சத்ய சாய் பாபா – 22

22. அச்சம் தவிர்த்தாளும் அச்சன்

ற்ற இடர்ப்பாடுகள் இருக்கட்டும், அவற்றிலிருந்து ஸ்வாமி காப்பது இருக்கட்டும், இடரைக்கண்டு நாம் பயந்து இடிந்து விடுகிறோமே, இப்பயத்தை அவர் களைவதுதான் இவற்றினும் பெரும் காப்பு. மனிதன் தன்னுடைய பய உணர்ச்சியால் தன்னைத் தானே பாதித்துப் பதராக்கிக் கொள்வதுபோல் வெளி இடுக்கண் எதுவும் அவனைத் தாக்குவதில்லை. இப்பாதிப்பு நீக்கம் ஸாயியின் அநாயாஸ ஸாதிப்புக்களின் ஒன்று. ஸாயி பாபா என்றாலே முன் நிற்கும் வாசகம், “நானிருக்க பயமேன்?” தானே?

மிக மிக அஞ்ச வேண்டிய நிலையில் ஸ்வாமி அருளும் மனத்துணிவு அற்புதமானது. இக்காலத்தில் மக்கள் அஹங்கார வசத்தில் வர்க்கங்களாக பேதப்பட்டுப் பரஸ்பரம் பயமுறுத்திக்கொள்வதில் பயத்தின் உச்சிக்குப் போயிருப்பது எதுவெனில், சில கல்லூரிகளில் மாணவரிடம் கல்லூரி முதல்வர் காட்ட வேண்டியிருக்கும் அச்சம்தான்! இது விளையாட்டாகவோ, மிகைபடவோ சொல்வதில்லை. கலியின் கோலாஹலத்தில், ஆதிகாலத்தில் குருவிடம் பயபக்திக்குப் பெயரெடுத்த நாட்டில், இன்று, சில கல்லூரிகளில் இளரத்த மதர்ப்பிலே எதுவும் செய்யக்கூடிய முரட்டு மாணவர்களிடம் ஆசிரியர்கள் நடுங்க வேண்டியிருக்கிறது! தானாக அவர்களுக்கு இருக்கும் அடங்காத்தன்மை போதாதென்று அரசியல் வாதிகளும் அவர்களைத் தூண்டிவிட்டு தூபமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். எதிர்த்துக் கைபோட முடியாதஹை வோல்டேஜ்ஆக மாணவர்கள் டிமான்டுகளும் டெமான்ஸ்ட்ரேஷன்களுமாக இக் கலாசாலைகளைடெமன்லான்டுகளாவே ஆக்கியிருக்கிறார்கள். (இப்படியெல்லாமின்றி சாந்தமும் ஸாத்விகமும், கடமையும் கட்டுப்பாடும், அன்பும் பண்பும் அடக்கமுமாக நம் ஸ்வாமி கல்லூரிகளின் மாணவர்கள் இருக்கிறார்களே, இதுதான் அவரது அற்புத ஸாதனைகளில் தலையாயது எனலாம்.) இன்றுள்ள ஹீன தசையில், க்ஷணநிலையில், “ஸ்வாமி பயத்தை நீக்க வல்லவர்என்று சொன்னால், “எங்கே, அதற்கு உரை கல்லாக அவர் மேற்படி கல்லூரிகளில் ஏதாவதொன்றின் முதல்வரை மாணவர் தலைவருக்கு அஞ்சாதிருக்கும்படிச் செய்திருக்கிறாரா, சொல்லுங்கள்என்று கேட்பதாக ஆகியிருக்கிறது!

, இருக்கிறது இதற்கும் எடுத்துக்காட்டுக்கள்.

கல்லூரிகளின் பெயரைக் குறிப்பிடுவதை ஸ்தாபனத்தார் ஆக்ஷேபிப்பர் ஆதலால் பெயர் குறிப்பிடாமலே சொல்ல வேண்டியிருக்கிறது. ஸத்ய ஸாயியின் கோர்ட்டில் நின்று கொண்டு எழுதுவதால் இதன் உண்மையை யாரும் சந்தேகிக்கமாட்டீர்கள். ‘ஸநாதன ஸாரதிவாசகர்களுக்கு நன்கு பரிசயமான ஸ்ரீ எம்.வி. நாராயணமூர்த்தி ஸாக்ஷியம் பகருகையில் எதிர்க் கேள்விகள் எழுப்பமாட்டீர்கள்.

கல்கியவர்கள் எழுதியதுபோல், கலாசாலையைக் கலாட்டாசாலையாக மாற்றிய ரவுடிகளுக்குப் பெயரெடுத்த ஒரு கல்லூரியில் ஒரு ஸாயி பக்தர் ஆக்டிங் பிரின்ஸிபலாக நியமிக்கப்பட்டார். அந்தக் கல்லூரியில் முதல்வராக இருப்பதுபோல்ஆக்ட்செய்கிற (நடிக்கிற) பிரின்ஸிபல்கள்தான் உண்டே தவிர, நிஜத்தில் அங்கு முதல்வரின் ஸ்தானத்திலிருந்தது மாணவர்களேதான்! ஸ்டூடன்ட் யூனியனிடம், “எண்ணிக்கொள், போடுகிறேன்என்று தோப்புக்கரணம் போடாத பிரின்ஸிபல் அதோடு தொலைந்தார்! இப்படிப்பட்ட இடத்தில், “நிஜ பிரின்ஸிபல் ஸ்வாமியே அன்றோ?” என்று கருதும் பக்தர் பதவியேற்றார். ஸ்வாமியின் கருணைக் கவசமிருக்க அடங்காமைக்கும், அநியாய டிமான்டுகளுக்கும் அடிபணிவதில்லை என்ற உறுதியோடு செயல்படலானார். இதனாலேயே மாணவர் சங்கத்தின் உபத்திரவம் வலுத்தது. சங்கத் தலைவரான மாணாக்கர் பிரின்ஸிபலின் எதிரிலேயே பேராசிரியர் ஒருவரின் கன்னத்தில் அறைந்தார்நான் அவரை அறைந்தாலும் நீ என் மேல் கை வைக்க முடியுமா?” என்று இவரிடம் சவால் விடுக்குமுகமாக!

கை கொடுக்கும் நாதனிடம் முறையிட்டார் ஆக்டிங் முதல்வர். இதய அந்தரங்கத்திலிருந்து அரங்கனின் குரல் ஒலித்தது: “நான் இருக்க பயமேன்? ட்யூட்டியைப் பண்ணு. நடவடிக்கை எடு!”

அக் கல்லூரியின் சரிதத்தில் இல்லாத புது அத்தியாயமாக மாணவர் தலைவன் மீது முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டார். அந்த மாணாக்கரை அழைத்து, “இதோ பார்! ஒழுக்க நெறியை உடைத்தெறிந்து விட்டிருக்கிறாய். ஆசிரியர் ஒருவரை அடித்திருக்கிறாய். உன்னைஸஸ்பென்ட்செய்யாமலிருக்க என்னால் முடியாதுஎன்றார். அசாத்தியத் துணிவோடு இப்படிச் சொன்னார். சக பேராசிரியருக்கு இந்த மாணவர் நடத்தியதிரு ஆராதனையை இப்போது அவரது முழு கோஷ்டியினரும் சேர்ந்து தமக்கும் நடத்தலாம் என்ற சூழ்நிலையில், தம்முடைய கர்மயோக தர்மத்தைச் செய்வதே ஸாயிநாதன் ஆராதனை எனக்கொண்டு, தீரமாக நடவடிக்கைக்கு முனைந்தார்.

அப்போது ஸ்வாமி என்ன செய்தார் என்பதை யாரே அறிவர்! ஆனால் அந்த மாணவர் செய்ததை மட்டும் நாம் அறிவோம். திமிர்தண்டித் தாண்டவராயனான அவர் விக்கி விக்கி அழ ஆரம்பித்துவிட்டார்! தாம் செய்த தவற்றுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்!

முதல்வரைக் காத்ததோடு (அப்படிக் காப்பதற்காகவேதானோ?) முரடரையும் இளக வைத்துக் காத்து விட்டார் ஸ்வாமி.

அதேபோதில், ‘ஒரு வித்யாசாலை என்றிருந்தால் அங்கே ஜனநாயக ஸமத்துவம் எடுபடாது; ஆசிரியர் என்பவர் மாணவருக்கு மேல் அதிகாரமுள்ளவர்தான்என்ற நமது ஸநாதனக் கொள்கையை வலியுறுத்தும் பொருட்டு முதல்வரை ஒரேயடியாக இளக்கிவிடாமல் கெட்டிப்படுத்தினார். எனவே அவர் மாணவரிடம், “நீ குற்றமுணர்ந்து மன்னிப்புக் கேட்டதில் மகிழ்கிறேன். ஆயினும் இதுபோல் இனி நிகழாதிருக்கும்படிச் செய்ய நான் என் கடமைப்படி கண்டிப்புக் காட்டத்தான் வேண்டும். ஆகையால் உன் மீது ஸஸ்பென்ஷன் உத்தரவு பிறப்பிக்கத்தான் போகிறேன். நீ எழுத்து மூலம் மன்னிப்புத் தெரிவித்தாயானால், அதை உத்தேசித்து ஒரே நாளில் உத்தரவை ரத்து செய்துவிடுகிறேன்என்றார்.

இக்காலச் சூழ்நிலையில் நம்ப முடியாத பேச்சு! அதனினும் நம்பவொண்ணா விந்தையாக, “அப்படியே செய்யுங்கள்என்று அந்த மாணவர் சொல்லி, மன்னிப்புக் கோரிக் கடிதமும் எழுதிக் கொடுத்தார்!

அந்த ஒரு மாணவர் படிந்து வந்த போதிலும், மற்ற மாணாக்கர்கள் தமது லீடரான அவரை ஸஸ்பென்ட் செய்ததைப் பொறுக்காமல் கிளர்ச்சி செய்யக்கூடும்; அவரையும் மீண்டும் கிளறிவிடக்கூடும் என்று நமது பிரின்ஸிபல் கருதியதால், ஸஸ்பென்ஷன் ஆர்டரோடு, முன்னெச்சரிக்கையாக அன்று கல்லூரிக்கு விடுமுறை பிறப்பித்தார். மூடிய கல்லூரியைக்கூட முற்றுகையிடுவதிலும், கேரோ செய்து பிரின்ஸிபலின் பல்லைத் தட்டிக் கீழே வைப்பதிலும் எக்ஸ்பெர்ட்கள் அந்த மாண்வர்கள். ஆனாலும் என்ன ஆச்சரியம்! இந்த ஒரு மாணவரின் உட்புகுந்தது போலவே அத்தனை பேரின் உள்ளும் புகுந்து அவர்களது வெறித்தனத்தை ஸ்வாமி எப்படியோ சமனம் செய்திருக்கிறார்! ஒரு எதிர்ப்பு இல்லை, கோஷமில்லை! அமைதியாகச் சென்றது அந்நாள்.

மாணவர் மன்னிப்புக் கோரியதை முன்னிட்டு மறுதினமே ஸஸ்பென்ஷனை ரத்து செய்வதாக முதல்வர் அறிவித்தார். கல்லூரியும் திறக்கப்பட்டது. ஒரு தகராறும் இல்லாமல் மேற்கொண்டு காரியங்கள் நடந்தன.

மேலிடத்தார் பிரின்ஸிபலின் துணிவைக் கேட்டு அதிசயித்தனர். ரொம்பவும் மேலிடமான பாபாவை நம்பியே தாம் நடந்ததாகவும், தம்மால் எதுவுமில்லை என்றும் இவர் சொல்ல, “இந்தக் கல்லூரி மாணவர்களை இப்படிப் பதப்படுத்த வேண்டுமானால் உங்கள் பாபா ஈச்வர ஆதிபத்திய சக்தியே உள்ளவராகத்தானிருக்க வேண்டும்என்றார்களாம் அந்த நிர்வாகிகள்!

மனோவசியம் செய்ய மாட்டேன்என்னும் ஸ்வாமி இங்கே மாணவர் மனத்துட் புகுந்து மாற்றலாமா என்று எண்ணக்கூடாது. பரம பக்தர் ஒருவர் தர்ம நியாயத்துக்காகப் போராடி பாபாவையே சார்ந்து நிற்கையில் சரணாகத ரக்ஷணம் செய்யாமலிருக்க முடியுமா? “எல்லா தர்மங்களையும் விட்டுவிட்டு என்னை சரண் அடைஎன்கிற ஸாயி கீதாசார்யன் தன் தரப்பிலும் மற்ற எல்லா தர்மங்களையும் விட்டு சரணாகத ரக்ஷணம் புரிவான். அதுவுமன்றி, ஏதோ ஒரு ஸந்தர்ப்பத்தில், ஓர் அம்சத்தில் மட்டும் மாணவர் மனத்துள் புகுந்து அவர்களை அவர் நன்னெறியில் கொண்டு வந்ததைமனோவசியம்என்பது பொருந்தாது.

***

குண்டர்கள் என்கிறார்களே, அப்படிப்பட்ட படுகாலிகளுக்குத் தலைவராக இருந்தார் இன்னொரு கல்லூரியில் ஒரு மாணவர். ஆனால் அவர் படிப்பிலும் சிறந்து விளங்கினார். கல்லூரிக்கே சிம்ம சொப்பனமாயிருந்த அந்த ரவுடி மூன்றாண்டு பி.. படிப்பை முடித்த போது ஆசிரியர் குழாமும் கல்லூரி நிர்வாகத்தினரும் அடைந்த நிம்மதி அல்பாயுஸாகத் தேய்ந்தது மறுபடி எம்.. படிப்புக்காக அவர் அங்கேயே மனுப்போட்ட போது! ஸெலக்ஷன் போர்டுக்குத் தலைவராக இருந்த பிரின்ஸிபல் நம் பகவானின் பக்தர். குறிப்பிட்ட மாணாக்கரைப் பேட்டிக்கு அழைக்குமுன் போர்டின் மற்ற அங்கத்தினர் யாவரும் அவருக்கு அட்மிஷன் தரக்கூடாது என்றும், மீளவும் இரண்டாண்டு அவரது உருட்டல் புரட்டல்களுக்குத் தாங்களே வெற்றிலை தந்து வரவேற்கக் கூடாதென்றும் ஒருமுகமாகக் கூறினர்.

முதல்வர் தமது முதல்வரான ஸ்வாமியைப் பிரார்த்தித்து, “அப்பா, வழிகாட்டுஎன்று வேண்டினார்.

முன்னே கண்ட பிரின்ஸிபலிடம் மாணவருக்கு எதிராகத் தயங்காமல் நடவடிக்கை எடுக்கச் சொன்ன அதே ஸ்வாமி இப்போது இந்தப் பிரின்ஸிபலை மாணவருக்குச் சாதகமாக, போர்டின் ஏனைய அங்கத்தினருக்கு எதிராகப் போராடி, நடவடிக்கை எடுக்கச் சொன்னார். புத்திசாலித்தனத்தால் மேற்படிப்புக்கான தகுதி பெற்ற அம்மாணவரின் கல்வி முன்னேற்றத்தை மறுக்கக்கூடாது என்ற தர்மத்தின் மீதே பகவான் இப்படி ஆக்ஞாபித்தார். ஆனாலும் அந்த மாணவரைச் சேர்ப்பதால் ஏனையோருக்கு ஏற்படக்கூடிய இன்னல்களைக் கவனியாதிருப்பதும் தர்மமல்லவே! ஆகையால் அம்மாணவரிடமே அவரது குண்டர்போக்கை அன்போடு எடுத்துச் சொல்லி, அதை அவர் மாற்றிக் கொள்வதாக மனப்பூர்வமாக உறுதி கூறினாலே அட்மிஷன் தரும்படி முதல்வரை அந்தர்யாமி தூண்டினார். “நானிருக்க பயமேன்? அச்சத்திலன்றி அன்பிலே பொழுதை நிரப்புஎன்றார்.

அறாக்கட்டை மாணவரைப் பேட்டிக்கழைத்தார் முதல்வர். அன்பும், பரிவும், அதே போழ்தில் கடமையில் உறுதியும் தொனிக்க மாணவரிடம் பேசினார். கடைந்தெடுத்த குண்டர் என்பதாக அவர் பெற்றுவிட்டபிரஸித்தியை வருத்தத்துடன் எடுத்துக் கூறினார். சக மாணவர் ஒருவருக்கு உயிராபத்து ஏற்படக்கூடிய அளவுக்கு அவர் செய்திருந்த தாக்குதல் ஒன்றைக் குறிப்பிட்டுக் காட்டினார். “இப்படிப்பட்ட ஒரு மாணவரை நீ முதல்வராக இருந்தால் சேர்த்துக் கொள்வாயா, சொல்லு. உன் போக்கை நீ மாற்றிக் கொள்வதாக உறுதிமொழி தராவிடில், கல்லூரிக்கும் ஏனைய பல மாணவர்களுக்கும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நான் எப்படி உன்னை சேர்த்துக் கொள்வது?” என்றார்.

மாணவர், ‘ஃபயர்ப்ராண்ட்என்று புகழெடுத்தவர், ஆடாமல் அசையாமல் நின்றார். முதல்வர் அவரை அருகழைத்துத் தம் தோளோடு அணைத்து, சுவரிலே மாட்டியிருந்த ஒரு மஹானின் படத்தைக் காட்டினார். அம்மாணவரின் வீட்டாருக்கு அவர்தான் குரு. “நீ நல்ல பிள்ளைதான். ஏதோ அறியாமையில் இருந்து விட்டாய். போனது போகட்டும். உனக்கு உங்கள் குருவிடம் நம்பிக்கை இருந்தால் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள். இனிமேல் இவ்விதம் நடக்காதிருப்பதற்கான உறுதியைத் தருமாறு அவரிடம் பிரார்த்தித்துக்கொள். அவர் நிச்சயம் அருளுவார்என்றார்.

வைரம் பாய்ந்த மரம் வாழைக் குருத்தாகிறது! அதைவிட, மனத்தில் பிறர் பாலுள்ள வைரம் தீர்கிறதே, அதைச் சொல்ல வேண்டும்! வீம்பும், தீம்பும் செய்யும் வன்முறை மாணவர் தேம்பி அழுகிறார்!

தேர்வுக் குழுவின் ஏனைய அங்கத்தினர்களுக்குத் தங்கள் கண்களையே நம்ப முடியவில்லை அந்தக் காலாடி இளைஞர் முதல்வரின் காலடியில் விழுந்து கும்பிடும் காட்சியைக் கண்டபோது!

அவர்களும் ஏக மனதாக ஒப்புக்கொள்ள, அந்த மாணவர் ஜாம் ஜாம் என்று எம்..க்கு அட்மிஷன் பெற்றார். அதன்பின்அவரா இவர்?” என்று வியக்கும் வண்ணம் கல்லூரியிலேயே, படிப்பில் போலப் படிமானத்திலும் தலைசிறந்த ஒரு மாணவர் என்று பெயரெடுத்தார்.

காரிரும்பைத் தேன் கரும்பாக்குவார் நம் ஸ்வாமி இரும்பினும் இறுகிய அச்சமின்மையுடன் ஒரு முதல்வர் ஒரு முரடரை ஸஸ்பென்ட் பண்ண வைத்தார்: இன்னொரு முதல்வர் இன்னொரு முரடரை அட்மிட் பண்ண வைத்தார்.

இதில் இன்னொன்று கவனியுங்கள்: பிரின்ஸிபல் இம்மாணாக்கருக்குக் கல்லூரியில் அட்மிஷன் தந்ததோடு அவரை அவரது குருவிடமும்அட்மிட்செய்தாரே, அப்போது அந்த குருவே மாணவரின் பிரார்த்தனைக்கு நிச்சயம் அருளுவார் என்று சொன்னதைக் கேட்டோம். தாம் ஸத்ய ஸாயி என்கிற ரூபத்திலுள்ள தெய்வ தத்வத்தை பூஜிக்கிறோம் என்பதால் இந்த உருவத்திடமேதான் மற்றோரையும் சேர்த்தாக வேண்டுமென்றில்லாமல் எவரெவர் எந்த குரு உருவில் அந்த தெய்வ தத்வத்தை வழிபட்டாலும் அது அருள் புரியும் என்ற உண்மையைக் கல்லூரி முதல்வர்அட்மிட்செய்து கொண்டதிலும் ஒரு நுட்பமான அச்சமின்மை இருக்கிறது!

***

பாபாவின் பக்தர்களுள் பார்வையிழந்தவரான ஒரு கல்லூரி விரிவுரையாளர் இருக்கிறார். அறிவோடு ஆன்மிகத்திலும் தேறிய இந்த அந்தகர் வேலைக்கு விண்ணத்தபோது நியமனக் குழுவினர் இவரிடம், “உங்களுக்குத் தகுதி இருப்பது உண்மை. ஆனால் இக்கால மாணவர்களைக் கண்ணற்ற நீங்கள் எப்படிக் கட்டி மேய்க்க முடியும்?” என்று கேட்டார்களாம். அவர் உறுதியோடு மறுமொழி சொன்னாராம்: “மாணவர்களிடம் பயப்படுகிற மற்றவர்களுக்கில்லாத ஒரு பலம் எனக்கிருக்கிறது. அந்த ஒன்றான பக்தி விச்வாஸமே எனக்குத் தைரியத்தை தந்திருக்கிறது. அதோடு, நான் மாணவர்களுக்கு அன்பே செய்வேன். ஆகையால் அவர்கள் எவ்வித ரௌடித்தனமும் செய்யக்கூடும் என்ற அச்சம் எனக்கில்லை.”

அவருடைய கண்ணில் ஒளி இல்லாவிடினும் வாக்கிலிருந்த ஒளியைப் பார்த்து நியமனக் குழுவினர் அவரை வேலைக்கு எடுத்துக் கொண்டார்கள். இப்போது அவர் ஆசிரியப் பொறுப்புப் பெற்று ஆண்டுகள் பல ஓடிவிட்டன. முதலிலிருந்த கல்லூரியிலிருந்து பல இடங்களுக்கு மாறியிருக்கிறார். ஆனாலும் மாறாமல் உள்ள அவரது பக்தியால், அன்பால், அச்சமின்மையால் இதுவரை அவர் மாணவர்களிடம் ஒரு தகராறிலும் மாட்டிக் கொண்டதில்லை. அது மட்டுமின்றி, அவர் எந்தக் கல்லூரியில் இருந்தாலும் அங்கு மாணாக்கர்களுக்குஅபிமான ஆசிரியராக இருக்கிறார்.

***

ச்சமின்மை என்பது முரட்டு சுபாவத்தில் எழும் ஒரு குணமாக இருந்தால் பயனில்லை. பயம் இல்லாமல்தாங்கள் எது வேண்டுமாயின் செய்யலாம்என்று அநேக முரடர்கள் இருப்பது ஒரு சிறப்பா என்ன? ஆஞ்ஜநேய ஸ்வாமியிடம் திகழ்ந்தாற்போல, அஞ்சா நெஞ்சாமென்பது ஈச்வர பக்தியோடு, ஸகல ஜீவராசிகளிடமும் அன்போடு, அடங்கிக் கிடக்கும் விநய ஸம்பத்தோடு சேர்ந்து விளங்க வேண்டும். மேலே நாம் திருஷ்டாந்தமாக பார்த்த ஸாயி பக்தர்கள் இப்படிப்பட்டவர்கள்தான். முன்பு கண்டோமே, ஃபில்லிஸ் க்ரிஸ்டல் என்ற ஒருத்தியை ஹைஜாக்கர்களிடமிருந்து ஸ்வாமி காத்த நிகழ்ச்சி அப்போது, முதலில் அவளைப் பிரேமை மயமாக்கி, அவளுடைய அச்சத்திலிருந்தே அவளைக் காப்பாற்றியிருக்கிறார். கொல்ல வந்த கொடியோர்மீது அன்பு அலைகளை வீசுமாறு பகவான் அவளைப் பணித்தது நினைவிருக்கும். அப்போது அவள் இருந்த அச்சமறியா உச்சநிலையை அவளே வியந்து கொள்கிறாள்! நட்ட நடு ஆகாசத்தில், பத்தாயிரம் அடி உயரத்தில் நிர்க்கதியாக உள்ள தங்கள் விமானத்தை இந்த ஹைஜாக்கர்கள் தூள் தூளாக்க முனைந்திருக்கிறார்களே, பெண்ணாகப் பிறந்த தான் இப்போது பயப்பட அல்லவா வேண்டும் என்று அவள் நினைத்துங்கூட, அவள் வலிந்து வரவேற்றுப் பார்த்தாலும் கூட, பயம் அவளிடம் வர மறுத்துவிட்டதாம்! அபய ஸ்வாமியின் அடியிணையில் அடங்கி விழுபவர்களிடம் பயமே பயப்பட்டுக்கொண்டு ஓடுகிறது!

அபய ஸாயிதான். பார்த்தால் பதினெண் பிராயப் பெண்ணெழிலோடு கூடிய மிருதுள ஸ்வாமி மலை குலைந்தாலும் நிலை குலையாத அஞ்சா நெஞ்சராக்கும்! மானுடச் சட்டை பூண்டு அவர் செய்கிற லீலா நாடகத்திலே ஆனந்தஸாயி சோகஸாயி ஆவதுண்டு; பிரேமஸாயி கோபஸாயி ஆவதுண்டு; ஆரோக்யஸாயி வியாதிஸாயி ஆவதும் உண்டு எனப் பார்த்தோம். ஆனால் அவர் எப்போதும் அபய ஸாயியாகவேதான் இருக்கிறாரே தவிர, ஒரு வேஷத்துக்காகக்கூட பயமுற்ற ஸாயியாகத் தம்மைக் காட்டிக் கொண்டதில்லை! அபயம்தான் அத்வைத லக்ஷணமாக உபநிஷதம் கூறும் நிலை! தனக்குச் சிறிதேனும் அந்நியமாக ஒன்று இருக்கிறது என்னும் போதுதான் அங்கே பயம் உண்டாக முடியும் என்கிறது மறைமுடி. நானிருக்க பயமேன் என்றே சொல்லுவார்
நாடி வந்தோரைக் காத்திடுவார்.

என்ற பஜனை வரிகளை ஒரு குருவாரத்தில் கேட்கும்போது பகவான் இப்படித்தான் ஒலி கடந்த உள்மொழியில் அத்வைத விளக்கம் தந்தார். “நான் இருக்க பயமேன்?” என்பதிலுள்ளநான்ஷீர்டி மசூதியிலோ, பர்த்திப் பிரசாந்தியிலோ உள்ள ஒரு ரூபமல்ல. எல்லா ரூபமும் பிறக்கும் அரூபமானஅஹம்தான் அது. நம் அகத்தேயே உள்ள அஹம். அந்த ஏகத்தைத் தொட்டுவிட்டால், அதற்கு அந்நியமாக ஏதுமில்லாமற் போய், பிறிதொன்றை வைத்தே பிறக்கும் பீதி உணர்ச்சி போய்விடும்.

அப்படி அத்வைதமாகப் போக முடியாவிட்டால், ஸ்வாமியிடம் பயபக்தி செய்தாலே மற்ற எல்லோரிடமும் அபய அன்பு உண்டாகிவிடும்.

இந்த அச்சமறியா அன்புப் பெருக்குக்கு அரிய உருவகமாக டிம்மி என்ற நியூயார்க் இளைஞரைச் சொல்லலாம். அம்மாநகரில் குடிகாரர்களும், கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும், காமுகர்களும் நிறைந்த ஒரு மிக மிகப் பின்தங்கிய சேரிக்கு அஞ்சாமல் செல்கிறார் டிம்மி, தம்மைப் போன்ற வேறு சில ஸாயி தாஸர்களைக் கோஷ்டி சேர்த்துக்கொண்டு. பரம அன்போடு நூற்றுக்கணக்கான ஸ்வாமிடாலர்கள் வாங்கிச் சென்று அந்தக் கடையர்களுக்கு, கசடர்களுக்கு, கயவர்களுக்கு அணிவிக்கிறார்; ரொட்டி, துணிமணி, காலணி முதலியன சேகரித்துச் சென்று வழங்குகிறார்; ஆபாஸப் பேச்சே செறிந்த அங்கே பஜனை நாதத்தைப் பரப்புகிறார்; கீழ்த்தர ஸினிமாக்களே அறிந்த அவர்களுக்கு ஸ்வாமி ஜயந்தி, சிவராத்ரி முதலியமூவிகளைக் காட்டி அவ்விதயங்களைமூவ்செய்கிறார்.

Black Harlen என்பதாகப் பெயரிலேயே கருமை கொண்ட பகுதியில் ஒரு பள்ளி. அதில் படிப்பவர்களை அதாவது படிக்காதவர்களை மாணவர் என்பதைவிடக் குட்டிப் பிசாசுப்படை என்பதே பொருத்தம். அவர்கள் மீதும் படையெடுத்தது டிம்மி குழுவாகிய அச்சம் காணா அன்பின் தேவசேனை. பிசாசுகளிடை நிருத்தமிடும் அன்புச் சிவமாக அவர்களிடையும் திரைப்பட உருவில் நடமாடினார் பர்த்திநாதர்.

ஓராண்டு அப்பள்ளியிலிருந்து விலகியிருந்த ஓர் ஆசிரியை மறு வருடம் அங்கு சென்றபோது, வேதாள கணத் தலைவனாகவே இருந்த ஒரு மாணவனைப் பற்றி விசாரித்தாளாம். அவன் பேயுலாவும் வீடு எனப்பட்ட ஒன்றில் வசித்து வந்தான். இதற்கு அவனுடைய பேய்த்தனம் மட்டும் காரணமில்லை. பரம ஏழைமையும்தான் காரணம். பாவம், வறுமையின் கொடுமையேதான் மனிதரையும் அநேக சமயங்களில் கொடியவராக்கி விடுகிறது! அவர்களை இனியராக்கத்தான் டிம்மி போன்றோரின் அச்சமறியா அன்புத்தொண்டு தேவைப்படுகிறது. ஆசிரியை விசாரித்ததற்கு என்ன விடை சொன்னார்கள் பார்க்கலாம். “அவனா? இங்கே ஸாயி பாபா என்பவரைப் பற்றி ஒரு ஃபிலிம் ஷோ போட்டுக் காட்டினார்கள். அதைப் பார்த்த பின் அவன் மாறிப்போய் அவரை நேரிலேயே பார்க்க வேண்டும் என்று இந்தியாவுக்குப் போயிருக்கிறான்!”

ஒருத்தரின் அஞ்சாமை அவருக்கு ஆன்ம ஸாதனையாக இருப்பது மட்டுமின்றி, இன்னொருத்தரை உயர்த்தவும் எப்படிப் பயனாகிறது பார்த்தீர்களா? அடங்கிய பக்தர்களின் அஞ்சாமையே அடங்காப் பிடாரிகளுக்குத் தெய்வத்திடம், தர்மத்திடம் அச்சத்தை உண்டாக்குகிறது! உயர் நிலைக்குப் போய் விட்டாலோ தர்ம ரூபமான தெய்விகமே தன்னியல்பாகி, அச்சமென்பதே தெரியா ஸ்வச்சமான அன்பாகிவிடும்!