவற்றைச் சிறப்பாகவே சொல்வது வழக்கம். ராகம் (அன்பு) , அநுராகம் என்பதிலிருந்தே ரக்தம் (ரத்தம்) என்ற பதம் வந்தது. தமிழிலும் மனச்செம்மை, செவ்விய உள்ளம் என்றெல்லாம் சொல்கிறோம். இதுவே காமாக்ஷியின் சிவப்பு:கருணையின் வர்ணம்.