பத்ரி கேதார் – 7

கோபேசுவரிலிருந்து மீண்டும் சமோலி வந்து, அங்கிருந்து பீப்பல்கோட்டிற்குப் பயணமானோம்.

மனி மதியம் மூன்று. தோலை உரிக்கும் கடுமையான வெய்யில் அடித்துக் கொண்டிருந்தது. நானும் நண்பரும் பீப்பல்கோட்டி பஸ் நிலையத்தில் பஸ் ஏறினோம்.  ஆனால் அது புறப்படவில்லை. அங்கு நிறைய பஸ்களும், லாரிகளும், டாக்சிகளும் காத்துக் கிடந்தன. விசாரித்ததில் ஜோஷிமடத்திலிருந்து வண்டிகள் வந்த பிறகுதான் இங்கு நிற்கும் வாகனங்கல் போக முடியும் என்று தெரிந்தது.

இதற்குப் பெயர் “கேட் சிஸ்டம்”. இங்கும் ஜோஷிமடத்திலும் இந்த ஒருவழிப்பாதை முறை பின்பற்றப்படுகிறது. இங்கிருந்து ஒரே மலையேற்றம்தான். மிகக் குறுகலான பாதை. மிக ஆபத்தானதும் கூட. எனவே இருபுற போக்குவரத்து அனுமதிக்கப்படுவதில்லை. அப்படியிருந்தும் எதிரில் வண்டிகள் வந்து விடுகின்றன. அந்த ஆறடிப் பாதையில் எப்படியோ ஒதுங்கி வழி விடுகிறார்கள்.

ஒரு மணி கழித்து அந்தப் பக்கத்திலிருந்து ஒன்றன் பின் ஒன்றாக வண்டிகள் வரத்தொடங்கின. அப்படி வந்து நின்ற ஒரு காரில் மொரார்ஜி தேசாய் இருந்தார். அவரிட்ம எங்களை அறிமுகம் செய்து கொண்டோம்.

பத்ரியிலிருந்து திரும்பும் வழியில் பாண்டுகேசுவரம் என்ற இடத்தினருகில் ஏற்பட்ட மிக் அமோசமான மலைச்சரிவைப் பற்றி விவரித்தார் மொரார்ஜி. பாதை அடைபட்டு விட்டதால், எல்லோரும் அங்கேயே நிற்க வேண்டியதாயிற்று என்றும், சாதாரணமாகப் பாதையை சரிப்படுத்த ஒரு நாள் பிடித்திருக்குமென்றும், தாம் அங்கு இருந்ததால்தான் ராணுவத்தினர் முழுமூச்சுடன் உழைத்து, ஐந்து மணி நேரத்தில் வழி ஏற்படுத்தித் தந்ததாகவும் கூறினார் அவர். தம்முடன் வந்த மற்றொரு கார், வழியில் பௌழ்தடைந்து நின்று விட்டதென்றும், இங்கிருந்து மெக்கானிக் போய் அதை ரிப்பேர் செய்து எடுத்து வரும் வரை தாம் இங்கேயே காத்திருந்தாக வேண்டும் என்றும் சொன்னார். அதற்குள் எங்கள் பஸ் புறப்படுவதற்கான ஹாரன் கேட்கவே மொரார்ஜியிட்ம விடைபெற்றுக் கொண்டு நாங்கள் ஜோஷிமடத்திற்குப் புறப்பட்டோம்.

பீப்பல்கோட்டிலிருந்து ஜோஷி மடம் செல்லும் பாதையில் பயணம் செய்வது சற்று பயமாகவேயிருந்தது. ஒவ்வொரு வளைவின் போது, நெஞ்சு திக், திக் என்று அடித்துக்கொண்டது. எங்கள் டிரைவர் பஸ்ஸை ஓட்டியவிதமும் நம்பிக்கையளிப்பதாக இல்லை. எல்லோரும் பத்ரி நாராயணர்தான் ஒரே நம்பிக்கை. “விஷால் பத்ரி கீ ஜெய்!  கங்கா மாதா கீ ஜெய்!”.

ஓரிடத்தில் கங்கா மாதா எங்கள் பாதையில் குறுக்கிட்டாள். மலையைப் பிளந்து கொண்டு அவள் பாய்ந்து கொண்டிருந்தாள். பாதையே கண்ணுக்குத் தெரியவில்லை. அதன் மீது எங்கள் பஸ் சென்றாக வேண்டும். நாராயணா!!

ஆங்கு அடிக்கடி நீர் பெருக்கெடுத்து ஓடும் போலிருக்கிறது. அதற்காக கெட்டியான கான்க்ரீட் போட்டிருந்தார்கள். ஆனால் பிரவாகத்தின் காரணமாக அது ஆங்காங்கே உடைந்து போயிருந்தது. பள்ளங்களில் சிறு சிறு சரளைக் கற்களும், கூழாங் கற்களும் சேர்ந்திருந்தன. எங்கள் பஸ் அந்த இடத்தைக் கடப்பதற்குள் எங்களுக்கு உயிர் போய் உயிர் வந்தது. பிரவாகத்தின் வேக்ம பஸ்ஸை நேரே செல்ல விடாமல், பக்கவாட்டில் தள்ளியது. பாதையின் விளிம்பிற்கே வந்து விட்டோம். எட்டிப் பார்த்தபோது குலை நடுங்கியது. மூவாயிரம் அடி ஆழத்தில் அலகநந்தா ஓடிக் கொண்டிருந்தது. கண்களை மூடிக் கொண்டேன். மீண்டும் கண்களைத் திறந்தபோது, ஜலகண்டத்தைக் கடந்து விட்டிருந்தோம்.

இரவு ஏழு மணி சுமாருக்கு ஜோஷிமடம் வந்து சேர்ந்தோம். ஊருக்கு ஒரு மைலுக்கு அப்பாலேயே பஸ்ஸை நிறுத்தி “நடந்து போங்கள்” என்று சிறிதும் தயவு தாட்சண்யமின்றி கூறிவிட்டார் கண்டக்டர். சரியான குளிர். ஆறாயிர்ம அடி உயரத்திலல்லவா இருந்தோம். ஒரு கூலியின் தயவால் கடைவீதிக்கு வந்து, பத்ரிநாத் கோயில் கமிட்டியினர் நடத்தும் விடுதியில் ஓர் அறையை வாடகைக்கு அமர்த்திக் கொண்டோம்.

மறுநாட் காலையில் பார்த்தபோதுதான் ஜோஷி மடத்தின் ரம்மியமான சூழ்நிலையை முழுமையாக உணர முடிந்தது. அது ஒரு அருமையான மலை வாசஸ்தலம். கோட்டைச் சுவராக சுற்றிலும் மலைகள் ஓங்கி நிற்க, அவற்றுடன் வெண் மேகக் கூட்டங்கள் உறவாடி மகிழ்ந்தன. எங்கோ பள்ளத்தில் அலகநந்தா சிறு வாய்க்காலாக ஓட, அதன் கரையில் மலைப்பாதை மலைப்பாம்பாக வளைந்து வளைந்து சென்றது. கொலு பொம்மைகளாக ரானுவ லாரிகள் அதில் ஓடிக் கொண்டிருந்தன.

ஜோஷிமடம் என்றால் அங்கு ஸ்ரீ ஆதிசங்கரர் நிறுவிய ஒரு மடம் இருக்கும். அதைச் சுற்றிப் பத்து பதினைந்து வீடுகள் இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு, அந்த டவுனைக் கண்ட போது பிரமிப்பாகி விட்டது. ஜோஷிமடம் ஒரு ராணுவ தளம்.  அங்கு ராணுவ ஜீப்புகளும், லாரிகளும் போய் வந்த வண்ணம் இருக்கின்றன.

ஸ்ரீ ஆதிசங்கரருக்கு ஞான ஒளி ஏற்பட்ட  தலமாம் அது. எனவே அங்கு ஜோதிர் மடம் நிறுவினாராம். ஜோதிர்மடம் நாளடைவில் ஜோஷிமடம் ஆயிற்று. அதுவே அந்த ஊருக்குப் பெயராகவும் நிலைத்து விட்டது.

ஜோஷிமடத்தில் பழ வகைகளைப் பதம் செய்து ஜாம் தயார் செய்யும் ஆராய்ச்சிக்கூடம் ஒன்று இருக்கிறது. அதனருகில் ஒரு மேடை கட்டி அலங்கார்க குடிய வைத்திருக்கிறார்கள். அங்கிருந்து அந்த ஊரின் அருமையான “வ்யூ” கிடைக்கிறது. அந்த இடத்தில் அரைமணி அமர்ந்திருப்பதே பரவசமூட்டும் அனுபவமாக இருக்கிறது.

நாங்கள் ஸ்ரீ நரசிம்மசுவாமி ஆலயத்தைக் காணச் சென்றோம். கடைவிதியில் இருந்து சற்றுக் கீழே இறங்கி, மக்கள் வாழும் பகுதிகளைக் கடந்து அந்த ஆலயத்தை அடைந்தோம்.

ஏதோ வீட்டுக்குள் நுழைவது போலிருந்ததே தவிர, ஆலயத்தினுள் செல்கிறோம் என்ற உணர்வேயில்லை. மதிற் சுவர்களோ, கோபுரவ் ஆசலோ, மண்டபங்களோ இல்லை.

கருவறையில் ஸ்ரீ நரசிம்மமூர்த்தியின் சாளக்கிராமச் சிலை இருக்கிறது. அவர் வீராசனத்தில் அமர்ந்திருக்கிறார். அங்கு பத்ரிநாராயணர், உத்தவர், குபேரன், சண்டிகாதேவி, ராம லட்சுமண, சீதா முதலியவர்களும் இருக்கிறார்கள். கருட பகவான் எழுந்தருளியிருக்கிறார்.

கீழே, ஹிரண்யனை வதம் செய்யும் பாவனையில் சேஷாசனத்தில், உக்கிர நரசிம்மர் காட்சியளிக்கிறார். ஸ்ரீ ஆஞ்சநேயர், பிரும்மா, கிருஷ்ண விக்கிரங்கங்கள் இருக்கின்றன.

வெளியிலுள்ள திண்ணையில் லட்சுமியின் சிறு சிலையொன்று இருக்கிறது. அது வேதவியாசர அராதித்தது என்றும், ஆதிசங்கரரின் இஷ்டதேவதையென்றும் கூறுகிறார்கள்.

எதிரே திருமாலின் ஆலயம் ஒன்று தனியே இருக்கிறது. அதற்கு வெளிப்புரம், சந்நிதியை நோக்கியவாறு பித்தளையிலான ஒரு பெரிய கருடன் வீற்றிருக்கிறார்.

கருவறையில் உறையும் விஷ்ணு மூர்த்தி, வாசுதேவன் என்ற திருநாமம் தாங்கியிருக்கிறார். அச்சிலாமூர்த்தியின் பிரபையில் தசாவதாரக் காட்சிகள் காணப்படுகின்றன. அருகில் ஸ்ரீதேவி, பூதேவி, லீலாதேவி, ஊர்வசி தேவி முதலியோர் இருக்கின்றனர். தனியே பலராமன் இருக்கிறார்.

நான்கு கரங்கள் கொண்ட இந்த மூர்த்தியின் மேல் வலக்கையில் கதையும், மேல் இடக்கையில் சக்கரமும், கீழ் இடக்கையில் சங்கும், கீழ் வலக்கையில் பத்மமும் இருக்கின்றன.

இக்கோயிலின் பிராகாரத்தில் பிரும்மா, இந்திரன், சந்திரன், சூரியன் முதலியவர்களுக்குச் சந்நிதிகள் இருக்கின்றன. அஷ்டபுஜ கணபதி எழுந்தருளியிருக்கிறார். வெள்ளிக் கல்லால் ஆன கௌரிசங்கர் சிலை அற்புதமாயிருக்கிறது. அங்கு நவதுர்க்கா ஆலயம் ஒன்று இருக்கிறது. “சைலபுத்திரி, பிரும்மச்சாரிணி, சந்திரகண்டி, குஸ்மாண்டி, ஸ்கந்தமாதா, கார்த்தியாயினி, காளராத்திரி, மகா கௌரி, ஸித்திபுத்திரி” என்று கூறியபடி அங்கிருந்த பண்டா ஒவ்வொரு சிலையாகச் சுட்டிக் காட்டினார்.

அறத்தின் ஆட்சி மங்கிப் போய், நல்லவர்கள் துயரமடைய நேரும் போதெல்லாம், திருவவதாரம் செய்து இப்பூமியில் தர்மத்தை மீண்டும் நிலைனாட்டும் பரம கருணாமூர்த்தியான எம்பெருமான், சீற்றமே உருவெடுத்தது போல் ஸ்ரீ நரசிங்கனாகத் தோன்றினார். அது பொய்க்கோபம். மனிதகுலத்தை ரட்சிப்பதாற்காக பகவான் வரவழைத்துக் கொண்ட கோபம் அது. ஆனால் அக்கோபத்தைக் கண்டு அண்ட சராசரமே நடுங்கியது.

அகங்காரச் சிந்தையால் அதர்மத்திற்கு வித்திட்ட இரணியனின் மார்பைப் பிளந்து, அவன் உள்ளத்திலும் அச்சம் குடிகொண்டிருந்ததைக் காட்டினாராம். திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள எம்பெருமான் அதைக் கண்டு தேவாதி தேவர்களும் தங்கல் மணிக்கிரீடங்கள் பூமியில்பட, வணங்கித் தொழுதனராம். இன்றும் தொழுத வண்ணம் நின்று கொண்டிருக்கிறார்களாம். அத்தலம் ந இதயத்துள் இருக்கிறதாம். இந்தத் திவ்விய தேசத்தை திருப்பிரிதி என்று அழைக்கிறார் திருமங்கையாழ்வார். பத்து பாசுரங்களாலே மங்களாசாசனம் செய்து இத்திருப்பதியைப் போற்றிப் புகழ்ந்துள்ளார் அவர்.

இங்குள்ள காட்டுப்பன்றிகள் குனிந்து தங்களுடைய கொம்புகளால் மாணிக்கப் பாறைகளைப் பிளக்க, சிதறிய மாணிக்கக்கற்கள்  ஒளி வீசிக்கொண்டே, நீர்வீழ்ச்சிகளில் அடித்துக் கொண்டு உருண்டு வருகின்றனவாம். இவ்வாறு ஒவ்வொரு பாசுரத்திலும் திருமாலின் பெருமையைப் பேசிக் கொண்டே, அன்று தாம் கண்ட ஜோஷி மடத்தின் இயற்கைக் காட்சிகளைத் தீந்தமிழ்ச் சொற்களால் கவி நயத்துடன் அனுபவிக்கிறார் திருமங்கையாழ்வார். மற்றொரு பாசுரத்தில், வானத்திலே கறுத்த மேகக் கூட்டங்கள் நீர்க்கனத்தாலே ஓடமாட்டாமல் ஓரிடத்திலேயே நின்று கர்ஜிப்பதாகவும், அதைக்கேட்டு மலைப்பாம்புகள் தங்களுக்கு இரையாக யானைக் கூட்டங்கள் வருகின்றனவென்று எண்ணுவதாகவும் அருமையான காட்சியொன்றை நம் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிறார். ஒவ்வொரு பாசுரத்தின் இறுதியிலும், “பிரிதி சென்று அடை,, நெஞ்சே” என்று தம் மனத்தை அத்திருத்தின் பால் செலுத்தி, நம்மையெல்லாம் அத்திவ்விய தேசத்திற்கு அழைத்துச் சென்று, பேரானந்த நிலை எய்தும்படித் தூண்டுகிறார்.

இங்குள்ள ஸ்ரீ நரசிம்மமூர்த்தி ஸ்ரீ ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கர யந்திரம் ஒன்று கோயிலில் இருந்ததாகவும், அது தற்போது அலகநந்தாவின் அடியில் இருப்பதாகவும் நம்பப்படுகிறது.

இந்த நரசிம்மமூர்த்தி மிகவும் சக்தி வாய்ந்தவராம். நம் முன் வந்து நிற்பவர்கள் செய்த பாவங்களையெல்லாம் அவர் அறிவார் என்றும், நினைத்தால் அவை என்னென்னவென்று உரக்க அவரால் கூறமுடியும் என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள். அதனால் அவரைத் தரிசித்தவர்கள் தாங்கள் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்பதோடு, பின்னர் பாவ்ம செய்யவே அஞ்சுவார்களாம்.

நரசிம்மருடைய கர்ம ஒன்று மெலிவடைந்து கொண்டே போகிறதாம். இறுதியாக அது இற்று விழும்போது, பத்ரிநாத் கோயிலுக்குச் செல்லும் வழியில் மலைகள் விழுந்து அப்பாதை அடைக்கப்பட்டு விடுமாம். அதற்குப் பிறகு பத்ரி நாராயணர், பாவிஷ்ய பத்ரி என்ற இடத்திலோ, ஆதி பத்ரி என்ற இடத்திலோ குடியேறி விடுவாராம்.

ஸ்ரீ நரசிம்ம சுவாமியைத் தரிசித்து விட்டு, ஸ்ரீ ஆதி சங்கரர் நிறுவிய ஜோதி மடத்தைக் காணச் சென்றோம். ஸ்ரீ நரசிம்மர் கோயிலுக்கு, கடை வீதியில் இருந்து இடப்புறம் இறங்கிச் செல்லவேண்டும். ஜோதி மடத்திற்கு வலப்புரம் மலையேறிச் செல்லவேண்டும். ஆனால், அதிக உயரம் இல்லை.

நுழைவாயிலுக்குள் சென்றதும் முதலில் ஸ்ரீ அன்னபூரணி தேவியைத் தரிசிக்கிறோம். அமர்ந்த திருக்கோலம். நான்கு கரங்கள், சலவைக் கல்லாலான புராதன உருவச்சிலை.

வலப்புரம் திரும்பி சற்று கீழிறங்கிச் சென்றால், பிரம்மாண்டமான கல்பக விருட்சத்தைக் காண்கிறோம். இது வரை அம்மாதிரியான மரத்தை நான் கண்டதில்லை. அதன் இலை,அ ரச இலையைவிடப் பெரியதாக இருந்தது. ஸ்ரீசைலத்தில் ஒரு கல்லால மரத்தைக் காட்டி ஸ்ரீ ஆதிசங்கரர் அதனடியில் தபஸ் செய்ததாகக் கூறினார்கள். அதைப் போல் பன்மடங்கு பெரிதாக இருந்தது இது. சிவபெருமானின் ஜடாரூபமாயிருக்கும் இந்தக் கல்பக விருட்சம், துவாபர யுகத்திலிருந்து இங்கு இருந்து வருகிறதாம்.

இம்மரத்தடியில் ஒரு குகையிருக்கிறது. அங்கு ஆதிசங்கரர் சில ஆண்டுகள் தவமிருந்து ஞான ஒளி பெற்றதாகவும் கூறப்படுகிறது. இங்குதான் ஸ்ரீ வியாச பகவான் அவருக்குத் தரிசனம் தந்தாராம்.

அந்தக் குகை பூட்டப்பட்டிருந்ததால் வெளியே அமர்ந்தபடியே அதை தரிசித்தேன். புண்ணிய பாரதத்தின் தென் மேற்குக் கோடியில், கொல்லூரு மூகாம்பிகை ஆலயத்தில் ஸ்ரீ ஆதிசங்கரர் தபஸ் செய்த அறையில் சற்று நேரம் அமர்ந்திருக்கும் பேறு பெற்றேன். தற்போது, வட கொடியில் அவர் தவமிருந்த குகையின் வாயிலில் சற்று நேரம் தியானத்தில் ஆழ்ந்திருக்கும் நல் வாய்ப்பைப் பெற்றேன்.

அக்குகையில் ஒன்றுமேயில்லை. அது வெற்றிடமாக இருந்தது. அதைக் கண்டபோது ஸ்ரீ காமகோடி பெரியவர், சீடர்களோடு கூடிய ஸ்ரீ சங்கர பகவானினுருவச் சிலைகளை நாடெங்கும் பிரதிஷ்டை செய்து மண்டபங்கல் எழுப்பிக் கொண்டிருப்பது என் நினைவுக்கு வந்தது. இந்தக் குகையிலும் ஸ்ரீ சங்கரரின் சிலை ஒன்று வைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன். என்ன ஆச்சரியம், பத்ரிநாத்திற்குச் சென்றபோது என் கனவு பலிப்பதாற்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்தன. அதைப் பற்றிப் பின்னர் கூறுகிறேன்.

குகைக்கருகில் ஒரு சிவாலயம் இருக்கிறது. சிவலிங்கத்திற்கு ஜோதீஷ்வர் என்ற திருநாமம். அங்கு கணபதி, பார்வதி, காலபைரவர், ஆஞ்சநேயர், வீரபத்திரர், நந்திகேசுவரர் முதலியவர்கள் இருக்கிறார்கள். அங்கோர் அகண்ட தீபம், ஜோதியின் வடிவாக, ஞான ஒளியாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. வெளியே மிகப் பழமையான கணபதி சிலையொன்றும், நாலைந்து நந்திகளும் இருக்கின்றன.

ஜோதிமடத்தில் ஸ்ரீ ஆதிசங்கரரின் படம் ஒன்று இருந்தது. அதற்கு நமஸ்காரம் செய்து விட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.