5.  அத்வைதம் – பகுதி நான்கு

எதிர்கொண்டு அழைப்பான்!

சமுத்திரம் ஆடாமல் அசையாமல் இருக்கிறபோது ஒரு காற்று அடித்தால் உடனே அதில் ஜலத்துளிகள் குமிழ்களாகத் தோன்றுகின்றன. இன்னோரு காற்று அடிக்கிறபோது அந்தக் குமிழ்கள் உடைந்து போகின்றன. பரமாத்மா ஆடாத அசங்காத சமுத்திரம் மாதிரி. மாயை என்கிற காற்றினால் அதிலே ஜீவாத்மாக்கள் என்கிற நாமெல்லாம் குமிழ் மாதிரி தோன்றியிருக்கிறோம். ஆசாரியாருடைய கடாக்ஷம் என்கிற நல்ல காற்று நம்மேல் பட்டால் குமிழ் உடைந்து ஜலத்துளி சமுத்திரத்தோடு ஐக்கியமாகி விடுவதுபோல், நாமும் பரமாத்மாவிடம் இரண்டறக் கலந்து விடுவோம்.

சமுத்திர ஜலம் என்றென்றும் அளவு குறையாமலேதான் இருக்கிறது. அதிலிருந்து ஆவி பிரிந்து சென்று மழையாகி, உலகத்தில் பலவிதங்களில் நதி, ஓடை, வாய்க்கால், ஏரி, குளம், கிணறு என்று ஜலாசயங்களாக ஆகின்றன. சமுத்திரம் வற்றுவதில்லை. அதில் புதிதாக வெள்ளம் வருவதுமில்லை. அதிலிருந்து வந்த ஆறு குளங்கள் வற்றலாம்; அல்லது இவற்றில் வெள்ளம் வரலாம். வெயில் நாளானால் வீட்டுக் குழாய்களில் ஜலம் இல்லை; ரெட்ஹில்சில் ஜலம் இல்லை என்கிறோம். மழைக்காலத்தில் கோதாவரியில் வெள்ளம், காவேரியில் உடைப்பு என்று பேசுகிறோம். ஆனால் சிருஷ்டி காலத்தில் இந்த உலகத்தில் எத்தனை ஜலம் இருந்ததோ அதில் ஓர் இம்மிகூடக்ரெயின் கூடஇன்றுவரை குறையவில்லை, கூடவும் இல்லை. பணக்காரர்கள் சிலர் நிலத்தை விற்று வீடு வாங்குவார்கள்; வீடுகளை விற்று பாங்கில் போடுவார்கள்; பாங்குப் பணத்தைஷேர்களாக மாற்றுவார்கள். மொத்தச் சொத்து மாறாது. அவற்றின் ரூபம் தான் பல விதங்களில் மாறும். எல்லாவற்றையும் கூட்டினால் கணக்கு சரியாக இருக்கும். அப்படியேதான் லோகத்தில் உள்ள மொத்த ஜலம் சமுத்திரத்தில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மேகத்தில் இருக்க வேண்டும். அல்லது நதியாக, ஏரி, குளங்களாக இருக்க வேண்டும்.

பரமாத்மா பலவாகத் தோன்றியிருக்கிறார். தோன்றிய பின்னும் சமுத்திரம் மாதிரி கூடாமல், குறையாமல் இருக்கிறார். நமக்குக் கூடுதல், குறைவு எல்லாம் உண்டாகிறதாகத் தோன்றுகிறது. ஆனால் உள்ளது ஒன்றேதான் என்ற ஞானம் வந்தால், எங்குமே கூடுதலும் இல்லை, குறைவும் இல்லை.

ஜலத்தை திருஷ்டாந்தமாக வைத்துப் பரமாத்ம ஜீவாத்ம ஸம்பந்தத்தைச் சொல்லும்போது நதிகளைப் பற்றி விசேஷமாகச் சொல்ல வேண்டும். சமுத்திர ஜலம் மழையாகி அதிலிருந்து ஏரியும், குளமும், குட்டையும், கிணறும் உண்டாகின்றன. இவை மறுபடியும் சமுத்திரத்தில் கலப்பதில்லை. ஆனால், எல்லா நதிகளும் சமுத்திரத்தையே தேடி வந்து கலந்து விடுகின்றன. வடக்கே ஒரு நதிக்குஸோன்என்று பெயர். ‘சோணம்என்றால் சிவப்பு. இந்த நதி சிவப்பான மண் வழியே ஓடுகிறது. ஆந்திராவில் கிருஷ்ணா நதி இருக்கிறது. ‘கிருஷ்ணஎன்றால் கறுப்பு. இந்த நதி கறுப்பு மண் மீது ஓடுகிறது. ‘கங்கைஎன்றால் வெளுப்பு. இதுவும் அது ஓடிவருகிற பிரதேசத்தைப் பொறுத்து ஏற்பட்ட பெயர்தான். மூன்றும் ஒரே சமுத்திரத்தில்தான் கலக்கின்றன. சிகப்பு ரஜோ குணம், கறுப்பு தமோ குணம், வெள்ளை ஸத்வ குணம். மனசானது முக்குணங்களில் எதில் பாய்கிறதோ, அதை ஒட்டி ஜீவாத்மாவின் சுபாவம் அமைகிறது. எப்படியானாலும், கடைசியில் பரமாத்ம சமுத்திரத்தில்தான் கலந்தாக வேண்டும்.

Water finds its level—`தொடர்புடைய நீர்ப்போக்கு ஒரே மட்டத்தில் இருக்க முயலும்என்பார்கள். மலை உச்சியில் மழை பொழிந்து நதி உண்டாகிறது. அங்கிருந்து கீழே கனவேகமாக, ஒரே இரைச்சலோடு நதி விழுகிறது. பூமியில் ஓடும்போது அத்தனை சத்தம் இல்லை. முடிவில் சமுத்திரத்தில் கலந்தபின் சத்தமே இல்லை. அப்போதுதான் நதி தன் லெவலுக்கு வருகிறது. அதாவது லெவலுக்கு வந்தவுடன் பரம சாந்தமாகிறது. எதிலுமே சரி, லெவல்அதாவது அளவு அறிந்து, அந்த மட்டத்தோடு நிற்கிற மனோபாவம்வந்தால்தான் சாந்தம் உண்டாகும். லெவலுக்கு மீறிச் செய்கிறதாட்பூட்காரியங்கள் பிறருக்குப் பிரமிப்பூட்டலாம். ஆனால் இதனால் நாமே நம் சாந்தியைக் குலைத்துக் கொள்வதுதான் பலன். உருட்டல், புரட்டல், இரைச்சல் எல்லாவற்றையும் குறைத்து அடக்கமாக வருகிற நதியை சமுத்திரம் எதிர் கொண்டு சென்று வாங்கிச் செல்கிறது. இதனால்தான் நதியின் சங்கம ஸ்தானங்களுக்குச் சிறிது தூரம் முன்னாலிருந்தே உப்புக் கரிக்கிறது. நாம் லெவலை மீறாமல், அடக்கமாகச் சென்றால், பரமாத்ம சமுத்திரமும் நம்மை எதிர் கொண்டு அழைத்துப்போய் தனக்குள் அடக்கம் செய்து கொண்டு விடும்.

மாயை

 ‘எல்லாம் மாயை, சத்தியமாக எதுவும் இல்லைஎன்று பௌத்தம் சொல்கிற மாதிரி அத்வைதம் சொல்லவில்லை. ‘பிரபஞ்சமெல்லாம் மாயைதான்; ஆனால் இதற்கு, ஆதாரமாக பிரம்மம் என்பது பரம சத்தியமாயிருக்கிறதுஎன்கிறது அத்வைதம்.

உலகத்தை மாயை என்று சொல்கிறீர்களே, இந்த உலகத்தில் இத்தனை காரியங்கள் கண்கூடாக நடந்து கொண்டிருக்கும்போது இதை எப்படி மாயை என்று சொல்லலாம்?” என்று கேட்கிறார்கள்.

மாயை என்றால் அடியோடு இல்லாத வஸ்து என்று நினைத்துக் கொண்டு இப்படிக் கேட்கிறார்கள். ஆனால் மாயை என்பது அடியோடு இல்லாத வஸ்து (அத்யந்த அஸத்) அல்ல. முயல் கொம்பு அல்லது மலடி மகன் என்று சொன்னால் உடனே அது அடியோடு இல்லாத வஸ்து என்று தள்ளி விடுகிறோம். மாயை அப்படி இல்லை. அது இருப்பதாக நினைக்கிற மட்டில் இருப்பதாகவே தோன்றும். அது முயல் கொம்பு மாதிரி இல்லை. கானல் நீர் மாதிரியானது. கானல் நீர் கண்ணுக்குத் தெரிகிறது. ஆனால் அதில் ஜலம் இல்லை. அதைக் குடித்து நாம் தாக சாந்தி செய்து கொள்ள முடியாது. கானல் நீர் உண்மையான ஜலம் இல்லை என்று அறிந்தவர்களுக்கும்கூடக் கானல் நீர் தெரியத்தான் செய்கிறது. அவ்விதமே உலகை மாயம் என உணர்த்த ஞானிகளுக்குக் கூட லோகம் தெரியத்தான் செய்கிறது என்று சொல்வதுண்டு. ஆனால் அது நிரந்தர சத்தியமல்ல என்று அவர்கள் அறிவார்கள்.

ஒரு பழுதையைப் பாம்பென்று தவறாக எண்ணுகிறோம். பழுதையில் பாம்பு இல்லை என்பது உண்மை. இருந்தாலும்கூட அதைப் பாம்பாக எண்ணியமட்டும், வாஸ்தவத்தில் இல்லாத பாம்பே நிஜமான பாம்பு உண்டாக்குகிற அத்தனை பயத்தையும், பதற்றத்தையும் நம்மிடம் உண்டாக்கி விடுகிறது. பாம்பு மெய்யாக இல்லாத போதிலும் நமக்கு வியர்த்து விறுவிறுத்ததும், நாம் பயப்பிராந்தி அடைந்ததும் உண்மையே. உலகம் உண்மையில் நிரந்தர சத்தியமாக இல்லாதபோதிலும் அதையே நாம் சத்தியமாக எண்ணுகிற மட்டில் இவ்விதமே சகல காரியங்களும் நடக்கின்றன. பழுதையைப் பழுதை என்று தெரிந்து கொண்டவுடன் பயம் ஓடிப்போவதுபோல், உலகமும் பிரம்மத்தைச் சார்ந்த ஒரு தோற்றமே, அதற்கும் ஆதாரமான பிரம்மம் ஒன்றே நிரந்தர உண்மை என்று அறிகிறபோது, காரியங்கள் எல்லாம் நின்றுபோகின்றன.

அடியோடு இல்லாத வஸ்துவல்ல உலகம். ஞானம் வருகிற வரையில் உள்ள தோற்றம் அது. கனவு காண்கிற வரையில் கனவு மெய்யாக இருந்து, நாம் விழித்துக் கொண்டபின் கனவு நசித்துப்போவது போல், நாம் அஞ்ஞானத்தில் தூங்கிக் கொண்டிருக்கிற வரையில் உலகம் மெய்யாக இருந்து, நாம் ஞான நிலையில் விழித்துக் கொண்டவுடன் மறைந்து போகிறது. இவ்வாறு, அப்பட்டப் பொய்யாக இல்லாமல், தோன்றி மறைகிற தாற்காலிக உண்மையாக உள்ள உலகத்தைஅத்யந்த அஸத்என்று சொல்லாமல், ‘பிராதி பாஸிக ஸத்தியம்என்பார்கள். கிளிஞ்சலில் வெயில் வெள்ளி மாதிரி மினுமினுப்பதுபோல் பிரம்மத்தில் மாயையால் உலகம் தாற்காலிகமாக மினுமினுக்கிறது!

மாயை என்பது ஞானிக்குப் பூஜியம் (Zero) தான். ஆனால் ஞானம் வராத நிலையில் உள்ள ஜீவன் தன்னை ஒரு தனி எண்ணாக வைத்துக்கொண்டு பக்கத்தில் இந்தப் பூஜ்ஜியத்தைச் சேர்த்துக் கொள்கிறான். ஓர் இலக்கத்துக்குப் பக்கத்தில் வருகிற பூஜ்யம் அதைப் பத்து, இருபது, நூறு, ஆயிரம் என்று ஆக்குவதுபோல் இந்த அஞ்ஞானிக்கு மாயையே பலவாக விரிந்து சத்திய வஸ்துக்களாகஉலகமாகதோன்றுகிறது.

ஞானியே உள்ளது உள்ள படி பார்க்கிறான்.ஒரே சர்க்கரையினால் பல பொம்மைகள் செய்திருக்கிறதுபோல் ஒரே பிரம்மம் இத்தனையையும் ஆகியிருக்கிறது. சர்க்கரையினால் பாகற்காய் பொம்மை செய்து வைத்திருந்தால், விஷயம் தெரியாத குழந்தை அது கசக்கும் என்று ஓடிப்போயிருக்கும். கசப்பு வஸ்துவாகத் தோன்றுகின்ற அதுவும் உண்மையில் மதுரமான சர்க்கரைதான். உலகம் எல்லாம் ஆனந்த மயமான பிரம்மம் ஒன்றே என்று ஞானி அறிவான். நமக்குக் கசப்பு அவனுக்கு இனிப்பு. ‘நமக்குக் கறுப்பு அவனுக்கு வெளுப்பு; நமக்குப் பகல் அவனுக்கு இருட்டுஎன்று கிருஷ்ண பகவான் சொல்கிறார். பிரம்மம் என்கிற வெளிச்சமே நமக்கு இருட்டாக இருக்கிறது. இருட்டான மாயைதான் நமக்கு வெளிச்சமாக தெரிகிறது. இதெப்படி முடியும் என்று கேட்கலாம். மாயையும் பிரம்மத்தைச் சார்ந்து அதனிடமிருந்து சிறிது பிரதிபலிப்பான ஒளி பெறுகிறது. இந்தக் குறைந்த ஒளிதான் நம் குறைந்த அறிவுக்கு எட்டுகிறது. சுமாரான வெளிச்சத்தில்தான் புஸ்தகத்தின் கறுப்பு எழுத்துக்கள் தெரியும். ஜொலிக்கிற சூரிய வெளிச்சத்தில் நேரே புஸ்தகத்தைப் பிரித்தால் எழுத்தே தெரியாது. நமக்கு மாயையின் அற்பப் பிரகாசத்தில் உலக காரியங்கள் தெரிகின்றன. ஞானியின் ஆத்ம பிரகாசத்தில் அவை மறைந்து போகின்றன. ஞானியின் பகல் நமக்கு இரவு என்பதன் அர்த்தம் இதுவே.

அகமும் புறமும்

மநுஷ்யனாகப் பிறந்த ஒவ்வொருத்தனும் ஓயாமல் அலைச்சலான அலைச்சல் அலைந்து கொண்டிருக்கிறானே, எதற்காக? ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்குத்தான். வெளியிலிருக்கிற வஸ்துக்களிடம் இவனுக்கு ஆசை. அவற்றைப் பெறவே அலைகிறான். ஒன்று கிடைத்து விட்டாலும் போதவில்லை. அதனால் வருகிற சுகம் தீர்ந்து போகிறது. இன்னொன்றுக்கு ஆசைப்படுகிறான். அதைத் தேடி ஓடுகிறான். இவனுக்கு சாந்தி என்பதே ஒரு நாளும் இல்லாமலிருக்கிறது.

வெளியில் இருக்கிற வஸ்து வந்தால்தான் சந்தோஷம், ஆனந்தம் என்று துரத்திக்கொண்டே இருப்பவனுக்கு சாந்தி எப்படி வரும்? வெளியில் இருப்பது நம் வசத்தில் இருப்பதல்ல. அது வந்தாலும் வரும், போனாலும் போகும். அதை நம் வசப்படுத்திக் கொண்டதாக நினைத்தபோதே கைவிட்டுப் போகக்கூடும். நமக்கு அன்னியமான வெளி விஷயங்களிலிருந்து ஆனந்தத்தைச் சாசுவதமாகச் சம்பாதித்துக் கொள்வது நடக்காத காரியம். அது சாந்தியைக் கெடுக்கிற பிரயத்தனம் தான்.

மநுஷ்யன் புறத்தில் ஆனந்தத்தைத் தேடிக் கொண்டு போவதற்குக் காரணம், அவன் உள்ளுக்குள் தானே ஆனந்த ஸ்வரூபமாக இருப்பதுதான். இவன் உள்ளூற ஆனந்த ஸ்வரூபமாய் இருப்பதாலேயே ஆனந்தத்தை எப்போது பார்த்தாலும் தேடிக்கொண்டு இருக்கிறான். மாயையால், தானே ஆனந்த ஸ்வரூபம் என்பதை மறந்துவிட்டிருக்கிறான். இருந்தாலும் இவனுடைய ஸ்வபாவமே ஆனந்தமான படியால் இவனுக்கு ஆனந்தம் அடைய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருக்கிறது. மநுஷ்யர்களில் எவராவது ஆனந்தத்தைத் தேடாமல் துக்கத்தைத் தேடிப் போகிறவர்கள் உண்டா? ஆனாலும், அந்த ஆனந்தம் உள்ளே இருப்பதை அறிந்து சாந்தத்தில் அதை அநுபவிக்காமல், வெளியே ஆனந்தத்தைத் தேடித் துரத்திக் கொண்டே போய் சாந்தியை ஓயாமல் கெடுத்துக் கொள்கிறார்கள். தன் நிஜ ஸ்வரூபம் என்ன என்று ஒருவன் அம்பாளின் கிருபையால் பிரார்த்தித்து ஆத்ம விசாரம், தியானம் செய்து பார்த்தால், தானே பூரண ஆனந்த வஸ்து என்று தெரிந்து கொள்வான்.

இவனுடைய இயல்பான உள் ஆனந்தம் மகா சமுத்திரம் மாதிரி இருக்கிறதென்றால், இவன் இப்போது புறத்தில் தேடி ஓடுகிற வஸ்துக்களிடமிருந்து கிடைக்கிற ஆனந்தமெல்லாம் ஒரு திவலை மாதிரிதான். இதை ஒருத்தன் உணர்ந்து விட்டால் அப்புறம் வெளி இன்பத்தைக் தேடவே மாட்டான். தன்னைத்தானே அநுபவித்துக்கொண்டு ஆனந்த சமுத்திரமாக இருப்பான். சமுத்திரம் இருக்கிற இடத்திலேயே கரையைவிட்டு வராமல் இருந்தாலும் அதனிடம் நதிகள் போய் விழுகின்றன அல்லவா? அப்படியே ஆசைகள் இவனிடம் வந்து விழுந்து சமுத்திரத்தில் நதிகள் விழுந்து மறைவதுபோல் மறைந்தே போய்விடும். ‘ஆபூர்ய மாணம் அசலப்ரதிஷ்டம் சமுத்ரம்என்று கீதை சொன்ன மாதிரி, பேரின்பக் கடலாக நிறைந்து, அசைவதற்கு இடமே இல்லாத அளவுக்கு எங்கும் நிறைந்து, அசையாமல் பரம சாந்தமாக நிற்பான். தேவேந்திர பதவியின் ஆனந்தம்கூட இந்த ஆத்மானந்தக் கடலில் ஒரு துளிதான் என்கிறார் ஸ்ரீ பகவத் பாதர்கள்: ‘யத்ஸெளக்யாம்புதி லேச லேசதஇமே சக்ராதயோ நிர்விருதா:’ (மனீஷா பஞ்சகம்).

பதவி, பணம், ஸ்திரீ புருஷாள், கௌரவம், பப்ளிஸிட்டிஎன்றிப்படி வெளியிலிருந்து நமக்கு ஆனந்தம் கிடைப்பதாக எண்ணிக்கொண்டு ஓயாமல் யத்தனம் செய்வது அத்தனையும் சமுத்திரமாக இருக்கிற நாம் அதையறியாமல் ஒரு சொட்டு ஜலத்துக்காக தவிக்கிற மாதிரிதான். வெளிப்பொருள் எதுவோ கிடைக்காததால் நமக்குக் குறை வந்து விட்டதாகக் துக்கப்படுவது சுத்தத் தப்பு. நமக்குக் குறையே இல்லை. நமக்குள் நாமே பூரண வஸ்து. நமக்கு அன்னியமாக வெளி என்றே ஒன்று இல்லை. வெளியிலே இருக்கிற அத்தனை ஆனந்தமும் நமக்குள்ளேயே அடக்கம். ‘வெளி மாதிரி இருப்பதிலிருந்து தானாக எது வந்தாலும் வரட்டும். சமுத்திரம் நதிகளை அடக்கிக் கொள்வதுபோல் அவற்றையும் உள்ளே இருப்பதோடு சேர்த்துக் கொள்வோம். எதுவும் வரவில்லையா? அதனால் பாதகமில்லை. எதும் வராததால் நமக்கு என்ன குறை? நமக்கு உள்ளேயே இருக்கிற பரமாத்ம வஸ்துவின் லேசந்தானே வெளியில் இருப்பதெல்லாம்?’ என்கிற தெளிவோடு எப்போதும் இருக்க முயல வேண்டும்.

துக்கச் சுமை குறைய வழி

நாம் எல்லோரும் பரம்பொருளை பற்றிய உண்மையான ஞானத்தைப் பெற முயல வேண்டும். இந்த ஞானம் என்பது என்ன? பரம்பொருளைத் தவிர, வேறெதுவுமே இல்லை என்பதுதான். அந்த ஒன்று இத்தனை யாகவும் தோன்றுகிறது. இத்தனையான தோற்றங்களிலேயே மனஸைச் செலுத்திக் கொண்டிருந்தால் சஞ்சலம், ஏற்றத்தாழ்வு, இவற்றால் உண்டாகும் கஷ்டங்கள் எல்லாம் ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கும். இத்தனை தோற்றத்திலிருந்தும் மனஸைத் திருப்பி, இவற்றுக்குக் காரணமான ஒன்றையே அறியத் தொடங்கினால் எண்ணமும் பலவாக ஓடி அவதிப் படாமல், சஞ்சலங்கள் ஓயும். ஒரே வஸ்து என்றபின் சஞ்சலிக்கவோ ஏற்றத்தாழ்வுக்கோ இடம் ஏது? அந்த நிலையிலேயே நித்திய சுகத்தைப் பெறலாம். இந்த நிலையைத்தான் ஞானம் என்கிறோம்.

உலக வாழ்வில்கூட சுகம் வருவது போலிருக்கிறது. ஆனால் அது நித்தியமாக நிலைத்து நிற்பதில்லை. வெளியிலிருந்து வருகிற சுகத்தை நாம் எப்படி சாசுவதமாக்கிக் கொள்ள முடியும்? வெளியிலிருந்து வருவது நமக்கு ஸ்வாதீனப்படாமல் நம் கைவிட்டு ஓடியும் விடும். அப்போது அதனால் கிடைக்கிற சுகமும் போகத்தான் செய்யும். இப்படித்தான் இந்த நிமிஷம் சுகமாக இருப்பது அடுத்த நிமிஷமே மறைகிறது. அடர்ந்த மரத்தின் கிளைகள் ஆடுகிறபோது இடுக்கு வழியாகக் கொஞ்சம் வெளிச்சம் வந்து பாய்ந்துவிட்டு, அடுத்த நிமிஷமே நிழல் வந்து மூடிக்கொள்வது போலத்தான், உலகத்தின் துன்பத்துக்கு நடுவில் கொஞ்சம் கொஞ்சம் சுகம் தலையை எட்டிப் பார்த்துவிட்டு ஓடிவிடுகிறது. நிரந்தர சுகம் என்பது உலகத்துக்குக் காரணமான ஒன்றை அறிவது தான்.

உலக வாழ்வில் சகல மனிதர்களுக்கும் அளவில்லாத கஷ்டங்கள் உண்டாகத்தான் செய்யும். பணக்காரன், பெரிய பதவியில் இருப்பவன் கஷ்டமில்லாமல் இருப்பதாக மற்றவர்கள் நினைக்கலாம். அப்படி நினைத்துத் தாங்களும் அவர்களைப் போலப் பணமும் பதவியும் பெறப் பாடுபடலாம். ஆனால், பணக்காரனை, பதவியில் உள்ளவனைக் கேட்டால் தெரியும், அவனுக்கு எத்தனை கஷ்டங்களென்று. நாம் திண்ணையில் இருக்கிறோம்; விழுந்தால் சிராய்த்துக் கொள்வதோடோ, சுளுக்காவதோடோ போய்விடும். பணக்காரனும், பதவிக்காரனும் மாடிமேல் இருக்கிறான். எனவே, அவன் விழுந்தால் எலும்பெல்லாம் முறிந்து விடும். பிராணாபத்து உண்டாகும். ஒருவனுக்கு பணமும் பதவியும் உள்ளபோதே அதனால் உண்டாகிற சிறிது சுகத்தோடு, தன் பணம், பதவி போகக்கூடாது என்ற கவலை, சுகத்தைவிட அதிகமாக இருக்கிறது. இதனால்தான் உலகத்தில் எவனுமே, தான் சந்தோஷமாக இருப்பதாகச் சொல்லக் காணோம்! ஒவ்வொருவனும் தானே மகா புத்திசாலி, தானே மிகவும் யோக்கியன், தானே ரொம்பவும் அழகு என்று நினைத்துக் கொண்டிருப்பதுபோல், அதிக துக்கமுள்ளவனும் தானே என்று நினைத்துக் கொண்டிருக்கிறான்.

துக்கம் நம் உடன் பிறப்பு. நம் பூர்வ கர்மாவின் பயனாக இந்தத் துக்கங்களுக்கு நாம் முன்னமேயே விதை போட்டிருக்கிறோம். இதிலிருந்து தப்ப வழி இல்லை.

ஆனால் கர்மத்தினால் ஏற்படும் கஷ்டத்தைப் பொறுத்துக் கொண்டு சாந்தமாக இருக்க வழி உண்டு. புதிதாக கர்ம மூட்டையைப் பெருக்கிக் கொண்டு எதிர் காலத்தில் கஷ்டத்தை அதிகமாக்கிக் கொள்ளாமலிருக்க வழி உண்டு. முதலில் சொன்ன ஞானம்தான் அந்த வழி.

சித்தப் பிரமை பிடித்து, ஜடமாகி விட்டால் கஷ்டம் தெரிவதில்லை. பைத்தியத்தின் கஷ்டம் வேரூன்றி நிற்பதில்லை; ஆனால், சித்தப் பிரமையில் நித்திய ஆனந்தமும் இல்லை. தூக்கத்தில் துக்கமில்லை. ஆனால் தூக்கத்தில் சுகமாக இருக்கிறோம் என்கிற அறிவு இல்லை. ஞானிதான் எப்போதும் விழிப்பிலேயே இருந்து கொண்டும் சாசுவத ஸுகியாக இருக்கிறான். அவனது தேகத்தில் சிரமங்கள் இரா என்பதில்லை. ஆனால் அவனுடைய மனத்தில் கிலேசமே இராது. வெளியிலிருக்கிற சிரமம் அவன் உள்ளே பாதிப்பதே இல்லை.

கிணற்று ஜலத்துக்குள் நீர் நிரம்பிய குடத்தை இழுக்கும் போது கனம் தெரிவதில்லை. ஆனால் தண்ணீர் மட்டத்துக்கு மேலே குடம் வந்தவுடன் கனக்க ஆரம்பித்து விடுகிறது. எளிதில் புரட்ட முடியாத பெரிய மரங்களை வெள்ளத்துக்கு அடியாகத்தான் புரட்டி எடுப்பது வழக்கம். அதே மாதிரி நம் துக்கங்களையெல்லாம் ஞானமாகிற தண்ணீரில் அமுக்கி விடவேண்டும். அப்போதும் துக்க ஹேதுவான விஷயங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் ஜலத்துக்குள் இழுக்கிற குடம் மாதிரி அப்போது துக்கம் பரம லேசாகிவிடும்.