அத்தியாயம் – 42
சித்தக் களத்திலும், யுத்தக் களத்திலும்
பகைவரின் படைகளைப் பணியச்செய்து வெல்வதும், உக்ரம் வாய்ந்ததுமான அக்னியாம் பராசக்தியைப் பரம பதத்திலிருந்து வருமாறு அழைக்கிறோம். அச்சக்தி நம்முடைய ஸகல ஆபத்துகளையும் அழிப்பதாக!
– வேதத்தில் உள்ள துர்கா ஸூக்தம். 5
மோதாமல் காப்பது ஒரு லீலை. மோதியும் காப்பது இன்னொரு லீலை
கரக்பூரில் ஒரு மூன்று வயதுப் பிள்ளை கார் மோதி இருபது அடிகள் தள்ளித் தூக்கி எறியப்படுகிறான். ரத்த வெள்ளத்தில் மிதந்தவன் கே.ஜி. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறான். ‘முடிந்த சமாசாரம்’ என்றே நினைத்தபோது, மலரக் கண் விழிக்கிறான். “டாக்டர், கவலைப்படாதீங்க. பாபா என்னைத் தூக்கிண்டு கையால பிடிச்சுவிட்டார். எல்லாம் ஸரியாயிடுத்து” என்கிறான். ஆம், எல்லாம் சரியாகிவிட்டது! அத்தனை ரத்தம் கொட்டியிருந்ததே தவிர, காயம் என்று எதையும் காணோம். சின்ன எலும்பு முறிவுகூட இல்லை. பாலன் பலமும் இழக்கவில்லை.
டாக்டர் எஸ்.ஸி. தத்தா நைனிடாலிலிருந்து லக்னெளவுக்குக் காரில் போய்க் கொண்டிருக்கிறார். லால் குவான் என்ற ஊரில் சாலைக்குக் குறுக்கே திடீரென்று ஓர் ஐந்து வயதுப் பெண் ஓடுகிறது. ‘ப்ரேக்’ போட்டும் பயனில்லாத நிலை! ஆம், கார் மோதியேவிட்டது.
சிறுமி ஆறடி அப்பாலே போய் விழுகிறாள். கூட்டம் கூடி விட்டது. நடு நடுங்கிய தத்தா கையிலுள்ள பாபா படம் பொறித்த மோதிரத்தைப் பார்த்துக்கொண்டு, “ஸாயிராம்” என்கிறார். அந்த மஹாமந்திரத்தை இவர் சொன்னவுடன், சிறுமியின் கண் திறக்கிறது. டாக்டரிடம் தூக்கிப் போகிறார் தத்தா. “மைனர் சிறாய்ப்புத்தான்” என்று சொல்லி மருந்து போட்டு அனுப்புகிறார் டாக்டர். இப்படி அனந்தம்.
***
எங்கெங்குமே இருந்து அவர் காப்புத் தருகிறார் என்னும்போது பிரசாந்தி நிலயத்திலும், மற்றும் அனந்தப்பூர் ஒயிட்ஃபீல்ட் முதலான இடங்களிலும் அவரது ஸ்தாபனங்களுக்கென்றே மாபெரும் கட்டுமானப் பணிகள் நடக்கும்போது அங்கே அவரது ரக்ஷணை பூரித்து நிற்பதில் ஐயமென்ன?
ப்ரசாந்தி நிலயக் குடியிருப்புக்களின் பிரம்மாண்டமான விஸ்தரிப்பு, மஹோன்னதமான அனந்தப்பூர் மகளிர் கல்லூரிக் கட்டிடப்பணி இவற்றில் முக்கியமானதொரு பொறுப்பேற்றிருந்த பொறி இயல் நிபுணர் ஸ்ரீ பவராஜு ஸத்யநாராயணா இந்த மிகப் பெரும் வேலைகள் நடந்தபோது ஒரு சிறிய விபத்துக்கூட நடக்காததை வியந்து கூறுகிறார். ‘ஒரு தொழிலாளிக்குக்கூட ஒரு கீறல் ஏற்பட்டதில்லை’ என்று அடித்துக் கூறுகிறார். நம் பவரோக நிவாரண ஸத்யநாராயணரின் காப்புச் சக்தியையே காரணம் காட்டுகிறார் பவராஜு ஸத்யநாராயணா.
இதற்கு மாறாகவும் நடந்துவிடுமோ என்று நடுங்க வைத்த ஒரு நிகழ்ச்சியையும் தெரிவிக்கிறார்:
1972ல் பிரசாந்தி நிலயக் குடியிருப்புக்களின் நிர்மாணப் பணி நடந்து கொண்டிருக்கிறது. மேற்குப் பிரசாந்தியின் தென் கோடி ப்ளாக்கில் இரண்டாம் மாடிக்கு மேல் தளம் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். வேலை செய்பவர்களில் ஒருவர் ஸ்ரீ ஒய். ஸாய்ஜி ராவ் என்ற பொறி இயல் பட்டதாரி.
இவர் ‘புல்லிக்’ கயிறொன்றை அட்ஜஸ்ட் செய்யும்போது, அது அப்படியே இவரை இழுத்துக்கொண்டு போய்…
தடால் என்ற சப்தத்துடன் முப்பதடி உயரத்திலிருந்து ஸாய்ஜி ராவ் நிலத்தில் விழுந்துவிட்டார்.
நல்ல இளமைப் பருவத்தினர். இத்தனை கோரமாக துர்மரணம் உற்றாரே என்று ஒரு பக்கமும், நம் ஸ்வாமிக்கு மாளாத பழி ஏற்படுமே என்று ஒரு பக்கமும் நெஞ்சு அடித்துக்கொள்ள, மற்ற பணியாளர்கள் அவர் கிடந்த இடத்துக்கு ஓடினார்கள். அது சரீரமாக இருக்குமா, அல்லது ரத்த மாமிசப் பிண்டமாக இருக்குமா என்று கலங்கியபடி அருகே சென்றார்கள்.
அவர்கள் கண்டதென்ன? விருட்டென எழுந்தமர்ந்தார் ஸாய்ஜி. “பஞ்சு மெத்தையிலிருந்து எழுவது போலே!” என்கிறார் ஸ்ரீ பவராஜு.
எல்லோரையும் பார்த்து இளநகை செய்த ஸாய்ஜி, “நான் சொஸ்தமாக இருக்கிறேன்; சொஸ்தமாக இருக்கிறேன்” என்று இருமுறை உறுதி கூறினார்.
மலைமீதிருந்து ப்ரஹ்லாதனை உருட்டிவிட்டும் அவனை அது இம்மிகூட பாதிக்கவில்லை என்ற புராணம் பொய்யல்ல என்று நிரூபணமாயிற்று. ஆனந்தம் தாங்க முடியாத பக்தர்கள் ஸ்வாமியிடம் ஓடினர். திவ்யமுகத்தில் ஸர்வக்ஞ நகை எழில் செய்தது!
அடிபடாவிடினும், அதிர்ச்சியிருக்கலாம் என்பதால் ஸாய்ஜியை ஒருநாள் மருத்துவமனையில் ஓய்வுபெறச் சொன்னார்கள். அவரா கேட்பார்? “எனக்கு ஏதுமே இல்லை; வேலை செய்தே தீருவேன்” என்றார்.
ஸாய்ஜி சொன்னதற்கு ஸாயியின் ஒப்புதலும் கிடைத்து விட்டது. அவர் தொடர்ந்து பணியை ஏற்றார். ஒரு விநாடி கூட ‘ரெஸ்ட்’ இல்லாமல் ஆபத்ஸஹாயப் பணியைச் செய்ய ஐயன் இருக்கும்போது இவருக்கு எதற்கு ‘ரெஸ்ட்?’
***
பலவிதமான விபத்துக்களில் ஒன்றாகவே மூளைக் கோளாற்றையும் சேர்க்க வேண்டும். உடம்புக்கு ஏற்படும் கோளாறுகளை நோய் எனக் கூறலாம். இவற்றைத் தீர்ப்பதில் வைத்ய ஸாயியின் திறனை முன்பே கண்டோம். உடம்புக்கு இன்றி உள்ளத்துக்கு ஏற்படும் கோளாறோ, வியாதி என்பதைவிட விபத்துக்கே நெருக்கமானது. இறைவனின் தலைசிறந்த படைப்பான மனித அறிவானது கலங்கித் தாறுமாறாகச் செயல் புரிவதைவிடப் பெரிய விபத்து என்ன உண்டு?
ஆயினும் ஸாயி பக்த சிகாமணிகளைக் கொண்ட பல குடும்பங்களில் இப்படிப்பட்ட ஒரு மன நோயாளி இருக்கக் காண்கிறோம். அவர்களை ஸ்வாமி குணப்படுத்துவதையும் வெகு அபூர்வமாகவே காண்கிறோம். இதே குடும்பங்களில், ஏன், இம்மாதிரி சித்தக் கோளாறு உள்ளவர்களுக்கேகூட அவர் மற்ற நோய்களைத் தீர்க்கிறார், மற்ற ஆபத்துக்களை விலக்குகிறார், ஆனால் புத்தி மாறாட்டத்தை சொஸ்தம் செய்யாமல் விடுகிறார். உதாரணமாக முன்பே ஜஸ்டிஸ் எராடியின் மகனைக் கண்டோம். டாக்டர் பகவந்தத்துடைய ஒரு புதல்வனின் சித்த நோய் மேலும் முற்றிவிடாமலிருக்க பாபாவே ஒருமுறை எவரும் எதிர்பாராதபோது ‘ஸிரிஞ்ஜ்’ வரவழைத்து ‘லம்பார் பங்க்சர்’ செய்து, மூளையிலிருந்து சிறிது திரவத்தை வெளியேற்றினார். ஆனால் இதுவும் கோளாறு மேலும் முற்றாமலிருப்பதற்குத்தானேயன்றி, குணப்படுத்துவதற்கு அல்ல.
ஏன் இவ்விதம் மன நோயாளரை அவர் சொஸ்தம் செய்வதில்லை என்று யோசிக்கும்போது ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவர்கள் கூறியதுதான் பதிலாகக் கிடைக்கிறது. அவர்கள் சொல்வார்கள்: “என்னிடம் சித்தக் கோளாறு உள்ளவர்களை அழைத்து வந்து ஸ்வஸ்தப்படுத்தவேண்டும் என்று பல பேர் கேட்டுக் கொள்கிறார்கள். அப்போதெல்லாம் எனக்கு என்ன தோன்றுகிறதென்றால்: ‘இவர்களுக்கு புத்தி கோளாறாகியிருப்பதால் இவர்கள் செய்கிற காரியம் எதுவுமே புத்திபூர்வமானதல்ல. புத்திபூர்வமாக ஒரு காரியம் செய்தால்தான் அதற்கான விளைவை நாம் அனுபவிக்க வேண்டும். அதாவது நம்மைப்போல் புத்தி பூர்வமாகக் காரியம் செய்பவர்கள் தப்புச் செய்தால்தான் அது பாப கர்மாவாகி, அதற்காக நாம் பிற்பாடு கஷ்டம் அநுபவித்தாக வேண்டும். புத்தி பூர்வமாகச் செய்யாதவர்களுக்கோ, அவர்கள் என்ன தப்பு செய்தாலும் அதனால் கர்ம மூட்டை பாப மூட்டை ஏறுவதேயில்லை. ஏதோ பூர்வத்தில் செய்த தப்பான கர்மாவுக்காக அவர்களுக்கு இப்போது சித்தப்பிரமம் ஏற்பட்டிருந்தாலும், இன்றைக்கு நமக்குள் பாபமே சேராதவர்கள் யாரென்றால் அது இவர்கள் தான்! எனவே குணப்படுத்துவது என்ற பெயரில் இவர்களையும் நம்மைப் போலாக்கி, இவர்களுக்கும் பாபம் சம்பவிக்கும்படி ஏன் செய்யவேண்டும்? இப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது.”
அதாவது சில சமயங்களில் அதிர்ச்சியையே ஒரு வைத்தியமாக (shock-therapy) தருவது போல், மூளைக் கோளாறு என்ற விபத்து, அல்லது நோயை பகவான் சிலருக்குத் தந்திருப்பதே அவர்களுக்கு பாபம் என்ற மகா விபத்து அல்லது நோய் சேராமலிப்பதற்காகத்தான் எனலாம். எனவேதான் பாபா இதில் அதிகம் தலையிடவில்லையோ எனத் தோன்றுகிறது.
அவர் தலையிடுவதில்லை என்று ஏன் பெத்தப் பெயர் தருகிறீர்கள்? அவருக்கு மனநோயைத் தீர்க்கும் ஆற்றலேதான் இல்லையோ என்னவோ?” என்று சிலர் கேட்கலாம். இவர்களது வாயை அடைக்கும் விதத்தில் பாபாவினால் பைத்தியம் தெளிவிக்கப்பட்ட சில ஸீரியஸ் கேஸ்களும் உண்டு. “பைத்தியம்” என்றே மருத்துவரீதியில் சொல்லப்படுபவர்களையும் ஸ்வஸ்தப்படுத்தியிருக்கிறார்; பிறர் ஏவி விட்டு மாந்திரிகரீதியில் ஏற்பட்ட பைத்தியத்தையும் தெளிவித்திருக்கிறார். பின்னால் சொன்னதில் ஆவிகளின் ஆளுகையையும் சேர்த்து விடலாம். இவருக்கே பைத்தியம் தானோ என்று இவரது பிதாகூட சற்று ஸம்சயித்து வந்த பதினாறாம் வயசிலேயே ‘பித்தம் தெளிய மருந்தாக’ இருந்திருக்கிறார்.
ஒருவர் அடங்கா வெறி பிடித்த தமது பெண்ஜாதியைப் படாதபாடு பட்டு அழைத்து வந்தார். துணைக்கு இன்னொருவரும் உடன்வந்தார். புக்கப்பட்டணத்தில் இருந்த புண்யாத்மாக்களில் சிலர், “உம் மனைவிக்குப் பைத்தியமா? உமக்குப் பைத்தியமா? மோசடிப் பையன் ஒருத்தனை நம்பிப் போகிறீரே, பேசாமல் ஊருக்குத் திரும்பும்” என்று உபதேசித்தார்கள். ஆனாலும் அவர் விடாப்பிடியாக அவளை மல்லுக்கட்டி இழுத்து வந்தார். சித்ராவதிப் படுகையில் அவள் ‘ப்ரேக்’ போட்டுவிட்டாள்.
கணவர் அவளோடு அங்கேயே இருக்க, உடன் வந்த இன்னொருவர் பர்த்தியில் கர்ணம் வீட்டிலிருந்த பால ப்ரபுவிடம் வந்தார். அவரைப் பார்த்ததும், “எத்தனை வசீகரக் குழந்தை!” என்று வியந்தார். “இங்கே ஸாயி பாபா என்று…” என இழுத்தார். குமாரஸ்வாமி சிரித்தது. அச்சோ, அந்த உதட்டழகும், பல்லழகும்! “அய்யோ பாவம்!” என்று உருகிச் சொல்லிற்று. “அந்த அம்மா ஆற்றங்கரையில் அமளி துமளி பண்ணுகிறா. நீ அங்கே போய்க் குளி. அவளும் கொஞ்சம் அடங்கியிருப்பா. அவங்களையும் குளிக்கச் சொல்லி அழைச்சுக் கொண்டு வா” என்றது
ஒரு வழியாக அந்தப் பரதேவதை குளித்துவிட்டு வந்து சேர்ந்தாள். தம்பதி கொண்டு வந்திருந்த வாழைப்பழங்களை பால ஸாயி முன் வைத்தனர். (அந்நாட்களில் அவர் கையுறை ஏற்றுவந்தார்.) அதிலிருந்தே ஒன்றை பாபா எடுத்து அவளிடம் கொடுத்து உண்ணச் செய்தார். விபூதி சிருஷ்டித்துக் கொடுத்தார்.
அவ்வளவுதான். இவரது சுத்தப் பிரேமையில் மறைந்தது அவளது சித்தப் பிரமை.
கணவரைப் பார்த்து, “போய் அரிசி, காய்கறி வாங்கி வாருங்கள். யாரிடமாவது பாத்திரமும் இரவல் வாங்கி வாருங்கள். சமைத்துப் போடுகிறேன். ரொம்ப நேரமாகிவிட்டது” என்றாள்.
கணவரால் தம் காதுகளையே நம்ப முடியவில்லை. முற்றிய பைத்தியம் அதற்குள்ளா தீர்ந்து விட்டது? அவரால் தமது கண்களையும் நம்ப முடியவில்லை. உன்மத்த வெறிக் கூத்தாடும் அவள் முகமா இப்படி பவ்யமான பெண் முகமாக மாறிவிட்டது? இந்த மாறுதலைச் செய்த மஹா நுபாவனை, மஹா அநுபவமே வெளிப்படாமல் பச்சைப் பிள்ளையாக அமர்ந்திருப்பவனின் இன் முகத்தைப் பார்த்தார்.
அந்த இன் முகத்திலிருந்து உலக மக்களையெல்லாம் தன் பச்சைக் குழந்தைகளாகப் பார்க்கும் தாய்மையுடன், “வேண்டாம்மா! நீங்க ஏன் சமைச்சுக்கணும்? என்னோடேயே சாப்பிடுங்க!” என்ற பொன்மொழிகள் உதிர்ந்தன.
சுப்பம்மா கொணர்ந்த உணவுவகைகளைக் கதம்பமாகச் சேர்த்துப் பிசைந்தார் பால பாபா. தலைக்கு ஓர் உருண்டை கொடுத்தார். அடடா, அதன் சுவை! திவ்யப் பிரேமை என்பதன் சுவை இதுதானோ?
மற்றொரு சமயம் பழைய மந்திரத்தில் பக்தர்களை அடித்துப் புடைத்து ஹதாஹதம் செய்தான் ஒரு முரட்டு வெறியன். பாபா
அவனுடைய தலைமயிரைப் பிடித்து ஓர் ஆட்டம் ஆட்டியவுடன், பெட்டிப் பாம்பாக அடங்கி அவரது பாதத்தில் விழுந்தான். விபூதியை அவன் நெற்றியில் அப்பினார் விகிர்தர். அவனது சுகிர்தம் அப்படி! ஏழாண்டுப் பைத்தியம் ஏழு விநாடி ‘வைத்திய’த்தில் தெளிந்தது!
***
‘ஆவியே, ஆரமுதே!’ என்று ஆழ்வார் போற்றும் ஐயன், ஆவிகளின் சேஷ்டையைக் கண்டிப்பதில் அதி நிபுணர்தாம்! ஒரு முறை பழைய மந்திரத்தில் நாகமணியம்மாள் பேய் பிடித்த ஒரு பெண்ணின் பக்கத்திலேயே தெரியாத்தனமாகப் படுத்துறங்கிவிட்டார். நள்ளிரவில் அவள் தன் ஸ்வரூபத்தைக் காட்டத் தொடங்கியவுடன், நடுநடுங்கிப் போனார். வெளியே ஓடிவிடலாம் என்று கதவண்டை வந்து பார்த்தால், அடடா, கதவு வெளிப்பக்கம் பூட்டியிருக்கிறது! இந்தப் பெண் மற்றோருக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடாதென்று வெளியே பூட்டியிருக்கிறார்கள்.
‘இதோ துரத்தி வந்துவிட்டாள்! வகையாகச் சிக்கிக் கொண்டோம்; வகையாக மாட்டிக்கொண்டோம். தன்னை, கொன்றே விடப் போகிறாள்! ஸாயிராம்! நாகமணியம்மாவின் இதயம் கூவிற்று!
இதயநாதன் பூட்டிய அறைக்குள் வந்து நின்றார்! “நாகமணி பாய்” என்று மணிக்குரலில் அழைத்தார். பேய்ப் பெண்ணை வெறித்துப் பார்த்தார். பேயின் வெறி அடங்கியது.
மறுநாள் காலை அப்பெண்ணுக்குத் தைல நீராட்டி, சாம்பிராணி போட்டு அழைத்து வருமாறு அவளது உறவினரிடம் கூறினார். அவர்கள் அவ்விதமே செய்தனர்.
பாபா அவளது உச்சந்தலையில் கையை வைத்தார். அம் மாத்திரத்தில் அது சிறிதே வெடித்துத் திறந்துகொண்டது! அதற்குள் விரலை விட்டு, இரண்டங்குல நீளமுள்ள ஒரு புழுவை எடுத்தெறிந்தார்!
“அதுதான் பிசாசு” என்றார்.
அந்தப் பெண்ணின் சிரத்தை மீண்டும் தொட்டார். வெடிப்பு ஒன்று சேர்ந்து விட்டது!
முன்பு தம் மண்டையையே மும் முறை மாந்திரிகன் கீறுவதற்கு உட்படுத்திக்கொண்டும் ‘பேய்’ தெளியாதவர் இன்று ஒரு மண்டையைப் பிளந்தே பேயை ஓட்டிவிட்டார். அந்த ராக்ஷஸன் இவருக்குத் தந்த வலி கொடூரமானது. இன்று இந்தப் பெண்ணோ, “கொஞ்சம்கூட வலியே யில்லை” என்றாள்! நஞ்சமுதாக்கிய அபிராமவல்லியின் கரம் பட்டபின் எப்படி ஐயா, வலிக்கும்?
பம்பாயில் ஷிப்பிங் கம்பெனி நடத்திய ஆல்ஃப் டைட்மான்ட் ஜொஹான்னஸனுக்குப் பல எதிரிகள் பல விதத்தில் மாந்திரிகம், பில்லி சூன்யம் முதலியவற்றை ஏவிவிட்ட போதிலும் பாபாவின் திருநீற்றில் அவை யாவும் நீற்று விழுந்தது பற்றி ஒரு தனி காண்டமே எழுதலாம். ஜொஹான்னஸன் அத்தனை எதிர்ப்புக்களையும் சமாளித்து, தமது நிறுவனத்தையும் நியாயமான லாபத்துக்கு விற்றுவிட்டு, தமது ஊரான ஆஸ்லோ சென்று குடியும் குடித்தனமுமாக விளங்குவதற்கு பாபாதான் அங்குலத்துக்கு அங்குலம் உதவி புரிந்தார்.
பைத்தியம் என்றும், பேய் என்றும் எவரெவரையோ சொல்கிறோம். நாம் மட்டும் என்ன வாழ்ந்தோம்? எத்தனை வெறியாட்டத்தில், பேயான உட்பகை ஆட்டத்தில் பாழாகிக் கொண்டிருக்கிறோம்? இங்கும் சொஸ்தம் செய்யக் காத்துக் கிடக்கிறான் ஸத்யஸாயிநாதன்! நாம்தான் நிஜ சரணாகதி செய்யாமல் அவரைக் காத்துக் கொண்டே இருக்குமாறு நிறுத்திவைக்கிறோம்.
***
அடிபடுவதும், பொருள் இழப்பதும், கொலைபாவிகளின் கையில் சிக்குவதும், சித்தப் பிரமை பிடித்தாட்டுவதுந்தான் விபத்து என்றில்லை. ஒரு குடும்பத்தின், அல்லது சங்கத்தின், அல்லது தொழில் நிறுவனத்தின் அங்கத்தினரிடையே மன இசைவு இல்லாததால் ஏற்படும் சூழ்நிலையும் பெரிய விபத்துத்தான். இங்கே மனத்தை மாற்றும் காரியம் வந்து விடுகிறது. பாபா மற்ற விபத்துக்களில் அற்புதம் புரிவது போல் ஜீவ மன சுதந்திரத்தைச் சிதைத்துத் திடீர் மனமாற்ற அற்புதத்தைச் செய்வது துர்லபந்தான்.
விதிவிலக்காக இப்படியும் ஒரு சில செய்துதான் இருக்கிறார். ஆனால் நயமாகவும் பயமாகவும் எடுத்துச்சொல்லி அநேகரைத் திருத்தி, எண்ணற்ற குடும்பங்களில், சங்கங்களில், நிறுவனங்களில் ஒற்றுமை ஒளி வீச வைத்திருக்கிறார். இதற்காக அவரைக் கையெடுத்துக் கும்பிடக் கடமைப்பட்டவர் ஆயிரமாயிரவர்.
ஆனால் இதில் ஸ்வாரஸ்யமாக எடுத்துச் சொல்லும்படிப் பெரும்பாலும் இருப்பதில்லை. இவ்வினத்திலும் துர்லபமாக நடைபெற்ற அற்புதங்களில் ஓரிரண்டைப் பார்ப்போம்.
மாமனாரைப்படுத்தி, மனைவியைக் கொடுமைப்படுத்திய ஒரு வாலிபரிடம் சூக்ஷ்ம ரூபத்தில் சென்று, ஸ்தூலமாக அடி அடி என்று அடித்தும்கூட பாபா புத்தி புகட்டிய சம்பவம் ஒன்று உண்டு. (நமக்குத் தெரிந்து பாபா ஒருவரை அடிப்பது மிகமிக அபூர்வந்தான்.)
இன்னோர் உதாரணம்: அந்த இருபது வயது அபலையின் பெயர் ஆர்வி. அவள், அவளது கணவன், மாமியார் – மூவருமே குடகுக் காபித்தோட்டம் ஒன்றில் வேலை செய்யும் தொழிலாளிகள். பேதை ஆர்வி இருபது வயதுக்குள்ளேயே நாலு குழந்தைகளைப் பெற்று, நாலையும் வாரிக்கொடுத்தாள். இந்தத் துக்கம் போதா தென்று மூடர்களான அவளது மாமியாலும் கணவனாலும், “துக்கிரி, தோஷி” என்று ஓயாமல் தூஷிக்கப்பட்டாள். வாயால் திட்டியது மட்டுமல்ல; அவ்விருவரும் அவளை நன்றாக அடித்து நொறுக்குவதும் உண்டு.
1967, ஏப்ரல் 27ந் தேதி இந்தக் கொடுமை உச்ச கட்டத்தை அடைந்தது. அன்று ஆர்வியை அவ்விருவரும் ஆவி துடிக்கப் புடைத்துவிட்டனர். மறுநாள் தாயும் மகனும் சந்தைக்குச் சென்று விட்டனர். ‘இறைவனே அளித்த வாய்ப்பு’ என்று ஆர்வி எண்ணினாள்.
உத்தரத்தில் கயிற்றைக் கட்டிச் சுருக்குப் போட்டாள். ஆம், குடும்ப விபத்தைத் தீர்க்க முடியாமல் தற்கொலை விபத்தைத் தற்காப்பாகத் தேடி விட்டாள்! சுருக்குக்குள் தலையைக் கொடுத்துக்கொண்டு ஓர் எழும்பு எழும்பினாள்.
ஆனால் தூக்குக் கயிறுதானா இவளைத் துக்கத்திலிருந்து தூக்கிவிடும்? அதற்கென்றே ஒரு தீனதயாளன் இல்லையா?
சுருக்கு இவள் கழுத்தை நெரிக்கவேண்டிய அந்த விநாடிப் போதுக்குள் உத்தரத்தில் போட்டிருந்த முடிச்சே அறுந்துவிட்டது! இம்மாதிரி இறுதி நொடி மட்டும் காத்திருந்து அருள்வதுதான் அப்பன் பெருமை. தாம் அந்த நொடியைத் தவறவே விடமாட்டோம் என்ற ஸர்வ நிச்சயம் அவருக்கு!
புகழ் கொண்ட வித்வானாகில், தாளத்திலே இடத்துக்குச் சரியாக அவர் வரவேண்டுமே என்று ஸதஸ் ஆர்வமாகவும் கவலையாகவும் கவனித்துக் கொண்டிருக்கும்போது. அவரோ நிச்சிந்தையாக ஜதிகளைக் கோத்துக் கொண்டே போய், தாளத்தின் கடைசி வீச்சுக்குள் ததிங்கிணதோமை வளைத்துக் கட்டி ஜம்மென்று இடத்துக்கு வந்து விடுவார். இந்தக் கலையம்சம் பாபாவின் விபத்து ரக்ஷணத்தில் அருமையாகப் பிரகாசிக்கிறது. கடைசிவரை ஹாயாக இருப்பது போலிருந்து, ஒரு க்ஷணத்தின் நுண்துகளுக்குள் புகுந்து விளையாடி விடுவார்!
இப்போது அப்படித்தான் கழுத்தை வளைத்த சுருக்கு இறுகும் விநாடிக்குள், மேலே முடிச்சை அறுபட வைத்தார்.
கயிறு அறுந்து தடாலென்று விழுந்தாள் ஆர்வி.
தற்கொலை செய்துகொள்ள எண்ணிய தவற்றுக்கு தண்டனையாகவோ என்னவோ சிறு காயம் ஏற்பட வைத்தார்.
கீழே விழுந்த ஆர்வியின் முன் ஓர் ஒளிப்பிழம்பு ஜ்வலித்தது! மஞ்சள் அங்கியில் மங்கள ஸ்வரூபன் நின்றான்!
அவளை நோக்கிப் புன்னகைத்தார் ஸ்வாமி. மறைந்தும் விட்டார்.
“முதலாளி ஐயா வீட்டு பஜனை ஹாலில் மாட்டியிருக்குமே, அந்த சாமியார்னா இவரு!” என்று வியந்து கொண்டாள் ஆர்வி. தான் தூக்கில் தொங்காமல் வாழவைத்த அவர் தன் துயரும் தீர்ப்பார் என்று அவளுக்கு ஆழ்ந்த நம்பிக்கை பிறந்து விட்டது. சாவதை மறந்து வாழ்வதில் ஆர்வம் கொண்டுவிட்டாள் ஆர்வி.
‘எசமானியம்மாளிடம் இந்த விவரத்தைச் சொல்லலாமா? இதைச் சொல்வதானால் மாமியாரும் புருஷனும் கொடுமைப்படுத்துவதையும் சொல்லும்படியாகும். அதனால் என்னென்ன விளைவு ஏற்படுமோ?’ என்று யோசித்துப் பேசாமலே இருந்து விட்டாள்.
இவள் பேசாதிருந்தால் ஸ்வாமியின் வாயை அடைத்துவிட முடியுமா? அவர் பரம பக்தையான காபித் தோட்ட முதலாளி மனைவியின் கனவில் தோன்றினார். ஆர்வி சமாசாரம் முழுவதையும் சொல்லி மறைந்தார்.
அப்புறம் அவளுக்கு அடித்ததே யோகம்! தங்கள் பகவானால் அத்புதமே காக்கப்பட்டவள் ஆர்வி என்றறிந்தவுடன் முதலாளி வீட்டார் அவளுக்கு ஏக உபசாரம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். அதைப் பார்த்து மாமியும் கணவனுங்கூட அவளால்தான் தங்களுக்கு மேன்மை என்றுணர்ந்து, முன்பு அவளைப் படுத்தியதற்கு வட்டியும் முதலுமாக அன்பைச் சொரியத் தொடங்கினர்!
திட்டும், அடியும், கோபமும், சோகமும், கதறலும் நிறைந்த ஒரு பாட்டாளிக் குடும்பத்தில் இப்படியாக ஸாயி நாதனின் அவ்யாஜ கருணை அன்பையும் ஆனந்தத்தையும் பொலிவித்தது!
இன்னொரு காபித் தோட்ட முதலாளி – தொழிலாளி சம்பந்தப்பட்ட விஷயமொன்றை இங்கேயே கூறிவிடலாம். நாம் நன்கு அறிந்த ஸாகம்மாதான் அந்த முதலாளி.
சாதாரணமாக முதலாளித்துவ கெடுபிடிகளே இல்லாத அந்த அம்மாளுக்குத் தான் மிகவும் விரும்பிய வைர மோதிரம் களவு போனதும் மனப்போக்கே சற்று மாறிவிட்டது.
அவ்வம்மை புட்டபர்த்திக்கு வந்தபோது அங்கேயே மோதிரம் காணாமற் போயிற்று. ஸ்வாமியிடம் முறையிட்டார். “ஒரு பாரம் தொலைந்தது என்று சந்தோஷப்படு!” என்று கூறி ஸ்வாமி ஜோக் அடிக்கலானார்.
அம்மாளுக்கோ மோதிரத்திடம் இருந்த பாசத்தில் எந்தச் சமாதானமும் எடுபடவில்லை. தம்முடன் வந்த பணியாட்களிடம் சந்தேகம் உண்டாயிற்று.
ஊருக்குத் திரும்பிய பின் வேலைக்காரர்களைக் கொடுமை செய்யலானார்.
பிற்பாடு பாபா அவ்விடத்துக்கு விஜயம் செய்தபோது, நிரபராதிகளான அவர்கள் பாபாவிடம் முறையிட்டனர்.
ஸாகம்மாளின் பொருட்டுச் செய்ய விரும்பாத லீலையை இவ்வபலையர் பொருட்டுச் செய்ய உளம் கொண்டார் தீனநாதன்.
ஸாகம்மாளின் அவுட்–ஹவுஸில் காப்பி அருந்திக் கொண்டிருந்த ஸ்வாமி பக்கத்துச் சுவரை ஒரு தட்டுத் தட்டினார். சுவரிலிருந்து மின்னி வந்தது, துள்ளி வந்தது மோதிரம்!
“ஏன், நிரபராதிகளைக் குற்றம் சாட்டிக் கஷ்டப்படுத்தினாய்?” என்று அம்மையாரைக் கடிந்துகொண்ட ஐயன் உண்மையான குற்றவாளி இன்னார் என்பதையும் தெரிவித்தார்.
ஸாகம்மாள் வீட்டில் இடைக்காலத்தே ஏற்பட்ட ஸௌஜன்யக் குறைவு என்ற விபத்து நீங்கிற்று.
எளியாரை வலியார் வாட்டினால், வலியாரைத் தெய்வம் வாட்டும் என்பது பழமொழி. ஸாயிபகவான் வாய்ப்பேச்சால்தான் ஸாகம்மா போன்ற வலியார்களையும் வாட்டுகிறார். அதுவும் சிறிது போதே இப்படிச் செய்தே பல அபலைகளை, அநாதைகளைக் கொடுமையிலிருந்து மீட்டிருக்கிறார்.
**
ஐயோ, நம்மால் தீர்த்துக்கொள்ள முடியாத அவஸ்தையில் மாட்டிக்கொண்டு விட்டோமே! என்று நமக்கு வியர்த்துவிடுகிறபோது. வியப்பூட்டும் விதத்தில் விகிர்தனின் வியன் கருணை அந்தச் சிக்கலை நீக்கி, நம்மை உருக வைக்கிறதே, அதை எவ்வளவு எழுதினாலும் முடியாது. உதாரணமாக,
வேங்கடமுனி தம்பதியர் உலகம் சுற்றும் பயணம் தொடங்கினார்கள். அதில் முதல் கட்டமாகப் பாரிஸுக்குச் சென்றார்கள்.
முதல்நாள் ஊர் சுற்றிப் பார்க்கும்போது தங்களிடமுள்ள பயணிகள் செக்குகளில் சிலவற்றைக் காசாக்கிக் கொண்டு ‘ஷாப்பிங்’ செய்ய எண்ணினார்கள். செக் மாற்றுவதற்காகத் தமது சிறு கைப்பையைத் திறந்த ஸுசீலம்மாவுக்கு ‘ஷாக்’ அடித்தது. செக்குக் கத்தைகள் கொண்ட ஃபோல்டரைக் காணோம்!
அச் சிறு கைப்பையை நன்றாகத் துழாவினார்கள். அதிலிருந்தவற்றையெல்லாம் கவிழ்த்துக் கொட்டினார்கள். என்ன செய்து என்ன? காணாமற்போனது போனதுதான்.
பம்பாயை விட்டுக் கிளம்பு முன் ஃபோல்டரைப் பார்த்த ஞாபகம் அம்மாளுக்கு. எனவே அது இந்தியாவிலேயே கெட்டுப் போயிருக்கவும் கூடும். இங்கே இவர்கள் மகத்தான உலகப் பயணத் திட்டத்தின் முதல் கட்டத்திலேயே ஹோட்டல் பில்கூடக் கொடுக்கப் பணமில்லாமல் அவலமாக நிற்கிறார்கள்!
“அந்த சமயத்தில் அவர்கள் செய்த காரியம் அத்யந்த ஸாயி பக்தர்களாயில்லாத எல்லோருக்கும் முழுப் பைத்தியக் காரத்தனமாகத் தோன்றும். ஸாயி பக்தர்களுக்கோ புத்திசாலித்தனமாகச் செய்யக் கூடிய காரியம் அது ஒன்றே எனத் தோன்றும்” என்று இந் நிகழ்ச்சியை வர்ணிக்கும் மர்ஃபெட் கூறுவார். அவர்கள் செய்த அந்தக் காரியம் என்ன?
தங்களிடம் இருந்த ஒரு சில ஃப்ராங்குகளைச் செலவழித்து ஸ்ரீ ஸத்ய ஸாயிக்கே ஒரு கேபிள் கொடுத்தார்கள். S.S.S.க்கு S.O.S!
அத்தம்பதியரின் உத்தம பக்தியைப் பாருங்கள்! கண்டிப்பாக ஸாயீசனின் உதவி வந்துவிடும் என்ற தெளிவில் மறுபடி ஷாப்பிங் கிளம்பினர். இழந்த செக்குகள் திரும்ப வந்து அந் நாட்டுப் பணமாக மாற்றிய பின், என்னென்ன பண்டங்கள் வாங்கலாமென்று பார்த்து, குறித்துக் கொள்வதற்காக இப்போதே கடைகளுக்குச் சென்றார்கள். இப்பேர்ப்பட்ட நம்பிக்கையை வணங்கத்தான் வேண்டும்.
பிற்பாடு வாங்க வேண்டிய பண்டங்களைக் குறித்துக் கொள்வதற்காக நோட்டும் பென்ஸிலும் எடுக்க அதே கைப்பையைத் திறந்தார் ஸுசீலம்மா.
ஷாக் அடித்தது. முன்பு போலல்ல. அது சொரேலென்று வாடவைத்த ஷாக்; இது கலீரென்று மலரவைத்த ஷாக்.
கைப்பையைத் திறந்தவுடனே, மேலேயே அந்த செக்குக் கத்தை விம்மிக் கொண்டு விரிந்து நிற்கிறது ஸாயிப் பிரபுவின் காருண்யத்தைப் போலவே! அயர்ந்து நின்ற அடியாருக்காக அயல்தேசத்துள் ரகசியப் புயலாய் வந்த காருண்யம்!!
“டிக்கட் வாங்காத பயணியாக நான் உங்களுடனேயே வருகிறேன்” என்று பகவான் தம்மிடம் விடைபெறும் பக்தரிடம் சொல்வதுண்டு. பக்தர் வெளி தேசம் சென்றால் டிக்கட் மட்டுமின்றி பாஸ்போர்ட், வீஸா இவையும் இல்லாமல் தொடர்கிறார் மார்க்கபந்து!
***
மனிதர்களுக்கு நேரக்கூடிய இன்னல்களுக்குக் கணக்கு வழக்கில்லை. அத்தனை விதத்திலும் ஸ்வாமி காத்தருளுவதற்கும் ஓரிரு திருஷ்டாந்தங்களாவது இல்லாமலில்லை. சொல்லிக் கொண்டே போகலாம்.
உதாரணமாக ஒரு வெறி பிடித்த காளை பிரசாந்தி நிலய வாஸினி ஒருவரை நோக்கித் தலைதெறிக்க ஓடியபோது அதைத் தடுக்க வொண்ணாமல் யாவரும் ஸ்தம்பித்து நின்றனர்.
இதோ, ராட்சத மாட்டின் கொம்புகள் அவள் மீதே உராய்ந்துவிட்டன!
அந்த நொடிப் பொடியில் ரக்ஷணை வந்துவிட்டது! அவளுடைய சேலை மட்டுமே தார் தாராகக் காளையின் கொம்பிலே சிக்கி வந்தது! அவளுக்குத் துளிக்கூடக் காயமில்லை!
திசை திருப்பிக்கொண்டு சென்றுவிட்டது உன்மத்தக் காளை.
மாடியிலிருத்து அந்த அம்மாளைப் பார்க்கிறார் ப்ரேம பகவான். தமது மார்பைத் தடவிக்கொண்டு நகர்கிறார்! தியாக ஸாயி தமது திருமார்பிலேயே காளையின் தாக்குதலை ஏற்றாரோ? நப்பின்னையை மணக்க ஏழு உக்ர காளைகளின் கொம்பைப் பிடித்து உடல் நோகப் பொருதான் கோவிந்தன். இங்கே சூக்ஷ்ம சரீரத்தாலேயே காளையை அடக்கிய அபிநவ கோவிந்தன் ஸ்தூல சரீரத்திலும் அதன் எதிர் விளைவை அநுபவித்தானோ?
இங்காவது மாடு அம்மாள் மீதே மோதிவிட்டது என்று சொல்லாமல் ஒரு மில்லி மீட்டர் விலகியிருந்திருக்கலாம். ஆனால் இப்படிக்கூடச் சொல்லமுடியால் அந்த அம்மாளுடைய பெண்ணின் தலையிலேயே நேராக ஒரு கனமாக டிரங்க் விழுந்தும் அவள் தலை அப்பளமாக நொறுங்காத அதிசயத்தையும் பிரசாந்தி நிலயம் கண்டிருக்கிறது. பிறகு பாபா அவள் பக்கம் வந்தபோது “இந்த ஸாயி இல்லாவிட்டால் இத்தனை நாழி சித்ராவதிக்கு (ருத்ர பூமிக்கு)ப் பிரயாணமாயிருப்பாய்!” என்று புன்னகைத்தார்.
***
இதுவரை பெரிதான இடர்ப்பாடுகள் பலவற்றைப் பார்த்தோம். ஆனால் ஸ்வாமியின் அருள் சின்னச் சின்ன சங்கடங்களையும் தீர்த்துவைக்க இதே விரைவோடு வந்து குதிக்கிறது. சங்கடஹர சதுர்த்தியில் அவதரித்த அவர்போலக் கோடிக்கணக்கானவர்களின் அற்ப சங்கடங்களையும் தீர்த்தவர் எவருண்டு?
சுவரில் ஆணி அடிக்கும்போது அது இறங்கவில்லையா; ஸ்விட்ச் போடப்போட இடத்துக்கு வராமல் இடக்குப் பண்ணுகிறதா; மழைக் காலமானதால் கிழிக்கக் கிழிக்க வத்திக் குச்சி ஏற்றிக் கொள்ள மறுக்கிறதா; இசகு பிசகாக மூடிய ஹார்லிக்ஸ் பாட்டில் மூடியைத் திறக்க முடியவில்லையா; உதறி உதறிப் பார்த்தும் பேனா எழுதாமல் சண்டித்தனம் செய்கிறதா இவை போன்ற அல்பமான விஷயமாகத்தான் இருக்கட்டும், ஸ்வாமியை ஆழ நினைத்த மாத்திரத்தில் அவர் காரியத்தை நடத்திக்கொடுப்பது பல்லாயிரவரின் அன்றாட அநுபவம்.
‘ஒவ்வொரு எறும்பின் காலடி ஓசையைக்கூட பகவான் கேட்கிறார்’ என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர். ஸாயி பகவான் கேட்பது மட்டுமல்ல; அந்த ஓசை கொஞ்சம் சிறுத்தால்கூட உடனே அந்த சிற்றெறும்பின் சின்னஞ் சிறு காலில் ஏற்பட்ட ஊனத்தை பரிந்து தடவி சொஸ்தப்படுத்துவான்!
***
ஸமுதாய விபத்துக்களேயான தொழிலகப் பூசல்களுக்கு ஸ்வாமி மருந்து தருவதையும் அவரது விபத்துத் தடுப்புக்களில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.
கமானி தொழிலகங்கள், ஸாண்டூர் இரும்பாலை போன்ற இடங்களில் தொழிலாளி–முதலாளி நல்லிணக்கம் பற்றி ஸ்வாமி ஆற்றியுள்ள அற்புத உரைகளைப் படித்தால், ஸ்வாமியிடம் நெருங்கிய தொடர்பு கொண்ட பல பிரமுகர்களின் தொழில் நிறுவனங்களில் வேலை நிறுத்தம், கதவடைப்பு போன்ற விபத்துக்கள் நேராதது ஏன் என உணரலாம். முதலாளிகளின் பணப்பேராசையையும், கெடுபிடியையும் கண்டிக்கும் ஸ்வாமி அதே சமயத்தில் கடமையைச் செய்யாமல் உரிமைகளை வலியுறுத்திப் பயனில்லை என்பதைத் தொழிலாளிகளின் மனத்தில் பதியுமாறு விளக்குவார். முதலாளி – தொழிலாளி என இரு தரப்பாகப் பிரிப்பதே தவறு என்றும், இவர்கள் ஒரே நாணயத்தின் இரு புறம் போன்றவர் என்றும், இவர்களுள் யார் பெரியவர் என பலப் பரீட்சை பார்ப்பது ஒரு மனிதனின் வயிறும் இதயமும் பலப் பரீட்சை செய்வது போலத்தான் என்றும் உணர்த்துவார்.
***
தனி நபர்கள், குடும்பங்கள், நிறுவனங்கள் இவற்றோடு பாபாவின் ஆபத் சகாயம் நின்று விடவில்லை. நம் தேசத்துக்கே இடர் ஏற்படுகையில் பெருங்காப்பாக நிற்கிறது அவரது அருட்சக்தி. இப்படித் தேசிய விரோதிகளைத் தோல்வியுறச் செய்த திவ்ய லீலைகளை, ஒரு ஸாயி பக்த குடும்பத் தொடர்போடு தொடங்குவோம்:
நாகாலாந்தில் நீண்ட நெடுங்காலமாக நடந்து வந்த வன்முறைகளை வாசகர் அறிவர். 1964 ஏப்ரலில் நாகர்கள் கட்டுக் கடங்காமல் அக்கிரமத்தில் இறங்கினர். அதை ஒரு படையெடுப்பு என்றே சொல்லிவிடலாம். 14ந் தேதி வன்முறை உச்ச கட்டத்தைத் தொட்டது.
ஸாயி பக்தரான மாவட்ட மாஜிஸ்திரேட் ஸ்ரீ காயனாவின் வீட்டுக்கு 23 ஹவுஸ் கார்ட்களைக் காவல் வைத்தும் பயனில்லை. காம்பவுன்டைச் சுற்றி வளைகள் தோண்டிக்கொண்டு ஏகப்பட்ட கலகக்காரர்கள் அவற்றில் பதுங்கிப் பங்களாவை நோக்கிக் குண்டுமாரி தொடங்கிவிட்டனர்!
எரிமலை ஆபத்து உள்ள ஊராதலால் பங்களாச் சுவர்களோ துப்பாக்கி ரவைகளை எதிர்த்து நிற்க முடியாதபடி லேசாகவே இருந்தன. ‘விஸ், விஸ்’ என்ற சுவரைத் துளைத்துக்கொண்டு தோட்டாக்கள் உள்ளே வந்தபடி இருந்தன. 14ந் தேதி இரவு ஏழரை மணியிலிருந்து மறுநாள் காலை நாலரை வரையில் இப்படிச் சோனாமாரி! மாஜிஸ்திரேட்டும் மனைவி மக்களும் தரையோடு தரையாக மேஜை, கட்டில்களின் அடியே ஒட்டிக்கொண்டு கிடக்கிறார்கள். இவர்களை உராய்கிறாற்போல் தோட்டாக்கள் பறந்து கொண்டிருக்கின்றன. தடுப்பாக இவர்கள் விடுக்கும் ஆயுதம் ஸாயி நாமம்தான். “ஸாயிராம் ஸாயிராம்!”
காலை நாலரைக்குக் காவல் துறையினர் கலகக்காரரை அடக்கி வெளியேற்றிய பிறகுதான் காயனா குடும்பத்தினர் ஆசுவாஸப் பெருமூச்சு விட்டார்கள்.
வீட்டிலே காலை வைக்க முடியாதபடி 485 தோட்டாக்கள்! ஆனால் ஓர் உயிர்ச் சேதமில்லை. காயம்கூட இல்லை!
ஏதோ பூர்வகர்மாவுக்காக ஓரிரவெல்லாம் பதைத்துக் கலங்கியதோடு போயிற்று!
“Bullet-proof Name” என்று ஸாயி நாமாவை ஸ்ரீ காயனா வர்ணிப்பது நியாயம்தானே? அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும் அச்சமில்லாதபடி… வாழ்வுதரும் பதம் அந்நாமமே யன்றோ!
***
கலக நாகரிடமிருந்து காயனாவைக் காத்த நாயனா, ஜாம்நகரில் பாகிஸ்தான் விமானப்படையெடுப்பின்போது புரிந்த அருளுக்காக நம் தேசமே அவருக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறது!
ஜாம்நகர் மன்னர் காலஞ்சென்ற திக் விஜய ஸிங்கும் அவரது மனைவியாரும் பாபாவின் பரம பக்தர்கள். 1965 ஸெப்டெம்பரில் பாகிஸ்தான் வாலாட்டம் தொடங்கியபோது நம் பகவானை சரண் புகுந்தனர் ராணுவ ரீதியில் நடப்பதற்கு மேலாகத் தெய்வ பலத்தையே நம்பியிருந்த தம்பதியர்.
ஐயனும் அளப்பருங் கருணையுடன் பகைவரின் குண்டுகளிலிருந்து, விமானப் படையெடுப்பிலிருந்து ஜாம்நகரைக் காத்தார். “நான் உங்களுக்குத் துணை நிற்கிறேன்”
என்று பாபாவே அங்குள்ள நமது விமானப்படையினருக்கு அனுப்பிய செய்தி அவர்களுக்கு எல்லையற்ற தெளிவும், ஸேவாநெறியும் ஊட்டியது.
பாகிஸ்தானியர் வீசிய குண்டுகள் ஜாம் நகர் விமான தளத்தில் விழாமல், குறி தவறி எங்கெங்கோ சென்று விழுந்து வெடித்ததாக நமது விமானப்படையினரிலேயே பலர் சாட்சியம் தருகிறார்கள்.
அச்சமயம் பல இந்திய பைலட்டுகளுக்கும், அவர்களை நினைத்துத் தவித்துக்கொண்டிருந்த குடும்பத்தினருக்கும் பாபா பிரத்யக்ஷ தரிசனம் தந்து தமது அபய ஹஸ்தத்தாலும், முல்லை நகையாலும், ஒளி சொட்டும் பார்வையாலும் உத்ஸாஹமூட்டியிருக்கிறார். “ஆசீர்வாதம் செய்யவே இதோ வந்து நிற்கிறேன்!” என்று காதாரக் கேட்கும்படி சொல்லிக்கொண்டு பாபா ஒரு விமானப்படை அதிகாரியின் மனைவி கண்ணாரக் காணுமாறு தரிசனம் தந்து மறைந்தார். அதே சமயம் அவரது கணவரைச் சிதைத்து சின்னபின்னமாக்கியிருக்க வேண்டிய ஒரு வெடிகுண்டு நூறு கஜங்கள் தள்ளி விழுந்து வெடித்தது!
பிற்பாடு ஒரு முறை பாபா நேரிலேயே ஜாம் நகருக்கு விஜயம் செய்து ஜாம் ஜாமென வரவேற்பும் பெற்றார். அங்கிருந்த ஜவான்கள் அப்போது அடைந்த பக்தி எழுச்சியை என்னென்பது?
அவர்களுக்கு “ஸைனிக் ஸ்கூல் பாய்ஸ்” என்று பெயர். இதன் சுருக்கமாக எஸ்.எஸ்.பி. என்ற எழுத்துக்கள் பொறித்த பாட்ஜுக்களை அவர்கள் அணிந்திருப்பது கண்ட பாபா, சிரிப்பு கொழிக்கும் ஸுந்தர் முகத்தோடு, அடியாரைத் தாமாகவே காணும் அத்வைத ஸீந்தரத்தோடு, “S.S.B. -Sathya Sai Baba” என்றார்!
இதன் பின் ‘ஸநாதன ஸாரதி’ ஆசிரியர் சொல்வது போல் ஸௌராஷ்டிரமே ஸாயிராஷ்டிரமானதில் விந்தை என்ன?
ஸௌராஷ்டிரம் மட்டும்தானா? இந்த நானிலத்தையே அவர்தான் ரக்ஷிக்கிறார் என்பது அவரது மெய்யடியார் நம்பிக்கை. அதிலும் பாரத ராஷ்டிரத்தைப் பரிந்து காக்கிறார். ஜாம்நகர் விமான தளத்தை மட்டுமின்றி, தேசத்தையே சீன, பாகிஸ்தான் படையெடுப்புக்களில் அவரது அருட்சக்தி காத்திருக்கிறது என்று பக்தர் நம்புவதற்கான காரணங்களை இங்கு பார்க்கலாம்:
1962-ம் ஆண்டு நவம்பரில் சீனப் படையெடுப்பினால் என்ன நேருமோ என்று தேசமே கதி கலங்கிக் கொண்டிருந்த போது, பிரசாந்தி நிலய அடியார்கள், அம்மாதம் 23-ந் தேதி ஸ்வாமி ஜயந்தியைக் கொண்டாட ஏற்பாடு செய்யலாமா என மிகவும் தயக்கத்துடன் அவரையே வினவினர்.
“இந்த வருஷம் என்ன, எந்த வருஷமுமே எனக்கு ஜயந்தி கொண்டாடி ஒன்றும் ஆகவேண்டியதில்லை. ஆனால் பக்தர்களின் திருப்திக்காகச் செய்கிறோம். பேஷாக இந்த ஆண்டும் செய்வோம். பிறந்த நாளன்று சீன அபாயம் ஓடியே போயிருக்கும்” என்றார்.
அடுத்த சில தினங்களில் நடந்ததோ அவரது வாக்கில் அவநம்பிக்கை உண்டாக்குவதாகவே இருந்தது. சீனர் மேன்மேலும் முன்னேறிக் கொண்டிருந்தனர்.
ஆயினும் கடைசியில், நாளைக்கு ஸ்வாமி ஜயந்தி என்றால், இன்று, நவம்பர் 22ந் தேதி, சீனர்கள் பின்வாங்கியேவிட்டனர்! போர் நிறுத்தம் ஏற்பட்டேவிட்டது!
சீனப்படை எடுப்பு குறித்து இதுவரை தளபதிகள் உட்படப் பலர் புஸ்தகங்கள் எழுதியிருக்கிறார்கள். ஆயினும் அன்று சீனர்கள் போரை நிறுத்தும்படியாக என்ன நேர்ந்துவிட்டது என்பது இன்றும் புரியாத புதிராகத்தான் இருக்கிறது. அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘ஸெவந்த் ஃப்ளீட்’ என்ற கடற்படை பாரதத்துக்கு உதவி செய்யப் பஸிஃபிக்கில் புறப்பட உத்தரவானதாகவும், அது காரணமாகவே சீனர் பின்வாங்கியதாகவும் அநுமானத்தின் மீது சொல்லப்படுகிறதேயொழிய, அறுதியிட்டு உறுதியாக எவரும் காரணம் சொல்லக் காணோம். எனவே ஸாயி பக்தர்கள், தங்களது பகவானே வாக்குப்படி ஜயந்தியன்று முதல் நாள் அவர்களைப் பின்வாங்கச் செய்து நம் தேசத்தை ரக்ஷித்துக் கொடுத்தார் என்று நம்புவதற்கு முகாந்திரம் இருக்கத்தானே செய்கிறது?
இப்படியேதான் 1965 அக்டோபரில் பாகிஸ்தான் போரில் தேசம் முழுவதும் எமர்ஜென்ஸியும் இருட்டடிப்புமாக இருந்த போது பாபா மாபெரும் அளவில் தசரா விழாவுக்கும், வேதப் பெரு வேள்விக்கும் ஏற்பாடு செய்தார். முன்பு 1962ல் பாபாவின் திட்டமே நிறைவேறிக் கண்டிருந்தும்கூட, இப்போது. பக்தர்கள் கலங்கத்தான் செய்தனர். ஸாயி ஸங்கல்பம் இப்போதும் நிறைவேறவே செய்தது. தசரா வருமுன்னரே இருட்டடிப்பு போய் விட்டது. பக்தரின் மன இருட்டும்தான்! அமோகமாக நடந்தது விழா!
பிற்பாடு பங்களா தேசப் போரின்போதும் அவர் அது இந்தியாவுக்குள் நுழையாது என்றே கூறிவந்தார். “முன்பு சீனாவையும் பாகிஸ்தானையும் இந்தியா எதிர்த்ததைவிட இந்த பங்களா தேசப் போரில் நம் தார்மிகப் பாரம்பரியப் பண்பு கொழுந்து விட்டெரிகிறது. அப்போதெல்லாம் நம்மை எதிர்த்தவர்களை நாம் எதிர்த்தோம். இது எந்த நாடும் செய்வதுதான். ஆனால் இப்போதோ அண்டை நாடான கீழ்வங்கம் நம்மை நம்பி அடைக்கலம் புகுந்துவிட்டது என்பதற்காகவே, ஸுக்ரீவனுக்காக ஸ்ரீராமன் வாலியுடன் போர் தொடுத்தது போல் பாரதம் போரில் இறங்கியிருக்கிறது. நட்பு, சரணாகத ரக்ஷணம் ஆகிய நற்பண்புகளுக்காக நடக்கும் இப்போரில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்” என்று ப்ரசாந்தி நிலயப் பிரசங்கத்திலேயே கூறினார்.
1971 டிஸம்பர் மூன்றாம் தேதி பாகிஸ்தான் இந்திய விமானப் படைத் தளங்களின் மீது குண்டு வீசியவுடன், “நம் எல்லைக்குள் போர் நுழைந்துவிட்டதே!” என்று அடியார் பதைத்தனர்.
“இல்லை, நான் உள்நாட்டு வாழ்வையும், சாமான்ய மக்களையும் யுத்தம் தொடாது என்கிற அர்த்தத்திலேயே சொன்னேன். என் வார்த்தையை நம்புங்கள். சென்னையில் இம்மாதம் 22, 23 தேதிகளில் நமது அகில இந்திய மகாநாடு நடத்தியாக வேண்டும்.’ எல்லா மாநிலங்களுக்கும் அழைப்புகள் அனுப்பிப் பிரதிநிதிகளை வரவழைக்க ஏற்பாடு செய்யுங்கள்” என்று உறுதியுடன் பகர்ந்தார் பாபா.
“அவர் இத்தனை சொல்லியும் அஸ்தியில் ஜுரத்துடன் தான் ஸாயி ஸ்தாபனத்தார் ஏற்பாடு செய்தார்கள். பாபா சொன்னா ராம், ‘என்ன நடந்தது?’ என்று உலகம் சிரித்து விடப் போகிறதே, பகிரங்கப் பிரகடனம் செய்து ‘ஸநாதன ஸாரதி’யிலும் பிரசுரித்து விட்டாரே!” என்று தங்கள் ஸ்வாமியைப் பற்றி அவர்களுக்குக் கவலை!
டிஸம்பர் 17 பங்களா யுத்தம் முடிந்தது.
யுக்தமாக நடந்தது அகில இந்திய ஸாயி ஸமிதி மகாநாடு.
பங்களா யுத்தம் தொடங்கிய பின் பாபா அதன் முடிவைப் பற்றிச் சொன்னார் என்பது மட்டுமில்லை. போர் ஆரம்பிப்பதற்கு ஐந்து மாதம் முன்பே அது மூளப் போவதையும் சூசனையாக உணர்த்தியிருக்கிறார். பங்களா போரின் போது கப்பற்படை சேநாபதியாக இருந்த அட்மிரல் எஸ்.எம். நந்தாவின் அநுபவம் இதற்குச் சான்று பகரும்.
பாபாவைப் பற்றிக் கல்கத்தாப் பிரமுகர் ஸ்ரீ டி.டி. சோப்ரா மூலம் நந்தா நிறையக் கேள்விப்பட்டார். டீ பார்ட்டியும், கேளிக்கையுமாக இருந்த சோப்ராவின் வீடு பஜனைக்கூடமாக மாறியதையும், அவ்வீட்டார் புலாலையும் குடிவகைகளையும் அடியோடு விட்டுவிட்டதையும் கண்டு பாபாவின் நன்மைச் சக்தியை நந்தா வியந்தார் என்றாலும் பக்தி உண்டாகி விடவில்லை. 1971 ஜூன் தொடக்கத்தில் நந்தா பெங்களூர் சென்றிருக்கையில் கவர்னர் ஸ்ரீ தர்மவீரா பாபாவின் பெருமையை மேன்மேலும் சொல்ல, இவருக்கும் ஈடுபாடு வர ஆரம்பித்தது. அப்போது ஒயிட்ஃபீல்ட் பிருந்தாவனத்தில் தங்கியிருந்த பாபாவைக் காண கவர்னருடன் ஸ்ரீ நந்தாவும், ஸ்ரீமதி ஸுமித்ரா நந்தாவும் சென்றனர். பாபா நந்தா தம்பதியை பிரத்யேகப் பேட்டிக்கு உள்ளே அழைத்துப் போனார்.
நந்தாவின் குடும்ப விவகாரங்களை, இரு புத்திரர்களைப் பற்றிய விவரங்களை பாபா புட்டுப் புட்டு வைக்கவே தம்பதியருக்கு பக்தி உண்டாகத் தொடங்கியது. இருவருக்கும் ரிசுகள், விபூதி ஸ்ருஷ்டித்துக் கொடுத்துவிட்டு பாபா நந்தாவிடம், “சீக்கிரமே நீங்கள் கீர்த்தியடையப் போகிறீர்கள். மக்களிடமெல்லாம் நற்பெயர் வாங்கப் போகிறீர்கள்!” என்றார்.
இவ்விஷயம் 1971 ஜூலை ‘ஸத்ய ஸாயி ஸமாசார்’ என்ற கல்கத்தா ஏட்டில் பிரசுரமாயிருக்கிறது. அப்போது பங்களா போர் மூளவில்லை; மூளக்கூடிய தோதுகூட இல்லை.
நவம்பரில்தான் யுத்தம் மூண்டது. அதில் வங்க விரிகுடா, அரபிக் கடல் இரண்டிலும் பாகிஸ்தானுக்கு மேலாக நம் கப்பற்படை ஆதிக்கம் பெற்றதும், நூற்றுக்கு மேம்பட்ட பாகிஸ்தானியக் கலங்களை நாம் மூழ்கடித்ததும், இதில் ஸேநாபதி நந்தா காட்டிய அபார சதுரத்துக்காக நாடும், பிரதமரும், ராஷ்டிரபதியும் அவரைப் போற்றி “பத்ம விபூஷண்” சூட்டியதும் உலகறிந்த விஷயங்கள். ஒரு சேநாபதிக்குக் கீர்த்தி யுத்த காலத்தில் தான் உண்டாகமுடியுமே தவிர, சமாதான காலத்தில் அவரை யார் பாராட்ட முடியும்? எனவே பாபா ஜூனிலேயே இவரது எதிர்காலப் புகழைக் கூறினாரெனில்…?
இச்சந்தர்ப்பங்களில் நடக்கப்போவதை முன்னரே கண்டு சொன்னார் என்று மட்டும் அடியார் எண்ணுவதில்லை. அவரேதான் பின்னால் நடக்கப்போவதையும் நல்லபடி உருவாக்கினார் என்றும் நம்புகிறார்கள். இது எப்படி என்று அவர்கள் நிரூபிக்க முடியாதுதான்! ஆனால் அவர்கள் நினைப்பது தவறு என்று மற்றோரும் நிரூபிக்க முடியாதுதானே?
***
தனி மனிதருக்கு ஏற்பட்ட விபத்து, ஒரு பிரதேசத்துக்கு ஏற்பட்ட விபத்து. தேச முழுவதற்கும் ஏற்பட்ட விபத்து இவற்றில் நம் சரித நாயகரின் கருணையும் ஆற்றலும் புரியும் அற்புதங்களைப் பார்த்தோம். ஆனால் உலக விபத்துத் தீர்க்கவே அவர் அவதாரமெடுத்திருப்பது1. அதர்மம் என்பதுதான் அந்த விபத்து. தனி மனிதனையும், தேசத்தையும் அவர் காப்பதுகூட அவர்களைத் தார்மிகத்தில் நிலைநிறுத்துவதற்கு முன்னோடியாகத்தான். வெளிப்பகைவர்களை விரட்டிவிட்டு, உட்பகைவர்களிடம் ஓயாமல் சிக்கிக் கொண்டு இடர்ப்படுவதில் இடர்ப்படுகிறோம் என்பதைக்கூட அறியாமல் அஞ்ஞானவாய்ப்பட்டுக் கிடப்பதில் என்ன பயன்? தாம் உடல் நலம் தருவது. பொருள் தருவது, விபத்தைத் தீர்ப்பது ஆகிய எதுவுமே அதோடு நின்றுவிடுவதல்ல; இவற்றைக் காட்டி, முடிவாக ஆன்ம நலம் தருவதே லட்சியம் என்பார் ஸ்வாமி.
2 நூலின் முதற்பதிப்பு வந்தபின் லாஸ் ஏஞ்ஜெல்ஸைச் சேர்ந்த துரீய ஸங்கீதாநந்தா என்பவரும், அவரைப் போல் அதீந்திரிய ஸந்தேசங்களைப் (occult messages) பெறுபவர்களாக நம்பக்கூடிய வேறு சிலரும் கூறுவதிலிருந்து அணு ஆயுதப் போர் ஏற்பட்டு உலகு அழியாமல் காக்கவே நம் ஸ்வாமியின் அவதாரம் என்று தெரிகிறது.
அந்த லக்ஷ்யத்தில் அவருக்குள்ள அபரிமித சக்தியால்தான் இன்று உலக நாடுகளிலெல்லாம் ஸத்ய ஸாயி ஸேவா ஸமிதிகள் எழும்பியுள்ளன. ஸான்டியாகோவிலும், ஹானலூலுவிலும், ட்ரினிடாடிலும், டான்ஜானியாவிலும், அடிஸ் அபாபாவிலும் “பாபா பாபா” என்று பஜனை செய்து கொண்டு, மது மாம்ஸாதிகளைத் தொடுவதில்லை என்று விரதம் பூண்டவர்கள் ஏராளமானவர் தோன்றியிருக்கின்றனர். தொண்டு கிழவர்களும், பெண்டிரும். குஞ்சு குளுவான்களும் பதினாயிரம் காவதங்களுக்கட்டால் ஹரி நாமத்தை, சிவ நாமத்தை, அம்பிகை நாமத்தை, ஸாயி நாமத்தைப் பாடிப் பரவசமுறுகிறார்கள்.
எம்மதமும் ஸம்மதமாகக் கொண்டு நமது நவயுக அவதாரர் தமது ஸ்தாபன இலச்சினையிலேயே அனைத்து மத அன்னையான வேத தர்மத்தின் ஓங்காரம், பௌத்தத்தின் தர்ம சக்கரம், பார்ஸி மதத்தின் அக்கினி ஜ்வாலை, இஸ்லாமியத்தின் பிறை தாரகை, கிறிஸ்துவத்தின் சிலுவை ஆகியவற்றை (எவ்வுயிர்க்கும் பொதுவான யோக-ஞான ஸித்தியைக் குறிக்கும் தீப கமலத்தைச் சுற்றி) அமைத்தளித்துள்ளாரன்றோ? இதற்கேற்க அவரை எல்லா மதத்தவரும், மத உணர்ச்சியே அற்றவருங்கூட ஆசானாக, ஆண்டவனாகக் கொண்டு ஸன்மார்க்கத்தைத் தொட்டு வருகிறார்கள். அந்தந்த மதப்படி அவரவரும் மாஸ், நமாஸ் முதலானவற்றைச் செய்தாலும், கலியுக திவ்ய ஒளஷதமாம் நாமம் எனும் வைரத்தை ராகத்தில் கடைசல் பிடித்து, தாளத்தில் பட்டை தீட்டி ஸங்கீர்த்தனமாக ஜ்வலிக்கச் செய்வதிலுள்ள அலாதியான ஆத்மானந்தத்தை அகிலமெல்லாம் அனுபவித்து வருகிறது. இவ்வாத்மானந்தம் நிரந்தரமாவதற்கு அடிப்படையான சித்த சத்தியைப் பெற வேண்டி ஐயன் விதிக்கும் பரோபகாரப் பணிகளை ஏராளமான வையத்து நாட்டினர் ஸமிதிகளின் மூலம் அருமையாக ஆற்றி அன்பில் அலர்ந்து வருகிறார்கள். பண்டைய வேதாந்தத்துக்கும், பாரத தர்ம சாஸ்திரங்களுக்கும் முரணின்றி, அவற்றை மேலும் கனிவித்து அவர் அருளியுள்ள உபதேசங்களை உலக நாடுகளில் பலவற்றில் பல்லோர் படித்து அத்யாத்ம ரீதியில் பயன்பெற்று வருகிறார்கள். இங்கு ஸம்பவம் என்று மயிர்க்கூச்செறியும்படியாகக் காட்டி எழுதுவதற்கு ஏதுமில்லை. ஆனால் இந்த அத்யாத்ம அநுபவத்தில் கொண்டு விடுவதற்குத்தான் அத்தனை அற்புத ஸம்பவங்களும்!
ஓம் ஸாயிராம்