திருப்பதி திருமலையான்
ஒரு கூனன், ஒரு குருடன், ஒரு முடவன், ஒரு ஊமை, இப்படி நான்கு பேர்கள் ஒரு மலை ஏறுகிறார்கள். மலை என்றால் ஏதோ இமயத்தின் சிகரத்தைப் போன்று நீண்டு உயர்ந்த மலை அல்ல. சின்னஞ் சிறிய மலைதான். அந்த மலைமீது ஒரு கோயில். அந்தக் கோயிலிலே ஒரு தெய்வம். அந்த தெய்வத்திடம் அசையாத நம்பிக்கை மக்களுக்கு, கேட்கும் வரத்தையெல்லாம் அளிக்க வல்லது என்று.
ஆதலால் வாழ்க்கையில் இந்த ஊனுடம்பில் ஏற்பட்ட குறை காரணமாகத் துயருறுகிறவர்கள் நால்வர் மலை ஏறுகிறார்கள். இவர்களைப் போல், உடம்பில் குறை இல்லா விட்டாலும், உள்ளத்தில் குறையுடையவர்கள் பலரும் மலை ஏறுகிறார்கள்.
திடீரென்று ஒர் அதிசயம் நிகழ்கிறது அங்கே கூனிக் குறுகிக் கோலூன்றி நடந்தவன், கூன் நிமிர்ந்து ஓடவே தொடங்கி விடுகிறான். குருடன் கண்கள் திறந்து விடுகின்றன. அவன் கண்கள் ஒளி பெற்று நிமிர்ந்து வளைந்திருக்கும் கொம்பொன்றில் தொங்கிக் கொண்டிருக்கும் தேன் கூட்டைப் பார்த்து, ‘அதோ தேன், அதோ தேன்!’ என்று மற்றவர்களுக்குக் காட்டுகிறான்.
அதுவரை நொண்டியாய் முடமாய்த்தட்டுத் தடுமாறி மலை ஏறிய முடவனோ, குருடன் காட்டிய தேன் கூட்டை எடுக்க, மரத்தின் மேலேயே ஏற ஆரம்பித்து விடுகிறான். அவ்வளவுதான். அதுவரை வாய் பேசாது ஊமையாய்ப் பக்கத்தில் சென்றவனோ, ‘எடுக்கும் தேனில் எனக்குக் கொஞ்சம்!’ என்றே வாய்விட்டுக் கேட்கிறான்.
இப்படியே கூணன், குருடன், முடவன், ஊமையாக இருந்த நால்வரும் தங்கள் தங்கள் குறை நீங்கியவர்களாய் ஓடுகிறார்கள், மலைமேல் நிற்கும் மாதவனின் திருவடிகளில் சென்று வீழ்ந்து வணங்கி எழுவதற்கு.
அத்தனையையும் பார்த்துக் கொண்டிருக்கிறார், ஒரு கவிஞர். அவரும் மலை ஏறுகிறவர்களில் ஒருவர்தான். அவர் உள்ளத்திலும் ஏதோ குறை. அதற்குப் பிரார்த்தனை செய்து கொண்டே ஏறுகிறார் மலை மேலே. அவருக்கு அந்த நிகழ்ச்சியை, அந்த அற்புதத்தைக் கண்டு ஒரே வியப்பு. வியப்பை விட மலை மேல் இருக்கும் மாதவனிடத்திலேயே ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கையிலே பிறக்கிறது, ஒரு பாட்டு. பாட்டு இதுதான்:
கூன் கொண்டு சென்றவன்கூன்நிமிர்ந்து ஓட,
குருடன் கொம்பில்
தேன் என்று காட்ட, முடவன் அத்தேனை
எடுக்க, அயல்
தானின்ற ஊமை எனக்கென்று கேட்க
தருவன் வரம்
வான் நின்ற சோலை வடமலைமேல் நின்ற
மாதவனே.
‘இத்தனையும் இப்படியே நடந்ததா? அதற்கு ஆதார பூர்வமான சான்று உண்டா?’ என்று ஆராய வேண்டுவதில்லை. பத்தனாகிய கவிஞன் பாடிப் பல நூறாண்டுகள் கழிந்து விட்டன. என்றாலும், மக்கள் உள்ளத்திலே, அதே அசையாத நம்பிக்கை இன்னும் சுடர் விட்டுக் கொண்டிருக்கிறது என்பது கண்கூடு.
இன்றும் நாள் நக்ஷத்திரம் என்று ஒன்றும் பார்க்காமலேயே தினசரி நூற்றுக் கணக்கான மக்கள் நடந்தோ அல்லது காரிலோ
பஸ்ஸிலோ சவாரி பண்ணியோ திருமலை சென்று சேர்கிறார்கள். பணம் படைத்தவர்கள் எல்லாம் நிறையக் கட்டணம் செலுத்தி மலை மேல் நிற்கும் மாதவனைச் சேவிக்கிறார்கள்
ஏழைகளும் ‘கியூ‘ வரிசையிலே, மணிக் கணக்காக நின்று, நகர்ந்து, கர்ப்பகிருஹத்தில் நுழைந்து வேங்கடேசுவரனைத் தரிசிக்கிறார்கள். இத்துடன் அவரவர்கள் பிரார்த்தனை செய்து கொண்டபடி பணமாக, நோட்டாக, நகையாக எல்லாம் அந்தக் கோயிலில் வைத்திருக்கும் பெரிய உண்டியலில் போட்டுவிட்டு, உண்டியலைச் சுற்றிவந்து நமஸ்கரித்து விட்டு, வீடு திரும்புகிறார்கள். உண்டியலில் சேர்வது மாதம் இருபது லட்சம் என்கிறார்கள்; முப்பது லட்சம் என்கிறார்கள்.
மக்களது இத்தனை நம்பிக்கைக்கும் பாத்திரமாக இருப்பவன்தான், திருப்பதியில் அந்தத் திருமலை மேல் நிற்கும் திருவேங்கடமுடையான். ‘வடவேங்கடம் தென் குமரியாயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்‘ என்று பண்டைத் தமிழர்கள் எல்லை கட்டினார்களே, அந்தத் தமிழ் நாட்டின் வடஎல்லையில் வானுற ஓங்கி வளர்ந்த வட மாலவன் குன்றத்தின் மீதே, வான் நோக்கி நிமிர்ந்து நிற்கிறான் அவன்.
‘கடன் வாங்கிக் கல்யாணம்‘ என்று ஒரு படம். படத்தில் வரும் நிகழ்ச்சிகளுக்கும் படத்தின் பெயருக்கும் பொருத்தம் இல்லை என்கிறார்கள் பார்த்தவர்கள், ஆனால் தமிழ் நாட்டில் கடன் வாங்கிக் கல்யாணம் பண்ணி, அந்தக் கடனை அடைக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிற பெருமகன் ஒருவர் உண்டென்றால், அவர் திருப்பதி வேங்கடாசலபதிதான். கதை இதுதான்:
வைகுண்டவாசனாக இருந்த மகா விஷ்ணு வராக அவதாரம் எடுத்து இரணியாக்ஷனை சம்ஹரித்துப் பூதேவியை அவனுடைய பிடியிலிருந்து மீட்டவர் வைகுண்டத்துக்குத் திரும்பாமல் இப் பூவுலகிலேயே நிலைத்து விடுகிறார். ஸ்ரீதேவியும் இப் பூவுலகிலே ஒரு தாமரை மலரிலே குழந்தையாக அவதரிக்கிறாள்.
குழந்தையை ஆகாசராஜன் எடுத்துப் பத்மாவதி எனப் பெயரிட்டு வளர்க்கிறான். நாராயண வனத்திலே பத்மாவதி தேவியும், அந்த நாராயணனையே கணவனாக அடையத் தவமிருக்கிறாள். வேங்கடவனாக மலைமேல் நிலைத்து நின்ற நாராயணன், வகுளமாலிகையைத் தூதனுப்பி, பத்மாவதியை மணம் பேசித் திருமணம் செய்து கொள்ள முனைகிறார். கல்யாணச் செலவுக்குப் பணம் வேண்டுமே. அதற்காகக் குபேரனிடம் ஒரு கோடியே பதினான்கு லக்ஷம் பொன் கடன் வாங்குகிறார். இந்தக் கடனுக்கு வருஷந்தோறும் வட்டி கட்டுவதாகவும், கலியுக முடிவில் அசலைக் கொடுப்பதாகவும் ஒப்புக்கொண்டு பத்திரம் வேறே எழுதிக் கொடுக்கிறார். கடன் பத்திரத்தில் சங்கரனும், பிரம்மாவும் சாக்ஷிக் கையொப்பம் இடுகின்றனர்,
இப்படிக் கடன் வாங்கிய பணத்தைக் கொண்டு கல்யாணம் ‘ஜாம் ஜாம்‘ என்று நடக்கிறது. கடன்தான் இன்னும் அடைத்தபாடாக இல்லை. அதற்காகவே வேங்கடேசன் இன்னும் பக்தர்களிடம் பிரார்த்தனை மூலம் வாங்கிக் கொண்டிருக்கிறார். வட்டிக்கு வட்டி வாங்கும் வட்டிக் காசுப் பெருமாள் என்ற பெயர் வாங்கியும், வட்டியையும் முதலையும் குபேரனுக்குக் கொடுக்காமலேயே ‘மொங்கான்‘ வைக்கிறார் ஆசாமி. ஒரே ஒரு திருப்தி. வருகிற பணம் முழுவதையும் பள்ளிக்கூடம், கலாசாலை, ஆஸ்பத்திரி, அநாதை ஆசிரமம் என்று தானம் வழங்கி விடுகிறார். குபேரனது கடன் தீராவிட்டால், குபேரனுக்கு என்ன குறைந்து விடப் போகிறது?
இந்தப் பெருமாளைப் பற்றி மக்கள் பேசிக் கொள்ளும் கதைகளோ அனந்தம். ஸ்ரீ வேங்கடேசனோ திருமலை மீது நிற்கிறார். அங்கு அவர் பக்கத்திலோ துணைவி இருக்கவில்லை. அந்த அலர்மேல் மங்கையோ மலை அடிவாரத்திலிருந்து மூன்று மைல் தூரத்தில் உள்ள திருச்சானூரில் குடியிருக்கிறாள்.
இப்படி இவர்கள் பிரிந்திருப்பானேன்? அது தெரியாதா? . மணப் பெண்ணான அலர்மேல் மங்கை கணவன் வீட்டுக்கு வரும்போது நிறைந்த ஸ்ரீதனம் எல்லாம் கொண்டு வந்திருக்கிறாள். அவள் கொண்டு வராத பண்ட பாத்திரமோ, தட்டு முட்டோ இல்லை. என்றாலும் ஒரே ஒரு பொருள் – மிகவும் அற்பமானதுதான் – அதுதான் கருவேப்பிலைக் கொத்து ஒன்று கொண்டு வர மறந்துவிட்டாளாம். அதற்காக மணமகன் அவளைவிரட்டி அடித்து விட்டார். அவளும் வீம்பு குறையாமல் தன் பிறந்தகத்துக்கு வந்து அன்று தங்கியவள்தான். புருஷன் வீட்டுக்குத் திரும்பவே இல்லை.
ஆனால் புருஷனுடைய வீராப்பு எத்தனை நாளைக்கு? இப்போதோ ஒவ்வொரு இரவிலும் ஆசாமி மலையிலிருந்து இறங்கி, மனைவியின் மனைக்கே நடக்கிறார். விடிவதற்குள் திரும்பியும் விடுகிறார். யதாஸ்தானத்துக்கு. மனைவியுடன் பிணங்கிக் கொண்டதன் பலன் வேங்கடேசனுக்குச் செருப்பு தேய்கிறது.
இப்படி யெல்லாம் பக்தர்கள், அதிலும் பெண்மணிகள் எல்லாம் பேசிக் கொள்வது நம் காதில் விழும் – திருப்பதி திருமலை செல்லும் வழியில். ஆனால் இப்படி இவர்கள் மலை மேல் ஒருவரும், நிலத்தில் ஒருவருமாகத் தனித்திருப்பதற்கு ஒரு காரணம் தோன்றுகிறது, எனக்கு. வேங்கடவனுக்கும் அலர்மேல் மங்கைக்கும் ஒரு போட்டி. பக்தர்களுக்கு அருள் புரிவதிலே அப்பனை விட, அன்னை அருள் மிகுந்தவளல்லவா? ஆதலால், அவள் அவசரம் அவசரமாக இறங்கி ஓடி வந்து பக்தர்களை எதிர்கொண்டு அருள்புரிவதிலே முந்திக் கொள்கிறாள் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது, எனக்கு.
இந்தத் திருவேங்கடமுடையானது திருப்பதி இன்று மூன்று பிரிவாக இருக்கிறது. அலர்மேல்மங்கைத் தாயார் கோயில் கொண்டிருக்கும் திருச்சானூர்; கோவிந்தராஜன் திருக்கோயில் இருக்கும் கீழைத் திருப்பதி; வேங்கடவன் நின்ற திருக்கோலத்தில் காட்சி கொடுக்கும் திருமலை.
ரயிலிலோ, காரிலோ போகிறவர்கள் எல்லாம் ஒன்று சேர்வது கீழைத் திருப்பதியில்தான். இங்குதான் ராமாநுஜரால் நிர்மாணிக்கப்பட்ட கோவிந்த ராஜன் கோயில் இருக்கிறது. கோயிலைச் சுற்றியே திருப்பதி நகரம். தேவஸ்தானத்தார் நடத்தும் கீழ்த்திசைக் கல்லூரி, சர்வ கலாசாலை, பெண்கள் பள்ளிக்கூடம், அநாத சரணாலயம் எல்லாம் இருப்பது இங்கேதான். வேங்கடேசுவர விசுவ வித்யாலயம், பாலிடெக்னிக் தொழிற் கல்விச்சாலை, யாத்திரீகர் தங்கப் பிரும்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள சத்திரங்கள் எல்லாம் இருக்கின்றன.
இங்கிருந்து தென் கிழக்கே இரண்டு மைல் தூரத்தில் திருச்சானூர். அங்குள்ள பத்மசரோவரம் என்ற குளத்தில் மலர்ந்த தாமரையிலேதான் பத்மாவதித் தாயார் தோன்றியிருக்கிறாள். குளத்துக்குக் கிழக்கே கோயில்.
இனி வேங்கட வாணனைத் தரிசிக்க மலை ஏறலாம். காலிலே வலுவுள்ளவர்கள், ஏழு மலை ஏறி, ஏழுமைல் நடந்து ஏழுமலையானிடம் ஒன்று சேரலாம். கால் கடுக்க நடக்க இயலாதவர்களுக்கு பஸ் வசதி செய்திருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் வசதி செய்து கொள்ளக் கூடியவர்கள் ‘ஜம்‘ என்று காரிலேயே பதினோரு மைல் தூரத்தில் ஏழுமலையையுமே கடந்து விடலாம்.
இந்தத் திருமலைத் தொடருக்கு சேஷாசலம் என்று பெயர். கீழே இருந்து பார்த்தால் இம் மலைத் தொடர் உடலை வளைத்துப் படுத்துக் கிடக்கிற பாம்பு போலவே இருக்கும். இப்படி எல்லாம் ‘வான்கலந்த வண்ணன் வரை யை‘க் கடந்து சென்றால், ‘தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம்‘ வந்து சேருவோம். மலை ஏறியதும், சுவாமி புஷ்கரணியில் ஒரு முழுக்குப் போட்டு, அக்குளத்தின் மேல் கரையில் உள்ள வராக மூர்த்தியைத் தரிசித்து விட வேண்டும். உருவிலே சிறிய மூர்த்தி என்றாலும், இவர்தானே ஆதி மூர்த்தி.
இனி, கோயிலுக்குள் போகலாம். கோயில் மற்றையத் தமிழ்நாட்டுக் கோயில் கட்டடக் கலைக்கு எடுத்துக் காட்டாக அமைந்திருக்கிறது. கோயிலின் தலைவாயிலைப் படிக்காவலி என்கிறார்கள். அந்த வாயிலை ஒரு கோபுரம் அணி செய்கிறது. இந்த வாயிலில் நுழைந்து முதற் பிராகாரத்தையும் கடந்தால் வெள்ளி வாயில் (வெண்டி வாகிலி). அதனுள் நுழைந்தால் விமானப் பிரதக்ஷிணம். இங்கு எங்கே திரும்பினாலும் ஒரே தங்கமயம். பங்காரு பாவி என்னும் தங்கக் கிணறு இருப்பது இங்கேதான். இந்தப் பிராகாரத்தைச் சுற்றினால் கர்ப்பகிருஹத்தின் மேல் கட்டப்பட்டிருக்கும் ஆனந்த நிலைய விமானம். ஒரே ஜோதிமயம். இரவிலும் பகலிலும். இந்தப் பொன் போர்த்த விமானத்தைப் பதுப்பிக்க முப்பத்திரண்டு லட்சம் ரூபாய் செலவாம்.
இந்தத் தங்க விமான தரிசனம் செய்த பின், தங்க வாயிலைக் (பங்காரு வாகிலி} கடந்தால் கர்ப்ப கிருஹம் வந்து சேரலாம். இந்தத் தங்க வாயிலில் இரண்டு தங்கமயமான துவார பாலகர்கள், தங்கச் சட்டங்களுக்குள்ளே நின்று கொண்டிருப்பார்கள். இவர்கள் கண் திறந்து பார்த்துவிடக் கூடாதே என்று கண்களை மறைத்து ஒரே பட்டையான திரு நாமம். இவர்கள் அனுமதி பெற்றே உள்ளே நுழைய வேண்டும்.
ஆம்! இந்த ‘வேங்கடத்து மேவிய வேத நல்விளக்கை‘க் கண்டு தொழ எவ்வளவோ வசதி. கட்டணங் கட்டிச் சேவை செய்கிறவர்களுக்குச் சலுகை அதிகம்தான். தரும தரிசனக்காரர்கள் எல்லாம் ‘கியூ‘ வரிசையிலே காத்து நின்றுதான் வேங்கடவனைக் காண வேண்டும்.
தரிசனத்திலே (ஆம், பிரசாதத்தில் அல்ல) கண்ணாயிருப்பவர்கள், ஒரு வியாழன் மாலை திருமலை சென்று இரவு ஏழு மணிக்கு இரண்டு ரூபாய் கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற்று மலரால் அணி. செய்தி ருக்கும் வேங்கடவனின் திருக்கோலத்தைக் கண்டு மகிழலாம். அன்றுதான் கண்களை மறைத்து எப்போதும் இட்டிருக்கும் நாமத்தை அகற்றி விட்டு, மெல்லியதான நாமம் ஒன்றை கொண்டு, அவனுமே கண் திறந்து குளிர்ந்த நோக்கோடு நம்மை அருள்பாலிப்டான்.
இதே பூலங்கி தரிசனத்தை விரும்பினால் மறு நாள் (வெள்ளிக் கிழமை) காலையிலும், சுப்ரபாதம், திருப்பள்ளி எழுச்சி எல்லாம் முடியும்வரை திகுமாமணி மண்டபத்தில் காத்திருந்து, பின்னர் உள்ளே சென்று காணலாம் – வசதி படைத்தவர் மட்டும்.
கலை ஆர்வம் கொண்டவர்கள் இந்தப் பூலங்கி சேவை, அல்லது தோமாலை சேவையினால் எல்லாம் திருப்தி அடைய முடியாது. அணியும் பணியும் இல்லாமல், வேங்கடவனை அவனிருக்கும் வண்ணத்திலே கண்டு தொழ, வெள்ளிக்கிழமை பகல் பத்து மணிக்குத் திரும்பவும் செல்ல வேணும். அன்றுதான் பணம் படைத்த பக்தர்கள் நூற்றுக் கணக்காகவும், ஆயிரக் கணக்காகவும் கட்டணங்கள் கட்டி, கர்ப்பூரக் கிண்ணி, கஸ்தூரிக் கிண்ணி என்றெல்லாம் ஏற்பாடுகள் செய்து திருமஞ்சனம் ஆட்டுவார்கள்.
அந்தப் பக்தர்கள் தயவால், அவர்களைச் சேர்ந்தவர்களில் ஒருவராய் உள்நுழைந்து விட்டால், எம்பெருமான் திருக்கோலத்தைக் கண்குளிரக் காணலாம். வக்ஷ ஸ்தலத்தில் ஸ்ரீதேவியை வைத்திருக்கும் அந்த ஸ்ரீனிவாசப் பெருமாளைப் பாதாதி கேச பர்யந்தம், ஏன். கேசபர்யந்தம்? கேசத்துக்கும் மேலே நீண்டுயர்ந்திருக்கும் மணிமகுட பர்யந்தம் கண்டு தரிசிக்கலாம். அன்று இளங்கோ பாடினாரே,
“பகை அணங்கு ஆழியும் பால்வெண் சங்கமும்
தகை பெறு தாமரைக் கையில் ஏந்தி
நலம்கிளர் ஆரம் மார்பில் பூண்டு
பொலம்பூ ஆடையில் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடுமால் நின்ற வண்ணம்“
என்று, அந்த வண்ணத் திருவுருவையே கண்டு தொழலாம். அழகினால் உயர்ந்துள்ள பெருமாள் திருவுருவங்கள் பல பார்த்திருப்போம், நாம். ஆனால், இந்த வேங்கடவனது திரு உருவில் இருக்கும் காம்பீர்யம் அலாதியாக இருக்கிறது.
பல்லவர் காலத்து விஷ்ணு சிலைகளில் உள்ள உத்தரீயம் இல்லை. நில உலகிலே வேங்கடவாணனுக்கு இருக்கின்ற பெருமையோடு கலை உலகிலும் வேங்கடவனாகவே (அழிவற்றஐசுவர்யம் உடையவனாகவே) இருக்கிறான் இவன்.
தெய்வத் திருமலை வாழ் வேங்கடவன் ரிக் வேதத்திலேயே இடம் பெற்றிருக்கிறான் என்பர், திருமந்திரம் பாடிய திருமூலரும், திருவந்தாதி பாடிய கபிலதேவ நாயனாருமே இந்த வேங்கடத்து மேயானைப் பாடி இருக்கிறார்கள். தொண்டர் அடிப்பொடியைத் தவிர மற்றைய ஆழ்வார்கள் எல்லாரும் மங்களா சாஸனம் செய்திருக்கிறார்கள்.
தொண்டைமான் சக்ரவர்த்திதான் இந்தக் கோயிலை எடுப்பித்தவர் என்று வேங்கடாசல மாகாத்மியம் கூறும். பல்லவர், சோழர், பாண்டியர், யாதவர் முதலிய அரசர் பெருமக்கள் எல்லாம் கோயிலை விஸ்தரித்திருக்கிறார்கள் என்றாலும், விஜயநகர மன்னர்கள் காலத்தில்தான் கோயிலின் செல்வம் பல்கிப் பெருகி இருக்கிறது. சாளுவ நரசிம்மனின் பெரிய பாட்டனான சாளுவ மங்கதேவனே விமானத்துக்குத் தங்கத் தகடு வேய்ந்திருக்கிறான். கிருஷ்ண தேவராயனும் அச்சுததேவராயனும் பலதுறைகளில் கோயிலை வளப்படுத்தி இருக்கிறார்கள்.
இந்த வேங்கடவனைப் பற்றி ஒரு பெரிய விவாதம். இந்த மூர்த்தி முருகனே, பின்னர்தான் ராமானுஜர் அந்த மூர்த்தியைச் சங்கு சக்கரம் ஏந்த வைத்து ஸ்ரீனிவாசனாக மாற்றி விட்டார் என்பர் ஒரு சாரார். ஆதி முதலே அவன் ஸ்ரீனிவாசனே என்று அறுதி இட்டு உரைப்பார்கள் மற்றவர்கள்.
காளத்தி நாதர்
இது வேண்டாத விவாதம். தமிழ் நாட்டில் சைவ வைணவ வேற்றுமைகள் ஒரு காலத்தில் தலை தூக்கி நின்றிருந்தாலும், அந்த வேற்றுமைகளை யெல்லாம் மறக்கத் தெரிந்தவர்கள் தமிழ் மக்கள். ‘உணர்வார் பார் உன்னுருவம் தன்னை ?’ என்று முதல் ஆழ்வார்களில் முதல்வரான பொய்கை யாழ்வார் மயக்கினாலும், பேயாழ்வாரோ,
தாழ் சடையும், நீள் முடியும் ஒள்மழுவும் சக்கரமும் சூழ்அரவும், பொன்நாணும் தோன்றுமால் – சூழும் திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுருவும் ஒன்றாய் இயைந்து
என்று முடிவு கட்டிச் சைவ வைஷ்ணவ ஒற்றுமையை நிலவச் செய்து வருகிறார். இது போதாதா, விவாதத்துக்கு முற்றுப் புள்ளிவைக்க?
‘இறைவனிடத்து இடையறா அன்பு செலுத்திய நாயன்மார்கள் அறுபத்து மூவரில் செயற்கரிய செயல் செய்தார் யார்?’ என்பது ஒரு பட்டி மண்டபத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொண்ட பொருள். அறுபத்து மூன்று அன்பர்களது செயலையும் அலசி ஆராய்வது சிரமம் என்று கருதிப் பட்டினத்தார். குறிப்பிடும் மூன்று. திருத்தொண்டர்களை மட்டுமே விவாதத்துக்கு எடுத்துக் கொண்டனர்.
வாளால் மகவு அரிந்து ஊட்ட
வல்லேன் அல்லன்; மாது சொன்ன
சூளால் இளமைதுறக்க வல்லேன்
அல்லன்; தொண்டு செய்து
நாள் ஆறில் கண் இடந்து அப்ப
வல்லேன் அல்லன்; நான் இனிச்சென்று
ஆளாவது எப்படியோ திருக்
காளத்தி அப்பருக்கே?
என்று சிறுத்தொண்டர், திருநீலகண்டர், கண்ணப்பர் மூவரையும் போல, அரிய செயல் செய்து இறைவன் அருளைப் பெறத் தம்மால் இயல வில்லையே என்று ஏங்கி இருக்கிறார் பட்டினத்தார்.
இம்மூவர் செயலையுமே அன்று அறிஞர்கள் விவாதித்தார்கள். கடைசியில் தலைவரது தீர்ப்பு கண்ணப்பர் பக்கமே இருந்தது. திருநீலகண்டர் தம் உறுதியில் நிலைத்து நிற்பதற்கு அவர் மனைவி இறைவன் பேரிலேயே ஆணை இட வேண்டியிருந்தது. சிறுத்தொண்டர் பெற்ற மகனையே அரிந்து கறி சமைத்த செயலில் ‘எதுவும் எனக்கு அரியது அன்று‘ என்று சொல்லும் ஆணவம் சிறிது கலந்து விடுகிறது. கண்ணப்பர் ஒருவர்தான் பிறருடைய தூண்டுதல் ஒன்றுமே இல்லாமல், ‘அயல் அறியா அன்பை‘ இறைவனி டம் செலுத்துகிறார். ஆதலால் அவர் அன்பே சிறந்தது. அவர் செய்ததே அரிய செயல் என்று முடிவு கட்டினார் பட்டி மண்டபத் தலைவர்.
இப்படி அறுபத்து மூன்று அன்பர்களில் இறைவனிடம் அன்பு செலுத்தியவர்களில் தலை நிற்கிறார் கண்ணப்பர். அத்தகைய கண்ணப்பராலே பெருமை பெற்றவர்தான் காளத்தி அப்பர். கொலைத் தொழிலே புரியும் வேட்டுவக் குலத்திலே பிறந்த திண்ணனார், வேட்டையாடச் சென்ற இடத்திலே, அங்குள்ள குடுமித் தேவருக்கு ஆட்பட்டு, அவருக்கு இயல்பான முறையில் வழிபட்டு நின்றவர். இறைவனது வலக் கண்ணில் உதிரம் ஒழுகியபோது, தம் வலக் கண்ணையே தோண்டி எடுத்து அப்பி, வழியும் இரத்தத்தைத் துடைத்தவர்.
திரும்பவும் இறைவனது இடக் கண்ணிலும் இரத்தம் வடிந்தபோது, தக்க மருந்து தம்மிடம் உண்டு என்பதால், குதூகலித்துத் தம் இடக் கண்ணையும் தோண்டி எடுக்க முனைந்தவர். திண்ணனாரது திண்மையான அன்பைக் கண்ட இறைவனும், ‘நில்லு கண்ணப்ப! நில்லு கண்ணப்ப!’ என்று அவரது கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்தும் பாக்கியம் பெற்றவர்.
இத்தகைய ‘கண்ணப்பன் ஒப்பதோர் அன்பு‘ தம்மிடம் இல்லையே என்றுதான் மாணிக்கவாசகரும். அகங்கரைந்து உருகுகிறார். “வாய் கலசமாக வழிபாடு செய்யும் வேடன், மலராகு நயனம் காய்கணையால் கிடந்து ஈசன் அடி கூடினான்“ என்று ஞானசம்பந்தர் வியந்து வியந்து பாடுகின்றார்.
ஒரே ஒரு ரகசியம். இன்று காளத்தியில் கோயில் கொண்டிருக்கும் காளத்தி அப்பருக்குச் சொந்தமாக ஒரு கண் கூட இல்லை. இடக் கண்ணோ அம்மையின் கண், வலக்கண்ணோ , கண்ணப்பரது கண். ஆதலால் இரு கண்ணும் இழந்து நிற்கும் ஏழையாக வாழ்கிறார் அவர்.
காளத்தி வாழ் கண்டனை நினைத்தால், கண்ணப்பனை நினைக்கிறோம். நாம் மாத்திரம் என்ன? ‘மனத்தகத்தான் தலைமேலான், வாக்கில் உள்ளான், வாயாரத் தன்னடியே பாடும் தொண்டர் இனத்தகத்தான், இமையவர் தம் சிரத்தின் மேலான்‘ என்றெல்லாம் இறைவன் இருக்கும் இடங்களை வரிசையாக அடுக்கிக்கொண்டே போன அப்பரும், கடைசியில், ‘காளத்தியான் அவன் என் கண்ணுளானே‘ என்றுதானே முடிக்கிறார். இறைவனது அருள் பொழியும் கண்ணை நினைத்தால் கண்ணப்பனை நினைக்கிறோம். கண்ணப்பனை நினைத்தால் காளத்தியானை நினைக்கிறோம்.
இந்தக் காளத்தியான் இருக்கும் கோயிலைத் தன்னகத்தடக்கிய ஊர்தான் இன்று காளாஸ்தி என்றும் காளஹஸ்தி என்றும் சீகாளத்தி என்றும் வழங்கும் காளத்தி, சீ, காளம், அத்தி (சிலந்தி, பாம்பு, யானை) மூன்றும் வழிபட்ட காரணத்தால் சீகாளத்தி என்று இத்தலம் பெயர் பெற்றது என்று ஸ்தல புராணம் கூறும்.
சிலந்தி தன் வாயால் நூல் இழைத்து, அந்நூலாலேயே இறைவனுக்குப் பந்தல் இடுகிறது. அப்பந்தல் தீபச் சுடரால் அழிந்தது கண்டு, அத் தீபத்திலேயே தானும் விழுந்து மடிந்து இறைவன் திருவடி அடைகிறது,
காளன் என்னும் பாம்போ தன்னிடமிருந்த அருமையான ரத்தினத்தை இறைவன் திருமுடியில் சாத்தி அலங்கரிக்கின்றது.
அத்தி என்னும் கணத் தலைவன் யானையாக அவதரித்து தன் துதிக்கையாலேயே நீர் முகந்து, இறைவனுக்குத் திருமஞ்சனம் செய்விக்கின்றது.
யானை செய்யும் திருமஞ்சனம் புஷ்ப அலங்காரம் எல்லாம் சுத்தமாக இல்லை என்று பாம்பு நினைக்கிறது. அதனால் யானையின் துதிக்கையில் பாம்பு நுழைந்து யானைக்கு வேதனை தருகிறது. யானையும் தும்பிக்கையை ஓங்கி அறைந்து, பாம்பைக் கொல்கிறது. பாம்பின் விஷம் ஏறிய காரணத்தால் யானையுமே மாண்டு மடிகிறது.
இப்படியே சிலந்தி பாம்பு யானை மூன்றும் இத்தலத்திலேயே முத்தி பெறுகின்றன. அதனால் தலமும் சீகாளத்தி என்றே பெயர் பெறுகிறது.
இந்தக் காளத்தி அப்பரது கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்று. இதை வாயுத் தலம் என்பார்கள். அதற்கேற்ப கர்ப்ப கிருஹத்தில் சுடர்விட்டுக்கொண்டிருக்கும் விளக்குகளில் இறைவன் திரு முடிக்கு அணித்தே உள்ள ஒரு விளக்கின் சுடர் மட்டும் காற்றிலே அசைவுற்று எப்போதும் துடித்துக் கொண்டே இருக்கிறது. இந்த விளக்குக்கு மட்டும் காற்று எங்கிருந்து வருகிறது என்பது கண்டறியாத அதிசயமாகவே இருக்கிறது.
இது வாயுத்தலம் என்பதற்கும் ஒரு சிறு கதை. ஆதி சேஷனுக்கும் வாயு பகவானுக்கும் ஒரு பலப் பரீக்ஷை, மேருமலையை ஆதிசேஷன் சுற்றி வளைத்துக் கட்டிப் பிடிக்க, வாயு தன் பலங்கொண்ட மட்டும் காற்றை எழுப்பி, மலையை அசைக்கக், கடைசியில் அம்மலையின் பிஞ்சுகள் மூன்று பறித்து எறியப்பட, அப்படி எறியப்பட்ட மலைப் பிஞ்சு ஒன்றே இங்கு விழுந்து, காளத்தி மலையாக உருவாகி இருக்கிறது என்பது கர்ண பரம்பரை.
இக் காளத்தி அப்பர் கோயிலுக்குச் செல்ல விரும்புபவர்கள் ரயிலிலே செல்வதானால், சென்னையிலிருந்து ரேணிகுண்டா சென்று, கூடூர் செல்லும் ரயிலில் மாறி, ரேணிகுண்டாவிலிருந்து பன்னிரண்டு மைல் செல்ல வேணும். இல்லை, காரிலோ பஸ்ஸிலோ சென்னையிலிருந்து நேரடியாக எண்பது மைல் சென்று, இத்தலத்தை அடையலாம். மேற்கே இருந்து வருகிறவர்கள் திருப்பதி சென்று, திருமலை ஏறி வேங்கடவனைத் தரிசித்து விட்டுப் பின்னர் காளத்தி வந்து சேரலாம்.
ஸ்வர்ணமுகி என்னும் பொன்முகலி ஆற்றங் கரையிலே அமைந்திருக்கும் கோயிலுக்கும் சென்று தொழலாம். கோயில் வாசலிலே ஒரு பெரிய கோபுரம்; காளிகோபுரம் என்று பெயர். ஆனால், இந்தக் கோபுரத்துக்கும் கோயிலுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. தனித்து நிற்கிறது.
பக்கத்தில் உள்ள சிறிய கோபுர வாயிலில் நுழைந்து வளைந்து வளைந்து சென்றால் தென்பக்கம் உள்ள கோயிலின் பிரதான வாயிலுக்கு வந்து சேருவோம். அதன்பின் கோயிலில் நுழைந்து, வலமாக வந்தால், மேற்கு நோக்கியவராய் இருக்கும் காளத்தியப்பரைத் தரிசிக்கலாம்.
இவர் சிவலிங்கத்தில் ஒரு புதிய உருவை ஏற்றிருக்கிறார். மூன்று நான்கடி உயரம். அடியில் பெருத்து முடியில் கூர்மையாக ஒடுங்கிய மூர்த்தி. மாலை போட்டு அலங்கரிப்பதற்கு என்று ஒரு தனிச் சட்டம். அதை விலக்கிவிட்டு அர்ச்சகர் ஹாரத்தி பண்ணினால், சிலந்தி, நாகம், யானைக் கொம்புகளோடு கண்ணப்பரது ஒரு கண்ணும் லிங்கத் திருஉருவில் தெரியும். அந்தராளத்திலே கூப்பிய கையனாய் வில்லைத் தாங்கிக் கொண்டு, கண்ணப்பரும் சிலை உருவிலே நிற்கிறார் அங்கே.
காளத்தி அப்பரை வணங்கித் திரும்பவும் வலமாகச் சுற்றினால், கிழக்கே பார்த்த திருக்கோயிலில் ஞானப் பூங்கோதை நிற்கிறாள், கம்பீரமான திரு உரு. இந்த “வண்டாடும் குழல் உமையைப் பாகத்தில் வைத்து மகிழ்ந்தவனே கண்டார்கள் காதலிக்கும் கணநாதனாம் காளத்தியான்‘ என்பர் சுந்தரர். இன்னும் கோயிலுக்குள் எண்ணற்ற பிராகாரங்கள்.
வெளியேயும் ஒரு மண்டபத்தில் கண்ணப்பர் சுமார் ஐந்தடி உயரத்தில், நல்ல கற்சிலை வடிவில், இது தவிரச் செப்புச் சிலை வடிவிலும் அவர் உண்டு .
இவைகளையெல்லாம் படம் பிடிக்க யாருக்கும் அனுமதி இல்லை. கோயிலுக்குள் நுழையும் போதேதான் காமிராவைக் கைப்பற்றிக் கொள்கிறார்களே, கோயில் நிர்வாகிகள். ஆனால், இங்குள்ள கண்ணப்பரைக் காட்டிலும் அழகான கண்ணப்பர் ஒருவரைச் சோழ நாட்டுச் சிற்பி கல்லில் உருவாக்கித் தாராசுரம் ஐராவதேசுவரர் கோயிலில் நிறுத்தி இருக்கிறான். கண்ணப்பர் தமிழ் மக்களின் பொது உடைமைப் பொருளாயிற்றே. அவரைத் தமிழ் நாட்டுப் புராணங்கள் எல்லாம் பாராட்டிப் புகழ்வது போலவே, சோழநாட்டுச் சிற்பியும் வடித்தெடுத்து நிறுத்தி இருக்கிறான்.
இந்தக் காளத்தியப்பர் கோயில் பழுதுற்றிருந்ததைத் தேவ கோட்டைமே. அருநா. ராமநாதன் செட்டியார் குடும்பத்தினர் பத்து லக்ஷம் செலவில் புதுப்பித்திருக்கின்றனர். இவ்வளவு செலவு செய்தும் உட்கோயில்களையே புதுப்பிக்க முடிந்திருக்கிறது. மற்றவை எல்லாம் பழைய கோயிலாகவே இருக்கின்றன, இன்றும். புதுப்பித்த ராமநாதன் செட்டியார், கோயிலுக்கு வெளியே பொன் முகலி ஆற்றுக்குச் செல்லும் படிக்கட்டின் பக்கத்திலே ஒரு சிறு மண்டபத்திலே சிலை உருவில் நின்று கொண்டிருக்கிறார். அவரது பக்திச் சிரத்தையைப் பற்றி எவ்வளவோ சொல்கிறார்கள், மக்கள்.
கோயிலின் பின் புறத்தில் இரண்டு குன்றுகள்; ஒன்றின் பேரிலே கண்ணப்பர் தொழுத குடுமித் தேவர், இன்று கண்ணப்ப ஈசுவரர் என்ற பெயரோடு எழுந்தருளியிருக்கிறார். மற்றொரு குன்றின் பேரிலே துர்க்கை.
இரண்டு கோயில்களுக்கும் செல்வது கொஞ்சம் சிரமம். உயரம் என்பதினால் அல்ல. சரியான பாதை இல்லாத காரணம்தான். கண்ணப்பர் மலை ஏறும் மலைச் சரிவிலே மணிகண்டேசுவரருக்கு ஒரு கோயில். அதை அடுத்து மலையைக் குடைந்து உண்டாக்கிய மண்டபம். இதற்கு மணி கர்ணிகா கட்டம் என்று பெயர்.
இங்குதான் பெண் ஒருத்திக்கு இறைவன் தாரக மந்திரத்தை வலது காதில் ஓதி அருளினார் என்று கதை, காசி மணிகர்ணிகா கட்டத்தில் விசுவநாதர் அருளியது போல.
இன்றும் மக்களிடத்து ஒரு நம்பிக்கை. அந்திம தசையை நெருங்கிக் கொண்டிருப்பவர்களை இம்மண்டபத்துக்குக் கொண்டு வந்து, வலப்பக்கமாக ஒருக்கச் சாய்த்துக் கிடத்தினால், சாகிற பொழுது உடல் திரும்பி, வலது காது வழியாகவே உயிர் உடலை விட்டுப் பிரிந்து செல்லும் என்கிறார்கள்.
இந்த மணிகண்டீசுவரர் கோயில் மூன்றாம் குலோத்துங்கன் என்னும் வீர ராஜேந்திர சோழன் கட்டியது என்று கல்வெட்டுகள் கூறுகின்றன. ஆதலால் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டிற்கு முன்பே, காளத்தியப்பர் கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டும். கோயிலின் நூற்றுக்கால் மண்டபம், காளி கோபுரம் முதலியன பதினாறாம் நூற்றாண்டின் முற்பகுதியில், விஜயநகர மன்னர்கள் கட்டினார்கள் என்று திருவண்ணாமலையில் உள்ள கல்வெட்டு ஒன்று கூறுகிறது.
இத்தகைய சரித்திரப் பிரசித்தியோடு இலக்கியப் பிரசித்தியுமே பெற்றிருக்கிறது இவ்வூர். மதுரை சொக்கலிங்கப் பெருமானிடத்திலேயே குற்றம் குற்றமே என்று வாதாடிய சங்கப் புலவன் நக்கீரன், சாப விமோசனம் அடைந்து, கயிலாய தரிசனம் பெற்ற இடம் இதுவே. அதனாலேயே இத் தலத்தை தக்ஷிண கயிலாயம் என்கிறார்கள்.
‘கயிலை பாதி காளத்தி பாதி‘ என்று அந்தாதி பாடிய நக்கீரதேவ நாயனார் இத்தலத்தைப் போற்றியிருக்கிறார். காளத்தியைத் தரிசித்தால் கயிலையைத் தரிசித்த பலன். ஆம், நமக்கும் கிடைத்து விடுகிறது, கயிலையைத் தரிசித்த பலன், காளத்தியைப் பற்றி, காளத்தி வாழ் கண்ணப்பரைப் பற்றி, இவ்வளவு தெரிந்து கொள்கிற காரணத்தால்.