கடற்கரைக் கோயில்
கொஞ்சம் பக்தி உடையவர்கள் என்றால், முதலில் தலசயன கோவிலுள் நுழைந்து, தலசயனரைத் தரிசித்து விட்டு, வெளியே வரலாம். இல்லை , நமக்கும் பக்திக்கும் வெகு தூரம், நமக்கும் கலைக்குமே நெருங்கிய தொடர்பு என்று பெருமைப்பட்டுக் கொள்கிறவர்கள் எல்லாம் அப்படியே மேற்கு நோக்கி நடக்கவே புறப்பட்டு விடலாம்.
உண்மைதான். தலசயனர் கோயில் உள்ளே தலசயனரைத் தவிரப் பார்க்க வேண்டிய சிற்ப வடிவங்கள் அதிகம் இல்லை. இருக்கின்ற ஒரு சில ஆழ்வார்களின் வடிவங்கள் பேரில் இருக்கும் எண்ணெய்க் கசடு எல்லாம் எத்தனையோ வருஷ காலத்தவை. ஆதலால் எல்லாம் மொழு மொழு வென்றே இருக்கும். அதனால் விரைவாகவே கோயிலுக்கு வெளியே உள்ள கலைச் செல்வங்களைக் காண்பதிலேயே அக்கறை காட்டலாம்.
இப்படி நமது பிரயாணத்தைத் துவங்கும்போது, நாம் முதலில் காண்பது கிருஷ்ண மண்டபத்தையே. அங்குதான் கண்ணன் கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்துக் கோக்களையும் கோவலர்களையும் காத்துக் கொண்டு நிற்கிறான். அங்குள்ள கண்ணன் அப்படி ஒன்றும் சின்னப் பையன் இல்லை. எட்டடிக்கு மேலே வளர்ந்த ஆஜானுபாகு.
அவனையும் மற்றவர்களையும் பார்க்கிறபோதே, அங்கு பால் கறக்கும் கோபாலனையும் பார்க்கிறோம். அந்தக் கோபாலன் இன்றையக் காலத்தியவன். நாம் படம் பிடிக்கிறோம் என்று தெரிந்து நம்மைத் திரும்பிப் பார்த்து ஒரு நல்ல ‘போஸ்‘ வேறே கொடுக்கிறான். பெரியதொரு பாறையிலே வெட்டிச் செதுக்கிய அற்புதச் சிற்பம். பின்னால் யாரோ மண்டபம் எல்லாம் கட்டி நாமெல்லாம் நின்று பார்க்க நல்ல வசதி பண்ணியிருக்கிறார்கள்.
இதற்குக் கொஞ்சம் மேற்கே நகர்ந்தால், பிரபலமான அர்ச்சுனன் தவம் என்னும் அர்த்த சித்திரப் பாறை முன் வந்து நிற்போம். நாம் நிற்கும் இடத்திலிருந்து பதினைந்து அடி தாழ்ந்தும், மேலே இருபதடி உயர்ந்தும், நீண்ட பெரிய இரண்டு பாறைகள் முழுவதையுமே அடைத்துக் கொண்டிருக்கும் இந்தச் சிற்பங்கள் {இது அர்ச்சுனன் தவமா? இல்லை, பகீரதன் தவமா? என்பது இன்னும் விவாதத்துக்குரிய விஷயமாகவே இருக்கிறது. ஆனால் புதை பொருள் இலாகா டைரக்டர் திரு. டி. என். ராமச்சந்திரன் பேச்சை ஒரு தரம் கேட்டு விட்டால், அவர் காது கேட்க, இதைப் பகீரதன் தவம் என்று சொல்லத்துணியமாட்டோம்).
இந்தச் சிற்ப சித்திரம் கல்லிலே சமைத்த ஒரு கவிதை. எத்தனையோ விதமான வடிவங்கள்– பூனை முதல் யானைவரை, தேவர் முதல் தவசிவரை. அர்ச்சுனன் தாடி சடையுடன் தவம் செய்யும் கோலமும், அங்குச் சிவ பெருமான் எழுந்தருளிப் பாசுபதம் அளிக்கும் காட்சியும் தத்ரூபம்.
இடையே ஒரு கார்ட்டூன் சித்திரமும் கூட. உண்மைத் தவசிகளிடையே ஒரு போலித் தவசி போல ருத்திராக்ஷப் பூனை தவம் செய்யும் காட்சி ஒன்றும் செதுக்கப்பட்டிருக்கிறது. தவம் செய்யும் பூனையைச்சுற்றி எலிகள் அடிக்கும் கும்மாளம் எல்லாமே விவரிக்கப் பட்டிருக்கிறது, அங்கே, இன்னும் என்ன என்ன இல்லை என்பது எளிது. அங்கு ‘இல்லாதன இல்லை!’ என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம்தானே,
இன்னும் சற்று மேற்கே நகர்ந்தால், பேன் பார்க்கும் குரங்குகள், கண்ணன் வெண்ணெய் உண்ணல் என்றெல்லாம் காட்சிகள். பின்னால் தெற்கே திரும்பி, மேட்டில் ஏறினால், அடுக்கடுக்காய் மண்டபங்கள். லஷ்மி மண்டபம், வராக மண்டபம், மகிஷாசுரமர்த்தனி மண்டபம் என்று பல மண்டபங்கள். எல்லாம் மலைகளைக் குடைந்து நிர்மாணிக்கப் பட்டவை.
ஒரு மண்டபத்திலே வராகருக்கு எதிரே உலகளந்தார். மற்றொரு மண்டபத்திலே மகிஷமர்த்தனிக்கு எதிரே புஜங்க சயனர். இப்படி அழகு அழகான சிற்ப வடிவங்களெல்லாம் Bas relief என்னும் அர்த்த சித்திரச் சிற்பங்கள், இவைகளையே பார்த்துக் கொண்டு, பல்லவர் காலத்துக் கலை வளத்தை வியந்து கொண்டே நிற்கலாம். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும்.
இன்னும் இம் மாமல்லையில் பார்க்க வேண்டியது எவ்வளவோ இருக்கின்றனவே. மலை மேல் கட்டிய கோயில், அக் கோயிலை அடுத்துக் கட்டிய கலங்கரை விளக்கம், எல்லாவற்றையுமே ஏறிப் பார்க்கலாம் – நேரமும் காலில் வலுவும் இருந்தால்.
இதற்கெல்லாம் நேரமில்லை யென்றால், விறுவிறுவென்று கீழே இறங்கி, ஐந்து ரதங்கள் என்று கைகாட்டி காட்டும் திசையில் சென்றால், அந்தப் பஞ்ச பாண்டவ ரதங்களைப் பார்க்கலாம். பாண்டவர்களுக்கும் இந்த ரதங்களுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்றாலும், ரதங்கள் எல்லாம் அழகானலை. பிரும்மாண்டமானவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாணியிலே நல்ல வேலைப்பாட்டுடன் செதுக்கப் பட்டவை. எத்தனை சிற்பிகள் எவ்வளவு காலம் வேலை செய்து இந்த அசையாத தேர்களை ஆக்கி முடித்தார்களோ?
இதோடு தீர்ந்து விடுகிறதா? இன்னும் கொஞ்சம் திரும்பி வந்து கிழக்கே பார்க்க நடந்து சவுக்கந் தோப்புகளையெல்லாம் கடந்தால் – அந்தக் கடற்கரைக் கோயிலுக்கே வரலாம். மற்றவையெல்லாம் கற்பாறைகளை வெட்டிச் செதுக்கியதாக இருக்க, இங்குள்ள கோயில்கள் இரண்டு மட்டும் கல்லால் கட்டிய கோயில்களாக இருக்கப் பார்ப்போம்.
ஒன்று சிவனுக்கு, ஒன்று விஷ்ணுவுக்கு என்று பங்கு. சிவனது லிங்கத் திருவுருவைவிட, ஜலசயனனாக இருக்கும் பெருமாள் மிகவும் காத்திரமான வடிவம். கையில் டார்ச் இருந்தால், இருட்டில் புதைந்து கிடக்கும் அவரை நன்றாகத் தரிசிக்கலாம். பூஜை புனஸ்காரத்தை எல்லாம் தலசயனருக்குக் கொடுத்து விட்டு, இந்த ஜலசயனர் ஒதுங்கியே வாழ்கிறார்.
இந்தக் கோயில்களை அடுத்த கடற்கரை அழகானது. எவ்வளவோ பகுதிகளைக் கடல் கொண்டு போய்விட்டது என்பர். இருக்கிற பகுதியைக் கூட விழுங்க வருவதுபோலவே கடல் அலை அலையாக வந்து மோதும். கொண்டு வந்திருக்கும் கட்டமுதை இங்கு அவிழ்க்க வேண்டியதுதான். அதைக் கொண்டு வர மறந்தவர்கள் அங்கு விற்கும் பட்டாணிக் கடலையை மெல்லுவதுடன் திருப்தி அடைய வேண்டியதுதான்.
தமிழ் நாட்டில் கலை வளர்த்த பேரரசர்களில் தலையாய மகாமல்லன் புகழ் எல்லாம் இந்தக் கடல் மல்லையிலே கற்பாறை காட்டும் கவின் உருவிலேயே அடங்கிக் கிடக்கின்றன என்று சொன்னால் வியப்பில்லை. தமிழ் நாட்டின் கலைச் செல்வம் என்று உலகோர் எல்லாம் வியந்து நிற்கும் கடல் மல்லையை மகாமல்லன் பேரால் மாமல்லபுரம் என்று அழைத்ததுதான் எவ்வளவு பொருத்தம்.
மாமல்லனது கனவெல்லாம் நனவான இடம் அது. நமக்கும் நம் நாட்டைப் பற்றி, நம் மொழியைப் பற்றி, நம் கலைகளைப் பற்றி, நம் இலக்கியங்களைப் பற்றி எத்தனையோ கனவுகள். அதெல்லாம் நனவாக வேண்டுமென்றால் மாமல்லபுரத்துக்கு ஒரு தடை விறுவிறு என்று போய்த் திரும்பிய உடனடியாகவே காரியத்தைத் துவங்கலாம். அப்போது நம் கனவம் நனவாகும் என்று நம்பலாம்.