புட்டபர்த்தி = 1

தெய்வத்திற்குச் செய்யும் நிவேதனம்
அத்தெய்வத்தின் அணுக்கப் பரிவாரத்தினருக்கே
முதலில் ஸமர்ப்பணமாகும் மரபில்,
ஸ்ரீ ஸத்ய ஸாயித் தெய்வத்திற்கு
நிவேதனமாகும் இந்நூல்,
தம்மில் ஐக்கியமடைந்த ஆதரிசப் பிறவி
என்று அவராலேயே போற்றப்பெற்ற
என் மாத்ருதேவி
மாதுஸ்ரீ ஜயலக்ஷ்மி ராமசந்திரையரின்
புனித நினைவுக்குப்
பிரேம ஸமர்ப்பணம்

அத்தியாயம் – 1

சுருதியும் லயமும்

கண்ணன் பிறந்தான்எங்கள்
கண்ணன் பிறந்தான்இந்தக்
காற்றதை எட்டுத் திசையிலும் கூறிடும்
திண்ணம் உடையான்மணி
வண்ணம் உடையான்உயர்
தேவர் தலைவன் புவிமிசைத் தோன்றினன்
பண்ணை இசைப்பீர்நெஞ்சில்
புண்ணை ஒழிப்பீர்இந்தப்
பாரினிலே துயர் நீங்கிடும் என்றிதை
எண்ணிடைக் கொள்வீர்நன்கு
கண்ணை விழிப்பீர்இனி
ஏதும் குறைவில்லை; வேதம் துணையுண்டு.

பாரதியார்: “கண்ணன் பிறப்பு

பிள்ளையாரப்பனுக்கு உகந்த சங்கடஹர சதுர்த்தி தினம். மக்கட் குலத்தின் இடையூறுகளும் இன்னல்களும் தீர விநாயகப் பெருமானுக்கு விசேஷ பூஜை செய்யும் நன்னாள்.

அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் அருளுவதால் அது சதுர்த்தி. விழிப்பு, கனவு, உறக்கம் என்ற மூன்று நிலைகளையும் கடந்த துரீய சத்தியமும்சதுர்த்தம்என்றே மறைமுடியில் சிறப்பிக்கப்படுகிறது.

மாதந்தோறும் கிருஷ்ணபக்ஷத்தின் நான்காம் திதியாக வருவது சங்கடஹர சதுர்த்தி. அதிலும் நம் வரலாறு தொடங்கும் இந்தச் சதுர்த்திக்கு அதிவிசேஷம் என்னவெனில், இது முருகப்பெருமானோடும் தொடர்பு கொண்டதாக உள்ளது. இது கார்த்திகேயனின் கீர்த்தி செழிக்கும் கார்த்திகை மாதத்தேய்பிறைச் சதுர்த்தியாகும். சங்கடங்கள் தீர உபாயமாக இந்த சங்கடஹர விரதத்தை உலகுக்குக் காட்டிக் கொடுத்தவனே அம்முருகன்தான். அவன் ஒரு சமயம் பரத்வாஜ ரிஷியின் தோன்றலாக, அதாவது பாரத்வாஜ கோத்திர முன்னோரொருவனாக அவதரித்தான். அப்போது அங்காரகன் என்றும் செவ்வாய் என்றும் பெயர் கொண்டான். மானுடனாகவே பிறந்தும் தேவாமுதத்தை அவன் உண்டு, நவக்ரஹங்களில் ஒருவனாக உயர்ந்தான். இந்த அதிசய உயர்வை அவன் எய்தியதற்குக் காரணம், அவன் விநாயகப் பெருமானை ஸங்கடஹர சதுர்த்திதோறும் வழிபட்டதே.

நம் சரித நாயகனுக்குள்ள பாரத்வாஜத் தொடர்பு பிற்பாடு தெரியும்.

இதோ, இக்கார்த்திகைச் சதுர்த்தியானது செவ்வேள் உகக்கும் செவ்வாய்க்கிழமையைத் தீண்டும் தருணம் வந்து விட்டது. அடிவானத்தில் செங்கோடுகள் படரத் தொடங்கிவிட்டன. ஒரு நாழிகையில் சூரியோதயம் நிகழ்ந்து, செங்கோடனின் மங்களவாரம் மங்கள பவனி தொடங்கிவிடும்.

அதாவது, இன்னமும், இதோ இந்த நாழிகை வரையில் திங்கட்கிழமைதான். ஆஹா, எத்தனை தெய்விகப் பெருமைகள் ஒன்று திரண்ட நாள்! இது கார்த்திகை மாத ஸோம வாரமாகும். உமையோடு கூடிய ஈசனாம் ஸோமனுக்கு, எனவே, சிவசக்தியருக்குப் பிரீதியான புனித நாள். நம் சரித நாயகர் தமக்குஸோமப்பாஎன்றே பெயரிட்டுக் கொண்டு ஒரு திருவிளையாடல் புரியப் போவதையும், இவரே ஸோமநாதபுரத்தில் உள்ள மூல ஜ்யோதிர்லிங்கத்தை வெளிக்கொணரப் போகிறார் என்பதையும் எண்ணுகையில் ஸோமவாரப் பொருத்தம் நம்மை மெய் சிலிர்க்கச் செய்யும்!

இன்று நக்ஷத்திரமும் சிவபெருமானுக்குரிய ஆதிரையே! தயையில் நனைந்து நனைந்துஆர்த்ரராக இருக்கும் பரமேச்வரனின் நக்ஷத்திரமே ஆர்த்ரா எனும் ஆதிரை.

இதேபோல் ஸோமவாரமும் திருவாதிரையும் கூடியதொரு நாளில் தான் முருகப் பெருமான் மீனாக்ஷிஸுந்தரேச்வரர்களுக்கு மகவாக உதித்து உக்ர பாண்டியன் எனப் பெயர் பெற்றான். முருகேசனின் மற்றோர் அவதாரமான ஞான சம்பந்தர் அவதரித்ததும் ஓர் ஆதிரையிலேயே.

இப்படியாக ஈசன், உமை, கணேசன், ஷண்முகன் சம்பந்தத்துடன் இது சைவப் பெருநாளாக இருந்தால் மட்டும் போதும்? ஸ்ரீமத் ராமாநுஜர் தோன்றியதும் ஓர் ஆதிரையில்தான் என்னும்போது வைஷ்ணவத் தொடர்பும் இந்நாளுக்கு ஏற்பட்டுவிடுகிறது!

இது மட்டுமில்லை. மேற்படி கார்த்திகை ஸோமவாரம் முடியும் வைகறை வேளையில் நம் வரலாறு நடக்கும் பிரதேசத்தில் அனைவருமே விஷ்ணுவுக்குத்தான் விசேஷ வழிபாடு செய்கிறார்கள். “ஸத்ய நாராயண விரதம்என்று கோலாஹல பூஜை நடத்துகிறார்கள். சமய சமரஸம்!

***

தோ ஒரு பெண்மனி பூஜை செய்கிறாளே, இதுவும் ஸத்ய நாராயண ஆராதனைதான்.

இவளுக்கு மிகவும் சோர்வாக இருக்கிறது. ஆனாலும் வெகுவிரைவில் விரதம் முடிக்க முனைந்திருக்கிறாள். அவசரப்படுகிறாள்.

காரணம், இவளுக்குப் பேற்று நோவு கண்டுவிட்டது.

ஆயாசத்திலேயே ஆனந்தம்! நோவிலேயே ஓர் இன்பம்! எந்தத் தாய்க்கும் இருக்கக் கூடியதைவிட இவளுக்குக் கூடுதலாகவே இன்பம் இருந்திருக்குமோ? உலகுக்கே பெரும் பேறாக ஒரு பிள்ளையைப் பெறப் போகிற மஹா பாக்கியவதியாயிற்றே! ஆம், சரியாக ஐம்பதாண்டுகளுக்குப் பிறகு இவ்வூரில் கும்பமேளா போல் ஒரு மஹோத்ஸவம் நடக்கப் போகிறது. லக்ஷலக்ஷமான மக்கள் தங்கள் பிரத்யக்ஷ தெய்வத்தைத் தரிசிக்க இங்கு குழுமப் போகிறார்கள். ஊரும் சுற்றுப்புறமும் ஊசி விழவும் இடமின்றி மக்கள் வெள்ளத்தில் முழுகிவிடும்போது, விழா நாயகனான கண் கண்ட தெய்வம் எப்படி வழி ஏற்படுத்திக்கொண்டு வந்து அடியார் அனைவருக்கும் அண்மையில் நின்று ஆசிவழங்க இயலும்? மண்ணிலே வழி ஏற்படுத்திக் கொண்டு ஜனசமுத்திரத்தைப் பிளந்து வருவது அந்த அற்புதனுக்குமே இயலாத சாகஸமாகிவிடும். எனவே மக்கள் காணும் நெருக்கத்தில் விண்ணில் ஹெலிகாப்டர் பவனி வந்தே அவதார புருஷன் அனைவருக்கும் தரிசனம் தர வேண்டியதாகும்! தான் விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்த ஐம்பதாவது ஜயந்தியை இப்படி விண் வீதியுலாவால் சிறப்புறச் செய்த நாயகன், வானூர்தியைத் தன் வாஸ ஸ்தானத்தில் இறக்கி, மண்மிசை பொற்பாதம் வைக்கப்போகும் அக்கணத்தில் ஆயிரமாயிரம் கண்டங்கள் ஆர்த்துப் பாடப்போவது இந்தப் பெண்மணியின் பாக்கியத்தைத்தான்!

தன்ய ஹோ ஈச்வராம்பா!”

இத்தனயனை ஈன்றதால் தன்யளான அவள் புகழே பஜனைப் பாடலாக வானை முட்டப் போகிறது. அங்கு புகழுடம்பிலே தன் புதல்வனின் பொன் விழா காணும் மங்கை நல்லாளுக்கு இந்த இன்சொலே கனகாபிஷேகம் செய்யப் போகிறது.

அந்த அபிஷேகத்தின் ஆரம்பத் தூறல்கள் அவளுள் குளிர விழுந்துச் சிலுசிலுப்பூட்டிய பழைய கார்த்திகை ஸோம வாரத்துக்குத் திரும்புவோம்.

***

வளால் உலகம் பெறப்போகும் பாக்கியத்துக்குக் கட்டியம் கூறியாகிவிட்டது. அப்படிக் கட்டியம் கூறியது ஒரு மத்தளமும் தம்பூராவுமாகும். அது ஒரு விந்தை!

ஆம், எதிர்காலத்தில் சர்வ தேசங்களும் எந்தப் பெருமானின் விந்தைகளைக் கண்டே அவரிடம் முக்கியமாக ஈர்க்கப்படப் போகின்றனவோ, அந்த விகிர்தனின் ஜனனத்துக்கு முன்பிருந்தே அவ்வீட்டில் அதிசயங்கள் நிகழத் தொடங்கிவிட்டன. நாடகக் கலைஞர்களைக் கொண்ட அவ்வில்லத்தில் பகல் முழுதும் பாட்டும் அதோடு தம்பூரா மீட்டும், மத்தள தாளமும் ஓயாமல் சத்தித்துக் கொண்டே இருப்பது பரம்பரையான வழக்கம். இப்பெண் கருக்கொண்ட நாளிலிருந்தோ இரவிலும் அங்கு இசையலைகள், லய சப்தங்கள் ஓயவில்லை. வாய்ப் பாட்டில்லாமலே, நள்ளிரவுகளில் தம்பூராவின் ஸுநாதமும், மிருதங்கக் குமுகுமுப்பும் அங்கு நிரம்புகின்றன. விந்தை என்னவெனில், எவரும் கை தீண்டி வாசிக்காமலே, தம்பூரா தானே தன்னை மீட்டிக் கொண்டு, ‘ரீம் ரீம்என ரீங்கரிக்கிறது. மிருதங்கமும் தானாகவே தன்னைத் தட்டிக் கொண்டுஜாம் ஜாம்என்று ஜமாய்க்கிறது!

தானாகப் பிறக்கும் அநாஹத நாத தத்வம் பற்றி அவ்வீட்டாரோ, ஊராரோ என்ன அறிவார்கள்? எனவே கண்ணுக்குத் தெரியாமலே இப்படி சுருதி கூட்டிய, லயம் ஈட்டிய விந்தைக் கரத்தைப் பற்றி விதவிதமாக அர்த்தம் (அதாவது அனர்த்தம்) கற்பித்துக் கொண்டார்கள். பயந்தார்கள்..

வீட்டுக்குரியவர்நம் மங்கை நல்லாளின் கணவர் பக்கத்து ஊரில் இருந்த மதிப்பு வாய்ந்த சாஸ்திரியாரிடம் சென்று விளக்கம் கோரினார்.

இதில் பயப்பட ஏதும் இல்லையப்பா. தர்மமும் பிரேமையும் தழைக்க வைத்து லோக கல்யாணத்தை விளைவிக்கப்போகும் ஒரு காருண்ய மகாசக்தி உன் வீட்டில் தோன்றப் போகிறது என்பதற்கே இது அறிவிப்பாகும். அனைவரும் அன்பில் இசைவதுதான் தம்பூரா ச்ருதி. அறத்தை அநுஸரிப்பதுதான் மிருதங்கத்தின் லயக் கட்டுப்பாடு. ச்ருதியும் லயமும்தான் பிரபஞ்சப் பேரியக்கத்தின் சுவாசமும், ரத்தத் துடிப்புமாகும்என்ற

உண்மையை அந்த சாஸ்திரியார் அறிந்திருந்த அளவுக்கு, அதிலும் விளக்கம் கேட்டவர் புரிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு, சொல்லி பயத்தை நீக்கி உற்சாகமூட்டினார்.

***

காருண்ய மகா சக்தி மானுட உருவில் உற்பவிக்கும் சுப முகூர்த்தம் நெருங்கிவிட்டது.

பெண்மணி விரைவே விரதம் முடித்து, தாழ்வரை மூலையில் திண்ணைபோல் உயர்ந்த ஒரு மேடையில் படுக்கிறாள்.

கண்ணன் பிறந்த காராக்ருஹத்தோடும், இயேசு ஜனித்த தொழுவத்தோடும் இந்தத் தாழ்வரையை ஒப்பிட முடியாதுதான். எனினும், தாழ்வாரைத் தாங்கவே தாழ்ந்து வரும் நாயகன் இப்போதும் பரம எளிமையான ஒரு குக்கிராமத்தில் கிலமான ஒரு சிறு வீட்டைத்தான் ஜன்ம ஸ்தலமாகத் தேர்வு செய்திருந்தான்.1

பெண்மணிக்குப் பேற்று நோவு வலுத்தவிட்ட இச்சமயத்தில் அவளது மாமியார் வீட்டில் இல்லை. முறைப்படி ஸத்யநாராயண பூஜை செய்வதற்காக அம்மூதாட்டி புரோஹிதரின் வீட்டுக்கே சென்றிருக்கிறாள்.

அவளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதற்காக பக்தி சிரத்தை மிக்க மூதாட்டி பரபரப்பு அடைந்துவிடவில்லை. ஸாங்கியம் ஏதும் விடாமலே பூஜையைத் தொடருமாறு புரோஹிதரிடம் கூறினாள். விதிவத்தாக வழிபாடு முடிந்தது.

நிறைந்த மனத்தோடு கிழவி வீடு திரும்பினாள். அவள் நம்பியது வீண் போகவில்லை. நம்பி இன்னம் பிறக்கவில்லை.

மாற்றுப் பெண்ணுக்குப் பிரஸாத மலர்களையும் தீர்த்தத்தையும் அளித்தாள். நிர்மல நாரணனின் நிர்மால்யம் நிறைகர்ப்பிணியின் முடியில் ஏறியது. அவனது திவ்ய தீர்த்தம் அவள் உதிரத்தில் குளிர்ந்தது.

மறுகணம், தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரன் பரணியில் நெளிந்து விட்டான், மிளிர்ந்து விட்டான்.

நித்ய தத்வம் ஸத்யநாராயணனாக நிலமிசை முகிழ்த்து விட்டது!

2 அவதாரப் பொன்விழாவரை அவதார ஸ்தலத்தை இடிபாடாகவே விட்டு வைத்திருந்த அவதாரர் பிற்பாடு அதனை யோகக் கோலப் பரமேசனின் ஆலயமாகப் புதுப்பித்திருக்கிறார்.

சொல்லி வைத்தாற் போல், குழந்தை பிறந்தவுடன் ஆலய மணிஓம் ஓம்என்று ஒலிக்கத் தொடங்கியது. ஓசையில் ஊரே நிறைந்தது.

அவ்வருஷத்துக்குப் பெயரே நிறைவுதான். ‘அக்ஷயவருஷம்.

ஆண்டு, மாதம், வாரம், நாள், கோள் யாவும் தெய்விக நலன்களைச் சுட்டிய அத்தினத்தை ஆங்கிலக் காலண்டர்படி சொன்னால்தானே பெரும்பாலான வாசகர்களுக்குப் புரியும்?

அது 1926ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி.

இத்தேதியில் பழைய புராணப்படியான சிறப்புக்களோடு இன்னொரு புது விசேஷமும் உள்ளது: மனித மனங்களுக்கு மூலமான அதிமானஸ மஹாசக்தியானது மண்ணுலகில் உற்பவித்து மக்களை மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஸம்பூர்ணயோகத் தவமிருந்த அரவிந்த முனிவர் 1926ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதிதான் தமது வெளிச் செயல்களை நீத்து, அறையோடு அறையாக ஏகாந்தத்தில் இருந்து விடுவதென முடிவு செய்தார். இவ்விதம் தாம் ஏகாந்தம் புகுந்ததற்கு அவர் சொன்ன காரணம், மனிதமனத்துக்கு மேம்பட்ட பேரின்ப உணர்வின் உருவான கண்ணன் மீண்டும் பௌதிகமாக உலகுக்கு வந்தாகிவிட்டது என்பதுதான். நம் சரித நாயகனின் அவதாரம் சரியாக இதற்கு முன்தினமே நிகழ்ந்திருப்பதால் பேரின்ப உணர்வுருவான அக்கண்ணன் யார் என்பது வெள்ளிடைமலையாக விளங்கவில்லையா?

***

செவ்வாய் தினம் விரியச் செவ்வானத்தே உதித்தான் ஆதவன், மாதவச் சேயைக் காண.

குங்குமச் சிவப்பாக இருந்தது குழந்தை. பிறப்பிலே இத்தனை சிவப்பாக இருந்தால் வயதேறும்போது சியாமள மேனியாகவே இருக்கும் எனப் பெண்டிர் அநுமானிக்கிறார்கள். சரீரச் சிவப்புக்கு மாறாகக் குழந்தையின் சின்னஞ் சிறு கர மலர்களும், பாதப் போதுகளும் பொன்னெனப் பொலிவது சற்றே விந்தையாக இருக்கிறது. இதைவிடப் பெரிய விந்தை, குட்டியான உள்ளங்கால்களில் திகழும் சங்கு சக்கரச் சின்னங்களும், நடு மார்பில் பளிச்சிடும் ஸ்ரீவத்ஸம் எனத்தக்க மச்சமும்தான்.1

2 இவற்றைக் கண்ணாரத் தரிசனம் செய்த அடியார் பலர் உள்ளனர். ஆனால் இவ்வடியார்கள் கண்ட அவ்வச்சமயங்களில் மட்டுமே இத்திவ்ய சின்னங்களை நம் சரிதநாதன் தோற்றுவித்தாரா, அல்லது இவை எப்போதுமே அவரது திருஉருவில் பதிந்துள்ளனவா என்று தீர்மானமாகச் சொல்லத் தெரியவில்லை.

பரம சுந்தரமான குழந்தை. அலையலையான அளகபாரம். வட்ட வதனம். விசால நயனம். அகன்றிருப்பதோடு, ‘காதளவோடும்என்ற கவி வாக்கும் பொருந்த நீளப் பாய்ந்த நீலக் கறு நயனம். கண்மணி வெட்டோ மின்னல் பொட்டுத்தான். மொட்டுச் சம்பகமன்ன நாசி. பட்டு அதரங்களில் இயல்பானதோர் இளம் சிவப்பு. திட்டமான முகவாய். கதுப்புக் கன்னத்தில் இடப்பக்கம் திருஷ்டிப் பொட்டுப்போல் ஒரு மறு. அதற்கே திருஷ்டி போடலாம் போல் அத்தனை அழகு! மேனி, கால், கை, அவற்றில் விரல்கள் யாவும் உத்தமமான விகிதத்தில் ஒன்றுக்கொன்று பொருந்தி அமைந்துள்ளன. மொத்தத்தில், சிற்ப சித்திரங்களில் காணும் திருத்தமான திரு உரு.

இன்றும் சுந்தரராஜனாகவே இருப்பவர் நம் சரித ஸ்வாமி. ஏனோ தெரியவில்லை, அநேகப் புகைப்படங்களில் காணும் இவரது தோற்றம் வேறு, நேர் தோற்றம் வேறு என்றே உள்ளன. நேரில் காணாதோருக்குப் பல புகைப்படங்களில் இவரது சிகையும், சிகப்பு உடையும் அருவருப்பாகவும், அச்சமூட்டுவதாகவுமே படலாம். ஆனால், நேரில் கண்டாலோ இவையே அவருக்குப் பரம பாந்தமாகப் பொருந்தி, நம்மையும் அவர்பால் பரம பந்துவாகப் பொருத்துவதை உணர்வோம். கீர்த்தியில் பெரியவராயினும் மூர்த்தியில் சிறியவரேயான அவர் அநேகப் புகைப்படங்களில் வாட்ட சாட்டமாகத் தென்படுகிறார். கோமள ஸ்வரூபமான இவ்வடிவு காமிராவில் பிடிபடுகையில் சில சமயம் கரடு தட்டி முரடாகி விடுகிறது. என்ன மாயமோ? முடி, உடை, மொத்த வடிவு, இவை மட்டுமன்றி அவரது மற்ற அவயவ ஸௌந்தர்யங்களும் பல படங்களில் உள்ளபடி பதியக் காணோம். முதல் தரிசனாநுபவத்தை எழுயுள்ள அன்பர்களில் பலர், புகைப்படங்களில் அவ்வளவாக இன்னாத தோற்றம் கொண்டவர் நேரில் இப்பேர்ப்பட்ட திவ்ய மோஹன ஸ்வரூபமாக இன்பும் அன்பும் பொலிய விளங்குகிறாரே என்று மனம் கரைந்து கூறியிருக்கிறார்கள். அவரைக் கண்ட மாத்திரத்தில் ஜெர்மன் ஓவிய மாது ஆடி வான் ஹார்டருக்குத் தோன்றிய எண்ணம், “ஆஹா, இவரை நாம் சித்திரம் தீட்டியே தீர வேண்டும்என்பதுதான்!

அவர் அற்புதம் செய்வதாலும், அறிவுரை பகர்வதாலும், அருள்களைப் பொழிவதாலும் பக்தரை மேம்படுத்துவது ஒரு புறம் இருக்கட்டும். கண்ட மாத்திரத்தில் அவரது அழகே எண்ணற்றவரின் நெஞ்சை உலுக்கி உருக்கிப் புனிதப்படுத்துகிறது. அது சாதாரண சரீர அழகல்லTruth is Beauty என்று கீட்ஸ் சொன்ன ஸத்தியம் என்கிற ஸௌந்தர்யம் இதுவே! “காருண்யமே லாவண்யம்என்று அம்பிகை பற்றி ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவாள் கூறுவார். அந்த திவ்யப் பிரேமையின் திரு உருவமே நம் ஸாயி.

மத்திம ஆக்ருதிக்கும் குறைந்த வடிவமும், தங்கக் கர அழகும், பொன்னம் கழலழகும் ஸாயியை திவ்ய மாயியாகவே காட்டும். பராசக்தி போலப் பர்த்தீச்வரியிடம் பிரேமையும்

லீலானந்தமும் அலை மோதுகின்றன. அவ்வப்போது அமைதி மயமாக நின்று விடுபவர், அல்லது அன்ன நடை பயில்பவர், பரபரப்பில்லாமலே விரைவுடன் விசையுடன் நடந்துவரும் சொகஸே சொகஸு! அதிலும் முன்புறத்தைவிட மெலிந்ததாகத் தோன்றும் நளின முதுகுப் புறம் காட்டி அவர் நடக்கும்போது பூங்கொடியாம் தேவி ஒல்கி ஒசிந்து செல்வதாகவே தோன்றும்.

அடாடா, சிலும்பும் முடி சூழ்ந்த, தளதளத்த முகத்தில் சுடர் தெறிக்கும் கண்ணழகும், நனி சிந்தும் கனி அதர நகை அழகும், முத்துப்பல் வரிசையழகும், நலுங்காத பட்டங்கி நிலம் புரள விசையுடன் குலுங்கி வரும் ராயஸ நடை அழகும் அநுபவித்தவர்களுக்கே புரியும்.

நகரத் தெரியாத சிசுப் பருவத்திலிருந்து எங்கோ நகர்ந்து விட்டோமே!

***

பாலன் பிறந்த அன்று கழலிலிருந்து குழல் வரையில் குழந்தை எழிலை அங்க அங்கமாகப் பாட அங்கொரு பெரியாழ்வார் இருக்கவில்லை.

ஆனாலும் விரித்த கண் விரித்தபடி பெண்டிர் குழந்தையை நோக்கியவண்ணம் இருக்கின்றனர். அங்க லக்ஷணங்களைக் காணும் ஆனந்தத்துக்கு மேலாக அவர்களது பார்வையில் அச்சம் கலந்ததோர் ஆச்சரியமே தென்படுகிறது!

ஆம், விசித்திர சித்தன் பிறக்கு முன்பே தானாகத் தம்பூரா இன்பூற இசைத்தது. மத்தளம் சத்தலயம் சாற்றியது எனில், பிறந்தவுடனும் விந்தை தொடருகிறது. குழந்தைக்குக் கீழே விரித்திருக்கும் துணிகள் விம்மி விம்மித் தணிகின்றன. அசைந்தாடும் அலைகளில் மிதக்கவிட்ட தொட்டிலில் போல், துணிகளின் அசைவில் குழந்தை அசைந்தாடுவது அழகாயிருந்தாலும் உடனிருந்தோருக்கு அச்சமாகவும் இருக்கிறது. ‘இதென்ன அற்புதம்!’ என்று வியப்பில் தொடங்கியவர்கள் பயப்படுகிறார்கள்.

படட்டும் படட்டும். நாம் காணக் கொடுத்து வைக்காத ஜயந்தியைக் கண்டுகொண்டவர்களைச் சிறிது அச்சப்படுமாறு விடுவோம். அதற்குள் வாழ்க்கை வரலாற்று இலக்கியத்துக்கான சில இலக்கணங்களைப் பூர்த்தி செய்வோம்.

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
என்று அடிகள் பாடியதில், நம் கதாநாதனின் ஸத்ய நாராயண நாமத்தையும் அவரது வடிவ வண்ணத்தையும் மட்டுமே கேட்டுக் கொண்டோம். இனி ஆரூரை, அவர் ஆர்ந்த ஊரை, பிறந்து, வளர்ந்து, பின்னரும் தங்கித் தலைநகராகக் கொண்ட ஊரை அறிந்து கொள்வோம். அதன் பின் குழந்தையின் குடிப் பெருமையைத் தெரிந்து கொள்ளலாம்.