அத்தியாயம் – 30
பக்தவத்ஸலன்
அன்றே என்றன் ஆவியும்
உடலும் உடைமை எல்லாமும்,
குன்றேயனையாய்! என்னை ஆட்
கொண்டபோதே கொண்டிலையோ?
இன்றோர் இடையூ(று) எனக்குண்டோ?
எண்தோன் முக்கண் எம்மானே!
நன்றே செய்வாய் பிழை செய்வாய்
நானோ இதற்கு நாயகமே?
– திருவாசகம்
பாபாவை முதலில் சென்றடைந்தபோது பாலபட்டாபிச் செட்டியாருக்கு அவரிடம் நம்பிக்கை இருக்கவில்லை.
அப்போது பாபாவுக்கு வயது சுமார் இருபது. பட்டாபிக்கு முப்பத்தேழு. ஆனாலும் பாலிய விவாகமாதலால் சுமார் இருபதாண்டு குழந்தையில்லாமல், இனி பிறக்கவும் போவதில்லையோ என்று நினைக்கும் நிலையில் இருந்தார். உடுமலைப்பேட்டையில் நல்ல செல்வந்தர். வெல்ல வியாபாரம். குலம் விளங்க மதலை வேண்டாமா என்ற நியாயமான தாபம். தேசம் நெடுகிலும் ஒரு க்ஷேத்திரம் மீதமின்றிச் சென்று பிரார்த்தனை செய்தார்.
அவர் வடமதுரையருகே தயாள்பாகில் இருக்கும்போது கரூரிலுள்ள மைத்துனரிடமிருந்து பாபாவைப் பற்றிக் கடிதம் வந்தது. வேண்டாவெறுப்பாக ஊர் திரும்பி, கரூரிலிருந்து சென்ற நாற்பதுக்கு மேற்பட்டவர்களுடன் புட்டபர்த்தியைச் சென்று சேர்ந்தார்.
மற்ற ஒவ்வொருவரும் அளித்த பூமாலைகளை ஏற்ற பாபா. இவரிடம் மட்டும் ஏற்கவில்லை. “வரவேண்டாம் என்றுதான் நினைத்தாய். ஏதோ வந்திருக்கிறாய்!” என்றார்.
‘அட, உள்மனத்திலிருப்பதைச் சொல்கிறாரே! ஏதோ கொஞ்சம் சரக்கு உள்ள சாமியார் தான் போலிருக்கிறது’ என்றெண்ணினார் பாலப்பட்டாபி.
மாலை பெறுவதில் இவரை மட்டும் ஒதுக்கிவைத்த பாபா, அன்று மாலை மற்றோரை ஒதுக்கிவிட்டு இவரை மட்டும் சித்ராவதி தீரத்துக்கு அழைத்துச் சென்றார்.
தமக்கே உரிய ஸம்ஸ்கிருத மயமான தெலுங்கில், தமக்கே உரிய ‘ஜெட்’ வேகத்தில் பாலபட்டாபியின் விஷயங்களை எல்லாம் சொல்லி அவரைத் திணறடித்தார். அவரைத் தன்னோடு கட்டி அணைத்து, “உன்னைக் கைவிடவே மாட்டேன்!” என்று வாக்குறுதி தந்து வலக்கை பற்றினார்.
பக்தனுக்கும் பகவானுக்கும் நடக்கும் பாணிக்கிரகணம்!
அடுத்து மாங்கல்ய தாரணம்! ஆம், பாபாவின் அங்கை அசைப்பில் ஒரு ரக்ஷை மஞ்சள் கயிற்றுடன் வந்தது. அதை பாலபட்டாபியின் கழுத்தில் கட்டிவிட்டார்!
பட்டாபியின் பூர்வகர்ம விசேஷம்தான்! நம்பிக்கை இன்றிப் போனவரை நம்பி கைகொடுத்து அலாக்காக ஆட்கொண்டு விட்டார்!
பாலபட்டாபிக்குத் திடுமென அத்யாத்ம விஷயங்களில் ஈடுபாடு உண்டாகலாயிற்று. ‘தான் யார்’ என்றறிவதில் ஒரு சிறிய முனைப்பு பிறந்துவிட்டது. பரம ஞானியைக் ‘கல்யாணம்’ செய்துகொண்ட விசேஷம்தான்!
சம்ஸார பந்தம், ஆசாபாச அலை மோதல், அஹங்கார மமகாரங்களின் ஆர்ப்பாட்டம், வியாபாரம், செல்வம், ஸந்ததி ஆசை இத்யாதி சிந்தனைகள் அடியோடு போகவில்லைதான். ஆனால் இப்போராட்டத்தின் இடையிடையே பகவத் நினைவு பொன்னாக இழையோடத் தொடங்கியது. பக்தன் என்ற தான் யார் என்ற ஞான விசாரமும் சற்று இதழ் விரித்தது.
வெளியே பார்த்தால் வேடிக்கைப்பிள்ளை போலவும், விளையாட்டுச் சித்தர் போலவுமே இருந்துகொண்டு, பக்தரின் உள்ளே பக்திப் பித்தை, ஞான தாகத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தார் பாபா.
புட்டபர்த்தியில் ஒருமாத காலம் பாபானந்தத்தில் திளைத்துத் திரும்பிய பால பட்டாபி இப்போது அவரது பரம பக்தராகிவிட்டார்.
இதன் பிறகு நினைத்த போதெல்லாம் மனைவியும் தாமுமாகப் பர்த்திக்கு ஓடலானார். பாபாவே உத்தரவு தந்தாலன்றிக் கிளம்பாமல் அங்கேயே தங்கலானார். அவர் உத்தரவிட்டாலுங்கூடக் கேட்காமலும் தங்க ஆரம்பித்தார். பிறகு அவர் வார்த்தையைத் தட்டியதால் அவதிகள் பட்டு, புத்தி தெளிந்திருக்கிறார். இப்படி எத்தனை எத்தனையோ அநுபவங்கள்.
ஒருநாள் இவரிடம் பாபா, “வெல்ல வியாபாரமா? பாவம், நானிருக்கிறேன்” என்றார்.
உடுமலைப்பேட்டைக்கு இவர் திரும்பிய பிறகுதான் அந்த வார்த்தைகளின் உட்பொருள் தெரிந்தது. இவர் வியாபாரத்தைக் கவனிக்காமல் பஜனை, பர்த்திவாசம் என்றிருந்ததால் கடையில் பலவிதமான கோளாறுகள் நடந்து ஏக நஷ்டம்!
கர்மத்தின் கதியை அடியோடு மாற்றாமலே, கூடக் கூடக் கருணையின்பமும் தரும் பாபா. தொழில் நஷ்டத்தில் பால பட்டாபியின் மனம் நையவும், நொய்யவும் செய்தார்; ஆனாலும் அது அடியோடு முறிந்து விழாமல் முட்டுக் கொடுத்தும் வந்தார்.
இவ்வருளுக்கு ஒரு ஸ்தூலச் சின்னமாக கோதண்டராம விக்ரஹம் ஒன்றைச் சித்ராவதிக் கரையில் ஸ்ருஷ்டித்து பால பட்டாபிக்கு வழங்கினார். தசராவுக்குப் பின் வந்த சரத்கால பௌர்ணமி தினம். பைரவி ராகத்தில் “ராமா கோதண்டராமா” என்ற தியாகராஜ கிருதியை அழகாகப் பாடிக்கொண்டே பாபா ஆற்று மணலிலிருந்து ஐயன் பதுமையை எடுத்து அன்பருக்கு வழங்கினார். கற்பனைக் கண்ணால் காணும்போதே இனிக்கிறது!
அக் கோதண்டராம பிம்பத்தைப் பிற்பாடு ஒரு சமயம் உடுமலைப்பேட்டையிலுள்ள பாலபட்டாபிராமரின் இல்லத்தில் ஸாயிராமரே பிரதிஷ்டை செய்தார். அவ்வீட்டில் தாம் உண்ட இடத்தின் மீது அவர் வலக்கையை அசைக்க நவரத்னங்கள் உதிர்ந்தன. அவை தரைக்குள்ளே மறைந்தும் விட்டன. சரியாக அவ்விடத்தின் மீதே ராம விக்ரஹத்தை ஸ்தாபிதம் செய்தார். (இப்பிரதிமையில் ஸ்ரீ ராமனின் முக மண்டலம் பாபாவின் சாயலாக விளங்குவதாக இந்நூலாசிரியருக்குத் தோன்றியது. இந்த பிம்பம் உலோகமா, தந்தமா, பளிங்கா, சலவைக்கல்லா என்று சொல்லத் தெரியாத ஏதோ ஒன்றால் உருவாகியிருப்பது ஒரு விசேஷம். லக்ஷார்ச்சனை செய்யும் காலத்தில் அது சிவப்பாக மாறி விடுவதாகச் சொல்கிறார்கள்.)
ஸ்வாமி உடுமலை விஜயத்தின் போது இந்த பிம்பத்தைப் பிரதிஷ்டை செய்தது மட்டுமில்லை. இனி வரவிருக்கும் பற்பல இடுக்கண்களுக்கு எதிர்முகம் கொடுக்கப் பக்கபலம் இருக்கிறது என்ற உறுதியை பாலபட்டாபிக்கு மேலும் வலுவாக்க வேண்டுமென எண்ணினாரோ என்னவோ? அவரது தம்பி ஸ்ரீ விச்வநாதன் செட்டியாரின் இல்லத்துக்கு விஜயம் செய்தபோது ஒரு தேங்காயைத் தம் கைவைத்த மாத்திரத்தில் இரு பாதியாக உடைத்து, அதற்குள் நவக்ரஹங்களையும் சிருஷ்டித்து வைத்து, மறுபடி மூடினார். “பிரித்துப் பார்க்காமல் வீட்டில் கொண்டு வையுங்கள்” என்று பாலபட்டாபி தம்பதியரிடம் வழங்கினார். அவ்விதமே அவர்கள் அதைக் கைக்குட்டையால் கட்டி இரும்புப் பெட்டியில் வைத்தனர். இடுக்கண்களில் மிகப் பெரியது அவரவர் மனத்தின் ஆட்டம் தான்! ஒருநாள் பாலபட்டாபி அந்த நவக்ரஹங்களைப் பார்க்க எண்ணி, மனைவியிடம் தேங்காயைக் கொண்டு வருமாறு சொன்னார். ஹா! தேங்காய் மட்டுமே இருந்தது. உள்ளே இருந்த நவக்ரஹங்கள் மாயமே மறைந்திருந்தன. “அடடா, ஏதோ பெரிய நவக்ரஹக் கோளாற்றிலிருந்து நம்மைக் காக்கத்தானே ஸ்வாமி மெனக்கெட்டு இந்த அருட் பிரஸாதம் வழங்கினார்? அவர் வார்த்தையை மீறிப் பிரித்துப் பார்த்துக் கோட்டை விட்டோமே!” என்று பாலபட்டாபியின் நெஞ்சு படாத பாடு பட்டது.
புட்டபர்த்திக்கு ஓடினார்
அப்போதுதான் பாபாவும் கரூர், உடுமலை, திருச்சி பயணம் முடித்துப் பழைய மந்திரத்துக்குத் திரும்பியிருந்தார். சுற்றிலும் பக்தர்களை உட்காரவைத்துக்கொண்டு,
கரூருக்குப் போயி காலுபெட்டி கதலி ஓச்சினானு
என்று கீர்த்தனை உருவிலே தம் பிரயாண விவரங்களைப் பாடிக்கொண்டிருந்தார். ஆசுகவி பாபா!
(கரூர், உடுமலை முதலான பகுதிகளின் வைசியர்கள் பாபாவிடம் தீவிரமாக ஈடுபட்டு அவருக்கு அற்புத வரவேற்புகள் மேளதாளத்தோடு, ஆனைச் சவாரியோடு நடத்திய காலம் அது. கண்ணனைப் பற்றி பாரதியார். “பிறந்தது மறக்குலத்தில்; அவன் பேதமறவளர்ந்ததும் இடைக்குலத்தில்; சிறந்தது பார்ப்பனருள்ளே” என்பதையெல்லாம் ஏற்கனவே மெய்யாக்கியிருந்த பாபா, இப்போது கவிஞன் வாக்கிலே விட்டுப்போயிருந்த “சில செட்டி மக்களோடு மிக்கப் பழக்கமுண்டு” என்ற வாசகத்தையும் நிரூபித்து வந்தார்.)
ஆசுவாசம் உற்றார் பட்டாபி, பாபாவின் தரிசன மாத்திரத்தில்!
எத்தனை பிழை செய்தாலும் பொறுத்தருளும் கருணாமூர்த்தி இதன்பின் சித்ராவதி மணலிலிருந்து மீண்டும் அதே நவக்ரஹ மூர்த்திகளை எடுத்துப் பட்டாபிக்கு வழங்கினார். இத் தம்பதியருக்குத் தனியாகக் ‘கோரிக்கை’ கொடுத்தபோது, “நான் தேங்காயைப் பிரித்து பார்க்காமல் பந்தோபஸ்தாக வைக்கச் சொன்னேன். அப்படியும் நீ பிரித்துப் பார்த்தாய். இனியாவது என் சொல்படி நட. யாவும் உங்கள் நன்மைக்குத்தான் சொல்கிறேன்” என்று தாயார் குழந்தைக்குக் கூறுவது போன்ற கனிவோடு மொழிந்தார்.
அந்நாட்களில் பக்தர்கள் விடைபெறுமுன் பாபாவுக்குத் தேங்காய் உடைப்பார்கள். இவர்கள் அவ்விதம் உடைப்பதற்காக வைத்திருந்த தேங்காயை, முன்பு செய்தாற் போலவே ஸ்பரிச மாத்திரத்தில் இரண்டாக்கி, அதில் ஒன்பது சிறு பிரதிமைகளையும் வைத்து மூடிக்கொடுத்தார் பாபா. பிழை செய்தால் தண்டிப்பார். பிறகு பிழையுணர்ந்து வேண்டினால், சேர்த்து வைத்து அன்பைக் கொட்டிப் ‘பரிகாரம்’ செய்து விடுவார். அந்தத் தண்டனையுங்கூட அன்புப் பரிசுதான் கட்டுப்பாடு வேண்டும் என்பதை உணர்த்தும் கண்டிப்புத்தானே அது?
“ஜாக்கிரதையாக உன் வீட்டின் மூன்றாவது வாசலுக்கு உட்புறம் ஓர் அரை அடிக் குழி தோண்டி, அதில் இந்தத் தேங்காயை வைத்துத் தரையைப் பூசி மூடிவிடு. இது பிரதிஷ்டையாகி ஆறுமாதம் வீட்டைப் பூட்டிவிட்டு எங்கும் போகாதே” என்றார்.
பாலபட்டாபி ஒரு முறை அடிப்பட்டதால் இம்முறை பாபா சொற்படியே செய்தார்.
இன்று அவர் வீட்டு வாயிலில் நிலைக்கு உட்புறம், தரைக்குள் நவக்ரஹங்கள் பிரதிஷ்டையான இடத்தைக் காட்டி, “அந்த இடத்தைத் தாண்டி வெளியிலிருந்து எந்த விபத்தும் இந்த வீட்டுக்குள் நுழைய முடிவதில்லை என்பது எங்களுக்கு கண்கூடாகத் தெரிந்த சந்தர்ப்பங்கள் பல” என்கிறார்.
ஆனால் விபத்து என்பது விரோதியராலும், திருடராலும், ஆவிகளாலும், விஷ ஜந்துக்களாலும் மட்டும் ஏற்படுவதல்லவே! கர்மாவை ஓரளவுக்கே லேசாக்கும் பாபா இந்த விதங்களில் மட்டுமே விபத்தைத் தவிர்த்திருந்தார்! வெல்ல வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டமோ வேறுவிதத்தில் பெரும் விபத்தாக இருந்தது. அதைத் தொடர்ந்து இவரது மனம் உலைந்த உலைப்பு! இந்த உள் விபத்தைத் தடுக்க, இவரது மன வாயிலில் ஒரு விக்ன யந்திரமும் போடாமலே ஸ்வாமி விளையாடினார்!
“அடித்தாலும் நீயே, அணைத்தாலும் நீயே” என்று பர்த்திக்கே ஓடினார் பட்டாபி. மூன்று நாட்கள் சித்ராவதித் தண்ணீரையும், பஜனைப் பிரஸாதமான பப்பாளித் துண்டம் அல்லது பிடி பொரியை மட்டும் உண்டு உபவாஸமிருந்தார்.
அடித்த கை அணைக்க வந்தது!
பாபா இவரை அன்போடழைத்து, “பாவம், பங்காரு! ஊருக்குப் போகிறாயா?” என்று கேட்டுக் கையை அசைத்தார். முன்பு நவக்ரஹங்கள் தந்தார். இப்போது நவ அநுக்ரஹமூர்த்திப் பதக்கங்கள் கையசைப்பில் வந்தன! பாலஸாயிக் கோலத்திலிருந்து அன்றுள்ளது வரையிலுமான தமது ஒன்பது வித உருவங்களைத் தாங்கிய லாக்கெட்டுகளை பாலபட்டாபிக்கு வழங்கினார். நவ வித பக்தியில் முன்னேறி முன்னேறி, அவற்றின் இறுதியான ஆத்ம ஸமர்ப்பணத்தில் இவர் நிறைய வேண்டும் எனத் திருவுளக் குறிப்போ?
வியாபார நஷ்டம் பற்றி எதுவும் கேளாமல், இவராகவும் சொல்லவிடாமல், அனுப்பிவைத்துவிட்டார்! மாயாவி!
உடுமலை போனவரை மறுபடி பர்த்தி இழுத்தது.
இம்முறை சித்ராவதியில் ஏக வெள்ளம். புக்கபட்டணத்தின் அக்கரையில் விடப்பட்ட பாலபட்டாபி, ‘ஐயோ! இன்று குரு வாரமாயிற்றே! மணி மாலை ஆறு ஆகிவிட்டதே! இவ்வளவு தூரம் வந்தும் வெள்ளம் என்பதால் பர்த்தி போகாமல் இங்கே உட்கார்ந்திருக்கிறேனே!’ என்று குமுறிக் கொண்டிருந்தார்.
நேரம் போகப்போக அவருக்கு இருப்புக் கொள்ளவேயில்லை. புக்கப்பட்டணம் கர்ணத்தின் வீட்டில் சாமான்களைப் போட்டு விட்டு ஒரு பையும் துண்டும் மட்டும் எடுத்துக்கொண்டு கிளம்பியேவிட்டார், புட்டபர்த்தியை நோக்கி.
குருவாரத்தில் இவர் எப்போதும் உபவாஸம். இப்போதோ நேற்று புதன்கிழமை பகல் ஊரிலிருந்து புறப்பட்டதிலிருந்தே பட்டினி. அதையும் பொருட்படுத்தாமல் பல வழிகளைப் பிடித்து, நாலு மைல் நடந்து ஜானகம்பள்ளி அடைந்து, புட்டபர்த்திக்கு நேரெதிரான சித்ராவதி எதிர்க் கரைக்கு வந்துவிட்டார்.
அப்புறம்? முக்காலே மூணுவீசம் கிணறு தாண்டினாலும் பலன் என்ன?
கரை புரண்டோடும் சித்ராவதியைக் கடப்பது எப்படி? தன்னந்தனியே தவித்து நின்றார்.
மணி ஏழரை. முன்னிருட்டுக் காலம். சுழித்தோடும் வெள்ளத்தின் பயங்கர ஓலம். அதோடு நரிகளின் கர்ணகடோரமான ஊளை வேறு!
நதியைக் கடக்க முடியாது என்பது மட்டுமில்லை. மறுபடி புக்கபட்டணமும் போக முடியாது. ஏனெனில் இவர் வரும் போதே கொத்தசெறுவில் உயர்ந்து கொண்டு வந்த கடைவழியின் நீர் மட்டம் இப்போது ஆள் உயரத்துக்கு மேல் போயிருக்கும்! அதைக் கடந்து செல்ல முடியாது!
“ஸாயிராம், ஸாயிராம்!” என்று நெஞ்சு நைந்து சொல்லியபடி, விநாடி விநாடியாக ஏழே முக்கால், எட்டு, எட்டே கால், எட்டரை என்று மணியைப் பிடித்துத் தள்ளினார்.
நிலா உதித்தது. உலகின் அவலங்கள் எதனாலும் தொடப்படாமல் விண்ணிலிருந்து வெள்ளியை அள்ளிச் சொரிந்தது.
நீர்ப்பெருக்கு தங்கத் தகடாகத் தகதகத்தது.
பக்திப் பெருக்கு அதைவிட உந்திவந்தது; பிடரியைப் பிடித்துத் தள்ளியது.
வெள்ளத்திலாக்கும் இறங்கிவிட்டார் பாலபட்டாபி!
நெஞ்சளவுவரை நீர் மோதிற்று. உயிராசை விடுகிறதா? தள்ளாடித் தள்ளாடித் திரும்பினார்.
பாபா ஆசையும் விடவில்லை. மீண்டும் இறங்கினார். மறுபடி திரும்பினார்.
வியாபார நஷ்டத்தை எண்ணினார். ஊரில் தலைகாட்ட முடியாத நிலை நெருக்கி வருவதை நினைத்தார். ஆஹா, இதற்கு மரணமே பகவான் அருளும் பரிகாரமோ? அவரைக் காணச் செல்லும்போதே வெள்ளத்தில் இத்த உயிரை எடுத்துக் கொள்வாரானால் அப்படித்தான் நடக்கட்டுமே!
‘இம்முறை திரும்புவதில்லை’ என்ற அசாத்தியத் துணிச்சலுடன் ஆற்றை நோக்கி நடக்கலானார்.
“அப்பாயி, நாயனா!”
அமுதனின் குரலல்லவா? மெய்தானா? அப்பன் வந்து விட்டானா?
பட்டாபி திரும்பிப் பார்த்தார்.
இக்கரையில் தோளில் கம்பளி போட்டுக்கொண்டு தடியூன்றி ஒரு கிழவனார் நிற்கக் கண்டார். ‘ஸ்வாமி குரல் என்று நினைத்தது தம் பிரமை தான்!’
“அப்பாயி, நானும் புட்டபர்த்திக்குத்தான் போகிறேன். என் பின்னாலேயே வா. என்னை விட்டு ஒரு அடி நகர்ந்தாலும் வெள்ளத்துக்கு இரையாவாய். ஜாக்கிரதை!” என்றார் கிழவர். பாபாவின் குரலிலேயே பேசிய அவர் தம் கையிலிருந்த கோலைப் பட்டாபியிடம் நீட்டிக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளச் சொன்னார்.
திருநீலகண்ட நாயனாரும் அவரது மனைவியாரும் ஒரு கோலின் இரு புறங்களைப் பற்றிக்கொண்டு குளத்தில் இறங்கியதுபோல், மாயக் கிழவரும் பட்டாபியும் சித்ராவதி வெள்ளத்தில் இறங்கினர்.
“இடுப்பளவு நீரில் இறங்கியதுதான் எனக்குத் தெரியும். மறுகணம், நான் பூராவும் நனைந்து மறு கரையில் நிற்பதை உணர்ந்தேன். எப்படி ஆற்றைக் கடந்தேன் என்பதை நான் அறிந்து கொள்ளாவண்ணம் மாயம் செய்துவிட்டார். அவரும் மாயமே மறைந்து விட்டார். திரும்பித் திரும்பிப் பார்த்தேன். கண்ணெட்டும் வரை பெரியவரைக் காணோம்” என்று ரோமாஞ்சமுற்றுக் கூறுகிறார் பட்டாபி.
யமுனை நடுவே விலகி வழிவிடச் செய்ததாகக் கண்ணன் வஸுதேவருக்குக் காட்டினான். இங்கோ வழிவிட்டது கூடத் தெரியவில்லை! “கரை காட்டி ஆட்கொண்டாய்!” என்ற மாணிக்கவாசகத்தை ஸ்தூலமாகவே செய்து காட்டிவிட்டார்!
தண்ணீர் சொட்டச் சொட்ட, முட்ட முட்ட அநுபவித்த அருளின்பம் சொட்டச் சொட்ட, பாத மந்திரம் அடைத்தார் பால பட்டாபிச் செட்டியார்.
எட்டு மணிக்கு, “உடுமலைப்பேட்டை அப்பாயி ஒஸ்தாரு” என்று கூறியபடி பாபா ‘கூடுவிட்டதை’யும், எட்டரைக்குப் பின் திரும்பி வந்ததையும், வாயிற்புறம் பார்த்துக் கொண்டே அவர் தீபாராதனை செய்ததையும் அங்கிருந்த பக்தர்கள் சொல்ல, உடுமலைப்பேட்டை அப்பாயி உருகிவிட்டார் உருகி!
பாதத்தில் விழுந்த பட்டாபியின் தலையை அன்போடு கோதித் தூக்கி நிறுத்தினார் கோதிலாக் கோமகன்!
“சாப்பிட வேண்டாம்?” என்று தேன் சிந்தக் கேட்டார்.
“குருவார உபவாஸம் ஸ்வாமி! ஒன்றும் வேண்டாம்” என்றார் பட்டாபி, வயிறு காய்ந்து எரிந்துகொண்டிருந்தபோதிலும்.
பாபாவுக்கு இம்மாதிரி முரட்டு ஆசரணைகள் அடியோடு பிடிக்காதவை. “இனிய பகவானை இனிக்கவே உபாஸிக்க வேண்டும். இந்திரிய போஷணை கூடாது என்ற அளவில் விரத நியமாதிகள் அவசியம்தாம். ஆனால் தாங்கமுடியாத நிலையில் தம்மைத் தாமே வருத்திக் கொள்வது பேதைமைதான். இதனால் ஒன்றும் பிரேம பகவான் பிரீதி அடைவதில்லை!” என்பார்.
தம் நெஞ்சின்மீதே ஒரு காலிப் பாத்திரத்தை வைத்துக் கொண்டு விளிம்பில் விரலால் தடவினார். பாத்திரத்துள்ளிருந்து சுடச்சுட பூரிகள் எடுத்து அப்பாயியிடம் நீட்டினார்.
பூரிக்கவில்லை அப்பாயி.
குருவார உபவாஸமாச்சே!
பகவானுக்காக ஓர் ஆசரணையை அநுஷ்டிக்கிறோம். அப்புறம் அந்த பகவானே வந்து அந்த ஆசரணை வேண்டாம் என்றால் கூட விட மறுக்கிறோம்! ஆஹா, இந்த அஹங்காரந்தான் எத்தனை மாய ரூபங்களில் வந்து சூது செய்து விடுகிறது!
பல்லியம் இல்லாமல் வாங்கிக்க மாட்டியா?” என்று கேலி செய்து, பூரிக்குத் ‘தொட்டுக்’ கொள்ள வெங்காயம் போட்ட மசாலாவை வரவழைத்து, பட்டாபியின் வாயில் திணிக்காத குறையாக வழங்கினார் ஸ்வாமி. (குச பாவின் ஏகாதசி விரதத்துக்கு இதே போல் ஷீர்டி ‘பாபா பங்கம்’ உண்டாக்கியது நினைவிருக்கிறதல்லவா?)
பகவானின் கட்டளையைவிட ஒரு நியமமுண்டா எனப் பட்டாபிக்குத் தெளிவு பிறந்தது. உண்டார்.
பொருள் உணவு கொடுத்துண்ணச் செய்வித்தே பசியைப்
போக்கி அருள்புரிந்த என்றன் புண்ணிய நற்றுணையே!
என்று வள்ளலார் பாடியதைப் பர்த்தி வள்ளல் உண்மையாக்கினார்.
ஹோல்டாலை புக்கப்பட்டணத்திலேயே போட்டுவந்த பட்டாபிக்கு, அனைத்தையும் தம்முள் அடக்கியதால் “ஹோல்ட் ஆலா”க உள்ள ஸ்வாமி, தம் தலையணையையே எடுத்துப் போட்டுப் படுக்கச் சொன்னார். ‘கூட்டத்திலே இந்தக் கண்ணனைப் போல் அன்பு செய்பவர் வேறுளரோ?’ என்று கவி தெரியாமலா பாடினார்?
பிரயாணக் களைப்பு, பட்டினி இளைப்பு, அருங்காப்பின் பிரமிப்பு இவற்றால் திருண மாத்திரமாகியிருந்த பட்டாபி வயிறு நிறைந்து மனமும் நிறைந்து நிம்மதியாகத் தூங்கினார்.
காலை ஐந்து மணிக்குப் படால் என்ற முதுகில் விழுந்த அடியில்தான் விழித்தார். அத்தனை செல்லமாக அடிக்கக்கூடியவர் பாபா அன்றி யார்?
குழம்பி வந்த பட்டாபி தெளிந்துவிட்டார்.
***
ஆனால் இந்தத் தெளிவும் தாற்காலிகம்தான். வண்டிச் சக்கரத்துக்கு வெளிப்பட்டை அடிக்கும் போது மாற்றி மாற்றிக் காய்ச்சுவதும், நீர்விடுவதும் வழக்கம் அல்லவா? ஸம்ஸாரப் பாதையில் கர்மச் சக்கரம் சுற்றித் தீரவும் இப்படிக் கஷ்டத்தில் காய்ச்சுவதும், கருணை நீர் பாய்ச்சுவதும் மாறி மாறி வந்தன.
மாறி மாறி ஓடிய சகடம் ஒரு சமயம் தடம் புரண்டு முறிந்து விழும்போலவே ஆயிற்று.
வியாபாரம் நொறுங்கி விழுந்தது. வேறுவிதக் குடும்பத் தொல்லைகள் எல்லையைத் தொட்டுவிட்டன. இதற்கெல்லாம் பாபா பக்திதான் காரணம் என்று ஊராரின் பரிகாசம் வேறு!
‘என்ன செய்கிறோம், என்ன செய்யப் போகிறோம்?’ என்றே தெரியாத நிலையில், மனையாளைத் தன்னந்தனியாக விட்டுவிட்டு, சில நகைகளுடன் வீட்டிலிருந்து ஓடிவிட்டார் பட்டாபி!
பித்துப் பிடித்தவர் போல் கும்பகோணத்திலுள்ள தங்கை வீட்டை அடைந்தார். அங்கும் சிறிதுகூடப் பொருந்தவில்லை. சென்னை சென்றார்.
பர்மாவிலும், மலேயாவிலும் உள்ள தமது பழைய வாடிக்கைக்காரர்களின் நினைவு வந்தது. ஒருகால் அங்கே போய்க் காலூன்றினால் பிறகு மனைவியை அழைத்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்தார்.
தேசத்தைவிட்டே செல்லத் துணிந்துவிட்டார்.
அந்நிய தேசப் பயணத்துக்கான சாங்கியங்களை அவசர அவசரமாக முடித்துவிட்டு, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஸ்ரீ சூராசெட்டியார் வீட்டில் வந்து தங்கினார்.
மறுநாள் காலை கப்பலுக்கு டிக்கெட் எடுக்கச் சரியாக இருநூறு ரூபாயுடன் கஸ்டம்ஸ் ஹவுஸ் சென்றார்.
டிக்கட் வாங்க ஜேபியில் கைவிட்டபோது, ஹா, பாழும் கர்மா மறுபடி பழி வாங்கிவிட்டது!
பணத்தைக் காணோம்.
‘இதற்காக, முன்வைத்த காலைப் பின் வைப்பதில்லை. மறுபடி போய்ப் பணம் கொண்டுவரலாம்’ என்று பூந்தமல்லி ஹைரோடு ஜாகைக்குத் திரும்பினார்.
சூரா செட்டியார். “உங்களுக்குக் கடிதம் வந்திருக்கிறது” என்றதும் பட்டாபிக்குத் தூக்கிவாரிப் போட்டது. ‘தான் சென்னை வரப் போகிறோம், வந்தாலும் இன்ன இடத்தில் தங்கப் போகிறோம் என்பது தனக்கே முந்தா நாள் வரை தெரியாதபோது இந்த முகவரிக்கு எவர் எழுத முடியும்?’
கவர் கைக்கு வந்தது!
முகவரியின் எழுத்து! நிஜமா? ஸ்வாமியா எழுதியிருக்கிறார்? முத்தான எழுத்தில் முத்தனின் முத்து முறுவல் தெரிகிறதே!
உறையை உடைத்தார். எழுதியது ஸாக்ஷாத் ஸ்வாமிதான். இந்த நேரத்தில் இவர் இந்த வீட்டிலிருப்பார் என்று முன் கூட்டியே அறிந்து கடிதம் எழுத ஸ்வாமியை அன்றி யாரால் முடியும்?
மைக்குப் பதில் அமிருதத்தைத் தோய்த்து எழுதப்பட்ட அக்கடிதம் இன்றும் பட்டாபியிடம் பொக்கிஷமாக உள்ளது.
துள்ளி எழும் உள்ளத்தோடு கடிதத்தைப் படித்தார் பட்டாபி:
“ப்ரிய பக்துடைன பால பட்டாபிகு…
நா மாட வினு. இண்டிகி வெள்ளு. இண்டிகி வெள்ளு. இண்டிகி வெள்ளு. நா மாட வினு. நீ க்ஷேமமு கொறகு செப்பதானு. இண்டிகி வெள்ளு.
இட்லு
பாபாகாரு”
(பிரிய பக்தன் பால பட்டாபிக்கு…
என் வார்த்தையைக் கேள். வீட்டுக்குப் போ. வீட்டுக்கு போ. வீட்டுக்குப் போ. என் வார்த்தையைக் கேள். உன் க்ஷேமத்தைக் குறித்தே சொல்கிறேன். வீட்டுக்குப் போ.
இப்படிக்கு
பாபாகாரு)
மாலை மாலையாகக் கண்ணீரை வழிய விட்டுக் கொண்டு நின்றார் பட்டாபி. ‘ஸர்வலோக நாயகன் என் வாழ்க்கையை அனவரதமும் அணு அணுவும் கண்காணித்து, கருணை பாலித்து, நன்மையே கோரி உத்தரவிடுகிறான்!’
மலேயா, பர்மாவுக்கு ஓடுகிற எண்ணம் ஓடிற்று. கப்பலுக்கு டிக்கட் வாங்கவொட்டாமல் பணத்தைப் பறி கொடுக்க வைத்ததிலும் கருணை மனத்தின் மணமே இப்போது தெரிந்தது.
தன்னை இப்படிக் கிட்டியிருந்து கட்டிக் காக்கும் பிரபுவிடம் ஓட உள்ளம் விழைந்தது. சென்னையிலிருந்து நேரே பர்த்திக்குப் புறப்பட்டார்.
ஆஹா, இங்கேதான் அஹங்காரம் இன்னொரு மர்மச் சாயலில் தலை தூக்கிவிட்டது! “பாபாகாரு” சொன்னது. ஒரு முறைக்கு மும்முறையாகச் சொன்னது, “வீட்டுக்குப் போ”
என்று. அப்படியும் இவர் உடுமலை போகாமல் பர்த்திக்குப் போகிறார்!
பக்தியாம், நன்றியாம்! ஆக, அவர் சொன்னபடியே செய்யும் பரிபூரண சரணாகத நிலை இன்னம் வாய்க்கவில்லை.
அது இவருக்கு வாய்த்தாலொழிய அவரும் விடுவதாக இல்லை.
எனவே பர்த்திக்கு வந்து பழியாகக் கிடந்த பட்டாபியை ஏறெடுத்தும் பார்க்கவில்லை பாபா: நூற்றுக்கணக்கான மைல்களுக்குப்பால் உடனிருந்து காத்த தெய்வம், பக்கத்தில் வந்தபோது பாராமுகமாயிருந்தது! இருவேறு துருவங்களாகத் தோன்றும் பரிவும் வைராக்கியமும் அற்புதமாக சங்கமிக்கும் ஸ்தானமன்றோ பாபா?
உண்ணா நோன்பிருந்தால் அவரை இளக்கி விடலாமென்று என்ணினார் பட்டாபி. விளைவு: மூன்று முழு நாட்கள் வயிறு காய்ந்தது மட்டுமே! ஒரு வீம்பைத் தீர்க்க இன்னொரு வீம்பைச் செய்தால் பாபா ‘வழிக்கு’ வந்து விடுவாரா என்ன? பாபாவிடம் தமக்கு பக்தி, பாபாவுக்குத் தாம் நன்றி செலுத்தவேண்டும் என்பவற்றிலுள்ள அஹங்காரம்கூட இவருக்குப் போய், அவர் எப்படிவிட்டாரோ, அப்படி; அவர் எப்படிச் சொன்னாரோ அப்படி என்று பரிபூரண அடைக்கல மதியைப் பெறச் செய்வதில் பாபாவும் படு வீம்பாக இருந்தார். ‘வீட்டுக்குப் போகச் சொன்னால் அதை மீறி இங்கு ஏன் வரவேண்டுமாம்?’
மூன்றாம் நாளிரவு, நள்ளிரவு.
பாபாவுக்குக் கடிதம் எழுதி அதைத் தம் கைப்பைக்குள் போட்டுப் பையை அவரது அறைவாசலில் வைத்துவிட்டு பட்டாபி புறப்பட்டார். கடிதத்தில் என்ன எழுதினார்?
“பகவான் பாபா அவர்களுக்கு,
என் சகல விஷயங்களும் தங்களுக்குத் தெரியும். நான் ஓடோடி வந்தேன். மூன்று நாள் நிகழ்ச்சிகளால் நான் தங்களிடம் வைத்திருந்த உறுதியைக் கொஞ்சம்கூடக் கைவிடவில்லை. ஆனால் இந்த உலக வாழ்க்கை என்னை விரட்டி ஓட்டுகிறது. தங்கள் பாதங்களில் சேர்த்துக்கொள்ளுங்கள். இதுவே என் முடிவான தீர்மானம்.”
அன்று தேசத்தை விட்டோட எண்ணினார்; அதைத் தடுத்தார் பாபா. இன்று உலகத்தையே விட்டோட எண்ணி, ‘முடிவான தீர்மானம்’ பண்ணிவிட்டார் முடிவு செய்யும் அதிகாரம் இவர் கையில் இருப்பதுபோல்!
தற்கொலைக்குத் துணிந்துவிட்டார்! பாபாவின் பாராமுகம் ஒருபுறம் அறுத்தது. அவர் சொற்படி வீடு திரும்பினாலும், தாம் கிளம்பியபோது அங்கிருந்த அவலச் சூழ்நிலை இப்போது மட்டும் எப்படி மாறியிருக்கும் என்ற ஐயம் மறுபுறம் அறுத்தது. தீர்வு தற்கொலைதான் என்று தீர்மானித்துவிட்டார்.
சித்ராவதிக்குப் போகும் வழியில் சுண்ணாம்புக் காளவாய் அருகே உள்ள கிணறு. எல்லோரும் உதறித்தள்ளிய பட்டாபியை “வா, வா” என்று வாய் திறந்து அழைத்தது!
அதன் ஒட்டிலே வந்து நின்றார். இந்த ஜன்மத்தின் ஒட்டுக்கும் வந்தாயிற்று. இரு கைகளையும் கூப்பிக் கொண்டார். மற்ற விதங்களில் எத்தனை எத்தனை சலனமிருந்தாலும், இவரே தெய்வம் என்பதிலே சற்றும் சலிக்காமல் தாம் வணங்கும் தேவதேவனை நினைந்தார். நாத்தழும்பேற நவின்றுள்ள அவரது திவ்யநாமத்தை மும்முறை கூறினார்.
“ஓம் ஸ்ரீ ஸாயிராம், ஓம் ஸ்ரீ லாயிராம், ஓம் ஸ்ரீ ஸாயிராம்!”
எழும்பினார் ஓர் எழும்பல்! மறுபடி கால் பூமியில் பாவாது. கிணறு முடிந்த முடிவாக அடைக்கலம் தரப்போகிறது!
ஆஹா, இதென்ன! திடுமென, திண்ணெனப் பின்புறமாகக் கழுத்தை வளைக்கிறதே ஓர் இரும்புக் கரம்! சரசர சரசரவென்று தன்னை ராம சரமாகத் தள்ளிக் கொண்டே போகிறதோ அந்தப் புயல் வேகத்தில் பட்டாபிக்கு ஏதும் புரியவில்லை.
ஏதோ ஒரு கதவு திறக்கப்படுகிறது தடாலென்று உள்ளே தள்ளப்படுகிறார் பட்டாபி.
எழுந்து பார்க்கும்போதுதான் தெரிகிறது அது பாத மந்திரத்தில் ஸத்யஸாயீச்வரனின் அறை. அங்கே தம்மைக் கொண்டு வந்து தள்ளியது பிரபுவேதான்!
கிணற்றில் பிணமாக மிதக்க வேண்டியவனை க்ஷணத்தில் பறந்து வந்து காத்து, நெருக்கித் தள்ளிக் கொண்டுவந்த ஸர்வக்ஞன், ஸர்வசக்தன். இதற்கெல்லாம் மேலாக தயாஸாகரன். ‘நானா இத்தனையும் செய்தேன்?’ என்பது போல் கட்டிலில் சாவதானமாகப் படுத்துக்கொண்டிருந்தார். தரையில் உட்கார்ந்த பட்டாபி அவரது நெஞ்சுக்கு நேரே தம் கைகளைக் கட்டில் விளிம்பில் வைத்து அதிலே தலையைச் சாய்த்து அப்படியே உறங்கிவிட்டார்.
செல்லமான அடி வழக்கமான ஐந்து மணிக்குப் பட்டாபியின் முதுகில் விழ, விழித்துக் கொண்டார்.
பத்மபாதங்களைப் பற்றிக் கண்ணில் ஒற்றிக்கொண்டார்.
“ஏன் வீட்டுக்குப் போகாமல் இங்கு வந்தாய்?” என்று பாபா கேட்டார்.
“தங்களுக்கு தெரியாததா? ஊர் சூழ்நிலை…! என்னைத் தாங்கள் தான் காப்பாற்ற வேண்டும்” தேம்பியவாறு பாதங்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார் பட்டாபி.
ஸ்வாமி கலீரென்று சிரித்தார். விடியற்காலையில் விடிவு தரும் வடிவாக, மதுர மதுரமாகப் பாடலானார்:
“ஸ்ரீமந் நாராயணனே ராமனாக வந்து மனைவியை அரக்கனிடம் பறிகொடுக்கவில்லையா?”
“சக்ரவர்த்தி ஹரிச்சந்திரன் மயானத்தில் பிணம் சுடவில்லையா?…” இப்படியே போயிற்று பாடல்.
“யார் யார்நிலை எப்படி எப்படி இருக்கும் என்பதை ஸ்ரீ ஸாயியே அறிவார்!” என்று முடிந்தது.
***
பின்னாளில் சரணாகத லக்ஷணத்தில் மேன்மேலும் முன்னேறி ஞான பக்தராக நின்றார் ஸ்ரீ பால பட்டாபிச் செட்டியார். அதற்கு முன்னும் மேற்சொன்ன சம்பவத்துக்குப் பின்னும், கர்மச் சுழலும் கருணைப் புயலும் பலவாறாக அவரைப் பல்லாண்டுகள் ஆட்டித்தான் வைத்தன.
இத் தம்பதியருக்குப் பிள்ளை ஆசையே போன பின், இவரது மனையாளிடம் பாபா புத்தம் புது துளஸி ஹாரத்தை “வரவழைத்து” வீச, பத்தாம் மாதம் புத்திரி ஸாயிலீலா பிறந்தாள்.
வியாபாரத்தில் பல வழுக்கல் சறுக்கல்! வியாதிகள் வேறு!
சொல்லொணாக் கஷ்டங்களும், அவற்றுக்கு இணையிலாப் பரிகாரங்களும் மாறி மாறி வந்தன. மாபாரதமாக விரியும் இவற்றில் எதைச் சொல்ல, எதை விட?
ஒருமுறை பால பட்டாபி வர்த்தக வரி செலுத்தவில்லை என்பதாகக் கைதிக் கூண்டில் ஏற்றப்படவேண்டிய தருணத்தில், இவர் அதிகப்படியாகவே செலுத்தியிருப்பதாக வெளியாகி, இருநூற்றுச் சொச்சம் ரூபாய் ரீஃபண்ட் பெற்று, அதைக் கொண்டு பாபாவுக்கு லக்ஷார்ச்சனை செய்தாரே, அதைச் சொல்லவா? வெளியூர் ஒன்றில் பட்டாபியிடம் புது சிநேகிதம் கொண்டாடி, விடுதியில் இவருடன் ஒண்டிக் கொண்டவன் நள்ளிரவில் இவரைத் தீர்த்துக்கட்டி விட்டுப் பணத்தைப் பறிமுதல் செய்யவந்தபோது, கட்புலனாகாத ஸாயிசக்தியால் தூக்கி எறியப்பட்டுத் துத்தநாகத் தடுப்பில் மோதி விழுந்தானே. அச்சத்தத்தில் மற்றோர் விழித்தெழுந்து பட்டாபியைக் காக்க வந்தனரே, அதைச் சொல்லவா? ஒரு காலத்தில் மாதம் ரூ. 750 விற்பனை வரி செலுத்திய பட்டாபி நொடித்து விழுந்து, “பாபா பாபா என்று சொல்லிப் பாபர் ஆனான்” என்று ஊரார் சிரிக்க, கடனில் சரக்குப் பிடித்து வரச் சென்னை புறப்பட்ட பரிதாபத்தைச் சொல்லவா? கோடவுன் தெரு வாடிக்கைக்காரர் இவரை நம்பி ஆயிரம் ரூபாய்ச் சரக்குக்கூடத் தர மறுத்துப் பரிஹாஸம் செய்த பரிபவத்தைச் சொல்லவா? இதற்கெல்லாம் அற்புதப் பரிகாரமாக எதிர்க்கடைக்காரர் இவரை “முதலாளி” என்றழைத்து. ஏதோ ஆதி கால செய்ந்நன்றிக்காக, இப்போது 23000 ரூபாய்ச் சரக்கை இவரிடம் பரம மரியாதையுடன் கொடுத்ததைச் சொல்லவா? இதற்கும் மேலாக, இதைக் கவனித்த வாடிக்கைக்காரரும் இவரை வலிய அழைத்துத் தாமும் மூவாயிரம் ரூபாய்ச் சரக்கை வற்புறுத்தியளித்ததைச் சொல்லவா? ஸாயியின் சூக்ஷம விரல்கள் ஆட்டிய கயிறுகளில்தான் இத்தனை பொம்மலாட்டமும் நடந்தது!
பிரசாந்தி நிலயத்திலேயே குழந்தை ஸாயிலீலா மணிக்கணக்காக யமலோக நுழைவாயிலில் நின்று பாலப்பட்டாபி தம்பதியரைப் பதறடித்ததைச் சொல்லவா? கடைசியில் நம் ஸ்வாமி அருளில் அவள் தீக்கனாவிலிருந்து எழுந்தது போல் க்ஷணத்தில் குணமுற்றதைச் சொல்லவா?
ஸ்வாமியின் விருப்பமின்றியே பாலபட்டாபி குடும்பசகிதம் மாதக் கணக்கில் புட்டபர்த்தியில் வசிக்க, அத்தனை நாட்களும் ஐயன் இவரைக் கண்ணெடுத்தும் பாராமல் தவிக்கச் செய்ததைச் சொல்லவா? இதுவும் போதாதென, பட்டாபி தங்கியிருந்தது உட்பட அவ்வரிசையில் எல்லா ஜாகைகளையும் (பிரசாந்தி நிலயப் புத்தமைப்பை முன்னிட்டு) இடித்துவிட வேண்டுமெனக் கட்டளையிட்டுவிட்டு ஸ்வாமி பெங்களூருக்குச் சென்ற சோதனையைச் சொல்லவா? பாபா போட்ட கோட்டைத் தாண்டாத பிரசாந்தி நிலய ஊழியர்கள் அவ்வாறே இடிக்க வரும் அயனான சந்தர்ப்பத்தில், பாபா பெங்களூரிலிருந்து ஃபோன் செய்து இடிக்க வேண்டாம் என ஆக்ஞையிட்டதன் இனிமையைச் சொல்லவா? இப்படி அனந்தம்.
சரணாகத புத்தி இத்தனைக்கு நடுவிலே சிறுகச் சிறுக இத்தம்பதியருக்கு வளர்ந்து நிறைவுகண்டது. ‘அவர் நடத்துகிறபடி நடத்தட்டும்’ என்பது வெறும் பேச்சாயின்றி வாழ்வுத் தத்துவமாயிற்று!
“பைத்தியம் மாதிரி அங்குமிங்கும் திரியாதே. இருக்கிற இடத்திலேயே இரு” என்று பாபா இவருக்கு மீண்டும் மீண்டும் எழுதினார். இது உடலால் அலைகிற அலைச்சலை மட்டும் குறிப்பதல்ல. மனத்தை அலையவிடாமல் ஸ்திதபிரக்ஞனாக இருக்க உபதேசித்தார். அதனை இவரும் ஏற்கலானார்.
பாபா சொல்லும் பரமதத்வ விளக்கங்களைக் கட்டுக்கட்டாக நோட்டுகளில் எழுதி, அவற்றை அலசி, அலசி, தம்மால் முடிந்த மட்டும் நடைமுறைக்குக் கொண்டுவரலானார் பட்டாபி. நாள்தோறும் ஸாயிநாமத்தை மணிக்கணக்கில் ஜபித்தும் எழுதியும் சித்த சுத்தி பெறலானார்.
லௌகிக ரீதியில் பார்த்தால் இன்று இத்தம்பதியர் “பாபா பாபா” என்று கொண்டாட வேண்டியதில்லைதான். ஆனால் லௌகிகம் இப்போது இவர்களுக்குப் பெரும்பாலும் பொருட்டல்லவாகிவிட்டது. ஸாயிக்காகவே ஸாயி, இன்னொன்றுக்காக இல்லை என்ற பான்மை வேரூன்றிவிட்டது. அந்த ஸாயிகூட ஸ்தூல ஸாயி அல்ல! இவர்கள் இப்போது முந்தைய பறப்போடு பர்த்திக்கு ஓடுவதில்லை. எப்போதேனும் செல்கிறார்கள். பட்டாபியின் கழுத்தில் கைவளைத்துக் கொஞ்சிச் சீராட்டிய பாபாவும் இன்று அவரை விசேஷமாகக் கண்டு கொள்வதுகூட இல்லை. அதனால் இவர் தாபப்படுவதும் இல்லை!
ஆத்மாதான் பாபா என்ற பரமதத்வத்தை உணர்ந்து நிம்மதியாய், நிச்சிந்தையாய் வாழ்கிறார் பட்டாபி. லீலா நிமித்தம் அவர் செய்யும் பிரேமையைப் புளகித்துப் போற்றுகிறார்!
பக்குவமாவதற்கு விழையும் பக்தர்களின் உடன் இருந்து எக்காலமும் பாபா உத்தாரணம் தருகிறார் என்பதற்கு ஓர் உதாரணமாகவே இங்கு பால பட்டாபியவர்களது அனுபவங்களில் சிலவற்றை விரிவாகப் பார்த்தோம்.
“குச்சியால் குத்தித் தூண்டி விடுவதால் விளக்கைப் பிரகாசப்படுத்துவது போல், மேன்மேலும் வந்த கஷ்டங்களால் பாபா என்னைப் பொலிவிக்கவே செய்தார். முக்கியமாக அவர் செய்த உபதேசம், நான் உடலாலும் உள்ளத்தாலும் ஓடித் திரிந்துகொண்டேயிராமல், இருக்குமிடத்திலேயே ஆத்ம ஸ்வரூபமான அவரை அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதைத்தான்” என்கிறார் ஸ்ரீ பாலபட்டாபிச் செட்டியார்.
***
இதுபோல பாபாவின் அத்யந்த ரக்ஷணையை அனவரதமும் பெற்றுவரும் அடியார்கள் எண்ணிலர். அவர்களில் பலரை வெளி உலகம் அறிந்தேயிராது. இதனினும் வேடிக்கை, அவர்களில் சிலருக்கே பாபா தங்களை ரக்ஷித்து வருவது தெரியாமலும் இருக்கலாம்!
ஆரம்ப காலங்களில் பாபா தமது அருள் என நன்றாகத் தெரியும் விதத்தில் காப்புத் தந்து பக்தியை வலிவாக்குகிறார். பிறகு மட்டும் அவரது காப்பு நின்றுவிடுமா, என்ன? அல்லவே அல்ல. பக்தரைவிட்டு அவர் விலகி நிற்கவே மாட்டார். ஆனால் “காப்பு” என்பது உண்மையில் பக்தி ஞானக் கவசம்தானேயன்றி, வெளி விஷயங்கள் நமக்குச் சாதகமாக அமைவதல்ல. எனவே போகப்போக வெளி விஷயங்கள் கர்ம தர்மத்தை அநுஸரித்து நமக்கு பாதகமாகவும் இருக்கவிடுகிறார். ஆனால் இதனால் நம் உள்ளம் அவ்வளவாகப் பாதிக்கப்படாமல் பக்தி ஞானக் காப்பையே பெரிதாக மதித்துப் பூண்டிருக்கச் செய்கிறார்.அநேக பக்தர்கள் தங்கள் குடும்பப் பிரச்சனைகளில் பாபா இடைவிடாமல் ஈடுபட்டு நின்று நேரடியாகவோ, சூக்ஷ்மமாகவோ அற்புதத் தீர்வு தந்து வருவதை ஆண்டாண்டுக் காலமாக உணர்ந்து உருகி வருகிறோம். வறுமை, வியாதி, மனக் குமுறல்கள், பந்து மித்ரர்களின் மறைவு அல்லது மனோபேதம், விபத்து இம்மாதிரியான பல அம்சங்களில் அவரது அருட்காப்பு புரியும் அற்புதத்தை உணர்ந்து வருகிறோம். பஸ்ஸில் இடம் கிடைப்பதிலிருந்து பரமபதத்தில் இடம் பெறுவது வரை. பள்ளிக்கூட அட்மிஷனிலிருந்து பரலோக அட்மிஷன் வரை, இது சின்னஞ் சிறு விஷயம், இது பென்னம் பெரும் பிரச்சனை என்ற வித்தியாசமின்றி அவர் தீர்வு தருகிற அலுக்காத சலிக்காத அபரிமித காருண்யத்தைப் பற்றி ஸாகரமான கண்ணீர் மையாலேயே எழுதினாலும் போதாது. இதனால் எல்லாப் பிரச்னைகளையுமே அவர் தீர்த்து விடுகிறார் என்று அர்த்தமில்லை. தீர்க்காத போதுங்கூட அவர் உடனிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பதில் ஐயம் எழுவதில்லை. அவர் உடனிருக்கிறார் என்பதே தோல்வியிலும் ஒரு தெம்பை அளிக்கிறது. எக்காலமும் உள்ளும் புறமும் சுற்றிச் சூழ்ந்து பக்தக் கன்றுகளுக்குத் தாய்ப்பசுவாக வாத்ஸல்யம் பாராட்டுவதில் ஸாயிமாவுக்கு நிகர் ஸாயிமாதான்!