சிருஷ்டியின் சிறப்பு புஷ்பம். வசந்தத்தில் மலரும் செடியின் வாழ்வில் தான் பழுத்துப் பலனளிக்கும் தருணத்தைவிடத் தன் ஜீவன் பூரித்து மலரும் நேரமே சிறந்தது. மலர்ச்சியே மணத்தின் பிறப்பிடம். அதனால் மலர், இறைவனுக்குகந்த சமர்ப்பணம் ஆகிறது. இறைவனை அடைய, அவன் அருளுடன் ஜீவனுள்ள தொடர்பைப் பெறப் புஷ்பம் உரிய கருவியாகிறதால் புஷ்பாஞ்சலி வழிபாட்டு முறைகளில் சிறப்பிடம் பெறுகிறது.
அறிவுக்குச் சிறப்பைத் தேடித் தருவது நினைவு. செல்வத்தின் சிறப்பு அதனைப் பெற்றவரின் உதாரகுணத்தால் வருகிறது; சிறந்த பாடகருக்கு மேலும் சிறப்பை அளிப்பது குரலினிமை. அதுபோல் ஓரிடத்தில் சூழலை உயர்த்தி, சிறப்புறச் செய்யும் தன்மையுடையது மலர். ஒரு திருமணத்தில் மலர்களை அளவுகடந்து பயன்படுத்தினார்கள். அலங்காரத்திற்காகச் செய்த ஏற்பாடு அது. திருமணத்திற்கு வந்தவர்கள் எல்லோரும் இங்கு வந்தபின் சந்தோஷம் உள்ளிருந்து பொங்கிவருகிறது என்றார்கள். பொதுவாக சந்தோஷமான சூழ்நிலையுள்ள திருமண விழாவைப் பொங்கிவரும் சந்தோஷச் சூழலாகச் செய்தது அங்குப் பயன்படுத்திய அபரிமிதமான மலர்கள். ஒரு சிறப்பான தியான மண்டபத்தில் வழக்கத்திற்கதிகமாக புஷ்பங்களைக் கொணர்ந்தால், தியான நிலையே உயர்வது தெரியும். மலர்கள் ஜீவனும், ஜீவனில் துடிப்பும் உள்ளவை. எனவே இருக்கும் நிலையையே உயர்த்திக்காட்டும் திறன் உடையவை அவை.
படிப்பு, பணம், பதவி எளியவனுக்கு வந்துவிட்டால் அவனுக்கு இல்லாத மரியாதை, அந்தஸ்து எல்லாம் வந்துவிடும். இல்லாத மரியாதையை உற்பத்தி செய்யும் திறன் இவற்றுக்குண்டு.
சிறப்பான பள்ளி மாணவர்களுக்குள்ள அறிவைப் பரிமளிக்கச் செய்யும். அறிவேயில்லாத மாணவனுக்கு அறிவைக் கொடுக்கும் திறனுடையதன்று பள்ளி. மங்கலான கண்பார்வையைத் தெளிவுப் படுத்தும் திறனுடையது கண்ணாடி. இல்லாத பார்வையை ஏற்படுத்தும் திறன் அதற்கில்லை. டெலஸ்கோப்பு, பள்ளி, மூக்குக்கண்ணாடி போன்றவை சிறந்த கருவிகள். இருக்கும் திறனை உயர்த்தும் தன்மையுடையவை. படிப்பு, பணம், பதவி, ஆகியவை இல்லாத மரியாதையை ஏற்படுத்தக்கூடியவை. இந்த இரண்டு திறன்களும் உடையவை புஷ்பங்கள். நமக்குள்ள திறனை அதிகப்படுத்தும் கருவியாகவும், இல்லாத அம்சங்களை உற்பத்தி செய்யும் சிருஷ்டிகர்த்தாவாகவும் செயல்படும் தகுதியுடையவை பூக்கள். கருவியாகச் செயல்படும் திறன் அதிகமாகவும், சிருஷ்டிகர்த்தாவாகச் செயல்படும் திறன் குறைவாகவும் காணப்படுகிறது. நம் ஜீவனை மலரச்செய்யும் புஷ்பங்கள், வாழ்க்கையில் புதிய திறனுக்கு வித்துகளாகவும் ஓரளவு செயல்படக்கூடியவை. அன்னை அனைத்திலும் புதியவர். மலர்களைப் பாராட்டியவர். புதுமையான அன்னையை நம் வாழ்வில் மலர்கள் எந்தவிதமாகப் பிரதிஷ்டை செய்கின்றன என்பதை அறிவிப்பதே இக்கட்டுரை.
அன்னை என்பவர் தெய்வங்களுக்கெல்லாம் தாயான பராசக்தி. இறைவனுக்கும், சிருஷ்டிக்கும் இடையே நின்று சிருஷ்டியில் புதிய காரியங்களை நிகழ்த்துபவர். தெய்வங்களை நாம் நாடிப்போனால் அவர்கள் கேட்டதைக் கொடுப்பார்கள். நாடும் முறை நாம் அறிந்த விரதம், தவம் ஆகும். அன்னை நம்மை நாடி வருகிறார். இறை ஒளியை நம்மில் நிலைநிறுத்த தாமே முயல்கிறார். மனிதன் தன் கர்மத்தின் பிடியில் இருக்கிறான். அன்னையை ஏற்றுக்கொண்டால், கர்மத்தையும் அழிக்கின்றார். மனிதன் அறியாமையில் உழல்கிறான். அன்னையை ஏற்றுக்கொண்டால், அறியாமையை அழித்து, அறிவை ஏற்படுத்துகிறார். சுபாவத்தின் பிடியில் இருக்கிறான் மனிதன். தானே சுபாவத்தின் பிடியிலிருந்து விலக முயன்றால் அன்னை அவனை இறைவனிடம் இட்டுச்செல்கிறார்.
அன்னையை ஏற்றுக்கொள்ள நம்பிக்கை தேவை. அதிகமாக அன்னையை ஏற்றுக்கொள்ள ஆர்வம் வேண்டும். பூரணமாக அவரையடைய சரணாகதி அவசியம். தியானம் அன்னையிடம் அழைத்துச்செல்லும், அதற்கு மனம் நிலைப்பட வேண்டும். தூய்மை அன்னையை நம்மிடம் கொண்டுவரும். அதற்குப் பெருமுயற்சி தேவை. அன்னை வந்தால் அருள் வரும். அருள், பொருளைக் கொடுக்கும்; ஆர்வத்தையும் அளிக்கும்; உயர்ந்த சரணாகதியையும் உற்பத்தி செய்யும். இருக்கும் சரணாகதியை அதிகப்படுத்தும். அன்னையை அடையவும், அவர் அருளைப் பெறவும் உள்ள வழிகள் பல. இடையறாத நினைவு அவற்றுள் தலையானது. “இடையறாத நினைவு” என்று ஒரு மலருண்டு. இம்மலரைக் கையில் எடுத்தால், தானே அன்னை நினைவு வரும், வந்த நினைவு இடையறாது திரும்பத் திரும்ப தானே வரும். இல்லாத அன்னை நினைவை உற்பத்தி செய்யவும், இருக்கும் நினைவை இடையறாது செயல்படச் செய்யும் திறனும் இம்மலருக்குண்டு.
பக்தன் எளிய கிருகஸ்தனானால், அவனால் உயர்ந்த தியானம், நிஷ்டை, சிறந்த சமர்ப்பணம், ஸ்ரீ அரவிந்தருடைய நூல்களைப் பயிலுதல், இலட்சியச் சேவை, இடையறாத நினைவு இவற்றை மேற்கொள்ளுதல் சிரமம். மேற்கொண்டாலும் சீக்கிரத்தில் அவை குறைந்து, மறைந்து விடும். குடும்ப வாழ்வும், இறையுணர்வும் எளிதில் ஒன்றிப்போகக்கூடியவையல்ல. குடும்ப வாழ்விலிருந்து இடையறாது தெய்வத்தை நினைப்பவன், நாரதரைவிட நாராயணனுக்கு உகந்தவனாகிறான். தியானமும், பக்தியும், சமர்ப்பணமும், சேவையும், நினைவும் கொடுக்கக்கூடிய ஆன்மீகப் பலனையும், அதனால் விளையும் அன்றாடச் சிறப்புகளையும் கொடுக்கக்கூடியவை மலர்கள். மலர்களைச் சேகரம் செய்து, அன்னைக்குச் சமர்ப்பித்து, அதனால் அருளையும், பொருளையும், மனநிம்மதியையும், சிறந்த குடும்ப வாழ்க்கையையும், சுமுக உறவையும், உடல் நலத்தையும் பேரளவில் பெறலாம்.
கல்லூரியில் பேராசிரியர் நடத்தும் பாடத்தைப் புரிந்துகொள்ளும் மாணவன் சிறப்பானவன். புரியாவிட்டால் பலன் இல்லாமல் போகிறது. புரியாத மாணவன் கடைத்தேற ஒரு வழியுண்டா? புரியாவிட்டாலும் மனப்பாடம் செய்தால், புரிந்த மாணவனுக்குக் கிடைக்கும் பலனில் ஓரளவு பெறலாம் என்று ஒரு நிலையுண்டு. மனப்பாடம் செய்வதையும் மனதில் வாங்கிக்கொள்ளாமல் செய்தால் பாஸ் செய்துவிடலாம். மனப்பாடம் செய்வதால் பாடம் புரிவதுண்டு. புரிந்துகொண்டு மனப்பாடம் செய்வதுண்டு. மலர்கள் மனப்பாடத்திற்கு ஒத்தவை. மாணவன் மனப்பாடம் செய்ய எடுக்கும் முயற்சியை பக்தன், மலர்களைச் சேகரம் செய்ய எடுத்தால், மலர்களுக்குரிய பலன் கிடைத்துவிடும். ஆர்வமாகச் செயல்பட்டால், இல்லாத திறமைகளும் உற்பத்தியாகும். ஊன்றி ஈடுபட்டால், மலர்களுக்குரிய தன்மை நமக்கே ஏற்படும். ஒருவகையில் எளிய முறை. சிறப்பாகச் செயல்பட்டால் பெரிய பலனை அளிக்கக்கூடியது; முறையை ஏற்றுக்கொண்டால், அதற்கான முயற்சியைக் குறைவற மேற்கொள்ள வேண்டும்.
ஒரு தாலுக்கா ஆபீஸ் குமாஸ்தா மிகச்சிரமப்பட்டு முதல் பிள்ளையை B.A. படிக்கவைத்தார். பையன் பாஸ் செய்துவிட்டான். ஒரு வருஷம் கழித்து ஒரு குமாஸ்தா உத்தியோகம் கிடைத்தது. அடுத்த பையன் S.S.L.C வர இரண்டு வருஷங்கள் இருக்கும் பொழுதே முடித்துக் கொண்டான். சர்க்கார் டிபார்ட்மெண்டில் கூலி வேலைக்குப் போனான். அடுத்த பையன் அதைவிட ஒரு வருஷம் குறைவாகப் படித்தான். மற்றொரு டிபார்ட்மெண்டில் மேஸ்திரியானான். அவருக்கு இருபெண்கள். மூத்த பெண்ணைப் பத்திரம் எழுதுபவருக்குத் திருமணம் செய்துவைத்தார். அடுத்த பெண்ணைக் கிராமத்தில் வசதியான குடும்பத்தில் படிக்காத பிள்ளைக்கு மணம் செய்துவைத்தார். மேஸ்திரிக்குத் தம்பியைக் கிராமத்திலுள்ள அக்கா படிக்கவைத்து, M.A. பட்டம் பெறவைத்து, கல்லூரி ஆசிரியரானபின் தம் பெண்ணைத் திருமணம் முடித்துவைத்தார்.
மற்றொரு தாலுக்கா ஆபீஸ் குமாஸ்தா. ஏழைக் குடும்பம். தினமும் போகவர 10 மைலுக்குமேல் நடந்து படிப்பைS.S.L.C.-இல் முடித்தவர். தம் முதல் பையனை என்ஜினீயராகவும், ஒரு பெண்ணை M.SC.யாகவும் படிக்க வைத்தார். பெண்ணைக் கல்லூரி ஆசிரியருக்குத் திருமணம் செய்துவைத்தார். இரண்டாம், மூன்றாம், நான்காம் பிள்ளைகளை M.A.,M.SC., படிக்கவைத்து மத்திய சர்க்காரிலும், மாநிலச் சர்க்காரிலும் வேலை வாங்கிக் கொடுத்தார். தாம் தாசீல்தாராக ரிடையர் ஆனார்.
இரண்டு குடும்பங்களும் ஒரே சந்தர்ப்பங்களை உடையவை. முதலாமவர் குமாஸ்தாவாக ரிடையராகி ஒரு பஸ் முதலாளியிடம் மேனேஜரானார். அடுத்தவர் தாசீல்தாராக ரிடையராகி 20 கோடி கம்பெனியில் தலைமை ஆபீஸ் அதிகாரியானார். இருவருக்கும் இருந்த சந்தர்ப்பங்கள் ஒன்றே, பொறுப்பும் அநேகமாக ஒன்றே. முயற்சி வேறு. பலன் முயற்சிக்கு ஏற்ப மாறுபடுகிறது. ஒரே சந்தர்ப்பங்களில் வளரும் குடும்பங்கள் முயற்சிக்குத் தகுந்தாற்போல் பலன் பெறுகின்றன. மலர்களுக்கு அதே திறன் உண்டு. முயற்சி ஒரு குடும்பத்தை உயர்வுக்குக் கொண்டுபோவதைப்போல் ஒரு குடும்பத்திற்கு பயன்படும் அத்தனை மலர்களையும் சேகரம் செய்து அன்னைக்குச் சார்த்தினால், அதேபோன்ற அன்னையை வழிபடும் மற்றொரு குடும்பத்தைவிட அதிகமான அளவுக்கு முன்னேறுவார்கள்.
பல ஆண்டுகளாகத் தாயும் மகளும் பேசாமலிருந்த குடும்பத்தில் சுமுகம் என்ற மலர் புகுந்து சில நாட்களில் நிலைமை மாறி, நல்லுறவு ஏற்பட்டது. 60 வயதைத் தாண்டிய செல்வருக்கு எந்த டானிக்கும் கொடுக்க முடியாத தெம்பு (Energyசாமந்தி மலரை அன்னைக்குச் சார்த்தியதால் ஏற்பட்டது. கலவரத்தை ஊடுருவி நூறு மைல் பயணம் செய்யத் தீர்மானம் செய்தவருக்குக் காகிதப் பூ 100 மைல் தூரத்திலும் கலவரத்தைக் கண்ணுக்கெட்டாத ஒன்றாக விலக்கிவிட்டது. 6 தொழில்களை திவால் செய்து அவல நிலையிலிருந்த ஒருவருக்கு நாகலிங்கப் பூ ஆரம்பத்தில் 500 ரூபாய்
சம்பளத்தையும், ஓராண்டில் 2000 ரூபாய் மாதவருமானத்தையும் கொடுத்தது. ரோட்டில் நடக்கும்போதே தூங்கிவிடக்கூடிய (Sleeping Sickness) வியாதியுடையவருக்கு (Mental opening) விழிப்பானமனம் என்ற மலர் இரவு 12.30 வரைக்கும் விழிப்பைக் கொடுத்தது. 10 நிமிஷத்திற்குமேல் தியானம் செய்தறியாதவர்க்கு (God Head) இறைமுடி என்ற மலர் 1 மணி நேரம் சிறப்பான தியானத்தைக் கொடுத்தது.
அன்னை சுமார் 800 பூக்களுக்கு அவற்றின் தன்மையை விளக்கும்வகையில் பொறுமை, செல்வம், அழகு, அறிவு, அவதாரம், ஞானம், ஆரோக்கியம் என்பன போன்ற பெயர்களைச் சூட்டியிருக்கிறார்கள். ஒரு குடும்பத்தில் சுமார் 30, 40 மலர்களைப் பயன்தரத்தக்க வகையில் வழிபாட்டுக்கு உபயோகிக்கலாம். (Concentration)மனத்தை நிலைப்படுத்துதல் என்ற மலரைக் கையில் எடுத்தவுடன் தலையில் எண்ணங்கள் குவிவது தெரியும். பூவரசம் பூவுக்கு உடல் நலம் என்று பெயர். அதை 10, 12 நாட்கள் பயன்படுத்திய பின்னரே பலன் லேசாகத் தெரிய ஆரம்பிக்கும். பாதுகாப்பு என்பது காகிதப் பூவின் பெயர். இதன் தன்மையை நாம் உணர முடிவதில்லை. கையிலிருந்தால் பாதுகாப்பு வேண்டிய சமயத்தில் அது தன் வேலையைச் செய்வதைப் பார்க்கும்பொழுது ஆச்சரியமாக இருக்கும். அடிக்கடி பர்ஸைத் தொலைக்கும் பழக்கம் உள்ளவர் பர்ஸிலே இந்தப் பூவை வைத்திருந்தால் பல மாதங்கள் கழித்து, ஒரு முறையும் பர்ஸ் தொலையவில்லை என்று தெரியும். களைப்பான நேரத்தில் கையில் சாமந்தியை எடுத்தால் உடல் தெம்பு பாய்வது தெரியும். நமக்குத் தெரிந்தாலும், தெரியாவிட்டாலும், மலரும் அதன் திறனும் அன்னையின் அருள் நம் வாழ்வில் செயல்படுவதை அதிகரிக்கும்.
ஒரு குடும்பத்தில் வயதுவந்த பட்டதாரிப் பையனுக்கு மனதில் குதர்க்கம் தோன்றியது. தன் சுயநலத்தைக் கருதிச் செயல்படுத்த முடிவு செய்தான். அந்தத் திட்டம் நிறைவேறுமானால், குடும்பம்
தலைநிமிர்ந்து நடக்க முடியாது. அதன்பிறகு நடக்கும் எந்த நல்ல காரியமும் குடும்பத்திற்கு ஏற்பட்ட கறையை அழிக்க முடியாது. அவன் மனதை மாற்ற பலரும் முயன்றனர். அவன் பிடிவாதமாக இருந்தான். வருஷம் இரண்டு ஆகிவிட்டது. எந்த நேரம், இந்தப் பையன் தன் கூட்டாளியுடன் சேர்ந்து தலைக்குத் தீ வைப்பானோ என்று குடும்பத்தினர் கலங்கிப்போயிருந்தனர். ஒரு நாள் அவனுடன் வாதாடித் தோற்ற அவனுடைய அண்ணன், அன்னைதான் இவனை மாற்ற வேண்டும் என்று விரக்தியுடன் எழுந்திருக்கும்பொழுது, அன்னை திருவுருமாற்றம் என்று மரமல்லிகைக்குப் பெயரிட்டிருப்பது நினைவுக்கு வந்து, ஒருவேளை மரமல்லிகை இந்தப் பையனுடைய மனதை மாற்றாதா என்று கருதி அவனுக்கு மரமல்லிகை மலர்களைக் கொடுத்தான். மறுநாள் காலையில் 7 மணிக்கு இந்தப் பட்டதாரிப் பையனின் கூட்டாளி, அவன் அண்ணனைத் தேடி வந்தான். கூட்டாளியாகி அத்திட்டத்தை நிறைவேற்றினால் ஏற்படும் பெரும்பாதகங்களை ஒரு பெரியவர் அவனுக்கு விளக்கியதாகவும், அதனால் அவன் திட்டத்தைக் கைவிட்டுவிட்டதாகவும் கூறினான். மரமல்லிகை பட்டதாரியை மாற்ற முடியவில்லை என்றாலும், அவன் கூட்டாளியை மாற்றி, நிலைமையைக் குடும்பத்திற்குச் சாதகமாக்கிவிட்டது.
எழுபது வயதைத் தாண்டியபின், ஒரு வருஷமாக மறைந்துபோன பேச்சு (Spiritual Speech) ஆன்மீகப் பேச்சு என்ற மலரால் இரு நாட்களில் திரும்ப வந்தது.
வாழ்க்கையின் ஆரம்ப நிலையில் உள்ள சிறுஉதவி, சிறுமுயற்சி, சிறுமாற்றம் கடைசி நாட்களில் மாபெரும் வித்தியாசத்தை ஏற்படுத்துவதை நாம் அறிவோம். B.Sc. கெமிஸ்ட்டிரிக்குக் கல்லூரியில் மதிப்பு. M.A. சரித்திரத்திற்கு மதிப்பில்லை. B.SC. கெமிஸ்ட்டிரி கிடைக்காதவர் M.A. சரித்திரம் எடுத்துக்கொண்டார். B.SC படித்தவர் பள்ளி ஆசிரியராகவும், M.A சரித்திரம் படித்தவர் கல்லூரி முதல்வராகவும் ரிடையரானார்கள்.
1920-25 ஆண்டுகளில், பள்ளிப் பட்டதாரி ஆசிரியர் வேலைக்குப் பட்டதாரிகள் கிடைக்கவில்லை. S.S.L.C. பாஸ் செய்து குமாஸ்தாவாகப் போனால் 30 ரூபாய் சம்பளம். பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலுக்கு ஈர்க்கப் பட்டதாரி ஆசிரியர் சம்பளத்தை 35 ரூபாயாக உயர்த்தினார்கள். சர்க்கார் குமாஸ்தா ஒருவர் தம் வேலையை ராஜினாமா செய்து ஆசிரியரானார். அவருடைய நண்பர்கள் டெபுடி தாசில்தார், தாசில்தார், டெபுடி கலெக்டர் என உயர்ந்தனர். ஆசிரியர் அதிகத் திறமைசாலி. நாடு முழுவதும் புகழ்பெறும் நூல்களை எழுதினார். ஆனால் ஆசிரியராகவே ரிடையர் ஆனார். அவருடைய மாணவர்க்கெல்லாம், “ஆசிரியர் தொழிலுக்கு வராதே” என உபதேசம் செய்வார். ஆரம்பகாலச் சிறுமாற்றம், கடைசிக்காலத்தில் பெரிய வித்தியாசம். ஒரு பட்டம், ஒரு திறமை, ஒரு சிபாரிசு, ஒரு நல்ல குணம், சிறந்த முயற்சி, சாதகமான சூழ்நிலை, ஓர் ஆதரவு, மனிதனுடைய நிலையைப் பேரளவுக்கு மாற்றவல்லது. அன்னையை ஏற்றுக்கொண்ட அனைவரும் பல ஆண்டுகள் கழித்து, தங்கள் சக ஊழியர்களை நினைவுபடுத்தினால், அதுபோன்ற நல்ல பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதை உணருவார்கள். மலர்களின் சிறப்பை அறிந்து, அவற்றின் முழுப்பலனையும் குடும்பம் பெற ஒரு குடும்பம் முழுவதுமாக முயன்று நாளாவட்டத்தில் அந்த முயற்சியை முழுமைப்படுத்தினால், அடுத்த கட்டத்தில் அதுபோன்ற ஒரு பெரிய நல்ல மாற்றத்தை மலர்கள் தங்கள் வாழ்வில் ஏற்படுத்தியதைக் காணலாம். ஒருவர் செய்தாலும், ஒரு மலர் விஷயத்தில் இதைக் கடைப்பிடித்தாலும், ஒரு பிரச்சினையைத் தீர்க்க ஒரு சமயம் இம்முறையை நாடினாலும், அதற்குரிய பலனுண்டு. அனைவரும் ழுவதுமாக மலர்கள் பலவற்றைப் பாராட்டிப் பெறும் பலன், தொண்டன், தலைவனானது போருக்கும்; சிறு உத்தியோகத்திலிருந்த சின்ன மனிதன் பெரிய பதவியில் அமர்ந்துள்ள பெரிய மனிதனானது போலிருக்கும்.
பொதுவாகக் குடும்பங்களில் உள்ள பிரச்சினைகள், சந்தர்ப்பங்கள், வாய்ப்புகளைக் கூறி, அவற்றிற்குரிய மலர்களில் சுமார்
30, 40 மலர்களை விவரித்து, நாம் பெறக்கூடிய பலனை விவரிக்க நான் முற்பட்டுள்ளேன்.
உலகத்தில் நல்லவர்கள் அதிகமில்லை. ஒரு நல்ல நாளைக் குறித்து, அந்த நேரத்தில் ஒரு காரியத்தைத் தொடங்கினால், நமக்கு அந்த நல்ல வேளை செய்யும் நல்லதை நல்லவர்களாலும் செய்ய முடியாது என்ற கருத்துப்படி, “நாள் செய்வதை நல்லவர்கள் செய்ய மாட்டார்கள்” என்ற சொல் வழங்குகிறது. நாளும், நல்லவர்களும் சேர்ந்து செய்யக்கூடியதை, நமக்குத் தேவையான மலர்கள் பெற்றுத்தரும். அவர்களால் முடியாததையும் பெற்றுத்தரும் என்பதிலுள்ள உண்மையை அனுபவிக்கும்வரை சுலபமாக ஏற்றுக்கொள்ள முடியாது. மலர்கள் திறனுடையவை. அன்னையின் அருளையும், நமக்குத் தேவையான சிறப்புகளையும் தன்மூலம் பெற்றுத் தரும் திறனுடைய மலர்களை நாம் எப்படித் தேட முடியும்? நகர்ப்புறத்தில் ஒரு வீட்டில் பல குடும்பங்களில் ஒன்றாக வாழும் நாம் எப்படிச் சேகரிக்க முடியும்? என்ற நியாயமான கேள்வி எழுகிறது. சமையலுக்கு வேண்டிய அத்தனைப் பொருள்களும் விற்கும் கடைகளும் இருக்கின்றன. அங்குப் போய் அவற்றை வாங்கி வருகிறோம். அதுபோல் நகரத்தில் கிடைக்கக்கூடிய மலர்கள் ரோஜா, மல்லிகை, சாமந்தி, சம்பங்கி, கனகாம்பரம், மருக்கொழுந்துபோல் இன்னும் 5, 6 மலர்களுண்டு. நாம் நகரவாசியாக இருப்பதால், இந்த மலர்களுக்குள் நம் முறைகளை அடக்கிக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. கிராமவாசி ஒரு முழம் மல்லிகை வேண்டுமானாலும், நகரத்திற்கே வரவேண்டும். அங்குப் பூக்கடையில்லை. நகரத்தில் கிடைக்கும் அந்த 10, 12 பூக்கள்கூட கிராமத்தில் கிடைக்கா என்பது கிராமவாசியின் அனுபவம். இரண்டும் உண்மையே. நாம் எடுத்துக்கொள்ளும் முயற்சியில் எதிர்பார்க்கும் பலன் இன்றுள்ள இந்த யதார்த்தத்திற்குள் அகப்படாது. நம் குறிக்கோள் பெரியது. அதற்கேற்ற முயற்சியை நாம் கைக்கொள்ள வேண்டும். கிடைத்த மலர்களுடன் வழிபாட்டைத் துவங்கியபின், ஆர்வத்தோடு முயற்சியை மேற்கொண்டால், நமக்குத் தேவையானமலர்களில் ஒரு பகுதி கிடைத்துவிடும். அதற்குரிய பலன் நமக்கு ஊக்கத்தை அளிக்கும். நாளாவட்டத்தில் மற்ற மலர்களும் கிடைக்கும் முறையே நமக்கு வியப்பளிக்கும். அநேகமாக நமக்கு வேண்டிய எல்லா மலர்களும் சில நாட்களில் கிடைத்துவிடும். நம் வீட்டில் கிடைக்காத மலர், ஆபீஸ் காம்பவுண்டில் கிடைக்கும், அங்கில்லாதது நாம் அடிக்கடி போகும் நண்பர் வீட்டில் இருக்கும்.