25. மற்றுமொரு துணுக்கு; கார பகோடா!
ஸேவாதளத் தொண்டர்கள் உணவுக்காக பிரசாந்தி நிலயக் கான்டீனுக்குள் நுழைந்தனர். சாப்பாட்டு மேஜை முன் அமராமல் அவர்களில் இருவர் கன காரியமாக நேரே சென்று பகோடா பொட்டலங்கள் வாங்கினர். அவர்கள் அதில் காட்டிய ‘பக்தி ச்ரத்தை’களைப் பார்த்த போது, இன்னொரு ‘ஸேவக்’கான திரிமூர்த்திக்கு, ஒரு வேளை அது ஸ்வாமி ப்ரஸாதமாயிருக்குமோ, அல்லது இங்கே மீல்ஸுடன் இப்படிப் பகோடா சேர்த்துச் சாப்பிடுவது வழக்கமோ என்றெல்லாம் தோன்றிற்று. அவர்களையே கேட்டார். “அதெல்லாமில்லீங்க. சாப்பாட்டு ப்ளேட்டிலே உப்பு, ஊறுகாய் வைக்காம விட்டிருந்தா ஈடுகட்டறதுக்கு இருக்கட்டுமேன்னுதான் பகோடா வாங்கினது. இது உப்பு உறைப்பா இருக்கும். நீங்களும் வாங்கிக்கோங்களேன்” என்று அவர்கள் கூறினர்.
‘பார்த்துப் பார்த்துச் செய்யும் பர்த்தீசரிடம் ஏன் முழு நம்பிக்கை வைக்காதிருக்க வேண்டும்? அவர் போட்டதை உண்டுவிட்டுப் போவோமே!’ திரிமூர்த்தி பகோடா வாங்கவில்லை.
சாப்பாட்டு மேஜைக்கு வந்து எல்லோரும் அமர்ந்தார்கள். தமது தாலத்தில் உப்பும் ஊறுகாயும் திவ்ய தர்சனம் தருவதை த்ரிமூர்த்தி கண்டார். பக்கத்தில், எதிரில் இருந்த தாலங்களைப் பார்த்தார் – ஒவ்வொன்றாக! ஒவ்வொன்றிலும் அந்த அயிட்டங்கள் இடம் கொண்டிருந்தன.
ஆனால் அதோ அந்த இரு தாலங்களில் அவற்றைக் காணோமே! எதிர்பார்ப்போடுகூட அத்தாலங்களுக்குரிய சாப்பாட்டுக்காரர்களைப் பார்த்தார். எதிர்பார்ப்பு சரியாகவே இருந்தது. அந்த இருவர் பகோடா வாங்கியவர்கள்தான்!
திரிமூர்த்தி கண்ணைச் சுழற்றியும் கூர்ப்பாக்கிக் கொண்டும் கண்ணுக்கெட்டிய மட்டும் தெரிந்த தாலங்களைப் பார்த்தார். அந்த இரு தாலங்களைத் தவிர மற்ற அனைத்திலும் உப்பும் ஊறுகாயும் எழுந்தருளியிருந்தன!
“Books in brooks, sermons in stones” – “ஓடையிலே பாடம், பாறையிலே போதம்” என்று சொல்கிறார்களே, சப்பிட்ட கேக், உப்பிடாத கலம் என்று எதிலுமே ஐயன் நமக்கு போதனை கற்பிப்பான்!
26. காயரஸமும் ஸாயிரஸமும்
அவரைப்போல் பார்த்துப்பார்த்துச் செய்ய ஆரால் முடியும். அம்பத்தூரில் மாடி வீட்டில் நாங்கள் குடியிருந்தபோது இரவுதோறும் ஒரு குறிப்பிட்ட மூலையில் ஃப்ளாஸ்கிலே பாலும், வெகு ‘லைட்’டான சிற்றுண்டி எதுவேனும் அம்மா வைத்திருப்பாள். தியானம் முடித்து வந்து அவற்றை அருந்துவேன்.
அன்று பாலோடு அப்பளம் சுட்டு ‘இக்ளூ’வில் வைத்திருந்தது. ஒரு கப்பும் அப் பெட்டியில் இருந்தது. கப்பில் என்ன இருக்கிறதென்று பார்த்தேன். பஞ்சாம்ருதம்.
ஸாயியின் அன்பு பல ஸோதரரின் அன்பளிப்புகளாகப் பாய்வதில் எவரோ பழநிப் பஞ்சாம்ருதம் கொண்டு வந்து கொடுத்திருப்பதாக நினைத்தேன். அப்பளத்தையும் பாலையும் விழுங்கியபின் அப்பன் பிரஸாதத்துடன் தலைக்கட்ட நினைத்தேன்.
அப்படியே கடைசியாகக் கப்பை வாயில் சாய்த்துக் கொண்டு சற்று விழுங்கியும் விட்டதில்…
அப்பப்பா, நான் பட்ட அவஸ்தை! பகபகவென்று தொண்டை எரிய, அடி வயிறுவரை பிடுங்கிக் கொள்வது போல உறைப்பு உள்ளே பாய, கண்கள் வர்ஷிக்க, விக்கி இருமலெடுக்க, நான் பட்ட பாடு!
வீட்டுக்கார மாமி காயரஸம் செய்திருக்கிறார். ‘அண்ணா’வுக்கென்று மிளகாய் போடாமல் இஞ்சி மட்டும் போட்டுத் தனியாகத் தயாரித்தனுப்பியிருக்கிறார். ஆயினும் காரமே சேர்த்துக்கொள்ள முடியாத ஸாது(!) அண்ணா அந்தக் காய ரஸத்திலுங்கூட ஓரிரு சொட்டுத்தான் தயிர் சாதத்தோடு ‘தொட்டு’க்கொள்ள முடியும். இன்று அதை பஞ்சாம்ருதமாக எண்ணி ஓரிரு ஸ்பூனே குடித்து விட்டதால்தான் இந்தப் பாடு!
“ஸாயிராமா! அத்தனை நல்ல தியானானந்தம் தந்தவுடன் ஏனப்பா இப்படி அக்னித் திராவஹத்தைக் கொடுப்பதுபோல் செய்கிறாய்?” என்று எண்ணினேன்.
எண்ணியதுதான் தாமதம், நான்கு வீடு தள்ளியிருந்த ஸ்ரீமதி தங்கம் ஸுப்ரம்மண்யனின் வீட்டைச் சேர்ந்த பையன் கப்பும் கையுமாய் உள்ளே நுழைந்தான். வீட்டிலே யாரோ பழநி சென்று வந்ததாகச் சொல்லி, பஞ்சாம்ருதம் நிறைந்த கப்பைக் கொடுத்தான்!
திருப்புகழ் பாடலாம்தானே?
…லீலாவி தர! மதுர!
பநுவல்தரு பழநிதரு கோலாஹ லவ!
அமரர் பெருமாளே!
27. உருண்ட வண்டியுள் திரண்ட காப்பு
விபத்து ரக்ஷணையில் வியத்தகு அற்புதம் சில – ஆயிரமாயிரமானவற்றில் ‘துளியூண்டு’ – இனி பார்ப்போம்.
லண்டன் பளிட்ஸில் நமது ஸ்வாமி ஏர் ரைட் வார்டனாகச் சென்ற மாபெரும் விபத்துக் காப்பை பால லீலைகளில் பார்த்தோமல்லவா? அவ்வருளுக்குப் பாத்திரமானவருக்குச் செய்த இன்னொரு ரக்ஷணை.
லண்டனில் நாம் மாணவராகக் கண்ட அவருக்கு மணமாகி, மனைவாழ்வில் பல்லாண்டு சென்றுவிட்டன. இப்போது தேச வாழ்விலும் காந்தியத் தலைவர்களிடை ஓரளவு முக்கியம் பெற்று விட்டார்.
அவரும் மனைவியுமாகக் குறுகிய மலைப்பாதையொன்றில் காரிலே சென்றுகொண்டிருந்தனர். எதிரே வந்த வண்டியொன்றுக்காக இவ்வண்டியை ஓட்டி வந்த நம் அன்பர் இதைச் சற்று ஒடித்தார்.
சற்று ஓடித்ததே வண்டியை ஓடித்துப்போட்டு ஓடாக்கும் விபரீதமாயிற்று. மலைச் சரிவில் கார் உருண்டது. காருக்குள் தலைவரும் ஸ்ரீமதியும் உருண்டனர்.
அச்சமயத்திலும் அம் மங்கை நல்லாளின் நாவில் உருண்டது ஸ்ரீ ராம நாமம்: “ராமா, ராமா, ராமா, ராமா!”
“ஆபதாம் அபஹர்த்தா”: ஆபத்துக்களை அபஹரிப்பவன் அந்த ராமபத்ரனேயல்லவா?
ராமநாமம் காதில் மோதும் நினைவோடு, பாறை பாறையாய் மோதிச் செல்லும் காருக்குள் இருந்த தலைவர் நினைவிழந்தார்.
மீண்டும் பிரக்ஞையுற்றபோது தாம் ஸம நிலத்தில் நீள நெடுகப் படுத்திருப்பதை உணர்ந்தார். உடம்பிலே வலியா, காயமா எதுவுமில்லை. பக்கத்திலேயே ஒரு பாறை ஸ்வஸ்தமாக முட்டுக்கொடுக்க அதில் சாய்ந்தவாறு மனைவி காணப்பட்டாள். அவளுக்கு உயிர் இருக்கிறதா என இவர் எண்ணிய அப்போதே அவளும் பிரக்ஞையுற்றுக் கண்ணைத் திறந்து பார்த்தாள்.
என்ன ஆச்சர்யம்! அவளுக்கும் வலி இல்லையாம். காயம் இல்லையாம்.
தூரத்தில் எங்கோ, அறுவடையான வயலில் இவர்களது கார் அடியோடு ரூபம் தெரியாமல் வளைந்த இரும்புத் தகடுகளாகத் தெரிந்தது.
அதிலிருந்து இவர்களை யார் எடுத்து இத்தனை அழகாகப் படுக்கவும், உட்காரவும் வைத்தது? “ராமா, ராமா” என்றாளே, அவன்தானா? யார்? யார்?
“நான்தான்” என்று ஸ்பஷ்டமாகச் சொன்னார் ஸாயிராமர் – இதற்குச் சில மாதங்களுக்குப் பின்னால்!
அப்போது ஒரு நகரத்துக்கு இந்த அரசியல் தலைவர் சென்றிருந்தார். தமக்கே ஏனென்று தெரியாமல், அங்கு பாபா பேசவிருந்த ஒரு பொதுக்கூட்டத்துக்குச் சென்றார். இவர் வரப்போவதை பாபா நன்றாக அறிந்திருக்கிறாரென்று அங்கே தெரிந்தது. வரவழைத்தவர், அல்லது வர ‘இழுத்தவர்’, அவர்தானே? ஸேவக் ஒருவர் இவரிடம் வந்து, “ஸ்வாமி உங்களை அடையாளம் சொல்லி முன் வரிசையில் உட்கார்த்தி வைக்கச் சொன்னார்” என்று சொல்லி அழைத்துப்போய் அமர்த்தினார்!
கூட்டத்துக்கு வந்த கூத்தப்பிரான் இவர் முன் வந்ததும் நின்றார். “அச்சா! வந்துவிட்டீர்கள்! உங்கள் ‘லைஃபு’க்காக நீங்கள் ‘ஒய்ஃபை’த் ‘தாங்க்’ பண்ண வேண்டும். அவர் என்னைக் கூப்பிட்டிராவிட்டால் நீங்கள் இன்று உயிரோடிருக்க முடியாது. நான்தான் உங்களிருவரையும் காயம் படாமல் காத்துக் காரிலிருந்து எடுத்து ஸ்வஸ்தமாக வெளியே சேர்த்தது. நீங்கள் என்னை நினைக்காவிட்டாலும் இதற்கு முன் பலமுறை உங்களுக்சே தெரியாமல் உங்கள் உயிரைக் காப்பாற்றியிருக்கிறேன்.” இப்படிச் சொல்லித்தான் பகவான் முத்தாய்ப்பாக, “ஏர் ரைட் வார்டன் ஞாபகமிருக்கா” என்று முடித்தார்.நாம மஹிமையையும் மனைவியின் பக்திப் பெருமையையும் இவருக்கு உணர்த்தவே இங்கே பகவான். இவர் மனைவிக்கு நன்றி செலுத்த வேண்டுமென்றும், அந்த அம்மாள் எழுப்பிய நாம சப்தமே தமது ரக்ஷணைய் ஈட்டிக் கொடுத்ததென்றும் கூறியிருக்கிறார். லண்டன் குண்டு வீச்சில் இவருடைய மனைவி பக்கத்திலிருந்தாரா? இவரேனும் எவரேனும் அப்போது நாமத்தால் பரமனை அழைத்தனரா? விபத்து வர இருப்பதையே அறியாமல் தூக்கத்தில் நழுவிக் கொண்டிருந்தவரை அல்லவா ஸ்வாமி அன்று வார்டனாகச் சென்று காத்தார்?