காரியத்தில் பேதமும் மனோபேதமும்
‘ஜாதி, அதற்கான தொழில், அதற்கென்று ஏற்பட்ட ஆசாரங்கள்’ என்று சொன்னேன். அது தப்பு. ஜாதிக்காகத் தொழில் இல்லை; தொழிலுக்காகத்தான் ஜாதி. சுள்ளிகளை எந்த அடிப்படையில் வேதமதம் சின்னக் சின்னக் கட்டுகளாகக் கட்டிப் போட்டது? ஒவ்வொரு தினுசான தொழிலுக்கு ஒவ்வொரு வர்ணம் என்று பிரித்தது?
மேல் நாடுகளில் தொழில் பிரிவினை (Division of labour) என்று பொருளாதாரத்தில் (Economics) சொல்லிக் கொண்டு இன்னமும் அதை நடைமுறைக்குக் கொண்டுவர முடியாமல் இருப்பதைப் பார்க்கிறார்கள். ஒரு சமுதாயம் நடக்க வேண்டும் என்றால் பல தினுசான தொழில்கள் நடக்கத்தான் வேண்டும். எனவே, தொழில் பங்கீடு (division of labour) செய்து கொள்ள வேண்டும் என்கிறார்கள். ஆனால், இத்தனை பேர்தான் இன்ன தொழிலைச் செய்யலாம்; இப்படியொரு விகிதாச்சாரத்தில் (proportion) ஒவ்வொரு தொழிலுக்கும் ஜனங்கள் வந்தால்தான் சமுதாயம் சீராக (balanced –ஆக) இருக்கும் என்பதற்கு யார், எப்படிக் கட்டுத் திட்டம் பண்ண முடியும். முடியவில்லை. எல்லோரும் சௌகரியமான தொழில்களுக்கே போட்டி போடுகிறார்கள்; எங்கே பார்த்தாலும் துராசை; போட்டா போட்டியினால் மனக்கசப்பு; அதைத் தொடர்ந்து பலவிதமான ஒழுக்குத் தப்பிதங்கள் என்று பிரத்தியக்ஷமாகப் பார்த்து வருகிறோம்.
இதே தொழில் பங்கீட்டைப் பாரம்பரியமாக வைத்து நடத்தி வந்த நம் தேசத்தில் அந்த ஒழுங்கு குலைகிறவரையில் சாந்தியும், சந்தோஷமும், சௌஜன்யமும், திருப்தியுமே இருந்து வந்தன. இப்போது கோடீசுவரனுக்குக்கூடத் திருப்தி இல்லாமல் இருக்கிறது. அப்போதோ ஒரு செருப்புத் தைக்கிறவன்கூட அக்கடா என்று நிறைந்து இருந்தான். எல்லோருக்கும் துராசைகளைக் கிளப்பிவிட்டு அத்தனை பேரையும் அதிருப்தியில் கொண்டு தள்ளியிருக்கிற புது ஏற்பாடுகள்தான் முன்னேற்றம்; இதுவரை செய்ததும் போதாது. இன்னும் வேகமாக இப்படியே “முன்னேற” வேண்டும் என்று எங்கும் பேச்சாயிருக்கிறது!
அந்தக் காலத்தில் துராசையில்லை. மநுஷ்யர்கள் ஒருத்தருக்கொருத்தர் பாந்தவ்யமாக ஒட்டிக் கொள்கிற சின்னச் சின்ன சமூகங்களாக இருந்துவிட்டதால், இப்படிச் சேர்ந்திருப்பதே பெரிய இன்பம் என்று அவர்கள் கண்டு கொள்கிறார்கள். அதோடு மதத்தில் நம்பிக்கை, தெய்வத்திடம் பயபக்தி, தங்களுக்கென்று குலதெய்வங்கள், அதற்கான வழிபாடுகள் இருக்கின்றன என்ற பெருமை, இதிலெல்லாம் நிறைந்து இருந்துவிட்டதால் அவர்களுக்கு வெளி வஸ்துக்களைத் தேடி மேலே மேலே இன்று தவிக்கிற தவிப்பு இல்லவே இல்லை. சமுதாயம் முழுவதும் நன்றாக இருந்தது.
பலவாகப் பிரிந்தாலும் ஸ்வாமியின் பெயரில் எல்லாரும் ஒன்று சேர்ந்திருந்தார்கள். அவரவர்க்கும் குலதெய்வம் இருந்தபோதிலும், ஊருக்குப் பொதுவாக பெரிய கோயில் இருந்தது. அந்தக் கோயிலும், அதன் உத்ஸவாதிகளுமே ஊர் வாழ்க்கையின் மைய ஸ்தானமாக இருந்தன. இதைச் சுற்றியே, அதாவது பகவானின் பேரில், அத்தனை சமூகத்தாரும் அவன் குழந்தைகளாக ஒன்று சேர்ந்திருந்தார்கள். ஒரு தேர்த் திருவிழா என்றால் அக்ரகாரத்துக்காரனும் சேரிக்காரனும் தோளோடு தோள் இடித்துக் கொண்டு வடம் பிடித்து இழுத்தார்கள். அந்த சௌஜன்யமான காலத்தை நினைத்தாலே மறுபடி அப்படி வருமா என்று இருக்கிறது. ஒரு வயிற்றெரிச்சல் இல்லை, வசைமாரி இல்லை. அவரவர் தன் காரியத்தை எளிமையாகச் செய்து கொண்டு மனஸில் ரொம்பியிருந்த காலம்.
இதை எல்லாம் ஆலோசனைப் பண்ணிப் பார்த்தால், சமூகம் பலவாகப் பிரிந்திருந்தாலும்கூட ஹிந்து மதம் எத்தனையோ தாக்குதல்களைச் சமாளித்தது என்று சொல்வது சுத்தப் பிசுகு. சமூகம் பலவாகப் பிரிந்திருந்ததாலேயே அது இப்படி யுகாந்தரமாக ஜீவனோடு இருந்திருக்கிறது என்றே தோன்றுகிறது. எல்லோருக்குமான பொது தர்மங்களை மட்டும் சொல்லி, ஒரே சமூகமாக இருந்த மகா பெரிய மதங்கள் எல்லாம் அழிந்து போனதையும், இப்போது இருக்கப்பட்ட அம்மாதிரி மதங்களின் எதிர்காலமும் என்னவாகுமோ என்று பயப்பட வேண்டியிருப்பதையும் பார்க்கிறபோது, இதுதான் — அத்தனை சுள்ளியையும் ஒரே கட்டாகப் போடாமல், பல சின்னச் சின்ன கட்டுகளாகப் போட்டு, அந்தக் கட்டுகளை எல்லாம் தெய்வ பக்தியினால் ஒன்றாக முடிந்திருக்கிற வர்ணதர்மம்தான் — ஹிந்து மதத்தைச் சிரஞ்சீவியாக காப்பாற்றியிருக்கிறது என்று தெரிகிறது.
எல்லாருக்கும் ஒரே தர்மம் என்று வைத்துக் கொண்டதோடு நின்றுவிட்ட மதங்களில் எல்லாம், உள்ளிருந்தோ அல்லது வெளியிலிருந்தோ வேறு தினுசான தர்மங்கள் வந்து தாக்கியபோது, அவை அடியோடு இற்று விழும்படியாயிற்று. இந்தியாவில் பல தினுசான தர்மங்களும் பொதுவான தர்மத்துக்குள் இருந்ததால், வேறு தர்மங்கள் உள்ளேயே எழுந்தால் அல்லது வெளியிலிருந்து வந்து தாக்கினால், அவற்றையும் தள்ள வேண்டியதைத் தள்ளி கொள்ள வேண்டியதைக் கொள்வதற்காக இடம் கொடுக்க முடியாது. நம் நாட்டுக்குள்ளே புத்த, ஜீன மதங்கள் வேதத்தின் ஒவ்வொரு அம்சத்தில் (aspect) எழுந்தன; அதனால் ஹிந்து மதமே இவற்றையும் தனக்குள் ஜெரித்துக் கொண்டுவிட்டது. பல பலவாக தர்மங்கள் விரிந்து இருந்ததால், இன்னும் புதிதான பலவற்றுக்கும் இடம் தந்து தனதாக்கிக் கொள்ள முடிந்தது; அவற்றை எதிரியாக நினைத்துச் சண்டை போட்டுத் தோற்றுப் போக வேண்டியதில்லை. முஸ்லீம்கள் வந்தபின் அவர்களுடைய சில பழக்கங்கள் மட்டும் நம்மவருக்கு வந்தன. தத்துவம் என்று எதையும் அவர்களிடமிருந்து எடுத்து கொண்டதாகச் சொல்வதற்கில்லையானாலும், உடுப்பு போன்ற சில விஷயங்களில், சங்கீதம், சிற்பம், சித்திரம் போன்றவற்றில் அவர்களுடைய வழிகளை (Moghul Influence) கொஞ்சம் எடுத்துக் கொண்டோம். அதுவும் நம்முடைய வைதிக கலாசார (Vedic culture)ப் பிரவாகத்தில் தனியாக நிற்காமல் கரைந்து போயிற்று. இதுகூட வடக்கேதான் ஜாஸ்தி நடந்தது. தென்னிந்தியா துருக்க இன்ஃப்ளூயென்ஸுக்கு ரொம்பவும் ஆளாகாமல் கூடியமட்டும் தன் பழைய வழியிலேயே இருந்தது.
அப்புறம் வெள்ளைக்காரர்கள் வந்தபின் எல்லோருக்குமே — வடக்கு, தெற்கு என்ற பேதமில்லாமல் தேசம் முழுவதிலுமே — வைதிக நம்பிக்கை குறைந்து வந்திருக்கிறது. ஏன் நிலைமை இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக மாறிற்று? ஏன் இப்போது அரசியல் தலைவர்களாக இருக்கப்பட்ட எல்லோரும் வர்ண தர்மத்தை ‘காஸ்டிஸம்’ ,’காஸ்டிஸம்’ என்று கரித்துக் கொட்டும்படியாயிருக்கிறது. தேசத்தின் முன்னேற்றத்துக்கே ஜாதிதான் பெரிய தீமை செய்கிறது என்ற அபிப்பிராயம் பரவலாக உண்டாகியிருப்பது ஏன்? ஜாதி என்று சொன்னாலே ஜெயிலில் பிடித்துப்போட்டுவிடவேண்டும் என்ற நினைக்கிற அளவுக்கு ஆகியிருப்பது எதனால்?
இதற்கு எனக்கு தெரிந்தமட்டும் காரணங்களை, யார் பொறுப்பாளி என்பதை பின்னால் சொல்கிறேன்.* தற்போது வர்ண தர்மத்தை ஒழித்துக் கட்டிவிட வேண்டுமென்பவர்கள், எதனால் இப்படிச் சொல்கிறார்கள் என்பதை முதலில் பார்க்கலாம்; அவர்களுக்கு வர்ண தர்மத்தில் ரொம்பவும் ஏற்றத்தாழ்வு இருப்பதுபோலத் தெரிகிறது. இப்படி இருக்கக்கூடாது; எல்லாரையும் ஒரேமாதிரி ஆக்கி உயர்த்த வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
ஆனால், இது காரிய சாத்தியம்தானா? இதைத் தெரிந்து கொள்வதற்கு ஜாதி முறை இல்லாத மற்ற தேசங்களைப் பார்த்தாலே போதும். எல்லாம் சமமாகி விடுவது ஒரு நாளும் நடக்காத காரியம் என்பதற்கு அந்தத் தேசங்கள் எல்லாம் பிரத்தியக்ஷ உதாரணங்களாக இருக்கின்றன. அங்கெல்லாம் உயர்த்தி—தாழ்த்தியில்லை என்றால் வர்க்கப் பூசல்கள் (clause conflicts) இருக்கக்கூடாதுதானே? ஆனால் யதார்த்தத்தில் இப்படியா இருக்கிறது? எங்கே பார்த்தாலும் சௌகரியப்படுகிறவர்கள், சௌகரியப்படாதவர்கள் என்ற பிரிவும், இவர்களுக்குள் சண்டையும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. நம் தர்மத்தை உள்ளபடி புரிந்து கொண்டால் ஜாதியால் பெரியவன், சின்னவன் என்று வாஸ்தவத்தில் இல்லவே இல்லை. ஆனால் எதனாலேயோ அப்படி ஒரு அபிப்பிராயம் வந்து விட்டதாகவே வைத்துக் கொள்வோம். இந்த எண்ணத்தைப் போக்கடிக்க வேண்டியதுதான் நம் கடமையே ஒழிய, அதற்காக அந்த முறையையே தொலைக்கக் கூடாது. இப்போதைக்கு ஜாதியில் உயர்த்தி—தாழ்த்தி எண்ணத்தையும், அதனால் உண்டான மனக் கசப்பையும் ஒத்துக் கொண்டாலும்கூட, மற்ற தேசங்களிலும் இந்த மனக்கசப்பு சமூகப் பிரிவுகளிடையே இருக்கத்தான் செய்கிறது. அங்கெல்லாம் ‘ஜாதியால் உயர்ந்தவன் என்று உரிமை கொண்டாடுகிறான்’ என்று ஒருவனிடம் துவேஷம் இல்லாவிட்டாலும், பணத்தால் நம்மைவிட உயர்ந்தவன், பதவியால் உயர்ந்தவன் என்று இன்னொருத்தனிடம் வெறுப்பு இருக்கத்தான் செய்கிறது. அமெரிக்காவில் ஒருத்தனுக்குமே சாப்பாட்டுக்கோ, துணிக்கோ, ஜாகைக்கோ குறைச்சல் இல்லை. வேலைக்காரனிடம்கூட கார் இருக்கிறது என்கிறார்கள். எனவே, அவரவரும் திருப்தியாய் இருக்க வேண்டியதுதானே? ஆனால் நாம் பார்ப்பதென்ன? அங்கேயும் ஒரு கார் வைத்திருப்பவன் இரண்டு கார் வைத்திருப்பவனைப் பார்த்து வயிற்றெரிச்சல் பட்டுக் கொண்டுதான் இருக்கிறான். பாங்கில் கோடி டாலர் வைத்திருப்பவன் இரண்டு கோடி டாலர் வைத்திருப்பவனைப் பார்த்து அசூயைப்படுகிறான். தனக்கு ஜீவிக்க எல்லா சௌகரியமும் இருந்துங்கூட, தன்னைவிடப் பணம் ஜாஸ்தி இருப்பவனைப் பார்த்து உரிமைச் சண்டை, சலுகைச் சண்டையெல்லாம் கிளப்புகிறான் என்றால் என்ன அர்த்தம்? அவன் தன்னைவிட உயர்ந்த ஸ்திதியில் இருக்கிறான் என்று இவன் நினைக்கிறான் என்றுதானே அர்த்தம்? இப்படியாக அங்கெல்லாம் உள்ளூற ஒரு தினுசில் உயர்த்தி — தாழ்த்தி எண்ணங்கள் இருக்கத்தான் செய்கிறது.
கம்யூனிஸ்டு தேசம் மாதிரி எல்லாருக்குமே சம்பளத்தை சமமாக அளந்து தருவதாக வைத்துக் கொண்டாலும், அங்கேயும்கூட ஒருத்தன் ஆபீஸராகவும், இன்னொருத்தன் கிளர்க்காகவும் இருக்கத்தான் வேண்டியிருக்கிறது. வெளியிலே சண்டைபோட முடியாதபடி ராஜாங்க நிர்பந்தம் வேண்டுமானால் இருக்கலாமேயொழிய, இந்த மாதிரி பதவியிலும் ஸ்தானத்திலும் வித்தியாசம் இருக்கிற வரையில் உள்ளூறப் போட்டி, அசூயை இருக்கத்தான் செய்யும். கம்யூனிஸ்ட் தேசங்களில்தான் ரொம்ப உயர்ந்த லெலவிலேயே இந்தப் போட்டி ஏற்பட்டு ஏற்பட்டு, இன்றைக்கு சர்வாதிகாரி மாதிரி இருக்கிற ஒருத்தன் நாளைக்குப் போன இடமே தெரியாமல்போய், இன்னொருத்தன் அந்த ஸ்தானத்தில் வந்து உட்காருகிறான்; பதவியால் போட்டியிருக்கிறது என்பதால் எல்லாம் ஒரே பதவியாக ஆக்குவதும் சாத்தியமில்லை. அதாவது உயர்த்தி — தாழ்த்தி என்பது ஏதோ ஒரு தினுசில் இருந்து கொண்டுதான் இருக்கும்.
சமூக சௌஜன்யத்துக்குக் குந்தமாகப் போட்டியிலும் அசூயையிலும் கொண்டுவிடுகிற இப்படிப்பட்ட உயர்த்தி — தாழ்த்தி ஏற்பாடுகளைவிடப் பாரம்பரியத்தால் உண்டானதாகத் தப்பாக நினைக்கப்படுகிற ஏற்றத் தாழ்வுதான் இருந்து விட்டுப் போகட்டுமே என்றுகூடத் தோன்றுகிறது. இதனால் தேசத்தில் பொதுவாக சாந்தியும், அவரவருக்குத் திருப்தியும், ‘இதுதான் நமக்காக ஏற்பட்டது’ என்பதில் போதுமேன்ற மனசும் இருந்தன அல்லவா?
வாஸ்தவத்தில் அத்தனை தொழிலும் சமூக க்ஷேமத்துக்காக உண்டானவைதான். ஒன்று உயர்வு, இன்னொன்று தாழ்வு என்றில்லை. எந்தத் தொழிலைச் செய்தாலும் ஆசை வாய்ப்படாமல் அதைச் சுத்தமாக (Perfect)ப் பண்ணி ஈசுவரார்ப்பணம் செய்தால் அதைவிடச் சித்த சுத்திக்கு வேறு மருந்தில்லை. ஒன்று உயர்ந்தது, இன்னொன்று தாழ்ந்தது என்பது அடியோடு பிசகு. ஆனால் இப்படி பிசகாக நினைத்தால்கூடப் பரவாயில்லை; மற்ற தேசங்களிலும் இதைவிடப் பிசகான ஏற்றத் தாழ்வுகள் இருக்கத்தான் செய்கின்றன. அதனால் இங்கேயில்லாத போட்டி, சண்டைதான் அங்கெல்லாம் உண்டாகின்றன என்று சொல்ல வந்தேன்.
நாம் பிரிந்து பிரிந்தே ஒற்றுமையாக இருந்து நம் நாகரிகத்தை பெரியதாக வளர்த்திருக்கிறோம். மற்றவர்கள் பிரியாமல் இருப்பதாக நினைத்துக் கொண்டே, ஒற்றுமையில்லாமலிருந்துதான் அந்த நாகரிகங்கள் விழுந்து விட்டிருக்கின்றன. இங்கே காரியத்தில் மட்டும் பேதமிருந்து உள்ளூற ஐக்கியம் இருந்ததால் நாகரிகம் வளர்ந்தது. அங்கெல்லாம் காரியத்தில் பேதமில்லாமல், அதனால் வந்த போட்டியாலேயே மனோபேதங்கள் உண்டானதென்றால் வெளி நாகரிகங்கள் படை எடுத்து வந்தபோது அவற்றிடம் உள்ளூர் நாகரிகங்கள் தோற்றுப்போக நேர்ந்தது.
எல்லாவற்றையும் ஒன்றாகவும் பண்ணி உயர்வாகவும் வைத்திருப்பது என்பது நடைமுறையில் சாத்தியமில்லை. எல்லாம் ஒரேயடியாகப் பிரித்து பேதப்பட்டுக் கிடப்பதும் உதவாது. இரண்டுக்கும் மத்தியமாக சமரசமாக ஒரு வழியை தர்ம சாஸ்திரம் தந்திருக்கிறது. நான் அதற்குப் பிரதிநிதியாக வந்திருக்கிறேன். அதனால்தான் அநுஷ்டானத்தில் வேற்றுமையும் வேண்டும்; இருதயத்தில் ஒற்றுமையும் வேண்டும் என்கிறேன். இரண்டையும் குழப்ப வேண்டாம் என்கிறேன்.
வெளிக் காரியங்களில் எத்தனை வேற்றுமை இருந்தாலும், இதயத்தில் அன்பு இருந்தால் தேசத்தில் பரம சாந்தமே இருக்கும். யுக யுகாந்திரமாக நம் தேசத்தில் அப்படித்தான் சமூகம் சாந்தமாக இருந்து வந்தது. அவரவரும் சுயநலனை மட்டும் எண்ணாமல், ‘சகல ஜனங்களுக்காகவும் நாம் இந்தக் கர்மத்தைச் செய்கிறோம்’ என்ற மனோபாவத்துடன் தங்கள் பரம்பரைக் கர்மத்தைச் செய்தால் ஏற்றத் தாழ்வு இல்லை. என்ன விபரீதம் ஏற்பட்டாலும் சாமானிய தர்மங்களை அனைவரும், விசேஷ தர்மங்களை அவரவரும் கூடிய வரையில் ரக்ஷித்து வந்தால் எந்த நாளும் நமக்குக் குறை வராது.
இங்கு மட்டும் இருப்பானேன்?
உலகத்தில் மற்ற தேசங்கள் இல்லையா? அங்கேயும் மதங்கள் இல்லையா? அந்த மதங்கள் அந்த தேச ஜனங்களுக்கு இப்படிப் பாரம்பரியமாகத் தொழில்களை வகுத்துக் கொடுத்து ஜாதி, ஜாதி என்று வைக்கவில்லையே! நமக்கு மட்டும் எதற்கு? என்ற கேள்வி பிறக்கிறது.
ஜாதிகள் என்று பிரித்து வைக்காத தேசங்களிலும், சாஸ்திரங்களையும் அறிவு நூல்களையும் வளர்க்கிறவர்கள், ராஜ்யபாரம் நடத்தி யுத்தம் செய்கிறவர்கள், வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளிகள் எல்லோரும் இருக்கத்தான் செய்தார்கள்! இன்றைக்கும் இருக்கிறார்கள்.
ஆனாலும் ‘இது நம் தேசம்’ என்கிற சுய அபிமானம் இல்லாமல், நிஷ்பக்ஷபாதமாகவே பார்த்தாலும், நம் தேசத்தின் மகோன்னதமான நாகரிகம் மாதிரி அங்கெல்லாம் எங்குமே காணோமே! மற்ற தேசங்களில் நடுநடுவில் ஒரு பெரிய நாகரிகம் தோன்றினாலும்கூட, அது இங்கே இருக்கிற மாதிரி இத்தனை ஆயிரம் வருஷங்கள் நீடித்து நிலைத்து நிற்கக் காணோமே! நாமே நம் பெருமையை சொல்லிக் கொள்வது என்றில்லை; அலெக்ஸாந்தர் காலத்திலிருந்து நாம் இத்தனை அதல பாதாளத்துக்கு போயிருக்கிற இன்றைக்கு வரையில்கூட, வெளிதேசத்தவர்கள் சகலருமே, ஹிந்து நாகரிமா (Hindu Civilisation) ஆ! அப்பாடா, அது எத்தனை மகோன்னதமாக இருக்கிறது! என்று ஆச்சரியப்பட்டு வருகிறார்களே! இதற்கு விசை என்ன?
அங்கெல்லாமும் மகாபுருஷர்கள், ஞானிகள், பக்தர்கள், பரோபகாரிகள், தியாகிகள் பிறந்துதான் இருக்கிறார்கள். ஆனாலும் கணக்குப் போட்டுப் பார்த்தால் நம் ஒரு தேசத்தில், அவிச்சின்னமாக (அறுபடாத தொடரிழையாக) எத்தனையோ ஆயிரம் வருஷங்களாகத் தலைமுறைக்குத் தலைமுறை கூட்டம் கூட்டமாக உத்தம புருஷர்கள், ஸாதுக்கள், ஞானிகள், தத்துவ சிந்தாந்திகள், பக்தர்கள் பரோபகாரிகள் தோன்றின மாதிரி வேறெங்குமே காணோம். அத்தனை வெளி தேசங்களிலும் இருக்கிற மகான்களைக் கூட்டினாலும் அதைவிட இங்கே மகாபுருஷர்கள் தோன்றியிருக்கிறார்கள். இதை land of saints, land of sages என்றெல்லாம் – நாம் சொல்லவில்லை. சொல்ல வேண்டியதும் இல்லை – மற்ற தேசத்துக்காரர்களே தலைக்குமேல் தூக்கிவைத்துக் கொண்டு கூத்தாடுகிறார்கள். ‘இப்படி ஒரு வேதாந்தமா? இப்படி ஒரு தத்துவங்களா?’ என்று நம் கிரந்தங்களைக் கொண்டாடி நமஸ்காரம் செய்கிறார்கள்.
கலை, சிற்பம், சங்கீதம், காவியம், ஜோதிஷம் – கணிதம் மாதிரி அறிவு சாஸ்திரங்கள், வைத்திய சாஸ்திரம் என்று எதை எடுத்தாலும் இந்தியாவுக்கு நிகர் எதுவுமே இல்லை என்று லோகமே வானளாவப் புகழ்கிறது. உபநிஷத்து, கீதை, ராமாயணம், சாகுந்தலம் இந்த மாதிரி உலகத்திலேயே இல்லை என்கிறார்கள். தமிழ் நூல்களிலேயே இருக்கப்பட்ட தேவாரம், திவ்யப் பிரபந்தங்கள் போன்ற பக்தி நூல்கள் லோகத்திலேயே வேறெங்கும் இல்லை என்கிறார்கள். குறளைப் பார்த்து இப்படியும் ஒரு சின்ன நூல் அத்தனை நீதிகளையும் இவ்வளவு தெளிவாக எடுத்துச் சொல்வதற்கு உண்டா, உண்டா என்று ஆச்சரியப் படுகிறார்கள். என்ன கோபுரம், என்ன சிற்பங்கள், திவ்விய விக்கிரகங்கள், எப்படிப்பட்ட சங்கீதம், பரத நாட்டியம் என்று அந்நிய தேசத்தவர்கள் எல்லாம் பிரமித்து, தாங்களாகவே இவற்றைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காக வீடு வாசலை எல்லாம் விட்டுவிட்டு இங்கே ஓடி வருகிறார்கள். வெள்ளைக்காரர்கள் நம்மை அடிமைப்படுத்தி, ஒரு பக்கத்தில் நம்மிடம் இல்லாத தோஷங்களை எல்லாம் சுமத்தி, நம்மைப் பிரித்துப் பிரித்து வைத்து ஆட்சி பண்ணினாலும் (divide and rule) இன்னொரு பக்கத்தில் நம் நாகரிகத்தைப் பார்த்து அதிசயப்பட்டு நம்முடைய சாஸ்திரங்களை எல்லாம் தேடித் தேடி எடுத்து ஆராய்ச்சி செய்து தங்கள் பாஷையில் தர்ஜுமா பண்ணி (மொழி பெயர்த்து) வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படி ஓர் உன்னதமான நாகரிகம் இங்கு மட்டும் இருக்கும்படியாக அப்படி இங்கே பிரத்யேகமாக என்ன விசேஷம் இருந்தது? மற்ற தேசங்களில் இல்லாமல் நம் சமூக வாழ்வில் மட்டும் என்ன பிரத்யேக அமைப்பு இருந்தது என்று பார்த்தால், இந்த வர்ணாசிரம தர்மம் ஒன்றுதானே அகப்படுகிறது.
சீர்திருத்தக்காரர்களால் நம் குறைகளுக்கெல்லாம் இருப்பிடமானது என்று நினைக்கிற வர்ண தர்மம் என்ற தனியம்சம் இருக்கிற நம் தேசம்தான் மற்ற எல்லா தேசங்களையும்விட தத்துவத்தில், குணசீலத்தில், கலைகளில், அறிவில் எல்லாவற்றிலுமே நிறைந்து தலைசிறந்து நிற்கிறது.
சமுதாயத்தில் ஒரு ஸ்திரத் தன்மை (Stability) இருந்தாலொழிய, அதனால் ஏற்படுகிற நிச்சிந்தையான நிம்மதியான சூழ்நிலையிருந்தாலொழிய, தத்துவம், கலை, அறிவு நூல்கள் எதுவுமே இப்படித் தலைமுறை தலைமுறையாக வளர்ந்து வந்திருக்க முடியாது! தத்துவ ஞானிகளும், கலாமேதைகளும் இப்படிக் கூட்டம் கூட்டமாகப் பிறந்திருக்க முடியாது.
மற்ற தேசங்களில் அந்தந்த மதங்கள் போட்டுத் தந்த சமூக வாழ்க்கை முறையில் இப்படி ஸ்திரத் தன்மையை உண்டாக்கக்கூடியதாக எந்த அமைப்பும் இல்லை. ‘சமூக வாழ்வு அடிப்படை’, (Sociological foundation) என்பதையேகூட அவை பெரும்பாலும் கவனிக்கவில்லை என்று சொல்லி விடலாம். ஏதோ பொதுவாக, திருடாதே, பொய் சொல்லாதே, விபசாரம் பண்ணாதே, சத்தியமாய் இரு, தியாகமாயிரு, அஹிம்சையாய் இரு என்கிற மாதிரி சொல்வதற்கு அதிகமாக, அவை சமூக வாழ்வை ஒழுங்குபடுத்தி அமைத்துக் கொடுப்பதில் ‘ரூல்’கள் செய்யவில்லை. மதத்தையே வாழ்வாக்கிக் கொண்ட பிக்ஷுக்கள், பாதிரிமார்கள் மாதிரி இருக்கப்பட்டவர்களுக்கு விதிகள் வகுத்துக் கொடுத்து சங்கமாக ஸ்தாபன ரீதியில் ஒழுங்கு செய்தனவே தவிர, சமுதாயம் முழுவதும் இணைந்து அதில் உள்ள எல்லாரும் ஒருத்தரையொருத்தர் தாங்கி நிற்கிற மாதிரி எந்த ஏற்பாட்டையும் செய்வதில் அவை விசேஷமாக கவனம் செலுத்தவில்லை என்றே தோன்றுகிறது.
இதனால் என்ன ஆயிற்று? சாஸ்திர வளர்ச்சி, தேச ரக்ஷணம், வியாபாரம், விவசாயம், சரீர உழைப்பு எல்லா அம்சங்களும் மற்ற தேசங்களிலும் இருந்தாலும்கூட, எல்லாவற்றிலுமே எப்போது பார்த்தாலும் போட்டியும் கூடவே இருந்திருக்கிறது. ‘நமக்கென்றே இந்தத் தொழிலும் ஏற்பட்டது’ என்றில்லாமல், எல்லாரும் எல்லாவற்றிலும் போய் விழுந்திருக்கிறார்கள். முதலில் நம் தேசத்தில் இருந்த மாதிரி நம்முடைய ஜீவனோபாயத்துக்குக் கவலையில்லை. நிச்சயமாக இதோ இந்தத் தொழில் நமக்கு இருக்கிறது. வழி வழியாகச் செய்துவந்தால் நமக்கு ஸ்வபாவமாக, சுலபமாகக் கைவருகிற தொழிலாக ஒன்று இருக்கிறது என்ற ஸ்திரத் தன்மை, நிச்சிந்தையான நிலைமை இல்லை. இது இருந்து விட்டால் அப்புறம் சமூக ஸெளஜன்யத்துக்கும் சாந்தத்துக்கும் கேட்கவே வேண்டாம். அப்படியிருந்ததால்தான் நம் தேசத்தில் இப்படி உத்தமப் பண்புகள் தோன்றியிருக்கின்றன. அவற்றை வாழ்க்கையில் நடத்திக் காட்டிய உத்தம புருஷர்கள் கணக்கு வழக்கில்லாமல் தோன்றியிருக்கிறார்கள். மற்ற தேசங்களில் இந்த நிச்சயத்தன்மை இல்லாததால் ஒருத்தருக்கொருத்தர் போட்டியும் பூசலுமாக இருந்திருக்கின்றனர்.
சீர்திருத்தக்காரர்கள் சொல்கிறபடி பார்த்தால், பெரும்பான்மையான ஜனங்கள் அடக்கி வைக்கப்பட்டதாக அவர்கள் நினைக்கிற வர்ண தர்மத்தைக் கொண்ட நம் தேசத்தில்தான் ‘சமூகப் புரட்சிகள்’ (Social Revolutions) நிறையத் தோன்றியிருக்க வேண்டும். ஆனால், இந்த வார்த்தையே நமக்குப் புதிசானது. பிரெஞ்சுப்புரட்சி, அமெரிக்கப் புரட்சி, ருஷ்யப் புரட்சி என்றெல்லாம் சரித்திர புஸ்தகத்தில் படித்த பிறகுதான் நமக்கு பெரிய ஜனசமூகமே புரட்சி என்று ஒன்றில் குதிக்கக்கூட அவசியம் ஏற்படலாம் போலிருக்கிறது என்று தெரிய வந்திருக்கிறது! மற்ற தேசத்துச் சரித்திரங்களைப் பார்த்தால் புரட்சிக்குமேல் புரட்சி என்று பொது ஜனங்களே செய்வதைப் பார்க்கிறோம். அதைவிட முக்கியமாக ஒரு புரட்சியும் சாசுவதமாக எதையும் சாதித்துப் புரட்டிவிடவில்லை என்றும் பார்க்கிறோம். ஒரு புரட்சி வந்து ஒரு ஐம்பது நூறு வருஷமானால் இன்னொரு புரட்சி வந்துதான் இருக்கிறது. அதாவது ஜனங்களுக்கு அதிருப்திதான் இருந்திருக்கிறது. இன்றைய நிலைமையோ கேட்கவே வேண்டாம். அத்தனை தேசங்களிலும் ஒழுங்கீனம், மிருகப் பிராயமான வெறிக் கூத்துகள், கிளர்ச்சிகள், ஸ்டிரைக்குகள், தினமும் ஒரு ராஜாங்கம் முழுகுவதும் இன்னொன்று வருவதுமாக லோகம் முழுக்கத் தத்தளிப்பில் இருக்கிறது. ராஜாங்கத்தாரே சர்வாதிகாரம் நடத்தி, தலையைத் தூக்கினால் மண்டையிலே போட்டுவிடுவேன் என்று சொல்கிற ருஷியா மாதிரி தேசங்களில்தான் புரட்சியில்லாமலிருக்கிறது.
அங்கேயும் எரிமலை மாதிரி எப்போது வெடித்துவிடுமோ என்கிற நிலையில் உள்ள குமுறல் இருப்பதாகத்தான் சொல்கிறார்கள். அவ்வப்போது ஒரு அறிஞர் அல்லது எழுத்தாளர் உயிர் போனாலும் போகட்டும் என்று அங்கிருந்து தப்பி ஓடிவந்து அங்கே நடக்கிற கொடுங்கோன்மையைச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அங்கேயும் ஜனங்கள் உள்ளூற நிறைந்து இருக்கவில்லை என்கிறார்கள். இந்தியாவில் இப்படி ராஜாங்க சர்வாதிகாரம் ஒரு நாளிலும் இருந்ததில்லை. அடிமை ஜனங்களிடமிருந்து இத்தனை கலைகள், சாஸ்திரங்கள் ஒருக்காலும் தோன்றியிருக்க முடியாது. எங்களை அடக்கி வைத்திருப்பதைப் பாருங்கள் என்று வெளி ஜனங்களிடம் நாம் அழுததும் இல்லை. சுதந்திரமான சூழ்நிலையில் மனசு மலர்ந்திருந்தாலொழிய இத்தனை அறிவு நூல்களும் கலைகளும், கோயில்களும் தோன்றியிருக்கவே முடியாது. பொது ஜனங்களும் எண்ணிக்கையில் ஜாஸ்தி இருந்தால்கூட மூடநம்பிக்கையால் (Superstition) புரோஹித ஜாதிக்கு (Priest – craft என்று சொல்கிறார்கள்) பயந்து ஏமாந்து கிடந்தார்கள் என்று சொல்வது கொஞ்சம்கூடப் பொருந்தாது. ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கக் காடுகள் மாதிரிக் கலாச்சாரம் வளராத தேச ஜனங்களைப்பற்றி அப்படிச் சொன்னால்தான் பொருந்தும். அங்கேயெல்லாம் பூசாரி என்கிறவன்தான் ராஜா மாதிரி. பார்த்தாலே பயப்படுகிற மாதிரி இருப்பான். மந்திர வித்தை போட்டு ஜனங்களை என்ன வேண்டுமானாலும் செய்யமுடியும்போல் தர்பார் பண்ணுவான். அவனுக்கே நேராக சிக்ஷிக்கிற அதிகாரம் உண்டு. நம் தேசத்தில் அப்படியில்லை. எல்லா ஜாதியினரும் நல்ல அறிவும், பக்தியும், அத்யாத்ம விஷயங்களில் முன்னேற்றமும் பெற்றவர்கள். புராணங்கள், பெரிய புராணம் இவற்றில் பார்த்தால் எல்லா ஜாதியிலும் மகாபெரியவர்கள் வந்தது தெரியும். சந்திரகுப்தன், சிவாஜி மாதிரி இருக்கப்பட்ட சக்கரவர்த்திகளும், சேக்கிழார் மாதிரி மதி மந்திரிகளும் நாலாம் வர்ணத்திலிருந்தே வந்திருக்கிறார்கள். இங்கே ‘ப்ரீஸ்ட்– க்ராஃப்ட்’டுக்கு சிக்ஷிக்கிற சக்தியும் கிடையாது. அவன்தான் பரம சாதுவாக இருக்க வேண்டியவன். தப்பு நடந்தால்கூடத் தன்னையே சிஷித்துக் கொள்ள வேண்டியவன் என்று சாஸ்திரம் வைத்திருக்கிறது. வெள்ளைக்காரர்கள் நீக்ரோ மேலே பட்டால் நீக்ரோவை சிக்ஷிக்கிறார்கள். நம் தேசத்திலோ தீண்டக்கூடாதவர் என்பவர் ‘ப்ரீஸ்ட் – க்ராஃபட்’ மேலே பட்டால் இந்த ப்ரீஸ்ட் –ஜாதிக்காரன்தான் ஸ்நானம், பிராயச்சித்தாதிகள் செய்ய வேண்டும் என்று வைத்திருக்கிறது. தீண்டாமைக் கொள்கையைப் பற்றிய அபிப்பிராயம் ஒரு பக்கம் இருக்கட்டும். பயமுறுத்தியோ, தண்டித்தோ, அடக்கி வைத்தோ இம்மாதிரி கொள்கைகளைக் காரியத்தில் நடத்தவில்லை என்று சொல்ல வந்தேன். லோகமெல்லாம் கொண்டாடுகிற பெரிய நாகரிக சமுதாயத்தை அடக்கியும் ஏமாற்றியும் வளர்த்திருக்க முடியாது. வாஸ்தவமாகவே தர்ம சாஸ்திர ஏற்பாடுகளில் சகலருக்கும் அநுபவ பூர்வமாக அநுகூலம் இருந்ததால்தான் அவர்கள் புரட்சி செய்யாமல் இருந்தார்கள்.
பழைய வர்ண தர்மம் நடைமுறையில் இருந்தபோது, இப்படிப் புரட்சியில்லாமல், அதாவது ஜனங்களுக்கு அதிருப்தியில்லாமல், நாகரிகம் உயர்ந்து உயர்ந்து வளர்ந்து வந்தது ஒரு பக்கம் இருக்கட்டும். பழைய தொழில் பங்கீட்டைத் தகர்த்துக் கொண்டு (break), புதிதாக மற்ற தேசங்களின் வழியில் நாமும் ‘முன்னேற்றம்’, ‘சமத்துவம்’ என்று எதையோ நினைத்துக் கொண்டு, இப்போது புது முறையில் போக ஆரம்பித்தபின் எப்படியாகியிருக்கிறோம் என்பதையும் பார்த்தால், நம் தேசம் இப்போது எப்படி இருக்கிறது? பிரத்யக்ஷமாகவே பார்க்கிறோம். ஒழுங்கீனம், பொய், புரட்டு, லஞ்சம், விபச்சாரம் எல்லாம் தலை துளிர்த்து விட்டன. தேசத்தில் எங்கே பார்த்தாலும் கிளர்ச்சி, ஸ்டிரைக், டெமான்ஸ்ட்ரேஷன், ஹர்த்தால், போலீஸ் தடியடி, கர்ஃப்யூ (ஊரடங்கு) இவைகளைத்தான் பார்க்கிறோம். மற்ற தேசங்களில் இருக்கிற அளவுக்குக்கூட வெளிநாட்டு வியாபாரம் முதலியவற்றில் நமக்கு நாணயம் இல்லாமல் அவை நம்மைப் பரிகசிக்கிற ஸ்திதிக்கு வந்திருக்கிறோம்! ‘இந்தியாவா, ஆகா’ என்று சர்வ தேசத்திலும் கொண்டாடிய காலம் போய்விட்டது. பாகிஸ்தான் மாதிரி ஒரு சின்ன தேசம் நம்மை சண்டைக்கு இழுக்கிறது என்றால் என்ன அர்த்தம்? தேசத்தின் ஆத்மபலம் அத்தனை குறைந்து விட்டது என்றுதான் அர்த்தம்.
எதனால் இப்படிக் குறைந்தது? எதை விட்டதால் நமக்கு இந்த பலஹீனம் வந்தது? எது நமக்கு இத்தனை ஆயிரம் வருஷங்கள் புஷ்டியைத் தந்து நம் நாகரிகத்தைத் தழைத்து வளர வைத்தது? எதை விட்டபின் நாம் அந்த நாகரிகத்தின் வாரிசுகள் என்று சொல்லிக் கொள்வதற்கே வெட்கப்படும் படியான ஸ்திதி வந்திருக்கிறது? இதை ஆலோசித்துப் பார்த்தால் மற்ற தேசங்களில் இல்லாத வர்ண தர்மம் இங்கே மட்டும் இருந்தவரையில் நம் நாகரிகம் மாத்திரம் பாறாங்கல் மாதிரியான இத்தனை நூற்றாண்டுகள் உலகமே போற்றுகிற விதத்தில் வளர்ந்து வந்திருக்கிறதென்றும் இந்த தர்மத்துக்கு நலிவு உண்டாக ஆரம்பித்ததிலிருந்து நாமும் தினம் தினம் கீழே போய்க் கொண்டிருக்கிறோம் என்றும் தெரிகிறது.
‘வர்ண தர்மம் இங்கு மட்டும் இருப்பானேன்?’ என்றால் இந்த தேசத்தில் மட்டுமாவது ஆத்ம சிந்தனைக்கும், தெய்வ அநுபவத்துக்கும், கலைகளுக்கும், உத்தமமான பண்புகளுக்கும் அநுகூலமான ஒரு நாகரிகம் இருக்க வேண்டும் என்று நமக்கு ஆசையிருந்தால், இவற்றுக்காக வர்ண தர்மமும் இருக்க வேண்டும். ‘இங்கு மட்டும் இருப்பானேன்?’ என்றால் இங்கு மட்டுமாவது இருந்தால்தான் உலகத்துக்கே ஒரு நல்ல உதாரணம் கிடைக்கும் என்பதற்காகவே இருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் போட்டிதான்–உடனே பொறாமைதான், அதிருப்திதான். சமூகச் சச்சரவுதான். சௌகரியமான படிப்பு, தொழில் இவற்றுக்குத்தான் எல்லாரும் வரப் பார்ப்பார்கள். ஆனால், எல்லாருக்கும் அது இடம்தர முடியாது. உடனே துவேஷம், பேதம், அசூயை தோன்ற வேண்டியதுதான். இப்போதே பாருங்கள். படித்தவர்களிடையிலும், வேலை இல்லாத் திண்டாட்டம் வந்தது என்றவுடன், காலேஜ் அட்மிஷனுக்குக் கட்டுப்பாடு போட வேண்டும் என்கிறார்கள்! ‘எஞ்ஜினீயர்கள் ஜாஸ்தியாகி விட்டார்கள்; என்ஜினீயர் காலேஜ் சிலவற்றை மூடப்போகிறோம்’ என்கிறார்கள். அதாவது “எல்லோருக்கும் எல்லாம்” என்று வைக்க முடியாமல், இவர்களும் ஏதோ ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டு வரத்தான் வேண்டியிருக்கிறது. இதையே பாரம்பரியம் என்கிற கட்டுப்பாடாக ஆதியில் வைத்தார்கள். அப்போது தொழிலே ரத்தத்தில் ஊறி, அது எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதிலே ஒரு பெருமையுடன் ‘இது நம் அப்பன் பாட்டன் காலச்சொத்து; நம் குலதனம்’ என்கிற நிறைவு இருந்தது. அந்தந்தத் தொழிலைச் செய்வதிலும் அந்தரங்க விசுவாசம் இருந்தது. அதனால் நல்ல திறமையும் (Efficiency) இருந்தது. இன்றைக்கு ஒவ்வொருத்தனும் பணத்துக்காகவே என்று வந்துவிட்டதால் தொழிலை ஒழுங்கில்லாமல் செய்கிறான். முன் காலத்தில் பணம் இரண்டாம்பட்சம். விசுவாசத்தோடு ‘தன் தொழில்’ என்று திருப்தியோடு செய்ததால், எல்லாக் காரியங்களும் ஒழுங்காய் நடந்தன. சமூகமே நன்றாக இருந்தது.
நிறைவு இல்லாமல் ஒரு நாகரிகமும் இல்லை. சமூகத்தில் அத்தனை பேருக்கும் இப்படிப்பட்ட நிறைவை ஏற்படுத்தித் தந்த வர்ண தர்மம் என்ற உத்தமமான ஏற்பாட்டைக் குற்றம் சொல்லவே கூடாது.
அந்த மாதிரியே மறுபடி செய்ய முடிகிறதோ, இல்லையோ? அப்படி முடியச் செய்வதற்கு நம்மாலானதைச் செய்து தோற்றுப் போனாலும் சரி, அல்லது ‘இந்தச் சாத்தியமில்லாத காரியத்தில் இறங்குவானேன்?’ என்று விட்டுவிட்டாலும் சரி – கடைசிப் பட்சமாக, ‘அந்த ஏற்பாடுதான் நம் மதத்தின் சகல ஜன சமூகங்களுக்கும், நம் தேசத்துக்கும், அதன் வழியே லோகம் முழுவதற்கும் ஆயிரம் பதினாயிரம் வருஷங்களாகப் பரம சிரேயஸைத் தந்திருக்கிறது; அதைத் தோஷம் சொல்வது ரொம்பத் தப்பு; அபசாரம்’ என்ற எண்ணமாவது நமக்கு பிறக்க வேண்டும்.