இந்த இன்பச் சூழலில் நான்கு குதிரைகள், அவற்ரை நடத்திச் சென்ற நான்கு ஆட்கள், அவற்ரில் சவாரி செய்த நாங்கள் நான்கு பேர் மட்டுமே பயணம் செய்து கொண்டிருன்தோம். இயற்கை அன்னை, தன் மௌன சாம்ராஜ்யத்தில் எங்களை நுழைய விட்டதோடு அல்லாமல், அந்த இடத்தையே எங்களுக்கு ஏகபோகமாகப் பட்டா செய்து கொடுத்து விட்டது போன்றே தோன்றியது. இமாலயச் சாரலில் எங்கள் ஆட்சி கொடிகட்டிப் பறந்தது. எங்கள் கேதார யாத்திரை, ஏதோ ஒரு கோட்டையைப் பிடித்து விட்ட எக்காளத்துடன் வெற்றி விழாக் கொண்டாட்டம் போல் வீறுநடை போட்டது.
எங்கள் குதூகலத்தைக் கண்டதும், குதிரைக்காரர்களுக்கும் குஷி பிறந்து விட்டது. ஏதோ ஒரு நாட்டுப் பாடலைக் கோரஸாகப் பாடிக் கொண்டு வந்தார்கள். நான் அதை ரிகார்டு செய்து மீண்டும் போட்டுக் காட்டிய போது, தங்கள் குரலைக் கேட்டு அதிசயப்பட்டு வாய்விட்டு சிரித்தனர் அக் குதிரைக்காரர்கள்.
மூன்றாவது மைலில் சீடுவாஸா என்ற இடத்தில் ஒரு பைரவர் சிலையைக் காட்டினார்கள். சற்றுத் தொலைவு கடந்தது, பீம்பலி என்ற இடத்தில் பீமன் சிலையைக் காட்டினார்கள்.
பாண்டவர்கள் நடந்த பாதையில் அல்லவா சென்று கொண்டிருக்கிறோம். ஆதிசங்கர பகவான் சென்ற வழியில் அல்லவா போய்க் கொண்டிருக்கிறோம்.
ராம்பாடா என்ற ஒரு சட்டி வந்தது. கூடவே மழையும் வந்து விட்டது. அங்கெல்லாம் திடீர் திடீரென்று மழை வருகிறது. வெய்யில் காய்ந்து கொண்டு இருக்கும் போதே எங்கிருந்தோ குளிர் காற்று வீசுகிறது. கருமேகங்கள் சூழ்கின்றன. அவை பெருந்தூறல்களாகச் சிதறி விட்டுக் கரைந்து விடுகின்றன. நாங்கள் ரெயின் கோட்டுகளை எடுத்து மேலே போட்டுக் கொள்வோம். குதிரைக்காரர்கள் தயாராக வைத்திருக்கும் குடைகளைப் பிரித்துக் கொள்வார்கள்.
ராம்பாடாவில் ஓரிரு டீக்கடைகள் இருந்தன. நாங்கள் டீ குடித்து விட்டு சற்று இளைப்பாறினோம். குதிரைகளுக்கும் அங்கு தீனி வாங்கிப் போட்டார்கள். அவை பொறி உருண்டைகள் போன்றும், வெல்லக்கட்டிகள் போன்றும் இருந்தன. பாவம், நுரை கக்கிக் கொண்டு, இரைத்துக் கொண்டிருந்த அப்பிரானிகள் அந்தப் பலகாரத்தைத் தின்று, தண்ணீர் குடித்து சற்று ஓய்வு எடுத்துக் கொண்டன. இந்தக் குதிரைகளுக்கு இதுதான் கடைசிப் பிறவியாக இருக்கும்! சந்தேகமில்லை.
கேதார்நாத்தை அடைவதற்கு இன்னும் மூன்று மைல்களே இருந்தன. நாங்கள் கிட்டத்தட்ட பத்தாயிரம் அடிக்கு மேல் வந்து விட்டோம். கௌரிகுண்ட்டிலிருந்து ஒரு மைலுக்கு ஆயிரம் அடிக்கு மேல் ஏறி வந்திருக்கிறோம். செங்குத்தான ஏற்றம். குதிரையில் வந்ததால் அந்தச் சிரமம் தெரியவில்லை. நடந்து செல்பவர்களுக்கு, அது பிரம்மப் பிரயத்தனமாகத்தானிருக்கும், சந்தேகமில்லை.
ராம்பாடாவிலிருந்து பாதை சுற்றிச் சுற்றி மேலே மேலே செல்கிறது. கல்லின்மீது குதிரைகளின் குளம்புகள் பதியும் போது “டக் டக்” என்று ஓசைஎ ழும்பியது. எங்கள் பயணத்திற்கு கம்பீரத்தையும், கண்னியத்தையும் அளித்தது. வாகை சூடிய தளபதிகள் போல் நாங்கள் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டோம்.
காலையில் கேதார்நாத்திலிருந்து புறப்பட்ட பயணிகளை எதிரில் சந்தித்தோம். அவர்கள் உடலிலும், முகத்திலும் சுற்றியிருந்த கம்பளிப் போர்வைகளைக் கண்டபோது கேதார்நாத்தில் எத்தனை குளிராக இருக்கும் என்று ஒருவாறு ஊகித்துக் கொண்டோம். அவர்களது முகங்கலெல்லாம் கறுத்து, சிவந்து கண்ணராவியாகக் காட்சி அளித்தன. உதடுகள் எல்லாம் பனியில் வெடித்து இருந்தன.
கருடச்சட்டி வந்தது. பத்ரிநாத் செல்லும் மார்க்கத்தில் ஹனுமான்சட்டி கடைசி கிராமமாக அமைந்திருப்பது போல் இங்கு கருடச்சட்டி கடைசிக் கிராமமாக அமைந்திருக்கிறது. அங்கிருந்து கேதார்நாத் இரண்டரை கிலோமீட்டர்தான். நாம் தற்போது பதினோராயிரம் அடி உயரத்திலிருக்கிறோம். வெய்யில் காய்கிறது. குளிர் காற்றும் வீசுகிறது. வான மண்டலத்திற்கே வந்து விட்டது போன்ற பிரமை ஏற்படுகிறது.
கருடச்சட்டியில் கருடபகவானுக்கு ஒரு சிறு கோயில் இருக்கிறது. புராதனமான கற்சிலை ஒன்று வெளியே இருக்கிறது. உள்ளே ஒரு நவீன சிலையை வைத்திருக்கிறார்கள்.
கருடச்சட்டியைக் கடந்ததுமே நமக்கு கேதார்நாத் மலைச் சிகரங்கள் கண்ணுக்குத் தெரிகின்றன. வெண் பனியால் போர்த்தப்பட்டச் சிகரங்கள் சூரிய ஒளியில் மூழ்கி, கண்ணைப் பறிக்கும்படி மின்னுகின்றன. அந்தத் தரிசனம் நமக்கு கைலாசத்தையே நினைவுபடுத்துகிறது. லட்சியத்தை அடைந்து விட்டோம் என்ற பூரிப்பில், உள்ளம் துல்ளிக் குதிக்கிறது. வாழ்வின் பயனை எய்தி விட்டோம் என்ற பரவசத்தில் “ஹரஹர மகாதேவா” “சங்கரா” “சம்போ” என்று மனம் ஜபிக்கத் தொடங்குகிறது. நம்மை அறியாமலே நம் கைகள் சிரசுக்கு மேலே போய்க் கும்பிடுகின்றன.
கேதார்நாத் ஜிக்கு ஜெய்!
தற்போது நாம் பன்னிரண்டாயிர்ம அடி உயர்ந்து விட்டோம்! வெள்ளிப்பனி மலைகளைப் பார்த்துக் கொண்டே பயணம் செய்கிறோம். ஆனால் செல்லச்செல்ல பயணம் நீண்டு கொண்டே போவதுபோல் தோன்றுகிறது. கேதாரத்தைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் அதிகரிக்க அதிகரிக்க,இலக்கு விலகிக் கொண்டே போகிறதோ!
வழியில் ஒரு சாதுவைச் சந்தித்தேன். அவர் இடுப்பில் அரை வேட்டி மட்டுமே கட்டிக் கொண்டிருந்தார். அங்கு உள்ள குகை போன்ற ஓர் இடத்தில் வசிக்கிறாராம். குச்சிகளைக் கொளுத்திக் குளிர் காய்ந்து கொண்டிருந்தவர் எங்கல் குதிரைகள் குகை வாயிலில் நின்றதும், அருகில் வந்தார். “நமஸ்தே” என்றேன் நான். அவரும் சிரித்துக் கொண்டு “நமஸ்தே” என்றார். பேச்சுக் கொடுத்துப் பார்த்தேன். குதிரைக்காரர்களும் கேள்வி கேட்டார்கள். அவர் பதிலுக்கு வாயைத் திறக்கவெ இல்லை. அவர் யாரோ, எந்த ஊரோ, என்ன பெயரோ! அங்கு என்ன செய்கிறாரோ! கேதார்நாதனுக்கே வெLளிச்சம். மொத்தத்தில் கொடுத்து வைத்த ஓர் உயர்ந்த ஜீவன்.இல்லாவிட்டால் இந்த இடத்தில் வந்து வாசம் செய்ய வேண்டும் என்று தோன்றுமா?
ஆதோ கேதார்நாத் புனிதத்தலம் தரிசனம் ஆகிறது. அன்று தேவதர்சனியிலிருந்து பத்ரிநாத் ஊரைக் கண்டதும் வைகுண்டம் போல் தோன்றியது. இன்று கேதார்நாத்தைக் கண்டதும் கைலாசத்தையே தரிசிப்பது போல் இருக்கிறது. இருநூறு அடிகள் இறங்கிச் சென்றால் அந்தத் தெய்வீகச் சமவெளியை அடையலாம்.
இமயச் சிகரத்தில் நான் கேதார ஆலயத்தின் சிகரத்தைத் தேடினேன். பனிப்படலத்தில் மறைந்திருந்த அந்த எழிற் கோப்யுரம் என்னுடன் சற்று நேரம் கண்ணாமூச்சி விளையாடிய பிறகே காட்சி அளித்தது.
தொன்மைப் புகழுக்கு ஒரு கோபுரம்; புராதன மகிமைக்கு ஒரு கோபுரம்; பாரதத்தின் பெருமைக்கே ஒரு கோபுரம்; பிறவிப் பிணி நீக்கும் மாமருந்தாம் அம்மகோன்னத கோபுரத்தைத் தரிசனம் செய்து இப்பிறவியில் இப்பேறு கிட்ட எப்பிறவியில் என்ன மாதவம் செய்தோமோ!
பரமசிவன் பஞ்சபாண்டவர்களுக்குத் தரிசனம் தந்தைடம் கேதார் புண்ணியத் தலம். அதோ தெரிகிறதே ருத்ர இமாலயமலை தொடர்ச்சி, அதன் வழியாகத்தான் பாண்டவர்கள் மகாப்பிரஸ்தான யாத்திரை சென்றார்கள். அவர்கள் சுவர்க்கம் சென்ற சுவர்க்காரோஹிணி சிகரம் அங்குதான் இருக்கிறது. நான்கு பாண்டவர்களும், திரௌபதியும் வழியில் மடிந்து விழ தர்மபுத்திரர் மட்டும் உடலோடு சுவர்க்கம் சென்றது இந்த வழியாகத்தான். அப்பனிமலைச் சிகரங்களைத் தரிசித்துக் கொண்டே கேதார ஊரை நோக்கி தற்போது முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.
சிவபெருமான் உறையும் இடங்களிலேயே பூவுலகில் கேதாரத்திற்கு நிகரானது வேறோர் இடம் இல்லை என்று வியாசபகவான் பாண்டவர்களுக்கு எடுத்துரைக்கிறார். சகோதரர்களையும், உற்றார் உறவினர்களையும், குருமார்களையும் கொன்று குவித்த பாவத்திற்குப் பரிகார்ம தேட வேண்டுமானால், கேதாரத்தில் நித்திய தவயோகத்தில் ஆழ்ந்திருக்கும் உமாமகேசுவரனைத் தஞ்சமடைவதைத் தவிர வேறு வழியில்லை என்று வியாசமுனிவர் பாண்டவர்களுக்கு எடுத்துக் கூறியதாகப் புராணம் பறைசாற்றுகிறது.
அந்த கேதாரநாதர் கோயில் கொண்டிருக்கும் கருவறை விமான கோபுரத்தைத் தரிசித்து புண்ணியம் பெற்றோம்.
ஆகா! எத்தனை மகோன்னதமான காட்சி இது! வெள்ளிப்பனி மலை சுவர் பின்னணித் திரையாகப் படர்ந்திருக்க, முன்னால் துலங்கும் ஆலயமும், அதைச் சுற்றி எழும்பியுள்ள சிற்றூரும், நயனத்திற்கொரு விருந்தாக நாடக அரங்கன்றோ அமைத்துத் தந்திருக்கின்றன! கனவு உலகிற்கே வந்து விட்டது போன்ற பிரமையல்லவா நம்மை ஆட்கொள்கிறது?
௳ணி ஒன்பதரைதான். எதிர்பார்த்ததை விட சீக்கிரமாகவே வந்து சேர்ந்திருக்கிறோம். வந்த சிரமம் தெரியாமல், மிக எளிதாக வந்து விட்டோம். எல்லாம் கேதாரநாதனின்பெருங்கருணைதான். ஜமுனோத்ரி யாத்திரையின் பொதும் கோமுகப் பயணத்தின் போதும் நான் பட்ட துன்பங்களையெல்லாம் கண்டு மனமிரங்கி , கேதார விஜயத்தை எனக்கு எளிதாக்கித் தந்த தயாநிதிக்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடிகிறது? தன் உடல் சோர என்னைச் சுமந்து வந்த வாயில்லாப் பிராணிக்கு நான் பெரிதும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். தமிழில் அதை “மட்டக்குதிரை” என்று அழைக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை அது மிக உயர்ந்த குதிரை, உயிருக்குயிரான குதிரை.
கேதார சமவெளியில் இறங்கிக் கொண்டிருக்கிறோம். அந்தச் சமவெளி 11,150 அடி உயரத்தில் இருக்கிறது.
எனக்கு வலப்புறம் மந்தாகினி ஓடிக்கொண்டிருக்கிறாள். வரும் வழியில் எத்தனையோ ஆழத்தில் கேட்பாரற்று ஓடிக் கொண்டிருந்த அவளைப் பார்த்துப் பரிதாபப்பட்டேன். பெரிய பாறைகளில் மோதிப் பாய்ந்து பெருகும் பேரருவியாகவும் அவளைச் சந்தித்து பரவசப்பட்டேன். கன்ணுக்குப் புலப்படாத கடவுளின் பேரருள் போல், கண்ணுக்குத் தெரியாத இடத்தில் உற்பத்தியாகி, பாரிலுள்ளோரை வாழ்விக்க வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறாள் அவள். நாற்பத்தைந்து மைல் பயணத்திற்குப் பிறகு, ருத்ரபிரயாகையில் அலறிப் புடைக்கும் அலகநந்தாவுடங்கலந்து, தன்னை அழித்துக் கொள்ளும் தியாக மங்கையாக அவளைத் தரிசித்தேன். இரு நதிகளும் சங்கமமாகும் ருத்ரப்பிரயாகையிலும் இணைந்த சகோதரிகள் பின்னர் தேவப்பிரயாகையில் பாகீரதியுடன் சங்கமமாகும் இடத்திலும் நீராடித் திளைத்ததையும் அந்நேரத்தில் நினைவுபடுத்திக் கொண்டேன். இமயத்து மகிமையெல்லாம் ஒருங்கிணைந்த அருள் வெள்ளமாக, உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி நற்கதி நல்கும் சக்தியாக, கருணைக்கொரு கங்கையாகப் பாயும் ரிஷிகேசத்திலும், ஹரித்துவாரத்திலும் நீராடிய நாட்களையும் அப்போது நினைவுபடுத்திக் கொண்டு அந்நினைவுகளாலேயே நீராட்டப் பெற்ற புண்ணியத்தோடு கேதார எல்லைக்குள் நுழைந்தேன்.
எனக்கு இடப்புறம் பயணிகள் விடுதிகளைக் காண்கிறேன் செல்ல முடியாத இடம் என்றும், சென்றாலும் இயற்கையை வெல்ல முடியாத இடம் என்றும் ஒரு காலத்தில் கருதப்பட்ட கேதாரத்திலும் இன்று நாகரீகம் தலைகாட்டத் தொடங்கியிருப்பதைக் கண்டேன். பயணிகள் விடுதிகளை அடுத்து “ஹிம் லோக்” என்ற பெரிய உணவு விடுதியையும் கண்டேன். அங்கு நடமாடிய பணியாட்களைப் பார்த்த போது, அது நவீன வசதிகளோடு கூய்ட்யதாக இருக்கும் போல் தோன்றியது. வாழும் ஊரில் எல்லா வசதிகள் இருந்தும், மனநிம்மதி கிடைக்காமல் அமைதி நாடி தல யாத்திரை வரும் மனிதன் அங்கும் வசதிகளையே தேடித் தேடி அலையும் அவல நிலைக்கு இந்த நவீன விடுதி ஓர் அடையாளச் சின்னமாக நிற்கிறது.
அதனிடமிருந்து என் கவனத்தைத் திருப்புவதற்காக, எதிரேயுள்ள மாமலையின் காட்சியில் மனத்தைப் பறி கொடுத்தேன். ஆதிசிவனை நினைவுபடுத்துவது போல் அது காட்சி தந்தது. அருகில் அலைந்து கொண்டிருந்த மேகச் சிதறல்கள், ஐயனின் அலையலையான ஜடையை கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தின.
நாங்கள் மந்தாகினியின் அருகில் வந்து விட்டோம். “ஓ”வென்ற பேரிரைச்சல் கேட்கவில்லையா? இடப்புறம் மலையிலிருந்து வெள்ளை வெளேரென்ற நீரருவி ஒன்று பெருகி வந்து மந்தாகினியுடன் கலக்கிரது. அதை “தூத் கங்கா” என்று குதிரைக்காரர் அறிமுகப்படுத்தி வைக்கிறார். அதாவது பால் கங்கையாம். நம் பக்கங்களில் பாலை கங்கையாக்குகிரார்கள்! இங்கோ கங்கையே பாலாக இருக்கிறது!
ஓரு பாலத்தைக் கடக்கிறோம். அங்கு ஒருவர் கழுத்தில் தப்பட்டையைக் கட்டிக் கொண்டு, ஏதோ ஒரு பாட்டுக்குத் தாளமாகத் தட்டிக் கொண்டே அங்கு வருபவர்கலை வரவேற்றுக் கொண்டிருக்கிறார்.
பாலத்தைக் கடந்து வலப்புரம் திரும்பினால் ஸ்நான கட்டம். அங்கு கங்கா மாதாவுக்கு ஒரு சிறு கோயில் இருக்கிறது. வருபவர்களில் நெஞ்சுரம் மிக்கவர்கள், மந்தாகினியில் ஸ்நானம் செய்துவிட்டு, கங்கா மாதாவை வணங்கி விட்டு, கேதாரேசுவரர் தரிசனத்திற்காகச் செல்கிறார்கள். அங்கிருந்து அரை பர்லாங் ஏறிச் சென்றால் கடைவீதி. அது நம்மை நேரே கோயிலின் வாயிலுக்கு அழைத்துச் செல்கிறது.
நாங்கள் மந்தாகினியில் ஸ்நானம் செய்வதற்காக உடைகளைக் களைந்தோம். “பத்ரிநாத்திலும், கங்கோத்ரியிலும், கோமுகத்திலும் ஐஸ் நீரில் ஸ்நானம் செய்தவர்களுக்கு இது ஒரு பிரமாதமா?” என்று நாங்கள் சற்று இறுமாப்புடனேயே நீரில் இறங்கினோம். “ஐயோ! இதென்ன வேகம்! இதென்ன குளிர்ச்சி!” முன் வைத்த காலைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டோம்.
“கண்ணா, சிரமப்படுத்தும் போலிருக்கிறதே, இது எல்லா நதிகளையும் தோற்கடிக்கிறதே, அந்த நீரெல்லாம் ஐஸ் போலிருந்தது. இது கலப்படமில்லாத அசல் ஐஸ்! புரோட்சணத்துடன் புறப்பட வேண்டியதுதான்” என்று நான் கூறியதைக் கண்ணன் காதில் போட்டுக் கொள்ளவில்லை.