பத்ரி கேதார் – 20

“ஓ”வென்று வெறிச்சோடிக் கிடந்த அந்த இடத்தில் திடீரென்று வெளிச்சம் குறைந்து, மளமளவென்று இருள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. அப்போதிருந்த என் உடல் நிலையிலும், மனத் தளர்ச்சியிலும், அவசியமற்ற ஒரு பீதி என்னைப் பற்றிக் கொண்டதை உணர்ந்தேன். என் அறிவு என்னைப் பார்த்து சிரித்தது. என் உணர்வு உள்ளத்தை அரித்தெடுத்தது. கணத்திற்குக் கணம், என் மனோதிடம் மாயமாய் மறைந்து வருவதை கண்டு என் திகில் பன்மடங்காயிற்று.

நண்பர்கள் இருவரும் பாதாள அறையிலிருந்து வந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து லால்பிஹாரி வந்தார். எங்களுக்கு ஓர் அறையை ஒழித்துக் கொடுப்பதாற்காக பெரும்பாடி பட்டார் அவர். அங்கிருப்பதே இரண்டு, மூன்று அறைகள்தான். மரியாதைக்குத்தான் “அறை” என்று குறிப்பிடுகிறேன். “டஞ்சன்” என்று அழைப்பதுதான்பொருத்தமாக இருக்கும். ஐந்தரை ஆறு மணிக்கெல்லாம் கும்மிருட்டாகி விட்டதால், அறையினுள் நுழையவே பயமாயிருந்தது. நல்ல வேளை, எங்கள் கையில் டார்ச் இருந்ததால் பிழைத்தோம்.

பெருங்கூச்சல் போட்டு அந்த அறையிலிருந்த நாலைந்து சாதுக்களை வேறு அறைக்குத் துரத்தினார் லால்பிஹாரி. அவர்கள் பதிலுக்குச் சத்தம் போட்டார்கள். ஆனால் ஒருவிதப் பயனுமில்லை. கடைசியில் வெற்றிகரமாக வாபசானார்கள். நாங்கள் அந்த அறையின் ஒரு மூலையை ஆக்கிரமித்துக் கொண்டோம். மற்றொரு மூலையில் மூன்று நான்கு சாதுக்கள்  முடங்கிக் கொண்டிருந்தார்கள். நான்கு பேரே சௌகரியமாக படுக்கக்கூடிய அந்த இடத்தில் ஏழெட்டுப் பேர் ஒருமாதிரி “அட்ஜஸ்ட்” செய்து படுத்துக் கொண்டோம். நாங்கள் மூவரும் ஸ்லீப்பிங்க் கிட்டுக்குள் புகுந்து கொண்டோம். எங்களையும் சாதுக்களையும் பிரிக்கும் எல்லைக்கோட்டில் ஜவான் ஸலீந்தர் சிங் படுத்துக் கொண்டார். எழுந்துவ் எளியே செல்ல வேண்டுமானால், யாரும் தரையில் கால் வைக்க முடியாது. யார் மீதாவது காலை வைத்துத்தான் நடக்க வேண்டும்.

எல்லோருக்கும் நல்ல பசி. லால்பிஹாரி பொங்கல் செய்து கொண்டு வருவதாகக் கூறியிருந்தாராம்.  நண்பர்கள் இருவரும் கிட்டுக்குள் பொங்கலுக்காக விழித்துக் கொண்டிருந்தார்கள். நானும் விழித்துக் கொண்டிருந்தேன். ஆனால் பொங்கலுக்காக அல்ல. தூக்கம் வராத காரணத்தால் விழித்துக் கொண்டிருந்தேன். பசி வயிற்றைக் கிளறியது. குமட்டலும் இருந்தது. எதைத் தின்றாலும் வாயிலெடுத்து விடுவேன் என்று தோன்றியது. எனக்கு ஒன்றுமே வேண்டாம் என்று கூறி விட்டேன். கண்ணன் எழுந்து சென்று, வெந்நீர் கொண்டு வந்து, “க்ளூகோஸ்” காய்த்துக் கொடுத்தார். ஆனால் இரண்டு ஸ்பூன் சாப்பிடுவதாற்குள் வயிற்றைக் குமட்டியது. டார்ச்சை எடுத்துக் கொண்டு வெளியே விரைந்தேன். வாயிலெடுக்கும் போது நான் போட்ட இரைச்சலில் அந்தப் பள்லத்தாக்கே எதிரொலியில் அதிர்ந்தது.

உள்ளே வந்து மீண்டும் கிட்டுக்குள் நுழைந்து கொண்டபோது, நான் ஒரு மோசமான நோயாளியாகி விட்டிருந்தேன். ஒற்றைத் தலைவலி மண்டையைக் கோடரி கொண்டு பிளந்தது. வெளியில் சென்றுவிட்டு வந்ததால் என் கைகால்களெல்லாம் ஜில்லிட்டுப் போய் எலும்புகளில் குளிர் பாய்ந்து, வயிற்றில் ஒரு பகாசுரப் பசியைத் தூண்டிற்று. புறண்டு புரண்டு படுத்துப் பார்த்தேன். என் வேதனை அதிகமாயிற்றே தவிர சற்றும் குறைந்ததாகக் காணோம்.

திடீரென்று அறையில் ஒரு பயங்கரக் குரல் கேட்டது. ஓட்டை லாரி ஒன்று, பழுதடைந்த பாதையில் போவது போல் ஒரெ சத்தமாயிருந்தது. சற்று நேரம் கழிந்ததும், லால்பிஹாரி பேசிக் கொண்டிருக்கிறார் என்பது புரிந்தது! அவர் பொங்கல் செய்து எடுத்துக் கொண்டு வந்து எல்லோரையும் சாப்பிடும்படி கட்டாயப்படுத்திக் கொண்டிருந்தார்.  கட்டைத் தொண்டையில், அடி வயிற்றிலிருந்து அவர் இந்தி பேசியது, என் மண்டையிடியை அதிகப் படுத்தியது. திடீரென்று அவர் குரலில் கோபம் தொனித்தது. சத்தம் கூரையைப் பிய்த்துக் கொண்டு சென்று, அதிர்வேட்டாக முழங்கியது.

நான் பொங்கல் சாப்பிடவில்லை என்று அவருக்குக் கோபம். கண்ணன் என் உடல் நிலையை அவருக்குப் பொறுமையுடன் விளக்கினார்.

“உடம்பாவது மண்ணாங்கட்டியாவது? இது சுவாமி பிரசாதம். ஒன்றும் செய்யாது. சாப்பிடச் சொல்லு” என்று கர்ஜித்தார் அவர்.

“வேண்டாம், அவரைத் தொந்தரவு செய்யாதீர்கள். நாங்கள் சாப்பிடுகிறோம்” என்று கெஞ்சினார் கண்ணன்.

“இது என்ன ஆஸ்பத்திரியா? நோயாளிகளுக்காகவா நான் இதைக் கட்டி வைத்திருக்கிறேன்? இது ஓர் ஆசிரமம். நான் சொல்கிறபடி கேட்காவிட்டால் இங்கே யாரும் தங்க வேண்டிய அவசியம் இல்லை” என்று அடாவடித்தனமாக இரைச்சல் போட்டார் லால்பிஹாரி.

கண்ணனுக்கு என்ன பதில் சொல்வது என்றே புரியவில்லை.

தலைமாட்டில் இப்படி ஒரு பேரிரைச்சலை என்னால் பொறுக்க முடியவில்லை. மெள்ளத் தலையை வெளியே நீட்டி, “நான் சாப்பிடுகிறேன், அவரைப் போகச் சொல்லுப்பா” என்றென்.

நண்பர் அதை இந்தியில் மொழி பெயர்த்தார். “அச்சா” என்று வெற்றியுடன் உறுமிவிட்டு லால்பிஹாரி ஒரு வழியாய்ப்  போய்ச் சேர்ந்தார்.

சாதாரண நேரமாக இருந்திருந்தால் லால்பிஹாரி போன்ற ஒரு கேரக்டரை நான் ரசித்திருப்பேன். ஆனால், அப்போதிருந்த களைப்பிலும், அசதியிலும் உடல் நிலையிலும் அந்த அன்புத் தொந்தரவை என்னால் ரசிக்க முடியவில்லை.

மணி ஆக ஆக, என் உடல் நிலையும் மோசமாகிக் கொண்டிருந்தது. திடீரென்று நல்ல காய்ச்சல் அடிப்பதை உணரத் தொடங்கினேன். கண்ணிமைகள் கனத்தன. உள்ளங்காலிலிருந்து உச்சந்தலை வரை, கணுக்கணுவாக வலித்தது. வலி பொறுக்காமல் பலமாக முனகவும் ஆரம்பித்து விட்டேன். பாவம், என்னால் கண்ணனுக்குத் தூக்கம் கெட்டு விட்டது. இன்னொரு நண்பர் பேச்சுமூச்சு காட்டாமல் உறங்கி விட்டார் என்பது தெரிந்தது.

கண்ணன் என்னை அணைத்தவாறு படுத்துக் கொண்டார். “என்னப்பா பண்ணுகிறது?”

“சொல்லத் தெரியவில்லை. எனக்கு பெரியதாக ஏதோ வந்துவிட்டது. ஒரு வைத்திய உதவியும் இடைக்க வழியற்ற அத்வானத்தில் வந்து மாட்டிக் கொண்டு விட்டேனே…..ஈசுவரா, இதென்ன சோதனை?”

“அப்படியெல்லாம் ஒன்றுமிருக்காது. பசி, தலைவலி, வயிற்றுக் குமட்டல், உடம்புவலி எல்லாம் உன்னை அரற்றுகிறது. காலையில் சரியாய்விடும். தூங்கு.”

“அதுதான் முடியவில்லை. கண்ணா….. எனக்கு இந்த இரவு நரகமாயிருக்கும் போலிருக்கிறதே. நாளைக் காலை கோமுகத்திற்குப் போவேன் என்று எனக்குத் தோன்றவில்லை.”

“அதெல்லாம் போய்வரலாம். கவலைப்படாதே. பெரியவா இருக்கா!”

“அந்த ஒரு தைரியம்தான்…..”

காஞ்சிப் ப்ரியவரை நினைத்தவுடன் கண்ணீர்ப் பெருக்கெடுத்தது. அவரை நினைத்துக் கொண்டு, கண்களை மூடித் தரிசனம் செய்தபடியே தூங்க முயன்றேன். முடியவில்லை.

அப்போது மணி என்னவோ தெரியாது. ஒரே நிசப்தமாக இருந்தது. அரட்டல் பிரட்டல் கண்டவன் மாதிரி நான் ஏதோ உளரத் தொடங்கினேன். உணர்ச்சி வசப்பட்டுக் காரணமின்றி குமுறிக் குமுறி அழுதேன். அதெல்லாம் எனக்கு நன்றாகத் தெரிந்தது. “இது சிறுபிள்ளைத்தனம்” என்று அறிவு இடித்துக் கூறுவதும் காதில் விழுகிறது. என் மனமோ, என் உணர்வுகளோ என் கட்டுப்பாட்டில் இல்லாமல் கட்டவிழ்த்துக் கொண்டு பிதற்றித் தீர்த்தேன். என் சொந்த, குடும்ப விஷயங்களைக் கூட பேசினேன் என்று கண்ணன் காலையில் கூறியபோது நான் வெட்க்கப்பட்டேன்.

உடலும் உள்ளமும் பலவீனப்பட்டுப் போய்ப் பல்வாறான எண்ணக் குமுறல்களால் அலைக்கழிக்கப் பட்டிருந்த நிலையில், “ஐயோ, அப்பா, அம்மா” என்று சற்று உர்க்கவே கத்தி விட்டேன். அருகில் படுத்திருப்பவர்களுக்கெல்லாம் தொந்தரவாக இருக்கிறோம் என்று தெரிந்தும், கதியற்ற நிலையில் கதறுவதைத் தவிர நான் வேறு என்ன செய்ய முடியும்?

அப்போது ஒரு குரல் கேட்டது. அழகான ஆங்கிலத்தில், தீர்மானமான உச்சரிப்பில், “…..what’s wrong with our friend there?” (நண்பருக்கு என்ன உடல் கோளாறு?) என்று அருகில் படுத்திருந்த சாதுக்களில் ஒரு சாது கேட்டார். சின்மயானந்தாவின் குரல் போல் கணீரென்று இருந்தது அது. நான் கண்ணனிடம் டார்ச் போடச் சொன்னேன். அந்த சாது எழுந்து நின்றார். பார்ப்பதாற்கும் கிட்டத்தட்ட சின்மயானந்தா மாதிரியே இருந்தார்.

“என்னிடம் ஹோமியோபதி மருந்து இருக்கிறது. உங்களுக்கு அப்ஜெக்ஷன் இல்லையென்றால் தருகிறேன்” என்றார் அவர், தன் மடியிலிருந்து ஒரு சிறு பொட்டலத்தை எடுத்தவாறே.

“கொடுங்கள், சாப்பிடுகிறேன். எனக்கு ஹொமியோபதியில் நம்பிக்கை உண்டு” என்றேன் நான்.

“இதை அப்படியே வாயில் போட்டுக் கொள்ளுங்கள். விரைவிலேயே நீங்கள் குணமடைவீர்கள். பயப்படுவதற்கோ, கலவரப்படுவதற்கோ ஒன்றுமில்லை. இந்தமாதிரி நோய், இந்த உயரத்தில், அதுவும் இந்த இடத்தில் சிலருக்கு ஏற்படுவது சகஜம்தான். தைரியமாகப் படுங்கள். தூங்க முயற்சி செய்யுங்கள்” என்றார் அவர்.

அந்த மாத்திரைகளை வாங்கி வாயில் போட்டுக் கொண்டேன். அவரது சொற்களைப் போன்றே அவையும் அமிர்தமாக இனித்தன.

தெய்வத்தின் துணையும், குருவின் கருணையும் இருந்தால், எதிர்பாராத இடங்கலில், எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைக்கும் என்ற என் திட நம்பிக்கைக்கு மற்றுமோர் சான்றாக இந்த நிகழ்ச்சியைக் குறித்துக் கொண்டேன்.

உத்தரகாசியைச் சேர்ந்த அந்த சாது தந்த ஹோமியோபதி மருந்து உடலை விட என் மனத்துக்கு மிகவும் தென்பு அளித்தது. மருந்து உண்ட பிறகும் ஓரிரு முறை நான் வெளியே போய் வயிற்றுப் போக்கினால் உடலும் உள்லமும் மேலும் தளர திரும்பி வந்தேன். மண்டை வலி குறையவில்லை. உடலில் அனல் வீசியது. தூக்கம் வராமல் புரண்டு புரண்டுதான் படுத்தேன். ஆனால், அங்கு நான் நாதியற்றுத் தனிமையில் கிடக்கவில்லை என்ற எண்ணம், வலிமையிழந்திருந்த என் மனத்துக்கு வலுவூட்டும் மாமருந்தாக இருந்தது.

இனி உயிருக்கு ஆபத்தில்லை என்ற நம்பிக்கை பிறந்தாலும், மறுநாள் கோமுகத்திற்கு நடந்து செல்ல முடியும் என்ற நம்பிக்கை பிறக்கவில்லை. அந்தப் பயணத்தைப் பற்றி நினைத்துப் பார்க்கக் கூட நடுங்கினேன் நான்.

இந்த ஏமாற்றத்தை என்னால் தாங்கமுடியவில்லை. காண வேண்டும், காண வேண்டும் என்று இரவு பகலாகக் கனவு கண்டு கொண்டிருந்த கோமுகத்தை, அதுவும் இரண்டு மைல் தொலைவு வரை வந்து விட்டு, கண்ணாலும் பார்த்து விட்டு, அருகில் சென்று தரிசிக்க முடியாமல் திரும்புவது என்பது சாதாரண ஏமாற்றமா? மகத்தான பாப்ம ஏதோ செய்திருப்பதால்தான் தெய்வ்ம என்னை சோதிக்கிறது என்று கண் கலங்கினேன். இயலாமையால் இன்னல்கள் அனுபவிக்கும் போதுதான் மனிதன் தன் குறைகளையும், பலவீனங்களையும் தெளிவாகக் காண்கிறான. சக்தியிழந்து செயலிழந்து இயலாமையால் தவிக்கும் போதுதான் அவன் செருக்கு அழிந்து, செய்வினையை நினைத்து, தன் சிறுமையை உணர்கிறான்.

ஏமாற்றத்தின் எல்லையில் நின்று ஏங்கிய நான், “உனக்கு எல்லா தரிசனங்களும் கிடைக்கும்” என்று தேனம்பாக்கம் கிணற்றடியில் கர்ம தூக்கி ஆசி வழங்கிய காஞ்சிப் பெரியவரையே தியானித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது பெரியவர் என் முன் தோன்றினார்.

“நான் உன்னுடன் வருவதற்கில்லை. பூஜைக்குப் போகவேண்டும். மடத்திலிருந்து ஒரு கடிதம் தரச் சொல்கிறேன். அதை எடுத்துக் கொண்டு கோமுகம் போய் வா” என்றார்.

இந்த வார்த்தைகளை மிக மிகத் தெளிவாகக் கேட்டேன். புனிதரின் உருவத்தையும் நான் மிக மிகத் தெளிவாகக் கண்டேன் . அது ஒரு கனவு என்று நாளது வரை நான் நம்பத் தயாராயில்லை.முதலில் நான் அந்தத் தரிசனத்தை சாதாரணமாகத்தான் நினைத்தேன். சற்றுக் கண்ணயரும்போது தோன்றும் கனவாகவே கருதினேன். ஆனால், நேரம் ஆக ஆக அந்த சத்திய தரிசனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினேன். “கடிதம் தரச் சொல்கிறேன்” என்பதற்கு “என் ஆசி என்ற சிபாரிசுக் கடிதம் இருக்கும் போது நீ ஏன் கவலைப்படுகிறாய்? அதைக் காட்டிவிட்டு சுவர்க்கத்தினுள்ளும் நுழையலாமே” என்று பொருள்படுத்திக் கொண்டேன் நன். நாற்பது ஆண்டுகளுக்கு முன், பால் பிரண்டனுக்கு செங்கல்பட்டு ஓட்டல் அறையொன்றில் காஞ்சிப் பெரியவர் ஒளிமயமாய் காட்சி தந்து, ரமண பகவானிட்ம செல்லும்படி அவருக்கு அருளிய நிகழ்ச்சி, அக்கணம் என் நினைவுக்கு வந்தது.