சத்ய சாய் பாபா – 2

2. “உருவாய் அருவாய்குருவாய் வருவாய்!”

முதலில் குரு வந்தனம் அமைய வேண்டுமென்றே குரு பூர்ணிமாவில் இந்த எழுத்துப் பணியைத் தொடக்கியிருக்கிறாய். ஈராண்டுகளுக்கு முன் (1977ல்) குரு பூர்ணிமையன்று அடியார் ஒருவருக்கு நீ அளித்த அநுபவத்தில் ஆரம்பிக்கிறேன்.

அவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்ல வேண்டாமெனக் கருதுபவர். போனால் போகிறது என்று D.W. என்ற தம் இனிஷியல்களை மாத்திரம் தெரிவித்துக் கொள்கிறார்.

வெளியே பூர்ண சந்திரனாம்; புட்டபர்த்தி பூர்ண சந்திர மன்றத்திலே நீயாம்! இருபதாயிரம் நெஞ்ச அலைகள் உனைக் கண்டு பொங்குகின்றன.

நீ குரு தத்வம் பற்றி உரையாற்றுகிறாய். உன் தெலுங்குப் பிரவாஹத்தை ஓரளவு வெற்றிகரமாக ஆங்கிலத்தில் கரை கட்டித் தருகிறார் டாக்டர் பகவந்தம்.

எனவே டி. டபிள்யூவும் அதைப் புரிந்து கொள்ளலாம். ஆயினும், அத்தனை மத குருமாரும் போதித்த தத்வங்கள் யாவற்றையும் தழுவி, அவற்றின் நிறைவான அத்வைத ஐக்கியத்தை நாட்டுவதே ஸநாதன தர்மமான ஸாயி மதம் என்று நீ சாற்றியதற்கு அதிகமாக அவர் உன் உரையில் உட்தோய்ந்து ஈடுபடவில்லை என்று தெரிகிறது.

ஆம், உன் உரையைவிட உருவிலேயேதான் அவர் ஊறியும் உருகியும் உவகிப்பவர்.

ஒளிக்காமல் சொல்லிவிடுகிறேன் நானுங்கூட அப்படித்தான். நீ சொல்லின் செல்வன், சிந்தனைச் சுரங்கம் என்பதெல்லாம் வாஸ்தவமேயாயினும் உன்னைப் போன்ற, உன்னையும் விஞ்சிய சொல்லின் செல்வர்கள், சிந்தனைச் சுரங்கங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆனால் நீ நீயே அன்றோ? வேறெவர் அந்தநீஆக முடியும்? உன் பிரஸங்கத்தைவிடப் பிரஸன்ன உருவிலேயே அந்த நிஜநீயின் அழுத்தம் (அழுத்தாத மநோஹர லேசு) அதிகம் வெளியாகிறது. உன் ரூப தரிசனத்தை நாங்கள் நெடுநேரம் பெற வேண்டுமென்றேதான் நீ நீண்ட உபந்நியாஸம் நிகழ்த்துகிறாயோ என்றுகூட நான் நினைப்பதுண்டு.

பாபா நீ ஸமாநமெவரு?’ எனும்படித் தனித் தன்மை படைத்த உன் திருவுருவத்திலேயே டி. டபிள்யூயின் முழுக் கவனமும் குவிந்துள்ளது.

உன் லீலா நாடகத்தை ஆரம்பித்து விடுகிறாய்!

இருபதாயிரம் பேருக்கு ஒரு நாடகம் உபந்யாஸம் செய்கிற நாடகம்; அந்த நாடகத்தில் நடித்துக் கொண்டே, அதே சமயத்திலேயே, டி. டபிள்யூவுக்கு மட்டும் வேறொரு லீலா நாடகம் புரிகிறாய்! உன்னால்தான் முடியும்!

டி. டபிள்யூ பார்த்துக் கொண்டிருக்கும்போதே, உன் திவ்யத் தோற்றத்துக்குத் தனியானதொரு ஏற்றம் தரும் உன்னுடைய பம்பை மூடி மறைகிறது. சரியாக அக்கருங்குழலின் இடத்தில், அதே அளவைக்கு, ஓர் ஒளிப் படலம் காண்கிறது. தெய்வ ரூபங்களின் திருமுகத்தைச் சுற்றி ஜோதிப் பிரபை வரையப்படுவதுண்டல்லவா? அதுபோல் உன் முகத்தைச் சூழ்ந்த முடியே இப்போது ஜோதி வட்டமாகிறது!

இல்லை; உன் முகத்துக்கு அல்ல ஜோதி வட்டம். பிரபைக்குள் காண்பதுஸத்ய ஸாயிஎன்ற ரூபத்தில் அமைந்த உன் வதனமல்ல.

உன் முடி ஒளிவட்டமானபின், அதற்குள்ளே உன் முகம் இருக்கவேண்டிய இடத்தில் இன்னொரு முடியும், அந்த முடிக்குள் மற்றொரு முகமும் டி. டபிள்யூவுக்குத் தெரிகின்றன.

முதலில் முடிதான் தெரிந்தது. அது பம்பையாகச் சிலும்பி நிற்கும் உன் குந்தளசுந்தரம் அல்ல. சற்றே நெளியிட்டு, பட்டாகக் காதோடிழைந்து தோளில் சரியும் தா சிகையாக மாறியிருக்கிறது!

அந்தச் சிகைக்குள் தெரிவது இயேசு நாதனின் நேச முகம்தான்!

இம்முகத்திலும் ஓர் அதிசய மாறுபாட்டை டி. டபிள்யூ காண்கிறார். இப்போது பெரும்பாலும் நாம் காணும் கிறிஸ்துவின் சித்திரங்கள் மத்திம கால இத்தாலிய ஓவியர்கள் தமது மனக்கண்ணால் கல்பித்துத் தீற்றிய தோற்றம்தான். அவர்கள் இயேசுவை இத்தாலிய உருவமைப்புப்படியே வரைந்து விட்டனர் என்றும், யூதராகப் பிறந்த அசல் கிறிஸ்து இப்படியின்றி, ‘ஸெமிடிக்தேக வாகு கொண்டவராகத்தான் இருந்திருப்பார் என்றும் அறிஞர்கள் கூறுவதுண்டு. ஸ்வாமி விவேகாநந்தரும் தாம் கண்ட இயேசு, படத்திலுள்ளதுபோல் கூர்மையான மூக்கோடு இல்லாமல், சற்றே தட்டையான நாசியுடன் விளங்கியதாகச் சொல்லியிருக்கிறார்.

தற்போது உன் முகத்துக்குள் டி. டபிள்யூ கண்ட இயேசுவின் இன்முகம் இப்படித்தான், சித்திரங்களில் உள்ள ரூபமாக இல்லாமல், வேறுவித அங்க அமைப்புடன் காணப்பட்டது. ஜட சித்திரமாக இன்றி, ஜீவ சக்தி தளும்பும் உண்மை வடிவாகவே காணப்பட்டது.

எதிர்பாராமல் இப்படி ஒரு காட்சியைக் கண்ட டி. டபிள்யூவுக்கு மத உணர்ச்சியைவிட ஆச்சரியக் கிளர்ச்சியே அதிகம் ஏற்பட்டது. வைத்த கண் வாங்காமல் அவர் பார்த்துக் கொண்டிருக்க இயேசுவின் முகம் மாறிற்று. மாறிய முகம் மீண்டும் மாறி வேறொரு ரூபம் கொண்டது. இவ்விரு முகங்களும் இன்னாருடையவை என்று அவருக்கு இனம் தெரியவில்லை. ஆயினும் இவை தமது மானஸிகப் புனைவு அல்ல என்று அவர் உறுதி பெறும் பொருட்டு நீ மறுபடியும் தெளிவாக அவ்விரு உருவுகளையும் காட்டினாயாம்!

இவற்றில் ஒன்று பார்ஸி மத ஸ்தாபகரான ஜோராஸ்தராகவும் மற்றது புத்தர் பெருமானாகவும் இருக்கலாம் என்று அவர் நினைக்கிறார்.

ஹிந்து மதம், கிறிஸ்துவம், பௌத்தம், பார்ஸி மதம், இஸ்லாம் ஆகிய ஐம்பெரு மதங்களின் அடையாளங்களையும் உனது ஸ்தாபன இலச்சினையாகக் கொண்டவனன்றோ? அவற்றில்தான் கிறிஸ்துவ, பௌத்த, பார்ஸிய ஸமய ஸ்தாபகர்களைக் காட்டியிருக்கிறாய். நபிகள் நாயகத்தின் ரூபத்தை நீ காட்டாதது உருவ வழிபாட்டை அறவே விலக்கும் முஸ்லீம் ஸோதரரின் உணர்ச்சியை மதித்துத்தானோ? இல்லாவிடில் ஷீர்டியவதாரத்தில் இஸ்லாமியர் என்றே பலரால் கருதப்பட்ட நீ முகமது முகத்தை மட்டும் ஏன் காட்டாதிருக்க வேண்டும்?

இதுவரை கண்ட மதகுருமார்களிடம் டி. டபிள்யூவுக்கு விசேஷப் பற்றுதல் ஏதும் இல்லை. இதயமார ஈடுபட்டிருந்த குரு வேறொருவர். ஸமீபத்தில் உன்னை வந்தடைந்த பின் அந்த குருவுக்குத் தாம் விசுவாஸத் துரோகம் செய்கிறோமோ என்று டி. டபிள்யூ கலங்கிக் கொண்டிருக்கிறார்.

என்ன ஆச்சரியம்! ஸாக்ஷாத் அந்த குருவின் திருமுகத்தையே உன் வதனத்துக்குப் பதிலாகக் கண்டு புளகாங்கிதமாகிறார் நமது ஆஸ்திரேலிய அன்பர். முகத்தை ஒட்டிய நரை கேசம்; பரந்து விரிந்த நெற்றி; கதிரவன் ஒளியிலேயே மதியத்தின் குளுமையும் கொட்டும் கண்கள்; தீர்க்கமான நாஸிகை; பரிவு பெருகும் அதரங்கள் ஆம், ஞானமும் கருணையும் பிறிதறக் கலந்தவரும், தம்மைத் தவறியும் குரு என்று கருதாமலே, D.W. போல் பாரெங்கும் பரவிய பல்லாயிரம் ஆத்ம விசார ஸாதகர்களுக்கு ஆசானாகிவிட்டவருமான பகவான் ரமண மஹர்ஷிகளின் திவ்ய முகத்தையே உன்னில் கண்டு உட்கனிகிறார் டி. டபிள்யூ.

இவரிடம் வந்தது அவருக்குத் துரோஹம் என்று குழம்பினோமே! எத்தகைய அறிவீனம்?’ என்று தெளிகிறார்.

உனதே உனதான ஸத்யஸாயி ரூபத்தில் டி. டபிள்யூவுக்கு ஓர் அலாதிப் பற்று இருந்த போதிலும், எல்லா மஹா புருஷர் உருவும் உனதே என்று தெளிவிக்க அருள் கொண்டு நீ மற்ற ஆத்மிக சிரேஷ்டர்களின் தோற்றங்களையும் காட்டி, பேத உணர்வைக் களைந்தாய் என்று அவர் நிறைவு கொள்கிறார்.

ஆனால் ஞானம் புகட்டவே நீ நிகழ்த்திய இந்த லீலா நாடகத்தில் உனக்கு நிறைவு ஏற்படவில்லை. கொடுக்க ஆரம்பித்துவிட்டால் ஓயத் தெரியாதவனாச்சே!

ரமணர் மத அதீதமானவர். மதாதீதமான ஆத்மனிலேயே அடியாரை நிலைநாட்டுவதை முதலும் முடிவுமாகக் கொண்டவர். நீயும் அத்வைத ஆத்மனையே முடிவாகக் கொண்டவனாயினும், முதலில், இடையில், ஏன், அம்முடிவை எய்தியபின்னும்கூட ருசி விசித்திரத்துக்காக அவ்வப்போது, லீலா மயனாக இருந்து கொண்டு பல்வேறு காட்சிகள் தருபவன். அப்படித்தான் இன்று பற்பல மத ஸ்தாபகர்களை உன்னில் காட்டி மகிழ்வித்தாய், மகிழ்ந்தாய்.

இதிலே உனக்குத் திருப்தி ஏற்படாததால் போலும், மதாதீதரைக் காட்டியபின் அவரையுங்கூட பக்தியில் உருட்டிப் புரட்டிய ஹிந்து மத தெய்வ ரூபங்களை D.W.வுக்குத் தரிசிப்பிக்கத் திருவுளம் பற்றியிருக்கிறாய்.

அடித்தது அதிருஷ்டம் ஆஸ்திரேலிய அன்பருக்கு! திவ்ய தரிசனங்கள் மளமளவென்று ஒன்றையடுத்து ஒன்றாய் விரியலாயின!

ஆத்மா மானுடமானதே அல்ல என்ற அனவரத அநுபூதி பெற்ற ரமணர், ‘ஆத்மாநம் மாநுஷம் மந்யேஎன்று தன்னை மானுடமாகவே சொல்லிக் கொண்ட ராமபிரான் ஆனார்! அதுவும் நியாயந்தான். ஸ்ரீராமசந்திரனுக்கு அப்புறம் மானுட தர்மங்களைத் தன்னியல்பாகவே நொடி நொடியும் கொடுமுடியில் வாழ்ந்து காட்டியவரும் அன்றோஸ்ரீ ரமணர்?’

மானுட அவதாரம், தெய்விக விஷ்ணு இருவரும் இறுகிய ராகவனைக் காட்டிய பின் திவ்ய ரூபங்களில் அக்ரஸ்தானம் பெறும் விக்ந விநாயகராக தரிசனம் தந்தாயாம்! ஆனைமுகம் என்பதால் இதில் விசித்ரம் அதிகம். டி. டபிள்யூவுக்கு ஐயமே எழலாகாதென்று மீளமீளத் துதிக்கையும் தந்தமும் கொண்ட கணபதி ராயனின் கருணாமுகத்தைக் காட்டினாயாமே!

அப்புறம் பூர்வாவதாரமான ஷீர்டி ஸாயி நாதனின் பரமகிருபாமுகம்.

பூர்ணசந்திர மன்றத்தில் ஏனையோர் ஸத்ய ஸாயியை மட்டுமே தரிசித்துக் கொண்டிருக்க, D.W.வுக்கு மட்டும் D.W.(DivineWonder) காட்டிய நீ இந்த ரூப விசித்ரம் படைப்பதில் மஹா ஸமர்த்தன்தான். முன்னொரு முறை தசராவின்போது உன்னை ஒருவர் ஸத்யஸாயியாகவே கண்டு புகைப்படமெடுக்க, அந்தப் படத்திலோ நீ ஸிம்மவாஹினியான துர்கா பரமேச்வரியாக உருக் கொண்டிருந்தாயே! இப்படிப்பட்ட தேவிரூப தர்சனம் தமக்குக்கிட்டுமா என டி. டபிள்யூ எண்ணினார்.

உடனுக்குடனே, ‘இப்படிப்பட்டதுதானா? இதனினும் நெஞ்சை அள்ளும் மாதா வடிவு காட்டுவோம்என நீ எண்ணியிருக்கிறாய். தேவதா ரூபங்களுக்குள்ளே ஸௌந்தரிய சிகரமாகவும், ஸௌம்ய ஸாகரமாகவும் பரமஹம்ஸாதியர் கண்டுணர்ந்துள்ள லலிதா திரிபுர எந்தரியின் முகாரவிந்தத்தை அவருக்கு தரிசிப்பித்திருக்கிறாய்!

புருஷ லக்ஷணம் பூர்ணமாக நிறைந்தவன் ஸ்ரீராமன், ஸ்திரீ லக்ஷணம் பூர்ணமாக நிறைந்தவள் லலிதை, இரு லக்ஷணங்களும் சேர்ந்து பூர்ணமானது கண்ணனின் அழகுரு என்பார்கள். மாயா ஜாலம், ஞானோபதேசம் இரண்டிலும் உனக்கு முன்னோடியான அக் கண்ணனை D.W. எண்ணியவுடன், சிந்தித்ததைத் தரும் சிந்தாமணி நீ நந்தர்குல மணியாக நலமுற நின்றாயாம்!

அவ்வப்போது ஸத்யஸாயி ரூபத்துக்கு அவர் அவாவுற்றபோது, அதையும் காட்டினாய். இதிலும் அவர் கேட்டதற்கு மேலே கொடை வள்ளல் கொடுத்தாயாம்! நிகழ்காலத்தில் பூர்ணசந்திர மன்றத்தில் பிரஸங்கித்த உன் தோற்றத்தை அல்லாமல் ஸத்ய நாராயண ராஜுவாக நீ அவதரித்ததிலிருந்து பாலப் பருவம், யௌவனம், மத்திம தசை இவற்றில் கொண்ட பல தோற்றங்களைக் காட்டினாயாமே!

நடுநடுவே அவயங்களில்லாத ஜ்யோதி ஸ்வரூபமாகவும் நின்றாயாம்! அடி முடியற்ற அருவப் பரம் பொருள் அருணாசல ஜ்யோதிஸ்ஸாகவே நின்றது. எனவே ஜ்யோதி ஸ்வரூபம் என்று சொன்னாலும், ரமண மார்க்கியான D.W. புரிந்து கொள்ளும்படி அரூப ஆன்மனையே இப்படிக் காட்டியிருக்கிறாய். அன்று குரு பூர்ணிமையாதலால், ‘குருஎன்பதன் நேர் பொருளேஇருள்நீக்கிஎன்பதை ஒளியுருவால் காட்டியிருக்கிறாய்!

இந்த நிகழ் நிமிஷ பாபா தெரியவேண்டும்என்று அந்த பாக்யசாலி நினைத்தபோது, ஏனைய திவ்ய ரூபங்களுக்கு மேலே மூட்டமாகப் பதிப்பித்தாற்போல, அன்று உபந்நியஸிக்கும் அந்தத் திருக்கோலமும் காட்டினையாம்.

குருவே பிரம்மவிஷ்ணுமஹேச்வராதி தேவதையர், இத்தனை தெய்வமுமான பரப்ரஹ்மமும் குருதான் என குரு வந்தனத் துதி சொல்கிறது. எந்த குருவுக்கும் இதுவே லக்ஷணை என்பதால் அத்தனை குரவரும், அத்தனை தெய்வங்களும் ஒன்றே என்பதுதானே அர்த்தம்?

இந்த ஏக தத்வ அத்வைதத்தை நீ டி. டபிள்யூவுக்குப் பிரத்யக்ஷமாக அநேக(!) ரூபங்களில் நிரூபித்துக் காட்டியது போல் எங்கு காண?

சும்ப நிசும்ப வதம் முடித்த துர்காதேவியிடம் தேவர்கள் வியந்து கூறியது நினைவில் மிதந்து வருகிறது:

ரூபை: அநேகை: பஹுதா ()த்ம மூர்த்திம்
க்ருத்வா (அம்பிகே தத் ப்ரகரோதி கா ()ந்யா?

உன்னுருவையே பலவாக்கி நீ செய்ததுபோல், அம்மா, வேறெவர் செய்ய இயலும்?”