16. “சிரித்துக் குலுங்கிடச் செய்திடுவான்”
பிரேமையின் இன்பத்தில் ஹாஸ்யம் பிறக்கிறது; பிரேமையின் இன்னொரு வடிவான கோபத்தில் ஹாஸ்யத்தின் இன்னொரு வடிவான் ‘குத்தல்‘ பிறக்கிறது. இரண்டிலும் வல்லவர் பகவான். அவர் சிரிப்பிலேதான் லோகம் மலர்ந்தது. லோகத்தார் மலர்ந்து சிரிக்கும்படிப் பேசி இன்பளிப்பார் நம் ஸாயி பகவான். மஹாபுருஷர் உள்ள இடம் என்ற கனம் இல்லாமல் அவரிருக்கிற சூழலிலே குறும்பும் சிரிப்புமே இருக்கப் பண்ணுவார். பகவான்பக்தர் என்ற தாரதம்மியம் மறைத்து ஒட்டி நிற்க இருவரும் சிரிப்பதுதான் வழி என்பதால் சிரிக்க வைத்துச் சீர்பெறச் செய்கிறார்.
ஹாஸ்ய ஸாயியை இந்த நூலில் விரவலாகக் கண்டு வந்திருக்கிறோம். “ஸ்வாமி‘யில் குறிப்பாக இரண்டாம் பகுதி 485 – 7 பக்கங்களில் நாயகனின் நகைச்சுவைக்கு உதாரணங்கள் காட்டியிருக்கிறேன். சென்ற அத்யாயத்தில் ஏற்பட்ட இனம் தெரியா ஏக்கம் நீங்க இங்கும் சற்று ஹாஸ்ய டானிக் தர ஸ்வாமி வருகிறார்.
***
ஒருவர் ஸ்வாமிக்கு நமஸ்காரம் பண்ண வருகிறார்.
“இப்போ ஸாஷ்டாங்க நமஸ்காரம் பண்ண வேண்டாம்” என்று ஸ்வாமி ஏகக் குறும்பாகச் சொல்லும்போது உடனிருந்தவர்களுக்குப் புரியவில்லை.
அப்புறம் புரிய வைக்கிறார். அந்த நபர் அப்போதுதான், குனிந்தால் மூக்கால் பருக்கை வருகிற மாதிரிச் சாப்பிட்டுவிட்டு வந்திருக்கிறாராம்!
ஸ்வாமியிடம் ஒருவர் தம் புத்திப் பிரதாபத்தைப் பறைசாற்றிக் கொள்ளுமுகமாக சிக்கலான தத்வங்களாகக் கேள்விகளைக் கேட்டுக்கொண்டு போகிறார். பதில் சொல்லாமல் கேள்விகளை மட்டும் ஒன்று, இரண்டு என்று கேட்டுக்கொண்டு போன பாபா நிதானமாக நாலே வார்த்தை சொல்கிறார்: “I know you know” (“உனக்கு ரொம்பத் தெரியும்னு எனக்கு ரொம்ப நன்னாத் தெரியுமப்பா” என்று அர்த்தமாகும்படி அந்த வார்த்தைகளை உச்சரித்தார்).
ஸ்ரீமதி இந்திரா தேவியை எதிர்கொள்ள அவள் மாதிரியே நடந்து செல்வார்.
ஸ்வாமி நடத்திய ஒரு கலியாணத்தில் அவ் வீட்டு மாப்பிள்ளை பரிமாற வந்தபோது, பத்ததி பார்க்கும் ஸ்வாமி அது சரியல்ல என்று கருதி அவருக்கு இலை போட வைத்து உண்ண அழைத்தார். அப்போது உணர்ச்சி மோதலில் மாப்பிள்ளை அசட்டுச் சிரிப்போடு தடுமாறிக் கொண்டு வந்ததை அதேபோல் இளித்த வாயராகக் கோணல் நடையோடு ஸ்வாமி ‘மிமிக்‘ பண்ணியதில் சாப்பிட்டவர்களுக்குப் புரையேறிவிடும் போலாயிற்று!
“ஸ்வாமி, எனக்கு ஒரு சாதனை உபதேசியுங்கள்” என்று பிரார்த்திக்கிறார் இளைஞர் கிருஷ்ணானந்த்.
“சாதம் சாப்பிடு. அதுதான் சாதனை” என்கிறார் ஸ்வாமி.
ஒரு பக்த தம்பதியை, “மன்மதன்–ரதி! வாங்கோ “ என்று வரவேற்கிறார். அந்தத் தம்பதியிலேயே மனைவி மட்டும் பெற்றோரோடு பகவானிடம் சென்ற இன்னொரு முறையோ, “தூர்வாஸா எப்படியிருக்காரு?” என்று காதல் மன்னனைக் குரோத முனிவராக மாற்றி, விசாரிக்கிறார்!
வாஸன் என்று ஒருவர். இவர் யாரிடமோ உஷ்ணமாகப் பேசிய சமயத்தில் ஸ்வாமி, “துர்வாஸர் என்ன சொல்றாரு?” என்று சிரித்து விசாரிக்கிறார்.
சேஷன் என்பவர் ஆத்திரமுற்ற சமயம் எனில், “என்ன, ஆதிசேஷன் விஷ ஜ்வாலை கக்கறாரா?” என்று அமுதத் துளியாகக் கேட்பார்.
இன்னொருத்தர். பெயர் பிரபு என்று வைத்துக் கொள்ளுங்களேன். வீட்டில் தாமே பெரிதாகக் குரலெடுத்து மற்றோரை அடக்குபவராக இவர் இருக்கிறார். ஸ்வாமி, “பிரபு இல்லையா? லார்ட்ஷிப் காட்டுகிறார்” என்கிறார்.
ஸுரையா எனப்படும் ஸ்ரீ ஸூர்ய நாராயணராவுக்கு மாரடைப்பு உண்டானபோது இளம் டாக்டர் ஸ்ரீநிவாஸனை அவருக்குச் சிகித்ஸை செய்ய அனுப்பினார் ஸ்வாமி. அவ்வளவு பெரிய பிரசாந்தி நிலய முக்யஸ்தருக்குத் தாமா வைத்தியம் பார்ப்பது என்று நியாயமான தயக்கம் கொண்ட ஸ்ரீநிவாஸனிடம், “அந்த அவதூதனுக்கு ஏற்ற யமதூதன் நீதான்” என்று ஸ்வாமி திவ்யமாக ஆசி சொன்னார்!
பகவானிடம் வெகு சாமானிய விஷயமொன்றுக்கு ஓர் அம்மாள் வேண்டுதல் விடுத்தார். “ஹ்ம்! கல்பக விருக்ஷத்தின் கீழே நின்னுண்டு காப்பிப் பொடி இல்லையேன்னு அழுகை!” என்றார் விகல்பமின்றி.
***
மனோ ரகசியங்கள் அறிந்த ஸ்வாமி நம் மர்மத்தை உடைத்து நகைச்சுவை பரிமாறுவது ஓர் அழகு.
ஸ்வாமியிடம் தம் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற விரும்புவதாக ஒருவர் சொன்னார். உடனே ஸ்வாமி, “உன் ஸமாசாரம் என்ன தெரியுமா? உனக்கு இப்போ கொஞ்சம் doubts இருக்கு. அதை ‘க்ளியர்‘ பண்ணிக்கணும் என்கிறே. எதுக்குத் தெரியுமா? இதைக் ‘கிளியர்‘ பண்ணிண்டாத்தானே புதிசு புதிசா doubts உண்டாக்கிக்க இடம் அகப்படும்? இதுதான் உன் ப்ளான்” என்றார்.
பஜனை மதுரமாகப் பாடும் ஒருவர் பிறரிடம் பழகுகையில் கடுமையாக இருப்பது பற்றி: “அதென்ன, பாடறச்சே குரல் ஸ்ஸில்க்; அதுவே பேசறச்சே ற்றம்பம்?” இதைச் சொல்கையில் ஸில்க்கை ஸ்வாமி பட்டிழையாகவும், ரம்பத்தை அப்படியே கருக்குத் தீட்டிய கூர்ப்புடனும் குரலில் காட்டியது அதிவிநோதமாயிருந்தது!
ஒருவர் எதிலும் ஸ்டெடியாக இல்லாததாகச் சொல்லி, “ஸ்டெடியாக இல்லாமலிருப்பதில் மட்டும் அவர் ஸ்டெடி” என்று முத்தாய்ப்பு வைத்தார்.
‘மனஸுலோனி மர்மமு தெலிஸின‘ ஸ்வாமியாயிருப்பதால் சில ஸமயம் தர்மஸங்கடக் குறும்புகள் பண்ணிவிடுவார். ஒவ்வொரு போதில் இதனாலேயே திருத்தியும் பணிகொண்டு விடுவார்.
ஒருவருக்கு விபூதி அளித்தபோது ஸ்வாமி, “இதை ஃபாமிலி‘க்கும் கொடு” என்றாராம். “ஃபாமிலி ஊரிலில்லை” என்றாராம் அதைப் பெற்றுக்கொண்டவர். “ஆமாமாம். ஊரிலேயிருக்கிற ஃபாமிலிக்கு ஸ்வாமி ப்ரஸாதம் கொடுக்கிறது யுக்தமில்லைதான்” என்று பகவான் கண்ணைச் சிமிட்டினாராம்.
கனற்பொறி பறக்க வேண்டிய கண்ணில் குறும்புச் சிமிட்டே காட்டியிருக்கிறார். ஆனாலும் அந்தத் திருவிழித் திரிசமனிலேயே அடியார் செமுத்தியான சவுக்கடி பெற்று விட்டார். ரஹஸ்யமாகத் தாம் வைத்துக் கொண்டுள்ள தகாத உறவு ஸ்வாமிக்குத் தெரியும் என்பதே அவரைத் திருத்தி, நாளடைவில் அவர் அந்த ஸம்பந்தத்தை முறித்துக் கொள்ளச் செய்துவிட்டதாம்.
இன்னொரு ஸந்தர்ப்பத்திலும் இப்படி நுட்பமான ஹாஸ்யக் குத்தலாலேயே இன்னொருவர் தமது முறைகேடான உறவை முறிக்குமாறு செய்தார். அவர் தம்பதி எமேதராக ஸ்வாமியிடம் சென்றிருந்தபோது அவரது மனைவி, “எங்களுக்குப் புத்ர பாக்யம் இல்லை” என்று விஞ்ஞாபித்துக் கொண்டாளாம். ஸ்வாமி நயனத்திலும் அதரத்திலும் விஷமம் விளையாட “அம்மா! ‘எனக்குப் புத்ர பாக்யம் இல்லை‘ன்னு சொல்லு” என்று ‘வத்தி‘ வைத்தாராம்! வத்தி வெடித்ததில் பிரஸ்தாவ நபரின் பிரஸ்தாவிக்கக் கூடாத உறவும் வெடித்ததாம்!”
வயோதிகத்திலும் ஒருவரிடம் சில கேளிக்கைப் போக்குக்கள் போகவில்லை. ஸ்வாமி அவரை வைத்துக் கொண்டே, அவரைப் புகழ்கிற மாதிரியே, அவரும் புகழ்ச்சி என்று பெருமைப்படும் விதத்தில், “பாருங்க! இந்த வயஸிலே யுவா மாதிரி எப்படி உத்ஸாஹமா, ஜாலியா இருக்காரு!” என்கிறார். இப்படிச் சொல்லி, அந்தக் கிழவரோடு வந்துள்ள, கிழவனாரின் ‘குட்டு‘ தெரிந்த, இருவரை ஸ்வாமி பார்த்ததில் வழிந்த போக்கிரித்தனம் உண்டே! அவ்விருவரும் சிரிப்பை அடக்கிக் கொள்ளப் படாத பாடு படவேண்டியதாயிற்று!
ஸாயி ஸ்தாபன முக்யஸ்தர் ஒருவரின் காதில் பகவான் முகத்தை ஸீரியஸாக வைத்துக்கொண்டு ஏதோ கிசுகிசுத்துவிட்டு வருகிறார். அவரோ சிரிப்பை அடக்குவதற்கு பிரம்மப் பிரயத்தனம் செய்வது நமக்குத் தெரிகிறது. பிறகு அவரை விசாரித்ததில் ஸ்வாமியின் ‘போக்கிரித்தனம்‘ வெளியாகிறது. அவருடன் வரும் இன்னொரு ஸகா தமக்குப் பெட்ரோல் செலவில்லாமல் இவர் காரிலேயே வருவது வழக்கமாம். இதைச் சில நாட்களுக்கு முன் ஸ்வாமியே இவரிடம் சொல்லி, “நீ என்னிக்காவது அவர் காரை எடுக்கும்படிக் கேளு. ஏதாவது சாக்குச் சொல்லிட்டு ஸ்வாமியைப் பார்க்க வராமலே இருப்பாரே தவிர, வண்டியை எடுக்கமாட்டாரு. ‘ஸ்வாமி ஹ்ருதயவாஸி, ஸர்வ வியாபி. அவரை நாம் இருக்கிற இடத்திலேயே feel பண்ணிக்கலாம். நீ என்னவோ தர்சனத்துக்காக போறியேன்னுதான் நானும் சும்மா உன்னோட வரேனே தவிர இதெல்லாம் அவசியமேயில்லை‘ன்னு ஃபிலாஸஃபி பேசி உன்னையே பைத்தியக்காரனாக்கிடுவாரு” என்றாராம்.
இன்றைக்கு இவரது கார் ரிப்பேராகி விட்டதால் ஸ்வாமி சொன்னபடியே இவர் ஸகாவை வாஹன உதவி கேட்க, எழுத்துக்கெழுத்து அந்த ஸகா பகவான் கூறியதையே சொன்னாராம். பிறகு இவர் வேறு ஒருவரின் வண்டியில் வந்தபோது அதில் அவரும் ஒட்டிக் கொண்டிருக்கிறார், ஸ்வாமியிடம் ஏதோ கோரிக்கை விடுப்பதற்காக!
“பார்த்தியா உன் ஃப்ரென்ட் லக்ஷணத்தை? ஹ்ருதயவாஸியும் அந்தர்யாமியுமா இருக்கிற ஸ்வாமிகிட்டே பெடிஷன் கொடுக்க வந்திருக்காரு, அதுவும் ஓசியிலே” என்று ஸ்வாமி இவர் செவியில் ரஹஸ்ய மோதுகிறார்! குழுமியுள்ள இதரருக்குத் தெரியக்கூடாதென்று முகத்தில் ஸீரியஸ்னெஸ்! லீலா நாடக இயக்குனர் மட்டுமல்ல; தேர்ந்த நடிகரும்தான், நாடகக்கலைக் குடும்பத்திலே பிறந்த நம் நாயகர்.
பூர்வத்தில் ஸ்ரீ கஸ்தூரி குறித்து நடந்த ஒன்று. அவரது அன்னை ஜானகியம்மா, “ஸ்வாமிக்கு ஜூஸ் பண்ணி எடுத்துண்டு போகலாமா!” என்று அவரைக் கேட்டாளாம். “போகலாமே! ஸ்வாமி அங்கீகாரம் பண்ணிண்டா ஸரி; பண்ணிக்காட்டாலுந்தான் ஜூஸ் எனக்கு இஷ்டமாச்சே, நான் சாப்பிட்டுடறேன்” என்றாராம் கஸ்தூரி. அப்படியே இருவரும் சென்று ஜூஸை அர்ப்பணிக்க, பகவான், “ஜூஸா? கஸ்தூரிகி சால இஷ்டமு” என்று அவரையே ஹாஸ்யத்தில் ஜூஸ் பிழிந்து விட்டாராம்!
நண்பர் ஜெகாவிடம் ஸ்வாமி பேச்சுவாக்கில், “Wife is not life, wife is wife and life is life” என்கிறார். ஓய்ஃப்லைஃப் எதுகையணியை மட்டுமே உடனிருந்த மற்றோர் புரிந்து கொள்கின்றனர். ஜெகாவோ அதில் வேறொன்றைப் புரிந்து கொண்டு ஆச்சரியப்படுகிறார். மணமான புதிதில் அவர் மனைவியை லைஃப் என்றே அழைத்தவராம்!
ஒய்ஃப்–லைஃப் மாதிரி அநேக ஹாஸ்ய வார்த்தை விநோதங்கள் ஸ்வாமி பாஷணத்தில் உதிரும் “உங்களுடைய lust, dust, rust எல்லாம் போக என்னிடம் trustஓடுவந்து rest பண்ணிக்கொள்ளுங்கள்” என்றார் ஒருமுறை. வழக்குரைஞர் குடும்பத்தைச் சேர்ந்த தேவநாதனுக்குச் சட்டப்படிப்பு வேண்டாம் என்ற ஸ்வாமி, “law இப்போ lowஆப் போயிடுத்து” என்றாராம்.
ஒரு பக்தர் இன்னொருவரைப் பற்றி, “He is not keen to get the job” என்று சொன்னமாத்திரத்தில் ஸ்வாமி சடக்கென்று, “அப்படியில்லேம்மா! He is keen not to get the job” என்று ஒரு திருப்புத் திருப்பினாரே பார்க்கலாம்! ஒரு சின்ன notஐ இடம் மாற்றிப் போட்டதில், “வேலை கிடைப்பதில் முனைப்பில்லாமலிருக்கிறார்” என்பதை, “வேலை கிடைக்காமலிருப்பதில் முனைப்பாக இருக்கிறார்” என்று ஆக்கிவிட்டார்!
அந்நிய நாட்டிலிருந்து ஸ்வாமியுடன் தங்க வந்த ஒருவரிடம், “எங்கே லக்கேஜ்? மனஸில் இருக்கிற லக்கேஜைக் கேட்கவில்லை” என்கிறார் நம் மனச்சுமையை நகைச்சுவையுடன் தாங்கிக்கொள்ளும் ஹாஸ்யக்காரத் தியாகி.
***
வெள்ளையான சில வேடிக்கைப் பேச்சுக்கள்.
அந்த வெள்ளைக்கார தம்பதியர் கொண்டு வந்துள்ள பாலகனின் இரு கன்னங்களையும் அழுத்திய பகவான் அவனது வலப்பக்கம் தந்தையின் ஜாடையாகவும் இடப்பக்கம் தாயின் ஜாடையாகவும் இருப்பதாகக் கூறுகிறார்!
ஓர் அமெரிக்கரிடம் சென்று, “ஸ்வாமியைப் பார்த்த பின் உன் ‘ஒய்ஃப்‘ ரொம்ப ‘இம்ப்ரூவ்‘ ஆகியிருக்கிறாள்” என்கிறார்.
மரியாதைப் பண்பு தவறாமல் ஸ்வாமியிடம் எப்படிப் பழகுவது என்று புரியாமல் திண்டாடும் அநேக மேனாட்டவரில் ஒருவரான இந்த அமெரிக்கர் ஸ்வாமியின் முன்னர் எடுத்ததற்கெல்லாம் ‘க்ம்‘ என்று மூக்கால் சிரித்துக் கொண்டிருப்பது தவிர ஏதும் பேச மாட்டார். இப்போது அவர் ஸ்வாமிக்குத் தந்த விடையும் ‘க்ம்‘ மூக்குச் சிரிப்புத்தான்!
ஸ்வாமி தொடர்கிறார்: “ஸ்வாமியைப் பார்க்கு முன் அவள் உன்னைத் திட்டுவது வழக்கமில்லையா? அப்புறந்தான் ‘இம்ப்ரூப்‘ ஆகி, திட்டுவதை நிறுத்திவிட்டு, அடிக்க ஆரம்பித்திருக்கிறாள்!”
“க்ம்”காரர் மூக்குச் சிரிப்பை விட்டு, வாய்விட்டே கொல்லென்று சிரித்து விட்டார்.
மக்களுக்குத் தரிசனம் தந்து தனிப்பேட்டிக்கானவர்களைத் தேர்வு செய்ய ஸ்வாமி புறப்பட்டபோது பக்கத்திலிருந்த ஒரு டாக்டரைப் பார்த்து “என் பேஷண்டுங்ககிட்டே ரவுன்ட்ஸ் போயிட்டு வரேன்” என்றாராம்.
“காமன்ஸென்ஸ்தான் ரொம்ப அன்காமனா இருக்கு இல்லே?” என்றார் ஒருமுறை.
மேடைப் பேச்சிலே மிளிரும் அநேக ஹாஸ்ய வெடிகளில் ஒன்றாக ஒருமுறை, “முற்காலத்தில் காலையில் எழுந்ததும் அபிஷேகம், ஜபம் முதலியவை செய்வார்கள். அல்லது கோயிலுக்குப்போய் இவற்றைப் பார்ப்பார்கள். இப்போது ஹோட்டலுக்குப் போய் இட்லி லிங்கத்துக்கு சாம்பார் அபிஷேகம் செய்கிறார்கள்” என்றார்.
சாம்பாரைச் சொன்னவுடன் வெங்காய நினைவு வருகிறது. வெங்காயம் உண்பது மனத்துக்குக் கெடுதலா என்று கேட்ட ஒருவரிடம், “வெங்காயத்தையா? தின்பதா? அது திரிமூர்த்தி சம்பந்தப்பட்டதாச்சே!” என்று சொல்லித் தொடர்ந்தார். “கறிகாய்களெல்லாம் தங்களுக்குள் யார் உயர்த்தி என்று சண்டை போட்டுக் கொண்டிருந்தன. தீர்ப்புச் சொல்ல பிரம்ம –விஷ்ணு –ருத்ரர்களே வந்தார்கள். எத்தனை நாளானாலும் அழுகாத வெங்காயம்தான் உயர்ந்தது என்று அவர்கள் தேர்ந்தெடுத்து விட்டார்கள்.
அப்போது பிரம்மா தம் தாடியையே அதற்குத் தந்தார். இப்போதும் வெங்காயத்தின் மேலும் கீழும் தாடி மாதிரி இருப்பதைப் பார்க்கலாம். விஷ்ணு வெங்காயத்தைக் குறுக்குவாட்டில் வெட்டித் தம் சக்கரத்தை அதில் அழுத்தி அடையாளமிட்டார்; நெடுக்குவாட்டில் நறுக்கி அதில் தம்முடைய சங்கைப் பதித்தார். அதனால்தான் இப்போதும் வெங்காயத்தைக் குறுக்கே நறுக்கினால் சக்கராகாரமாகவும், நெடுக்கே வெட்டினால் சங்கு ரூபமாகவும் இருக்கிறது. ருத்ரர் அதற்கு ஒரு வரம் தந்தார். ‘ருத்ரர்‘ என்றால் அழ வைக்கிறவர் என்று அர்த்தம். ‘என் மாதிரியே நீயும் உன்னை நறுக்குகிறவர் கண்ணிலிருந்து ஜலம் கொட்டும்படிப் பண்ணுவாயாக‘ என்பதே அவ் வரம். இப்படித் திருமூர்த்தித் தொடர்புள்ள வெங்காயத்தைச் சாப்பிடலாமா?” என்றார்.
திரிமூர்த்தி விஷயமாக இன்னொன்று: ஓர் அயல் நாட்டவர், “பரிபாலிக்கும் விஷ்ணு அவதாரமாக உங்களைச் சொல்லும்போதே ஸம்ஹாரம் செய்யும் சிவனாகவும் சொல்வது எப்படி?” என்று வினவினார். ஸ்வாமி கணமும் யோசியாமல் பக்கத்திலிருந்த ஒரு செடியை அவருக்குக் காட்டிச் சொன்னார்: “ஸ்வாமியென்ன? நீ கூடத்தான் இந்தச் செடியை வளர்க்கும்போது பிரம்ம –விஷ்ணு –ருத்ரர்களாக இருக்கிறாய்! விதைக்கும் போது பிரம்மா. ஜலம் விடுகிறாய் பார், அப்போது விஷ்ணு. கீழே இருக்கும் களையைப் பிடுங்குகிறாயே, அப்போது ருத்ரன்.”
மும்மூர்த்திகளைப் பற்றியே மூன்றாவதாக இன்னம் ஒன்று. பிரசாந்தி நிலய மைய மாளிகையில் அப்போது பெயின்ட் அடித்துக் கொண்டிருந்தார்கள், பக்கத்தில் கார்ஷெட் கட்டப்பட்டுக்கொண்டிருந்தது; வாசற்புறத்தில் சாந்தி வேதிகா முதலியன இடிக்கப்பட்டு வந்தன. “நான் முத்தொழில் பண்ணுவதைப் பார்த்தாயாடா?” என்று அணுக்கத் தொண்டரிடம் பெருமைப்பட்டுக் கொண்டார் ஸ்வாமி! கார்ஷெட் கட்டுவது ஸ்ருஷ்டி; பிரசாந்தி மந்திரத்தைப் பெயின்ட் செய்வது பரிபாலனம்; சாந்தி வேதிகா இடிப்பது ஸம்ஹாரம்!
ஒருமுறை பேட்டியின்போது ஸ்வாமியிடம் சொன்னேன்: “சாதாரணமாக, ‘பகவானே, நாங்கள் எத்தனையோ பக்தி பண்ணியும் உன் அருள் கிடைக்க வில்லையே!’ என்று வருந்துவதே வழக்கம். ஆனால் ஸ்வாமி விஷயத்திலோ இதை மாற்றி, ‘நீங்கள் எத்தனையோ கிருபை பண்ணுகிறீர்கள், அப்படியும் பக்தி வரவில்லையே‘ என்று சொல்ல வேண்டியதாகிறது. நீங்கள் செய்யும் அநுக்ரஹத்துக்கு எங்கள் பக்தி போதவே போதாது, ஸ்வாமீ!”
உடனே ஸ்வாமி ஸ்வாமியாக இல்லாமல் உரிமைப்பட்ட உறவினராகப் பேசினார். ஒருத்தர் பக்தி பண்ணினால் அதற்குப் பரிவர்த்தனையாகத்தான் தாம் கிருபை பண்ண வேண்டுமா என்று அந்த தயாளு நினைத்து, “அப்டில்லாம் சொல்லக்கூடாது. ஸ்வாமி வேறே, நீங்கள்ளாம் வேறேயா?” என்றார். சற்று நேரத்துக்குப்பின், “நமக்கு பக்தி குறைச்சல்னு நினைக்கிறதும் ஒரு தினுசில் நல்லதுதான் நமக்குத்தான் ரொம்ப பக்தி இருக்குன்னு அஹம்பாவப் படறதைவிட” என்றார்.
விடைபெறும் சமயத்தில் தமது பரம நளினக் கோலமாக விபூதிப் பொட்டலக் கூடையை விநோதர் எடுத்து வர, “ஸ்வாமி, பல பேருக்குப் பிரஸாதம் தரணும். அதனாலே கொஞ்சம் தாராளமா…” என்று கையை நீட்டினேன்.
ஸ்வாமி பூவாகச் சிரித்துக்கொண்டு, “கொஞ்சம் தாராளம் என்ன? ஸ்வாமி எல்லாத்திலேயுமே ரொம்பத் தாராளம்தான்! பிடி கர்சீஃபை!” என்றார்.
கைக்குப் பதில் கர்சீஃபை விரித்து நீட்டினேன். வள்ளலின் ஸ்வர்ணக் கை அள்ளி ஒரு குத்து, இரண்டு குத்து, மூன்று குத்து விபூதிப் பொட்டலங்களைக் கைக் குட்டையில் வர்ஷித்தவுடன் அதுவும் போதாமல் குட்டையாகிவிட்டது.
பிடி அவலைத் தன் வாயில் போட்டுக்கொண்ட கண்ணனின் வண்மையுடன், பிடிப் பிடியாகத் திருநீற்றைக் கொடுத்த கொடையாளி நாலாவது குத்தும் அள்ளி விட்டார். மூன்றாவது அடிக்கு மஹாபலி இடம் தர முடியாமலானபடி இந்தப் பிடிக்கு இடம் காண எனக்குத் தெரியவில்லை.
திரிலோகமும் பெறும் ஸரஸ நகையுடன் ஸ்வாமி, “பார்த்தியா, இதுதான் நீ! ‘ஸ்வாமி நிறைய க்ருபை பண்றாரு நமக்குத்தான் பக்தி போறல்லே; ஸ்வாமி நிறையப் பிரஸாதம் தராரு நமக்குத்தான் கர்சீஃப் போறல்லே!’ என்றார்.