அத்தியாயம் – 17
மல்லிகையில் மலர்ந்த மந்திரம்
“அர்ஜுனா! எனக்கும் உனக்கும் எத்தனையோ பிறவிகள் சென்றுவிட்டன. நான் அவை அனைத்தையும் அறிவேன். நீ அறியமாட்டாய்.”
– பகவத் கீதையில் கண்ணன் (4.5)
தன் பிள்ளையைப் பிடித்திருந்த சாமியை ஓட்டவே முடியாது என்று வெங்கப்ப ராஜுவுக்குத் தெரியவில்லை. பிள்ளை சாமியாக இருப்பதைவிட ஆசாமியாக ஆவதிலேயே தகப்பனாருக்கு ஆசை இருந்தது. ஏதாவது பூசை கீசை போட்டுத் துருக்கச் சாமியை அனுப்பிவைத்து விடலாம் என்று நினைத்துத்தான் பிள்ளையை வினவினார். அவன் சொன்ன உள்ளத் தூய்மை, இல்லத் தூய்மை, குருவார பூஜை எல்லாம் இவருக்குச் சரியான பரிகாரமாகத் தெரியவில்லை. துருக்கக் சாமியின் பூஜாமுறையை அறிய விரும்பினார் பூஜித்து சமாதானப்படுத்தி, ‘போய் வா’ என்று வழியனுப்பி வைப்பதற்குத்தான்! எனவே அந்த முஸ்லீம் மஹானின் பக்தர் எவரேனும், எங்கேனும் இருக்கிறாரா என்ற விசாரணையில் இறங்கினார்.
பெனுகொண்டாவில் ஸாயிபாபாவை வழிபடும் ஓர் அரசாங்க அதிகாரி இருப்பதாகத் தெரியவந்தது. வெங்கமருக்கு ஏக மகிழ்ச்சி. பிள்ளையை அவர் பரிசோதித்துப் பார்ப்பதற்காக அழைத்துச் சென்றார்.
அவர் ஒரே வார்த்தையில் “பைத்திய கேஸ்” என்று திருவாய் மலர்ந்துவிட்டார்.
ஆமாம், பைத்திய கேஸ்தான். ஆனால் யாருக்கு என்பதில்தான் நமக்குள் அபிப்பிராய பேதம்” என்று அவரிடம் நறுக்கெனச் சொன்னான் ஸத்யா. தொடர்ந்து, “பூசாரி ஒருவனுக்கு அவன் பூஜை போடும் தெய்வமே வேறு ரூபத்தில் வந்தால் நம் தெய்வந்தான் இப்படி வந்திருக்கிறது என்று தெரிந்துவிடுமா? நீ அப்படிப்பட்ட பூசாரிதான்” என்றான்.
பூசாரி மற்றோருக்கு விபூதி தருவது வழக்கம். பூசாரிக்கு இறைவன் தானே விபூதி தர வேண்டும்? ஸத்யா வெட்டவெளியில் கையைப் போட்டுப் பிடிப்பிடியாக விபூதியை ‘எடுத்து’ வீசினான்!
ஷீர்டி பாபா ‘உதி’ எனப்படும் விபூதிப் பிரஸாதம் கொடுத்தே வினை யாவும் தீர்த்துவைத்தார். ஷீர்டி மசூதியில் இந்தச் சாம்பலுக்கென்றே ஓயாமல் ‘துனி’ (அக்கினி)யில் கட்டையைப் போட்டுக் கொண்டிருப்பார். இன்றும் அந்த குண்டம் அகண்டமாக எரிந்து திருநீற்றைத் தந்து கொண்டிருக்கிறது. புது அவதாரத்தில் சிருஷ்டி லீலையை விஸ்தரித்து விரலசைப்பிலேயே விபூதி வர்ஷத்தை ஏற்படுத்துகிறார். இந்த லீலா விபூதிக்கு “சுக்லாம் பரதரம்” குட்டிக்கொண்டு விட்டான் ஸத்யா.
***
ஸ்வாமி சரிதத்தில் விபூதி விசேஷத்தைச் சொல்லாமல் விடக்கூடாது. அதன் மகிமை அலாதியானது. ஈச்வர சக்தியான ஐச்வர்யத்தை, வளமையை, நிறைவை அது ஊட்டுவதாலேயே ‘விபூதி பூதிரைச்வர்யம்’ எனப்படும் எட்டு மகா சக்தி ஸித்திகளின் பெயரைப் பெற்றிருக்கிறது. ஜாபால உபநிஷத்தில் அதன் பெருமை பரக்க ஓதப்படுகிறது. அனைத்தும் எரிந்து முடிவில் வெண்ணீறொன்றே மேற்கொண்டு எரிக்க வொண்ணாமல் எஞ்சி நிற்பதால், விபூதிதான் எக்காலும் நிற்கும் பரமாத்ம தத்வம் என்பார் ஸ்ரீ காஞ்சி முனிவர். உடல் எரிந்த பின்னும் நிற்கும் ஆத்மா அதுவே என்பதால்தான், உடலை எரிக்காமல் அடக்கம் செய்யும் கிறிஸ்துவர்களும்கூடச் ‘சாம்பல் புதன்கிழமை’ (Ash Wednesday) என்ற விரதம் அனுஷ்டிக்கும் போது, பாதிரியார் அம் மதத்தினரின் நெற்றியில் சாம்பலிட்டு, ‘தூசியான நீ அந்த தூசி நிலைக்கே திரும்பவேண்டும்’ (Dust thou art and to dust shalt thou return) என்று ஓதுகிறார்.
இப்படி இகம் அழிந்த பரதத்வமாக, தேஹம் அழிந்த திவ்ய தத்வமாக மட்டுமின்றி இகச் செல்வத்தையும், தேக ஆரோக்கியத்தையும்கூட இவ்விபூதியே விளைவிக்கிறது. திரு ஆனைக்கா திருமதிலை எழுப்பிய கூலியாட்களுக்குப் பரமேச்வரன் ஸித்தராக வந்து விபூதியைத்தான் கூலியாகக் கொடுத்தார். அதுவே அவர்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்றபின் இக உலகுக்கு உதவும் பொருட்செல்வமாக மாறிற்று. பொன்னனையாளுக்காகச் சொக்க நாதக் கடவுள் ஸித்தராக வந்தபோது விபூதியை அவளது தாமிரப் பாத்திரங்களில் தூவித்தான் அவற்றைப் பொன்னாக மாற்றினார். (விபூதி என்பது அஷ்ட மஹா ஸித்தியையும் குறிக்குமென்பது நினைவுறத்தக்கது.) உடல் நலன் தரும் மருத்துவ மகத்துவமும் அதற்கு இருப்பதால்தான் திருஞான சம்பந்தர் திருநீற்றுப் பதிகம் பாடி, விபூதி மகிமையாலேயே கூன் பாண்டியனின் வெப்பு நோயைத் தீர்த்திருக்கிறார். செந்திலாண்டவனது பத்ர விபூதியின் ஸர்வ ரோக நிவாரண மஹிமையை ஆதி சங்கரரே போற்றுகிறார்.
உடல் நலம், விபத்து நிராகரணம், ஆவிகளிடமிருந்து காப்பு, செல்வம், மேதை, ஞானம் ஆகியயாவற்றையும் உத்தேசித்து பாபா மிக அதிகமாக வழங்கி வரும் பிரஸாதம் விபூதிதான்.
பாலப் பருவத்தில் அவரே எப்போதும் விபூதி பூசிய திருக்கோலத்தில் தான் இருந்தார். பிற்பாடு அவர் வெளியே விபூதி பூசாவிடினும், தாமே விபூதி விக்ரஹமாகி விட்டதுபோல் திருநீற்று வர்ஷத்தைப் பொழிந்து வருகிறார். விஜயதசமி, சிவராத்ரி முதலிய தினங்களில் ஷீர்டி நாதருக்குக் குடம் குடமாக விபூதி சிருஷ்டித்து அபிஷேகித்திருக்கிறார். பக்தர்களை மரண சமயத்தில் காக்க முன்பெல்லாம் அவர் சரீர அதீத யாத்திரை செய்கையில் அவரது வாயிலிருந்து விபூதியே பெருகும். அதனால்தான் அவரை விபூதி வடிவம், திருநீற்றுத் திருஉரு, “விபூதி ஸுந்தர ஸாயிநாத்” என்பது. பரமம் பவித்ரம் பாபா விபூதிம்
பரமம் விசித்ரம் லீலா விபூதிம்
பரமார்த்த இஷ்டார்த்த மோக்ஷ ப்ரதாதம்
பாபா விபூதிம் இதம் ஆச்ரயாமி
என்று பாடி பஜனையை முடிக்கும்போது, ‘விபூதி’ என்ற சொல்லால் கண்ணன் கீதையின் விபூதி யோகத்தில் குறிப்பிட்ட ‘திவ்ய மஹிமை’ குறிக்கப்படுவது மட்டுமில்லை; ஸ்தூலமாக பாபா நேரேயும், தம் படங்களிலும், இதர தெய்வங்களின் படங்களிலும் ஸ்ருஷ்டித்து அருளும் திருநீறும், அவரை ஸ்மரித்து இட்டுக் கொள்ளப்படும் எந்தத் திருநீறும்கூடக் குறிக்கப்படுகிறது.
ஷீர்டி உதி இன்றும் தொடர்கிறது. ‘விபு’வான ஸர்வ வியாபியின் ‘ஊதியான ரட்சணமே இவ்விபூதி.
அசல் ஷீர்டி குண்டக் கரும் சாம்பல் ‘உதி’யையே நம் ஸ்வாமி அனந்தம் முறை வழங்கியுள்ளார். இது மட்டுமின்றி அவர் ஸ்ருஷ்டிக்கும் விபூதியில் எத்தனை வகை? எத்தனை நிறங்கள்? எத்தனை ருசிகள்? மருந்தின் காரம், கசப்பு, விருவிருப்பிலிருந்து அஸ்காவின் தீஞ்சுவை வரையிலும் பற்பல தினுசு. ரகம் மாறினும் திருநீற்றையே எல்லாவிதக் கோளாற்றுக்கும் திவ்யௌஷதமாக வழங்குவது ஷீர்டியவதாரத் தொடர்ச்சியே ஆகும்.
***
பெனுகொண்டாவில் வாழ்ந்த ஷீர்டி பக்தருக்கு இந்த அவதாரத் தொடரிழை புரியவில்லை. ஸத்யா திருநீறு படைத்து வீசியவுடன் அவர் “இது சில்லுண்டி சித்து. எங்கள் பாபா இதெல்லாம் செய்ய மாட்டார்” என்று கூறிவிட்டார்.
புட்டபர்த்தி திரும்பினர். அன்றும் ஒரு குருவாரம்தான். பெனுகொண்டா அதிகாரி, தங்கள் ஸாயி பாபா மறுபடி அவதரிக்கமாட்டார் என்று முடிவுகட்டிச் சொல்லிவிட்டதாக ஊராருக்குத் தெரிந்தது. அவர்கள் வற்புறுத்தியதன் பேரில் வெங்கம ராஜு பிள்ளையிடம், “நீதான் ஸாயிபாபா என்றால் அதற்கு ஏதாவது நிரூபணம் கொடேன்!” என்றார்.
“ஓ, தருகிறேன்!” என்றான் பிள்ளையாண்டான். “அந்த மல்லிகைப் பூக்களையெல்லாம் எடுத்து என் கையில் போடுங்கள்” என்று தாமரைப் பூவான கரங்களை நீட்டினான். குருவாரத்தில் இவன் பூஜை செய்யச் சொன்னான் என்றதால் யாரோ மல்லிகை மலர்கள் வாங்கிவந்து அவன் முன் வைத்திருந்தனர்.
மலர்கள் ஸத்யாவின் கைகளில் குவித்து வைக்கப்பட்டன. அவற்றை விசிறி எறிந்தான் ஸத்யா.
என்ன விந்தை! தரைமேல் விழுந்த பூக்கள் தெலுங்கு லிபியில் ‘ஸாயி பாபா’ என்று திருத்தமாக அமைந்திருந்தன!
இமை கொட்டும் நேரத்துக்குள், தெலுங்கு எழுத்துக்களின் ஏகப்பட்ட வளைவு நெளிவுகளோடு, கண்ணில் ஒத்திக்கொள்கிற மாதிரியான நேர்த்தியோடு, புஷ்பங்கள் ஸாயி நாமத்தை எழுதியிருப்பது கண்டு அத்தனை பேருக்கும் இதுநாள் வரை இல்லாத ஆழ்ந்த நம்பிக்கை உண்டாகிவிட்டது.
மல்லிகை கமகமக்கும் நாமம்தான் அது! வெள்ளை வெளேரென்று மனத்தை மல்லிகையாக்கும் திருப்பெயர் அல்லவா? சுப்ர மார்க்கத்தில் சேர்க்கும் ‘சுப்ர பிராமண’ரின் பெயராயிற்றே!
“ஸாயி பாபா, ஸாயி பாபா” என்று எல்லோரும் தங்கள் ஸத்யாவை அழைக்குமாறு செய்தது இந்த மல்லிகை லீலை. ஷீர்டி பாபாவைப் பர்த்தி பாபாவுடன் இணைக்கும் சரமாகவும் இந்த மல்லிகையே உள்ளது’ அந்தாதி’ முறைப்படி! ஒன்றின் முடிவு (அந்தம்) இன்னொன்றின் தொடக்கமாக (ஆதி) இருப்பதுதானே அந்தாதி? மல்லிகை மலரோடுதான் ஷீர்டி பாபா தம் வாழ்வை முடித்துக் கொண்டார். அவர் மஹாஸமாதி அடைந்த தினத்தன்று விடியற்காலை தமது பரம பக்தரான தாஸ் கணுவின் முன் திடுமெனத் தோன்றினார். “மசூதி இடிந்து விட்டது. நான் அதிலிருந்து வெளியேறுகிறேன். அதைச் சொல்லவே வந்தேன். சீக்கிரம் அங்குபோய் என் ஆசையை நிறைவேற்று. என்ன ஆசை என்றால், என் தபாரியில் (ஸமாதியில்) மல்லிகைப் பூக்களைக் கொண்டு கொட்டு” என்றார்.
ஷீர்டி ஸாயி மல்லிகை மணத்தில் மறைந்தார். இன்று அந்தமே ஆதியாகப் புட்டபர்த்தியில் மல்லிகை மணத்தோடு ஸாயி நாமம் மக்கள் கண்டங்களில் பிறந்துவிட்டது.
இப்படியாக ஷீர்டிக் கிழவனார் பர்த்தியிலே பிரவேசிக்க, ஈச்வரம்மா தனது பல்லாண்டுக் காலக் கேள்விக்கு பால ஸத்யத்திற்குப் பாலன்னம் போட்ட தாத்தா, பாதக் குறடொலிக்க வந்து கண்மணியின் கண்நோய் தீர்த்த தாத்தா யார் என்ற கேள்விக்கு விடை கண்டாள்.
***
ஷீர்டி பாபாவுக்கும், பர்த்தியில் பிறந்த பாலனுக்குமுள்ள ஒற்றுமைகளை, தொடர்புகளை இங்கே கண்டோம். ஒற்றுமை, தொடர்பு என்பதெல்லாமும் போதாது, இரண்டு முற்றிலும் ஒன்றே என்பது எண்ணற்ற அடியார் அநுபவம். ஒன்றே என்றுதான் நம் சரித நாதரும் சொல்கிறார். இதனால்தான் ஸாயி பாபா என்றே நாமம் தரித்திருக்கிறார்.
ஆயினும் ஷீர்டி பக்தரில் ஒரு பகுதியினர் இவரை அவ்வாறு ஒப்பவில்லை உத்தமர்களான, சான்றோர்களான ஷீர்டி பக்தர்களில் சிலரும்கூட. இவர்கள் ஒப்பாததற்குக் கூறும் ஒரு முக்கியமான காரணம், இவரைப் போல் ஷீர்டி பாபா பொருட்களைச் ஸ்ருஷ்டித்து (அல்லது, இவர்களில் சிலர் எண்ணப்படி, ஏற்கெனவே உள்ள பொருட்களைத் தம்மிடம் கடத்துவித்து புது சிருஷ்டி போலக் காட்டி) ஏராளமானவருக்கு வழங்கவில்லை என்பதேயாகும். ‘ஸித்திகள் என்று தோன்றக்கூடிய இயற்கைக்கு அதீதமான லீலைகளை ஷீர்டியார் புரிந்ததுண்டு தான். எங்கோ நெருப்பிலே விழுந்தவரை ஷீர்டியிலிருந்து கொண்டே காப்பது, தமது உடலைவிட்டு வெளியேறி ஆபத்திலுள்ள அடியாரின் இடுக்கண் நீக்கி வருவது, பாதத்திலிருந்தே கங்கையைப் பொழிவது போன்ற அற்புதங்களை அவர் பரியத்தான் செய்தார். ஆனால் இவை பெருத்த இடரிலிருந்து பக்தரைக் காக்கும் பேரருளில் பிறந்தவை; அல்லது தெய்விக சக்தியை முட்டமுட்ட எடுத்துக் காட்டவே செய்யப்பட்டவை. ஒரு சிறிய வட்டத்துக்கே இந்த அற்புதங்களைக் காட்டினார். மாறாக, பர்த்தி பாபா எப்போது பார்த்தாலும் சர்வசகஜமாக ஏராளமானவருக்கு அத்புதங்களைச் செய்துகாட்டுகிறார். இது வெறுமே தம் சக்தியைத் தம்பட்டம் அடித்துக் கொள்வது போலத்தான் இருக்கிறது. மஹாபுருஷர்கள் ஆத்மிகத்துக்கு முதற்படியாகவே மட்டும் இலைமறைவு காய்மறைவாகக் காட்டுகிற அதிமானுட ஆற்றலை, சாதாரணச் சித்து விளையாட்டுக்காரர்களும் மந்திரவாதிகளும்தான் பொத்தைப் பூசணிக் காயாகக் காட்டி மக்களைப் பிரமிக்கவைத்துப் பெயர் தட்டிக் கொள்வார்கள். பர்த்திக்காரர் இதைத்தான் செய்கிறார். அடக்கமும் அமரிக்கையும் உள்ளோடிய ஆற்றல் சமுத்திரமாக இருந்த ஷீர்டி பாபா, இப்படிப் படாடோபப் பிரகடனம் பண்ணிக் காட்டவே மாட்டார்’ என்கிறார்கள்.
இருக்கட்டும். இவர்களை இப்போதைக்கு விட்டுவிட்டு வேறு ஆஸ்திகர்களிடம் செல்வோம். இவர்கள் ஸத்யஸாயி, ஷீர்டி ஸாயி இருவரையுமே ஏற்காதவர்கள். காரணம், இயற்கைக்கு மீறிய சக்தியைக் காட்டுவதே சரியல்ல என்ற கருத்தே.
அதிலும் புட்டபர்த்தி பாபா என்ற மாத்திரத்தில், ‘ஷாக்’ முடி, பளபளா பட்டங்கி இவற்றை நினைத்து, ‘ஷாக்’ அடைவார்கள். ‘கரம்’ மைசூர் போண்டாவிலிருந்து பலவகை வஸ்துக்களை அவர் கர அசைப்பில் ‘வரவழைத்து’த் தருவதே அவரது முக்கியமான செயலாக இவர்களிடை பரவியுள்ளது. “பரமஹம்ஸர், ரமணர், காஞ்சிப் பெரியவர் போன்றோர் இப்படி வஸ்துக்களை உண்டாக்கி (‘மெடீரியலைஸ்’ செய்து) தந்த தில்லையே, இது ஏதோ இந்திர ஜாலமாக அல்லவா இருக்கிறது! ஆத்மிகத்தோடு சேர்ந்ததாகக் காணவில்லையே” என எண்ணுகிறார்கள்.
ஷீர்டி பாபா அதிகமாக ‘மெடீரியலைஸ்’ செய்யாவிடினும், வேறுவிதங்களில் ‘சமத்காரம்’ எனப்படும் ‘மிராகிள்’கள் பலவற்றைச் செய்தவர் தாமே? இப்பேர்பட்ட பௌதிக அதீதமான அற்புதங்கள் செய்த ஸ்ரீ ராகவேந்திரர், சேஷாத்திரி ஸ்வாமி, ஷீர்டி பாபா போன்ற எல்லோரையுமே ‘ஸித்த புருஷர்’ என்ற வரிசையில் வைத்து, “இவர்களும் அற்புத சக்தியால் தன்னலம் பேணிக் கொள்ளாமல், பரநலமே புரிந்து தெய்வநினைவூட்டியவர்கள் என்ற அளவில் பெரியோர்தாம். ஆயினும் இப்படிக்கூட லோக இயற்கையை மீறிக் காட்டாமலே, தங்களது அநுபவமயமான வாழ்வின் உதாரணத்தாலும், அதன் சூக்ஷ்ம சக்தியாலும் பிறரை மேம்படுத்துவதுதான் சிலாக்கியமானது” என்பார்கள். இரு பாபாக்களையும் ஒப்பாத இவர்களுக்குப் பிறகு விடை சொல்லலாம். ஆயினும் இங்கே இவர்களைக் குறிப்பிடக் காரணம் உண்டு.
ஷீர்டியாரை மட்டும் ஏற்று, பர்த்தியாரை ஏற்காதவர்கள் அற்புத ஆற்றலைக் காட்டுவதற்குள்ளேயே உயர்வு – தாழ்வுப் பாகுபாடு செய்கிறார்கள். “ஷீர்டி பாபா பக்தரின் தரமறிந்து, அத்யாவசியம் ஏற்பட்டாலே அற்புதம் செய்தார். பர்த்திக் காரரோ நினைத்தபோதெல்லாம் விபூதி, பதக்கம், ஃபோட்டோ என்று ‘வரவழைத்து’ வெகுஜன (மாஸ் – ஸ்கேல்) வினியோகம் செய்வது தரக்குறைவாக உள்ளது” என்கிறார்கள். இவர்கள் ‘மிராகிள்’ செய்வதிலேயே உயர்வு – தாழ்வு சொல்கின்றனர் எனில், மேலேகண்ட ஆஸ்திகர்கள் ‘மிராகிள்’ முழுவதுமே தாழ்வானது தான் என்கிறார்கள். அவர்களுக்கு இவர்கள் என்ன பதில் சொல்கிறார்கள்? “எங்கள் ஷீர்டி பாபாவும் ஆத்மிக உச்சியிலிருந்த ஞானபூரணர்தாம். ஆனாலும் ஞானியரது அநுபவ வாழ்வின் அதிநுட்ப சக்தியைக் கிரகிக்க சாமான்யருக்குத் திறன் போதாது என்பதாலேயே அவர்களுக்கு ஒரு ‘கன்ஸெஷனா’கவும், தமது மஹாத் தியாகமாகவும் அதிமானுடச் செயல்களையும் சிலர் பொருட்டுப் புரிந்தார். அதுவே மற்றோரிடம் பரவிற்று. மாற்ற முடியா இயற்கை நியதி எனத் தோன்றுவதை மாற்றிவிடும் அற்புதத்தைப் பார்க்கையிலேயே சாமானியருக்கு, ‘எல்லாவற்றுக்கும் மேம்பட்ட ஒரு மஹாசக்தி இருக்கத்தான் செய்கிறது’ என்ற நம்பிக்கையும், அதனிடம் ஈடுபாடும் உண்டாகின்றன. இவ்வாறு இறைநினைவை ஊட்டவே ஷீர்டி பாபா அற்புதம் காட்டினார்” என்கிறார்கள்.
இவர்கள் மற்றோருக்குச் சொல்லும் சமாதானமே இவர்களுக்கு நாம் சொல்லும் சமாதானமும் ஆகிறது. மற்ற ஞானிகளை விட ஷீர்டிபாபா சில “கன்ஸெஷன்” தந்தார், தியாகம் புரிந்தார். அந்த பாபாவே காலத்தின் தேவையை ஒட்டி இன்று புட்டபர்த்தி சரீரத்திலிருந்து கொண்டு இன்னும் அதிக கன்ஸெஷன், இன்னும் பெரிய தியாகம் செய்கிறார் என்று ஏன் கொள்ளக்கூடாது? ‘மெடீரியலைஸேஷனு’க்காக இன்றி ஆத்ம ‘ரியலைஸேஷனு’க்காக இவரை அடைந்து, இவரது அநாயாஸ அருளால் ஞான வைராக்யாதிகளைப் படிப்படியாகப் பிரத்தியட்சத்தில் பெற்று வரும் எண்ணற்ற சாதகர், “நம் ஸ்வாமி ஏன் சிருஷ்டியும் கிருஷ்டியும் கணக்கின்றி செய்து அவப்பெயர் வாங்கிக் கட்டிக் கொள்கிறார்?” என்று எண்ணினாலும் எண்ணுவர். ஆனால் இவர்கள் ஞான பூரணராகவே பார்த்தும் கேட்டும் அனுபவித்தும் வரும் பர்த்தி பாயா கருணாபூரணராகவும் இருக்கிறார். அக்கருணை இமயத்திலிருந்து பெருகும் தியாக கங்கையின் வேகத்தை இந்த ஞான சாதகர்கள் தடுக்க முடியுமா என்ன?
கருணையாலேயே, தியாக சீலத்தாலேயே பத்தொன்பதாம் நூற்றாண்டுப் பிற்பகுதியிலும், இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும் ஷீர்டியில் சிறிய வட்டத்தில் அற்புதம் செய்தார். அதுவே பெரிய வட்டத்தில் பரவியது. அவர்கள் நம்பிக்கை மிகுந்த பழந்தலைமுறையினராதலால் சிறிய வட்டம் கண்டு சொன்னதை மனமார ஏற்று, அற்புதத்தின் மூலம் இறை நினைவில் ஈர்க்கப்பட்டனர்.
இன்றோ காலம் மாறிவிட்டது. இது அவநம்பிக்கை சகாப்தம். ஒரு சிலருக்குக் காட்டிக்கொடுப்பதால் பிறரை நம்ப வைக்க முடியாது. எனவே ஷீர்டித் தியாகத்தை விஸ்தரிக்க வேண்டியதாயிற்று. வெகுஜன ரீதியில், ‘மாஸ் ஸ்கேலி’ல், அற்புதம் காட்ட வேண்டியதாயிற்று. தியாகம் உயர உயர, மெடீரியலைஸேஷனும் ஃபோட்டோ வரை, போண்டா வரை இறங்க வேண்டியதாயிற்று. இவரது ‘ஷாக்’ முடி, பளபளா பட்டங்கி இவைகூட வெகுஜன ஈர்ப்புக்கான தியாகமாகவே இருக்கலாம்.
இப்படியும் ஈர்க்கப்படாத அசல் நாஸ்திகர்களைப் பற்றிப் பேச்சேயில்லை. இதேபோல் வேதாந்திகள், ஆசாரசீலர்கள் என்ற முறையில் இவற்றால் ஈர்ப்புக்குப் பதில் அருவருப்பே கொள்ளும் ஆஸ்திகர் பற்றியும் கவலையில்லை. ஏனெனில் அவர்கள் எப்படியும் ஸன்மார்க்கத்தில் இருப்பதால், பாபா ரூபத்தை வழிபடாவிடினும், நற்கதி பெற்றுவிடுவார்கள். இரண்டுங் கெட்டானான பல கோடியரை ஈர்ப்பது ‘மிராகிள்’ தான்.
ஈர்ப்பு எதனிடம்? தெய்வத்திடம் தான். ஈர்க்கப்பட்டவர்கள் பாபாவைத் தெய்வம் என்று கொண்டு, அந்த தெய்வத்திடமே பக்தி செலுத்துகிறார்கள். அந்த மஹாசக்தி தம்மை எப்போதும் கண்காணிக்கிறது என்ற கருத்தில் கொஞ்சமேனும் தங்களது தவறுகளைத் திருத்திக்கொள்கிறார்கள்.
இவ்விஷயமாக நூலாசிரியர் பேசுவதைவிட ஸநாதன தர்மத்தில் ஊறிய பண்டிதோத்தமரான ஸ்ரீ அக்னிஹோத்ரம் ராமாநுஜ தாதாசாரியர் அவர்களைப் பேசவிடுவது பரம சிலாக்கியம். அவர் சொல்கிறார்:
“ஸாயி பாபாவின் பேர் தமிழ்நாட்டில் பரவ ஆரம்பித்து நல்ல ஸநாதனிகள் வீட்டுப் பத்தினிகள்கூட பாபா டாலர் போட்டுக் கொள்ள ஆரம்பித்தபோது எனக்கே ஆத்திரமாகத்தான் வந்தது. சிவப்பிரகாசானந்த கிரி என்று ஒரு பெரிய யோகி, மஹாஞானி கும்பகோணத்தில் இருந்தார். அவரிடம் நான் ஸித்திகனை ஆட்சேபித்துப் பேசியபோது அவர், ‘ஜனங்களுக்கு பக்தி வரவேண்டும், ஞானம் வரவேண்டும் என்று வெறுமனே சொல்லிப் புண்ணியமில்லை. இதற்கெல்லாம் அடிப்படையாக அவர்களுக்கு பகவானிடம் ஒரு பிடிப்பை உண்டாக்கித் தரவேண்டும். தங்களை பௌதிகமாகவே நினைத்து, லௌகிகக் கஷ்டங்களுடனேயே அவதிப்படும் பொது ஜனங்களிடம் பிரம்ம ஞானத்தையும் மோக்ஷத்தையும் கொடுக்கிற பகவானைப் பற்றிப் பேசினால் துளிக்கூட எடுபடாது. இவனிடமும் அந்த பகவானுக்கு அன்பு இருக்கிறது. இவனுடைய இகலோக சந்தோஷ வாழ்க்கையையும் அவர் தரமுடியும், இவனது ஆபத்தை அவர் தீர்க்கமுடியும் என்றால் தான் முதலில் இவனுக்குத் தெய்வத்திடம் பிடிமானமே உண்டாகும். அதிலிருந்துதான் படிப்படியாக உயர்ந்து, கடைசியில் லௌகிக இச்சை போகிற நிலை வரவேண்டும். ஆக, ஆரம்பம், இவன் இருக்கிற நிலைக்கே பகவான் வந்து இவனுக்கு உதவுவார் என்று காட்டுவதுதான். இதனால்தான் ஒரு ஜீவனுக்கு அவரிடம் அன்பே உண்டாகமுடியும். அதோடு அவர் மஹாசக்திமான் என்று காட்டவேண்டும். அப்போது தான் பயம் உண்டாகும். அன்போடு பயமும் வேண்டும். பயம் உண்டானால்தான் பாபம் செய்தால் அவர் தண்டிப்பார் என்கிற எண்ணத்தில் யோக்கியமாக வாழ முயற்சி செய்வான். ஜனங்களைப் பக்தியில் திருப்புகிற சக்தி குறைந்துவிட்ட இந்தக் காலத்தில் (யோகியர் கணங்களான) நாங்கள் யாவரும் மீண்டும் பக்தி உண்டாக்க வேண்டுமென்றேதான் இந்த ஸாயி பாபா என்ற ஒன்றைத் திரட்டி அனுப்பிவைத்திருக்கிறோம். நீ அதையே என்னிடம் குறை சொல்கிறாயே!’ என்றார். எனக்கும் தெளிவு பிறந்தது.
“ஸத்ய ஸாயி பாபா செய்கிற ‘மிராகிள்’கள் பய பக்தியையே உண்டாக்குகின்றன. இதிலே தெய்விகம் இல்லை என்று சொல்வது சரியேயில்லை. ஒருத்தன் ஹோட்டலுக்குப் போய் போண்டா சாப்பிடுகிறான். பசி தீருகிறது. ஆனால் அது இதோடு முடிந்து போகிறது. அதுவே பாபா கையசைப்பிலே போண்டா வரவழைத்துத்தந்தால், அது இவனுடைய பசியைப் போக்குவதோடு நிற்கவில்லை. ‘இயற்கைக்கு மீறிய ஒரு சக்தி இருக்கிறது. அதற்கு நம் அற்ப லௌகிகத்தில் கூட அக்கறையிருந்து, நமக்கும் சாப்பாடு போடுகிறது’ என்று அன்பு எண்ணம் இவனுக்கு ஏற்பட்டு, அந்த சக்தியிடம் இவன் பக்தி வைக்கத் தொடங்குகிறான். ஆஸ்பத்திரியில் ஒருவன் வியாதியை குணமாக்கிக் கொண்டால் அது பௌதிகமாகவே முடிந்து போகிறது. பாபா ‘மிராகிள்’ மூலம் ஸ்வஸ்தப்படுத்தும்போதோ அது அவனது மனத்தையும் தொட்டு, தெய்வ நினைப்பை ஊட்டிவிடுகிறது. அவர் எதை ‘மெடீரியலைஸ்’ செய்து கொடுத்தாலும் அது வெறும் கடைப் பண்டமாக நில்லாமல், தெய்வத்தோடு நம்மைத் தொடர்புறுத்தி விடுகிறது.
“காலஞ்சென்ற ஸ்ரீ கே.எம். முன்ஷியும் இதைத்தான் என்னிடம் சொன்னார். அவர், “எல்லா மக்களையும் ஞான உச்சிக்குக் கொண்டுபோவது சாத்யமில்லை. ஆனால் இப்போதுள்ள ஒழுக்கக் குறைவு நீங்க வேண்டுமானால் எல்லோருக்கும் தெய்வத்திடம் ஓரளவாவது பயபக்தி இருக்குமாறு பண்ண வேண்டும். இதற்கு அற்புத ஆற்றல் காட்டுவதைவிட வழியில்லை. பாபா இங்கே வரும்போது கூடுகிற ஜன சமுத்திரத்தைப் பார்த்தால் நாஸ்திகமும், நவநாகரிகமும், எதற்கும் கட்டுப்படாத சுயேச்சைப் போக்கும் மலிந்துவிட்ட பம்பாய்தானா இது என்று எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது. கூட்டத்துக்குக் காரணம் மிராகிள்தான். மிராகிள் மூலம் எல்லோரையும் கூட்டியபின் அவர் என்ன செய்கிறார்? அத்தனை லக்ஷம் ஜனங்களையும் பரவசமாக பஜனை செய்ய வைக்கிறார். ‘எப்படியெப்படியோ’ இருந்தவர்கள் இந்த பஜனைகளில் பரவசமாகக் கலந்து கொள்வதைப் பார்த்து எனக்கு அதிசயமாகவே இருந்திருக்கிறது. கூட்டங்களில் அவர் செய்யும் ஸத் உபதேசங்களையும் நான் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். உயர்ந்த ஆத்ம தத்வங்களைத்தான் சொல்கிறார். ‘பவன்ஸ் ஜர்னலி’ல்கூட அவற்றைப் போடுகிறேன். உங்களைப் போன்ற ஸநாதன மதோபதேசகர் எவரும் ஒப்பும் தர்மங்களைத்தான் சொல்கிறார். ஆனால் முதலிலேயே பஜனை, ஞானோபதேசம் என்றால் இத்தனை லட்சம் மக்கள் கூடுவார்களா?” என்றார்.
“இன்றைய லோக ரீதியில், மிராகிள்களைப் பழிக்கவே கூடாது; அதுதான் ஆஸ்திக அபிவிருத்திக்கு அத்யாவசியம் என்று கருதுகிறேன். இன்று என்ன, வேத காலத்தில் கூட…”
அந்த வேத சமாசாரம் பற்றி ஸ்ரீ தாதாசாரியரின் குரலை நூலின் பிற்பகுதியில் ஓர் அத்யாயத்தில் கேட்கலாம்.
‘மிராகிள்’ மூலம் ஈர்க்கப்பட்டவர்களைப் பிறகு பாபா எப்படி அவரவர் பக்குவத்தைப் பொறுத்து பக்தி, யோக, ஞான, கர்ம (சேவா) மார்க்கங்களில் செலுத்துகிறார் என்பது அடியாருக்குத் தெரிந்ததே. வெறும் சித்துக்காரர்கள் அற்புதத்தைக் காட்டித் தங்களைச் சுற்றிக் கூட்டம் போட்டுத் தெய்வத்திடமிருந்து மக்களைப் பிரித்துத் தமக்கு விளம்பரம் தேடிக் கொள்வதோடு நிற்பரே அன்றி, இவ்விதம் அத்யாத்ம வழிகாட்டி, அதில் அங்குலத்துக்கு அங்குலம் உடனிருந்து அழைத்துப் போக மாட்டார்கள். அத்புதமே ஆத்மிகம் என்று மயங்கச் செய்து இவர்கள் அத்யாத்ம சாதனைக்கே உலைவைத்து விடுவார்கள். பாபாவுக்கோ வெறும் ‘வித்தை’க்காகத் தம்மைச் சுற்றி மக்கள் கூட்டம் போடுவதும், விளம்பரம் செய்வதும் அடியோடு பிடிக்காத விஷயம். தம்மைத் தெய்வமாகச் சொல்லிக்கொள்ளும் அதே சமயத்தில் தமது ஸ்தூல உருவில் அவர்கள் மிகையான ஈடுபாடு கொள்ளாமல் அருவமான தெய்வ தத்வத்திலேயே தோய வேண்டும் என்றும் வற்புறுத்துவார்.
இவரது நாமத்தையே மந்திரமாக, இவரது ரூபத்தையே இஷ்ட தேவதையாகக் கொண்டவர்களை இவர் தடுப்பதில்லை. ஆனால், ஸாயி நாமத்தைத்தான் ஜபிக்கவேண்டும் என்பதில்லை. ஸாயி ரூபத்தைத்தான் வழிபடவேண்டும் என்பதில்லை. ‘எந்த நாமத்தை, ரூபத்தை வழிபட்டாலும் உய்வு உண்டு. ஒரு வழிபாடும் இல்லாத ஆத்ம ஞான மார்க்கத்தில் செல்வதே எல்லாவற்றுக்கும் முடிவானது’ என்று ஆணி அடித்தாற்போல் பன்முறை கூறியிருக்கிறார். எனவே இவர் அற்புதத்தைக் காட்டி மக்களை ஆத்மிகத்திலிருந்து பறித்துத் தம்மிடம் இழுத்துக் கொள்கிறார் என்றால் அது அடியோடு தவறாகும்.
மக்களை தெய்வத்திடமிருந்து பிரித்துத் தம்மிடம் ஈர்த்துக் கொள்கிற அற்ப சித்தர்களைப்போல் இவர் பக்தரிடம் ஏதேனும் பணம், காசு வசூலிக்கிறாரா? இல்லை, தமக்கு விளம்பரம் கொடுக்கச் சொல்கிறாரா? அல்லது, அவர்களது தப்பு தண்டாக்களைத் தட்டிக் கேட்காமல் தாஜா செய்துகொண்டிருக்கிறாரா? பக்தியில் இவரை நெருங்க நெருங்கத்தான் இவர் ஆத்மிகத்தில், அதன் ஆதாரமான நன்னெறிகளில் ஸாதகரைச் செலுத்துவதில் எவ்வளவு கண்டிப்பானவர் என்பது தெரியும். தம்மை நெருங்குபவர்களின் சிறிய ஒழுக்கக் குறைவையும் கண்டிப்பார், தண்டிப்பார். ‘வறுத்தெடுத்துவிடுவார்’ என்றே முன்னாள் துணை வேந்தரான ஸ்ரீ வி.கே. கோகக் இதை வருணிப்பது வழக்கம்.
முதலில் தவறு செய்யும் பேதையரிடமும் இளக்கம், இரக்கம் கொண்டு அற்புதம் காட்டி, ஆபத்துக்களைத் தீர்த்து ஸுக ஸௌக்கியங்கள் தந்து அன்னையினும் அன்போடு ஆதரிப்பார். ஆயினும் அவர்கள் இதோடு நின்று ஆத்மிகத்தில், நன்னெறியில் மனப்பூர்வமாக ஈடுபடாவிடில் மறக்கருணை தொடங்கிவிடுவார். முதலில் எவ்வளவோ விட்டுப்பிடிப்பார். அப்படியும் திருந்தாவிடில் இரக்கம் இறுக்கமாகிவிடும். அந்த நிலையில் அத்யந்த பக்தர்கள் என எண்ணப்படுபவரையும் நொடியில் உதறி விடுவார் உதறி! வெறுமே தம் பிரதாபத்துக்காகவே கூட்டம் சேர்த்துக் கொள்ளும் எந்தச் சித்து விளையாட்டுக்காரரும், இவர் ஒரு சொடுக்கிலே சில கோடீசுவரர்களை, ராஜாக்களைக்கூடத் தம்மிடமிருந்து தள்ளியதுபோல் செய்ய முடியவே முடியாது.நம் காவியநாதர் அற்புதம் செய்வது ஆத்மிக வழியில் சேர்க்க உதவும் அரிச்சுவடியாகத்தான். ளைவிப்பார். நாம் நம் அன்புக்குரியவர்களிடம் நமக்கு இயல்பாக, எளிதாகக் கைவரும் பரிசுகளை வழங்குகிறோமல்லவா? இதற்கு விசேஷமாக என்ன நோக்கம் கற்பிக்க முடியும்? அன்பு சுரக்கும்போது அதன் வெளி அடையாளமாக ஏதாவது அளிக்கத் தோன்றுகிறது என்பதற்கு அதிகமாக வேறு என்ன ‘விளக்கம்’ சொல்வது? அற்புதத்தையே இயல்பாக ஆயாசமின்றி ஆற்றும் ஆற்றல் படைத்தவர் நம் வரலாற்றுப் பெருமான். எனவே எப்போதும் எவர்பாலும் சுரந்து கொண்டிருக்கும் அவரது அன்பு சிலரிடம், சில சந்தர்ப்பங்களில் அடர்ந்து பொங்குகையில் பரிசுகளை சிருஷ்டித்து வழங்கி விடுகிறார். நாம் வாங்கி வழங்குகிறோம், அவர் தாமே ஸ்ருஷ்டித்து வழங்குகிறார் என்பதில்தான் வேறுபாடே தவிர. இதற்குக் காரணம் ஒன்றேதான்: அதாவது காரணமில்லாத அன்பு. இதைப் புத்தியால் தோண்டித் துருவி விவாதிப்பதில் பொருளே இல்லை. மூளையின் எல்லைக்கு அப்பாற்பட்ட அன்பில் ஊறிப் பரிசுகளை வழங்கும் போது பாபா ஃபோட்டோ, போண்டா உள்பட எதையும் படைத்து அளிக்கிறார். இதை சில்லறைச் சித்து என்பது புனிதமான ஒன்றுக்கு அபசாரம் இழைப்பதேயாகும். அடியாரின் பெருத்த இடர்ப்பாட்டில் வேண்டுமானால் அற்புத சக்தியையும் காட்டலாமேயன்றி, எடுத்ததற்கெல்லாம் காட்டுவது முறையல்ல என்பவர்கள் அன்பின் வழிமுறை அலாதியானது என்றறியாதவரே!