சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள்
சித்த சுத்திக்குப் பயன்படுகிற சின்னச் சின்ன விஷயங்கள் பல உண்டு. இந்தச் சின்னச் சின்ன தர்மங்களை நம்முடைய பெரியவர்கள் தலைமுறை தத்துவமாக அநுசரித்து வந்தார்கள். அவர்கள் வாழ்க்கையில் திருப்தியும் சந்தோஷமும் நிறைந்திருந்தன. அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்று பார்த்து, அதை நாம் பின்பற்றினாலே போதும். புதிதாக ஒரு கொள்கையும் வேண்டாம். நாமும், சந்தோஷமாக, திருப்தியாக இருக்கலாம்.
பெரிய அத்யாத்ம விஷயங்களில் மட்டுமில்லாமல், ஒரு சமுதாயத்தில், ஒரு குடும்பத்தில் நடந்துகொள்ள வேண்டிய முறைகளில்கூட நமக்கு முன் வாழ்ந்த பெரியவர்கள் அற்புதமாக வழிகாட்டியிருக்கிறார்கள். உதாரணமாக உறவு, சிநேகிதம் எல்லாம் அந்த நாளில் வெகு உயர்ந்த முறையில் காப்பாற்றப்பட்டன. ஒரு கலியாணம், அல்லது அபரகாரியம் (இறுதிச் சடங்கு) என்றால் பலர் ஒன்று சேர்ந்து செலவு செய்து நடத்திக் கொடுப்பது என்று வைத்துக் கொண்டிருந்தார்களே, அது எவ்வளவு உயர்ந்த பண்பு?
இந்தக் காலத்தில் நடப்பதுபோல் ‘டெமான்ஸ்ட்ரேஷனும்’, வெளிவேஷமும் அப்போது இல்லை. ஆனால் அந்த நாளில்தான் ஏழைகளுக்கு உண்மையாக உதவிசெய்கிற மனப்பான்மை சுபாவமாகக் காரியத்தில் அநுசரிக்கப்பட்டது. ஒரு கலியாணத்துக்குப் போகிறவர்கள் தங்களால் முடிந்ததை, ஐந்தோ, பத்தோ உதவி செய்வது என்பதால் கலியாணம் செய்பவர்களுக்கு எத்தனையோ பாரம் குறைந்தது.
ஒரு கூட்டத்திலே பலர் கொஞ்சம் கொஞ்சம் கொடுத்தாலும் போதும். கொடுக்கிறவர்களுக்குப் பெரிய சிரமம் ஏதும் இல்லை. ஆனால் வாங்குகிறவனுக்கு மொத்ததில் கணிசமாகக் கிடைக்கும். இப்படித்தான் ஓர் ஏழைக்குக் கஷ்டம், அவன் ஒரு கலியாணம் செய்யவேண்டும் அல்லது அபரகாரியம் செய்ய வேண்டும் என்றால் மற்றவர்கள் எல்லாரும் கொஞ்சம் கொஞ்சம் உதவி செய்து அந்தக் காரியத்தை நடத்திக் கொடுத்து வந்தார்கள். முன்னாட்களில் பந்துகளுக்குள் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் அதிகம் இல்லை. பணக்காரனாக இருப்பவன் ஏழையான பந்துவுக்கே அதிக உதவி செய்வான். இதெல்லாம் தர்மத்தைச் சேர்ந்தது. சிரமத்தில் உள்ளவர்களுக்கு உதவி செய்வது, உதவியைப் பெறுகிறவனைவிட உதவி செய்கிறவனின் சித்த சுத்திக்கே அதிகம் உதவும்.
ஆனால் இன்று எல்லாம் மாறிவிட்டது. பழைய கால பந்துத்துவம் பணக்காரர்களுக்கு இல்லை. ஏழையான உறவினர்களுக்கு உதவுகிற மனப்பான்மை குறைந்து விட்டது. பழைய காலத்தில் நடந்தது உண்மையான அன்னதானம். இப்போது மனிதர்கள் தங்களைப் போன்ற பணக்காரர்களுக்காகவே பார்ட்டி – ஃபீஸ்ட் வைக்கிறார்கள். தேசத்தில் ஏராளமாக இப்படிப் பணமும் பண்டமும் செலவாகின்றன. இதில் தர்மத்துக்கோ, சித்த சுத்திக்கோ எதுவும் இல்லை. இவன் காரியார்த்தமாகத்தான் ஒருத்தனைக் கூப்பிட்டு பார்ட்டியும் ஃபீஸ்டும் வைக்கிறான். பார்ட்டி கொடுத்து, அதில் சாப்பிட்டவர்களை ஏமாற்றி விட்டதாக நினைக்கிறான். பார்ட்டி சாப்பிட்டவனுக்குத் தெரியும். ‘இவன் பிரியத்தின் பேரில் தனக்கு சாப்பாடுபோடவில்லை. காரியத்துக்காகத்தான் சாப்பாடு போட்டான்’ என்று. ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் சந்தோஷமாகச் சாப்பிட்டுவிட்டுப் போகிறான். ஆகையால், இவன் அவனை ஏமாற்றுகிறான் என்றால் அவனோ, இவன் போட்டதைச் சாப்பிட்டு விட்டு இவனையே ஏமாற்றிப் போகிறான். ஆக ஃபீஸ்டும் டோஸ்டும் ஏமாற்று வித்தையாகவே ஆகின்றனவேயன்றி சித்த சுத்திக்கு பயன்படவில்லை.
ஏழைக்கு அன்னதானமோ பொருள் உதவியோ செய்யும் போது இரண்டு பக்கத்திலும் உண்மையான சந்தோஷமும் பிரியமுமே நிரம்பியிருந்தன. இப்போது பார்ட்டி நடத்தும்போது அங்கே உண்மையான பிரியம் இல்லாததோடு, துவேஷம் வேறு உண்டாகிறது. வசதியிருப்பவர்கள் பார்ட்டி நடத்துவதைப் பார்த்து, வசதியில்லாதவர்களுக்கு வெறுப்பும் துவேஷமும் உண்டாகின்றன. உறவு முறைகளில் ஏழை பணக்காரர் என்று வித்தியாசம் பாராட்டக்கூடாது என்பதற்காக இவ்வளவு சொன்னேன்.
‘வசதியுள்ளவர்கள்தான் பண உதவி செய்து புண்ணியம் சம்பாதிக்க முடியும்; நாம் என்ன செய்யலாம்?’ என்று மற்றவர்கள் எண்ணக்கூடாது. சரீரத்தால் மற்றவர்களுக்குக் கைங்கரியம் செய்வது பெரிய புண்ணியம். அது சித்த சுத்திக்கு ரொம்ப ரொம்ப உதவும்; வசதியே இல்லாதவர்களும் இவ்விதத்தில் பிறருக்கு சரீர சகாயம் செய்ய முடியும்.
ஒவ்வொருத்தரும் — பிறருக்குக்கூடத் தெரிய வேண்டாம் — ஏதோ ஓர் ஒற்றையடிப் பாதைக்குப் போய் அங்கே உள்ள முள்ளை, கண்ணாடியை அப்புறப்படுத்தி வந்தால் போதும். அது சித்த சுத்திக்கு பெரிய உதவி. இது மாதிரி சின்ன தர்மங்களை எவரும் செய்யலாம். பணக்காரர், ஏழை என்ற வித்தியாசமில்லாமல் ஒரு பேட்டையில் உள்ள அனைவரும் சேர்ந்து குளம் வெட்டலாம்.
‘ஈசுவர அநுக்கிரகம் வேண்டும், வேண்டும்’ என்றால் அது எப்படி வரும்? பரோபகாரமான, ஜீவகாருண்யமுள்ள நல்ல காரியங்களைச் செய்து செய்து மனசு பக்குவப்பட்டால்தான், சித்த சுத்தி உண்டாகி, அந்த சுத்தமான சித்தத்தில் ஈசுவரனின் உருவத்தைப் பார்க்க முடியும். கலக்கின ஜலத்தில் பிம்பம் தெரியாததுபோல், நாம் மனசைக் கலக்கிக் கொண்டு ஈஸ்வரஸ்வரூபம் தெரியாதபடி செய்துகொண்டிருக்கிறோம். பகவத் பக்தியோடு பரோபகாரமும் செய்து, மனசு தெளிவாகும்போது ஈஸ்வர ஸ்வரூபத்தை நாம் கிரகித்துக் கொண்டு, அவனுடைய அநுக்கிரஹத்தைப் பெறமுடியும்.
குற்றமும் குணமும்
மனிதர்களாகப் பிறந்தவர்கள் தர்மப்படி வாழ்வு நடந்த வேண்டுமானால், சகல காரியங்களிலும் விதிப்படி நடக்க வேண்டியிருக்கிறது. இந்த விதிமுறைகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது ரொம்பவும் அவசியம். ஆனால் அவற்றை அவர்களாக ஏற்று, சுயேச்சையாகப் பின்பற்றுவதே அழகு. ஒருவரை நிர்பந்தப்படுத்தி விதிகளை அநுசரிக்கச் செய்வதில் பெருமை இல்லை. ‘சம்பிரதாயம்’ என்பது தானாக வழிவழியாக வந்திருக்கிறது. மக்கள் அதைத் தாமாக ஏற்றுப் பின்பற்றி வந்திருக்கிறார்கள். சம்பிரதாயத்தில் வந்துள்ள அத்தனை விதிமுறைகளையும் சாஸ்திரத்தில் சட்டம் போல் எழுதி வைக்கவில்லை. சட்டம் என்று எழுதி விட்டால் அது நிர்பந்தமாகிவிடுகிறது என்பதே காரணம். ‘ஸஹஸ்ரம் வத; ஏகம் மா லிக’ (ஆயிரம் விஷயங்களை வாயால் எடுத்துச் சொல்லு; ஆனால் ஒன்றைக்கூட எழுத்திலே எழுதி வைத்துக் கட்டாயப்படுத்துவதே) என்பது ஆன்றோர் வாக்கு. ஆனால் இப்போது ‘இதைச் செய், அதைச் செய்’ என்று எதற்கெடுத்தாலும், எங்கே பார்த்தாலும் நோட்டீஸ் போடுவதும், எழுதி வைப்பதுமாக இருக்கிறது. நான் பூஜை செய்கிற இடத்திலேயே ‘பேசாதே, சட்டை போட்டுக் கொள்ளாதே’ என்றெல்லாம் எழுதி வைக்கிறீர்கள். இனிமேலே இப்படிச் செய்ய வேண்டாம்.
நான் இப்படி விதி மாதிரி உங்களைக் கண்டித்து, நிர்பந்தப்படுத்திச் சொல்லும்போது, நானே இதுவரை சொன்ன நல்ல விதியை மீறுகிறேன்.
‘செய்ய வேண்டாம்’ என்கிற போதே நிர்ப்பந்தமாகச் சட்டமாக்கி விடுகிறேன். அது தப்புதான். ‘இப்படியெல்லாம் எழுதலாமா என்று நீங்களே யோசித்துப் பாருங்கள்’ என்று நான் சொல்லியிருந்தால் அதுதான் முறை.
‘ஒருவரிடம் எத்தனை தோஷம் இருந்தாலும் அதைப் பெரிது படுத்தாதே. சிறிது குண விசேஷம் இருந்தாலும் அதையே கொண்டாட வேண்டும்’ என்பது பெரியோர் உபதேசம். நானே உங்கள் தவற்றை இப்போது அம்பலப்படுத்துகிறேன். பிறரது குறைகளை வெளிப்படுத்தக் கூடாது; அவர்களிடம் உள்ள நல்ல அம்சங்களையே வெளிப்படுத்த வேண்டும். தேய்ந்துபோன சந்திர கலைக்கும்கூடக் குளுமையும் பிரகாசமும் இருப்பதால் அதைப் பரமசிவன் தம் தலையில் தரித்து உலகமெல்லாம் பார்த்துப் புகழும்படி செய்கிறார். அதே ஈசுவரன் மகா கொடிய ஆலகால விஷத்தை யார் கண்ணிலும் தெரியாமல் தம் கண்டத்தில் ஒளித்து வைத்திருக்கிறார். இவ்வாறு தண்டி என்ற கவி கூறுகிறார்.
ஆனால் தோஷம் பார்க்கிறதும், அதைப் பெரிதுபடுத்திப் பேசுவதும் எழுதுவதுமே பொதுவில் தற்காலத்தில் மிக அதிகமாகியிருக்கிறது. அதிலும் நிறையப் படித்தவர்கள் நிறையக் குற்றம் காண்பார்கள். “குற்றம் கண்டுபிடிப்பதுதான் அறிவாளியின் காரியம். ‘வித்வான்’ என்றாலே ‘தோஷக்ஞன்’ என்று லட்சணம் சொல்லியிருக்கிறது” என்று இவர்கள் வாதம் செய்யலாம். ‘தோஷக்ஞன்’ என்றால் குற்றம் அறிந்தவன் என்றே அர்த்தம். குற்றத்தைப் பெரிதுபடுத்திப் பிரசாரம் செய்பவன் என்றல்ல. குற்றம் குறைகளை உணர வேண்டும். உணர்ந்து அவற்றை நாம் தவிர்க்க வேண்டும். குற்றம் உள்ளவர்களுக்கும் இதை இதமாக எடுத்துச் சொல்லலாம். ஆனால் ஓயாமல் தோஷம் பாராட்டிக் கொண்டும் அதைப் பிரசாரம் பண்ணிக் கொண்டும் இருக்கக்கூடாது.
தோஷமுள்ளவரிடம் அதை எடுத்துக் காட்ட வேண்டுமானால் நமக்குப் பூரண யோக்கியதை இருக்கவேண்டும். நம்மிடமே ஏராளமான தோஷங்களை வைத்துக் கொண்டு இன்னொருத்தருக்கு உபதேசம் செய்தால், அது பிரயோஜனப்படாது. சில சமயங்களில் நாம் சொல்வதாலேயே அவர்கள் முன்னைவிட வீம்பாகத் தங்கள் தவற்றை வெளிப்படச் செய்யவும் தொடங்கலாம். ‘நமக்கு யோக்கியதை இருக்கிறது. ஸ்தானம் இருக்கிறது. நம் வார்த்தை எடுபடும்’ என்று நிச்சயமானாலே பிறருக்கு உபதேசிக்கலாம்.
ஒருவரது நல்ல அம்சத்தைக் கொண்டாடுவதால் அவருக்கு மேலும் உற்சாகம் உண்டாகிறது. இந்தக் குணங்களை விருத்தி செய்து கொள்கிறார். ஆனாலும் ஒருவரைப் புகழுவதிலும் நமக்குக் கட்டுப்பாடு இருக்க வேண்டும். ஒரேயடியாக ஸ்தோத்திரம் செய்து, ஒருவரை அகங்காரத்திற்கு ஆளாக்கி விடக்கூடாது. புகழ்ச்சி ஒரு நுட்பமான விஷயம். இதனால்தான் பெரியோர்கள், “ஈசுவரனையும் குருவையும் மட்டுமே நேரில் துதிக்கலாம்; பந்து மித்திரர்களை நேரில் புகழாமல் மற்றவர்களிடமே போற்றிப் பேச வேண்டும்; (சவாரி முடிந்த பின் குதிரையைத் தட்டிக் கொடுப்பது போல்) வேலையை முடிந்த பின்னரே ஊழியரைப் பாராட்டலாம்; பிள்ளையை ஒரு போதும் புகழக்கூடாது” என்றார்கள்.
ப்ரத்யக்ஷே குரவ: ஸ்துத்யா:
பரோக்ஷே மித்ர பாந்தவா: |
கார்யாந்தே தாஸ ப்ருத்யாச்ச
ந ஸ்வபுத்ரா: கதாசன ||
இப்போது, நான் உங்கள் மேல் குற்றப் பத்திரிகை படித்ததற்கும் சமாதானம் சொன்ன மாதிரி ஆகிவிட்டது. தன் சொந்தக் குழந்தைகளை ஒரு போதும் ஸ்தோத்திரம் பண்ணக்கூடாது. அவர்களை இடித்தும் காட்டலாம் என்று சாஸ்திரமே சொன்னதால், நான் உங்களைத் தோஷம் சொன்னதிலும் தோஷமில்லைதான்.
கோபம்
‘காமம் குரோதம்’ என்று சேர்த்துச் சொல்வது வழக்கம். காமம் என்பது ஆசை. குரோதம் என்பதுதான் கோபம், ஆத்திரம், துவேஷம் இவை எல்லாமாகும். மனிதனை பாபத்தில் தள்ளுபவை காமமும், குரோதமுமே என்று கிருஷ்ண பரமாத்மா கீதையில் சொல்லியிருக்கிறார்.
ஒரு வஸ்துவிடம் ஆசை உண்டாகி விட்டால், அதைத் தவறான வழியிலாவது அடைய முயல்கிறோம். இப்படியாகக் காமம் என்பது நம்மைப்பாவத்தில் தள்ளுகிறது. அது நமக்குப் பெரிய சத்ரு. அதே போன்ற இன்னொரு சத்ருவே கோபம். நாம் ஆசைப்படுகிற வஸ்து கிடைக்காதபொழுது இதற்குத் தடையாக இருந்தவர்கள்மீது, அல்லது தடை என்று நாம் நினைத்தவர்கள்மீது கோபம் வருகிறது. அதாவது நிறைவேறாத காமமே கோபம் என்று பெயர் கொள்கிறது.
ரப்பர் பந்தைச் சுவரில் ஏறிகிறோம். அது எதிர்த்துக் கொண்டு நம்மிடமே திரும்பி வருகிறது. எறியப்படும் பந்து காமம். அதே பந்து திரும்பி வருகிறபோது கோபமாகிறது. திரும்பி வருகிற பந்து நம்மையே தாக்குகிறது. அப்படியேதான், நம்முடைய கோபத்தால் பிறரைத் தாக்குவதாக நினைத்தாலும், அது நம்மையேதான் அதிகம் தாக்குகிறது. கோபத்தில் நம் உடம்பெல்லாம் ஆடிப்போகிறது. நம் தேகம், மனசு இரண்டுக்கும் கோபத்தினால் பெரிய கிலேசம் உண்டாக்கிக் கொள்கிறோம். நாம் ரௌத்ராகாரமாகச் சத்தம் போடும்போது நம்மை யாரேனும் போட்டோ பிடித்து, அப்புறம் நம்மிடம் காட்டினால் போதும். கோபாவேசத்தில் நம்மை நாமே எத்தனை கோரமாக்கிக் கொள்கிறோம் என்று புரிந்து கொண்டு வெட்கப்படுகிறோம்.
சாதாரணமாக மனிதர்களுக்கும் பிராணிகளுக்கும் வயிற்றுக்கு ஆகாரம் கொடுத்தால் அப்போதைக்கு பசி அடங்குகிறது. அடுத்த வேளை மறுபடியும் பசி ஏற்படுகிறது. நெருப்புக்கு மட்டும் நாம் ஓர் ஆகாரத்தைப் போட்டால் அது அடங்குவதேயில்லை. இன்னும் அதிகமாகக் கொழுந்து விட்டு எரிகிறது. மேலும் பல பொருட்களைத் தகித்து கபளீகரம் செய்கிறது. நெருப்பு பிரகாச மயமாக இருந்தாலும், தான் ஸ்பரிசித்துவிட்டுச் செல்கிற பண்டங்களை எல்லாம் கன்னங்கரேல் என்று கருப்பாக்கிக் கொண்டு போகிறது. இதனால் நெருப்புக்கு ‘கிருஷ்ண வர்த்மா’ என்று ஒரு பெயர் ஏற்பட்டிருக்கிறது. காமமும் இப்படிப்பட்ட ‘கிருஷ்ண வர்த்மா’ தான். அது தீயாக எரிகிறது; அதற்குப் பிரியமான வஸ்துவைக் கொடுப்பதால் பசி அடங்காமல் அதிகரித்துக் கொண்டே போகிறது; அது நம் மனசையே கறுப்பாக்கிக் விடுகிறது. ஓர் இச்சை பூர்த்தியாகிற போது தற்காலிகமாக ஒரு மகிழ்ச்சி உண்டானாலும், பிற்பாடு அதையே மீண்டும் தேடி அலைந்து அமைதியையும் சந்தோஷத்தையும் குலைத்துக் கொண்டு அழுகையையும் கோபத்தையும் உண்டாக்கிக் கொள்கிறோம். அழுகை துக்கத்தில் உண்டாவது.
நிறைவேறாத ஆசையின் இரண்டு உருவங்கள் தாம் துக்கமும் கோபமும். நம் ஆசையின் நிறைவேற்றத்துக்குத் தடையாக இருந்தவர்கள் நம்மைவிடக் கீழ்ப்பட்டவர்களாக இருந்தால் அவர்களிடம் கோபத்தைக் காட்டுகிறோம். அவர்கள் நமக்கு மேலே இருந்து விட்டால் கோபித்துக் கொள்ள முடியாமல் நமக்குள்ளேயே துக்கப்பட்டுக்கொண்டு அழுகிறோம். கோபத்தின் கெட்ட சக்தி காமத்தின் சக்தியைவிடப் பெரியது. இதை நள சரித்திரமான ‘நைஷதம்’ வெகு அழகாகச் சொல்கிறது. கலி அரசன் வருகிறான். அவனது சேனாதிபதிகளாகக் காமனும் குரோதனும் வருகிறார்கள். கட்டியக்காரன் இவர்களுடைய பெருமைகளைப் பாடுகிறான். குரோதனைப் பற்றி அவன் என்ன பாடுகிறான்? ‘காமன் புகாத இடமில்லை என்பார்கள். ஆனால் காமனும் புகாத ஒரு கோட்டை உண்டு. அந்தக் கோட்டைக்குள்ளும் இந்தக் குரோதன் குடி கொண்டிருக்கிறானாக்கும். அது எந்தக் கோட்டைத் தெரியுமா? துர்வாஸருடைய இதயம்தான்’ என்று குரோதனின் புகழைப் பாடுகிறான். காமமே அறியாத துர்வாஸ மகரிஷியும் கோபத்துக்கு ஆளானவர் என்று தாத்பரியம்.
நாம் இந்த மகாபாவியான குரோதனிடம் ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கொஞ்சம் யோசித்துப் பார்த்தாலும் நமக்கே தெரியும்; யாரையும் கோபித்துக் கொண்டு சத்தம் போட நமக்கு சிறிதும் யோக்கியதை இல்லை என்றும், யாரை நாம் கோபித்துக் கொள்கிறோமோ அவர்கள் செய்கிற தவறுகளை, அதைவிடப் பெரிய தவறுகளைக்கூட செய்தவர் நாம் என்பதும் நம் அந்தராத்மாவுக்குத் தெரியும். அப்படியே நாம் தவறு செய்யாவிட்டாலும்கூட, அந்த மனிதன் அந்தச் சூழ்நிலையில் செய்த தவற்றை நாமும் கூட அந்தச் சூழ்நிலையில் இருந்தால் செய்திருக்கக்கூடும் என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.
குரோதன் நம்முடைய பெரிய சத்ரு. அவனை அண்டவிடாமல் எப்போதும் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.