1973-ம் ஆண்டு ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ரிஷிகேசத்தில் முகாமிட்டிருந்த சமயம் அது. அவரது சாதுர் மாஸ்ய விரதம் முடிந்து, விஜய யாத்திரையின் தொடர்ச்சியாக பத்ரிநாத்துக்குப் பாத யாத்திரையாகப் பயணமாகப் போகிறார் என்ற செய்தி கிடைத்தது.
செப்டம்பர் 12-ம் தேதி ரிஷிகேசத்திலிருந்து சுவாமிகளின் பத்ரி யாத்திரை தொடங்குவதாக திட்டம் வகுப்பட்டிருந்தது.
ரிஷிகேசத்தில், திருப்பதி தேவஸ்தானத்தாரால் நடத்தப்பட்டு வரும் ஆந்திரா ஆசிரமத்தின் பின்புறம் ஸ்ரீ மடம் முகாமிட்டிருந்தது. பத்ரி யாத்திரை துவங்குவதற்கு முன் ஹரித்துவாரத்தையும், ரிஷிகேசத்தையும் பார்க்க வெண்டும் என்று எண்ணி புறப்பட்டோம்.
ஹரித்துவாரம் ரிஷிகேசத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலுள்ளது. ஜன நெருக்கடியும், குறுகிய வீதிகளும், பழமையான கட்டிடங்களும் நிறைந்த ஊர். பாரதத்தின் தலை சிறந்த புண்ணியத்தலங்களில் ஒன்றாகும். இமயமலையில் பிறக்கும் கங்கை, முதன் முதலாக சமவெளியில் பாயத் தொடங்கும் அந்தப் புனித இடம், கேதார்நாத்துக்கும், பத்ரிநாத்துக்கும் பயணம் தொடங்கும் நுழைவாயில் என்று அழைக்கப்படுகிறது. பாலத்தைக் கடந்து பிரம்மகுண்டத்திற்குச் சென்றோம். கங்கைக்கு அணை போட்டு, வாய்க்கால் மூலம் நீர் விடுகிறார்கள். நூறு மைல் வேகத்தில் பிரவாகம் பாய்ந்தோடுகிறது. காங்க்ரீட் மேடையில் இரும்புச் சங்கிலிகளை பொறுத்தி வைத்திருக்கிறார்கள். அதைப் பிடித்துக் கொண்டு முழுக்கு போட வெண்டும். புனித கங்கையில் முதல் ஸ்நானம் அது.
அடேயப்பா! அந்த நீரோட்டத்துக்குத்தான் எத்தனை வேகம், எத்தனை சக்தீ! நீச்சல் தெரியாதவர்கள் ஹரித்துவாரத்தில் முழுக்கு போடும் போது மிகவும் ஜாக்கிரதையாக் இருக்க வேண்டும். ஆசைப்பட்டு, ஆனந்தக்களிப்பில் பிடித்துக் கொண்டிருக்கும் சங்கிலியை விட்டு விட்டால், சங்கிலி அங்கேயே இருக்கும். ஆனால் நாம் இருக்க மாட்டோம்!
பிரம்ம குண்டத்தை அடுத்துள்ள மேடையில் நீராட வந்தவர்களைத் தவிர, மாலைப் பொழுதைக் கழிக்க வந்தவர்கள் குழுமியிருந்தார்கள். பெண்மணிகள் சிலர் அன்னிய கங்கைக்குப் பூஜை செய்து கொண்டிருந்தனர். அங்கு விற்கப்படும் அகல் விளக்குகளை வாங்கி திரியை ஏற்றி, தொன்னை போன்ற படகுகளில் வைத்து, புஷ்பங்களைப் போட்டு, கங்கையில் மிதக்க விட்டனர்.
இதைத் தவிர கரையிலேயே, சற்றுத் தொலைவிலிருக்கும் கங்காமாதா ஆலயத்தில், தினமும் மாலையில் நடைபெறும், பூஜையையும், மங்களாராத்தியையும் காணக் கண்கோடி வேண்டும்.
ஹரித்துவாரத்தில் தங்கும் மடங்களும், சத்திரங்களும் நிறைய இருக்கின்றன. சின்னஞ்சிறிய சந்துகளில் பெரிய பெரிய கட்டடங்கள் காணப்படுகின்றன. யாத்திரை வருபவர்கள் கூட்டத்தால் அந்தச் சிறு ஊர் திணறுகிறது.
இரண்டு மைல் தெற்கில் “கனக்கல்” என்ற இடத்தில் தட்சப்பிரஜாபதி அரசாண்ட பிரதேசமும், அவர் யாக்ம செய்த இடமும் இருக்கின்றன. மலையின் மீது மானசா தேவி, சண்டிகா தேவி ஆலயங்களும், கங்கைக் கரையில் பீமசேனன் வெட்டிய “பீம கோடா” என்ற குளமும், சப்தரிஷிகள் ஆசிரமம் போன்ற புராண சம்பந்தமான பகுதிகளும் இருக்கின்றன.
அங்கிருந்து ரிஷிகேசம் திரும்பினோம். ரிஷிகேசத்தில் பார்த்துப் பழகிப் போன புகைப்படங்களில் “லட்சுமணன் ஜூலா” என்ற தொங்கும் பாலம் ஒன்று. கங்கியயின் மீது, அந்தரத்தில் தொங்கியபடி ஊஞ்சலாக ஆடிக் கொண்டிருக்கும் இந்தப் பாலம், காண வேண்டிய ஓர் அற்புதம்தான். எண்பது அடி ணீளமும் ஆறடி அகலமும் உள்ள இந்தப் பாலத்தின் மீது நடக்கும் முதல் அனுபவம் மறக்கமுடியாததாக இருக்கிறது.
ஆடும் பாலத்திற்கு இந்தப்புறம் லட்சுமணன் கோயில் இருக்கிறது. பிரும்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக லட்சுமணன் இருநூறு ஆண்டுகள் தவம் இருந்த பகுதியாம் அது. அக்கோயிலில் கிருஷ்ணனுக்கு ஒரு சந்நிதியும் லட்சுமணருக்கு ஒரு சந்நிதியும் இருக்கின்றன. கங்கையை நோக்கி, சுவரில் பத்ரிநாராயணர் எழுந்தருளியிருக்கிறார். அவருக்கு இருபுறமும் ஸ்ரீ நாரத முனியும், லட்சுமி தேவியும் காட்சி தருகிறார்கள்.
அந்தப் பாலத்தைக் கடந்து கங்கையின் அந்தப்புறத்திற்குச் சென்றால் அங்கு, ஸ்ரீ ஆதிசங்கரர் மண்டபம் இருக்கிறது. சலவைக்கல்லால் ஆன அவ்வழகிய மூர்த்திகளைக் காணும்போது புண்ணிய பாரதத்தின் தொன்மைமிகு வேதநெறியின் அடிப்படையில் வாழையடி வாழையாக வளர்ந்து வரும் குரு பரம்பரையைத் தரிசிக்கிறோம். அக்கருணாலயத்தை கூப்பியகரங்களோடு வணங்கி விட்டுத் திரும்பினோம்.
ஸ்ரீ ஆதிசங்கரர் மண்டபத்திற்கு எதிரியிருக்கும் கங்கைப் படித்துறைக்கு லட்குமண குண்டம் என்று பெயர். அந்தக் கரையில் மேயும் ராட்சச மீன்களுக்கு பொரி ஆகாரம் அளிப்பது பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவருக்கும் பெரும் பொழுதுபோக்காக இருக்கிறது.
அங்கு நின்று சுற்றுப்புறக் காட்சியைப் பார்க்கும் போது, இயற்கையன்னை நடத்தும் பேராட்சியின் மாட்சியை உணர முடிகிறது. மங்கையொருத்தியை ஆதரவோடு புக்ககத்திற்குக் கொண்டுபோய் விடும் தாயைப் போல் இமயம், கங்கை மகளை இருபுறமும் அரவணைத்துக் கொண்டு கூடவே தொடர்ந்து வந்து, பூமியில் விட்டுவிட்டுச் செல்வதைப் போன்ற ஒரு கற்பனையைத் தூண்டும் வண்ணம், கண்ணுக்கெட்டிய தூர்ம வரை மலைத் தொடர்களைக் காண்கிறோம். வாரிக் கொண்டு வரும் வளத்தால் நம் உடலை வளர்த்து, தேடிச் சேர்த்த புனிதத்தால் நம் உள்ளத்தை உயர்த்தி, பிறர் வாழ, தாம் பிறவியெடுக்கும் பெருந்தகையைப் போல் பெருக்கெடுத்து ஓடும் கங்கையின் பிரவாகத்தைப் பார்த்துப் பார்த்து புளகிதம் அடைகிறோம். புண்ணியம் பெறுகிறோம்.
ஸ்ரீ ஆதிசங்கரரை தரிசித்து விட்டு, கங்கை கரையிலேயே காலாற நடந்து, கங்காமாதா மந்திரையும், ரகுநாதர் ஆலயத்தையும் தரிசித்துக் கொண்டு, அமைதி ஊசலாடும் சோலைகளினூடே சென்றபோது நம் மனமும் மௌனத்தோடு உறவாடுகிறது. சொர்க்கத்துக்கே வந்து விட்டது போன்ற உணர்வு ஏற்படுகிறது. என்ன ஆச்சரியம்! அப்போது உண்மையிலேயே நாம் சொர்க்காசிரமத்தில் இருப்பதை அறிகிறோம். ஆகா! கங்கை ஸ்நானமும், ஆன்மீகத் தியானமுமாக எவ்வித சலனமுமின்றி வாழ நினைப்பவர்களுக்கு எத்தனை வசதியான சூழ்நிலை!
அடுத்து கீதா பவனத்தை அடைகிறோம். பிக்னிக் வருபவர்களைப் போல் அங்கு வந்து குழுமியிருந்தவர்கள், கீதா பவனத்தை அடுத்துள்ள படித்துறையிலும், கரையிலுள்ல பெஞ்சுகளிலும் அமர்ந்து தாங்கள் கையோடு எடுத்து வந்ததைக் கொரித்துக் கொண்டு, இயற்கையோடு லயித்து, கவலைகளின்றி பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தார்கள். உல்லாசப்பயணிகள் நிரம்பி வழிய, அக்கரையிலிருந்து புறப்பட்ட ஒரு படகு இக்கரையில் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய பல மொழி பேசுவோரின் பேச்சொலியு, சிரிப்பொலியும் மலைச்சரிவில் மோதி, எதிரொலித்து, சிற்றலைகளாகச் சிதறிக் கொண்டிருந்தது. இதையெல்லாம் நின்று நிதானமாகக் கவனிக்க நெரமில்லாதது போல், கங்கை, எங்கோ மிக வேகமாக ஓடிக் கொண்டிருந்தாள்.
கோரக்பூர் கீதா பிரஸ் நிறுவனத்தாரின் நன்முயற்சியால் 1941-ம் ஆண்டு அங்கு எழும்பியதுதான் கீதா பவனம். அங்கு தங்குவதற்காக அறைகள் கட்டி விட்டிருக்கிறார்கள். புத்தகக் கடை ஒன்று இருக்கிறது. திருமாலுக்கும் சிவபெருமானுக்கும் சந்நிதிகள் இருக்கின்றன. சுவரெங்கும் கீதை வாசகங்கல் எழுதப்பட்டிருக்கின்றன. ராமாயண, பாரத, பாகவத காட்சிகள் வண்ண ஓவியங்களாகக் கண் திரும்பும் இடங்களிலெல்லாம் தீட்டப்பட்டிருக்கின்றன.
பின்னர், அங்கிருந்து சிவானந்தா ஆசிரமத்தை அடைந்தோம். அங்கிருந்து இரண்டாவது பர்லாங்கில் வலப்பக்கம் திரும்பி, மரங்களும், செடி கொடிகளும் அடர்ந்த காட்டுப் பாதையில் கீழே இறங்கிச் சென்றோம். அங்கு வைகுண்ட ஆசிரமம் இருக்கிறது. முன்பெல்லாம் மகரிஷிகள் தவமிருந்து, ஆன்மீக வளம் செழுத்திருந்த பகுதியாம் அது. இன்றும் பல சாதகர்கள் அங்குள்ள குகைகளில் தங்கி, ஞானப் பயிரை சாகுபடி செய்து வருகிறார்காள்.
அங்கிருந்து இடப்புறம் அரை மைல், மலைச்சரிவில் நடந்து, லட்சுமணன் தபஸ் செய்த இடத்தை அடைந்தோம். அங்குதான் லட்சுமணன் சேஷ அம்சத்தை மீண்டும் பெற்றாராம். அங்கு ஒரு சிறு துவாரத்தின் வழியாக கொட்டிக் கொண்டே இருக்கிறது. வருடம் பூராவும் அது வற்றுவதில்லையாம். அதாற்கு சஹஸ்ரதாரா என்று பெயர். அந்நீரில் ஒரு சொட்டு அருந்தி விட்டு, தலையிலும் தெளித்துக் கொண்டோம்.
அப்பர்ணசாலையில் சிவனுக்கு ஒரு சந்நிதியிருக்கிறது. பார்வதி, சுப்ரமணியர், கணபதி, நந்திகேசுவரரும் இருக்கிறார்கள். தனியே லட்சுமணனும் கோயில் கொண்டிருக்கிறார். கேட்பாரற்ற அந்தக் காட்டிலும் ஒருவர் குடியிருந்து கொண்டு, நித்திய ஆராதனைகளையும், ஹோம, பூஜை முதலியவற்றையும் கவனித்துக் கொண்டு வருவது அதிசயமாகவே இருந்தது.
எதிரில் கங்கையின் நடுவில் ஒரு பாறை காணப்படுகிறது. அது ஹனுமான் குண்டம் என்றும், அங்கு ஸ்ரீ ஆஞ்சநேயர் தவமிருந்ததாகவும் கூறுகிறார்கள்.
கங்கைக் கரையில் சுவாமி சிவானந்தா தமது இறுதி காலத்தில் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றோம். அவரது படுக்கை, அவர் அமர்ந்திருந்த நாற்காலி, பயன்படுத்திய பொருட்கள் எல்லாம் அப்படியே இருக்கின்றன. அவர் எழுதிக் குவித்த கவிதைகள், கட்டுரைகள், பொன்மொழிகள் முதலியவை அடங்கிய நோட்டுப் புத்தகங்கள் அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் கையெழுத்துப் பிரதிகளைப் புரட்டிப் பார்த்த போது, சுவாமிகள் அரிய பெரிய விஷயங்களை, எத்தனை தெளிவாகவும், மனத்தில் பதியும்படியும் எழுதி வைத்திக்கிறார் என்று அறிந்து வியந்தேன்.
கங்கைக்கரையை ஒட்டினாற்போல் ஒரு மண்டபம். அங்குதான் சுவாமி சிவானந்தா எந்நேரமும் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்திருப்பாராம். கங்கையைப் பார்த்துக் கொண்டிருப்பதே மகத்தான ஞானத் தவமன்றோ! அதன் புண்ணிய வரலாற்றில் பாரதத்தின் பண்டைய கலாசாரத்தையும், நாகரீகப் பெருமைகளையும், ஆன்மீகப் பண்புகளையும் அறியலாம். அதன் ஓட்டத்தில் புராண நிகழ்ச்சிகளையும், புராணக் காட்சிகளையும் காணலாம். அதன் தூய நீரில், மகரிஷிகளின் தூய உள்ளங்களைத் தரிசிக்கலாம். அதன் ஆழத்தில் ஞானிகளின் சலனமற்ர மனநிலையை உணரலாம். அதன் வேகத்தில் கவிஞனின் கற்பனா சக்தியை அளவிடலாம். அதன் சலசலப்பில் கலைஞனின் இதயத்துடிப்பு எதிரொலிப்பதைக் கேட்கலாம். கண்காணா இடத்தில் பிறந்து காண முடியாத இடங்களிலெல்லாம் பாய்ந்தோடி , கரைகாணாத கடலில் கலக்கும் அதன் புனிதப் பயணத்தை நினைக்க நினைக்க, பார்க்கப் பார்க்க, கேட்கக் கேட்க கோடி சிறு கதைகளை இணைத்து கோலமிகு தொடர்கதையாக அது வளர்வதையும், புண்ணிய பாரதத்தின் ஜீவநாடியாக அது திகழ்வதையும், நம் ஆதமகீதத்தின் ஆதார சுருதியாக இயங்குவதையும் உணர முடிகிறது. கங்கைத் தியானமும், கங்கை ஸ்நானமும், கங்கை பானமும், கங்கை தரிசனமும் மனிதர்களை, மகாத்மாக்களாக்குகின்றன. கங்கையின் மடியில் வளர்ந்த எண்ணற்ற மகான்களும், மகாத்மாக்களும், பாரதமெங்கும் நடமாடி, இந்த மண்ணைப் புனிதமாக்கியிருக்கிறார்கள். இமயம் முதல் குமரி வரை பரந்து கிடக்கும் நம் பாரதம் இதனாலேயே ஞானபூமியாக்ப போற்றப்படுகிறது.
நம் பாரத புண்னிய பூமியில், தெய்வங்களும், மாமனிதர்களும், மகாபுருஷர்களும் நடமாடாத இடமே இல்லை. அதிலும் இமாலயப் பகுதியெங்கும், நம் புராதன இதிகாசக் கதாநாயகர்களின் பொற்பாதங்கல் படாத பகுதியேயிலை. தசரத குமாரர்களும், பாண்டவர்களும் வாசம் செய்து வளமாக்கியதாற்கு அடையாளமாகப் பல இடங்களை இன்றும் நமக்குக் காட்டுகிறார்கள்.
ரிஷிகேசத்தில் லட்சுமணனும், பரதனும், சத்ருக்னனும் தவன் இயற்றியதற்கு அடையாளமாக அவர்களுக்குக் கோயில்கள் இருக்கின்றன. ரிஷிகேசத்திலிருந்து பத்ரி செல்லும் பாதையில் நாற்பதாவது மைலில் இருக்கும் தேவப்பிரயாகை என்ற ஊரில் ஸ்ரீ ராமருக்கு கோயில் இருக்கிறது.
லட்சுமணன் தவமியற்றிய தலத்தைப் பார்த்த பின்னர் சிவானந்தா ஆசிரமத்திலிருந்து ஆந்திரா ஆசிரமம் செல்லும் வழியிலுள்ள சத்ருக்னன் கோயிலைத் தரிசித்துக் கொண்டு, மீண்டும் ரிஷிகேசம் திரும்பினோம். அங்குள்ள பழமையான பரதன் மந்திர் என்ற ரிஷிகேச நாராயணர் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டோம்.
செப்டம்பர் 12-ம் தேதி எங்கள் பத்ரிநாத் யாத்திரை தொடங்கியது. ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆந்திரா ஆசிரமத்தின் முன்புறமுள்ள ஸ்ரீ வேங்கடாசலபதி கோயிலில் தரிசனம் செய்து கொண்டு தமது விஜய யாத்திரையைத் தொடங்கினார்.
சாதுர்மாஸ்ய விரதம் முடிந்து, சந்நியாசிகள் விஜய யாத்திரை புறப்பட்டுச் செல்லும் போது , எல்லையைக் கடந்ததும் ஓரிடத்தில் அமர்ந்து, கீதா பாராயணம் செய்வது வழக்கம். அதையொட்டி, தக்கதோர் இடத்தைத் தேடிக் கொண்டிருந்த போது, திடீரென்று வானில் கருமேக மூட்டம் கவியத் தொடங்கியது. சில்லென்ற காற்று வீசியது. சற்றைக்கெல்லாம் உடல் நனைகிற அளவுக்கு பெரிய தூறல்களுடன் மழை பொழிந்தது. இமாலய யாத்திரை முதல் அனுபவமே பரமசுகமாக இருந்தது.
எல்லையைக் கடந்ததும் சுவாமிகள் ஒரு மரத்தின் கீழ் சுவாமிகள் அமர்ந்து கொண்டார். மற்ற இரு சந்நியாசிகளும் அருகில் அமர்ந்து கொள்ள, பிறர் சுற்றிலும் நிற்க, வானம் பன்னீர் தெளிக்க, ஸ்ரீமத் பகவத்கீதையின் பதினோராவது அத்தியாயம் பாராயணம் முடிந்தது. மீண்டும் எங்கள் நடைப்பயணம் தொடர்ந்தது.
நல்லவேளையாக, எல்லோரும் பயந்தபடி கன மழையாகப் பிடித்துக் கொள்ளவில்லை. எங்கள் உடலை நனைத்ததோடு அது திருப்தி அடைந்தது. கங்காதேவி, வான்மழையாக்ப பொழிந்து, எங்களை நீராட்டி புனிதப்படுத்தி, இமாலய உஅல்கத்தைக் காண “மடி”யாக அழைத்துச் சென்றதாகவே தோன்றியது.
நாங்கள் நடந்து கொண்டிருந்தோம். ஒன்றன்பின் ஒன்றாகத் தெரிந்த மலைத் தொடர்கள், நேரம் ஆக ஆக ஒரே வரிசையில் இருப்பது போல் தோன்றவாரம்பித்தன. சற்றைக்கெல்லாம், பச்சைப் பசேலென்று அடர்த்தியாக ஓங்கி வளர்ந்திருந்த மரங்களும் கண்களிலிருந்து மறைந்து, மலை எது, காடு எது என்று பிரித்துக் கூற முடியாமல், கண்ணுக்கெட்டிய தூரம் வரை கருந்திரையொன்று போட்டது போல் எங்கும் இருள் கப்பிக் கொண்டது. கரு மேகங்கள் விதானமாக விரிந்து வானத்தை மறைத்ததால், நட்சத்திரங்களையே காண முடியவில்லை. இருண்ட பாய் விரித்து, மௌனப் போர்வையின் கீழ் முடங்கிவிட்ட இமாலயப் பகுதியின் அமைதியான உறக்கத்தைக் கலைத்தவாறு நாங்கள் நடந்து கொண்டிருந்தோம். கை தீவட்டியின் ஒளியும், எங்கள் பேச்சொலியும் அப்பகுதியை ஆக்ரமித்திருந்த இருளைக் கிழித்து அமைதியைக் குலைத்தது. எங்களுக்கு இமாலயப் பயணம் புது அனுபவமாக அமைந்தது போலவே, இமாலயத்திற்கும் எங்கள் பயணம் ஒரு புது அனுபவமாகவே இருந்திருக்க வேண்டும்!
ஆறு, ஏழு மைல்கள் மலைப்பாதையில் நடந்து , இரவு எட்டு மணி சுமாருக்கு சிவபுரி என்ற சிற்றூரை அடந்தோம். அங்குதான் இரவு நாங்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எல்லாம் எல்லைப் பாதையைக் கண்காணிக்கும் ரானுவப் பகுதியினரின் ஏற்பாடுகள்; அற்புதமான ஏற்பாடுகள்.