10. ஸாயிராம்
சிவஸாயி, சக்திஸாயிக்களைச் சொன்னதால், ‘ஸாயிராம் ஸாயிராம்‘ என்றே தம் நாமாவை ஜபிக்க வைப்பவரை ராமனாக தரிசிக்க நெஞ்சம் விழைகிறது.
“தந்தெய்வம் எந்தெய்வம்” என்று அவரவரும் தொழும்படி நிற்கும் தந்தை, எந்தையல்லவா அவர்?
***
‘ராமசரண்‘ என்று புனைபெயர் கொண்டவர் அந்தத் தெலுங்குப் பௌராணிகர். தம் கையாலேயே சமைத்து உண்ணும் ஸ்வயம்பாகி அவர். ஒவ்வோர் அரிசியையும் ஒரு ராம நாமம் சொன்னபடி எடுத்துப் பாத்திரத்தில் போட்டு உலை வைப்பார். இங்கே இவ்விஷயத்தை இரண்டு வரியில் அரை நிமிஷத்தில் எளிதாகச் சொல்லி விட்டோம்; ஆனால் செய்து பார்த்தால் தெரியும், பிரதி வேளையும் ஒவ்வோர் அரிசியாக ஒருவர் உண்ணுமளவு நிரப்புவதற்கு எவ்வளவு பொழுதும் பொறுமையும் வேண்டுமென்று. இப்படி ஒரு நாளல்ல, இரண்டு நாளல்ல, முப்பத்தைந்து வருஷங்களாக உணவை ராம நாமாம்ருதமாக்கி உண்டவர் பிரம்மஸ்ரீ ‘ராமசரண்‘.
தொண்ணூற்றாறு கோடி முறை ஸ்ரீ ராம நாமாவை ஜபித்துவிட்டால் தாசரதி தரிசனம் தந்தே தீருவான் என்பது நம்பிக்கை. முப்பத்தைந்தாண்டுகள் அக்ஷதைக்கு இரு அக்ஷரம் வீதம் சொன்னதில் 96 கோடி பூர்த்தியாகிவிட்டது போலும்!
(இதைச் சொல்கையில் இன்னொன்று நினைவு வருகிறது. பக்தரொருவர் ஒரு கோடி ‘ஸ்ரீராம ஜயம்‘ எழுதச் சங்கற்பித்து, தினமும் வெகு அக்கறையாகப் பல மணி நேரம் இந்த லிகித ஜப ஸாதனையைச் செய்து வந்தார். ஒரு நாள் நம் ஸ்வாமி அவருக்கு தரிசனம் தந்தார். “என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார்! “கோடி லிகித ஜபம் விக்னமில்லாமல் பூர்த்தியாகவேண்டும்?” என்று பக்தர் வரம் கேட்டார். “கோடிதான் ஏற்கெனவே பூர்த்தியாகி விட்டதே!” என்றார் பர்த்திநாதர். “இல்லை; பாதிதான் ஆகி இருக்கிறது, ஸ்வாமி!” என்று சொல்லித் தாம் எழுதி வருவதிலேயே எண்ணிக்கையும் போட்டுவந்திருப்பதைக் காட்டினார் அடியார். ஸ்வாமி சிரித்து, “நீ ஒவ்வொரு முறை எழுதும்போதும் மனஸில் ஒருமுறை நாமாவைச் சொல்லிக் கொள்கிறாயல்லவா? அதையும் கூட்டினால் கோடி ஆகிவிட்டது. லிகிதமானால் என்ன, மானஸிகமானால் என்ன? ஜபம் ஜபந்தானே? ஸ்வாமி சரியான கணக்கு வைத்திருக்கிறேன்” என்றார்!
பக்தர் கேட்ட வரத்தில் மனித மன விசித்திரமொன்று தெரிவதைப் பாருங்கள். தரிசனம்தான் ஜபத்தின் பலன். ஸ்வாமியே தரிசனம் தருகிறார். அந்த தரிசனத்துக்குப் பலனாகத் தமது ஜபம் பூர்த்தியாக வேண்டுமென இவர் வேண்டுகிறார்! தன் சங்கற்பம், தான் எடுத்துக்கொண்ட காரியம் என்ற முனைப்பு போக மாட்டேன் என்கிறது பாருங்கள்!)
ராமசரணை ஏதோ ஓர் ஊரில் ஸ்வாமி குறித்த விழாவொன்றில் புராணப் பிரவசனம் செய்ய அழைத்திருந்தார்கள். அதுவரை அவர் ஸ்வாமியின் பக்தரல்ல. ஆனால் பகைவரும் அல்ல. விழாக்காரர்கள் இவருக்குத் தந்திருந்த பொருள் ஸ்வாமி குறித்து அல்ல. அவர் வழக்கமாகச் சொல்லும் ஏதோ புராணம் பற்றி உரையாற்றத்தான் அழைத்திருந்தார்கள். ராமசரண் அழைப்பை ஏற்று விழாவுக்குச் சென்றார். இதர பேச்சாளர்கள் அங்கு ஸ்வாமி பற்றிக் கூறியவற்றைக் கேட்டவுடன் ராமசரணுக்கு அவரிடம் மிகுந்த மரியாதை உண்டாயிற்று. அவதாரம் என்று எண்ணாவிட்டாலும், இப்படி ஒரு மஹான் இருக்கிறரா?’ எனப் போற்றினார். அவரை நேரில் காணவும் உள்ளூா ஓர் ஆசை எழுந்தது.
சற்றும் எதிர்பாரா விதத்தில் அவ்வாண்டு தசராவின் போதே புட்டபர்த்தியில் பிரவசனம் புரிவதற்கு ராமசரண் அழைப்புப் பெற்றார்.
ஆடிட்டோரியத்தில் ஆயிரமாயிரம் மக்களில் ஒருவராக அமர்ந்திருக்கிறார் ராமசரண். ஆடி ஆடி வருகிறார் அப்பன். முதல் தரிசனத்திலேயே ஆனந்த மடைகிறார் பௌராணிகர். அதன்பின் சொந்த விஷயமாக ஈடுபாடு சென்று விடுகிறது. ‘பேச அழைத்திருக்கிறார்களேயன்றிப் பொருளைக் குறிப்பிடவில்லை. எதைப் பற்றிப் பேசலாம்?” என்று ராமசரணின் யோசனை படர்கிறது. காயத்ரீ ராமாயணத்தைப் பற்றி உபந்நியாஸம் செய்யலாம் என்று முடிவாகத் தீர்மானிக்கிறார்.
இருபத்து நாலு அக்ஷரம் கொண்ட காயத்ரீ மஹா மந்திரமே இருபத்து நாலாயிரம் ச்லோகம் கொண்ட வால்மீகி ராமாயணமாக விரிந்தது என்பார்கள். இதற்கேற்ப, காயத்ரீ மந்திரத்தின் அக்ஷரங்கள் வரும் அதே வரிசையிலே அந்த அக்ஷரம் ஒவ்வொன்றையும் ஆரம்ப எழுத்தாகத் கொண்டு ராமாயணத்தில் ஏறக்குறைய ஒவ்வோர் ஆயிரத்திலும் ஒரு ச்லோகம் உள்ளது. இப்படி வரும் இருபத்து நாலு ச்லோகங்களையும் சேர்த்து ‘காயத்ரீ ராமாயணம்‘ என்று பாராயணம் பண்ணுவதுண்டு. ஸுரிய மண்டல மத்தியிலுள்ள தேஜோசக்திதான் காயத்ரீ என்றும் அதுவே ஸுரிய குல திலகனாக வந்ததென்றும் சொல்வார்கள். இவ்விஷயமாக உரையாற்றத் தீர்மானித்தார் ராமசரண்.
சரியாக அந்த சமயத்தில் அவர் பக்கத்தில் போய்க் கொண்டிருந்த ஸ்வாமி ஸஹஜமாக, “காயத்ரீ ஸமாசாரம் இந்த ‘அகேஷ‘னில் வேண்டாம்; நான் வேறே ஸந்தர்ப்பத்திலே ‘சான்ஸ்‘ தரேன். இப்போ, பொதுவா பக்தி, பக்தியினாலே உசந்த கதியை அடைஞ்சவங்களைப் பத்திப் பேசு” என்று சொல்லிக்கொண்டே நகர்ந்தார்.
(காயத்ரியில் அலாதிப் பற்றுள்ள ஸ்வாமி, இடம் பொருள், ஏவலறிந்து, இந்தப் பொது ஜன ஸதஸுக்கு ஏற்புடையதாக அவ்விஷயம் பற்றி ராமசரண் பேச இயலாது என்று கருதி, பாமரரையும் ஈர்க்கும் பகவதடியார் பற்றிப் பிரஸங்கிக்கச் சொல்லியிருக்கிறார்.)
ராமசரண் விம்மி விதிர்விதித்தார். ‘தாம் மனத்துக்குள் நினைத்தது இவருக்கு எப்படித் தெரிந்தது? இவர் உண்மையில் யார்? இவரது நிஜ ஸ்வரூபமென்ன?’ என்று நினைத்து ஸ்வாமியைப் பார்த்தார்.
நகர்ந்த ஸ்வாமி நின்றார்.
கையிலே கோதண்டம் ஸ்வச்சமாகத் தெரிந்தது!
முகத்திலே நீலச் செழிப்பு பாய்கிறது! “நீல நீரஜ ஸுந்தரம்” என்று துளஸீதாஸர் தேன்துளிக்க வர்ணிக்கும் தெள்ளிய கோலம்!
செவ்வங்கி மாறவில்லை. சிலும்பு முடி மாறவில்லை. ஆனால் நீலோத்பலமாக மாறிய நீண்முகமும், கரத்தே கம்பீரமாகத் தெரியும் கோதண்டமும் ராமசரணுக்கு நிஜ ஸ்வரூபத்தை அறிவித்துவிட்டன!
கோதண்டபாணியின் முன் தண்டாகாரமாக விழுந்து வணங்கினார். ஸாயிராம சரணங்களைப் பற்றி ஒற்றிக்கொண்டார் ராமசரண்.
“பிரசாந்தி நிகேதன ராமசரண்” என்று பஜனைப் பாடல் போற்றுவது பௌராணிகர் பெற்ற தரிசனத்தில் நிதரிசனமாயிற்று.
***
ஸ்ரீமத் ராமாயண தத்வச் சிறப்புக்களை ஸ்வாமி எடுத்துக்காட்டுவதே அலாதி.. அவரது “ராமகதா ரஸவாஹனி”யில் வராத ஒன்றிரண்டு பாருங்கள்:
“ஸ்ரீராமன், ஸ்தம்மா இருவரும் தங்கள் வாழ்க்கையே ஒரு தியாக வேள்வியாக வாழ்ந்தவர்கள். அதனால்தான் பிறப்பிலேயே இருவருக்கும் வேள்வித் தொடர்பு இருக்கிறது. புத்ர காமேஷ்டி வேள்வியில் தோன்றிய பாயஸத்திலிருந்து ராமன் உருவானான். பாயஸம் என்றால் பிரேமையின் மதுர ஸ்வரூபம் என்று அர்த்தம். ஸீதம்மாவோ ஜனக மஹாராஜன் வேள்விச் சாலைக்கான இடத்தை உழுதபோது நிலத்துக்குள்ளிருந்து தோன்றினாள். அவள் பூத்தவம், அதாவது பிரகிருதி, Nature. பிரகிருதிதான் மாயை. அதற்கு உயிர் தரும் ‘புருஷன்‘ என்ற தத்வமே பிரம்மம். ஸ்ரீராமன் பரமபுருஷனான பிரம்மம், ஸீதாதேவி மாயை.”
“ராமனின் பால காண்டத்தில், அடுத்தடுத்து மூன்று ஸ்திரீகளைக் குறித்து ராமன் புரிந்த லீலைகளிலேயே அவரது மஹிமை வெளியாகிறது. அவதாரத்தில் அவர் செய்த முதற்பெரும் காரியம் தாடகையை வதைத்ததுதான். பாலப்பருவத்திலேயே மஹா வீர பராக்ரமத்தை இங்கு காட்டினார். அடுத்ததாக அஹல்யா சாப விமோசனம். கோரக் கூத்தாடிய ராக்ஷஸியை வதைத்தவரே, இங்கு பச்சாத்தாபத்தில் உருகி உருகி உணர்ச்சியற்றுப் போய்விட்ட ரிஷி பத்னிக்குப் புது வாழ்வு தந்து அநுக்ரஹித்தார். சின்னஞ் சிறு பருவத்திலேயே தம்முடைய மன்னித்தருளும் பதிதபாவனப் பெருமையை அஹல்யையிடம் காட்டினார். அதன் பின் மிதிலைக்கு வந்து ஸ்தம்மாவை மணந்தார். ஸீதாராமனாக ஆனதே அவரது பூர்ண நிலை. இம்மூன்று ஸ்திரீகளும் முக்குணங்களில் ஒவ்வொன்றுக்கு உருவமாவார்கள். தாடகை தமோ குணம்; அதை அழித்தார். அகலிகை ரஜோ குணம்; அதைத் திருத்தினார். ஸீதம்மா ஸத்வகுணம்; அதைத் தமதாகவே ஏற்றுக்கொண்டார்.”
“ஸீதா கல்யாணத்தின் போது மணமக்கள் பரஸ்பரம் தலையில் அக்ஷதை கொட்டிக் கொள்ளும் கட்டம் வந்தது. அப்போது ராமசந்திரமூர்த்தி கிரீடம் வைத்துக் கொண்டிருக்கவில்லை. வெண்பட்டில் தலைப்பாகை அணிந்திருந்தார். அக்ஷதைக்குப் பதிலாக ஆணிமுத்துக்கள் வைக்கப்பட்டிருந்தன. ஸீதம்மா அந்த முத்துக்களைத் தன் கை நிறைய எடுத்துக்கொண்டாள். செந்தாமரை போன்ற உள்ளங்கை ஒளியில் அந்த முத்துக்களும் செம்மைக் சாயல் பெற்றன. அவளுடைய குனிந்த முகம் நாணத்தினால் ஒரேயடியாகச் சிவந்திருந்ததால், அதன் பிரதிபலிப்பும் சேர, கையிலிருந்த முத்து ரத்தினம்போலவே சிவந்துவிட்டது. இதற்கு அர்த்தமென்ன? பிரகிருதி மாதாவான ஸீதையின் வசத்தில் நாம் இருந்தால், அதாவது இயற்கை வேகங்களின் இயல்பான தர்மத்தில் இருந்தால் ரஜோ குணம் உள்ளவர்களாக எப்போதும் மன ஓட்டத்துடன், செயல் துடிப்புடன் இருப்போம். ரஜோ குணம் சிவப்பானது. ரத்த வேகத்துடன் நாம் காரியம் செய்வது, சித்த வேகத்தில் எண்ணுவது எல்லாம் அக்குணத்தினால்தான்.
“ஸீதை தன் கை முத்துக்களை ஸ்ரீராமனின் தலையில் கொட்டினாள். அவற்றில் சில அவரது வெண்பட்டுத் தலைப்பாகையிலேயே ஒட்டிக்கொண்டு அதனால் வெள்ளை வெளேரென்று ஆகிவிட்டன. வெள்ளைதான் ஸத்வ குணம். மனம் கண்டபடி அலைபாயாமல், காரியங்களும் மன இழுப்புப்படியெல்லாம் போகாமல் அமைதியில், ஸம நிலையில் இருப்பதே ஸத்வ வெண்மை. இதுதான் மிக உயர்ந்த நிலை. ஆத்மாவான ராமனை அடைந்துவிட்டதற்கு இதுவே அடையாளம்.”
“அவ்வளவு உன்னத ஸத்வ நிலை பெற முடியாவிட்டாலும், பிரகிருதி மாதாவின் வசத்தில் இயற்கைக் கட்டுப்பாட்டுக்கு இணங்கிச் சிந்தனை ஓட்டத்துடனும், செயலூக்கத்துடனும் இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் மக்களில் பலர் இவ்விதச் சுறுசுறுப்பும், முயற்சியுங்கூட இல்லாமல் இருளில் ஒரே மந்தமாக அல்லவா உருண்டு கொண்டிருக்கிறார்கள்? இதுதான் தமோ குணம். தமோகுணம் கறுப்பு அல்லது நீலமானது. இவர்களுக்கு ஒப்பாகவும் அந்த முத்துக்களில் பல ஆயின. எவ்வாறெனில், ஸீதம்மா போட்ட முத்துக்களில் ஸ்ரீராமனுடைய தலைப்பாகையில் தங்காத மற்றவை தரையில் உருண்டோடின. அவற்றில் ராமனுடைய நீல நிறம் பிரதிபலித்தது. அப்போது அவை தமோ குணமணிகளாகத்தான் இருந்தன. பிரகிருதி, புருஷன் இருவரிடமும் சேராவிட்டால் இதுவே கதி.”
***
பரம புருஷ ராமசந்திரனிடமே பிரியாமற் பொருந்திய பரம பாகவதன், தாஸ ரத்தின ஆஞ்ஜநேயலைப் பற்றி ஒரு முறை ஸ்வாமியிடம் பேச்சு வந்தது.
ஸ்வாமி தன்னியல்பாகத் தோன்றியதோர் காம்பீர்யத்துடன், “அந்த ஆஞ்ஜநேயர் பிடிச்ச பாதம் இது” என்று, தரையில் வைத்திருந்த இணையடிகளை விசுக்கெனத் தூக்கினார். செவ்வங்கி விலகியது; உள்வேஷ்டியின் மஞ்சள் ஜரிகைக் கரையும் வழிவிட்டது; ஸ்வர்ணத்திலேயே மென்மையைக் குழைத்துக்கொண்ட ஸ்வாமியின் திவ்வியத் திருவடிகள் பூரணமாகக் காட்சி தந்தன. ஸ்வாமியின் கால்மாட்டிலேயே அமர்ந்திருந்த அடியாரின் முகத்துக்கு நேரே அடியிணை உயர்ந்தது. பெருமனான அநுமன் பிடித்த சரணத்தை அதிசாமானி யரான இவ்வடியாரும் பிடித்து ஒற்றிக்கொள்ள அநுக்கிரஹித்தார் நமது கிருபாளு.
அமெரிக்க கோஷ்டியொன்று மந்திரங்களைப் பற்றி வினவ, அது பற்றி ஸ்வாமி சிறிது சொல்லி, “இரண்டு மந்திரங்களுக்கு மட்டுமே குறிப்பாகத் தாரகம் எனப் பெயர். தாரகம் என்றால் நீரோட்டத்திலிருந்து கரை சேர்ப்பது. எனவே, ஸம்ஸார ஸாகரத்திலிருந்து அக்கரை சேர்க்கும் இரண்டு மந்திரங்களுக்குத் தாரகம் என்று பெயர். ஒன்று ஓம்; மற்றது ராம்” என்றார்.
புட்டபர்த்தி என்ற ஊர் ஆத்மாவை மூச்சின் மூல ஸ்தானமாகக் காட்டுகிறதென்றும், அங்கு பாயும் சித்ராவதி அதே ஆத்மாவை மனத்தின் மூலமாகக் காட்டுவதாகவும் “ஸ்வாமி” நூலில் இரண்டாவது அத்தியாயத்தில் விளக்கியிருக்கிறேன். முதலில் விளக்கமில்லாமலே தன்னால் உள்ளே ஏற்பட்ட அனுபவத்துக்குப் பிற்பாடு விளக்கமும் உண்டாக, அதைச் சொன்னேன். ஸ்வாமியின் தலை நகருக்குச் சொன்னதை அப்படியே நூற்றுக்கு நூறு அவர் ஸ்ரீராமசந்திரனின் தலைநகருக்குப் பொருத்திச் சொல்லியிருப்பதை ஸமீபத்தில் கண்டு ஆச்சரியமடைந்தேன். “அயோத்யா என்றால் ‘யுத்தமிட முடியாதது‘ என்று அர்த்தம். எதிரிகள் எவரும் அயோத்தியின் மேல் படையெடுக்கத் துணியாததால் இப்படிப் பெயர். ஆத்யாத்மிகமாக இதற்கு என்ன பொருள் எனில், போராட்டங்களை யெல்லாம் கடந்த பேரமைதியான ஆத்மாவே அயோத்தி என்பதுதான். அங்கே பாயும் ஸரயு நதி மானஸ ஸரோவரத்திலிருந்து உண்டாவது. மனஸைக் குறிப்பதே ‘மானஸம்‘. தெளிந்து அடங்கிய மானஸ ஸரஸ் மனம் தெளிந்து அடங்குவதன் மூலம் ஆத்மாவை அறிந்து கொள்வதைக் குறிக்கும்” என்கிறார் ஸாயிராமர்!
***
பாரதி கண்ணனைப் பற்றிப் பல பாவங்களில் பாடியுள்ள கவிதைகள் நம் ஸ்வாமிக்கு வெகுவாகப் பொருந்துவதே போன்று, தியாகராஜ கிருதிகளைப் பார்த்தாலும் தீர்க்க திருஷ்டியில் ஸ்வாமியைக் கண்டேதான் அவர் தமது ராமனாக வர்ணித்தாரோ என்று தோன்றும். “ஸ்வாமி” நூலில், ‘ஸர்வ தேவ ரூபா!’ என்ற அத்தியாயத்தில், தியாகையருக்கு ஸமாதிக் கோயில் எடுத்த நாகரத்னம்மா நம் நாயகனைத் தரிசித்த கட்டத்தில் இதற்கு எடுத்துக்காட்டுக்கள் காணலாம். இன்னும் சில:
மஹனீயர் பலர் முறையிட்டதன் மீதே தாம் அவதரித்ததாக ஸ்வாமி கூறுகிறாரல்லவா? இவர்களில் தியாகையரும் ஒருவர் என்பதில் ஐயமில்லை. அவரது கிருதிகளே சான்று பகர்கின்றன.
தாம் முறையிட்டால் ராமன் மீண்டும் வரமாட்டான்; தம்மிலும் பெரியவர்கள் பிரார்த்தித்தாலே அவன் வருவான் என்று தியாகையர் கருதி, “இவ்வுலகில் எளியோரைக் காக்கப் பெரியோர் எவருமே இல்லையா? கலியில் அதமர்கள் புரியும் அக்ரமங்களையும், காமம் மாற்சரியம் முதலியவற்றின் பொல்லாக் காரியங்களையும் ராமபிரானிடம் எடுத்துரைத்து அவனை மறுபடி வரும்படிச் செய்ய யாருமே இலரா?” என்று அலறுகிறார், “எவரைந லேரா?” என்ற பாடலில்.
இந்தப் பாடலை ‘ஸித்தஸேனா‘ ராகத்தில் அவர் அமைத்திருப்பது அதி பொருத்தம். ‘ஸித்தர் கணம் யாவும் சேர்ந்து உருவாக்கியே ஸாயிபாபாவை அனுப்பினார்கள்‘ என்று சிவப்பிரகாசானந்த கிரி ஸ்வாமிகள் கூறியுள்ள விஷயத்தை மதிப்புக்குரிய அக்னிஹோத்ரம் தாதாசாரியர்கள் வாய்மொழியாக “ஸ்வாமி”யில் ‘மல்லிகையில் மலர்ந்த மந்திரம்‘ என்ற அத்தியாயத்தில் காணலாம். ஸித்திகள் என்று நினைக்கப்படும் அற்புத சக்தி ஸேனை புடை சூழவே நம் ஸ்வாமி வெற்றி கண்டு வருகிறார்!
ராமனின் தர்ம தர்பார் அதர்மக் கலியில் மீண்டும் வரவேண்டும் என்று அகம் துடித்து தர்பார் ராகத்தில், “ஏதி நீ பாஹுபல பராக்ரம” என்ற பாடலாகக் கொட்டியிருக்கிறார் ஸ்ரீ தியாகராஜர். “உன் புஜ பல பராக்கிரமத்தைக் கண்டு எத்தனை காலமாகிவிட்டது? உன்னுடைய நிஜதாஸர்கள் அதைக் காண ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். உனது வில்லுக்கும் அம்புக்கும் பசியே எடுக்கவில்லையா? ஸத்பிராமணர்கள் படும்பாட்டைக் கேட்டு உனக்கு ரோஷம் பிறக்கவில்லையா? நீசர்கள் புத்தி கெட்டு பயமில்லாமல் திரிவதை அடக்க நீ வேகமே வந்தாக வேண்டும்” என்று ஸ்வாதீன கோபத்துடனேயே பாடுகிறார்.
தனுசும் அம்பும் கொண்டு வதைக்க வரவில்லை ஸ்வாமி. வளைந்த தநுசுக்குப் பதில் வளையாத மனசு; அம்புக்குப் பதில் அன்பு இவையே அவரது ஆயுதம்.
இக் கிருதியில் “மோமு ஜூபராதா?” “திருமுகத்தைக் காட்டலாகாதா?” என்று அவர் கோருவதை நினைத்தே ராமசரணுக்கு முகமண்டலத்தை மட்டும் ஸ்ரீ ராமசந்திரனாகக் காட்டினார் போலும்!
அவரவர் இங்கிதமறிந்து, உள் பொங்கி ரக்ஷிக்கும் தங்கமான துரை “பங்காரு தொர” என்று ‘ஸீதாநாயக‘ என்னும் ரீதிகௌள திவ்ய நாம கீர்த்தனையில் ஐயர்வாள் சொல்வது ஸ்வாமிக்குச் சேரும் அழகை என்சொல்ல?17
ஒவ்வொருவரையும் எப்படிப் பழுக்கப் போட வேண்டுமென்பதற்காக ஸ்வாமி தரம் பிரித்து வகை வகையாய் ஆட்டம் போடும் மாயாவித்தனம் அடியார் அறிந்ததே! ‘அட்ல பலுகுது‘ என்ற அடாணாப் பாடலில் இதை அய்யர்வாள் தத்ரூபம் படம் பிடித்துத் தருவதைப் பாருங்கள்:
“நீ அப்படியும் பேசுவாய், இப்படியும் பேசுவாய். இதற்கு நான் என்ன செய்வேன், ராமா? குழந்தையைத் தொட்டிலிட்டுத் தாலாட்டவும் செய்வாய்; உனக்குத் தோன்றும்போது கிள்ளவும் கிள்ளுவாய்! ஜீவர்களை சிக்ஷிக்கவும் அறிவாய்; சிரஞ்ஜீவிகளாக்கி ரக்ஷிக்கவும் அறிவாய். அவரவரின் மனோபாவம் தெரிந்து காக்கிறாய். வத்பக்தர்களின் நல்லதிருஷ்டமாக வந்தவன் நீ!”
கள்ள மாயை கலவாத ஸத்யதர்ம ராமமூர்த்தியைப் பற்றிச் சொல்கிற மாதிரியா இருக்கிறது? கண்ணனையும் அவனது மறு அச்சாக வந்த நம் பர்த்திப் பரமனையும் சொல்வது போலத்தானே உள்ளது?
தியாகராஜ கிருதிகளில் ஸத்யஸாயிக்கே விசேஷமாகப் பொருந்துவதாக நான் நினைத்து வியக்கும் ஒன்றைச் சொல்லி முடிக்கிறேன்.
18ஸ்வாமி ‘பங்காரு‘ என்றே அடியரை அழைப்பார்.
“வல்லகாதநக” என்ற சங்கராபரணப் பாடல். அதிலே ராமன் தியாகையரைக் காக்கத் தன்னாலாகாது என்று சொல்லி விட்டால், அவன் யுகயுகமாக அவதரித்து அடியார்களைக் காத்த சரித்ரங்களைச் சொல்வதில் பிரயோஜனமே இல்லை என்று தியாகையர் வாது செய்கிறார். இப்படிப்பட்ட பக்த ரக்ஷணை சிலவற்றைச் சொல்லி முடிவில்,
கும்பக ரேசக விதுலநு
கோரி ப்ரோசிநாவு
என்கிறார். ‘கும்பகம்‘ என்றால் சுவாஸ பந்தனம். மூச்சை இறுகப் பிடித்தல். ‘ரேசகம்‘ என்பது உள்ளே சென்ற மூச்சை வெளிவிடுவது. ‘கும்பக் ரேசக விதுலது‘ என்றால் இவ்விதம் பிராணாயாமங்களில் தேர்ந்த யோகியர் என்று அர்த்தம். இவர்களை ஐயனே தேடிப் போய் காத்ததைத்தான் “கோரிப்ரோசிநாவு” என்கிறார்.
இப்படிச் சொல்வது யோகியர் பலர் இருந்த அரணியத்துக்கு ஸ்ரீராமன் சென்றதைக் குறிப்பிடுகிறது என்று கொள்வதை விடவும் சிறப்பாக நம் ஸத்யஸாயி விஷயத்திலேயே பொருந்துகிறது. கைகேயி வனவாஸம் விதித்ததாலேயே ராமன் காடு சென்றதாகக் காட்டிக் கொண்டார்; யோகியரைக் காக்கத் தாமாகக் தேடிப் போனதாகக் காட்டிக் கொள்ளவில்லை. நம் ஸ்வாமிதான் யோகி ஒருவரை, அவர் அழையாமலே சென்று, உயிராபத்திலிருந்து காத்து, அப்படிக் காத்த பின்பும் அவருக்குத் தம்மைத் தெரிவித்துக் கொள்ளாமலே திரும்பியிருக்கிறார். 1957 ஜூலை பிற்பகுதியில், ஹிமாலய வஸிஷ்ட குகைக்கருகே நிஷ்டை கூடிய ஒரு யோகியை கங்கைப் பிரவாஹம் அடித்துக்கொண்டு போனபோது, அவர் ஸத்ய ஸாயியைப் பற்றி அறிந்தேயிராதவரெனினும், நம் ஸ்வாமி தாமாகவே அவரைத் தேடிச் சென்று தமது ஸூக்ஷ்ம சரீர சக்தியால் கரைசேர்த்து வந்திருக்கிறார்.19 கரை சேர்த்த பிற்பாடும்கூட அவருக்கு ஸாயி ரூபத்தை அறிவித்துக் கொள்ளவில்லை.
இந்த லீலையைத்தான் அன்றே ராமையன் தியாகையருக்குக் காட்டினானோ?
ராம ரூபத்தை ஸத்யஸாயி காட்டுகிறாரெனில் ராமனும் ஸத்யஸாயி ரூபத்தைக் காட்டியிருப்பானோ?
ஸாயிராமா! உன் சுருள் குழல் புரண்டாட, தியாகையரின் தேன் வாக்கில் ‘அலகலு அல்லலாடக‘, “ஆமாம், ஆமாம்” என்று தலையாட்டேன்!
20விவரம்: “ஸ்வாமி”, முதற்பகுதி, பக்கம் 221.