அத்தியாயம் – 22
“நானிருக்க பயமேன்?”
தனக்கு மேல் உத்தமமான ஒன்றில்லாத என் பரமாத்ம ஸ்வரூபத்தை அறிந்துகொள்ளும் திறனற்றவர், மாறாத, பிறவாத என்னை நரப் பிறவியாகவே கருதுகின்றனர். நான் என்னைபே போக மாயையால் மூடிக்கொண்டு அனைவருக்கும் என் உண்மை நிலை பிரகாசியாவண்ணம் இருக்கிறேன். இதனால் மதியிழந்தோர் என்னை உள்ளவாறு அறிவதில்லை.
– கண்ண பெருமான்: கீதை 7-24,25
பாட்டின் மூலம் பரமன்பால் சித்த ஈடுபாட்டைப் பெறுவது பக்தருக்கு எளிதாக இருந்தது. உள்ளீடற்ற கலிகால மாந்தருக்குக் கைகண்ட மருந்து பகவந் நாம பஜனைதான் என்ற ஆன்றோர் வசனத்தையே அவதார புருஷரும் நிலைநாட்டி வந்தார். சிரித்துக்கொண்டே சொன்னார்: “இந்தக் காலத்தில் எல்லாமே சொகஸாக வேண்டியிருக்கிறது. கட்டை வண்டிபோய் சொகஸுக் கார்; முரட்டுத்துணி போய்ச் சொகசு சில்க்; பட்டாணியும் வேர்க்கடலையும் போய் டாஃபியும், ஐஸ்கிரீமும். இப்படியே சாதனையும் சொகசாகத்தானே இருக்கவேண்டும்? மந்திர ஜபம், யோகம், பூஜை எல்லாம் உங்களுக்கு ரொம்பக் கடினம். சொகஸு சாதனை தருகிறேன். எளிதாக, இனிதாக பரமாத்ம ரஸத்தை உள்ளே இறக்க நாம பஜனையைத் தருகிறேன். நாமாவை நாவில் சுவைத்து, மூச்சோடு கரைத்துப் பாடுங்கள். தாளம் போட்டுப் பாடுங்கள். கையைத் தட்டினால் மரத்தின் மேலுள்ள காகங்கள் பறப்பதுபோல், கர தாளத்தில் பாப எண்ணங்கள் பறந்து போகட்டும்” என்று சொல்லிப் பாடினார்:
மதுரம் மதுரம் முரளீ கனச்யாமா
மதுராதிபதே ராதேச்யாமா
சூரதாஸ ப்ரபு ஹே கிரிதாரி – ஹரே கிரிதாரி
மீரா கே ப்ரபு ஸ்ருதய விஹாரி
பாடியாடிக் கொண்டிருப்பவர் திடீரெனக் காணாமற் போய் விடுவார்.
அதற்கு ஒரு காரணம் அவ்வப்போது இந்த நைஷ்டிக பிரம்மசாரியால் இல்லறத்தினரான அடியார்களின் குடும்ப வாடையைத் தாங்கமுடியாமல் போனதுதான். விவேகாநந்தரும் இவ்வாறே தம்மைச் சுற்றியுள்ள கிருஹஸ்தர்களின் ‘தாம்பத்திய நெடி’யால் உபாதைப்பட்டதுண்டு. எத்தனை உகாத சூழலையும் உகந்தேற்கும் ஸம சித்த ஸ்வரூபமான மகாபுருஷர்களுங்கூட ஓரொரு சமயம் ஒருவித சூழலை ஒதுக்க நேர்கிறது என்றால் என்ன அர்த்தம்? பொல்லாத காமத்திடம் வெகு ஜாக்கிரதையாயிருக்க நம்மை எச்சரிக்கிறார்கள் என்றே அர்த்தம்.
திடுமென காணாமற்போகும் பாபா பிறகு சித்ராவதிப் படுகையிலோ, அல்லது அக்கம் பக்கக் குன்றுச்சிகளிலோ காணப்படுவார். இக்கால மாந்தருக்கு எளிதில் இயலாதது என்று அவர் சொன்ன யோக சாதனைகளைத்தான் அவர் இச்சமயங்களில் ஆற்றினார் என்று சிலர் பேசிக் கொண்டார்கள். ஸ்ரீ கஸ்தூரி கூறுவதுபோல, நமது யோக க்ஷேமத்தையே1 தாங்கவந்த அவதாரனுக்கு யோகப் பயிற்சி தேவையேயில்லை என்றறியாமல்!
2 தேவையானதை அடைவது ‘யோகம்’. இவ்வாறு அடைந்ததை நலிவுறாமல் காப்பது ‘க்ஷேமம்’.
***
ஆம், யோக க்ஷேமம் தாங்குவதாகக் கண்ணன் தந்த வாக்கை ஸாயி இன்றும் காத்துப் பலர் குடிகாக்கும் கருணாநிதியாகி விட்டார். அடியாரது குடும்பத்தின் யோக க்ஷேமம் முழுவதையும் தான் வகிப்பதற்குக் கண்ணன் சில நிபந்தனைகள் விதித்தான். “என்னைத் தவிர வேறு எதையுமே எண்ணக் கூடாது. என்னை உபாசித்தால் மட்டும் போதாது. ஆழ்ந்து உபாசிக்க வேண்டும் (பரி உபாஸதே). இவ்வாறு எப்போதும் என்னிடமே மனத்தை ஒன்று சேர்த்திருப்பவர்களின் யோக க்ஷேமத்துக்கு நானே பொறுப்பேற்றுத் தாங்குகிறேன்!” என்றான். கள்ளன்! அவனிடமே ஒன்று சேர்ந்து அவனைத் தவிர வேறு எண்ணாதவருக்கு உலக ஸமாசாரங்களேயான யோகமும் க்ஷேமமும் சற்றேனும் தெரியப் போகிறதா? இவன் அவற்றைத் தராமல் அவர்களை வறுத்தெடுத்தாலும்கூடத் தெரியப் போவதில்லையே! ஸாயிக்ருஷ்ணன் தற்கால அவல மாந்தரிடம் இத்தகைய ஆழ்ந்த பக்தியைக்கூட எதிர்பார்க்கவில்லை. லௌகிகத்தையும் நினைத்து, அதன் பொருட்டே தம்மை நினைத்தாலும் குடி தாங்க விரைகிறார்.
யோக க்ஷேமம் தாங்குவதாக அவர் முதலில் வாக்குக் கொடுத்தது தம்மிராஜு மனைவி காமேச்வரம்மாவுக்குத்தான். உரவகொண்டாவிலிருந்து புட்டபர்த்திக்கு வந்த பின்னும் அந்த வாக்கை எப்படியெல்லாம் காப்பாற்றினார்? ஒரு உதாரணம்:
மாலை வேளை. தம்மிராஜு வீட்டுக்குள்ளே பஜனை செய்து கொண்டிருக்கிறார். வாசல் வராந்தாவில் எவரோ தடியால் தரையை ‘லொட்’, ‘லொட்’டென்று தட்டும் ஓசை. வெளியே வந்து பார்க்கிறார். எவரையும் காணவில்லை. மறுபடி உள்ளே வந்து பஜனை தொடங்குகிறார். மீளவும் வாசலில் அதே சப்தம்.
‘வண்டையும் வானரத்தையும் தூதுவிட்ட குறும்பன் இப்போது ஷீர்டிக் கிழவனாராகவே கோலும் கையுமாக வந்தனனோ?’ என்ற எண்ணம் பளீரிட்டது.
அதற்கேற்றாற்போல் காமேச்வரம்மாவும், “வாசலில் நன்றாகப் பாருங்கள். அப்பாயி (மகன்) ஆபீஸிலிருந்து திரும்பியவன், வாசலிலிருந்தபடியே அவசரமாக ஏதோ சொல்லிவிட்டு டிராமாவுக்குப் போய்விட்டான். பணப்பெட்டி என்று சொன்னதுபோல் இருக்கிறது” என்றாள்.
ஆம், போய்ப் பார்த்தால் வரந்தாவுக்குப் பக்கத்தில் உள்ள அறையில் ஒரு பணப்பெட்டி பூட்டாமலே இருந்தது! திறந்து பார்த்தால்… அம்மாடி! பத்தாயிரத்துச் சொச்சம் ரூபாய்!
“ஸாயிராம்!” தம்பதியர் கையெடுத்துக் கும்பிட்டனர்.
பஞ்ச நிவாரண அலுவலராக இருந்த “அப்பாயி” மறுநாள் பட்டுவாடாவுக்காக கூட்டி கஜானாவிலிருந்து கொண்டு வந்திருந்த பணப் பெட்டியைத்தான் இத்தனை ‘பொறுப்போடு’ காபந்து செய்துவிட்டுத் தலைதெறிக்க டிராமாவுக்கு ஓடியிருக்கிறார்! யோக க்ஷேமப் பொறுப்பு வகித்துக் காக்கும் பந்து ஒருத்தர்தான் இருக்கிறாரே என்ற தைரியம் போலும்!
இப்படி எத்தனை ஆயிரம் சந்தர்ப்பங்களில் நம் ஸ்வாமி கண்ணுங்கருத்துமாய்ப் பொறுப்பாற்றியுள்ளார் என்பதை விவரிக்க வானமே காகிதமாகவும், கடலே மையாகவும் ஆனாலும் போதாதுதான்!
ஆயினும் பதினைந்துப் பருவ பால ஸ்வாமி, வயோதிக ஸாது ஒருவருக்கு “யோக க்ஷேமம் வஹாம்யம்” என்பதை மெய்யாக்கிய நிகழ்ச்சியை மட்டும் குறிப்பிடாதிருப்பதற்கில்லை.
ஸத்ய ஸாயி தோன்றிய நாட்களாய் அவருக்கு பக்தர்கள் தோன்றிவிட்டனர். பக்தர்கள் தோன்றிய நாட்களாய் எதிர்ப்பாளர், ஏன், பரம விரோதிகளுங்கூடத் தோன்றிவிட்டனர். ஸாயி ரத்தினத்தை எடுத்துக்காட்டப் பொற் கட்டிடமாக பக்தர்கள்; ரத்தினம், பொற் கட்டிடம் இரண்டையுமே எடுத்துக்காட்டக் கறுப்பு நகைப் பெட்டியாக விரோதிகள்.
இதிலே நம் பிரபுவின் ஜாதக விசேஷம், முன்பே சொன்னாற்போல மிருதங்கத்துக்குக்கூட இரண்டு பக்கம் அடி என்றால் இவருக்கு மூன்று பக்கங்களிலிருந்து அடி! அற்புதம் செய்கிறார் என்பதால் நாஸ்திகரோடு ஆஸ்திகரிலேயே ஒரு பிரிவினரும், நிறைய சிறிய அற்புதங்கள் செய்கிறாரென்பதால் ஷீர்டி பக்தர்களிலேயே ஒரு பிரிவினரும் இவரைத் தாக்குகின்றனர். சிட்டுக் குருவிப் பட்டாளம் கோடி கோடியாகத் தாக்கினாலும் குலையாத கௌரீச்ருங்க பர்வதம்போல் இவரும் மாண்புற, பீடுறப் பொலிந்து கொண்டுதானிருக்கிறார்!
அந்நாட்களில் ஆந்திர கிராமங்களில் கர்ணம், ரெட்டி என்ற இரு அதிகாரிகள் ஊரின் மஹா முக்யஸ்தர்களாக இருந்தனர். கர்ணம் என்பவர் ரிவின்யூ இலாகாவுக்கு உதவுபவர்; ரெட்டி என்பவர் (ஜாதியால் ரெட்டி அல்ல, இது ஒரு பதவியின் பெயர்) போலீஸுக்கு உதவியாளர். கிராம மக்கள் இவ்விருவரையுமே கலெக்டராகவும், டி.எஸ்.பியாகவும் பாவித்து, மரியாதை செய்வார்கள். கிராமங்களில் இவ்விருவரும் வைத்ததே சட்டம்.
புட்டபர்த்தியில் ரத்னாகரம் வீட்டுப் பிள்ளை தலை தூக்கியதும் அவ்வூர் கர்ணம், ரெட்டி (அங்கு ரெட்டியாக இருந்தவரும் ஒரு பிராமணர்) இவர்களின் மவுசு குறையத்தான் செய்தது. பிள்ளையாண்டான் கொஞ்சம் தலைதூக்கியதோடு நில்லாமல் பகவானாகப் பரிணமித்த பின் இவர்களுக்குத் தமது சாம்ராஜ்யமே பறிபோன எண்ணம் உண்டாகிவிட்டது.
போதும் போதாததற்கு பால ஸாயிக்கோ ஸகலரும் ஒன்றுதான். ஊர்ப் பிரமுகர்கள் என்று இவர்களுக்குத் தனி மரியாதை செய்வது அவரால் முடிகிற காரியமா? இதைத் தங்களுக்கு இழைக்கப்படும் அவமரியாதையாகவே அவர்கள் கருதினர்.
இத்தனைக்கும் பால ஸாயி வசித்ததே கர்ணத்தின் வீட்டில்! அப்போதைய கர்ணம் கோபால் ராவ் சுப்பம்மாவின் தத்துப் புத்திரர்தாம். ஆனாலும் சாதாரண மனிதராகப்பட்ட எவருக்கும் தம்மை ஸ்வீகாரம் செய்து கொண்ட பின்னும் வளர்ப்புத்தாய் இன்னொரு பிள்ளையைப் பிள்ளையாகவும், தெய்வமாகவுமே வைத்துக்கொண்டு, வருகிறவர்களுக்கெல்லாம் சாப்பாடு போட்டுக் கொண்டிருந்தால் மன வேறுபாடு ஏற்படத்தானே செய்யும்? ஆதலால் ரெட்டியைப்போல வெளிப்பட எதிர்க்காவிடினும், இவரும் ஸ்வாமி பட்சத்தில் இருக்கவில்லையென்றே தெரிகிறது. ஏற்கனவே கர்ணத்துக்கும் ரெட்டிக்குமிடையே நீண்ட காலச் சச்சரவு இருந்தபோதிலும், இப்போது My enemy’s enemy is my friend (விரோதியின் விரோதி நண்பனாவான்) என்றபடி ஸ்வாமிக்கு எதிராக அவர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் அதிகாரத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தியதாக அறிகிறோம்.
கிராமத்தில் வேறு சிலருக்கும் கூத்தாடி படராஜுகளுக்கு இத்தனைக் கொண்டாட்டமா? என்று வயிறெரிந்தது.
இத்தனை எதிர்ப்பிடையிலும் ஓங்கி உலகளாவிய கீர்த்தி பெற்றுத் தமது தெய்வத்தன்மையையும், அத்தெய்வமே அவதாரமாக வந்ததில் மானுடத்தன்மைக்கு ஆதரிசமான தன்னிலை தவறாப் பொறுமைப் பெருமையையும் நிதரிசனமாக்கிய பிறகு ஸ்வாமியே முன்னடி வைத்துச் சென்று கிராமத்தைச் சேர்ந்த எதிர்ப்பாளரில் பெரும்பாலானவர்களை அன்பில் அரவணைத்து உற்றோராக்கிக் கொண்டார் 1 அவர்களுக்குள்ளேயே பிரிந்து பரஸ்பர பேதம் பாராட்டிக் கொண்டிருந்தவர்களையும் நண்பர்களாக்கி அவதாரக் கிராம சமுதாயத்தில் ஒற்றுமை உண்டாக்கினார். ஆனால் இது பல்லாண்டுகளுக்குப் பிற்பட்ட விஷயம். அப்போது வெளிநாட்டினரும் ஸ்வாமியை ஆச்ரயித்து, இதனால் தங்கள் குக்கிராமத்திற்குப் பெரும் புகழ் கிடைத்திருப்பதையும், கிராம மக்கள் பலருக்கு நல்ல ஜீவனோபாயம் கிடைத்திருப்பதையும் எதிர்ப்பாளர்கள் கண்டு பகை மனத்தை மாற்றிக் கொள்ளத் தயாராயிருந்தனர். ஆயினும் தயங்கினர். அஹங்கார, மமகாரங்கள் பழைய போக்கை மாற்றிக் கொள்ள விடாததால் அச்சமயம்தான் தயாளுவே முன்னடி வைத்து மாற்றாரின் மாற்று அழித்தது. நாம் இருப்பதோ இதற்கு வருஷங்கள் முற்பட்ட காலகட்டம். அப்போது அவதார வியக்தியின் தன்னிலை தவறாப் பொறுமைப் பெருமையைக் காட்டுவதிலேயே ஸ்வாமி விசேஷ ரஸிப்புக் கொண்டிருந்தார் போலும்! தாம் பிறந்த கிராமத்தையே சேர்ந்த முக்யஸ்தர்களும், முக்யமல்லாத பலருங்கூட எதிர்ப்பட்சத்திலேயே இருந்து இன்னா செய்தபடி இருக்கத்தான் இன்னருள் கூர்ந்து வந்தார்!
2 சில ஆண்டுகள் முன் இந்நூலாசிரியர் ஸ்ரீ கோபால் ராவை சந்தித்துப் பேசியபோது அவரிடம் ஸ்வாமியின்பால் சற்றும் மாற்றுணர்ச்சியைக் காணமுடியவில்லை. தம் வீட்டிலும், அக்கம்பக்கத்திலும் ஸ்வாமி தொடர்புள்ள விஷயங்களை அவர் உற்சாகத்துடன் காட்டிப் பல புதுத் தகவல்கள் கொடுத்தார்.
தம்மைச் சுற்றி எத்தனை விதமான ஈதிபாதை உண்டோ அத்தனையும் வைத்துக் கொள்ளவேண்டும் என்று நம் அத்தன் சங்கற்பித்ததாலோ என்னவோ, துரதிருஷ்டவசமாக அவரது குடும்பத்தினர் சிலரும் விசேஷமாக விவேகம் பெற்றிருக்கவில்லை. இவருக்குத் ‘தம் குடும்பம்’ என்ற தனிப் பாசம் அவர்களிடம் இல்லாவிடினும், அவர்களில் சிலர் உறவால் அந்தஸ்து கொண்டாடத்தான் செய்தனர். ஸத்யாவை ஸ்வாமியாக்கியதே தாங்கள் தான் என்றும், அவர் தங்களிடம் நன்றிக் கடன் பட்டிருப்பதாகவும் எண்ணிய மேதாவிகளும் இவர்களில் உண்டு. பொய்க்கு உடம்படாத ஸ்வாமி அவர்களை மேலும் ஒட்டவெட்டினார். உடனே நேராகவோ, மறைமுகமாகவோ அவர்களும் எதிர்ப்பாளர்களுடன் சேர்ந்து கொண்டனர்.
நூறு வயதைக் கடந்த பாட்டனார் கொண்டம ராஜுவுக்குத்தான் ஸ்வாமியின் ஸ்வாமித்வம் முற்றிலும் புரிந்தது. இக்குடும்பத்துக்கே வந்துவிட்ட அவரது பெண் ஒருத்திக்கும் அதாவது பாபாவின் அத்தைக்கும் இவரது தெய்விகத்தில் பெருமளவு நம்பிக்கை இருந்தது. இதில் வேடிக்கை என்னவெனில், தாய் தந்தையரை ‘கிருஹ அம்மாயி, கிருஹ அப்பாயி’ என்றே கூறிவந்த பாபா இவளை மட்டும் உறவு சொல்லி ‘அத்தை கோனம்மா’ என்றே அழைப்பார். பாபாவின் பெற்றோருக்கும், தமக்கைகளுக்கும் (குறிப்பாக, வெங்கம்மாவுக்கு) அவரிடம் பக்தி இல்லாமலில்லை. ஆயினும் அவரது மாய லீலையில் அவர்களது பக்தியானது சரணாகதி என்ற உத்தம நிலைக்கு உயரவில்லை. “பகவான் ஸத்ய ஸாயி பாபாவுக்கு நமஸ்காரம்” என்றே ‘தந்தை வெங்கா கடிதம் எழுதிய போதிலுங்கூட உள்ளூர அவரும், ஏன், ஈச்வரம்மாவும் ஐயனின் மகிமையைப் பூரணமாக உணரத்தான் இல்லை. தமையனார் சேஷம ராஜு இதற்கும் பிற்பட்டே நின்றார். அவர்களைக் குற்றம் சொல்ல வேண்டாம். இது ஸ்வாமி சித்தமே! எந்த அவதாரத்திலும் இப்படித்தான் இருந்திருக்கிறது. நரலீலை அப்போது தான் சுவையாக அமையும்! இதையெல்லாம் வெளியே சொல்லலாமா எனச் சில ஸாயி பக்தர் எண்ணலாம். ஆனால் நம் பிரபு பதிநாலாம் வயதிலிருந்தே எப்பேர்ப்பட்ட வைராக்ய பர்வதம், தம்மை நெருக்கிய ஊர்ப் பிரமுகரின் விரோதத்தில் அவர் எப்படி நெரிபடாமல் இருந்தார், நெருங்கிய உறவினரும் புரிந்துகொள்ளாததில் அவர் எப்படிக் கலக்கமே கொள்ளாமல், அலையாமல் குலையாமல், தம் ஒரே பணி பக்தரக்ஷணம் என்று நடத்தி வந்தார் என்பன இவற்றிலிருந்து தானே தெரிகிறது? அதனால் சொல்கிறோம்.
பக்தி சிரத்தையைப் பொறுத்தே தம்மை அணுகியிருக்கலாமே அன்றி பதவியாலோ, பந்துத்வத்தாலோ எவரொருவரும் முன்னுரிமை கோரிப் பயனில்லை என்று பாலஸாயி நிர்தாட்சிண்யமாகக் காட்டினார். விரோதத்தை சம்பாதித்துக் கொண்டார்.
பல காரணங்களால் பாபாவைத் துவேஷித்தவர்களுடன், காரணமேயில்லாமல் மஹான்களிடம் பகைமை கொள்ளும் புண்யசாலிகளும் சேர்ந்துகொண்டனர். நல்லதை எல்லாம் எதிர்க்கும் முரடர்கள், அவநம்பிக்கைக்காரர்கள், நாஸ்திகர்கள் ஆகியோருக்கு மஹாமாயையின் பிரபஞ்சத்தில் பஞ்சமே இல்லையன்றோ?
எந்த அவதாரத்திலும் சிசுபால, தந்தவக்திர கோஷ்டி உண்டு. எனக்கு எதிர்ப்பு புதிதுமல்ல; பொருட்டுமல்ல. மலைகளை வஜ்ராயுதம் பொடி செய்வதுபோல, மலைமலையாக எதிர்ப்பு வந்தாலும் ஸாயியின் வஜ்ர ஸங்கல்பம் அவற்றைத் தூள் தூளாக்கித் தன் லக்ஷியத்தை நிறைவேற்றியே தீரும்” என்று சொல்லிக்கொண்டு ஸ்வாமி எதிர்ப்பை ஏற்றார்.
மற்ற அவதாரங்களுக்கும் இதற்கும் மகாமதுரமான ஒரு மாறுபாடு. பூர்வ அவதாரங்கள் சிசுபால, தந்தவக்திராதி விரோதிப் பட்டாளத்தை வதைத்தன. இன்றைய அவதாரத்துக்கோ ஸம்ஹாரம் என்பது அடியோடு தெரியாத வஸ்து!
பால ஸாயி கொழுந்துவிட்ட தொடக்க காலத்தில் எதிர்ப்பாளர்கள் குறிப்பாக ஒரு திருப்பணி செய்தனர். அதாவது: புட்டபர்த்திக்கு வரும் வெளியார் முதலில் வந்திறங்கும் புக்கப்பட்டணம், பெனுகொண்டா போன்ற இடங்களில் இவர்கள் சில ஆட்களை அமர்த்தியிருந்தனர். அவர்களது தொழில் என்னவெனில் அந்த யாத்ரிகர்களைப் புட்டபர்த்திக்குச் செல்ல வொட்டாமல் தடுப்பதுதான்! புண்ணியவான்கள் பஸ் ஸ்டாண்டில் தாமாக அவர்களை ஆட்கொண்டருளி, “அய்யய்ய! புட்டபர்த்தியுமாச்சு, பாபாவுமாச்சு. வெறும் புரளி. அங்கே போய் சிக்கிக் கொள்ளாதீர்கள்!” என்று உபதேசம் வழங்குவார்கள். அதற்குச் செவி சாய்க்காவிட்டால் கன்னா பின்னா என்று கதை கட்டுவார்கள். அப்படியும் சொல் மேவாதபோது, “அது ஏவல், சூன்ய வித்தை” என்று அச்சமூட்டுவார்கள்.
இத்தனையையும் மீறிக்கொண்டு பக்தர்கள் கூட்டம் தினே தினே பெருகியதெனில் அதுதான் ஐயா, சத்தியத்தின் சக்தி!
முதலிலேயே எதிர்ப்பாளராக முத்திரை குத்திக் கொண்டவர் ஒரு புறமிருக்க, பக்தராக வந்து பழகிவிட்டே விரோதியாக மாறி தூஷணை கிளப்பியவர்கள் வேறு! இந்த பக்தர்கள் (அதாவது தங்களை பக்தர்களாக நினைத்துக்கொண்டவர்கள்) தாங்கள் பாபாவிடம் வந்துவிட்டோம், மணியடித்து பூப்போட்டு பாபா பூஜை செய்கிறோம், செலவு செய்து பாபா பஜனை செய்கிறோம் என்ற காரணங்களுக்காகவே அவர் தங்களது கர்மா முழுவதையும் களைந்துவிட்டுத் தாங்கள் வேண்டிய வரங்களையெல்லாம் தந்து ஸுக ஜீவனத்திலேயே வைத்திருக்கவேண்டும் என்று நினைத்தவர்களாவர். நம் காவிய நாயகரும், பிற்பாடு தாம் விரும்பும் ஞான வைராக்யாதிகளை அவர்கள் விரும்பி ஏற்கப் பக்குவப்படுத்தும் பொருட்டே, தொடக்கத்தில் மக்களுக்கு விட்டுக்கொடுத்து, அற்புதங்கள் காட்டி, நோய் தீர்த்து, மற்ற குடும்ப அலுவலகப் பிரச்சனைகள் தீர்த்து அருள்வார். அவர்களது பூர்வ சுகிர்தம் அல்லது இன்றைய பக்தியின் வலிவு, அல்லது காரணமே அற்ற தனது காருண்யம் இவற்றில் ஒன்றை முன்னிட்டுப் பலரது நியாயமான லௌகிகத் தேவைகளைப் பூர்த்தி செய்து, அனவரதமும் கட்டிக் காப்பார். ஆனால் பாபாவைக் கும்பிடும் அனைவரது இல்லங்களிலும் நோவு, சாவு, வறுமை, மற்றப் பிரச்சனைகள் யாவும் விலகி, கர்மா முழுதும் பஸ்மீகரமாக வேண்டுமெனில் அப்புறம் தெய்வ நீதி என்பதுதான் என்னாவது? உண்மையில் இகவாழ்வைவிட அகவாழ்வுதான் அவருக்கு முக்கியம். அகவாழ்வுக்குதவும் பக்தியை உண்டுபண்ணவே தொடக்கத்தில் கர்மாவைச் சிறிது குறைத்து அநுக்கிரகிப்பார். போகப் போக நடுநடுவே நீதிபதியாக இருந்து வினைப் பயனுக்கும் அவர்களை ஆளாக்குவார். இம்மாதிரி நஷ்டம். மரணம் போன்றவை உண்டானவுடனே அவரைவிட்டு விலகித் தூற்றத் தொடங்கியவர்களும் இருக்கிறார்கள்.
லௌகிக லாப நஷ்டங்களைப் பாராமல் பக்தியில் நிலைத்திருப்பவர் மீது அவர் அக உலகின் பாவன ஆனந்த அலைகளை அவ்வப்போது வீசிக்கொண்டுதான் இருக்கிறார். இப்படிப்பட்ட மெய்யடியார் பலரை இந்நூலாசிரியரே சந்தித்திருக்கிறார். உலக ரீதியில் மட்டும் பார்த்தால் இவர்கள் பாபாவிடம் பக்தி செலுத்தக் காரணமே இராது. வியாதி, வறுமை, புத்திர சோகம் போன்ற பரம துக்கங்கள் இவர்களுக்கு ஸம்பவித்திருக்கும். ஆனால் இவ்வடியார்களோ இவற்றைப் பொருட்படுத்தாமல், பக்தி புரிவதில் உள்ள பேரின்பத்துக்காகவே பாபாவிடம் மாறாத அன்பு பூண்டிருப்பர். ‘பலருக்கு வியாதியை சொஸ்தப்படுத்தியிருக்கிறார். சிலருக்கோ வியாதி சொஸ்தமாக வேண்டும் என்ற தாபத்தையே சொஸ்தம் செய்திருக்கிறார்’ என்று இதை ஹவார்ட் மர்ஃபெட் அழகாகக் கூறுவார். இப்படிப் பக்குவமாகாதோரில் சிலர் விலகியதோடு நின்று விடுகிறார்களெனில், சிலரோ விலகியபின் நிந்தனையிலேயே தீவிரமாக இறங்கியிருக்கின்றனர்.
சில பணக்காரர்கள், படே படேக்கள் இவரிடம் வந்து பழகி, பிறகு எப்படி உறவினர் தமக்குத் தனிஉரிமை இல்லை என்பதால் ஆசாபங்கமுற்றனரோ அப்படியே தமது பணம் அல்லது பதவிக்காக இங்கு சலுகை கிடைக்காது எனக் கண்டு, எதிர்ப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
பின் ஏன் ‘பணமூட்டைகளின் சாமியார்’ எனப் பழிக்கப்படும் அளவுக்கு இவரிடம் தனவந்தர் பரிவாரம் சேர்ந்துள்ளது என்ற கேள்வி எழலாம். அவரே கூறும் விடையைக் கேளுங்கள்: “என்னைச் சுற்றி தனிகரும் பிரமுகரும் சூழ்ந்திருப்பதால் நான் பொது மக்களைப் பொருட்படுத்தாமல் இவர்களை மட்டும் ஆதரிக்கிறேன் என்று நினைத்தால் அது சற்றும் சரியல்ல. பொதுமக்களின் பொருட்டேதான் இவர்களை நான் ஆதரிக்கிறேன். மக்கள் நலனுக்கான எப்பணி செய்வதாயினும் அதற்கு நிதியும் நிர்வாகச் செல்வாக்கும் வேண்டுந்தானே? பணக்காரர், பதவிக்காரர் ஆகியோரிடம் நான் பொது ஜனங்களுக்காகப் பள்ளிக்கூடம், பஜனைக்கூடம், வைத்தியசாலை முதலியன வைக்கச் சொன்னால் உடனே காரியம் நடந்துவிடுகிறது. என் சொந்த ஆதாயத்துக்காக இவர்களை நான் சேர்த்துக் கொள்ளவில்லை. பூர்வ ஸுகிர்தத்தால் தானே இவர்களுக்கு இவ்வளவு லக்ஷ்மி கடாக்ஷமோ அதிகார ஸ்தானமோ கிடைத்திருக்கிறது? அதே ஸுகிர்தத்தால் ஸ்வாமியின் ஸாமீப்யமும் கிட்டியுள்ளது.”
பாபாவைப் போல் ‘பணக்காரர் சாமி’ என்ற அபவாதம் பெறாத வேறெந்த ஸ்வாமிஜியை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். இவர்களுடைய ஆசிரமங்களிலுந்தான் படே படேக்களுக்குத் தனிக் கவனம் காட்டப்படுகிறது. இவர்களுந்தான் அந்தப் பெரிய மனுஷர்”களுக்கு சற்றுக் கூடுதலாக பேட்டி, ப்ரஸாதம் முதலியன வழங்குகிறார்கள். இவர்கள் விஜயம் செய்யும் வீடுகளில் எத்தனை சதம் ஏழைகளுடையது, எத்தனை தனிகர்களுடையது என ‘சென்ஸஸ்’ வேண்டுமானால் எடுத்துப் பாருங்கள். பொதுவான ஜனத்தொகையில் 90 சதம் ஏழையர், 10 சதமே தனிகர் என்றிருப்பினும் இவர்கள் விஜயம் செய்யும் இல்லங்களில் 10 சதமே ஏழையரதாகவும், 90 சதம் தனிகரதாகவும்தான் இருக்கும். காரணம் பாரபக்ஷம் அல்ல. எந்த மஹானாயினும் அவர் புரிய விரும்பும் பொது நலப்பணிக்கு நிர்வாகச் செல்வாக்கும் நிதியமும் வேண்டியுள்ளது என்பதே காரணம். ஆனாலும் நம் நாயகர் மட்டுமே இங்கும் பழிக்கு ஆளாகிறார். ‘ஸ்தோத்ர ப்ரியா’ என்று அம்பிகைக்கும், ‘ஸ்தவ ப்ரியர்’ (ஸ்தவம் என்றாலும் ஸ்தோத்திரம் தான்) என்று மஹாவிஷ்ணுவுக்கும் பெயர் உள்ளதுபோல நம் நாயகருக்கு ‘நிந்தா ப்ரியர்’ என்று பெயரிடலாமோ?
இவரால் தாங்கள் ஆதாயம் பெற எண்ணிப் பணம் பதவியைக் காட்டி இவரை வளைத்துப் போட முயன்று. இதன் விளைவாக தர்மமூர்த்தியால் அடியோடு துண்டிக்கப்பட்ட படே படேக்களைப் பற்றி வெளியார் அறியாததால்தான் அபவாதம் கூறுகின்றனர்.
ஒரு காலத்தில் இவருக்குத் தாயினும் மேலாகப் பலர் நினைத்த ஒரு கோடீச்வரி, தனக்குப் பிடிக்காத ஓர் எளியவர் வீட்டுக்கு இவர் போகக்கூடாது என்று கட்டாயப்படுத்திய தொன்றுக்காகவே இவர், “அப்படியா சங்கதி? இனி உன் வீட்டில் அடி எடுத்து வைப்பதில்லை” என்று சொல்லி ஒரே வெட்டில் ஒட்டக் கத்திரித்திருக்கிறார்.
கொள்ளை லாப வட்டி தருவதாகச் சொன்ன ஒரு சூதுக் கம்பெனியில் லக்ஷ லக்ஷமாகப் போட்டுத் தோற்றுப் போன முன்னாள் பக்த சிகாமணி ஒருவர், தன் துராசையை பாபா நிறைவேற்றாமல் நஷ்டம் வரச் செய்துவிட்டார் என்பதால் அவரைத் தூற்றத் தொடங்கியதுண்டு.
அஹங்கார, மமகாரங்களை ஓரளவாவது சமர்ப்பணம் செய்யத் தயாராக இருந்தாலொழிய இவரது அநுக்கிரகத்தில் எவரானாலும் நிலைத்திருக்க இயலாது. மற்றோர் உதாரணம்: பருத்தியிலிருந்து கொட்டை பிரித்துப் பஞ்சு எடுக்கும் பெரியதோர் ஆலையின் உரிமையாளர் ஒருவர் இவருக்குக் கோலாஹல வரவேற்புத் தந்து, தங்க முலாம் பூசிய வெள்ளித் தாலங்களிலும் கிண்ணங்களிலும் பஞ்ச பக்ஷ்ய பரமான்னங்களைப் படைத்தார். ஸ்வாமி அவற்றைத் தொடவுமில்லை. தனிகரையும் சுற்றத்தினரையும் பார்த்து, “எனக்குப் பஞ்ச பக்ஷயம் உங்களுடைய பஞ்ச இந்திரியங்களின் கட்டுப்பாடுதான். அதைச் சற்றேனும் செய்யத் தயாரா? குறைந்த பக்ஷம் ஸிகரெட், மது, இன்னம் சில துர்வழக்கம் வைத்திருக்கிறீர்களே, அவற்றையேனும் விடுவதாக வாக்குத் தாருங்கள். அப்போதே இதில் சிறிது என் வாயில் போகும்” என்றார்.
அவர்கள் அப்போதைக்கு வாக்குத் தந்து ஸ்வாமியைத் துளி கொரிக்கச் செய்தனர்.
நாளாக ஆக வாக்கிலிருந்து பிறழ்ந்து எப்படியெப்படியோ சென்றனர். ஸ்வாமியும் விட்டுப் பிடித்துக் கடைசியில் ஒட்ட வெட்டி அவர்களை ஓட்டியே விட்டார்.
இப்படிப்பட்டவர்கள் தாங்களாக எதிர்ப் பிரசாரம் தொடங்காவிடினும்கூட, இவர்களைப் பிறர், “ஏன் புட்டபர்த்தி ஸ்வாமியை விட்டு விட்டீர்கள்?” என வினவினால் என்ன சொல்வர்? “அவர்தான் எங்கள் பிழைகளுக்காக எங்களை விட்டு விட்டார்” என்று சொல்ல மானாபிமானம் இடம் கொடுக்குமா? அதனால், “ஸ்வாமியுமாச்சு, பூதமுமாச்சு” என்று ஏதேனும் பழி கூறித் தங்களைக் காத்துக் கொள்ளத்தானே தோன்றும்?
ஸ்வாமியின் பக்தர் பட்டியலிலிருந்து எத்தனை பெரிய மநுஷர்களும் பணக்காரர்களும் எடுபட்டிருக்கின்றனர் என்று பார்த்தாலே போதும், அவர் கன தனவான்களின் தனிச்சாமி அல்ல என்று தெளிவாகிவிடும்.
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே
என்ற புறநானூற்றின் கூற்றுக்கு மஹா பாஷ்யமாக இருக்கும் பாங்கே நம் பாபாவுடையது. அதன் உள் மகிமையால்தான் பொங்கிப் பொங்கி வரும் எதிர்ப்பு அலைகளையும் மீறிக்கொண்டு நம் நாயகரிடம் பக்தி நாவாய் நானிலமெங்கும் நாள்தோறும் முன்னேறி வந்திருக்கிறது.
ஆரம்ப காலத்தில் எதிர்ப்பு அலை வீசியவரின் கதைக்குத் திரும்பலாம். அதன் கிளையாகவே பதினைந்து பருவ பால ஸ்வாமி வயோதிக ஸாதுவுக்கு யோக க்ஷேமம் பாலித்த படலம் விரியும்.
***
குட்டிச்சாமியை மண் கவ்வ வைக்க வேண்டும் என்று புட்டபர்த்திப் ‘புண்யாத்மாக்கள்’ ஒரு சூழ்ச்சி செய்தனர்.
அப்போது அவ்வட்டாரங்களில் திகம்பர ஸ்வாமி என்றொருவர் ஓரளவு பிரசித்தியுடன் இருந்தார். இரண்டு காலும் வழங்காத அவர் ஆடை உடுத்தமாட்டார். பேச மாட்டார். அவரை பக்தர்கள் சிவிகையில் வைத்துத் தூக்கி வருவார்கள்.
புக்கபட்டணத்துக்கு வந்த திகம்பரஸ்வாமியைப் பர்த்திப் புண்ணியவான்கள் வரவழைத்தனர். அவரிடம் பக்தியால் அல்ல; ராஜுப் பயலின் வேஷத்தைக் கிழித்தெறியவே! ஸ்வாமியார் ஏறிவந்த சிவிகையை பால ஸாயியின் இருக்கையான கர்ணம் வீட்டு வாசலில் இறக்கினர். “உண்மையான மஹாத்மாவெனில் இவரே அல்லவா? உடுக்கவேண்டும், உரைக்க வேண்டும் என்ற உந்தல்கள்கூட இல்லாத உண்மை ஞானியைப் பாருங்கள்! ‘மாஜிக்’ செய்துகொண்டு, மக்களோடு கும்மாளமிடும் போலிகளைக் கண்டு மோசம் போகாதீர்கள்!” என்று கோஷமிட்டனர். இந்த உண்மை ரிஷியை அந்தப் போலி நேருக்கு நேர் சந்திக்க முடியுமா?” என்று சவால் விட்டனர்.
உள்ளேயிருந்து “போலி” பிரஸன்ன முகத்தோடு வந்தது. அதன் கையில் ஒரு பெரிய துண்டு இருந்தது.
நேரே சிவிகைக்கு வந்து திகம்பரரிடம் துண்டை நீட்டினார் பாபா. அன்பும், அன்பில் பிறந்த கண்டிப்பும் தொனிக்கும் குரலில் பச்சிளம் ஸ்வாமி வயோதிக ஸ்வாமியாரிடம் கூறுவார்: “அப்பா! ஜீவனோபாயம் வேண்டும் என்பதற்காக இந்த திகம்பர வேஷம் ஏன்? இதை உடுத்துக் கொள். உடல் உணர்வு உண்மையாகவே நசித்தாலன்றோ உடை நழுவலாம்? உனக்கு உடலைப் பற்றிய கவலைதானேயப்பா பெரிதாக இருக்கிறது? ‘கால் வழங்காத நாம் ஜீவனத்துக்கு என்ன செய்வது?’ என்று தானே சாமியாராக மாறியிருக்கிறாய்? மக்கள் உன்னைச் சுமக்கச் செய்கிறாய்? இதனால் பாபத்தைச் சுமக்கிறாய்? நான் சொல்கிறேன், இனி மெய்யாலுமே ஸாதுவாக மாறு. பயப்படாமல் எங்கேனும் வனத்துக்கோ, குகைக்கோ போ. இப்போதுபோல் பொய் மௌனமின்றி, மெய்யாக மோனத்தவமிருந்து ஜன்மாவை ஸபலமாக்கிக்கொள். ‘காலிழந்த நமக்குக் கானக விலங்குகளிடமிருந்து காப்பு ஏது? அங்கு நமக்கு உணவிடுவார் யார்?’ என்று பயப்படுகிறாய்! அப்பனே, அஞ்சாதே! நானிருக்க பயம் ஏன்? பரம்பொருளை உண்மையாக நாடினாயாகில் நீ எந்தக் காட்டில், மேட்டில், தண்டகாரண்யத்தில், ஹிமாசலத்தில் இருந்தாலும் உனக்கு நான் காப்பு. வேளைக்கு உனக்கு உணவு கிடைக்கச் செய்வது என் பொறுப்பு. யோக க்ஷேமம் வஹாம்யஹம்!
இரண்டு மஹாவாக்கியங்கள். முதலாவதாக, அன்று ஷீர்டியில் செய்த ஆணை: “நானிருக்க பயமேன்?” ஷீர்டியில் மட்டும் தானா? ஆதியில் இரண்டு யுகங்களுக்கு முன், ராவணனின் தொல்லை தாளாமல் தேவாதியர் நடுங்கி வேண்டியபோது நாரணனாகச் சொன்ன முதல் வாக்கும் இதேதான்: பயம் த்யஜத அச்சத்தை விடுங்கள்!”
பின், ஒரு யுகத்துக்கு முன், குருக்ஷேத்திரத்தில் கூறிய பிரதிக்ஞையே இரண்டாவது மஹாவாக்கியம்: “யோக க்ஷேமம் வஹாம்யஹம்.”
இதில் இரண்டாவதன் உட்பொருளை அறிந்து, உண்மை பக்தி செலுத்துவோர் அபூர்வமாகவே இருப்பர். நாம் யோக தசை என்றும், க்ஷேமம் என்றும் எண்ணுவதற்கு நேர்மாறாகவும் பகவான் நடத்தி வைத்துப் புடம் போடும்போது, அறிவிலிகள் அவர் வாக்கு தவறியதாகவே எண்ணுவோம். ஆனால் முதல் சபதம் இப்படியல்ல. ஓர் ஆபத்தில் நம்மால் ஆவது ஏதுமில்லை என்று அஞ்சி, “ஸாயிராமா!” என்று அழைத்துவிட்டால், “நானிருக்க பயமேன்?” என்று அவர் பரிந்து வந்து புரந்து அருள்வது லக்ஷக்கணக்கினரின் பிரத்யக்ஷ அநுபவம். அருகாக வந்தென்னை அஞ்சேல் என்பார்” என்று அப்பர் செப்பியது இந்த அப்பனுக்கே தகும் என்று மேலே “ஸாயிராமா” என்று அழைத்தாலே போதும் என்றதுங்கூட சரியல்ல. அவர் பெயரை நினையாவிட்டாலும், அவர் பெயரே தெரியாவிட்டாலுங்கூட ஆபத்துதவியாகப் பலருக்கு அருளியிருக்கிறார்.
…பவளத் திருவாயால்
“அஞ்சேல்” என்ன ஆசைப்பட்டேன்
என்றார் மணிவாசகர். இவரது தாம்பூலம் தரித்த பவளவாயை1 அறியாதாருக்கும் அபய தானம் செய்யும் அருளை என்னென்பது? எடுத்துக்காட்டுக்கள் பின்னர் பார்ப்போம்.2 1984 ஜூன் வரையில் ஸ்வாமி தாம்பூல தாரணம் செய்து வந்தார்.