நாராயண ரிஷியும், ஸ்ரீ நர ரிஷியும், ஸ்ரீ கிருஷ்ணனாகவும், அர்ஜுனனாகவும், பின்னர் அவதாரம் செய்ததாக மகாபாரதம் கூறுகிறது. பாரதப் பெரும்போரின் மத்தியில் பரமாதவான ஸ்ரீ கிருஷ்ணன், ஜீவாத்மாவான அர்ஜுனனுக்கு ஞான உபதேசம் செய்தருளுவதாகப் பகவத் கீதை அமைந்துள்ளது.
ஸ்ரீமத் பாகவதத்திலும் பத்ரிகாசிரமத்தின் மகிமை விரிவாக எடுத்துரைக்கப் பட்டுள்ளது.
ஸ்ரீ கிருஷ்ண பரமாதமா, பூமியில் தமது தர்ம பணிகளெல்லாம் முடி ந்து சுவர்க்கம் போவதற்கு முன் தமது உத்தம சீடரான உத்தவரைஅ ழைத்து, “நீ பத்ரிகாசிரமம் செல். அது என்னுடைய ஆசிரமம். அங்கு அலகநந்தாவில் ஸ்நானம் செய்து, துறவுக்கோலம் பூண்டு, புலன்களை வென்று, என் உபதேச மந்திரங்கலை மனத்திற்குள் மனனம் செய்து கொண்டிரு. இறுதியில் என்னுடன் ஐக்கியமாகி விடுவாய்” என்று கூறினார்.
அதன்படியே உத்தவர் துவாரகையை விட்டுப் புறப்பட்டு, வழியில் பாண்டவர்களின் சிறிய தந்தையான விதுரரைச் சந்தித்து, பத்ரிகாசிரமம் வந்து சேர்ந்தார். அங்கு நரநாரயணர்கள் தவத்தில் ஆழ்ந்திருந்ததைக் கண்டு மெய்த்தவம் இயற்றி, இறுதியில் தாமும் பகவானுடன் ஐக்கியமாகி விட்டார்.
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் பரமசீடராயிருந்து, பதியாலும், சேவையாலும் அவரோடு கலந்து விட்ட உத்தவரின் மூர்த்தியே இந்த ஆலயத்தில் உற்சவ மூர்த்தியாக இருந்து வருகிறது.
நாராயண ரிஷி கடும் தவம் இருப்பதைப் பார்த்து இந்திரனுக்குப்பொறுக்கவில்லையாம். பல வழிகளிலும் அவருக்குத் தொந்தரவு கொடுத்தானாம். கடைசி ஆயுதமாக,அ வரை மயக்கி, அவருடைய உறுதியைக் குலைப்பதர்காகப் பேரழகிகளான அப்சரஸ் ஸ்த்ரீகளைக் கொண்டு வந்து அவர் எதிரில் நிறுத்தினானாம்.
பார்த்தார் நாராயண ரிஷி, லேசாகச் சிரித்தார். தம் தொடையைத் தட்டினார். அதிலிருந்து பேரழகியான ஒரு அதிசய மங்கை வெளி வந்தாள். அழகு தேவதையே அவளைக் கண்டு பொறாமையடைந்தாள். என்ன, இப்படியும் ஒரு அழகியா? இயற்கையின் வசீகர லாவண்யமெல்லாம் அவள் திருவதனத்தில் அப்படியே குடிகொண்டு விட்டதோ?
தேவலோக வாசிகளான அப்சரஸ் பெண்மணிகளெல்லாம் வெட்கித்தலைகுனியும் வண்னம் ஒய்யார எழிலுடன் நின்ர அந்த மங்கையைப் கண்டு இந்திரன் திகைத்து நின்றான். “மதி மயக்கும் இத்தகைய ரூபவதியைத் தம்மிடமே கொண்டுள்ல மகா புருஷரின் தியானத்தையா நாங்கலைக்கப் பார்த்தேன்?” என்று தன்னையே நொந்து கொண்டான். அவருடைய மகிமை புரியாமல் தவறிழைத்து விட்ட தம்மை மன்னித்தருளும்படி நாராயண ரிஷியிடம் வேண்டினான்.
நாராயணரின் தொடையிலிருந்து தோன்றிய அப்பெண்மணிதான் ஊர்வசி. “ஊரு” என்றால் தொடை என்று பொருள். அதிலிருந்து தோன்றியவளாயிற்றே!
பத்ரிதலத்தை “ஊர்வசி பீடம்” என்றும் “நாரத க்ஷேத்ரம்” என்றும் குறிப்பிடுகிறார்கள்.
ஆலய்த்திற்குத் தெற்கில் ஒரு பர்லாங்கில் ஊர்வசிக்கு ஒரு சிறு கோயில் இருக்கிறது. வடக்கே ஒரு மைலிலிருக்கும் இந்திரதாரா என்ற ஒரு சிறு கிராமத்தில் வசிப்பவர்கள் ஊர்வசியின் சந்ததிகள் என்று தங்களைக் கூறிக்கொள்கிறார்கள்.
ஸ்ரீ பத்ரிநாராயணரின் ஆலயம் எப்போதும் “கலகல”வென்றிருக்கிறது. காலையில் ஏழு மணிக்கு ராவல்ஜி என்று அழைக்கப்படும் நம்பூதிரி அர்ச்சகர், அவருக்கென்று பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருக்கும் வெந்நீர் குண்டத்தில் ஸ்நானம் செய்து விட்டு பூஜைக்கு வந்துவிடுகிறார். பின்னர் நிர்மால்ய தரிசனம், அபிஷேக தரிசனம், திருமெணி தரிசனம், அலங்கார தரிசனம், ஆரத்தி தரிசனம் என்று ஸ்ரீ நாராயணப் பெருமானின் திவ்விய மங்களக் காட்சியற்புதங்கள் அடுத்தடுத்து தொடர்கின்றன. இவை அனைத்தும் முடிவதற்கு ஒன்பதரை, பத்து மணியாகிறது.
அங்கு அமர்ந்து, அபிஷேக ஆராதனைகளைக் காண்பதற்கு கண்கோடி வேண்டும். முதலில் கலச பூகைகள் செய்து விட்டு, ராவல்ஜி அபிஷேகம் செய்யத் தொடங்குகிறார். எண்ணெய், ஆட்டா மாவு, பால், தயிர், தேன், நெய், சர்க்கரை, நீர், சந்தனம், குங்குமப்பூ நீர் என்று ஒன்றன்பின் ஒன்றாக அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. பின்னர், பூஜை செய்யப்பட்ட கலச நீரால் அபிஷேகம் ஆகிறது. இறுதியாக அத்தர் அபிஷேகம். அது முடிந்த பிறகு, திருமுகமண்டலத்தைத் தவிர, திருமேனி முழுவதும் சந்தனக்காப்பு நடைபெறுகிறது. அதாற்கு மேல் மலர்களாலும் கண்வர் அலங்காரம் செய்கிறார் ராவல்ஜி. திருமேனி தரிசனத்தின் போது நாம் கண்ட அந்தச் சிறிய மூர்த்தியா இப்படி மாறி விட்டது என்று நாம் பிரமிக்கும் வகையில் அந்த அலங்காரம் அமைகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவித அலங்காரம்.
பதினொன்றரை மணிக்கு அடுத்த பூஜை நடைபெற்றதும், சரியாகக் பன்னிரண்டு மணிக்கு கோயிலை அடைத்து விடுகிறார்கள். அதற்குப் பிறகு, நான்கு மணிக்குத்தான் தரிசனம். இரவு எட்டுஎ ட்டரை வரை அஷ்டோத்ர, சகஸ்ரநாம அர்ச்சனைகள் நடைபெறுகின்றன. கடைசியாக கீதகோவிந்தம் என்ற சயன ஆரத்தி நடைபெறுகிறது. இரவு மங்களாரத்தி நடைபெற்ற பிறகு மலர்களையும், நகைகளையும் ஒவ்வொன்றாகக் கலைத்து, சந்தனத்தை மட்டும் விட்டு வைத்து கருவறையை மூடிவிடுகிறார் ராவல்ஜி. மறுநாள் காலை நிர்மால்ய தரிசனத்தின் போது அந்தச் சந்தனத்தை எடுத்து உருண்டையாக உருட்டி, திருப்பாதங்களில் ஒற்றி வைத்து விடுகிறார். பின்னர் அதுதான் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
செப்டம்பர் 25-ம் தேதி செவ்வாய்கிழமை. காலை எட்டு மணிக்கு நாங்கள் வடக்கே மூன்று மைலிலிருக்கும் “வியாசர் குகை” இருக்கும் “மானா” கிராமத்தை நோக்கிப் புறப்பட்டோம். எங்களுடன் ஸ்ரீமடம் கண்ணனும் சேர்ந்து கொண்டார். ஸ்ரீ காஞ்சிப் பெரியவரின் சேவையையே வாழ்வின் பெரிய லட்சியமாக்கிக் கொண்டு விட்ட கண்ணை, நான் முதன் முதலில் 1957-ம் ஆண்டு சென்னையில் சந்தித்தேன். அன்று முதல் இன்று வரை மாமுனிவரின் கருணையால் நல்ல நட்பிற்கோர் இலக்கணமாய் நாங்கள் பழகி வருகிறோம்.
அன்று எங்களுக்கு வழிகாட்டி, ராமச்சந்திர யோகி என்னும் சாது. அவர் காஞ்சீபுரத்தைச் சேர்ந்தவர். வடநாட்டிலும், இமாலயத்திலும் அவர் யாத்திரை செய்யாத தலமே இல்லை எனலாம். அமர்நாத், கைலாஸ், மானசரோவர் எல்லாம் பார்த்தவர். அப்போது பத்ரிநாத்தில் தங்கியிருந்தார். நல்ல தமிழ் பேசியதாலும், சுற்றிலுமுள்ள இடங்களெல்லாம் அவருக்கு அத்துப்படியாகியிருந்ததாலும் அவருடன் அவ்வப்போது பேச்சுக் கொடுத்து அவரிய எங்கள் “கைடு” ஆக்கிக் கொண்டேன்.
நாங்கள் பேசிக்கொண்டே நடந்தோம். வெய்யில் காய்ந்து கொண்டிருந்தாலும், குளிர்ந்த காற்றும் வீசிக்கொண்டிருந்தது. ஸ்வெட்டர், ஷால் எல்லாமே தேவையாயிருந்தன.
அரை மைல் நடந்திருப்போம். “அதுதான் பிருகு மகரிஷி தபஸ் செய்த இடம். அங்கே ஒரு குகை இருக்கிறது. பார்க்கணுமா?” என்று கேட்டார் ராமச்சந்திர யோகி. “ஓ, முடிந்தவற்றைப் பார்த்து விடுவோமே” என்று கூறி, அவர் பின்னாலேயே நடந்தோம்.
பிருகு மகரிஷி ஒரு சமயம் நாராயணனை மார்பில் உதைத்தாராம். பத்நாத் கருவறையில் இருக்கும் மூல மூர்த்தியில் அந்த அடையாளம் இருப்பதை ராவல்ஜி எங்களுக்கு சுட்டிக் காட்டினார்.
சிறு குன்றின் மீதுள்ள பிருகு மகரிஷி தவமிருந்த குகைக்குள் சென்றோம். அங்கே ஐந்தாறு சாளக்கிராமங்களும், ராதாகிருஷ்ண விக்ரகமும், லட்சுமி விக்ரகமும் இருக்கின்றன. அருகிலேயே வசித்து வரும் முகுந்தாச்சாரி சுவாமி என்ற சாது அங்கு பூஜை செய்து வருகிறர். சென்னை சௌகார்பேட்டையில் சிலரைத் தமக்குத் தெரியும் என்று பெருமையுடன் கூறிகொண்ட அவர், எங்களை அன்புடன் உபசரித்து அருமையான டீ தயாரித்துக் கொடுத்தார்.
அடுத்து நாங்கள் மாதாமூர்த்தி கோயிலைக் காணப் புறப்பட்டோம். செல்லும் வழியில், நாராயணப் பர்வதத்திலிருந்து நீர்த்தாரைகள் விழுவதையும், சூரிய ஒளியில் அவை உருக்கிவிட்ட வெள்ளியாக மின்னுவதையும் கண்டு ரசித்தோம். இவற்றைப் போன்றே, எதிர்ப்புறமுள்ள நரபர்வதத்திலிருந்து பனி உருகி, நான்கு தாரைகள் விழுகின்றன. அவற்றை, ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களாகக் கூறுகிறார்கள்.
இந்திரதாரைக்குச் சமீபத்தில்தான் இந்திரன் தவமிருந்ததாகக் கூறுகிறார்கள். அதைப் போன்றே, பிருகு தாரையும் மார்க்கண்டேய தாரையும் இருக்கின்றன.
இந்திரதாரைக்கு அருகிலிருப்பதுதான் “இந்திரதாரா” கிராமம். இங்கு பத்து பதினைந்து வீடுகள் இருந்தன. அங்கு வசிப்பவர்கள், அருகிலுள்ள நிலத்தைப் பண்படுத்தி பயிரிட்டுப் பிழைக்கிறார்கள். சிறுவர்கள், மலைமீது ஆடு மாடுகள் மெய்க்கிறார்கள். பெண்கள், புல்லை வெட்டிப் பெரிய பெரிய சுமைகளாக முதுகில் சுமந்து வருகிறார்கள். பெண்மணிகள் வீட்டில் கம்பளி ஆடை நெய்கிறார்கள். எல்லோரும் சுறுசுறுப்பாயிருக்கிறார்கள்.
அம் மலைச்சாதி மக்கள் கள்ளங்கபடமற்றவர்கள். நம்மைக் கண்டதும் “ஜெய் சீதாராம்” என்கிறார்கள. அங்கு “குட்மார்னிங்”கோ, “நமஸ்தே”யோ கிடையாது. நாமும் பதிலுக்கு “சீதாராம்” என்று கூறிவிட்டால் அவர்கள் ஆனந்தத்தில் பூரித்துப் போகிறார்கள். நாம் எங்கு வாழ்ந்தாலும், எப்படி வாழ்ந்தாலும் ஒரே பாரதக் கலாசாரத்தைச் சேர்ந்தவர்கள். எங்கள் கிராமத்திற்கு வரும் உங்களுக்கு உள்ளன்புடன் நல்வரவு கூறுகிறோம் என்பதைத்தான் “ஜெய் சீதாராம்” என்ற வரவேற்பு தெளிவுபடுத்துகிறது. கன்னியாகுமரி முனையையும், இமாலய உச்சியையும் ராமனும் கிருஷ்ணனும் தானே இணைத்து வைத்திருக்கிறார்கள்!
இந்திரதாரா கிராமத்தில் வசிப்பவர்கள் தங்களை ஊர்வசியின் சந்ததிகள் என்று கூறுவதை ஒருவகையில் ஒப்புக் கொள்ளத்தான் தோன்றுகிறது. அந்தப் பெண்மணிகள் அத்தனை அழகாக இருக்கிறார்கள். அந்த நிறமும், அந்த மருட்சியும், அந்தப் புன்சிரிப்பும், அந்த நாணமும், அசாதாரணமாக காணப்படுகின்றன. வளம் கொழிக்கும் மண்ணில் வகை வகையான வண்ணங்களுடன் தோன்றி, இயற்கையின் வனப்பைக் கூட்டும் வாச மலர்களைப்போல், இமயத்தின் இணையில்லா எழிற் செல்வங்களாகப் பிறந்து அதன் வரம்பற்ற வசீகரத்திற்கு அழகு சேர்க்கும் அணிகலன்களாக இவர்கள் திகழுகிறார்கள். வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த நான்கு ஐந்து இளம் பெண்கள் எங்களைக் கண்டு “களுக்”கென்று சிரித்து, தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டார்கள். “உன் பெயர் என்ன?” என்று ஒவ்வொருவராகக் கேட்டேன். :ராஜேஸ்வரி”, “தனேஸ்வரி”, “சரஸ்வதி”, “மாலா” என்று பதில் வந்தது. எல்லாம் நம் பக்கத்துப் பெயர்கள்தான்!
இந்திரதாராவிலிருந்து ஒரு மைல் நடந்து மாதாமூர்த்தி கோயிலுக்கு வந்து சேர்ந்தோம். நர, நாராயண ரிஷிகளின் தாயாரின் கோயில் அது.
அன்னை தவக்கோலத்தில் அமர்ந்திருக்கிறாள். நான்கு கரங்கள் கொண்ட மூர்த்தி அது. அங்கு நித்திய பூஜை நடைபெறுவதாகத் தெரியவில்லை. செப்டம்பர் மாதம் வாமன துவாதசியன்று பத்ரிநாராயணரின் உற்சவ மூர்த்தி இங்கு எழுந்தருளுகிறார். அப்போது பூஜை நடைபெறுமாம்.
நர, நாராயணகளின் தவத்திற்காக பத்ரிகாசிரமம் வந்து வெகு நாட்களாகி விட்டதால் பெற்றோர்களுக்குக் கவலை ஏற்பட்டு விட்டதாம். அவர்களைத் தேடிக் கொண்டு வந்த மாதா மூர்த்தி, மைந்தர்களின் வேண்டுகோலுக்கிணங்கி பத்ரிகாசிரமத்தின் எல்லையிலேயே தங்கிவிட்டாராம். மைந்தர்களும் பர்வந்தங்களாக அங்கேயே தங்கி விட்டார்களாம். இப்படி ஒரு கதை சொல்கிறார்கள். “தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை”த் தரிசித்தவர்கள், அத்தெய்வத் தாயையும் தரிசிப்பது கிடைத்தற்கரிய புண்ணியம் அன்றோ!
மாதா மூர்த்தி ஆலயத்திலிருந்து பார்த்தால் தொலைவில் “வசுதாரா” நீர்வீழ்ச்சி, ஒரு மெல்லிய வெண்மைக் கீற்றாகத் தெரிகிறது. அது நானூறு அடி உயரத்திலிருந்து விழுகிறது. அஷ்டவசுக்கள் தவமிருந்த இடமாம் அது. அலகாபுரியிலிருந்து கொட்டும் அந்த நீர்வீழ்ச்சிதான் அலகநந்தாவாகப் பிரவகிக்கிறதாம்.
மாதாமூர்த்தி கோயில், அலகநந்தாவின் தென் கரியயிலிருக்கிறது. அங்கிருந்து சர்றுத் தொலைவில் அலகநந்தா, சரஸ்வதி நதியுடன் கலக்கும் சங்கமம் இருக்கிறது. அதற்கு “கேசவப்பிரயாகை” என்று பெயர். இந்த சங்கமத்தருகில் ஒரு தொங்கும் பாலம் இருக்கிறது. அதைக் கடந்துதான் மானா கிராமத்திற்குச் செல்ல வேண்டும். அந்தப் பாலத்தின் மீது நட்ககும் போது உடல் நடுங்குகிறது. அதன் ஆட்டம் அச்சத்தைத் தூண்டுகிறது. அதன் இரு கோடியிலும் துப்பாக்கியுடன் காவல் புரியும் ரானுவ வீரர்களின் கழுகுப் பார்வை நம் அச்சத்தை அதிகப்படுத்துகிறது. “பாஸ்” இல்லாமல் ஒருவரும், அந்த பாலத்தைக் கட்ககவோ மானா கிராமத்திற்குள் நுழைந்து விடவோ முடியாது.
அது இந்தப் பகுதியில் கடைசி இந்திய கிராமம். அங்கிருந்து இருபது மைல் கடந்தால், சீனாவின் ஆதிக்கத்திலுள்ள திபெத்தின் எல்லை வந்துவிடும். எனவேதான் நம் எல்லைப் பாதுகாப்புப் படை கண்கொத்திப் பாம்பாக எந்நேரமும் கண்காணித்துக் கொண்டிருக்கிறது.
ராணுவத்தினரின் கெடுபிடிக்கும், கேல்விகளுக்கும் ஒருவாறு ஈடு கொடுத்துக் கொண்டே, நாங்கள் அந்தக் கடைசிக் கிராமத்தில் காலடி எடுத்து வைத்தோம்.
“நீங்களெல்லாம் நம்ம ஆனந்த விகடனிலிருந்தா வந்திருக்கீங்க?”. அந்த உயரத்தில், அந்த எல்லையோரத்தில், பாரதத்தின் அந்தக் கடைசி கிராமத்தில் ஒரு தமிழ்க் குரலைக் கேட்டது, அலகநந்தாவின் நீரைவிட குளுமையாக இருந்தது.
திரும்பிப் பார்த்தோம். அப்படி விசாரித்த த்மிழர் ஒரு ராணுவ வீரர்.
“இங்கே செக்கிங் அதிகங்க. காமிராவுக்கு பர்மிட் வாங்கிக்கிட்டு வந்திருக்கீங்களா?” என்று கேட்டார் அந்த தமிழ் ஜவான்.
வியாச குகைக்குச் செல்லும் வழியில், ஒரு ராணுவ செக் போஸ்ட் இருந்தது. அங்கு எங்களைத் தடுத்து நிறுத்தி, பர்மிட்டைக் காட்டச் சொன்னார்கள். நான் பெருமையோடும், தன்னம்பிக்கையோடும் என்னிட்மைருந்த காகிதங்கலை எடுத்துக் காட்டினேன். ஒரு ஜவான வற்றை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றார். சற்றைக்கெல்லாம் அவர் வெளியே வந்து “நீங்கள் போய்க் குகையை வேண்டுமென்றால் பார்த்து விட்டு வரலாம். போட்டோ எடுக்க அனுமதி கிடையாது என்றார். எங்களுக்குத் தூக்கிவாரிப் போட்டது.
முய்ற்சி செய்து பார்க்கலாம் என்று உள்ளேச் எல்ல அனுமதி பெற்று, அதிகாரியைச் சந்தித்து மன்றாடினேன். அவர் கல்லாக இருந்தார்.
இது நாட்டின் பாதுகாப்பைப் பொறுத்த விஷயம். தயவு செய்து தொந்தரவு செய்யாதீர்கள், என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார் அவர். அதோடு என் கையிலிருந்து குறீப்பெடுக்கும் சிறிய நோட்புத்தகத்தை வாங்கி, “இதில் என்ன எழுதியிருக்கிறீர்கள்?” என்று சந்தேகத்துடன் கேட்டார். நான்படித்து விளக்கம் கூறிய பிறகுதான் அதை என்னிடம் தந்தார். உளவு அறியும் இன்ட்டலிஜென்ஸ்” பிரிவைச் சேர்ந்தவராயிற்றே, எளிதில் விட்டு விடுவாரா?கடமை தவறாத அந்த அதிகாரிக்கு நன்றி தெரிவித்து விட்டு நாங்கள் வியாச குகையை நோக்கி நடந்தோம். வருந்தி வருங்தி அழைத்தும், “இங்கிருந்து ஓரடி கூட எடுத்து வைக்க மாட்டேன்” என்று தீவிர சத்தியாகிரகியைப் போல் எழுந்திருக்கவே மறுத்து, தன் காமிராக்களுக்கு காவலாக அங்கேயே பழியாக உட்கார்ந்து விட்டார் நண்பர். நானும் கண்னமும் மட்டும் புறப்பட்டுச் சென்றோம்.