புட்டபர்த்தி – 34

அத்தியாயம் – 34

கடைத்தேறும் கடைப்பொழுது

ஜோத் மே ஜோத் மிலா ஜா
(
ஜோதியில் ஜோதியை முழுக்கிக் கொள்வாய்!)

மீரா

ருவர் மரணத்தை மனோரமணமாக ஏற்பதற்கும், அவர் மறைவால் சோகித்துத் துடிக்க வேண்டியவர் சாந்தத்தில் சமாதானமடைவதற்கும் பிரபல தொழிலதிபர் பூனம்சந்தின் பிரிவும், அப்போது ராணி எனத்தக்க அவரது மனைவியின் பாங்கும் இன்னோர் உதாரணம்.

சிவராத்ரிக் குளிரில் பல்லாயிரம் மக்கள் புட்டபர்த்தியில் திறந்த வெளியில் காலம் தள்ள வேண்டியுள்ளதே என்பதற்காகவே 1972ம் ஆண்டு பாபா அங்கு லிங்கோத்பவம் செய்யாமல் பெங்களூரை அடுத்த பண்டிப்பூர் வனத்தில் ஒரு சிலரோடு அமைதியாக சிவராத்ரி கொண்டாடினார். இதைக் கேள்வியுற்றதும் பூனம்சந்த், “இந்தக் காரணத்துக்காகவா புட்டபர்த்தியில் சிவராத்ரி நிற்கவேண்டும்? இருபதாயிரம் மக்கள் அமரக்கூடியபக்காமன்றம் எழுப்பிவிட்டால் போச்சு!” என்றார். சொன்னது மட்டுமல்ல. நிதிக் காணிக்கை அள்ளி அர்ப்பணித்தார். இது காரணமாக இன்று இந்தியாவிலேயே, ஒருகால் உலகிலேயேகூட இருக்கலாம், மிகப் பெரிய ஆடிட்டோரியம் பிரசாந்தி நிலயத்தில், நமது பூர்விக ஸமயக் கலையழகு முழுவதையும் சொரிந்துகொண்டு கம்பீரமாக எழும்பியிருக்கிறது.1

1973 நவராத்ரியின்போது கட்டிடத்தை ஒரு கட்டம் வரை முடித்துத் திறப்புவிழா செய்ய உத்தேசிக்கப்பட்டது.

இதற்குச் சிலகாலம் முன்பு பாபா பூனம்சந்திடம், “உங்கள் சொத்து, தொழில் நிர்வாகம் இவற்றை உறவினரிடம் பொறுப்புத் தந்துவிட்டு, நீங்கள் ஆத்யாத்மிக மார்க்கத்துக்குப் பூரணமாகத் திரும்பிவிடுங்கள்என்றார்.

கோடீச்வரரும், தமது ஸ்தாபனங்களைக் கண்ணெனப் பேணியவருமான அந்த உண்மை பக்தர் பாபா சொற்படித் தன் பதவிகள், பங்குகள் எல்லாவற்றையும் மற்றவர்களுக்குப் பிரித்துத் தந்து விட்டார். ஜெய்ப்பூரில் தம் இல்லத்திலேயே இருந்துகொண்டு இறைநினைவில் அதிகம் ஈடுபட்டார்.

நவராத்ரிக்கு முதல்நாள் அப்போது மைசூர் கவர்னராயிருந்த ஸ்ரீ மோஹன்லால் ஸுகாதியா பாபாவிடம், “பூனம்சந்தே இங்கு திறப்பு விழாவுக்கு வந்திருந்தால் ரொம்ப நன்றாயிருந்திருக்கும். அதனால் பரவாயில்லை. எப்படியும் பாபா அங்கு போகத்தான் வேண்டும். ஜெய்ப்பூர் விஸிட்ரொம்ப நாள்ட்யூஎன்றார்.

பாபா லேசாகச் சிரித்து, “அவரே இங்கு வந்து கொண்டிருக்கிறார்என்றார்.

ஆம், இங்கே மகத்தான மன்றம் திறக்கப்பட, அங்கே பூனம்சந்த் பகவானோடு இரண்டறக் கலந்துவிட்டார்!

பூனம்சந்த் என்பதுபூர்ணசந்திரஎன்பதன் திரிபு. மதி நலத்தில் முழு மதியாகவே ஆகிப் பூரணம் எய்திவிட்ட அந்த பக்தரின் பெயரிலேயே பாபா மன்றத்துக்குபூர்ணசந்திர ஆடிடோரியம்எனப் பெயரிட்டார். தனி மனிதரான ஓர் உபயதாரரின் பெயரை பாபா ஒரு நிலையத்துக்கு வைத்தது இதுவே முதல்முறை.

2 ஆயினும் ஒரு சில ஆண்டுகளிலேயே கூட்டம் பல்லாயிரத்திலிருந்து பல லக்ஷமாகப் பெருகத் தொடங்கிவிட்டதால் ஸ்வாமி பொது ஸ்தலத்தில் சிவராத்ரி லிங்கோத்பவம் செய்வதை நிறுத்தத்தான் நேர்ந்தது.

பரம மங்களமான நவராத்ரியில் விதவையான செல்வச் சீமாட்டி, ராணி என்றே மதிக்கத்தக்க ஸ்ரீமதி பூனம்சந்த் மறுநாளே ராஜஸ்தானத்திலிருந்து பாபாவிடம் வந்து ஆறி, தேறி, சாந்த சமுத்ரத்தில் மூழ்கியிருந்தார்! அதென்ன அற்புத மருந்தோ?

***

சிலரது கர்மத்தின் தன்மை போலும், அவர்கள் பிரிவுத் துயரத்திலிருந்து மீண்டு மன சாந்தி பெற பாபா உடனே அருள் கூர்ந்து விடுவதில்லை. ஆயினும் இவர்களில் இறந்தோரின் இறுதிக் காலத்தில் பக்கத்தில் கூட இல்லாததால் துடிக்கும் சிலருக்கு வேறொரு விதமான அதிசய அநுக்கிரஹத்தைப் புரிகிறார். அதாவது இறந்துபோன அவர்களது உறவினர்களையே மறுபடியும் சிறிது நேரம் அவர்கள் கண்முன் காட்டி சோகத்தை நீக்கிக் கொள்ளக் கருணை கூர்கிறார். திருப்பதி புஷ்கரிணியில் மரித்த மகனை அநாமதேயினி கண்டது இதற்கொரு திருஷ்டாந்தம்.

இறந்தவர்கள் ஒன்று மறு பிறவி எடுத்திருக்க வேண்டும், அல்லது இறைவனிலேயே கலந்திருக்க வேண்டும், அவர்கள் எப்படிப் பழைய உருவில் வரமுடியும்? இறந்த உயிர் ஓராண்டுவரைப் பிரேத சரீரத்திலிருக்கிறது என்பதை ஒப்பினாலும், ஓராண்டுக்குப் பிறகும் பாபாவால் எப்படி இறந்தவரை அதே உடலில் வரவழைக்க முடிகிறது?’ எனத் தோன்றலாம். வேறு வடிவில் பிறந்தவரை, அல்லது தம்மில் கலந்தவரைப் பழைய உருவில் காட்டும் வல்லபம் நம் ஸ்வாமிக்கு ஏன் இருக்கக் கூடாது? அவரது அருந்திறன்களை யாரே அளவுக்குட்படுத்த முடியும்? அநாமதேயினிக்கோ பழைய ஸம்பவத்தையேதானே மறுபடி உயிர் நாடகமாக்கிக் காட்டினார்?

பாபாவின் பூர்வ அவதாரமான கண்ணனும் இவ்வருள் செய்திருக்கிறான். கண்ணனே கிழப்பருவம் எய்திய போது, படுகிழவியான தேவகி ஆதியில் தான் சிறையில் பறிகொடுத்த ஆறு சிசுக்களையும் காண விரும்புகிறாள். அத்துணை ஆண்டுகளுக்குப் பின்னர் கண்ணன் அவ்வறுவரைப் பச்சைக் குழந்தைகளாகவே தருவித்து தேவகியிடம் கொடுத்து, அவள் சிறிது நேரம் அவர்களைச் சீராட்டியபின் தேவலோகத்துக்கு அனுப்பி வைக்கிறார். ஸ்ரீமத் பாகவதம் தசம ஸ்கந்தம் 85ம் அத்தியாயத்தில் இக் கதையைக் கூறும் சுகர் இதனைத்தும் கிருஷ்ணமாயை என தேவகி தெளிந்ததாகக் கூறுவது கருதற்பாலது.

***

ர்ம கதியை அநுசரித்தே பாபாவின் கருணை கதி பெரும்பாலும் செல்வதற்கு ஒரே குடும்பத்தில் நடந்த இரு ஸம்பவங்கள் அழுத்தமான சான்றாகும். ஸாயி விருக்ஷத்தில் பழுத்த அருட்கனிகளில் கூடை கூடையாகப் பெற்ற ஆழ்வார்ப்பேட்டை ஸ்ரீ வேங்கடமுனி குடும்பம்தான் அது.

வேங்கடமுனியின் தாய் நல்ல கிழவி. மரணப் படுக்கையில் விழுந்தார். ஓர் இரவு இறுதிக் கட்டம் நெருங்கியது. உறவினர் யாவரும் வந்துவிட்டனர்.

வேங்கடமுனியின் மனைவி ஸுசீலா அம்மாளுக்கு பாபா தந்திருந்த ஜபமாலையின் நினைவு வந்தது. அதைக் கொண்டு வந்து மூதாட்டியின் மார்புமீது வைத்தார். மெல்ல மெல்ல உடலில் உணர்வும் உயிர்த்துடிப்பும் வந்தன. காலையில் திடமாக எழுந்துவிட்டார். சுற்றியிருந்தோரைப் பார்த்து, “எனக்கு என்ன வந்து விட்டதென்று கூடியிருக்கிறீர்கள்?” என்றார்.

பிறகு பல ஆண்டுகள் வாழ்ந்து இறைவனடி சேர்ந்தார்.

இதே வேங்கடமுனியின் குமாரர்களில் ஒருவன், பிஞ்சிலும் பிஞ்சு, வலிப்பு நோயுற்றுப் படாதபாடு பட்டான். முடிவு வந்துவிட்டது என்றே தோன்றியது. ஸுசீலா அம்மாள் ஜபமாலையைக் கொண்டுவர ஓடினார்.

ஆனால், இதென்ன சோதனை? கையிலெடுக்க எடுக்க மறுபடி மறுபடி மாலை நழுவி விழுந்தது. கைக்கெட்டியது வாய்கெட்டவில்லை என்பது போல், கை எட்டத்திலிருந்த மாலை கைக்கு வசமாகாமல் ஏமாற்றி விட்டது! பிள்ளையும் ஏமாற்றிவிட்டுப் போயே போய்விட்டான்!

வெந்த நெஞ்சோடு பெற்றோர் பாபாவிடம் ஓடி வந்தனர். அவரோ பரம ஸந்தோஷமாகக் காணப்பட்டார். இவர்களைப் பரிஹாஸம் செய்துகொண்டு வரவேற்றார்! இவர்களால் தாங்க முடியவில்லை.

நாயனா, அம்மாயிஎன்று கருணை துளிக்க அழைத்தார் பாபா. “பிள்ளைக்காக இனி நீங்கள் வருந்தக் கூடாது. அவன் இங்கிருந்ததைவிட ஆனந்தமாக இப்போது இருக்கிறான். கொஞ்சம் கர்ம பாக்கி இருந்ததால் தீர்த்துக்கொள்ள இங்கே வந்தான். அதைத் தீர்த்துக்கொண்டு புறப்படுவதுதான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது. ஆகவே அவனிடம் உங்களுக்கு அன்பு இருந்தால் நீங்கள் அழுவதற்கேயில்லைஎன்றார்.

தாங்கள் அனுபவித்திருந்த பிள்ளையின்பத்தில் ஆசைக்காக வேண்டுமானால் அவன் உயர்கதி அடைந்திருக்கும்போது இவர்கள் அழலாம்!

பாசிக் கொத்தைப் பறித்துப்போடுவதுபோல் சுயபாசத்தை பாபாவின் பரிவுமொழி அகற்றிவிட்டது. பிள்ளை போனதோடு பக்தியும் போய்விடுமோ என்னும்படி நடுவே நலியத் தொடங்கிய நம்பிக்கை மீண்டும் துளிர்த்துவிட்டது!

***

சைக்கலைஞர் ஸ்ரீ டி.எம். சௌந்தரராஜன் இல்லத்திலும் மரணத்திலிருந்து காப்பு, மரணத்தின் மூலமே காப்பு என்ற இரண்டு அருள்களையும் பாபா பாலித்திருக்கிறார்.

டி.எம்.எஸ்ஸுடைய மூத்த மகளின் இதயக் கோளாற்றுக்கு அமெரிக்கா போய் ஆபரேஷன் செய்து பார்ப்பது தவிர வேறு வழி இல்லை என்ற நிலையில் பாபாவின் விபூதியும், நாமமுமே நோயைப் பூரணமாகக் குணப்படுத்தின. வைத்திய நிபுணர்களே வியந்தனர். இருப்பினும் முன்பு இதயம் வெகுவாகப் பழுதுற்றிருந்த அப்பெண்ணுக்கு திருமணம் செய்வது உசிதமல்ல என்றனர். ஆனால், பாபா அவளுக்குக் கல்யாணமும் பண்ணிவைத்துக் குடியும் குடித்தனமுமாக வாழவைத்தார். இது ஓர் அருள்.

இன்னொரு புறம், ஸ்ரீ ஸௌந்தரராஜனின் பதினாறு வயசுப் பிள்ளை மூன்றே நாள் காமாலையில் பரலோக வாயிலுக்குச் சென்று விட்டான். ஆஸ்பத்திரியிலிருந்தவன், தன்னை வீட்டுக்கு இட்டுச் சென்று பாபா படத்தண்டை கிடத்தச் சொன்னான். வைத்தியர்களும் கைவிட்டுவிட்டதால் அவ்விதமே செய்தார் டி.எம்.எஸ். அதோடு, புட்டபர்த்திக்கு டிரங்க் கால் போட்டார்.

என்ன பரிதாபம்! ஒரே அட்மாஸ்ஃபெரிக் கோளாறு. ‘கால்கிடைத்தும், பாபாவே ஃபோனை எடுத்தும் அவருடன் பேச முடியாமல்கொர் கொர்இரைச்சல். ஸுசீலா அம்மாளுக்கு ஜபமாலை கைக்கெட்டாமற் போகவில்லையா, அதே கதைதான்!

பிள்ளை, “முருகா முருகா முருகாஎன்று பூர்ணப்பிரக்ஞையோடு மும் முறை சொல்லி மானுடச் சட்டையைக் கழற்றிப் போட்டுவிட்டான்!

டி.எம்.எஸ். பக்தி இழந்தார். பகவான் படங்களை அப்புறப்படுத்தினார். ஆறுமாதம் பைத்தியம் போல் அலைந்தார்.

தெளிய வழி? அந்தத் தெய்வத்திடமே மறுபடி ஓடினார்.

ஸுந்தரராஜன்! அன்னிக்கு ஃபோனில் ஏன் அத்தனை டிஸ்டர்பன்ஸ்?” என்று பாபா சிரிக்கிறார்!

ஸ்வாமீ, நான் கேட்கவேண்டிய கேள்வியை நீங்களா கேட்பது?” என்று சௌந்தரராஜன் கண்ணீர் உகுக்கிறார்.

உஷ்அழக்கூடாதுஎன்கிறார் பாபா. “இந்த சரீரம் செருப்பைவிடக் கேவலம், தெரியுமோ? மழையில் போகிறோம், செருப்பு ஜலத்தை வாரி அடிக்கிறது. உடனே பக்கத்திலுள்ள வீட்டுக்குச் சென்று, ‘இந்தச் செருப்பைக் கொஞ்சம் இங்கே விட்டுப் போகலாமா?’ எனக் கேட்கிறோம். வீட்டுக்காரர்கள், ‘பேஷாகஎன்கிறார்கள். அதுவே, ஒரு பிணத்தை எடுத்துப் போகிறோம்; மழை அடிக்கிறது;. எந்தவொரு வீட்டுக்கேனும் போய், ‘மழை நிற்கிற வரையில் இந்தப் பிணத்தை உங்கள் வீட்டில் போட்டு வைக்கலாமா?’ என்று கேட்டால் வீட்டார் ஒப்புக்கொள்வார்களா? நாயனா! செருப்பைவிடத் தாழ்ந்தது இந்த சரீரம். இதற்குள் ஒரு ஆத்மா வந்து இருப்பது கர்மாவைத் தீர்த்துக் கொள்ளத்தான். ஆனால் பெரும்பாலும் தீர்த்துக்கொள்ளாமல் மேலும் சேர்த்துக் கொண்டு மறுபடி மறுபடி மட்டமான சரீரத்தில் அது பிரவேசிக்க வேண்டியிருக்கிறது.”

சுந்தரராஜன், உன் பிள்ளை அம்மாதிரி மறுபடி ஒரு சரீரத்தில் புகப் போகிறதில்லை. பிறப்பு எடுத்தது பிறப்பைப் போக்கிக் கொள்வதற்கே, சரீரத்தில் புகுந்தது மறுபடி அப்படிப் புகாமல் ஆக்கிக் கொள்வதற்கே என்பதை சத்தியமாகச் சாதித்துக் கொண்டுவிட்டான். அந்திமத்தில் பகவத் ஸ்மரணம் வந்தால் பகவானோடேயே கலந்து விடுவார்கள் என்பது தெரியாதா? நல்ல நினைவோடு மூன்று தடவை முருகனை அழைத்துக்கொண்டே கண்ணை மூடினானே! அவனுக்கு முக்தி அல்லவா கிடைத்து விட்டது! இதற்கா நீ துக்கப்படுவது? அந்த பக்தி முதிர்ச்சி உனக்கும் ஸித்திக்க பிரயாஸைப்படு. ஸங்கீதத்தால் பகவானை, பகவந் நாமத்தை வழிபட்டுக் கொண்டே இரு.”

புத்தியில் புகுந்து புத்திரசோகம் தீர்த்துவிட்டார்!

***

வேங்கடமுனிக்குத் திரும்பலாம்.

ஒருமுறை சென்னை வந்து அவர் இல்லத்தில் தங்கி, மதுரைக்குப் புறப்பட்டார் ஸ்வாமி.

ஸுசீலாம்மாவைப் பார்த்து, “அம்மா, உன் புருஷரை நான் என்னோடயே அழைச்சுட்டுஉம்?” என்று கேட்டார்.

என்னைக் கேட்க வேண்டுமா, ஸ்வாமீ!” என்றார் அப்பெண்மணி.

சரி, உன் பெர்மிஷனோடு, அவரை என்னோடு அழைச்சுக்கிறேன்என்று பாபா சொல்லி, வேங்கடமுனியையும் மதுரைக்கு அழைத்துச் சென்றார்.

மதுரையில் அவர்கள் தங்கியிருந்த ஜாகையில் வேங்கடமுனி சட்டென மார்பை அழுத்திக்கொண்டார். பக்கலில் இருந்த பகவான் அவரை இரு கரமும் நீட்டி இழுத்துக் கொண்டார். தம்மீதே ஆரச் சாய்த்துக் கொண்டு பரிவோடு தடவிக் கொடுத்தார்.

வேங்கடமுனி அந்தப் பரம பதத்திலிருந்து அதன்பின் எழுந்திருக்கவில்லை.

பாபா அவரை அழைத்துக் கொள்ளப்பெர்மிஷன்தந்த தர்மபத்னியின் கண் கலங்க பாபா பெர்மிஷன் தரவில்லை! சூரியனாகக் காயாமல், கருணையில் குளிர்ந்திருந்தே நம் ஸ்வாமி கண்ணீர்ச் சுரப்பிகளை வற்ற வைக்கிறாரே, அந்தச்சுண்டாயம்என்ன?

***

பா மந்திரத்தில் பாபாவின் பாதத்தில் தம் குழந்தையைக் கிடத்தியவர் அந்நாள் சென்னை மாகாணப் போக்குவரத்துக் கமிஷனர் ஸ்ரீ ஹநுமந்தராவ். “எங்களுடைய ஒரே பிள்ளைஎன்றார்.

என் பிள்ளைஎன்றார் பாபா.

ஈச்வரிப் பிரஸாத் தத்தாத்ரேயா என்று பெயர்என்றார் தந்தை.

இல்லை, சிவாஎன்றார் பாபா. “சிவாதான் உங்களை என்னோடு முடி போட்டிருக்கும் கயிறுஎன்று சொல்லிச் சிரித்தார். (சிவன் பதி, ஜீவன் பசு; இந்தப் பசுவை அந்தப் பதி பாசம்’ என்கிற உலக மாயையால் கட்டுகிறான்என்பது சாஸ்திரம். இங்கே மாற்றிச் சொல்லிவிட்டாரா பாபா? காரணமில்லாமல் ஒரு வார்த்தை அவர் வாயில் மாறினாற்போல் வருமா?)

அதன் பொருள் புரியாத பெற்றோர், “ஆறாம் மாசமே இளம்பிள்ளைவாதம் வந்துவிட்டது. எங்களுடைய இந்த ஒரே புத்திர ஸந்தானத்தைத் தாங்கள் தான் காப்பாற்ற வேண்டும்என விண்ணப்பித்துக் கொண்டனர்.

மஞ்சிதி, மஞ்சிதி (நல்லது, நல்லது)” என்றார் பாபா. பெற்றோருக்கு இழந்த கண்ணைப் பெற்ற இன்பம் வந்தது.

பாபா சென்னை வரும்போதெல்லாம் இவர்களது இல்லத்துக்கு வந்து லூட்டி அடிப்பார்! அப்போது அவருக்கு வயசு இருபது. ‘காளைப் பருவம் என்று சொல்ல வேண்டும். ஆனால் பார்வைக்கு ரொம்ப இளசாக இருப்பார். (இங்கே, நாகமணி பூர்ணையா முதல் தரிசனம் பற்றிச் சொன்னது நினைவு வருகிறது: “பெரிய பெரிய அற்புதங்களைச் செய்கிறார் பாபா என்பதால் எட்டாத் தொலைவில் இருப்பவராக எப்படியோ அவரைக் கற்பனை செய்துகொண்டு போனேன். ஆனால் அவரைத் தரிசித்த மாத்திரத்திலே, ‘இனிப்புக் குழந்தை (sweet child)’ என்பதொன்று தான் தெரிந்தது. வாரி இடுப்பில் வைத்துக்கொண்டு வீட்டுக்கு வர மாட்டோமா என்றிருந்ததுஎன்றார்.)

சிவாவை விடக் குழந்தையாக பாபா ஹநுமந்தராவ் வீட்டில் வளைய வந்து விளையாடினார். குறிப்பாக, சிவாவோடு மிகவும் விளையாடினார். அந்தக் குழந்தையும் பாபா கிட்டத்தில் இருந்தால் ஒரே குதூஹலத்தில் இருக்கும்.

ராவ் வீட்டில் பாபா செய்த லீலை அனைத்தையும் சொல்லிமாளாது. எனினும், ஒன்றைச் சொல்லாதிருப்பதற்கில்லை.

அன்று ஜன்மாஷ்டமி. யோசனையில் ஆழ்ந்தது போல் பாபா வீட்டுக்குள்ளே குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார். உல்லாஸ பாலர் ஏன் சிந்தனை வசப்பட்டுவிட்டார்?

திடீரென ஹநுமந்தராவின் மனைவியாரான லக்ஷ்மி பார்வதம்மாவின் புறம் திரும்பினார். “தேவர்கள் வருகிறார்கள், எனக்கு நிவேதனங்கள் படைப்பதற்காகஎன்றார். இரு கைகளையும் உயரத் தூக்கினார். இது

அம்மாளின் கண்களுக்குத் தேவர் எவரும் தெரியவில்லை. ஆனால் பாபாவின் கைகளில் ஒரு பெரிய கண்ணாடிப் பேழை வந்திறங்குவதும் அதை அவர் வாங்கிக்கொண்டிருப்பதும் நன்றாகத் தெரிந்தது. அத்தனை பெரிய கிண்ணம் எப்படித் திடுமென முளைத்தது!

அதுமட்டுமல்ல. அது நிறைய இனிப்புப் பக்ஷணங்கள்! இந்தியாவில் ஒவ்வொரு பகுதிக்கும் விசேஷமாயுள்ள இனிப்புக்கள் ஒவ்வொன்றிலும் வகைக்குக் கொஞ்சம் அதில் இருந்தது!

கிருஷ்ண ரஸாயனத்தின் ருசியைப் பெற்ற அந்த இனிப்புக்களை அடியார் யாவரும் உண்டனர்.

தாதிமார்கள் கழுத்தில் கட்டிக் கொள்வார்களே, அந்த மாதிரி ஓர்ஏப்ரன்கேட்டார் பாபா. ஏன் தாமே சிருஷ்டிக்கவில்லையோ, யார் சொல்ல முடியும்? லக்ஷ்மி பார்வதம்மாள் கொண்டு வந்து கொடுத்தார். அதைக் கழுத்தில் கட்டிக்கொண்டு தமது மடியைத் தட்டிக் கொடுத்துக்கொண்டே குழந்தைக் கண்ணனைத் தூங்க வைக்கும் தாலாட்டுக்களைப் பாடலானார் பாபா. அவரது நீலாம்பரியில் நீலபாலனே நீளப்படுத்து நித்திரை செய்வதாகத் தோன்றியது. குழந்தை நாளிலிருந்தே கண்ணனாக மட்டுமின்றி அசோதையாகவும் நடித்த ஸாயி மாதா இந்த ஜன்மாஷ்டமியிலும் கிருஷ்ண ஜனனியாகவே பிரேமைப் பிரவாஹம் பெருக்கினாள்!

தாலாட்டு முடிந்து, ஏப்ரன் துணியை எடுத்தார்.

அதன் மடிப்புகளிடையே ஒரு சந்தன விக்கிரஹம்!

கண்ணன் பதுமை தான்!

ஸந்தானம் தக்கவேண்டும் என்ற ஒரே பிரார்த்தனையாக இருந்த ராவ் தம்பதியருக்குச் சந்தனக் கண்ணனை அளித்தார்.

பர்த்திக்குத் திரும்பினார்.

சிவாவின் இளம்பிள்ளைவாதம் மூளையைத் தாக்கியது. “பாபா, பாபாஎன்று பெற்றோர் பிரார்த்தித்துக்கொண்டேயிருந்தனர். ஆனால் அவர்களை ஆறாத புத்திர சோகத்தில் ஆழ்த்தி மறைந்து விட்டான் குழந்தை. “சிவாதான் உங்களை என்னோடு முடிபோடும் கயிறுஎன்று பாபா சொன்னதற்கேற்ப, அவரிடம் இத் தம்பதியர் வைத்த பக்தி அவன் போனவுடன் துண்டித்தே போயிற்று. குழந்தைக்கு முழுக்குப் போட்டதோடு புட்டபர்த்திக்கும் ஸ்நானம் செய்துவிட்டார்கள்.

பாபாவிடம் பக்தி போனாலும், ஈச்வர கிருபையால் ஜீவகாருண்யம் அவர்கள் நெஞ்சில் அதிகமாக ஊற்றெடுத்தது. இளம்பிள்ளைவாதமுற்ற இளம்பிள்ளைகளுக்காக ஏராளமான பொருட்செலவில் அடையாற்றில்ஈச்வரி ப்ரஸாத் தத்தாத்ரேயா வைத்தியசாலையை எழுப்பினர்.

ஈச்வரி தன் பிரஸாதமாக தத்தம் செய்திருந்த பிள்ளையை எடுத்துக் கொண்டுவிட்டாலும், இம் மருத்துவ மனையில் வந்து சேர்ந்த அபலைக் குழந்தைகள் யாவும் இவர்களுக்குத் தத்துப் பிள்ளைகள் போலாயின.

ஜீவகாருண்யம் வேறு, பாபா பக்தி வேறா? நோயுற்ற இளம் கன்றுகளுக்கு மருத்துவமும், அதனினும் இனிய அன்பு மருத்துவமும் செய்ததில் இவர்களது புத்திரசோகம் தேய்ந்து தேய்ந்து மறைந்தது. ‘சிவன் தந்தான். சிவன் எடுத்துக் கொண்டான். சிவன் செயல் எல்லாம் நல்ல செயல்தான்என்ற தெளிவு பிறந்தது. சிவா போனாலும் அன்பாம் சிவத்தில் சிறந்தனர். இந்த சிவசிந்தனை வலுத்தவுடன் துண்டித்த கயிறும் மறுபடி முடிச்சுப் போட்டுக் கொண்டுவிட்டது. ஆம், மிராகிள் என்று சொல்லக் கூடிய வெளிச் செயல் ஏதுமில்லாமலே பாபாவிடம் இவர்களுக்கு மீண்டும் பக்தி பொசியத் தொடங்கிவிட்டது! பர்த்தி அவர்களை அழைத்துவிட்டது, பழையபடியே ஆட்கொண்டும் விட்டது!

குழந்தையைச் சரி செய்வதாக பாபா சொன்னதும், அதற்காகத் தாம் பிரம்மப் பிரயத்தனம் செய்வதாகக் காட்டியதும் எல்லாமே லீலைதான் என்று தேர்ந்தனர். ‘அவர் ஏமாறவில்லை, தங்களையே ஏமாற்றினார், அதுவும் தங்கள் மனத்தை உயர்த்தி மாற்றவே தாற்காலிகமாகத்தான் ஏமாற்றினார்என்று தெளிந்தனர்.

சரீரம் என்றெடுத்தால் முன்னோ, பின்னோ அது அழியத்தான் வேண்டும். சாவை ஒரு பெரிய விஷயமாக எண்ணி பயப்படவேண்டாம்என்பார் பாபா. அடியார்கள் தாங்கொணா மொழியாக, “அவதாரமைன மேமே மா தேஹான்னி ஓதலி பெட்டி போவல் சிந்தே” (அவதாரமான நானே என் தேஹத்தை (ஒருநாள்) உதறிவிட்டுப் போக வேண்டியதே) என்பார்.

***

பாபா லக்ஷோபலக்ஷம் அற்புதங்கள் செய்கிறார் என்ற போதிலும் இவற்றால் பக்த கோடிகளில் ஒவ்வொருவருக்கும் உள்ள கோடி கோடி கர்மங்களை மாற்றிவிடவில்லை. அப்படி மாற்ற அவர் எண்ணவும் இல்லை. தாம் செய்வதனைத்தும் அன்புக்கு ஒரு சிறு அடையாளம்தான் என்கிறார். “இயற்கையன்னை மிக அழகாகவே சமையல் செய்து கொண்டிருக்கிறாள். அவளது சமையலறையில் நான் சும்மா சும்மாத் தலையிட விரும்பவில்லை. அது அவசியமும் இல்லைஎன்ற அமர வாசகங்களைக் கூறியிருப்பவர் அவர். இயற்கை நியதி என்பார். “மனித சரீரம் உண்டாகிறபோதே அதில் நல்ல ரத்தத்தை எடுத்துச் செல்ல ஒருபுறம் குழாய்கள் சிருஷ்டியாகின்றனவெனில், இன்னொரு புறம் கெட்ட ரத்தத்தை எடுத்துச் செல்லவும் குழாய்கள் உருவாகின்றன அல்லவா? ரத்தம் கெட்டுப் போவானேன், அப்புறம் சுத்தம் செய்வானேன் என்று விவாதித்துப் பயன் என்ன? லீலைக்கு இந்த மாறுபாடு இருந்தால்தான் ருசிக்கிறதுஎன்பார்.

தேகத்தில் இரு விதமான ரத்தக் குழாய்கள் இருப்பது போலவேதான், நாமும் ஓர் ஊரை நிர்மாணம் செய்கிறபோது, ஒரு பக்கம் குடிநீர்க் குழாய்களை அமைக்கிறோம், இன்னொரு பக்கம் கழிவு நீர்க் குழாயும் போடத்தானே செய்கிறோம்? இரண்டும் இருக்கத்தான் வேண்டும். துன்பம் என்று ஒன்றை நினைத்து, அழ வேண்டாம். கெட்டது என்று ஒன்றை நினைத்து, கெட்டவர் என்று ஒருவரை நினைத்து த்வேஷம் கொள்ள வேண்டாம்என்பார்.

துக்கமும் தோல்வியுமேதான் அநேக சந்தர்ப்பங்களில் மனிதனுக்கு அவனது சிறுமையை உணர்த்தி அவனைத் தெய்வத்திடம் திருப்புகிறது என்பார். இகவாழ்வே நிறைவானது என்று மனிதன் நினைத்து விடாமலிருப்பதற்கேதான் இறைவன் வேண்டுமென்று துன்பத்தை வைத்திருக்கிறான் என்பார். “துயரங்கள் செய்து தன் தெய்வ நிலை உலகில் புக உய்க்கும் அம்மான்என்று நம்மாழ்வார் சொன்னதையே நம் ஆண்டகை நினைப்பூட்டுகிறார்.

துக்கமும், துவேஷமும் தம்மை அடியோடு பாதிக்க அநுமதியாத ஐயன், பக்குவ பக்தருக்கும் இப்பான்மையை அருளுகிறார்.

தங்கள் வீட்டில் மரணம் நேர்ந்துவிட்டதே என்று பக்தரெவரேனும் புலம்பினால் பாபா, “பாரேன்! என் அக்காள்மார் இருவரும் கூடத்தான் இளம் பிராயத்திலேயே விதவைகள் ஆகிவிட்டனர்என்பார்!

இவர்களில் வெங்கம்மாவின் கணவர் சுப்பாராஜு பாபாவுக்கு மாமனும் ஆவார். இவரது மரணத்தின்போது பாபா பராசக்தி வேகத்தோடு மொழிந்த வாசகத்தை எண்ணும் போதெல்லாம் ஸ்ரீ கஸ்தூரி அயர்ந்து விடுவார்!

பிரசாந்தி மந்திரத்தின் பின்னாலேயே சுப்பாராஜுவை அடக்கம் செய்திருந்தார்கள். தனது தாய், தந்தை, தாத்தா ஆகிய யாருக்குமே தராத இந்த பாக்யத்தை, தம்மிடம் அவ்வளவாக ஈடுபாடற்ற அத்திம்பேருக்கு மட்டும் பாபா அளித்ததன் ரகசியம் அவர் ஒருவருக்குத்தான் தெரியும்!

காரியம் முடிந்தபின் வெங்கம்மா பிரசாந்தி நிலயத்துள்ளே விசும்பிக் கொண்டிருக்கிறார். வெளியே சோகம் சூழ்ந்த உறவினர் நடுவே பாபா ஓர் உணர்ச்சியுமில்லாது அமர்ந்திருக்கிறார். காலை மணி பத்திருக்கும். வெளியூர் சென்று திரும்பிய ஸ்ரீ கஸ்தூரி தயங்கித் தயங்கி வருகிறார். பாபாவிடம் வருகையில் கஸ்தூரிக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்துவிட்டது.

கார்மேகங்கள் குழம்பிக் கிடக்கும்போது அவற்றிடையே மின்னல் பளிச்சிடுவதுபோல், அந்த சோகச் சூழலில் பாபா உற்சாகமாய்க் கேட்கிறார்: “கஸ்தூரி! செச்சேதி புட்டேதி லேகபோதே நாகு எட்லையா டைம் போயேதி?” (‘சாவு, பிறப்பு இதெல்லாம் இல்லையென்றால், எனக்கு எப்படி ஐயா பொழுது போகும்?’) முத்துக் குவியலைச் சரித்து விட்டாற்போல் சலசலவென நகைக்கிறார்வேறே!

ஆம், ஆம் பராசக்தியின் லீலைக்கு இதவ்வளவும் அவசிய அங்கங்கள் தாம்.

எப்படி ராமகிருஷ்ணர் மரணப் படுக்கையில் நலிந்து கொண்டே தம்மை அவதாரம் என்று சொல்லியது விவேகாநந்தரின் நெஞ்சில் பரம சத்தியமாக ஆழப் பதிந்ததோ, அப்படியே இத்தனை ரத்த பந்துக்களும் சாம்பிக்கிடந்த அந்த செத்த சூன்யத்தில், பாபா உச்ச சூரியனாக ஜ்வலித்துக் கொண்டு கூறிய வாசகம் கஸ்தூரியின் அந்தராத்மாவுக்குள் புகுந்து அவதாரத்வத்தை நிலைநாட்டிவிட்டது!

உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்
உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்

என்று பராசக்தி மயமாகிவிட்ட தலைவியைப் பற்றி அவளது தாய்க் கூற்றாக நம்மாழ்வார் சொன்னது நம் புட்டபர்த்தீச்வரிக்கு எப்படிப் பொருந்துகிறது பாருங்கள்!

பாபாவின்உறவினர்காலமாகிவிட்டனர் என்பதால் அவரைத் துக்கம் கேட்பவர்கள்கூட உண்டு. வெங்கப்பராஜுவின் மரணத்தின்போது தமக்கு அநுதாபக் கடிதங்கள் எழுதியவர்களைப் பற்றிப் பரிதாபப்பட்டு, பரிஹாஸமாகவே பதில் எழுதினார் பாபாஸநாதன ஸாரதிஏட்டில்.

எவரும் மரிக்க வேண்டியதுதான். ஆனால் மறுபடி பிறக்காத வகையாகச் செய்து கொண்டு மரிக்கவேண்டும். இப்படிச் செய்து கொள்ள அந்திமத்தில் பகவத் ஸ்மரணை அவசியம். திடுமென அந்திமத்தில் மட்டும் ஸ்மரணை வந்துவிடாது. இறைநினைவை வாணாள் முழுதும் பழக்கிக்கொண்டால்தான் கடைசி மூச்சில் கை கொடுக்கும். அப்படி நினைப்பவர்களுக்கு நான் தரிசனம் தந்து என்னிடமே சேர்த்துக்கொள்கிறேன்என்பார்.

***

பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைகின்ற பரிபூரணத்தில் ஒரு பக்குவ ஜீவன் கரைகிறது. அப்பரிபூரணம் எங்கும் நிறைந்திருந்தாலும், அந்த நிராகாரத்தின் நராகாரமாக உள்ள பாபா சில சமயங்களில் தமது ஸ்தூல சரீரத்தாலோ, ஸூக்ஷ்ம சரீரத்தாலோ அப்படிப்பட்ட ஜீவனிடம் மரணத் தறுவாயில் ஓடுகிறார்.

இப்படி ஸ்வாமியைத் தங்களிடம் ஓடிவரச் செய்தவர்களில் கிறிஸ்துவ மிஷனரிக் கல்லூரியொன்றின் முதல்விக்குக் கிட்டிய பேற்றை முதலில் பார்ப்போம்.

அவளது பாபா பக்தி வெளியில் தெரிந்தால் மிஷன் அவளைத் தண்டிக்கும் என்பதால் அவள் ஸாயியின் பரம பக்தையான ஒரு மாணவி மூலமே அவருக்குப் பிரார்த்தனை அனுப்பி வந்தாள். அவள் மிஷனைவிட்டு வெளிவர வேண்டியதில்லை; அதிலிருந்து கொண்டு அவள் செய்யும் கல்வித் தொண்டே சிறப்பானது தான் எனத் திரு உளம் கொண்ட பாபாவும் அவளுடைய பக்தியை ரகசியமாகவே காத்தார். எனவே இப்போது அவள் இறந்துவிட்ட போதிலும் அவள் பெயரை வெளியிடுவது முறையாகாது. இச்சரிதம் ஸாயி பக்தர்களுக்கெனவே எழுதப்படுவதால் இதில் புனைந்துரை ஏதும் இருப்பதாக வாசகர் எண்ணுவதற்கில்லை. எனவே, பெயர், ஊர், காலம் ஆகிய விவரங்களை மறைத்துக் கூறுகிறோம்.

மேற்சொன்ன மாணவிக்கு முதலில் அந்த முதல்வி அட்மிஷன் மறுத்திருந்தாள் அப்பெண் தகுதி பெற்றிருந்தும்கூட.

மாணவி பாபாவுக்கு ஓயாமல் பிரார்த்தனை செலுத்தினாள்.

பாபா கனவில் வந்தார்.

நாளைக்கு மறுநாள் அதே காலேஜுக்குப் போ. ஒரு தமாஷ் பார்ப்பாய்என்றார்.

அதேபோல் அப்பெண் சென்றாள் பாபாவே தந்திருந்த அவருடைய படத்தையும் விபூதியையும் ரட்சையாகக் கையில் மறைத்து எடுத்துக்கொண்டு. இவள் காலேஜ் உள்ளே நுழைந்ததும் ஒருநன்இவளிடம் வந்து, “நீ வருவாயோ என்றுதான் பிரின்ஸிபல் அதோ சர்ச் பக்கம் காத்துக்கொண்டிருக்கிறார்என்றாள்.

நன்சொன்ன நன்மொழிகளைக் கேட்டு மாணவி காதுகளையே நம்ப முடியாமல் சர்ச் பக்கம் சென்றாள். முன்பு கடுமையே உருவாக இருந்த கல்லூரி முதல்வி இன்று அபிமானமே வடிவாக இவளிடம் வந்தாள். ஆங்கிலத்தில் பின்வருமாறு கூறினாள் நம்பவொண்ணாத விஷயம்!

குழந்தே! அன்றைக்கு உன்னைப் புறக்கணித்ததற்காக மனமார வருந்துகிறேன், மன்னிப்புக் கோருகிறேன். நேற்று ராத்திரி எனக்கு ஒரு விசித்திரமான கனவு வந்தது. ஒரு மகான் தரிசனம் தந்தார். ஹிந்து மாதிரிதான் தோன்றினார். அழகான சுருட்டை முடி ஜோதிப்பிரபை போல் அவர் முகத்தைச் சூழ்ந்திருந்தது. அவர் யாரென்று தெரியாவிட்டாலும் தெய்விகமாகத் தோன்றினார். அவர் என்னிடம், பார்! என் பாதத்தில் தஞ்சம் புகுந்த அந்தச் சிறு குழந்தையைப் புண்படுத்திவிட்டே! சத்தியமும் ஈகையுமே குறிக்கோள் என்று நீ பிரதிக்ஞை எடுத்துக் கொண்டிருந்தும் அந்தப் பெண்ணை நிராகரித்துவிட்டாய். இதனால் கிறிஸ்துவையே நீ புண்படுத்திவிட்டாய்!” என்றார்.

இப்படிச் சொன்னவர் தாமே மூன்று முறை முடியிலிருந்து அடிவரை கிறிஸ்துவாக மாறி நின்றார்!”

நான் உனக்கு ஸீட் தருவதாக அவரிடம் வாக்குறுதி தந்தேன். உடன் அவர் மறைந்துவிட்டார்.

அதைக் கனவென்று என்னால் தள்ள முடியவில்லை. குழந்தே! அவர் யார்? அவரைப் பற்றி விவரமாகச் சொல்லேன்!” கெஞ்சாத குறையாகக் கேட்டாள்.

பாபாதமாஷ் பார்ப்பாய்என்று நம் மாணவியிடம் சொல்லியிருந்தாலும், அவளுக்கு அந்நிகழ்ச்சி தமாஷாக இல்லை. கனவே கனமான நனவாக அவளை அதீத அநுபவத்தில் ஆழ்த்தியது. அவளுக்குக் கண் மங்கிற்று; உடல் வியர்த்தது; கைகள் வெடவெடத்தன. வெடவெடப்பில் பாபாவின் புகைப்படம் நழுவிக் கீழே விழுந்தது.

அதைப் பார்த்த் முதல்வி ஆர்த்துக் கூறினாள்“Oh! Look, dear child! This was the same fellow who came in my dream as Christ. (! அதிசயம் பார், அன்புக் குழந்தாய்! இதே பேர்வழிதான் என் கனவில் கிறிஸ்துவாக வந்தது!)”

பேராயிரம் பரவும் நம் பெம்மானை அவள் அன்பு மிகுதியில்பேர்வழியாக‘fellow’ – என்று கூறியதிலும் ஓர் அழகு இருக்கத்தான் செய்கிறது.

அப்புறம் கேட்பானேன்? மாணவிக்குக் கல்லூரியில் ஸீட் கிடைத்தது. ஸ்வாமிக்கு. முதல்வியின் இதயத்தில் ஸீட் கிடைத்தது!

மாணவி புட்டபர்த்தி செல்லும் போதெல்லாம் முதல்வி அவள் மூலம் பாபாவிடம் தனது விஞ்ஞாபனங்களைத் தெரிவிப்பாள். பாபாவும் அவளுக்கென ஞாபகமாக விபூதி ப்ரஸாதமும் அறிவுறைகளும் அனுப்பி வைப்பார்.

ஒருமுறை தன் விஞ்ஞாபனத்தை மாணவியிடம் விண்டு சொல்லாமல், “எனக்கு ஏதோ ஒரு கோரிக்கை இருக்கிறதென்றும் அதை பாபாதான் நிறைவேற்ற வேண்டும் என்று பிரார்த்திப்பதாகவும் சொல்என்றாள் முதல்வி.

பர்த்தியில் பாபா மாணவியை அழைத்தார். “என்ன, உன் மதர் பிரின்ஸிபல் கோரிக்கை சொல்லட்டுமா? அவளுக்கு ரோமில் உள்ள ஸெயின்ட் பீடர் பாஸிலிகாவில் மரணமடைய வேண்டுமென்று ஆசை. அதோடுகூட, அந்திமத்தில் நான் தரிசனம் தரவேண்டுமாம். கோரிக்கை பூர்த்தியாகிற பிராப்தி அவளுக்கு இருக்கு என்று சொல்என்றார்.

கோரி வச்சினவாரி கெல்லனு
கோர்கெ லொஸகே பிருது கதா?

என்று சியாம சாஸ்திரி போற்றிய ஸாயீச்வரி.

ஊர் திரும்பிய மாணவி இதை முதல்வியிடம் சொல்லஆகா, அவர் ஸர்வஹ்ருதயவாஸிதான்என்று அவள் உருகிவிட்டாள்.

பிறகு அவள் ரோமில் ஸெயின்ட் பீடர் பாஸிலிகாவிலேயே தன் இறுதி நாட்களைச் செலவிட்டாள். அதுமட்டுமல்ல, பாபா தரிசனம் தனக்குக் கிடைத்துவிட்டதாகத் தனக்கு அந்தரங்கமானநன்னுக்கு இறுதிக் காலக் குறிப்பும் எழுதினாள். இதை நன் நமது மாணவிக்குத் தெரிவித்தாள்.

அடுத்த முறை மாணவி பர்த்தி சென்றபோது பாபா அவளிடம், “உன் பிரின்ஸ்பலுக்காக ரோமுக்குப் போனேன். தரிசனம் கொடுத்தேன். கொஞ்ச காலத்திலேயே அவளுடைய ஜீவன் ஜோதி ஸாயி பாதத்தில் லயமாகிவிட்டது. அதிருஷ்டக் காரி!” என்றார்.

ஆயிரமாயிரம் மைல்களுக்கப்பால் ஸ்வாமியை வரவழைத்துக் கொண்டு அவரில் கரைந்ததோடு அவர் வாயாலேயேஅதிருஷ்டக் காரிஎன்று புகழப்பட்ட மகா அதிருஷ்டக்காரி!

***

சி சமயங்களிலோ மரிக்கும் ஜீவனிடம் இவர் ஓடாமல், அந்த ஜீவனே இவர் ஸ்தூல சரீரத்தில் உள்ள இடத்துக்கு வந்து இதில் ஐக்கியமாகி விடுகிறது. இதற்கு உதாரணம் நாம் முன்பு பார்த்த பெங்களூர் ரண்ஜோத் சிங்கின் மகள்.

தலைக்கொன்றாக இன்னம் இரு உதாரணங்களும் பார்த்து விடுவோம். இவ்விருவருமே மஹாத்மாக்கள் ஆவர்.

ஒருவர் அப்துல்லா பாபா. இவர் ஷீர்டி பாபாவின் பரம பக்தரும் நேர் சிஷ்யரும் ஆவார்.

பல்லாண்டுகளுக்கு முன் பாபா சென்னையிலிருந்தபோது ஒருநாள் பல விஷயங்களைப் பேசிவருகையில் நடுவே தமதுமொதடி சரீரத்தின் அத்தாணிச் சேவகராய் இருந்த ஒருவர் குறிப்பிட்ட நாளன்று காலையில் சரீரயாத்திரை முடிக்கப்போவதாகவும், அப்போது தாம் அங்கே அருகிருந்து அவரை எடுத்துக் கொள்ளப் போவதாகவும் சொன்னார். அடியார்கள் பேராவலுடன் அந்தத் தினத்தை, அத்தினத்தில் அவர் குறிப்பிட்ட காலை வேளையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

அந்த நாளும் வேளையும் வந்தன. பாபா குளியலறைக்குச் சென்றவர் வெகு நேரமாகியும் வெளி வராததால் பக்தர்கள் சாளரம் வழியே பார்த்தனர். உள்ளே அவர் கட்டைப்போலக் கிடப்பதைக் கண்டனர். கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றனர். சரீரத்தில் சற்றும் ஜீவச்சாயல் காணவில்லை. இதயம் நின்றுவிட்டது. நாடி ஒடுங்கிவிட்டது. இவர்களும் ஸப்தநாடி ஒடுங்கிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆஹா, குபுகுபுவென பாபாவின் வலக்கால் பெருவிரலிலிருந்து விபூதி வெளிப்படலாயிற்று. ஷீர்டியில் வழங்கப்படும் உதிதான்! பக்தர்களின் பயம் தெளிந்தது. அவர்களுக்கு உதரம் குளிரும் விதத்தில் ஐயனில் அதரமும் அசைந்து, வார்த்தைகள் வெளிப்பட்டன.

கரகரத்த குரலில் மராத்தியில் ஏதோ மொழிந்தார்; ஹிந்தியில் செய்யுள்கள் கூறினார். ஷீர்டி பாபாதான் பேசினார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. எங்கோ சாகும் தாஸனிடம் அவர் வருஷித்த வாக்கு மழையின் தூவானத்தைத்தான் இங்கே இவர்கள் பெறுகிறார்கள்.

ஸத்யஸாயி துள்ளி எழுந்தார். ஷீர்டி சரீரத்தைத் தொழுது தொழும்பு செய்துவந்த உத்தமரான அப்துல்லா பாபாவைத் தாம் கடைத்தேற்றி வந்ததாகத் தெரிவித்தார்.

அன்று அதே சமயத்தில் அப்துல்லா பாபா அமரருல கெய்தினார் என்று பிறகு ஊர்ஜிதமாயிற்று.

இங்கே, இவர் ஒரு பரிசுத்த ஜீவனிடம் சென்றார். மற்றொரு பரிசுத்த ஜீவன் இவரிடம் வந்ததைப் பார்ப்போம்:

1957ம் ஆண்டு நவம்பர் 8ந்தேதி வெள்ளிக்கிழமை. பூர்ணிமை நிலா வெளியே பொழிந்துகொண்டிருந்தது. சுக்ர வாரத்தையும் பௌர்ணமி திதியையும் உவக்கும் அம்பிகையாக ஸாயீச்வரி சயனித்திருந்தாள், பிரசாந்தி நிலயத்தில் தன் அறையில்.

ராமனுக்கு லக்ஷ்மணன் போல் ஸாயிராமனுக்கு இவர்என்று அடியாரால் நினைக்கப்பட்டவரும், ஏராளமான சொத்திருந்தும், எம்.. படித்திருந்தும், அவற்றையெல்லாம் மறந்து பாபாவின் அணுக்கத் தொண்டராக நிலயத்தில் அற்புத பஜனை பாடி வந்தவருமான இளைஞர் ஸ்ரீ ராஜா ரெட்டி, ஸாயீச்வரியின் ஒரு பாதத்தைப் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தார். ராதாகிருஷ்ணன் என்ற இன்னொரு அத்யந்த தாஸர் மற்றொரு பாதத்தை அமுக்கிக் கொண்டிருந்தார்.

இதென்ன! வெளிநிலவு இறுகிச் சுவரைத் துளைத்துக்கொண்டு வருகிறதா என்ன? அடியார் இருவரும் பார்த்துக்கொண்டேயிருக்க, ஓர் ஒளிக் கொழுந்து ஐயனின் அறைச் சுவரின் ஊடே புகுந்து உள் வந்தது; நேரே ஐயனை நோக்கிப் பறந்து வந்து அவரது திருமுடியில் புகுந்து மறைந்துவிட்டது.

கீதமலை ஸ்வாமி என்னிடம் ஐக்கியமாகி விட்டார்என்றார் பாபா.

நாகர்கோவிலில் நீண்ட காலமாக வசித்துவந்த புண்யாத்மா கீதமலை ஸ்வாமி. மலபாரில் புகழ் பெற்றதோர் மஹான்.அன்று தற்செயலாக இருவர் பாபாவின் அறையில் இருந்ததால் இது தெரியவந்தது. வெளி உலகு அறியாமல் இன்னம் எத்தனை புண்ய ஜீவ ஜோதிகள் இங்கே வந்து சிவ சக்தி ஜோதியில் கலக்கின்றனவோ, யாரே அறிவர்?