சத்ய சாய் – 2

4. பாலகாண்ட லீலை: ஒளி விந்தைகள்!

ஸ்வாமியைப் பற்றிய என் முந்தைய நூல்கள் வெளி வந்தபின் தெரியவந்துள்ள லீலைகளில் அவரது பாலப் பருவத்தைக் குறித்த சிலவும் உள்ளன. இவற்றிலும் வண்ணம் காட்டும் ஒன்று உண்டு. சரியாகச் சொன்னால் பால காண்டம் தொடங்குவதற்கும் முற்பட்ட ஓர் அற்புத லீலை அது. பாலனாக உருவான கரு, அல்லது பரமேச்வரனின் அவதார ஸங்கல்பக் கருத்து, தாய் வயிற்றில் புகுந்த திருவிளையாடலாக்கும் அது! பல்லாண்டுகளுக்குப் பின் ஸ்வாமியே தூண்ட, அத்தாயே வெளியிட்ட திவ்ய லீலை!

அடியார்கள் சூழ அமர்ந்திருந்தார் ஸ்ரீ ஸத்ய ஸாயி பகவந்தன். புராணங்களில் தேர்ச்சி பெற்ற பண்டித ராம சர்மா, ஸ்வாமியிடம் கேட்டார்: “ஸ்வாமி! தங்களது அவதாரம் பிரவேசத்தின் மூலமா? பிரஸவத்தின் மூலமா?”

அவர் கேட்டதன் பொருள் கூடியிருந்தோரில் பலருக்குப் புரியவில்லை. நம் வாசகர் சிலருக்கும் புரியாதிருக்கக் கூடுமாதலால் விளக்குகிறோம். தம்பதியர் சேர்க்கையால் அவதார உயிர் உண்டாவதாகப் பொதுவாகப் புராணங்களில் சொல்லியிருப்பதில்லை. தெய்வ சக்திக் கதிரொன்று தாயுள் புகுந்து கருவானதாகவே சொல்லியிருக்கும். விஷ்ணு சக்தி பாயஸ ரூபமாகக் கௌஸல்யையுள் சென்று, நினைக்க இனிக்கும் ஸ்ரீராம சந்திரனாயிற்று. அதே சக்தி வஸுதேவரின் மனத்தில் புகுந்து, பிறகு தேவகியின் மனத்துக்கு மாறி, அப்படியே கருவாகி, கருங்குவளைக் கண்ணனாகப் புஷ்பித்தது. இயேசு, புத்த அவதாரங்களும் பெற்றோரின் சுக்ல சோணித ஜனிதமாயில்லாத கர்ப்பத்தையே சொல்கின்றன. திவ்ய சக்திக் கிரணமே தாய் வயிற்றில் புகுந்து சிசுவாவதைத்தான் ராம சர்மா, “ப்ரவேசத்தின் மூலமா?” என்றது.

உடனே ஸ்வாமி ஈச்வரம்மாவின் புறம் திரும்பினார். அவளிடம் சொன்னார்: “உன்னிடம் உன் மாமியார் ஒருநாள் எச்சரித்து வைத்தாளல்லவா? அதற்கப்புறம் நீ கிணற்றங்கரைக்குப் போனாயே! அப்போது என்ன நடந்ததென்று ராம சர்மாவுக்குச் சொல்லு.”

எத்தனையோ காலமாக மூடி வைக்கப்பட்ட ரஹஸ்யத்தை ஈச்வரம்மா திறந்துவிட ஸாயி சாவி கொடுத்து விட்டார். அனைத்துக் கண்களும் அவள் முகத்தில் திரும்ப, அந்த எளிய மாதரசி கூறலானாள்:

ஒரு நாள் காலையிலே என் மாமியார் என்னிடம், ‘ஸத்ய நாராயண ஸ்வாமி ஸொப்பனத்திலே வந்தார். அவர் ஸங்கல்பத்திலே உனக்கு ஏதாவது ஏற்படலாம். பயப்படாதே’-ன்னு சொன்னாங்க. மேல் விவரம் எதுவும் சொல்லல்லை. அந்தக் காலையிலேயே நான் கிணத்துலே ஜலம் இழுக்கப் போனேன். அப்போ திடீர்னு எங்கேயிருந்தோ ஜொலிக்கிற ஒரு நீல வெளிச்சம் பந்து மாதிரி உருண்டு என்னைக் குறி பார்த்து வந்தது. அது எனக்குள்ளேயே ஸுலபமா நுழைஞ்சுட்டதாகத் தெரிஞ்சுது. அப்படியே மயக்கம் போட்டு விழுந்துட்டேன்!”

ஸ்வாமி நகை முகத்தராக ராம சர்மாவைப் பார்த்தார். “உங்க கேள்விக்குப் பதில் வந்துடுத்துஎன்றார்.

***

ன்னொரு ஸம்பவம். நீல ஒளி சிசுவுருவில் ஜனித்து ஒன்பது மாதங்களுக்குப் பின் நடந்தது. இதையும் தாயின் வாய்மொழியில் கேட்போம்.

நல்லா, தெளிவா அந்த ஸமாசாரம் நினைவிருக்கு. அப்போ ஸ்வாமி ஒம்பது மாஸக் குழந்தை. குளிப்பாட்டி, உடை போட்டு, மையிட்டேன். சிவன் கோயில் விபூதி வெச்சு, ஸத்யம்மா கோவில் குங்குமமும் இட்டு, தூளியிலே போட்டு ஆட்டினேன்.” அடுப்பிலே பால் பொங்க இருந்ததாலே எறக்கறத்துக்கு வந்தேன்.

குழந்தையோட அழுகைக் குரல் கேட்டது. எனக்கு ஆச்சர்யமாயிடுத்து. ஏன்னா, பிறந்த நாளா குழந்தை அழுததே கிடையாது. ஒரு குழந்தை இருந்தா, அது பசி, வலி, வேறே ஏதோ அஸௌக்யம்னு எதுக்காவது அழுமோல்லியோ? நம்புங்க, ஸ்வாமி குழந்தையாயிருக்கச்சே இந்த மாதிரி எதுக்குமே அழுததில்லை! அதனாலே. இப்போ அழுது கேட்டவுடனே ஓடிப்போய், குழந்தையைத் தூளியிலேருந்து எடுத்து மடியிலே போட்டுண்டேன். குழந்தை அழுகையை நிறுத்திச்சு. அப்போ அதன் உடம்பு முழுதையும் சுத்தி ஒரு ஜோதி வட்டம் சூழ்ந்துச்சு. நல்ல பிரகாசமான பிரபை. ஆனாலும் அந்த வெளிச்சம் எனக்குக் கூசல்லை. அவ்வளவு கிட்டே, அத்தனை பிரகாசமாயிருந்தும் அது ரொம்ப ஹிதமா, ஜில்லுனு இருந்துச்சு. அப்படியே மெய் மறந்து கல்லா உக்கார்ந்திருந்தேன். நிறைய நேரம் அப்படியிருந்தது. அப்பறம் அது கொஞ்சம் கொஞ்சமா மங்கி மறைஞ்சு போச்சு. என் கண் மூடிண்டுது. அப்பறம் ஒண்ணும் சுத்துப்புற உணர்ச்சியில்லை. என் மாமியார் வந்து எழுப்பின பிறகுதான் முழிச்சுண்டேன். குழந்தை தூங்கற மாதிரியே இருந்துது.” “என்ன ஆச்சுன்னு மாமியார் கேட்டாங்க. சொன்னேன். அவங்க உதட்டுலே விரலை வெச்சு, ‘யார்கிட்டேயும் சொல்லாதே! புரிஞ்சுக்க மாட்டாங்க, ஏதாவது கதை கட்டி விடுவாங்க’-ன்னு சொன்னாங்க. என் மாமனார்கிட்டே மட்டும். அவங்களே விஷயத்தைச் சொல்லியிருக்கணும். ஏன்னா, அப்பறம் அவரு அதைப் பத்திக் கேட்டாரு.”

நெடுங்காலத்துக்குப் பின்பெத்த பொட்டுஅம்மையார் ஈச்வரம்மாவைத் துளைத்தெடுத்தபோதே, மாமியார் சொற்படி அவள் அந்நாள்வரை காத்து வந்த இந்த ரஹஸ்யத்தை வெளியிட்டாள்.

5. பாலகாண்ட லீலை: மஹா விபூதிகள் குடி

குட்டி ஸத்யா குட்டிச்சாத்தானின்குட்டியூண்டுஅருள் பெற்று, அப்புறம் சிறிது சிறிதாக அதிகச் சித்து ஆற்றல் பெற்று, அவதாரன் என்று மக்களை ஏய்க்குமளவுக்குச் சமத்காரத் திறம் கொண்டதாக எவரேனும் கூறினால் அது அடியோடு சரியல்ல. திவ்ய சக்தி ஒன்றுக்கே உரிய பேராற்றல்கள் யாவும் குட்டி ஸத்யாவுக்கே இருந்தன. ஒரு ஜீவ இனத்தை வேறொன்றாக மாற்றுவது, பஞ்ச பூதங்களை அடக்கி வைப்பது ஆகிய தெய்வ மா சக்திகள் குட்டி ஸத்யாவுக்கே இருந்தன. ஆனால் அவன் இவற்றைக் குட்டியூண்டே தன் குட்டித் தோழர்களிடம் மாத்திரம் காட்டினான். பின்னாண்டுகளில் படிப்படியாக திவ்ய விபூதிகளை மேன்மேலும் அவிழ்த்துவிட்டு விளையாடினான்.

இதற்கு இரு காரணம் சொல்லலாம். எடுத்த எடுப்பில் மஹா சக்தியைப் பெரிதாய்க் காட்டி மக்களை அதிர வைக்காமல், அவர்களைப் படிப்படியாகப் பக்குவப்படுத்தவே, சிறிய வகைசமத்காரங்களில் சிறியவர்களில் தொடங்கிப் பெரியதற்கும் பெரியவர்களுக்கும் சென்றிருக்கலாம்தான் படிப்படியாக அதிக சித்துத் திறம் பெற்றதால் அல்ல! எத்தனை குரல்வளமுள்ள இசைக் கலைஞராயினும் எடுத்த எடுப்பில் தாரஸ்தாயி பஞ்சமம் பிடித்துவிட மாட்டார்! கொஞ்சம் கொஞ்சமாக ஆலாபனையை விரித்துக் கொண்டே போய், ரஸிகர்களைத் தயார்ப்படுத்திக் கொண்டே, ஆர்வ எதிர்பார்ப்பில் ஆழ்த்திக்கொண்டு போய்த்தான்க்ளைமாக்ஸாகப் பஞ்சமம் பிடிப்பார்! சிலருக்கே ஸாயி அவதாரன் இதைச் செய்து, அவர்தம் மூலம் பலரும் அறியச் செய்ய ஸங்கல்பமாகத் தெரிகிறது.

இரண்டாம் காரணம்: புல் பூண்டிலிருந்து மானுடன்வரை யாவும் சிறுகச் சிறுகப் பரிணமித்து வளர்ச்சி கொள்வதாகத்தானே ஸ்ருஷ்டி முழுதும் உள்ளது? ‘நாமுமே அவதாரனாகப் பிறக்கும்போது இதற்கு உதாரணம் காட்டிக் கொள்வோமே! நம் குழந்தைகள் யாவருக்கும் உள்ள பரிணாமம் நமக்கும் இருப்பதுபோலத் தோன்றட்டுமே!’ என்ற ஒட்டுணர்ச்சியிலேயே பரமன் இப்படித் திருவிளையாடல் செய்திருக்கலாம்!

ஆயினும் இதனால் தாம் படிப்படியாய் அபிவிருத்தியானதாக அடியார் தப்புக் கணிப்புச் செய்துவிடக் கூடாதென்றோ என்னவோ, பாலப் பருவத்திலேயே ஓரிரு சமயம் திவ்ய மஹா விபூதிகளைக் காட்டியுமிருக்கிறார்.

ஜீவ இனமாற்றம் பிற்காலத்தில்கூட பாபா செய்ததாகத் தெரியவில்லை. ஜடமான கருங்கல்லைக் கற்கண்டாக, தங்க மோதிரத்தை நவரத்ன மோதிரமாகஎல்லாம் மாற்றிய பிற்கால பாபா ஓர் உயிரினத்தை வேறோர் உயிரினமாய் மாற்றியதாகத் தெரியவில்லை. கட்டெறும்பு ஜீவனொன்றை ஜடமான இரு கருகுமணிகளாக அவர் மாற்றியதைஸ்வாமிநூலில்சித்து மீறிய சித் விலாஸ்ங்களில் ஒன்றாகக் கொடுத்திருக்கிறேன். ஆனால் ஒரு ஜீவனை இன்னொரு ஜீவனாகவேயும் அவர் மாற்றுவாரென்பதற்கு அப்போது எனக்கு எடுத்துக்காட்டு கிடைக்கவில்லை. ஸமீபத்தில் வெளியான ஈச்வரம்மா குறித்த கஸ்தூரியவர்களின் நூலிலேயே இதற்கு ஒரு சான்று கண்டேன். இது குட்டி ஸத்யம் விளைவித்ததேயாகும்!

ஸத்யத்தின் தோழப் பிள்ளைகள் தவளைகளைப் பிடித்துஒரு கூடையில் போட்டு மூடினார்கள். கூடையுள்ளே அடைபட்ட ஒரு டஜன் மண்டூகங்கள் ஒப்பாரி பாடின. சின்ன ஸத்யம் சிரித்தான். ஸத்யத்தில் சின்னது, பெரிசு ஏது? ஏக ஸத்யம்தானே? அதன் சக்தியும் என்றும் ஒன்றுதானே? அன்பு என்ற அந்த சக்தி சின்ன ஸத்யாவின் சிறு சிரிப்பிலே அலர்ந்தது. உடனே ஒப்பாரியே ஆனந்த கீதமாக உருமாறியது. அது தவளைகளின் கடகடா குடுகுடுகீதமாயில்லாமல், நீளவால் குருவிகளின் ஸுஸ்வரக் கீச்சுக் கீச்சாக இருந்தது!

நம் குட்டிவால் கதாநாயகன் கூடை மூடியைத் தூக்க, உள்ளிருந்து பன்னிரண்டு நீளவால் குருவிகள் சிறகடித்துப் பறந்தன!

நிறைந்த வெளி நீல வானிலேதன்னை
மறந்து இறைவன் புகழ்

பாடின! ஸத்யத்தின் தோழரான சிறார்களும் சிறகில்லாமலே இன்ப வானில் பறந்தனர்!

நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய ஓர் உயிரினம், நிலத்திலும் வானிலும் வாழும் ஒன்றாக மாறியது டார்வினின் ஸயன்ஸில் வருமோ? மாறாத அன்பின் ஸயன்ஸில் எதுவும் எதுவாகவும் மாறும்! உள்ளே ஒன்றேயான ஆத்மாவில் வெளியே எந்த உருவையும் அது தோற்றுவிக்கும்! எப்படி இந்தமாண்டுக்யோபநிஷத்து’?

***

தம்பிரானின் தமக்கை வெங்கம்மா வீடு கட்டிக் கொண்டிருந்த சமயம். பெரிதாகச் செங்கல் சூளை போட்டிருந்தார். களிமண்ணைச் செங்கல் உருவத்தில் வெட்டியாயிற்று. ஆனால் அன்றைக்கு நாள் நன்றாக இல்லை. எனவே மறுநாள் சூளைக்கு எரியூட்ட எண்ணி, விறகெல்லாம் போட்டுரெடிசெய்து வைத்தனர்.

இவர்களைவிடத் திடீரெனரெடியானார் வருண பகவந்தன்! வானத்தை அடைத்தது கருங்கொண்டற் பந்தல். குளிர்காற்று வீசலாயிற்று. இடி மின்னல்கள் வருணர் விஜயத்துக்குக் கட்டியம் கூறின.

அவ்வளவுதான்! போச்சு செங்கல் சூளை! ஈரச் செங்கல் முழுதும் மழையில் கரைந்தோடி விடப் போகிறதுஎன்று கலங்கியே விட்டார் வெங்கம்மா.

அண்டைப்புறத்தார் ஒரு யோசனை சொன்னார்கள். ஆற்றங்கரையில் வசிக்கும் ஒருவரிடமிருந்து அறுவடையான கரும்பின் கூந்தல் கட்டுக்களை வாங்கி வந்து சூளை மீது பரப்பி மூடிவிட்டால் மழை படாமல் காப்பாற்றலாமென்றார்கள்.

உதவியுள்ளம் படைத்த கிராம மக்கள் உடனே அந்த மனிதரின் வீட்டுக்கு ஓடினார்கள்.

தம்பியான நம் தம்பிரானும் அவர்களோடு ஓடினார், மானுடத் தொண்டின் மாதுர்யத்தை உவந்து.

ஆனால் ஆற்றங்கரையில் போய்க் கொண்டிருக்கும்போது, இடியின் குமுறலில்இதோ வந்துவிடுவேன்என்று மழைத் தேவதையின் மிரட்டல் அதிகமானவுடன் மானுடத் தொண்டின் மாதுர்யத்துக்கு மேலாக திவ்யக் காப்பின் காம்பீர்யத்தைக் காட்டிவிட கருதினான் ஸத்யா.

நில்லுங்கள் எல்லாரும்!” என்று ராஜ மிடுக்குடன் உத்தரவிட்டான்.

ஓடிய கால்கள் யாவும் நின்றன ஆக்ஞையிலே!

அக்காவைப் பார்த்தான். “வெங்கம்மா! வான ராது (மழை வராது)!” என்றான் தீர்மானமாக.

குட்டிக் கை வானை நோக்கி உயர்ந்தது! வருணனுக்கு ஆக்ஞை!

கொண்டற் பந்தல் கலகலத்து, விலவிலத்து அப்படியே தேய்ந்தது. வானம் பளீரென வெளி வாங்கியது.

வெங்கம்மா முதலானோரின் அச்ச மேகமும் பிசுபிசுத்தோட, ஆச்சர்ய ஒளி வீசியது!

பார்த்தீர்களா, பிஞ்சுப் பிள்ளையாயிருந்த போதே ஸ்வாமியின் பஞ்சபூத ஆதிபத்தியத்தை!

6. ‘வார்டன்ஸாயி: வாழ்வு முழுவதற்குமே!

ஏர் ரைட் வார்டன் (Air Raid Warden) ஞாபகமிருக்கா?” – இப்படி ஸ்வாமி கேட்டார், மாபெரும் பொதுக்கூட்டமொன்றில் முன் வரிசையில் இடம் பெற்றிருந்த ஒரு பிரமுகரை முதன்முறை கண்டபோது.

தப்பு, தப்பு! பிரமுகர்தான் ஸ்வாமியை இப்போது முதன்முறையாகக் காண்கிறார். அகிலத்தையும் அனவரதமும் கண்காணிக்கும் ஸ்வாமி இப்போதுதானா அவரை முதன்முறை பார்த்தார்? ஸ்வாமி முன்னரே பன்முறைகுறிப்பாக இரண்டு முறைஅவருக்குக் கண் பாலித்த விசேஷம்தான் இன்று அம்மனிதர் உயிரோடு இத்தர்சனம் பெற வந்திருப்பதே! கூட்டத்திடை ஸ்வாமி அவரைக் கண்டதும் இவ்விரண்டு பாலிப்புக்களில் பிற்பாடு நடந்த ஒன்றை முதலில் குறிப்பிட்டார். (இதை நாம் பிற்பாடு பார்ப்போம்.) அப்புறந்தான் அதற்குப் பல்லாண்டு முன் நடந்த இன்னொரு பாலிப்பைப் பற்றிய ஸுசனையாக, “ஏர் ரைட் வார்டன் ஞாபகமிருக்கா?” என்றார்.

(விமான குண்டு வீச்சிலிருந்து எச்சரித்து உதவும் காவலரே ஏர் ரைட் வார்டன்.)

ஸ்வாமி இவ்வாறு கேட்டதும் கேட்கப்பட்ட பிரமுகர் ஆச்சரியஆனந்த ஆழ்நன்றி உணர்வில் அகம் துள்ளினார். ‘ஆஹா, அதுவும் அப்படியா?’

ஸ்வாமியின் முதல் தர்சனம் பெற்றபோது அம்மனிதர் அரசியல், பொதுவியல் பிரமுகராகவே இருந்தார். காந்தி மஹாத்மாவின் கீழ் பயிராகி, தியாகம் பல புரிந்து, ஸ்வதந்திர பாரதத்தில் மந்திரியாக இருந்தவர் அவர். ஸ்வாமி தர்சனம் பெற்றபின் ஆன்மவியலில், அதாவது அன்பியலான பாபா வயலில் ஒரு பயிராகி ஸாயி ஸமிதியின் மாநிலத் தலைவர், ஸாயி ஸ்தாபன பிரமுகர் என்றெல்லாம் வளர்ச்சி கண்டார். அதன் ஒரு லக்ஷணமாகத்தான் தமது அடையாளத்தைத் தெரிவிக்காமலே தம் விஷயமாக ஸ்வாமி செய்த லீலையைத் தெரிவிக்கிறார்.

அந்த மஹாலீலை நடந்தபோது அவர் இள வயதினர். அது, 1940-ன் பிற்பகுதியில் ஜெர்மானியர்ப்ளிட்ஸ்’ (Blitz) என்பதாக லண்டனைப் படுபயங்கரமாக முற்றுகையிட்டு வந்த காலம். அப்போது அதே லண்டனில் இவர் கல்லூரி மாணவராயிருந்தார். அறை அறையாக ஒவ்வொருவருக்கு வாடகைக்கு விடும் பழையஅபார்ட்மென்ட் ஹவுஸ்ஒன்றில் உச்சிக்கூரை அறையானஆட்டிக்என்பதில் வஸித்து வந்தார்.

ஹிட்லரின் பேய்த்தனமான விமான குண்டு மாரிக்கு லண்டன் ஆளாயிற்று. சர்ச்சிலின் வீர முழக்கத்தில் அதிசய நெஞ்சுரம் பெற்ற ஆங்கிலேயர், நாள் நாளாக, வாரம் வாரமாக எதிரியின் தாக்குதல் ஓங்கியும் அடி பணியாமல் அஞ்சா நெஞ்சம் காட்டி உலக சரித்திரத்தில் இடம் தேடிக் கொண்டனர்.

கல்லூரி வகுப்புக்கள் முடிந்து வந்து, ஹோம் ஒர்க் முடித்து நம் இளைஞர் அலுப்பும் ஆயாஸமுமாகப் படுக்கையில் விழும் சமயம் பார்த்து அபாய சங்குகள் அலறத் தொடங்கும். ஜெர்மானியரின் குண்டு தாங்கி விமானங்களின் வருகைக்கான எச்சரிக்கைத்தான்! சுருண்டு விழுந்த இளைஞர் உடனே வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்து, ‘ஆட்டிக்கிலிருந்து அத்தனை படிகளிலும் உருளாத குறையாக விருவிருவென இறங்கி வந்து, நிலவறைக் காப்பகத்தில் புகுந்து கொள்வார். அங்கே கூட்டம் நெரியும். இரவெல்லாம் தூக்கமில்லாமற் போகும். மறுதினம் வாடி வதங்கிக் கல்லூரிக்குப் புறப்படுவார். மேலும் வாடி வதங்கிக் கிழவராக வீடு திரும்பி, வேலை முடித்து, படுக்கையில் விழப் போனால் அன்றும் பழி வாங்கும் அபாய சங்கு! நாளாக ஆக அந்த சங்கே அவருக்கு அபாய அறிவிப்பாக இன்றி அபாயமாக ஆகிவிட்டது!

அப்புறம் ஒருநாள் அவரால் தாங்க முடியவில்லை. ‘தினமுந்தான் சங்கு முழங்குகிறது. ஆயினும் லண்டனின் மற்ற பல பகுதிகள் குண்டு வீச்சில் தூள் பட்டாலும் தம் பகுதியிலென்னவோ இதுவரை ஒரு குண்டுகூட விழவில்லை. விழாத குண்டுக்காக பயந்து, தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டு உடல் நலனை வீணாக்கிக் கொள்வதுதான் மிச்சம். இன்று சங்கு ஊதினாலும் ஷெல்டருக்கு ஓட வேண்டாம். சட்டப்படி அது குற்றந்தான். ஆனால் இப்படி இந்த உச்சி ஆட்டிக்கில் நாமொருவன் இருப்பதோ போவதோதான் இங்கே எவருக்கும் தெரியாதே! யார் புகார் கொடுக்கப் போகிறார்கள்?” என்று தீர்மானித்து வீடு திரும்பினார்.

அன்றும் அவர் சலித்துச் சயனத்தில் சாய்ந்தவுடன் சங்கு ஊளையிடத் தொடங்கிற்று. எழுந்திருப்பதில்லை என்ற உறுதியுடன் தலை யோடு கால் போர்த்திக்கொண்டு அப்படியே அரைத் தூக்கத்தில் நழுவினார்.

சில நிமிஷங்கள் சென்றிருக்குமோ என்னவோ?

டப்டப்டப்டப்என்று அறைக் கதவைத் தட்டும் ஒலி வந்தது.

குரல் கொடுக்காமலே கிடந்தார் நம் இளைஞர்.

டப் டப்தட்டல்தப தபஎன்று கதவைப் பிளப்பதாக வலுத்தது. கடுமையான குரலும் கேட்டது: “திற! திற கதவை! ஆசாமி உள்ளேயிருப்பது எனக்குத் தெரியும். திற! இது சட்டம்!”

வேறு வழியின்றி, பயந்து நடுங்கியபடி இளைஞர் கதவைத் திறந்தார். ஆஜானுபாஹுவாய், தக்காளியாகச் சிவந்த முகத்தோடு, ஹெல்மெட்காரரான ஓர் ஏர் ரைட் வார்டன் வெளியே நின்றிருந்தார். அவரது கையிலிருந்த டார்ச் இளைஞரின் முகத்தில் ஒளியை வாரி அடித்தது.

கண்டிப்பாக உத்தரவிட்டார் வார்டன். “சங்கு கேட்கவில்லை? க்விக்! வா என் பின்னே ஷெல்டருக்கு! ஸூட் போட்டுக்கொள்ள டயம் இல்லை. பைஜாமாவோடேயே வா. பரவாயில்லை. க்விக்!”

பூட்ஸ் அணிந்த தூண் கால்கள் படி அதிர வேகமாய் இறங்க, அதைப் பின்பற்றின பைஜாமாவில் ஒளிந்த இரு சோனிக் கால்கள்!

காப்பகத்தில் இளைஞரைக் கொண்டு சேர்த்தவுடன், வார்டன் வெளியேயிருந்து அதன் கதவை இழுத்துப் பூட்டினார். அங்கே கூடியிருந்த கூட்டத்திடை இளைஞர் தமக்கு இடம் பண்ணிக்கொள்வதற்குள்ளேயே!…

பூகம்பம் போலக் காப்பகம் ஓர் ஆட்டம் ஆடிற்று.

பூட்டிய கதவு பிளந்து, வெளியேயிருந்து இடி பாட்டுத் தூளும் புழுதியும் உள்ளே வாரியடித்தன!

சிறிது போதுக்குப் பின் வெளிவந்து பார்த்த போது

அன்று அந்தப் பகுதியிலேயே குண்டுமாரி பொழிந்திருப்பது தெரிந்தது. குறிப்பாக, நம் இளைஞர் குடியிருந்த அபார்ட்மென்ட் ஹவுஸின் மாடிகள் அப்படியே மொட்டையடிக்கப்பட்டிருந்தன!

ஆஹா! ஆண்டவா! அந்த வார்டன் மூலம் எப்படித் தருணத்தில் காத்தாய்!” என்று ஓங்கிய இளைஞரின் உள்ளம் மறுகணமே தொய்ந்து சாய்ந்தது. ‘அந்த வார்டன்? ஷெல்டருக்கு வெளியேயிருந்த அவர் நமக்கு உயிரளித்த உபகாரி குண்டுக்கு உயிர்ப்பலியாகியிருப்பாரே!’

அவர் பலியாகவில்லை என்று ஆண்டாண்டுகளுக்குப் பின் இளைஞரைப் பிரமுகராகக் கூட்டத்திடை கண்ட நமது ஆண்டவனே ஐயம் திரிபறத் தெளிவுபடுத்தினான்! “ஏர் ரைட் வார்டன் ஞாபகமிருக்கா?” என்று கேட்டவுடனேயே தொடர்ந்து, “நான்தான் அந்த ஏர் ரைட் வார்டன். உன்னை அந்தக் குண்டிலிருந்து காப்பாற்ற நானே வந்தேன்என்றார் ஸ்வாமி!

அடியாரைக் காக்க அத்தனை விரைவாய் ஓடி வந்தவர், காத்தது தாமே எனத் தெரிவிக்க எத்தனை ஆண்டுகள் காத்திருக்கிறார்? இதுவும் அவரொருவராலேயே இயலும் அற்புதந்தான்!

இச்சம்பவம் நடந்தபோது ஸ்வாமியின் வயது பதிநான்குதான்! ஏறக்குறைய. தம்மை ஸாயி பாபாவாக பிரகடனம் செய்து கொண்டு உரவகொண்டா வீட்டை விட்டு வெளிக் கிளம்பி, உலகு முழுதுடனும் அவர் உறவு கொண்டாடப் புறப்பட்ட சமயமாகவே இருக்கலாம்!என்றுமே பூர்ண வளர்ச்சி கண்ட திவ்வியத் திறம் அவருடையது என்பதற்கு இதுவும் சான்றுதான்.