64. தேவதாமூர்த்திகள் – அவதார புருஷர்கள் – பகுதி இருபத்து ஏழு

கறுப்பும் சிவப்புமான காமாக்ஷி

அம்பாளைப் பற்றிய பல ஸ்தோத்திரங்கள் இருக்கின்றன. இவற்றில், ஆதி சங்கர பகவத் பாதர்கள் செய்த சௌந்தரிய லஹரியும் மூக கவி செய்தபஞ்ச சதீயும்ஈடு இணை இல்லாமல் இருக்கின்றன. தேர்ந்த சைத்திரிகன் ஒருவன் அம்பாளின் ஸ்வரூபத்தை எழுதிக்காட்டுகிற மாதிரி, இவை அம்பிகையின் திவ்விய வடிவத்தை அப்படியே நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்திவிடும்; அவளுடைய மகிமையினால் நம் மனசு மூழ்கிக் கிடக்கும்படி செய்யும்.

கண்ணுக்கும் மனசுக்கும் எட்டாத பராசக்தியைக் கண்ணால் காணவும், மனஸால் அநுபவிக்கவும் செய்கிற வாக்சக்திசௌந்தரிய லஹரிக்கும், ‘மூக பஞ்ச சதீக்கும் உள்ளது. கம்பீரம் அத்தனையும்சௌந்தர்ய லஹரியில் அடங்கியிருக்கிறது; மார்த்தவம் (மிருதுத் தன்மை) முழுவதும் மூக பஞ்சசதீயில் உள்ளது.

மூகன்என்றால் ஊமை என்று அர்த்தம். ஊமையாக இருந்த ஒரு பரம பக்தர், காஞ்சீபுரத்தில் குடிகொண்டுள்ள ஜகன்மாதா காமாக்ஷியின் கிருபா கடாக்ஷத்தையும், அவளுடைய தாம்பூல உச்சிஷ்டத்தையும் பெற்று, உடனே அமிருத சாகரம் மாதிரி ஐந்நூறு சுலோகங்களைப் பொழிந்து தள்ளி விட்டார். அதைத்தான் மூக பஞ்ச சதீ என்கிறோம். ‘பஞ்சஎன்றால் ஐந்து; ‘சதஎன்பது நூறு.

அதிலே காமாக்ஷியின் நிறத்தைச் சொல்லுகிறபோது செக்கச் சிவந்தவள் என்றும் பல இடங்களில் கூறியிருக்கிறார். கருநிறம் படைத்தவள் என்றும் சில ஸ்லோகங்களில் சொல்கிறார். ‘காச்மீர ஸ்தபக கோமாளாங்க லதா’ (குங்குமப் பூங்கொத்து போன்ற கோமளகக் கொடி) ‘பந்து ஜீவகாந்தி முஷா’ (செம்பருத்தியின் ஒளி படைத்தவள்) என்று சொல்கிறார். ‘தாபிஞ்ச ஸதபகத்விஷா’ (கருநீலக் காயாம்பூப்போல் ஒளிருகிறவள்) என்று கூறிகிறார்.

ஏன் இப்படி இரண்டு நிறங்களாகச் சொல்கிறார்? நமக்கு இப்படி ஒருத்தியையே இரண்டு நிறத்தில் சொல்வது புரியவில்லை. சரி, சங்கர பகவத் பாதர்கள்ஸெளந்தர்ய லஹரியில் இதைப் பற்றி என்ன சொல்கிறார்?

ஜயதி கருணா காசித் அருணாஎன்கிறது ஸெளந்தர்ய லஹரி. நல்லதெற்கெல்லாம் உற்பத்தி ஸ்தானமாக சம்பு என்று ஒன்று இருக்கிறது. அது பரப்பிரம்ம வஸ்து. பரப்பிரம்மமாகச் செயலின்றி இருந்தால் போதாது என்று அது லோகத்துக்கு நல்லது செய்வதற்காக ஒரு ஸ்வரூபம் எடுக்கிறது. அதற்குத்தான் அம்பாள் என்று பெயர். நிறமில்லாத சம்பு உலகைக் காக்கும் கருணையினால் அருண வர்ணம் கொண்டு வெற்றியோடு பிரகாசிக்கிறது – ‘ஜகத் த்ராதும் சம்போ:ஜயதி கருணா காசித் அருணாஎன்கிறார் ஸ்ரீ ஆசாரியாள். சூரியோதயத்துக்கு முன்னால் கிழக்கில் பரவுகிற பிரகாசச் சிவப்புத்தான் அருணநிறம். ‘அருண நிறம்தான் கருணை நிறம்; அதுவே அம்பிகையின் நிறம்என்கிறார் ஆசாரியாள்.

கறுப்போ அழிவின் நிறம். தமோ குணத்துக்குக் கறுப்பை அடையாளமாகச் சொல்வார்கள். தூக்கம், மரணம், சம்ஹாரம் எல்லாம் கறுப்பு.

காருண்ய மூர்த்தியாக காமாக்ஷியைச் சிவப்பானவளாக மூகர் சொல்வதுதான் நியாயமாக்கப்படுகிறது. ராஜ ராஜேசுவரி, லலிதா மஹா திரிபுரசுந்தரி, ஸ்ரீவித்யா என்றெல்லாம் சொல்லப்படுகிற அம்பாளை மந்திர சாஸ்திரங்களும் செக்கச் செவந்த ஜோதிப்பிரவாகமாகவே சொல்கின்றன. அந்த ஸ்ரீ வித்யா அதிஷ்டான தேவதையின் ஸ்வரூப லக்ஷணங்களையே பூரணமாகக் கொண்டவள் காமாக்ஷி. எனவே, பரம்பொருளின் கருணை வடிவான அவளைச் சிவப்பாகச் சொல்வதுதான் பொருத்தம்.

ஸயன்ஸ்படிகூட இதுவே பொருத்தமாக இருக்கிறது. VIBGYOR – ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு சிவப்பு என்று ஏழு வர்ணங்களை ஸ்பெக்ட்ராஸ்கோப்பில் பிரித்திருக்கிறார்கள். நிறமில்லாத வெறும் சூரிய ஒளிதான் இப்படி ஏழு நிறங்களாகச் சிதறுகிறது. இதில் வெள்ளை, கறுப்புஇரண்டும் இல்லை. ஒரு கோடியில் ஊதாவைக் கடந்தால் கறுப்பு. மறுகோடியில் சிவப்பைத் தாண்டினால் வெள்ளை. அதாவது வெளுப்புக்கு ரொம்ப ரொம்ப கிட்டே இருப்பது சிவப்புதான். நம் கண்ணுக்குப் பரம ஹிதமானது வெள்ளைதான். கொஞ்சம்கூட உறுத்தாது. ஆனால் அது நிறமே இல்லை. நிறம் என்று ஏற்பட்டபின் ரொம்பவும் ஹிதமாக, மிகக் குறைவாக உறுத்துவது (least disturbing colour) சிவப்புதான். இதனால்தான் போட்டோ எடுத்த ஃபிலிமைக் கழுவும்போது, அதில் வெறெந்த நிறத்தின் கிரணம் பட்டாலும் படம் அழிந்து விடும் என்று சிவப்பு விளக்கையே போட்டுக்கொள்கிறார்கள். நாம் சிவப்பு கண்ணைக் குத்துவதாக நினைத்தாலும் அதிலிருந்தே infra red என்கிற மிருதுவான நிறத்துக்குப் போகிறார்கள். இந்த infra வுக்கு மாறாக மறு கோடியில் உக்ரமான ultra violet (ஆழ்ந்த ஊதா) இருக்கிறது. அதற்கப்புறம் கறுப்பு. அம்பாளைக் கறுப்பு என்றும் கருநீலம் என்றும் மூகர் சொல்கிறார்; சிவப்பு என்றும் சொல்கிறார். வெள்ளையான சுத்தப் பிரம்மத்துக்கு மிகமிக நெருங்கியுள்ள சக்தி என்பதாலும், ‘கருணாமூர்த்திஎன்பதாலும் சிவப்பு என்பதே பொருத்தமாயிருக்கிறது.

அம்பாள் கிருபையால் அவளைப் பிரத்தியக்ஷமாக செய்த மூகர் ஏன் கறுப்பு என்றும் சொல்கிறார்?

காமாக்ஷியின் கருமை

எந்த நிறமும் இல்லாத சூரிய ஒளியிலிருந்து ஒளிச்சிதறல் (Refraction) மூலம் ஒரு நிறத்தைப் பிரித்தால், உடனே மற்ற ஆறு நிறங்களும் பிரிந்து, ‘நானும் போகிறேன், நானும் போகிறேன்என்று வெளிப்படத் தொடங்குகின்றன. இது ஒரு வேடிக்கை: எல்லா வர்ணங்களும் சேர்ந்தால் வர்ணமே இல்லாமற் போகிறது; அந்த வர்ணமில்லாத ஒளியிலிருந்து ஒன்று குறைந்து பிரிந்தாலும், மற்ற வர்ணங்களும், ‘நானும் போகிறேன் நானும் போகிறேன்என்று பிரிந்து வெளிப்படுகின்றன!

பிரம்மம் என்பது நிறமே இல்லாத சுத்த சூரிய ஒளி மாதிரி. அதில் காரியமே இல்லை. ஆனாலும் சகல காரியங்களுக்கும் ஆதாரமான சகல சக்திகளும் அதில்தான் உள்ளன. எல்லா நிறங்களும் சுத்த ஒளிக்குள் இருக்கிற மாதிரி! காரியம் இல்லாத பிரம்மம் தன்னைத்தானே உணர்ந்து கொண்டதுதான் அதன் முதல் காரியம். இதுவே சாந்தமான பிரம்மத்தில் ஒரு சலனம்தான் ஒளிச்சிதறல் மாதிரி. இந்த ஒளிச் சிதறலில் முதலில் சிவப்பு பிரிகிறது. உதய காலத்தில் சுத்த சூரிய ஒளி முதலில் சிவப்பாகத்தானே வருகிறது? அருணோதயம் என்கிறோமே, ‘அருணஎன்றாலே சிவப்புதான். இப்படிச் சுத்தப் பிரம்மம் சிவப்பாக்கி காரியத்துக்கு வருகிறபோது பிரம்மம் அம்பாளாகிறது. காரியமற்ற பிரம்மம் காரியமயமான சக்தியாகிறது. காமேசுவரி தோன்றுகிறாள். பிரம்மத்துக்குத் தன்னை அறிகிற ஆசை தோன்றியதல்லவா? இந்த ஆசையின்காமத்தின்வடிவமே காமேசுவரி. அவளே உலகத்தின் சிருஷ்டி, பரிபாலனம், சம்ஹாரம் எல்லாவற்றுக்கும் மூலம். உண்மையில் இந்த மூன்று தொழில்களும் மாயையில் உண்டானவைதான். மாயாசக்தியால் பிரம்மத்தை மறைத்து, அதனிடத்தில் உலகம் என்ற கற்பனையைக் காட்டுகிறாள். இம்மாதிரி மாயாசக்தியினால் பிரம்மத்தை மறைத்துப் பிரபஞ்சத்தை காட்டுவதை நாலாவது தொழிலாக, திரோதானம் அல்லது திரோபவம் என்று சொல்லுவார்கள். படைத்தல்காத்தல்அழித்தல்மறைத்தல் இவற்றுக்கு மேலாக அநுக்கிரகம் (அருள்) என்கிற ஐந்தாவது தொழிலும் இருக்கிறது. பக்தர்களை மாயையிலிருந்து விடுவித்துத் தன்மயமாக்கிக் கொள்ளுகிறாளே அதுதான் அநுக்கிரகம். இப்படி ஐந்தொழிலைச் செய்வதால் அம்பாள்பஞ்ச க்ருத்ய பராயணாஎனப்படுகிறாள்.

சிருஷ்டி செய்கிற பிரம்மா, பரிபாலிக்கிற விஷ்ணு, சம்ஹார ருத்ரன், மாயையின் அதிபதியான ஈசுவரன் இவர்களை நாலு கால்களாக் கொண்ட மஞ்சத்தில், சாக்ஷாத் பரப்பிரம்ம சக்தியான காமேசுவரி வீற்றிருக்கிறாள்; பரப் பிரம்மமான காமேசுவரியின் இடப்புறத்தில் அநுக்கிரஹ மூர்த்தியாக அமர்ந்திருக்கிறாள். காமேசுவரன் பிரம்மம், காமேசுவரி பிரம்மசக்தி; இவர்கள் ஸதிபதிகள்.

காமேசுவரகாமேசுவரி என்கிற சிவப்பு பிரிந்தவுடன் மற்ற வர்ணங்களும் வெளியே ஒடிவர வேண்டுமல்லவா? இந்த நியாயப்படி செம்மஞ்சளான பிரம்மாவும் லக்ஷ்மியும் வெளிப்பட்டார்கள். நீலமான மகாவிஷ்ணுவும் பார்வதியும் ஆவிர்பவித்தார்கள். வெள்ளையான ருத்திரனும் ஸரஸ்வதியும் தோன்றிவிட்டார்கள். பிரம்ம சக்தியிலிருந்து இரட்டை இரட்டையாகத் தோன்றிய இந்த மூன்று ஜோடியில் ஒவ்வொரு ஜோடியும் சகோதர சகோதரிகள். அதாவது பிரம்மாவும் லக்ஷ்மியும் உடன் பிறப்புகள்; விஷ்ணுவும் பார்வதியும் உடன் பிறப்புகள்; ருத்திரனும் ஸரஸ்வதியும் உடன் பிறப்புகள். பிரம்மாவுக்கும் லக்ஷ்மிக்கும் தங்க நிறம்; தாமரை ஆசனம். பிரம்மம் ஜீவராசிகளைப் பெருக்கினார்; லக்ஷ்மி, அவர்களின் அநுபோகத்துக்கான ஐசுவரியத்தைப் பெருக்கினாள். நீலமேக சியாமள வர்ணம் கொண்ட விஷ்ணுவும் பார்வதியும் இப்படியே உடன் பிறந்தவர்கள். பரிபாலனமும் மாயா விலாஸமும் முக்கியமாக இருக்கிற நிலை அது. சிவன் கோவில் வடக்குப் பிரகாரத்தில் உள்ள துர்க்கையைப் பாருங்கள். அவள் பதியோடு இல்லாமல் தனித்து இருக்கிற அம்பாள். அவள் விஷ்ணு மாதிரியே சங்கு சக்கரம் வைத்துக் கொண்டிருப்பாள். நாராயணி, சியாம கிருஷ்ண சகோதரி என்றெல்லாம் இதனால்தான் பார்வதியைச் சொல்வது. சிவனும் ஸரஸ்வதியும் சகோதர சகோதரிகள். சிவன் கோயில் தெற்குப் பிரகாரத்தில் துர்க்கைக்கு எதிர்வெட்டாக, பத்தினி சம்பந்தம் இன்றி, அதாவது பார்வதியின் கலப்பில்லாமல் தனித்து ஸ்வச்சமாக இருக்கிற தக்ஷிணாமூர்த்தியைப் பார்த்தால், அவர் ஸரஸ்வதியின் உடன் பிறப்பு என்று தெரியும். ஸரஸ்வதி மாதிரியே அவர் புஸ்தகமும் ஜப மாலையும் வைத்திருப்பார். இருவரும் ஞான மூர்த்திகள். இருவரும் வெளுப்பு.

பிரம்ம சக்தியிலிருந்த மூன்று ஜோடிகள் தோன்றியதற்குக் காரணம் உண்டு. இவர்களுக்குள் ஒவ்வோர் ஆணும் ஒரு பெண்ணை மணந்தாக வேண்டும். இரண்டே ஜோடி இருந்தால் பெண் கொடுத்து பெண் வாங்கினதாகும். அது யுக்தமில்லை. அதனால்தான் மூன்று சகோதர ஜோடிகள் பராசக்தியில் தோன்றின. பிரம்மா சிவனின் சகோதரியான சரஸ்வதியை மணந்தார். சிவன் மகாவிஷ்ணுவின் சகோதரியான பார்வதியை மணந்தார். மகாவிஷ்ணு பிரம்மாவின் சகோதரியான லக்ஷ்மியை மணந்தார். வெள்ளை என்பது சத்வ குணம்; செம்மஞ்சள் ரஜோ குணம். நீலம் அல்லது கறுப்பு தமோ குணம். பிரம்மவிஷ்ணு, ருத்திரர்களை அப்படி அடியோடு தனித்தனியாக்கி முக்குணங்களாகப் பிரித்ததோடு நின்று விடாமல், சமரசத்தைக் காட்டவே அவர்களுடைய சக்திகளான ஸரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதி ஆகியோர் அவர்களது நிறங்களுக்கு மாறுபட்ட நிறமாக இருக்கிறார்கள்.

பராசக்தியேதான் இத்தனையும் ஆகி, முத்தொழிலும் செய்கிறாள். இருந்தாலும் அவளைமாயை, மாயைஎன்று நாலாம் தொழிலான திரோதானத்தோடுதான் ரொம்பவும் இணைத்துப் பேசுகிறோம்.

மூக கவி சம்ஹார ருத்ரனின் சக்தியான பார்வதியின் கருநீல நிறத்தைச் சிவப்புப் பராசக்தியின் வர்ணமாககச் சொல்கிறார். மாயையாக இருப்பவளும், மாயையைப் போக்கி ஐந்தாம் தொழிலான (மோக்ஷஅநுக்கிரகத்தைச் செய்பவளுமான பராசக்தியே காமாக்ஷி என்று சொல்லி, அந்தச் சிவப்புக் காமாக்ஷியை ஓரொரு இடங்களில் கறுப்பானவளாகவும் (சியாமாவாகவும்) வர்ணிக்கிறார். சியாமள வர்ணம் கொண்ட பார்வதியைச் சக்தியாகப் பெற்றே வெள்ளைச் சிவன் சம்ஹாரத்தில் இறங்குகிறார். அம்பாளையே சம்ஹார மூர்த்தியாகச் சொல்கிற போதும், அவளைக் காளி என்கிறோம். காளி என்றாலே கருத்தவள் என்று அர்த்தம். அநுக்கிரஹ மூர்த்தியான காமாக்ஷியை ஏன் கருப்பானவளாகவும் அதாவது அழிக்கும் தொழில் செய்கிறவளாகவும் மூகர் சொன்னார்?

வேலை எல்லாம் செய்கிறோம். பிறகு அலுத்துப் போய்த் தூங்குகிறோம். தூக்கம் தமஸின் செயல். அங்கே ஒரே இருட்டுகறுப்புதான் இருக்கிறது. ஆனாலும் இந்தத் தூக்கத்தில்தான் மநுஷ்யனுக்குக் கொஞ்சமேனும் சாந்தி இருக்கிறது. நாளெல்லாம் அலைந்து திரிந்து கஷ்டப்படுகிற ஜீவராசிகளுக்கு ஆறுதலாகப் பராசக்தி அன்றன்றும் தூக்கத்தை வைத்து கொஞ்சம் அமைதி தருகிறாள். எனவே தமஸிலேயே ரொம்பவும் அநுக்கிரகம் இருப்பதாகத் தெரிகிறது.

சம்ஹாரம் என்பது பெரிய தூக்கம். தூக்கத்தில் எப்படித் துக்கக் கலப்பே இல்லாத அமைதி நிலையில் இருக்கிறோமோ, அப்படியே சம்ஹரிக்கப்பட்ட ஜீவன் மறுபடியும் ஜன்மா எடுக்கிற வரையில் நானாவித கர்ம அநுபவங்களின் சிக்கலிலிருந்து தப்பி அமைதியில் அமிழ்ந்திருக்கிறது. நமக்குக் கர்மக் கட்டிலிருந்து தற்காலிகமாக விடுதலைதந்து விச்ராந்தி தரவே சம்ஹாரத் தொழிலைப் புரிகிறார் சிவபெருமான். ‘நான் கர்மா செய்கிறேன்என்ற அகங்காரத்தை இழந்துவிட்ட ஞானிகளே கர்மச் சூழலிலிருந்து நிரந்தரமாகத் தப்ப முடியும். ஆனால் பாபியும்கூடத் தற்காலிகமாகவேனும் இந்தக் கர்மாநுபவத் தொந்தரவிலிருந்து விடுபட்டு விச்ராந்தி பெறுவதற்குப் பராசக்தி மகாகருணையுடன் சம்ஹாரத்தை அமைத்திருக்கிறாள். விஷ்ணுவின் பரம பக்தரான நம்மாழ்வார், ‘முனியே நான்முகனே, முக்கண்ணப்பாஎன்று மும்மூர்த்திகளையும் அழைக்கும்போது, சம்ஹார மூர்த்தியான ருத்திரனைத்தான்அப்பாபோட்டு அருமையுடன் கூப்பிடுகிறார். பரம தயாளுவான ஒரு தகப்பனார், தப்புச் செய்கிற குழந்தையையும், ‘அடக் குழந்தே! ரொம்ப அலைந்து திரிந்து களைத்துவிட்டாயப்பா, கொஞ்சம் ஒய்வு எடுத்துக் கொள்என்று சொல்கிற மாதிரி, பரமேசுவரன் சம்ஹார காலத்தில் நமக்கெல்லாம் ஓய்வு தந்து ஆறுதல் அருளுகிறான். இதையே, “முக்கண்ணப்பா!” என்று வாய்விட்டுக் கூப்பிட்டுக் காட்டுகிறார் ஆழ்வார். இப்படி ஸம்ஹரிக்கிற ருத்திரனின் சக்தியான பார்வதியின் நிறம்தான் கறுப்பு.

லோகத்தை விட்டால்தான் சஞ்சலங்களிலிருந்து விடுபட்டு மோக்ஷம் என்கிற நிரந்தர சாந்தியைப் பெற முடியும். சாந்தியோடு இருக்கிறோம் என்று உணர்ந்து அமைதியில் இருப்பதே ஸமாதி நிலை. என்றும் கலையாத சாசுவத நிலை அது. இதுவே பராசக்தியின்அநுக்கிரகம்என்கிற தொழிலால் அருளப்படும் நிலை. இதற்கடுத்த நிலை சாந்தியோடு இருக்கிறோம் என்ற பிரக்ஞையில்லாமலே அப்படியிருக்கிற தூக்க நிலை, சம்ஹார நிலை. எனவே அநுக்கிரஹத்துக்கு அடுத்தபடியாக ஜீவராசிகளுக்கு மிகவும் ஹிதமான நிலை சம்ஹாரம்தான்.

பொது வழக்கிலும் நம்மை ஏன் பிரம்மா சிருஷ்டித்தார் என்ற வருத்தத்தாலோ என்னவோ பிரம்மாவை விசேஷமாக வழிபடுவதே இல்லை. மஹாவிஷ்ணுவுக்கு நிறைய வழிபாடு இருந்தாலும் ஜகத் பரிபாலகரான அவரை மனுஷ்ய லோகத்தோடு ரொம்பவும் சம்பந்தப்படுத்தியிருக்கிறது. ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆசாமிகளை, “ஸ்வாமி”, “ஸ்வாமிஎன்று பரஸ்பரம் கூப்பிட்டுக்கொண்டாலும், தங்கள் ஸ்வாமியைப் பெரும் ஆள் (பெருமாள்) என்றே சொல்கிறார்கள். வேதத்தைப் பார்த்தாலும் விஷ்ணுபரமான மந்திரங்களுக்குப்புருஷ ஸூக்தம்என்றே பெயர் இருக்கிறது. ‘புருஷஎன்றால் முப்புரங்களான ஸ்தூலசூக்ஷ்மகாரண சரீரங்களுக்கு உள்ளே இருக்கிற ஆத்மா என்பது தத்வார்த்தமானாலும், பொதுவில்புருஷஎன்றால் மநுஷ்யன், ஆசாமி என்றே பொருள் கொள்கிறோம். பராசக்தியிடமிருந்து இந்த லோகமெல்லாம் எப்படி வந்தது என்பதைத்தான் புருஷ ஸூக்தம் சொல்கிறது. லோகத்தோடு, மநுஷ்யனோடு இப்படி விஷ்ணுவுக்கு நெருக்கமான தொடர்பு காணப்படுகிறது. சம்ஹார மூர்த்தியான சிவனே லோகத்தை விட்டபின் இருக்கிற வைராக்கியத்திற்கு முக்கியமாகச் சொல்லப்படுகிறார். விஷ்ணு ஆலயத்தைப் பெருமாள் கோவில் என்றும் சிவாலயத்தையே ஈசுவரன் கோவில் என்றும் சொல்கிற வழக்கமும் இருக்கிறது. விஷ்ணு தாழ்த்திசிவன் உயர்த்தி என்பதற்காக இதை நான் சொல்லவில்லை. அப்படி சொன்னால் அது அடியோடு தப்பு. இரண்டும் முழுக்க முழுக்க ஒரே வஸ்துதான். ஆனால் அவரவர் செய்கிற கிருத்யத்தைப் பொறுத்து, லோக ரீதியில் அவர்கள் எப்படி நினைக்கப்படுகிறார்கள் என்று காட்டுவதற்காகச் சொன்னேன்.

சிவப்புக் காமாக்ஷியைக் கறுப்பானவள் என்று மூகர் ஏன் சொன்னார் என்று யோசிக்கும்போது, இத்தனை அபிப்பிராயமும் வந்தது. சாசுவத சாந்தி என்கிற மோக்ஷநிலைக்குத் தற்காலிக சாந்த நிலையான ஸம்ஹாரமே மிகவும் கிட்டத்தில் இருக்கிறது. அதனால்தான், சம்ஹார சக்தியான பார்வதியின் கறுப்பு வர்ணத்தையே மோக்ஷம் அநுக்கிரகிக்கும் காமேசுவரியின் வர்ணமாகவும், மூகர் கூறியிருக்கிறார் என்று சொல்ல வந்தேன். ‘பரம ஞானிக்கு அவர் சாசுவத சாந்தம் தருவது பெரிய கருணையில்லை; பாபாத்மாவுக்கு சம்ஹாரத்திலே தற்காலிக அனுமதி தருவதுதான் மகா கருணைஎன்று நினைத்து, சம்ஹார சக்தியின் கறுப்பு நிறத்தையே சிவப்புக் காமாக்ஷியின் இன்னொரு நிறமாக ஸ்துதி செய்தார் போலிருக்கிறது.

பராசக்தியின் ஸத்வகுணம் மகாவிஷ்ணுவாக உலகைப் பரிபாலிக்கிறது; அவளுடைய ரஜோ குணம் பிரம்மாவாக உலகைப் படைக்கிறது; அவளுடைய தமோ குணம் ருத்திரனாக லோகத்தை சம்ஹரிக்கிறது. இந்த ஸம்ஹாரத்தில் எந்த யோக்கியதையும் இல்லாத ஜீவர்களும் சாந்தி அநுபவிக்க அருள் செய்கிறாள். இதனால்தான், அவளது வர்ணத்தைச் சொல்லும்போது ஸம்ஹார சக்தியின் கறுப்பை விசேஷித்துக் சொல்கிறார் மூககவி. ஸத்வம், ரஜஸ் என்ற இரண்டைவிடத் தமஸ் தாழ்ந்தது என்று ஒரு கோணத்தில் ( angle ) தோன்றினாலும், இன்னொரு கோணத்தில் பார்த்தால் தமஸேஅநுக்கிரகம்என்ற பரம உச்சமான ஐந்தாம் தொழிலுக்குக் கிட்டத்தில் இருப்பதால்தான், நிறமாலையில், கறுப்பும் சிவப்பும் இரு வேறு கோடிகளில் இருந்தாலும், அம்பாள் விஷயத்தில் இந்த இரண்டு வர்ணமுமே ரொம்பக் கிட்டத்தட்ட இருப்பதாக மூகர் பாடியிருக்கிறார்.