பத்ரி கேதார் – 29

அன்றிரவு ஸோன்பிரயாகையில் தங்கி விட்டு மறுநால் காலையில் பத்ரிநாத்தை நோக்கிப் புறப்பட்டோம். ஒன்பது மாதங்களுக்குள் மறுபடியும் பத்ரிநாராயணர் தரிசனம் கிடைக்கும் என்று கனவு கண்டிருக்க முடியுமா? யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத் தலங்களைத் தரிசித்துக் கொண்டு, இறுதியாக மீண்டும் ஒரு முறை பத்ரிகாசிரமம் செல்வது கிடைத்தற்கரிய பேறன்றோ? இடையில் கோமுக தரிசனம் எத்தனை அரிய பாக்கியம்?

ஈருப்பினும் மனதில் ஒரு குறை. ஏதாவது ஒரு குறையில்லாமல் மனித வாழ்வு முழுமை பெறுவதில்லையே!

கேதாரம் வரும்பொது, பார்வதி கல்யாணம் நடைபெற்ற திரியுகிநாராயணரைத் தரிசிக்க முடியாமல் போனது பெரிய குறை. அதைப் போன்றே திரும்பும் போது, உக்கி மடம், துங்காநாத், ருத்ரநாத் முதலிய தலங்கலைத் தரிசிக்க முடியாமல் போய்விட்டது. உத்ர கண்ட மாப்பில் பார்த்த போது, குப்தகாசியிலிருந்து சமோலி செல்லும் வழியில் இத்தலங்கள் இருப்பது தெரிந்தது. கேதாரத்திலிருந்து பத்ரி செல்லும் போது இத்தலங்கலைப் பார்த்துக் கொண்டு விடலாம் என்று நானே மனத்தில் ஒரு திட்டம் வகுத்துக் கொண்டிருந்தேன். அது எத்தனை பெரிய தவறு என்று அங்கு வந்த பிறகுதாந்தெரிந்தது. முதலில், குப்தகாசியிலிருந்து சமோலி செல்லும் பாதை, கார் பயணத்திற்கே லாயக்கற்றது என்று டாக்சிக்காரர் புஷ்க்கர் கூறி விட்டார். அப்படி சிரமப்பட்டுக் கொண்டு சென்றாலும், இந்த இடங்களை பார்ப்பதற்கு குறைந்தது மூன்று நாட்கள் ஆகுமாம். உக்கிமடத்திற்கு எளிதாக சென்று விட முடியும் என்றும், துங்காநாத், ருத்ரநாத் முதலிய ஆலயங்கலைத் தரிசிக்க கால் நடையாகத்தான் செல்ல வேண்டும் என்றும் கூறினார் அவர். மிகக் கடுமையான ஏற்றமாம். ஆபத்தான பாதையாம். இந்தப் பயணத்தின் பொது அங்கெல்லாம் செல்ல முடியாது என்றும், அதற்குத் தேவையான ஏற்பாடுகளோடு தனியாக ஒரு யாத்திரை வரவேண்டும் என்றும் தோன்றியதால் அந்த எண்ணத்தைக் கைவிட்டென். குப்தகாசி வழியாக காலை பதினோரு மணிக்கு நேரே ருத்ரபிரயாகைக்கு வந்து சேர்ந்தோம்.

அங்கு கங்கா வைஷ்ணவ் ஓட்டல் சொந்தக்காரர் நரேந்திர குமாரை நாங்கள் சந்தித்தோம்.

ஓட்டல் மாடியில் உள்ல அறையை எங்களுக்கு ஒழித்துத் தந்தார். எங்கள் துணிகளைத் துவைத்து, குளித்து, தயிர் சாதத்தை ரசித்துச் சாப்பிட்டுவிட்டு, இரண்டு மணி வரை ஓய்வு எடுத்துக் கொண்டு ஜோஷிமட்டுக்குப் புறப்பட்டோம். செல்லும் பாதையில் முன்பு பார்த்த இடங்களையும், இயற்கைக் காட்சிகளையும், பயங்கர வலைவுகளையும், வளைந்து வளைந்து செல்லும் அலகநந்தாவின் அற்புதத் தொற்றத்தையும் ரசித்துக் கொண்டே ஆதவன் மறையும் வேளையில் நாங்கள் ஜோஷிமட் வந்து சேர்ந்தோம்.

அங்கு ஏழாயிரம் அடி உயரத்தில் தனி பங்களாவில் தன்னந்தனியாக, சந்நியாசியாக வாழ்ந்து கொண்டிருந்த எல்லைப் பாதுகாப்பு அதிகாரி மகீந்தர் சிங்கைச் சந்திக்கும் வாய்ப்புப் பெற்றதை எனிமயப் பயணத்தின் முக்கிய அனுபவங்களில் ஒன்றாகக் கருதுகிறேன்.

அவருக்கு நாற்பது வயதிற்குள்தான் இருக்கும். உள் அமைதியினழகு முகத்தில் தாண்டவமாடியது. ஆழ்ந்த பக்தியின் வசீகரப் பொலிவு கண்களில்  பளிச்சிட்டது. பழகும் எளிமையும், பேச்சின் மென்மையும், பகட்டில்லாத பண்பின்பக்குவமும், அவரது ஆன்மீக வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டின. பகைவனை எதிர்த்துப் படையை நடத்திச் செல்லும் அந்த ரானுவ வீரர், பற்றில்லாத் துறவியாய், பசையற்ற பரம ஞானியாக வாழ்ந்து கொண்டிருந்தார்.

புறவாழ்க்கையில் எந்தச் சூழ்நிலையிலும், கட்டாயத்தின் இக்கட்டான நிலையிலும், மனிதன் தனக்கென்று வகுத்துக் கொண்ட வாழ்க்கை நெறிகளிலிருந்து ஓர் அணுவும் பிரழாமல் வாழ வேண்டும், வாழ முடியும் என்று வாழ்ந்து காட்டிக் கொண்டிருப்பவர் மகீந்தர்சிங். நாம சங்கீர்த்தனம்தான் அவரது பொழுதுபோக்கு. சமய நூல்களையும், பக்தி இலக்கியங்களையும் படிப்பதுதான் அவரது முதல் விருப்பம். தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி விடாமல் அவர் தன்னை மிகப்புனிதமாகக் காப்பாற்றிக் கொண்டு வருகிறார்.  எங்களுக்கு டீ வந்த பொது, “நீங்கள் சாப்பிடவில்லையே?” என்றேன் நான்.

“நான் டீ, காபி ஒன்றும் சாப்பிடுவதில்லை” என்று அவர் புன்னகையுடன் கூறிய போது நான் அதிசயப்பட்டதோடு வெட்கமும் அடைந்தேன்.

அந்த உயரத்தில் அமர்ந்து கொண்டு, எதிரிலுள்ல இமயமலைச் சிகரங்களையே பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்தத் தெய்வீகத் தியானத்தில் தன்னை மறந்து ஒன்றிப் போகிறார்.

அவரது குடும்பம் டேராடூனில் வசிக்கிறது. திருமதி மகீந்தர் சிங் அங்கு டாக்டராகப் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்.

மகீந்தர்சிங் அந்த “காம்ப்”பின் தலைமை அதிகாரி. அவருக்குக் கீழுள்ள அதிகாரிகளும், ஜவான்களும் அவரிடம் பயபக்தியோடு பழகுகிறார்கள். அத்துடன் ஒரு மகானிடம் காட்ட வேண்டிய மரியாதையையும் மதிப்பையும் வைத்திருக்கிறார்கள். அதிகாரத்தை விட, அன்பை விட, ஆன்மீக கட்டுப்பாட்டுக்குள்ல சக்தி விவரிக்க முடியாத வலிமை பொருந்தியதல்லவா?

ஏன் இமாலயப் பயண விவரங்களை ஆர்வமுடன் கேட்டு ஆனந்தப்பட்டார். கடந்த முரை மான கிராமத்திற்குச் சென்று வியாச குகையைப் படம் பிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிய நிகழ்ச்சியை நான் கூறிய போது அவர் வருத்தப்பட்டார். “இதுவரை யாருமே வெளியிடாத அதன் படத்தைப் பிரசுரிக்கத் துடிக்கும் உங்கள் ஆர்வம் எனக்குப் புரிகிறது. ஆனால், அந்த எல்லைப் பகுதியில் தற்போது சற்று கெடுபிடி அதிகமாயிருக்கிறது. என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன். நம்பிக்கையோடு போங்கள்” என்று அவர் என்னை உற்சாகப்படுத்தி அனுப்பினார்.

மறுநாள் புறப்பட்டு மதியம் மூன்று மணிக்கு நேரே மானா கிராமத்திற்குச் சென்றோம். அங்குள்ள எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி எங்கலை வரவேற்கக் காத்துக் கொண்டிருந்தார். மகீந்தர்சிங்கிடமிருந்து “ஓயர்லெஸ்” செய்தி வந்ததாகவும் எப்படியாவது வியாச குகையைப் படம் எடுக்க எங்களுக்கு உதவி புரியுமாறு அவர் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் அந்த அதிகாரி கூறினார். மகீந்தர்சிங்கிடமிருந்து ஒரு தாகீது வந்தால் அது குருவின் கட்டளைக்கு ஈடானது என்று அவர் கருதுவது அவர் காட்டிய ஆர்வத்திலிருந்து புரிந்தது. எங்களுடன் அவர் வந்தால் எங்களுக்குத் தேவியான படங்கலை எடுத்துக் கொள்ள முடிந்தது. வியாச பகவானை நினைக்கும் போதெல்லாம் நான் மகீந்தர்சிங்கையும் நினைத்துக் கொள்கிறேன்.

வியாச குகையிலிருந்து ஒரு மைல் தொலைவிலுள்ல “பீமன் பால”த்தைக் காணச் சென்றோம். அதுசர ஸ்வதி நதியின் மீது அமைக்கப்பட்டுள்ல ஓர் இயற்கையான பாலம். ஒரு பிரமாண்டமான பஆறை அங்கு பாலமாக அமைந்திருக்க, அதன் மத்தியில் உள்ள பெரிய துவாரத்தின் வழியாக நதி பாய்ந்து வருகிறது. அந்தப் பாறையை பீமசேனன் தூக்கி குறுக்கே போட்டதாகக் கூறப்படுகிறது. மலையிலிருந்து பாறையை பீமன் பெயர்த்த போது, அவனுடைய கைகளும் பாதங்களும் மலைச்சரிவில் பதிந்துள்ல அடையாளங்களையும் அங்கு சுட்டிக் காட்டுகிறார்கள்.

வசுதாரா என்ற ஐந்நூறு அடி நீர்வீழ்ச்சி அங்கிருந்து இரண்டரை மைல் தொலைவிலுள்லது. கண்னுக்குத் தெரிந்த வரையில் அதுதான் அலகநந்தாவின் உற்பத்தி ஸ்தானம். அஷ்டவசுக்கள் தவமிருந்த இடமாம் அது. ஆனால், ராணுவ கெடுபிடி காரணமாக அங்கு நாங்கள் செல்ல முடியவில்லை.

மாலை பத்ரிநாத்துக்குத் திரும்பினோம். ஸ்ரீ நாராயணரைத் தரிசனம் செய்து கொண்டோம்.

மறுநாட்காலை நாங்கள் ரிஷிகேசத்தை நோக்கிப் பயணமான போது எல்லாருக்கும் பரம திருப்தியாக இருந்தது. ஜூன் 20-ம் தேதி ரிஷிகேசத்தை விட்டுப் புறப்பட்டு, பத்து நாட்களில் “சதுர்தாம்” தரிசனத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு திரும்புகிறோம். வெல்லிப் பனிமலை மீதினில் ஆயிரம் மைல்கள் உலாவி விட்டு வருகிறோம். ஆனந்தம் இருக்காதா!

ஆதிலும் ஜவான் ஸலீந்தருக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. இமயத்திலேயே பிறந்து வளர்ந்தவர். அதுவரை பார்க்காத தலங்களும் இமயமளவு இருக்கின்ரன. குஷியில் பாட ஆரம்பித்து விட்டார். அருமையான மெட்டில் அமைந்த கடுவாலிப் பாட்டு அது. அதை ரிகார்டு செய்யச் சொல்லி, போடச் சொல்லி கேட்டு மகிழ்ந்தார். மலைவாழ் மக்களுக்கே உரிய உல்ளம், கபடமற்ற எத்தனை தூய்மையான நிஜமான மகிழ்ச்சி அது!

ஏன் இமயப் பயணங்களில் என்னை மிகவும் கவர்ந்தது அங்கு வாழும் மக்களின் எளிமைப் பண்பும், தூய்மையான பக்தியுணர்வும்தான்.

அவர்களது புற அழுக்கின் நெடியை சற்றுப் பொறுத்துக் கொண்டால், அவர்களது மாசற்ற மனத்தின் அழகை ரசிக்கலாம். இயற்கையின் பகையைப் பெரிதுபடுத்தாமல், போராட்ட மனப்பான்மையையோ மனக்கசப்பையோ வளர்த்துக் கொள்ளாமல் அதனுடன் உறவாடி, உளம் மகிழ்ந்து, பொறுமையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு கவளச் சோற்றுக்கும் அவர்கள் உழைக்க வேண்டியிருக்கிறது. காட்டில் வெட்டிய விறகை, பாடிக் கொண்டே முதுகில் சுமந்து வரும் சிறுவர்களையும், இலைஞர்களியும் வழியில் கண்டேன். அவர்களுக்கு உற்ற தோழனாக, பொறுப்புடன் துணைபுரியும் கோவேறு கழுதைகளைக் கண்டேன். வீட்டில் கம்பளி ஆடைகளை நெய்யும் மூதாட்டிகளைக் கண்டென். “கண்டி”யில் மூச்சுத் திணற மனிதனைச் சுமந்து செல்லும் பலசாலிகளைப் பார்த்தேன். டீக்கடைகளில் அமர்ந்து குளிர் காய்ந்து கொண்டே ஈ ஓட்டிக் கொண்டிருக்கும் வயோதிகர்களைக் கண்டேன்.

மலைகளின் மீது உயரத்தில் தென்பட்ட கிராமங்களைக் கண்டு நான் ஏங்கிப் போவது உண்டு. அங்கு ஏறிச் சென்று அந்தத் தனிமையையும் அமைதியையும் ரசிக்க வேண்டும் என்று துடிப்பேன். நாம் வாழும் உலகத்திற்கே சற்றும் சம்பந்தமில்லாமல், மேகங்களுக்கிடையே வாழ்க்கை நடத்தும் அவர்கள், உண்மையில் கொடுத்து வைத்தவர்கள். அவர்களது அகராதியில் “பயம்” என்ற வார்த்தையே கிடையாது.

சின்னஞ்சிறார்களும் காடுகளில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருப்பார்கள். பயங்கரத் தொங்கு பாலத்தில் அதை விட பயங்கரமான நதியைக் கடந்து கொண்டிருப்பார்கள். பேயிருட்டில் பேசிக் கொண்டே எங்கோ நிதானமாகப் போய்க் கொண்டிருப்பார்கள்.

கீழே இறங்க, இறங்க, நவ இந்தியாவின் முன்னெற்றச் சுவடுகள் ஆங்காங்கே பதியத் தொடங்கியுள்லதையும், கடுவாலி மக்களின் மீது சமவெளி நாகரீகத்தின் சாயல் படியத் தொடங்கியுள்ளதையும் காண முடிகிறது. படிப்பும், பதவியும், படாடோப வாழ்க்கையின் மோகமும் அவர்களை ஈர்க்க ஆரம்பித்திருப்பதற்கான அடையாளங்களும் தெரிந்தன.

இமயத்திலுள்ள தலங்களைத் தரிசிக்க வருபவர்கள் பெரும்பாலும் வயோதிகர்களாகத்தான் இருக்கிறார்கள். இளவட்டங்களை அதிகமாகக் காண முடியவில்லை. உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், வங்காளம் இம்மாநிலங்களிலிருந்துதான் நிறைய பேர் வருகிறார்கள். பஸ்களில் ஏறிக் கொண்டு களைப்பையோ, பனியையோ, வெய்யிலையோ பாராமல் நான்கு தலங்களையும் தரிசித்து விட்டு வருகிறார்கள். சிலர் பத்ரிநாத்துக்கு மட்டும் வருகிறார்கள். தென்னகத்திலிருந்து வரும் பெரும்பாலான யாத்திரிகர்கள் நடக்கவெ தேவையற்ற, சிரமமில்லாத பத்ரிநாத்துக்கு மட்டும்தான் வருகிறார்கள்.

எல்லா இடங்களிலும் எளிய ஏழ்மையான கிராம மக்களைத்தான் அதிகமாகப் பார்த்தேன். தள்ளாத வயதில் ஒருவருக்கொருவர் துணையாக ஆண்களும், பெண்களும் பக்தியோடு, “கேதார்நாத் ஜி கீ ஜெய்”, “கங்கா மாய் கீ ஜெய்”, “ஜம்னா மாய் கீ ஜெய்”, “பத்ரிவிஷால் கீ ஜெய்” என்று கோஷமிட்டு மலையேறி வரும் காட்சி மனதுக்கு மாமருந்தாக இருக்கிறது.

இமயத்தில் அழகைக் காணலாம். ஆனந்தத்தை அனுபவிக்கலாம். சத்தியத்தை உணரலாம். அதனால் தெய்வத்தைத் தரிசிக்கலாம். இந்த தெய்வ தரிசனத்திற்காகத்தான் காலம் காலமாக மக்கள் இமயத்தை நாடிச் சென்று வருகிறார்கள். அதனாலேயே இந்தப் பக்திப் பயணங்கள் பயனுள்ளதாக அமைகின்றன.

இந்தத் தூய பக்தியில், தியாக உணர்வில், சமயப் பற்றில், ஆன்மீக லட்சியத்தில், ஒருமைத் தத்துவத்தில், நம் பண்டைய பாரதத்தைத் தரிசிக்கிறோம். புண்ணிய பாரதத்தின் பிறப்பிடமே என்று உணர்கிறோம். இமயம் இடும் புனிதப் பிச்சையில் நமது பாரதீய கலாசாரம் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை அறிகிறோம். இமயத்தின் அறிமுகம் இல்லாமல் பாரதத்தை முழுமையாகத் தெரிந்து கொண்டு விடமுடியாது என்று தெளிகிறோம்.

இமயத்தில் நான் பார்ததது கை மண் அளவுதான். இன்னும் காண வேண்டிய இடங்களும், வழிபட வேண்டிய தலங்களும் உலகளவு இருக்கின்றன.

நான் கண்ட காட்சிகளை எழுத்தில் அப்படியே வடித்துக் காட்டும் ஆற்றல் என்னிடம் இல்லை. அவரவர்கள் நேரில் கண்டு உணர்ந்து, ஆனந்தத்தில் லயிக்க வெண்டிய அனுபவங்கள் அவை.

முடிந்தவர்களெல்லாம் இமயப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம். இளைஞர்களும், முக்கியமாக நம் மாணவமணிகள் இம்மாதிரியான பயணங்களைப் பயனுள்ள பிக்னிக்காகவும், ஆன்மீக அட்வென்சராகவும் மேற்கொள்ள வேண்டும். நம் வம்சாவளியையும், குடும்ப பரம்பரையையும், அறிந்து கொள்ளுவதில் ஆர்வம் காட்டுவது போல் நம் நாட்டின் வரலாற்றையும், நம் பண்டைய பெருமைகளையும், மகான்களின் சாதனைமிக்க தூய வாழ்வையும் தெரிந்து கொள்ள முயல வேண்டும். பாரத நாட்டின் அழியாச் செல்வச் சிறப்புக்கள் நம் சிந்தையில் குடியேறி, ரத்தத்தில் ஊற ஊறத்தான் நாம் எத்தகைய மகோன்னத கலாசாரத்தின் வாரிசுகள் என்பது புரியும்.

நம் வளமிக்க வாழ்வுக்கான வளர்ச்சித் திட்டங்களும், முன்னேற்றக் கனவுகளும், சீரான குடும்ப வாழ்வும், ஒழுங்கான சமூகக் கண்ணோட்டமும், ஒழுக்கம் மிக்க அரசியலும், விஞ்ஞான வினோதங்களைப் பற்றிய உண்மையான கணிப்பும், நம் கலாசாரத்தின் அடிப்படியயின் மீதும், ஆன்மீக அடித்தளத்தின் மீதும் அமைக்கப்பட்டால்தான் அவை உண்மையான, நிலையான பயன் தர முடியும்.

“பழையன கழிதலும், புதியன புகுதலும்” என்ற பொன்மொழியைச் சரியாக புரிந்து கொள்ளாமல், தொன்மை மிகுச் சிறப்புக்கள் அனைத்துமே சாரமற்ற குப்பைக் கூளங்கள், கழிக்கப்பட வேண்டியவை என்று நினைத்து ஒதுக்கித் தள்ளிவிட்டுப் புதிய கருத்துக்களையோ, புதுமை உலகத்தையோ படைத்து விடமுடியும் என்று நினைப்பது அறியாமையாகும். உன்னத லட்சியளுக்குட்பட்ட பாரம்பரியத்தின் அழிக்க முடியாத கோட்பாடுகளின் தொடர்ச்சியாகத்தான் புதிய சமுதாயம் மலர முடியுமெ தவிர, அவற்றிந்தொடர்பை அறுத்துக் கொண்டு தன்னிச்சையாக வளரவோ, வாழ்ந்து விடவோ முடியாது. இம்மாதிரியான நாகரீக மோகங்கள் அநாகரீக அவலங்களாகத்தான் முடியும்.

வாழ்க புண்ணிய பாரதம்!

வளர்க பாரத கலாசாரம்!!