பத்ரி கேதார் – 2

மறுநாள் அதிகாலையில் புறப்பட்டு விட்டோம். எங்களோடு வந்த ராணுவ அதிகாரிகள், முதல் நாள் இரவு பெய்த மழைதான் அநேகமாக அந்த சீசனுக்கு கடைசிப் பெரு மழையாக இருக்கும் என்று கூறினார்கள். அது உண்மைதான். அதற்குப் பிறகு பத்ரிநாத் போய்ச் சேரும் வரை, பெரு மழையே இல்லை. அவ்வப்போது கருமேகங்கள் சூழ்ந்து கொண்டு உறுமி பயமுறுத்தின. ஆனால், மழை கொட்டவில்லை.

இமாலயத்தில் நாம் உயரே போகப் போக, ஹரித்துவாரத்திலும், ரிஷிகேசத்திலும் நம்முடன் நெருங்கிப் பழகிய கங்கை, மெள்ள மெள்ள ஒதுங்கி, பதுங்கி ஓடத் தொடங்குகிறாள். பள்ளத்தாக்குகளில் பாறைகளுக்கிடையே நுழைந்தும், மரங்களுக்கிடையே மறைந்தும் அவள் பாய்ந்து வரும் காட்சி, சிறுமிகள் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுவதை நினைவுபடுத்தும். சட்டென்று அவள், நம் கண்களிலிருந்தே மறைந்து விடுவாள். எங்கே சென்றிருப்பாள் என்று தேடிக் கொண்டிருக்கும் போது, ஏதோ ஒரு பக்கத்திலிருந்து “ஏமாந்தீர்களா?” என்று நகைத்துக் கொண்டே ஓடி வருவாள். சற்று முன் சிறுமியாக நடைபயின்றவள் திடீரென்று வளைந்து, நெளிந்து, ஒய்யார எழிலுடன் கும்மாளமிடும் நங்கையாக்க குலுங்கிக் குலுங்கி ஓடி வருவாள். குற்றமுள்ள நெஞ்சமும் அவளது குதூகல விளையாட்டைக் காணும்போது, குற்றம் நீங்கிப் புனிதமடையும்.

காலை ஒன்பது மணிக்குப் “பியாஸி” என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தோம். லேசான குளிரோடு இதமான வெப்பமும் சேர்ந்து, நடப்பதற்கு சௌகரியமாக இருந்தது.

வியாச பகவான் தவமிருந்த இடமாம் அது. பத்ரிநாத் யாத்திரையின் போது, சந்திரமௌளீசுவர முதல் பூஜை அந்தத் தலத்தில் நடைபெற்றதில் ஒரு சிறப்பு இருக்கத்தான் செய்தது.

மாலை மூன்று மணிக்குப் புறப்பட்டு எட்டு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள “கடியாலா” என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தோம். இரவு பூஜை அங்குதான்.

கடியாலாவில் நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு எதிரில் கங்கை ஓடிக் கொண்டிருந்தது. ஆனால், நூறு அடி கீழே இறங்கிச் சென்றாள்தான் அதன் கரையை அடைய முடியும். மலைச்சரிவில் இறங்கிச் செல்வதற்கு சௌகரியமாகப் படிக்கட்டுகளைப் போல் செதுக்கி வைத்திருந்தனர்.

சுற்றிலும் மலைப்பாறைகள், அதன் மத்தியில் கங்கை ஓடிவருகிறது. பாறையில் மோதி, அதன் ஓட்டம் தடைப்பட்டு, திசிய மாறி, அங்கேயே சுற்றிச் சுழன்று கொண்டிருப்பதால், அது சக்கர தீர்த்தம் போலிருந்தது. அடர்ந்த மரங்களுக்குக் கீழேயிருந்த ஒரு மேடையில் அமர்ந்து அந்தக் காட்சியை ரசித்துக் கொண்டிருந்ததே ஆத்ம தியானமாகவும், அருந்தவமாகவும் இருந்தது.

மாலை ஆறு மணியிருக்கும். லேசாகக் குளிரத் தொடங்கி விட்டது. கை, கால்களை கழுவிக் கொள்ளலாம் என்று நீரில் இறங்கினோம். அடேயப்பா! ஐஸ் ஜலத்தில் காலை வைத்தது போலிருந்தது. அரை நொடிக்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை. அந்தக் குளிர்ச்சி எலும்பைத் துளைக்கிறது. விரல்களெல்லாம் மரத்துப் போய் விடுகின்றன. தென்னாட்டு நதிகளில் ஸ்நானம் செய்து பழக்கப்பட்டவர்களுக்கு, இந்தக் குளிர்ச்சியைக் கற்பனை செய்து பார்ப்பதே கடினம். நான் எத்தனை எழுதினாலும் அதைப் புரிய வைக்க முடியாது.

மானுடரின் பாவங்களைக் கரைத்து, விமோசனம் தந்துருள வானுலகிலிருந்து கீழிறங்கி வந்து, தன்னலம் கருதாது, கைம்மாறு எதிர்பாராது, கருணையுடன் கடமையாற்றி, ஓய்ச்சல் ஒழிவின்றி ஓடி, மூலை முடுக்குகளிலெல்லாம் தேடித் தேடித் தன் மக்களைக் கரையேற்றுவதாலேயே அவள் புனித கங்கை ஆகின்றா:ளோ! நாடு முழுவதும் பாய்ந்தோடும் நீரிலெல்லாம் அவள் கலந்திருப்பதால் இது புண்ணிய பாரதம் ஆகின்றதோ!

மறுநாள் வெள்ளிக்கிழமை.

செப்டம்பர் 16-ம் தேதி.

விடியற்காலையில் நாலரை மணிக்கே நாங்கள் அனைவரும் விழித்துக் கொண்டு விட்டோம். எழுந்து வெளியே வந்தோம். ஜில்லென்று ஊதக்காற்று வீசியது. இன்னும் இருள் விலகவில்லை. மலைச்சிகரங்கள் கண்ணுக்குத் தெரியாதவாறு கனமான பனி மூட்டம் மறைத்திருந்தது. கங்கையையும் தெளிவாகத் தரிசிக்க முடியவில்லை. அது எழுப்பிய தெய்வீக ஒலியை மட்டும்தான் கேட்க முடிந்தது. இறங்கி வந்து, உஷத்கால ஸ்நானத்தை முடித்துக் கொல்ளும்படி அவ்வொலி அழைப்பது போல் தோன்றியது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நாங்கள் ஏழெட்டு பேர் நீரில் இறங்கி விட்டோம். உடல் நடுக்கமெல்லாம் அரைக் கணம்தான். ;பயந்து ஓடும் குழந்தையைக் கருணையோடு இழுத்து வைத்துக் குளிப்பாட்டும் அன்னையைப் போல், கங்காமாதா எங்களை நீராட்டினாள். அவளது முதல் ஸ்பரிசத்தால் துள்ளிக் குதித்து “ஓ”வென்று இரைச்சலுடன் நம்மை அன்புடன் தழுவி அரவணைத்துக் கொள்கிறாள். நம்மை மறந்த நிலையில் நாம் பேரின்பத்தில் திளைக்கிறோம். கடியாலாவில் தொடங்கிய இந்தச் சுகானுபவம், பத்ரிநாத் வரை தொடர்ந்தது. வழி நெடுகிலும், நம் உடலையும், உள்ளத்தையும் தூய்மைப் படுத்திக் கொண்டே, நம் வாழில் புனிதம் சேர்த்துக் கொண்டே, உடன் வரும் கங்கா தேவி பத்ரிகாசிரமப் புண்னியலோகத்தில்  நுழையும்போது, நம்மை மாசற்றவர்களாக்கி, அங்கு உறையு, ஸ்ரீ நாராயணமூர்த்தியைத் தரிசனம் செய்வித்து, மறு பிறவியெனும் கர்மவினை நீக்கி, நற்கதி தேடி தருகிறாள்.

கங்கியயில் நீராடி விட்டு பொழுது புலரும் வேளையில் இமயத்தில் நடந்து கொண்டிருந்தோம்; பத்திரிகை இன்னும் வரவில்லையே என்ற படபடப்பு இல்லை; அலுவலகம் செல்லப் பேருந்தைப் பிடிக்க வெண்டுமே என்ற பரபரப்பும் இல்லை. நிதானமான, நிம்மதியான நடை. விழித்தெழுந்ததும், வயிற்றுப் பிழைப்புக்காக அல்லற்படத் தொடங்கும் நம் வியாபார உலகத்துக்கும், இன்பமயமான இந்த இமாலய உலகத்திற்கும் இடையேதான் எத்தனை இடைவெளி!

ஆதோ, அந்த வெண்மேகக் கூட்டத்தைப் பாருங்கள். இரவெல்லாம் மலைமுகட்டில் படுத்து உறங்கிவிட்டு, விழிப்புற்று, அது மெள்ள மெள்ள கீழிறங்கி வருகிறது. கங்காதேவியிடம் ஏதோ குசலம் விசாரிப்பது போல், அதன் மீது சற்று நேரம் அப்படியே தங்குகிறது. பின்னர் அதனுடன் ஐக்கியமாகி விடவேண்டும் என்ற எண்ணம் கொண்டது போல், அதன்மீது படிந்து, கரைந்து மறைந்து விடுகிறது.

இதோ, இந்த மலை உச்சியைப் பாருங்கள், அங்கு, பத்து பதினைந்து வீடுகள். அது ஒரு சிறு கிராமம். அங்குள்ளவர்கள் அத்தனைபேரும் பயிர்த் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள். மலைச்சரிவைப் பண்படுத்தில், வயல்களாக்கி சாகுபடி செய்கிறார்கள்.  அடுக்கடுக்காக சீரான படிக்கட்டுகளாகச் செதுக்கி வைத்து அவர்கள் அங்கு பயிரிட்டிருப்பது, அவர்களது உழைப்புத் திறனுக்கும், கலாரசனைக்கும் ஓர் எடுத்துக்காட்டாகும். நெல், கேழ்வரகு, கோதுமை, சோளம், பயறு எல்லாம் பயிரிடுகிறார்கள். காய்கறி வகைகளும் அங்கு உற்பத்தியாகின்றன.

மலைமீதுள்ள கிராமங்களைத் தவிர காட்டுக்குள்ளேயும், மலையடிவாரத்திலும் சிறு, சிறு குடில்களைக் கட்டிக்கொண்டு மலை ஜாதியினர் வசிக்கின்றனர். சுவாமிகள் பாத யாத்திரை செய்து கொண்டிருக்கும் செய்தியை அறிவிக்கும் வகையில் ஓர் இடத்தில் கௌரிகாளை ஊதப்பட்டதும், அச்சத்தத்தைக் கேட்டு, கள்ளங்கபடமற்ற மலைஜாதிப் பெண்மணிகள் ஓடிவந்தனர். அத்தனை பேர் கையிலும், தூயவரின் திருவடிகளில் சமர்ப்பிக்க ஏதோ ஒரு மலர் இருந்தது.

இந்த இயல்பான பதியுணர்வு இப்பாரத மண்னுக்கே உரியது. மலையானாலும், காடானாலும், பாலைவனமானாலும், நகர்புற நாகரீகத்திலிருந்து எத்தனைதான் ஒதுங்கி வாழ்ந்தாலும், படிக்காத பாமரர்களானாலும், தங்கள் எல்லைக்கு வரும் துறவிகளை இன்முகத்துடன் வரவேற்று உபசரிப்பதும், தீர்த்த யாத்திரை செல்பவர்களை அன்புடன் அழைத்து விருந்தோம்புவதும் இப்புண்ணிய பூமியில் தொன்றுதொட்டு தொடர்ந்துவ் அரும் பண்புமிக்க அன்புத் தொண்டுகளாகும்.

நாங்கள் நடந்து கொண்டிருந்தோம். அடுத்த காம்ப் “ஸக்னிதார்” என்ற இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது கடியாலாவிலிருந்து மொத்தம் பதின்மூன்று கிலோமீட்டர். நாங்கள் எட்டு கிலோமீட்டர் வந்து விட்டோம். அப்போது வெய்யில் சற்று உறைக்கத் தொடங்கியது. நாங்கள் சென்ற பாதை கரடுமுரடாக இருந்தது. மாரிகால தாக்குதலால், ஆங்காங்கே தரை அரிக்கப்பட்டிருந்தது. சின்னஞ்சிறு கற்களும், ஜல்லிகளும் காலைக் குத்தி ரணமாக்கின. வெய்யில் ஏற, ஏற, எங்கள் மலையேற்றம் கடினமாகிக் கொண்டிருந்தது.

ஒன்பது மணிக்கு ஸக்னிதார் வந்து சேர்ந்தோம்.  கங்கையிலிருந்து நாங்கள் வெகு தொலைவு விலகி வந்து விட்டிருந்தோம். நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு வலப்புறமிருந்த ஒரு பள்ளத்தாக்கில் , ஒரு சிறு குளம் போல் தெரிந்தும், தெரியாமலும் அன்னை கங்கை தோற்றமளித்தாள். எத்தனை உயரம் ஏறி வந்திருக்கிறோம் என்பதை அப்போதுதான் நாங்கள் உணர்ந்தோம்.

எதிரில் ஓர் உயர்ந்த மலை. அதன் கழுத்தில் மாலை அணிவித்தது போல் பாதை வளைந்து வளைந்து சென்றது. அதில் லாரிகளும், பஸ்களும் சென்றபோது, நம் வீடுகளில் கொலு விளையாட்டைக் காண்பது போலிருந்தது.

மாலை நான்கு  மணிக்கு அந்தப் பாதையில் நாங்கள் நடந்து கொண்டிருந்தோம். வழியில் பள்ளிகளிலிருந்து திரும்பும் கர்வாலிகள் என்ற இமலயமலைவாசிகளின் இளம் வாரிசுகளைக் கண்டோம். இரண்டு மைல்கள் நடந்து சென்று அவர்கள் பள்ளியில் படித்து விட்டு வருகிறார்கள்.

எட்டு கிலோ மீட்டர் நடந்து “போங்கதர்” என்ற இடத்தை அடைந்தோம். பூஜையை அங்கு முடித்துக் கொண்டு, இரவு தங்கிவிட்டு, வழக்கப்படி விடியற்காலை யாத்திரை தொடரும்.

கடந்த இரண்டு நாள் பயணத்தின் போது நாங்கள் சில குக்கிராமங்களைக் கடந்து வந்தோமே தவிர, ஒரு சிற்றூரைக் கூட காணமுடியவில்லை. திட்டப்படி மறுநாட் காலையில் தேவப்பிரயாகை என்ற ஊருக்குச் செல்லப் போகிறோம். பத்ரிநாத் யாத்திரையின் போது நாம் காணப்போகும் முதல் தலம் மட்டுமல்ல அது; முக்கியமான தலமும் கூட.

ஸ்ரீமடம் இரவு முகாமிட்டிருந்த “போங்கதர்” என்ற இடத்திலிருந்து தேவப்பிரயாகை பதினோரு கிலோமீட்டர்தான். எனக்கு ஒரு யோசனை தோன்றியது. அன்று இரவே நாம் தேவப்பிரயாகை சென்று விட்டால், அதிகாலையிலே எழுந்து சங்கமத்தில் ஸ்நானம் செய்து, பார்க்க வேண்டிய இடங்களையெல்லாம் பார்த்து விடலாமே, அது மட்டுமின்றி, அப்புனிதத் தலத்தில் ஓரிரவு கழித்த புண்ணியமும் கிடைக்குமே.

நானும் உடன் வந்த நண்பரும் ஒரு ராணுவ லாரியில் ஏறிக் கொண்டு ஏழு மணிக்கெல்லாம் தேவப்பிரயாகை வந்து சேர்ட்ந்தோம். இமாலயத்தில் இரவு வெளையில் அச்சமில்லாமல் நடந்து விடலாம். ஆனால், பஸ்ஸிலோ, லாரியிலோ போகும்போதுதான் பயமாக இருக்கிறது. இருட்டிய பிறகு அப்பாதையில் வாகங்களின் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தாலும் ரானுவ லாரிகளும், ஜீப்புகளும் தாராளமாகப் போய்க் கொண்டிருக்கின்றன. அவ்வழி முழுவதும் அந்த டிரைவர்களுக்கு தண்ணீர்பட்டபாடு. ஒவ்வொரு வளைவும், ஒவ்வொரு பள்ளமும், ஒவ்க்வொரு மேடும் அவர்களுக்கு அத்துபடி. சென்னை மவுண்ட் ரோடில் பொவது போல் அத்தனை வேகமாக இமய “மவுண்ட் ரோடில்” போகிறார்கள்; புதிதாக்ப பயணம் செய்கிறவர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் போக வேண்டும். கிடிகிடு பள்ளத்தாக்கையும், அதில் அலறிக் கொண்டு ஓடும் நதியையும் பார்த்து விட்டால் கதி கலங்கும், வயிற்றைக் கலக்கும்.

நாங்கள் சென்ற போது எதிரில் மாடுகளும், ஆடுகளும் மந்தை மந்தையாக வந்து கொண்டிருக்கின்றன. மாடு மேய்ப்பவர்கள் அந்தக் குறுகிய பாதையில் அவற்றைச் சாமர்த்தியமாக ஒதுக்கி, லாரிக்கு வழி விட்டனர். அவர்களெல்லாரும் பனிக்காலத்தின் கொடுமையிலிருந்து தங்கள் கால்நடைச் செல்வங்களை காப்பாற்றுவதாற்காக மலையிலிருந்து இறகி, சமவெளிக்கு வந்து கொண்டிருப்பவர்கள். இரவு ஆனது, பாதையிலேயே கூடாரம் அடித்து, சமையல் செய்து சாப்பிட்டுவிட்டு, உறங்கிவிட்டு, விடிந்ததும் தங்கள் பயணத்தைத் தொடர்கிறார்கள். பனிக்காலம் முடிந்ததும் மீண்டும் அவற்றை மலைக்கு ஓட்டிக்கொண்டு போய்விடுகிறார்கள். நாங்கள் சென்ற பாதை முழுவதும் இந்தக் காட்சிக்குக் குறைவே இல்லை.

தேவப்பிரயாகையில் நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து நூறு கெஜத் தொலைவில் பாகீரதி, அலகநந்தாவுடன் கலக்கும் சங்கமக் கட்டம் இருக்கிறது. அதைப்பற்றி அறிந்தவுடனேயே அங்கு சென்று ஸ்நானம் செய்ய வேண்டும் என்று உள்ளம் துடித்தது.

சங்கமத்திற்கு வந்தோம். எங்கள் இடப்புறத்திலிருந்து அலகநந்தா, நொங்கும் நுரையுமாக ஆர்ப்பரித்துக் கொண்டு ஓடி வந்தது. வலப்புறத்திலிருந்து பாகீரதி கர்ஜித்துக் கொண்டு வந்தது.  இரண்டும் எங்கள் கண் எதிரே சங்கமம் ஆகி கங்கையாக மாறி ஓடிற்று. கையெடுத்துக் கும்பிட்டேன்.

தேவப்பிரயாகைக்கு வடக்கே, நூற்று முப்பது மைல்களுக்கு அப்பாலிருக்கும் கங்கோத்ரி என்னும் இடத்திலிருந்து பாகீரதி ஓடி வருகிறது. அதற்கு மேல் உள்ல “கோமுகம்” என்னும் குகையில் இருந்து அது உற்பத்தியாவதாகக் கூறப்படுகிறது. பகீரதனின் பெரு முயற்சியால், அவனது சந்ததியினருக்கு நற்கதி தந்தருள வானுலகிலிருந்து கோபாவேசத்துடன் பாய்ந்து வந்த கங்கையை, சிவபெருமான் தம் சிரசில் தாங்கிக் கொண்ட இடமாம் அது. அங்கிருந்து ஓடி வரும் நதிக்கு பாகீரதி கங்கை என்று பெயர். பத்ரிகாசிரமத்துக்கு மேலே, குபேரனின் தலைநகரான அலகாபுரியிலிருந்து அலகநந்தா கங்கை ஓடிவருகிறதாம். அப்புண்ணிய தீர்த்தம் விஷ்ணு பாதத்திலிருந்து பெருகி வருவதாகவும் நம்பப்படுகிறது.

சிவனது சிரசிலிருந்து பெருகிவரும் பாகீரதியும், விஷ்ணு பதத்திலிருந்து பெருகிவரும் அலகநந்தாவும்சங்கமம் ஆகும் இடத்தில் நாங்கள் நின்று கொண்டிருந்தோம். அது தத்துவங்களின் சங்கமம். ஒருமைப்பாட்டின் சின்னம். ஓர் அத்வைத பீடம்.“காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும்” என்பது போல், புண்ணிய தீர்த்தங்களைக் கண்ட உடனேயே ஸ்நானம் செய்து விட வேண்டும்.. அதிலும் சங்கமங்களில் ஸ்நானம் செய்யும் வாய்ப்பை நழுவ விடவே கூடாது. எந்த சுத்தமான நீரிலும் உடல் அழுக்கைப் போக்கிக் கொண்டு விடலாம். ஆனால், உள்ளத்தைத் தூய்மைப்படுத்திக் கொண்டு ஆத்மலாபம் பெறுவதாற்கு புண்ணியதீர்த்தங்கள் ஒன்றே கதி.