சச்சிதானந்தம் = 2

Life Divine இன் அமைப்பு

ஸ்ரீ அரவிந்தர் Life Divine என்ற நூலை இரண்டு புத்தகங்களாகவும், முதற்புத்தகத்தை 28 அத்தியாயங்ளாகவும், 2ஆம் புத்தகத்தை இரு பாகங்களாகவும் பிரித்து ஒவ்வொன்றிலும் 14 அத்தியாயங்களை எழுதினார்.

  1. முழுப் புத்தகத்திலும் பரம்பொருள் பிரபஞ்சமாக மாறுவது எப்படி? என்று சொன்னார். அதை முதல் புத்தகத்தில் எழுதி முடித்தார். அவர் எழுதும்பொழுது சச்சிதானந்தத்தில் ஆரம்பித்து எப்படி மாயையால் சத்திய ஜீவியத்தின் மூலம் மனம், வாழ்வு, உடல் ஏற்படுகின்றன என்று எழுதினார். இங்கு ஸ்ரீ அரவிந்தர் ஆன்மா, சத்திய ஜீவியம், மனம், வாழ்வு, உடல் (ஜடம்) ஆகியவை எப்படி சிருஷ்டிக்கப்பட்டன என்று தத்துவார்த்தமாகவும், அறிவிற்குப் புலப்படும் வகையிலும் எடுத்துக் கூறுகிறார்.
  2. இரண்டாம் புத்தகத்தில் ஞானம் அஞ்ஞானமாக மாறி ஆன்மீகப் பரிணாமத்தால் மீண்டும் ஞானமாக மாறுவதைக் கருத்தாகக் கொண்டார்.
  3. இரண்டாம் புத்தகத்தின் முதல் பகுதியில் பரம்பொருளை அனந்த ஜீவியம் என்கிறார். பிரபஞ்சத்தை அஞ்ஞானம் என்கிறார். அந்த சிருஷ்டியை விவரிக்கும் 14 அத்தியாயங்கள் அவை.
  4. இது இரண்டாம் புத்தகத்தின் இரண்டாம் பகுதி. இது ஞானம் ஆன்மீகப் பரிணாமம் அடைவதை விவரிக்கிறது.

ஆண்டவன் உலகமாக (பிரபஞ்சம்) மாறிவிட்டார். அவர் அப்படி மாறியதால் அவர் குறையவில்லை. ஆண்டவனால் குறைய முடியாது. ஏன் என்றால் அவர்தாம் பிரம்மம்.ஆண்டவன் அனந்த ஜீவியமாகத் தன்னை மாற்றிக் கொண்டு, அஞ்ஞானமாக தெரிவது சிருஷ்டி.

முதல் அத்தியாயம்இது இதயத்தின் எழுச்சி என்ற தலைப்பு. இந்த அத்தியாயத்தின் முக்கியமான கருத்து முரண்பாடு உடன்பாடாகிறது.

இரண்டாம் அத்தியாயம்இது ஜடமும் ஆன்மாவும் ஒன்றே என்று கூறுகிறது.

மூன்றாம் அத்தியாயம்ஆன்மாவும் ஜடமும் ஒன்றே என்று கூறுகிறது.

நான்காம் அத்தியாயம்ஜடமும் ஆன்மாவும் சேர்ந்த பரம்பொருளை விவரிப்பது.

ஐந்தாம் அத்தியாயம்மனிதன் பரம்பொருளையும், ஜடத்தையும் இணைக்கும் கடமையைக் கொண்டவன் என்று கூறுகிறது.

ஆறாம் அத்தியாயம்பிரபஞ்சத்திலிருந்து மனிதன் உற்பத்தியாவதை விவரிக்கிறது

ஏழாம் அத்தியாயம்அகங்காரத்தைப் பற்றியது. அகங்காரம் எப்படிக் கரையும் என்று கூறுகிறது.

எட்டாம் அத்தியாயம்வேதாந்த ஞானம் அறிவிலிருந்து புலன் விலக்கப்பட்டால் ஞானமாகிறது என்பது இந்த அத்தியாயம்.

9, 10, 11, 12ஆம் அத்தியாயங்கள் சச்சிதானந்தம். 9 ஆம் அத்தியாயம் சத்புருஷன். 10ஆம் அத்தியாயம் சித் சக்தி. 11, 12ஆம் அத்தியாயங்கள் ஆனந்தம்.

13ஆம் அத்தியாயம் மாயை. மாயை என்பது இல்லாததன்று. ஆண்டவனின் சிருஷ்டிக்கு மாயை கருவி. 14, 15, 16ஆம் அத்தியாங்கள் சத்திய ஜீவியத்தைப் பற்றியவை. உலகத்தை சிருஷ்டித்தது சத்திய ஜீவியம். மனமல்ல என்று ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார்.

17ஆம் அத்தியாயம்ஆத்மா

18ஆம் அத்தியாயம்மனம்

19, 20, 21, 22ஆம் அத்தியாயங்கள்வாழ்வு

23ஆம் அத்தியாயம் சைத்திய புருஷன்

24, 25ஆம் அத்தியாங்கள்ஜடம்

26, 27ஆம் அத்தியாயங்கள்பரிணாமம்

28ஆம் அத்தியாயம்சத்திய ஜீவியம். இதில் சத்திய ஜீவியம் நிச்சயமாகப் பலிக்கும் என்கிறார்.

நாம் சத் புருஷனைப் பற்றிப் பேசுகிறோம். சத் புருஷன் ஸ்தாணு சமுத்திரம்.உலகம் என்று கூறுகிறோம். இவற்றைக் கடந்து பிரம்மம் இருப்பதாகச் சொல்கிறோம். இவை எல்லாம் உண்மை. இவற்றைக் கடந்த உண்மை ஒன்றுண்டு. அது நாமும், உலகமும், சமுத்திரமும், ஸ்தாணுவும், சச்சிதானந்தமும், பிரம்மமும் ஒன்று. நம் கண்ணுக்குத் தெரிவது உலகம். அகந்தையற்ற பார்வைக்குத் தெரிவது சமுத்திரம். ஞானிக்குத் தெரிவது ஸ்தாணு. ஞானம் முதிர்ந்தால் தெரிவது சச்சிதானந்தம். ஞானம் சித்தித்தால் நாம் பிரம்மமாகி அனைத்தையும் பிரம்மமாகக் காண்கிறோம். பக்குவம் மாறினால் பார்வை மாறும். மாறிய பார்வைக்கும் மாறிய தரிசனம் கிடைக்கும். நமக்கு உட்படாத விஷயத்தில் நாம் பொறுப்பு ஏற்பது இல்லை. நமக்கு உட்பட்ட விஷயத்தைத் தான் நாம் பேச முடியும். சிருஷ்டிக்கு அப்பாற்பட்ட விஷயத்தைப் பற்றிப் பேசுகிறோம் என்றால் ஒரு நாள் நமக்கு அது உட்படும் என்று அர்த்தம். மனிதன் பிரம்மாண்டமான கடலில் கப்பல் செலுத்துகிறான். ஆகாயத்தில் விமானத்தில் பறக்கிறான். கடலையும், ஆகாயத்தையும் ஆட்சி செய்யும் திறன் மனிதனுக்கு எப்படி வந்தது? கடல் என்றால் என்ன? நீர் என்றால் என்ன? நீரின் தன்மை என்ன? ஆகாயத்தின் சட்டம் என்ன? என்று புரிந்ததால் அவற்றை ஆளமுடிகிறது. எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் அதனுடைய சூட்சுமத்தை (அதாவது சாரத்தை) அறிய முடியுமானால் அதன்மூலம் அவற்றை ஆட்சி செய்யலாம் என்பது விஞ்ஞானம் சாதிப்பது. அதுவே தத்துவத்திலும் உண்மை. பிரம்மம் என்பது பிரம்மாண்டமானது. சூட்சுமமான அதன் தத்துவத்தை நாம் அறிந்தால் பிரம்மம் நமக்கு உட்படும் என்பதை ஸ்ரீ அரவிந்தர் தம்முடைய பூரணயோகத்தில் சாதித்தார். அவருடைய சாதனையின் பலனை உலகத்துக்கு அளிக்க முன்வருகிறார். நூலில் நான்கு கடுமையான அத்தியாயங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று சத் புருஷன். மிகக் கடுமையான அத்தியாயம் என்பது இரண்டாம் புத்தகத்தில் முதல் அத்தியாயம். அதன் தலைப்பு பிரபஞ்சத்தின் சிருஷ்டி பிரம்ம சிருஷ்டி எனப்படும். அந்த அத்தியாயத்தில் சிருஷ்டியின் ரகசியத்தை கூறுகிறார். இதுவும் நீண்ட அத்தியாயம். மிகக் கடினமான அத்தியாயமாக இருந்தாலும் ஆர்வத்துடன் பயின்றால் புரியும். இதன் வாதங்களைப் புரிந்து கொள்வது முதல்நிலை. தத்துவச் சாரங்களைப் புரிந்து கொள்வது இரண்டாவது நிலை. அதைப் பின்பற்றுபவர்களுக்கு வாழ்க்கை அதிர்ஷ்டமாகத் திருவுருமாறும்.

நாம் அதைப் பெற உதவும் சத் புருஷன். அந்தக் காலத்தில் ராஜாவைப் பற்றியோ, அவரின் செய்கைகளைப் பற்றியோ பேசினால் ராஜதுரோகம் என்று கூறி தலை போகும். ஆனால் இன்று மேடையேறி அரசியலையும், அரசியல்வாதிகளின் செய்கைகளைப் பற்றியும் அலசிப் பேசுகிறோம். அந்த உரிமை நமக்குச் சுதந்திரம் வந்தபின் ஏற்பட்டது. கடவுளுக்குப் பயந்து குடும்பம் செய்ய வேண்டும் என்ற நாம் சொல்வோம். அதனால் பக்தி என்ற சொல்லை பயபக்தி என்று சொல்கிறோம். Fear of God is the beginning of knowledge என்பது பைபிள் வாசகம். ஆண்டவனுக்குப் பயந்து செய்வது வழிபாடு. ஸ்ரீ அரவிந்தம் அந்த பயத்தை விலக்குகிறது. வழிபாட்டை மாற்றி பரிணாமம் ஆக்குகிறது. பயத்தை அன்பாக மாற்றுகிறது. ஆண்டவன் தன்னை அனுபவிக்க வேண்டும் என்று கேட்கிறது. ஆண்டவனை தான் அனுபவிக்க வேண்டும் என்பது ஸ்ரீ அரவிந்தம். இதே கருத்து வேதத்திலும் காணப்படுகிறது. பயத்திற்கு இடம் இல்லை. பயம் இருந்தால் அதைத் தைரியமாகத் திருவுருமாற்றுகிறது. கடைசி அத்தியாயத்தில் திருவுருமாற்றம் இன்றியமையாதது என்று கூறுகிறார். பயம் தைரியமாகத் திருவுருமாற வேண்டும். மனிதன் இறைவனாக மாற வேண்டும். இதுபோல் திருவுருமாற்றம் நம் எல்லா எண்ணங்களுக்கும், உணர்ச்சிகளுக்கும், பழக்கங்களுக்கும் உண்டு. அவற்றுள் ஒவ்வொன்றிற்கும் ஓர் உதாரணம் கூறலாம்.

  1. இந்த உலகத்தில் நாம் முன்னேற முடியாது என்பவர் தம் எண்ணத்தைத் திருவுருமாற்றினால் அது முன்னேறுவதற்கு ஏராளமான சந்தர்ப்பங்கள் உண்டு என்ற கருத்தாக மாறும். அவர் வாழ்வு அதனால் உயரும்.
  2. அதிர்ஷ்டம் ஜாதகத்தில் இருந்தால் தான் உண்டு என்று நம்புபவர் நல்லெண்ணம் மட்டுமுள்ள அன்பர் அதிர்ஷ்டத்திலிருந்து தப்ப முடியாது என்று உணர்ந்தால் அன்றே வாழ்வில் அதிர்ஷ்டம் தலை எடுக்கும். இதே போல் நம் வாழ்க்கையில் 1000 அம்சங்கள் திருவுருமாற்றத்திற்காகக் காத்திருக்கின்றன.