15. “ஸாயி நல்ல கப்பல்காரன்”
“ஸாயி நல்ல கப்பல்காரன்; தாண்டிவிடலாம் – கடலைத் தாண்டிவிடலாம்
ஸாரமற்ற ஸம்ஸாரக் கடலைத் தாண்டிவிடலாம்!”
பஜனை நடந்துகொண்டிருக்கிறது.
மூடிய கண்ணில் மோஹனக் காட்சி தருகிறான் கப்பல்கார ஸாயி.
அது ஒரு விசித்ர நிலையாயிருக்கிறது. வெளி உணர்வு நீங்கிய உருவெளிக் காட்சியாக இல்லை. பஜனை நாதம் காதில் ஓரளவு அமுங்கிக் கேட்டுக் கொண்டிருக்கும்போதே, மூடிய கண்ணில் காட்சியும் தெரிகிறது.
பெரிய கப்பல் அல்ல; பரிசல் என்பார்களே அப்படிப்பட்ட வட்ட வடிவமான படகிலேதான் குரிசல் நிற்கிறான்.
அரசிளங்குமரனாகவா? இல்லை. பரிசல் ஓட்டும் சாமானியத் தொழிலாளியாகத்தான் காண்கிறான்!
ஸாகம்மாவுக்காகச் சட்டை போடாமல் புலித் தோலில் அமர்ந்தானே, காணக் கிடைக்காததான அதே திறந்த மேனித் தோற்றம். அதே திறந்த உள்ள நிர்மலம். அதே இளவயசு.
ஒல்லியாக, துளிராக, இளைஞனாகப் பரிசில் வலித்து வருகிறான் ஸாயிநாதன். நாதனாக அல்ல நாவாயனாக.
தலையில் சிவப்பு முண்டாசு. அதற்கு மேலும், பக்கங்களிலும் ஏதோ சில குழற் சுருள்களே தெரிகின்றன. இடையிலும் ஒரு சிவப்பு அரை வேட்டிதான். அதைக் கால்களுக்குள் கொடுத்துக் கச்சமாகச் சொருகியிருக்கிறான்.
கழுத்தில் புலிநகம் கோத்த சங்கிலி. கையில் கட்டைக் காப்பு. கண்டறியாத காட்சி!
உடல் நுண்மையிலும் தோளில் திண்மை காண்கிறது. அநாயாஸமாகத் துடுப்புப் போட்டு பரிசலைத் தள்ளி வருகிறான்.
அவன் வருவது நீலக் கடலிலே.
கடலில் ஆழமில்லாமல் முழங்கால் அளவில் பூமி தட்டுப்படுகிற இடத்தில் வந்து பரிசலை நிறுத்துகிறான். அதாவது துடுப்பை இவன் நிலத்தில் நட, அதையொட்டிப் பரிசிலும் நின்று விடுகிறது.
அங்கே முழங்கால் மட்டும் ஜலத்தில் ஆணும் பெண்ணுமாக அநேகர் நிற்கிறார்கள். அடையாளம் தெரிந்த எவரும் இல்லை. பொதுவாக லோகத்து ஜனங்கள். ஏழை எளியவராயின்றி, வசதியுள்ளவர்களாகவே காண்கிறார்கள்.
இயற்கை வளம் கொழிக்குமிடமாக அது இருக்கிறது. நடுவே தங்க வகிட்டோடு பச்சைத் தென்ன மட்டைகளும், பொன்னான ஈச்சங்குலைகளும் அவர்களுடைய தலையிலே, முகத்திலே, தோளிலே உரசும்படியான சோலையாக இருக்கிறது.
ஆனாலும் அவர்களுக்கு இடர்ப்பாடாக அந்தத் தீவு நீரிலிருந்து முற்றும் வெளிவராமல் அரை கஜ ஆழத்தில் முழுகியிருக்கிறது.
அதிலே நின்று கொண்டிருக்கிற ஜனங்களை நீல நிலா நேத்திரங்களால் பார்க்கிறான் பரிசில்காரன்.
இரக்கம் சொட்டுகிறது.
பரிசிலில் அவர்களை ஏறிக்கொள்ளச் சொல்லிக் கண்ணாலேயே ஜாடை செய்கிறான்.
அவர்களும் ஆவலோடு நெருங்குகிறார்கள்.
“கூடாது, கூடாது” என்று அவர்களிடம் எதையோ சுட்டிக் காட்டித் தடுக்கிறான் ஓடக்கார ஸ்வாமி.
பஜனை ஒலியில் “கூடாது” என்ற சப்தம் கேட்காவிடினும், அவனது உதட்டசைவும், அவனுக்கே உரியபடி அதோடு சேர்ந்த முகத்தசைவும் அந்த வார்த்தையைத்தான் அவன் சொல்கிறான் என்று உணர்விக்கின்றன.
குழந்தையிடம் கழுத்தைச் சாய்த்துக் குலுக்கி, “அப்படியெல்லாம் பண்ணப்படாதம்மா” என்று நாம் சொல்வதுபோல்தான் கிழக் குழந்தையிடமும் ஸ்வாமி பேசுவன். இப்போதும் அந்த பாவம்தான்!
எதைக் கூடாது என்கிறான் என்பதும் இதோ புரிகிறது.
அந்த மக்களில் ஒவ்வொருவரும் கையிலே பெரிய தங்கக் கட்டி வைத்திருக்கிறார்கள். (பங்காரு பாபாவைக் கண்டதில் இந்தப் பளபளக்கும் பாளங்களை இத்தனை நேரம் நான் கவனிக்கவில்லை.)
பொற்கட்டிகளை அவர்கள் கொண்டு வரக்கூடாது என்றுதான் தடுக்கிறான்.
அத்தனை பாரத்தை அவர்கள் ஏற்றினால் பரிசல் தாங்காதாம். பொன்னாதலால் சின்னதாயிருந்தாலே
அதற்கு கனம் ஜாஸ்தி என்பதை எடுத்துக் காட்டுகிறான். பஜனையோசையில் இதெல்லாம் ஜாடையால்தான் புரிகிறது. ஆனால், அந்தக் கட்டிகளோடு ஏறினால் படகு drownஆகி விடும் (முழுகிவிடும்) என்று அவன் சொல்வதில், drown என்ற வார்த்தை மட்டும் ஸ்பஷ்டமாக உள்காதில் drown ஆகிறது!
பொற்கட்டியை வைத்துவிட்டு வரவேண்டும் என்று இவன் சொன்னவுடன் ஏற வந்தவர்கள் தயங்குகிறார்கள்.
அவற்றை வைத்துவிட்டு ஏறுமாறு இவன் அலாதி இரக்கத்தோடு நயமாகவும் பரிவாகவும் ஆனால் விட்டே கொடுக்காமல் மன்றாடுவது தெரிகிறது. ‘ஐயோ, சுமையை விடமாட்டேன் என்கிறார்களே, தன்னோடு வரமாட்டேன் என்கிறார்களே!’ என்ற கரிசனம் அவன் வடிவம் முழுதும் பரவிச் சொட்டுகிறது.
“இதைவிட ஒஸ்த்தியெல்லாம் அங்கே வெச்சிருக்கேன்” என்று ஓடக்கார ஸாயி சொல்வது ஸ்படிகமாக, ஸ்பஷ்டமாகக் கேட்கிறது.
உடனே, “எல்லாவற்றையும்விட உயர்த்தியான நீயே கூப்பிடும்போது தங்கமாவது வைரமாவது?” என்று இவர்கள் கட்டிகளை டப் டப் என்று போட்டுவிட்டுப் பரிசலில் ஏறவேண்டியதுதானே?
ஆனால், ஆனால்…. அப்படிப்பட்ட ஒஸ்த்திப் பரிசிலின் பெருமை இவர்களுக்குத் தெரியவில்லையே!
அவன் வார்த்தையைக் கேளாமல் யக்ஞப் பசுக்களாகத் தலைகுனிந்து நிற்கிறார்கள்.
பரிதாபமாயிருக்கிறது! அவனை ஆக்ஷேபித்தும் சர்ச்சை செய்யவில்லை. ஆமோதித்தும் அவனது சொற்படி நடக்கவில்லை. ஈயாடாமல் முகம் கவித்து நிற்கிறார்கள்.
காத்து நிற்கிறான் பரிசல்காரப் பர்த்தியன்.
ஆழம் குறைந்த நீரின் சளசள சப்பள ஓசையும், தென்ன மட்டைகள் ஆடும் மர்மர ஒலியும் தவிர எல்லாம் மவுனமாகிறது.
ஆஹா! அந்த நீர் இன்னும் ஆழமாக, அவர்களுடைய இடுப்பளவு, மார்பளவு, கழுத்தளவு இருக்கக்கூடாதா? அங்கே இப்படித் தேங்காயும் ஈச்சையும் செழித்து வளராமலாவது இருக்கலாகாதா? இவர்கள் தூக்க மாட்டாமல் கனக்கும் கட்டிகள் பொன்னாக மினுக்காமலாவது இருக்கக்கூடாதா? அப்படியெல்லாம் இருந்தால் அவர்கள் ஓடத்தில் ஓடிவந்து ஏறியிருப்பார்களே!
அப்படியெல்லாம் இல்லாததால் அவர்கள் ஏறாமல் சித்திரமாக மோனித்து நிற்க, அவனும் பரிசலுக்குள் பரிவுச் சித்திரமாக நிற்கிறான் துடுப்பை ஊன்றியபடி.
விநாடி சில ஓடுகின்றன.
என்ன தோன்றிற்றோ? நிலத்திலே நட்டுப் பிடித்துக் கொண்டிருந்த துடுப்புக் கோலை அதிலிருந்து எடுக்கிறான்.
உடனே படகு சரியாக அரைவட்டம் சுற்றுகிறது.
அதாவது, அவன் நின்றபடியே நிற்க அவனது முதுகுப்புறம் அவர்களுக்கு முன்னே வருகிறது.
பூமியிலிருந்து துடுப்பு எடுக்கப்பட்டதால் பரிசல் அவர்களை நீங்கி மிதக்கிறது. ஓடக்காரன் வலிக்காமலே தானாகச் செல்கிறது.
ஓடக்காரன் அவர்கள் பக்கம் திரும்பவில்லை.
அவன் முகத்தில் ஒருவிதமான உணர்ச்சியும் தெரியவில்லை. உணர்ச்சியற்றிருந்தது என்றும் சொல்லத் தோன்றவில்லை. சந்திரன் உதித்துச் சிறிது நாழிகையில் பூர்ணப் பிரகாசம் பெறாமல் எப்படியிருப்பானோ அப்படி இருக்கிறான்!
துடுப்பைத் தனக்குப் பின்புறம் தான் திரும்பாமலே பரிசலில் சார்த்தி வைக்கிறான். அப்படியே அதன் முகப்பிலே, தன் முகம் ஆகாயத்தைப் பார்க்கும்படி நிமிர்த்தி வைத்துச் சாய்ந்து படுக்கிறான்.
இதுவரை காட்டிய மென்மைக்கு மாறாகச் சற்று வேகத்துடன் முண்டாசை அவிழ்த்துத் தள்ளுகிறான்.
கடற்காற்றிலே ஜிவ்வென்று அந்த அடர்ந்த கேசபாரம் பரவுகிறது. கொந்தளிக்கும் கடலாகக் குந்தளம் விரிகிறது.
சொல்லி முடியாதத் தெளிவு நிர்மல முகத்தில் மேவுகிறது. ஓர் உணர்ச்சியும் காட்டாது நீலவானை நோக்கும் நீலக் கண்ணிலும் அப்படியே ஒரு தெளிவு.
கீழே பரந்து விரிந்த நீலக் கடல் அலையடித்து ஆரவாரிக்கிறது.
மேலே நெடிய விசாலமாக, ஒரு மேகக் குஞ்சுகூட இல்லாமல், நக்ஷத்ரமில்லாமல், சூரியனில்லாமல், சந்திரனில்லாமல், அது எந்தப்பொழுது என்றே சொல்லத் தெரியாவிட்டாலும் இளவொளி இலகுவதாக நீல ஆகாசம் மோனமயமாகக் கிடக்கிறது.
அலை அலையாகப் புரள் குழல்களோடு அமைதியாக, மௌனமாகச் சாய்ந்தாற்போல் சயனித்திருக்கிறான் ஸாயி.
அந்தப் பெரிய நீலமும், இந்தப் பெரிய நீலமும் அவனுடையதுதான் என்று புரிகிறது.
***
இத்தனையும் இரண்டரை நிமிஷ வைபவம்தான்.
இன்னமும் அதே பஜனைப்பாடல்தான் ஆனால் மேல் காலத்தில் பாடப்படுகிறது.
தாண்டிவிடலாம், கடலைத் தாண்டிவிடலாம்;
ஸாரமற்ற ஸம்ஸாரக் கடலைத் தாண்டிவிடலாம்;
ஸாயி நல்ல கப்பல்காரன், தாண்டிவிடலாம் கடலைத் தாண்டிவிடலாம்அவன் நல்ல ரொம்ப நல்ல கப்பல்காரன்தான். ஆனாலும் நாம் தாண்டப்போகிறோமா? ஏறுவதை நம் ஸ்வயேச்சையிலல்லவா விட்டிருக்கிறான்?