பத்ரி கேதார் – 21

விடியற்காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து வெளியே வந்தோம். சரியான இமாலயக் குளிர். எதைத் தொட்டாலும் ஜில்லென்றிருந்தது. லால்பிஹாரி சுக்குக்கஷாயம் மாதிரி எதையோ தயாரித்துக் கொண்டு வந்து என்னைக் குடிக்கச் சொன்னார். நான் மறுத்தேன்.

“ஒன்றும் செய்யாது, குடி. உனக்காக இந்தக் கடுங்குளிரில் எழுந்து தயாரித்திருக்கிறேன்” என்று அன்புடன் உபசரித்தார். இடி இடித்து பயமுறுத்தும் மேகம்தான் நிலத்தைக் குளிர்விக்கும் கருணை மழையையும் பொழிகிறது!

பத்து நாள் ஃப்ளூ ஜுரம் அடித்தவன் போலிருந்தது என் தோற்றமும், உடல் நிலையும். தூக்கமின்மையால் கண்கள் சிவந்து, இமைகள் கனத்திருந்தன.

“உடம்பு எப்படிப்பா இருக்கிறது?” என்று கேட்டார் கண்ணன். “என்னால் நட்கக முடியும் என்று தோன்றவில்லை. நீங்களிருவரும் போய் வந்துவிடுங்கள். நான் இங்கேயே இருக்கிறேன்” என்றேன் நான்.

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். தனிமையில் ஏதோ பேசிக் கொண்டனர். என்னை விட்டு விட்டு கோமுகம் செல்வதில் அவர்களுக்கு விருப்பமில்லை என்பது அவர்களது முகபாவத்திலிருந்து தெரிந்தது.

மறுகணம்…..

என்னுள் ஓர் அசுர சக்தி பிறந்தது. கைத்தடியை எடுத்தேன். நட்ககத் தொடங்கினேன்.

“எங்கே போகிறாய்?” என்று கவலையோடு கேட்டார் கண்ணன்.

“கோமுகத்திற்குத்தான். பெரியவரின் துணை இருக்கும் போது, நான் பயப்படுவது அஞ்ஞானம். வா, போகலாம். என்ன ஆனாலும் சரி. முன்வைத்த காலை பின்வைக்கப் போவதில்லை” என்று வீரனைப் போல் பேசினேன். பேச்சில் தான் வீரம் இருந்தது. நடை தளர்ந்தது. ஜவான் வந்து என்னைத் தாங்கிப் பிடித்துக் கொண்டார்.

நாங்கள் நடந்தோம். எதிரில் மலையேறிவிட்டுத் திரும்பும் பெண்கள் கூட்டமாக வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் உத்தரகாசியிலுள்ள, நேரு மலையேறும் பயிற்சிப் பள்ளியைச் சேர்ந்தவர்கள். சுமக்க முடியாத சுமையை அநாயாசமாகத் தூக்கிக்கொண்டு, அரட்டை அடித்துக் கொண்டு கும்பலாக வந்த பெண்களைப் பார்த்ததும், என் தைரியம் அதிகமாயிற்று.

ஒன்றரை கிலோமீட்டர் நடந்ததும், ஜியலாஜிகள் சர்வே குழுவினர் தங்கியிருந்த கூடாரங்கள் கண்ணுக்குத் தெரிந்தன. எங்களைத் தொலைவில் கண்டதும் சுந்தரானந்தாவும், அவரது நண்பரும் கைகளை அசைத்து ஆர்வத்துடன் வரவேற்றனர்.

கூடாரங்கள் இருந்த இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் கோமுகம் இருக்கிறது. ஒன்பது மணிக்குக் கிளம்பி, பத்து மணிக்கு கோமுகம் வந்து சேர்ந்தோம். அந்தக் கடைசி ஒரு கிலோமீட்டரும் மிகவும் கடினமான பிரயாணமாக இருந்தது. ஒரே ஏற்றம்தான். போதிய பிராணவாயு இல்லாததால் மூச்சுவிடுவதே கடினமாகி விட்டது. மேடான ஓரிடத்தில் நின்று சுந்தரானந்தா, “அதோ தெரிகிறதே, அதுதான் கோமுகம். அதுதான் ஐஸ்குகை. அதுனுள்ளிருந்துதான் கங்கை வெளி வருகிறாள்” என்று சுட்டிக்காட்டினார்.

என் சொல்லாற்றலுக்கோ, வர்ணனைத்திறனுக்கோ அப்பாற்பட்ட அந்த அற்புதக் காட்சியைக் கண்டபோது, பரமானந்தம் ஏற்பட்டது. அந்த இயற்கைத் தோற்றம் எதிர்பார்த்ததற்கெல்லாம் அதிகமான அற்புத எழிலோடும், அப்ராக்ருத சௌந்தர்யத்தோடும் திகழ்ந்தது. எங்கள் கண்ணுக்கெதிரே ஐஸ் மலை தெரிந்தது. அதற்குப் பின்னால் வெண்பனியால் மூடப்பட்ட பல சிகரங்கள் தெரிந்தன. மேகக் கூட்டமும் பனி மூட்டமும் அச்சிகரங்களை மறைப்பதும், விலகிச் செல்வதுமாகக் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தன.

நூறு அடி இறங்கிச் சென்றோம். சிறியதும் பெரியதுமான பல பாறைகளுக்கிடையே நுழைந்து, குதித்து, தாவி, கங்கைக் கரையை அடைந்தோம்.

“தடால் என்று டைனமிட் வேட்டு போல் பயங்கரச் சத்தம் கேட்டது. நாங்கள் நடுங்கியே விட்டோம்.

“அருகில் எங்கேயோ ஐஸ் பாறைகள் மலையிலிருந்து பெயர்ந்து விழும் சத்தம்தான் அது. இங்கெல்லாம் ஜாக்கிரயதையாக இருக்க வேண்டும். நீங்கள் இங்கேயே இருங்கள். அதிக தூரம் போக வேண்டாம்” என்று சுந்தரானந்தா கட்டளையிட்டார்.

“அதோ, அந்த ஐஸ் குகைக்கருகில் போய்ப் பார்க்க முடியாதா?” என்று கேட்டேன் நான்.

“உங்களுக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா? அதனருகில் யாரும் போகமாட்டார்கள். வேண்டுமானால் இன்னும் கொஞ்சம் தூரம் பொகலாம். போட்டோ எடுக்க சௌகரியமாக இருக்கும்” என்று கூறி, எங்கலை பின்தொடரும்படிக் கூறி நடந்தார் சுந்தரானந்தா. ஆனால், நான் பாய்ந்து கொண்டு அவருக்கு முன்னால் ஓடினேன். “மெள்ள மெள்ள” என்று சுந்தரானந்தா என்னை எச்சரித்தார்.

கோமுகத்தைக் கண்டதும் நான் வெறி பிடித்தவன் போலகி விட்டேன். எல்லையற்ற மகிழ்ச்சித் திளைப்பில் முதல் நால் இரவு பட்ட அவஸ்தையெல்லாம் மாயமாய், கெட்ட கனவாய் மறைந்தோடி விட்டது. தலியிடியோ, வயிற்றுக் குமட்டலோ, முதுகு வலியோ ஒன்றுமே இல்லை. இதுவரை நான் அனுபவித்தறியாத தென்புடன் காணப்பட்டேன். உள்ளத்தில் கிளர்ந்தெழுந்த பரவச நிலையில் பயம் அகன்று ஒரு தைரிய புருஷனாகி விட்டிருந்தேன். உயரிய லட்சியங்களை நோக்கிச் செல்லும்போது, இடையில் நாம் சந்திக்கும் துயரெல்லாம், பயணத்தின் இறுதியில் திரும்பாகத் தோன்றுவது போல், கோமுக தரிசனத்தைப் பெற்றதும், என் உடலுக்கு ஏற்பட்ட உபாதைகள் தொலைந்து இயற்கையோடு ஒன்றி, இறையருள் நல்கும் இனிய லயிப்பில் மூழ்கிவிட்டிருந்தேன்.

என்ன ஆச்சரியம்! இதென்ன மாற்றம்? இதென்ன புதுத் தோற்றம்? என் உடல் நிலையையும், மன நிலையையும் என்னாலேயே நம்பமுடியவில்லை. திவ்யக் காட்சிகளும், தேவதரிசனமும் கிடைக்கும் முன், அவற்றைப் பன்மடங்கு பெருக்கிக் காட்டுவதற்காக இயற்கை நமக்கு முதலில் துன்பங்களைத் தந்து வருத்துகிறதோ? அப்போது மெய்யாகத் தோண்றிய வேதனைகள் எல்லாம், எத்தனை பொய்யாக, கனவாக ஆகி விடுகின்றன!

ஆதோ, ஐம்பதடி தொலைவிலிருக்கும் கோமுக குகையை நான் தரிசிக்கிறேன். பச்சை நீல நிறத்தில், கண்ணாடியாக பளபளத்துக் கொண்டிருக்கிறது அந்த ஐஸ் குகை. கல்லும், மண்னும் கலந்து சில இடங்கலில் அழுக்கு ப்ரௌனாக  இருக்கிறது. அதன் வாயிலிருந்து பனி உருகி, ஐஸ் கரைந்து, கங்கையாக வருவது தெரிகிறது. போகப் போக குகை இருண்டு கொண்டே போகிறது. அதன் நீளமென்ன? அது எங்கு போய் முடிகிறது, எங்கிருந்து நீர் வருகிறது? இதெல்லாம் இதுவரை மனிதன் கண்டறியாத மர்மங்கள். அதனுள் இதுவரை ஒருவரும் துணிந்து சென்றதில்லை.

கங்கோத்ரி க்ளேசியரின் அடிப்பாகமே கோமுகம். உச்சில் இரு சிகரங்கல் தெரிகின்றன. அவ்விரு சிகரங்கலையும் கொம்புகளாக நினைத்துக் கொண்டால் அந்தக் குகையின் தோற்றம் பசுவின் முகம் போல் இருக்கிறது. அதனாலேயே அதற்கு “கோமுகம்” என்ற பெயர் தோன்றியிருக்கிறது.

அன்று எங்கள் அதிர்ஷ்டம், நல்ல வெயில் காய்ந்து கொண்டிருந்தது. ஆதவன்பிரகாசமாகக் காய்ந்தாலும், அந்த ஐஸ் குளிரில் எங்களுக்கு அது உறைக்கவே இல்லை.

நதியிலும், கரையிலும் பனிக்கட்டிகள் வெண் பாறைகளாகச் சிதறிக் கிடந்தன. அதுவரை நான் கண்டிராத காட்சி அது. முதலில் பாறைகள் மீது ஸ்நோ படர்ந்திருப்பதாக நினைத்தேன். கரையிலிருந்த ஒரு சிறு கட்டியைக் கையில் எடுத்தேன். அது அத்தனை ஜில்லிப்பாக இல்லை. எனக்கு ஒரே தாகமாக இருந்தது. வாயில் வைத்து நறநறவென்று கடித்துத் தின்னத் தொடங்கினேன்.

“அதைத் தின்னாதீர்கள். வெறும் வயிற்றில் ஐஸைத் தின்றால் கெடுதல்” – சுந்தரானந்தா அலறினார்.

“இதைக் கங்கையாக நினைத்துச் சாப்பிடுகிறேன். புனித கங்கை கெடுதி செய்யமாட்டாள். உடலையும், ஆன்மாவையும் சுத்தப்படுத்தும் புண்னியவதி அல்லவா அன்னை கங்கா!” என்று அதற்கு நான் சமாதானம் கூறினேன்.

அங்கு ஐந்தாறு சாதுக்கள் ஸ்நானம் செய்துவிட்டுக் குளிர் காய்ந்து கொண்டிருந்தார்கள். அதில் ஒருவர் அவதூத சாமியார். அவர் சாம்பல் போன்ற ஏதோ ஒரு மண்ணை உடல் பூராவும் பூசிக்கொண்டு ஒரு பாறையின் மீது நின்று, கை கூப்பித் தொழுது கொண்டிருந்தார். வயதான மற்றொரு சாது, வேறொரு பாறையில் அமர்ந்து, ஜபம் செய்து கொண்டிருந்தார். இன்னொருவர் தான் எடுத்து வந்திருந்த புட்டியில் கங்கை நீரை நிரப்பிக் கொண்டிருந்தார்.

சுந்தரானந்தா உடைகளைக் களைந்து கோவணாண்டியாக நின்றார்.  நண்பர்கள் இருவரும், ஜவானும் குளிக்கத் தயாராகி விட்டார்கள்.

நான் காலை மட்டும் நீரில் நனைத்துப் பார்த்தேன். அப்பப்பா! கங்கோத்ரியைத் தோற்கடித்தது அந்த ஜில்லிப்பு. அது கால்களைக் கடித்தது. “சர்”ரென்று இழுத்துக் கொண்டேன். அந்த நீரில் குளிப்பதற்கு தைரியம் மட்டும் இருந்தால் பொதாது. உடலையும், உயிரையும் துரும்பாக நினைக்கும் பாவம் ஏற்படவேண்டும். அந்நீரில் இறங்குவதனால் ஏற்படும் விபரீத விளைவுகளைத் தாங்கும் மனோதிடம் இருக்க வேண்டும்.

கண்ணன் முதலில் கங்கையில் இறங்கினார். மூண்று முழுக்கு போட்டுவீட்டு எழுந்தார். அதற்கு மேல் நான் ஒரு கணம் கூடக் காத்திருக்கவில்லை. ஒரே ஓட்டமாக ஓடி, நீரில் இறங்கி, கோமுக குகையைப் பார்த்துப் பிரார்த்தி விட்டு, நினைவுக்கு வந்தவர்களையெல்லாம் நினைத்துக் கொண்டு, அவர்களுக்கும் சேர்த்து ஒரு முழுக்குப் போட்டேன். கங்கை மகாத்மியமும், கங்கைப் புராணமும் உணமையானால் அந்தக் கணமே நான் இப்பிறவியில் செய்த பாவங்கள் மட்டுமல்ல, முந்தைய பிறவிகளில் செய்த பாவங்களும் தொலைந்து விட்டிருக்க வேண் டும். மறைந்த என் மூதாதையரெல்லாம் முக்தி அடைந்திருக்க வேண்டும். என் சுற்றமும், நட்பும், உற்றாரும், உடன் பிறப்புக்களும் நற்கதி பெறுவது உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

“கங்கா மாதா கீ ஜெய்!”

உரத்த குரலில் கத்திக் கொண்டு, அம்பைப் போலப் பாய்ந்து கரைக்கு ஓடி வந்தேன். தலை முதல் கால்வரை “சுருக், சுருக்” என்று குத்திக் கொண்டிருந்தது. கங்கோத்ரியில் கொட்டியதை விட அதிகமான தேள்கள், உடலெங்கும் கொட்டித் தீர்த்தன.

நாங்கள் நதியில் இறங்கிய வேகத்தையும், குளித்த ஜோரையும், திரும்பிவந்த பரபரப்பையும் கண்ட சுந்தரானந்தா திடுக்கிட்டுப் போனார். இத்தனை தூரம் தன்னை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டுவிட்டு, கோமுகத்தைக் கண்டதும் சிறிதும் கட்டுப்படமமல், ஏதேதோ செய்கிறார்களே என்று அவருக்கு சற்றுக் கோபம் ஏற்பட்டிருக்க வேண்டும்.

அதனால் எங்களை அட்ககி வழிக்குக் கொண்டுவர அவர் தீர்மானித்திருக்க வேண்டும்.

“உங்களுக்கெல்லாம் விளையாட்டாக இருக்கிறதா? ரொம்பநேரம் உடம்பை எக்ஸ்போஸ் பண்ணிக்காதீங்க. சீக்கிரம் ட்ரெஸ்ஸைப் மாட்டிக்குங்க. கோட்டெல்லாம் போட்டுக்குங்க. முதலில் ஷூவைப் போட்டுக்கங்க. இது பொல்லாத பனி, ஆபத்தாகி விடும். Frost bite வ்ரலெல்லாம் அறுந்து விழுந்து விடும்” என்று சத்தம் போட்டார்.

பயங்கரமான இந்தச் செய்தியைக் கேட்டதும் எங்களுக்குக் கதி கலங்கிப் போய்விட்டது.இனிமேல் அவரது அறிவுரைகளை உதாசீனப்படுத்துவது ஆபத்து என்று உணர்ந்தோம். அவசர அவசரமாக ஸாக்ஸைப் போட்டுக் கொண்டு ஷூக்களை மாட்டிக் கொண்டோம். கைவசம் இருந்த எல்லா ஆடைகளையும் எடுத்து பரபரப்புடன் அணிந்து கொண்டோம்.

கோமுகம் என்றும், கோமுகி என்றும், கோமுக் என்றும் அழைக்கப்படும் இந்த இடம் நம் கற்பனைக்கெல்லாம் மீறிய இயற்கையெழிலோடு திகழ்கிறது. அங்கு தங்கியிருந்த ஒன்றரை மனி நேரமும் நான் பரவச நிலையிலிருந்தேன். அங்கு சென்றுவிட்டால் நம்வ் ஆழ்வோ, நம் ஊரோ, நம் பிற அலுவல்களோ நினைவுக்கு வரவே வராது. சிந்தனையோட்டமும் மனவெழுச்சிகளும் அடங்கி, மனம் தன்வயப்படும் தியான நிலை அங்கு எளிதாகக் கை கூடிவிடும். அதற்கென சாதகமோ, தனி முயற்சிகளோ தேவையில்லை. துன்பக் களைப்பையெல்லாம் பறக்கச் செய்யும் அந்த இன்பத் திளைப்பின் இணையில்லா அனுபவம், அந்த அழகு உணர்ச்சி, அன்மீக மறுமலர்ச்சியெனும் கங்கையாக நம் இதயத்தில் பாய்ந்து, நம் வாழ்வைத் தூய்மைப்படுத்துவது ஒன்றே கோமுக தரிசனத்தின் சாசுவதமான பலனாகும்.

பேரெழில் பொழியும் சௌந்தர்ய தேவதையின் மாய வலையில் சிக்குண்டு, செயலற்று, பாறையின் மீது அமர்ந்திருந்த என்னைப் பார்த்து, “புறப்படலாமா?” என்று கேட்டார் சுந்தரானந்தா. முதன் முறையாகக் கடற்கரையைக் கண்டு, அப்புதிய காட்சிகளிலும், புதிய அனுபவங்களிலும் மனத்தைப் பறிகொடுத்து, பேராச்சரியத்தில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருக்கும் குழந்தையை “வீட்டுக்குப் போகலாம் வா” என்று அழைத்தால் அது எப்படி சிணுங்குமோ, அவ்வாறு என் உள்ளம் சிணுங்கியது.

சுற்றுப் புறத்தின்பூகோள அமைப்பை விளக்கினார் சுந்தரானந்தா. கோமுகத்தின் மேல் இரண்டு மைல் ஏறி சென்றால் தபோவனம் என்ற இடத்தைக் காணலாம். அங்கு ஓர் அழகிய ஏரி இருக்கிறதென்றும், வகை வகையான வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் அற்புதக் காட்சியைக் காணலாம் என்றும் கூறினார். அவரது குருவான தபோவஞ்சி மகராஜ் அங்கு சென்று சில காலம் தங்கி இருக்கிறாராம். அந்த வழியாக, பனிமலைகளைக் கடந்து குறுக்குப் பாதையில் பத்ரிநாத் செல்லலாம் என்றும், ஆனால் எல்லோருக்கும் அது சாத்தியமில்லை என்றும் கூறினார் அவர்.

கோமுகத்தின் கிழக்குப் புறத்தில் சுவர்க்காரோகண சிகரம் இருக்கிறது. அவ்வழியாகத்தான் தர்மபுத்திரர் சுவர்க்கத்திற்குச் சென்றார் என்று மகாபாரதம் கூறுகிறது. பத்ரிநாத்திலிருந்து மானா கிராமம் செல்லும் வழியில், அந்த மலையைத் தரிசித்தேன் நான். தெற்குப்புறம் நாராயண பர்வதம் இருக்கிறது. அதைக் கடந்து சென்றால், பத்ரிநாத் கோயிலை அடையலாம். மற்றொரு புறம் 22,000 அடி உயரமுள்ள நீலகண்ட பர்வதம் இருக்கிறது. அதன் வெள்ளிச் சிகரத்தைத்தான் பத்ரிநாத்திலிருந்து தரிசனம் செய்து உலகை மறந்து நின்றேன். நீலகண்ட பர்வதத்தின் தென்புறத்தில் கேதார்நாத் புனிதத்தலம் இருக்கிறது.

நாங்கள் நின்ற இடத்திலிருந்து சிவலிங்க, பாகீரதி சிகரங்கள் தெரிந்தன. மேரு, சுமேரு மலைகள் மேகப் போர்வையில் மறைந்திருப்பதாக சுந்தரானந்தா கூறினார். ஸ்ரீ ஆதிசங்கரர் தமது “கங்காஷ்டக”த்தில் கங்கையைப் பார்த்து, சுவர்க்கலோகத்திலிருந்துகீழே விழுந்து, சுமேரு பர்வதத்தினுடைய ஒரு குகையிலிருந்து வெளியே வருகிறாய்” என்று உரைக்கிறார்.  கோமுகத்தின் இந்தக் குகையைத்தான் ஆதிசங்கரர் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

நாங்கள் கோமுகத்தை விட்டுப் புறப்பட வெண்டிய நேரம் நெருங்கி விட்டது. இப்புவியில் வாழும் சகல ஜீவராசிகளையும் ரட்சிக்கும் பொருட்டு, தேவலோகத்திலிருந்து கருணையோடு இறங்கி வரும் கங்காவைக் கைகூப்பித் தொழுதேன். அதி ஜகத்குருவான ஸ்ரீ சங்கர பகவானின் சுலோகம் நினைவுக்கு வந்து.