30 . பண்பாடு – பகுதி ஒன்று

பண்பாட்டின் இதயஸ்தானம்

கலா என்கிற சமஸ்கிருத வார்த்தை, கல்வி என்கிற தமிழ்ச் சொல், கல்ச்சர் என்ற ஆங்கிலப் பதம், கொலே என்கிற பிரெஞ்சு வார்த்தை எல்லாவற்றுக்கும் மூலம் ஒன்றே. கலை சர்வ தேசத்தையும் தழுவுகிற விஷயமாதலால், வார்த்தையும் ஒன்றாகவே இருக்கிறது. ‘கலாஎன்றால் எப்போதும் வளருவது என்று பொருள்சந்திரகலை என்கிறோமே, அதுபோல். பிறை தினந்தோறும் வளர்வது போல் மன வளர்ச்சியைத் தருவது கலை. முடிவே இல்லாமல் வளர்வது இது. ‘கற்றது கைம்மண்ணளவுஎன்று ஸரஸ்வதியே கற்றபடிதான் இருக்கிறாளாம். கலைச்சிறப்பேகல்ச்சர்’. ‘கலாசாரம்என்று இதைச் சமீப காலமாகச் சொல்கிறோம். பண்பு பண்பாடு என்பது பழைய வார்த்தை.

உயர்ந்த எண்ணம் வளர்ந்து வளர்ந்து பல கலைகளாக உருவெடுத்திருக்கிறது. உயர்ந்த எண்ணங்கள் ஒவ்வொருவரிடத்தில் ஒவ்வொரு விதமாக உருவெடுக்கின்றன. சில்ப ரூபமாக, சித்திர ரூபமாக, நாட்டிய ரூபமாக, சங்கீத ரூபமாக, காவிய ரூபமாக, தியாக ரூபமாக, சேவை ரூபமாக, தான ரூபமாக இப்படிப் பல உருவங்களாக உயர்ந்த எண்ணம் வெளிப்படுகிறது. இந்த உயர்ந்த எண்ணம் மிகவும் உயர்ந்து விரிந்து எடுத்துக்கொள்கிற உருவமே, எல்லா உயிர்களிடமும் அன்பு. உலகம் முழுக்க ஒன்றாகிவிட வேண்டும் என்று எண்ணுகிற அன்பில் பிறப்பதே மிகப் பெரிய பண்பாடு. இதுவே நமக்கெல்லாம் தலையாய கலை.

ஒரு தேசத்தின் பண்புக்கு அளவுகோல் எது? ஒரு நாடு என்று இருந்தால், அதில் எல்லோரும் பண்பாளர்களாக (culture) இருக்க முடியாது. திருடன், பொய்யன், மோசக்காரன் எல்லோரும் இருக்கத்தான் செய்வார்கள். இப்படிப் பட்டவர்கள் இருந்தாலும், ‘இந்தத் தேசத்தில் பண்பு இருக்கிறது. கெடுதலானவர்கள் இருந்தாலும்கூட இந்த நாடு பிழைத்துப் போகும்என்று தெரிந்து கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும்? ஒரு நோயாளிக்குப் பல கோளாறுகள் இருந்தாலும் டாக்டர் இருதயத்தைச் சோதனை செய்து பார்த்துவிட்டு, ‘இருதயம் நன்றாக இருக்கிறது; ஆகவே பயமில்லைஎன்கிறார் அல்லவா! அதுபோல் ஒரு தேசத்தில் கோளாறுகள் இருந்தாலும், அதன் பண்பாட்டை உரைத்துப் பார்க்க ஓர் இருதய ஸ்தானம் இருக்கிறதா?

இருக்கிறது. ஒரு தேசத்தின் பண்பு உயர்ந்திருக்கிறது; மனோபாவங்கள் உயர்ந்திருக்கின்றன; அங்கங்கே அழுக்குகள் இருந்தாலும் மொத்தத்தில் அது சுத்தமாக இருக்கிறது என்பதை உரைத்துப் பார்ப்பதற்கு அந்தத் தேசத்து மகாகவிகளின் (இலக்கிய கர்த்தர்களின்) வாக்கே ஆதாரமாகும். ஒரு தேசத்தின் பண்புக்கு இதயமாக அல்லது உரைகல்லாக இருப்பது, அந்த நாட்டு மகாகவியின் வாக்குதான்.

இலக்கிய கர்த்தர்களில் உயர்ந்தவர்கள், மட்டமானவர்கள் எல்லோரும் இருப்பார்கள். இவர்களில் அசுத்தமே இல்லாதவனின் வார்த்தைதான், அழுக்கின் கனம் இல்லாததால் காலப் பிரவாகத்தில் அமுங்காமல், என்றென்றும் மேலேயே விளங்கிக் கொண்டிருக்கும்.அப்படிப்பட்டவனின் வாக்கே நமக்குக் கலாசார விஷயங்களில் பிரமாணமாகும்.

மத ஸ்தாபகர்களின் கருத்துக்கு நிரம்ப முக்கியத்துவம் உண்டு என்பது வாஸ்தவம். ஆனாலும், ஒரு மதத்தை ஸ்தாபிப்பது என்று வரும்போது பிற மதங்களுடைய கொள்கைகளைக் கண்டனம் செய்து, தங்கள் சித்தாந்தத்தையே உறுதிப்படுத்த வேண்டும் என்று ஏற்பட்டுவிடுகிறது. தையல்காரர் மாதிரி, தங்கள் கொள்கையை மட்டும் இறுக்கிப் பிடித்து வைத்துக்கொண்டு, மற்றதை எல்லாம் வெட்டி, தங்கள் கருத்தில் கொஞ்சம் பலவீனமானதற்குக்கூட ஒட்டுக் கொடுத்து தைத்துக் கொண்டு போகவேண்டியிருக்கிறது. வெறுமே இலக்கிய சிருஷ்டியில் ஈடுபட்டிருப்பவனுக்கு இந்தப் பட்ச பாதமான வேலை கிடையாது. மனத்தில் தோன்றியது, கண்ணில்பட்டது, அழகான காட்சி, அழகிய பண்பு இவற்றை விருப்பு வெறுப்பில்லாமல் அவன் சொல்லிக்கொண்டே போவான். ‘தனதுஎன்று எதையும் பிடித்துக் கொள்ளாமல் விஷயத்தை உள்ளபடி பார்த்து (objective –ஆக) பேதமில்லாமல், நடுநிலை கருத்தோடு (impartial –ஆக) சர்வ சுதந்திரமாக திறந்த மனசோடு உள்ளதை உள்ளபடி சொல்வான். உலகம் முழுவதையும் இப்படியே படம் பிடித்துக் காட்டி விடுவான். அதை உலகம் எடுத்துக்கொண்டாலும் சரி, தள்ளிவிட்டாலும் சரி, அதைப் பற்றியும் இலக்கிய கர்த்தாவுக்குக் கவலை இல்லை. பயனை எதிர்ப்பார்க்காதவன் அவன். முதலில் சொன்னது போல் இவன் அழுக்கே இல்லாமல் சுத்தமானவனாக இருந்தால் இவன் மனத்தில் தோன்றுவதே உத்தமமான பண்பு. அதை யாருக்கும் பயப்படாமல் சொல்லிவிடுவான். தன் மனத்தில் உத்தமமாகத் தோன்றாததை இன்னொருத்தருக்கு பயப்பட்டோ பவ்யப்பட்டோ ஒரு கவி சொல்லமாட்டான்.

ஒரு விஷயம் ஒரு நாட்டின் பண்புக்கு உகந்ததுதான் என்று அறிய வேண்டுமானால் அந்தப் பிரமாண வாக்கு (authority) அந்தத் தேசத்தின் இப்படிப்பட்ட மகாகவியின் வாக்குத்தான்.

இன்று உள்ள இலக்கியம் நாளை நிற்குமா என்று நமக்குத் தெரியாது. எனவே, பல காலமாக உரைத்து உரைத்து மக்களுடைய ஜீவனைப் போலவே உறைந்து சாசுவதமாக விளங்கி வந்திருக்கிற காவியங்களை இயற்றியவர்களின் வாக்கையே பிரமாணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். குமாரிலபட்டர், வேதாந்த தேசிகன் போன்ற மத ஸ்தாபகர்களுங்கூடக் காளிதாஸன் மாதிரியான இப்படிப்பட்ட மகாகவிகளின் வாக்கை அதிகார பூர்வமானதாக எடுத்துக் காட்டுகிறார்கள்! அதிலிருந்தே அதன்அதாரிடிதெரிகிறது.

ஸங்கீத லக்ஷியம் சாந்தமே

லோகத்தில் மனசுக்கு ரொம்பவும் ஆனந்தமாகவும் சாந்தமாகவும் இருக்கப்பட்ட பல விஷயங்களுக்கு, அப்பர் ஸ்வாமிகள் ஒருலிஸ்ட்கொடுக்கிறார். இந்திரியங்களுக்கு அகப்படுகிற சுகங்கள்போல இருந்தாலும், நிரந்தரமான, தெய்வீகமான ஆனந்தத்தைத் தருகிற வஸ்துக்களைத் சொல்கிறார். அந்த வஸ்துக்கள் என்ன? முதலில், துளிக்கூட தோஷமே இல்லாத வீணா கானம்; அப்புறம், பூரண சந்திரனின் பால் போன்ற நிலா; தென்றல் காற்று; வஸந்த காலத்தின் மலர்ச்சி; வண்டுகள் ரீங்காரம் செய்து கொண்டிருக்கிற தாமரைத் தடாகம்.

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறைப் பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை இணையடி நீழலே.

இந்திரியங்களால் பெறுகிற இன்பங்களை ஈசுவர சரணாரவிந்த இன்பத்துக்கு உபமானமாக அடுக்கும்போது, “மாசில் வீணைஎன்று சங்கீதத்துக்கே முதலிடம் தருகிறார்.

நல்ல ஸங்கீதம்அதுவும் குறிப்பாக நம்முடைய ஸங்கீதத்துக்கே எடுத்த வீணையோடு கானம்என்றால் அது ஈசுவரனின் பாதத்துக்குத் கொண்டு சேர்ப்பதாகவே இருக்கும். நம் பூர்வீகர்கள் இசையை ஈசுவரனின் சரணங்களிலேயே ஸமர்ப்பணம் பண்ணினார்கள். அந்த இசை அவர்களையும், அதைக் கேட்கிறவர்களையும் சேர்த்து, ஈசுவர சரணாரவிந்தங்களில் லயிக்கச் செய்தது. தர்ம சாஸ்திரம் தந்த மகரிஷி யாக்ஞவல்கியரும்சுஸ்வரமாக வீணையை மீட்டிக் கொண்டு, சுருதி சுத்தத்தோடு, லயம் தவறாமல் நாதோபாஸனை செய்துவிட்டால் போதும்தியானம் வேண்டாம்; யோகம் வேண்டாம; தபஸ் வேண்டாம்; பூஜை வேண்டாம;. கஷ்டமான சாதனைகளே வேண்டாம்இதுவே மோக்ஷத்துக்கு வழிகாட்டிவி்டும்என்கிறார்.

வீணா வாதன தத்வக்ஞச்ருதி ஜாதி விசாரத : |

தாளகஞச்ச அப்ரயதனேன மோக்ஷமார்க்கஸ கச்சதி ||

இதிலே இன்னொரு விசேஷம் சங்கீத வித்வான் மட்டுமில்லாமல், அவன் கானம் செய்வதை வெறுமே கேட்டுக் கொண்டிருக்கிற அத்தனை பேருக்கும், அவன் ஒருத்தன் செய்கிற சாதனையின் பூரண பலனான நிறைந்த திவ்விய சுகம் கிட்டிவிடுகிறது.

வித்யா தேவதையான சரஸ்வதி எப்போதும் வீணாகானம் செய்கிறாள். லௌகிகமான (secular) பாட்டே கூடாது. பகவானைப் பற்றித்தான் பாட வேண்டும். சரஸ்வதியும் பரமேஷ்வரனின் பலவித லீலைகளைப் பற்றித்தான் பாடுகிறாள் என்றுஸெளந்தர்ய லஹரிசுலோகம் சொல்கிறது.

ஆசாரியாள்ஸெளந்தர்ய லஹரியிலஅம்பாள் கழுத்தழகைச் சொல்லும்போது, அவளிடமிருந்து, சங்கீதம் முழுதும் பிறக்கிறது என்பதை வெகு அழகாகச் சொல்லுகிறார் (‘கலே ரேகா; திஸ்ரோஎன்று ஆரம்பிக்கும்) கழுத்திலே மூன்று ரேகைகள் இருப்பது உத்தம ஸ்திரீ லட்சணம். புருஷ லட்சணம் Adam’s apple என்று இங்கிலீஷில் சொல்கிற நெஞ்சிலே இருக்கப்பட்ட உருண்டையான படைப்பு. ஈசுவரன் ஆலகாலத்தை தொண்டையில் கோலிக்குண்டு மாதிரி அடக்கிக்கொண்டார் அல்லவா? ஆண்கள் எல்லோரும் அவனது ஸ்வரூபம் என்பதற்கு அடையாளமாகவே உத்தம புருஷர்களின் தொண்டையில் இப்படி உருண்டை இருக்கிறது. அதே மாதிரி ஸ்திரீகள் யாவரும் தேவீ ஸ்வரூபம் என்பதால் அவர்களுடைய பரம மங்கள சின்னமான கழுத்து ரேகைகள் மூன்றும் உத்தமப் பெண்களிடம் இருக்கிறது. இதை ஆசாரியாள் வர்ணிக்கும்போது, “ஸங்கீதத்தில் ஷட்ஜ கிராமம், மத்தியம கிராமம், காந்தார கிராமம் என்று மூன்று வரிசைகள் (Scale, Gamut) உண்டு. இந்த மூன்று தொகுப்பு(கிராமம்)களிலிருந்துதான் மதுரமான நானாவித ராகங்களும் எழுந்திருக்கின்றன. அம்மா, நீயோ ஸங்கீதத்தின் கதிகளிலும், கமகங்களிலும் மகா நிபுணை. அந்த மூன்று ஸங்கீத கிராமங்களும் உன் கண்டத்திலிருந்துதான் பிறந்தன. அதற்கு அடையாளமாகவே அது ஒவ்வொன்றுக்கும் உரிய ஸ்வரங்கள் தொண்டைக்குள் எந்தெந்த இடத்தில் பிறந்து, எந்தெந்த இடத்தில் முடிகின்றன என்று எல்லை வகுத்துக் காட்டுவதுபோல், வெளிப்பட்ட இந்த மூன்று ரேகைகளும் உன் கழுத்தில் காணப்படுகின்றனஎன்கிறார்.

அத்வைத பரமாசாரியார்களுக்குச் சங்கீதத்தில் எத்தனை பாண்டித்தியம் இருந்தது என்பதும் இங்கே தெரியவருகிறது. ஸங்கீதமே அத்வைதமாக நம்மை மூலத்தோடு கரைப்பதுதான். சாக்ஷாத் அம்பிகை வீணாதாரிணியான சியாமளாம்பிகையாக விளங்குவதாகக் காளிதாஸர்நவரத்தின மாலிகையில்ஸரிகமபதநிரதாம்என்று பாடுகிறார். அவள் பாடுகிற சங்கீதத்தால் அவளுடைய மிருதுவான இருதயமும் அதற்கும் உள்ளே இருக்கிற அத்வைதமான சாந்தமும் (சாந்தாம், மிருதுள ஸ்வாந்தாம்) வெளிப்படுகின்றன என்கிறார். இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால், எத்தனை உணர்ச்சிப் பரவசங்களைத் தூண்டிவிட்டாலும் சாந்தம்தான் சங்கீதத்தின் முடிந்த முடிவாக இருக்க வேண்டும். சங்கீதத்தினாலேயே அன்பு என்கிற மிருதுவான இருதயம் ஏற்படுவதாகவும் தொனிக்கிறது. தசவித கமகங்களைச் செய்கிற சியாமளாம்பிகையான மீனாக்ஷியை வீணை மீட்டிப் பாடிக்கொண்டே, இந்த அன்போடு அன்பாக, சாந்தத்தோடு சாந்தமாகத்தான் முத்துஸ்வாமி தீக்ஷிதர் கரைந்து போனார். தியாகராஜ ஸ்வாமிகளும், பாஷை தெரியாதவர்களுக்கும் கேட்டமாத்திரத்தில் எல்லையல்லாத விச்ராந்தி தருகிறமாதிரி சாம ராகத்தில்சாந்தமுலேக ஸௌக்கியமு லேதுஎன்று பாடியிருக்கிறார். ஈசன் எந்தை இணையடி நீழலில் அப்படியே லயித்துப் போகிற இந்த சாந்தத்தைத்தான் அப்பரும்மாசில் வீணைஎன்பதாக உவமிக்கிறார்.

இசை வழியே ஈசுவராநுபவம்

கல்வித் தெய்வமான சரஸ்வதி கையிலே வீணை வைத்திருப்பது எல்லோருக்கும் தெரியும். பரமேசுவரனின் பத்தினியான சாக்ஷாத் பராசக்தியும் கையிலே வீணை வைத்திருப்பதாகக் காளிதாஸர்நவரத்னமாலாஸ்தோத்திரத்தில் பாடுகிறார். அம்பாள் விரல் நுனியால் வீணையை மீட்டிக் கொண்டிருப்பதாகவும், ஸரிகமபதநி என்ற சப்த ஸ்வரங்களின் ஸாதுரியத்தில் திளைத்து ஆனந்திப்பதாகவும் பாடுகிறார்.

ஸரிகமபதநி ரதாம் தாம்

வீணா ஸங்க்ராந்த காந்த ஹஸ்தாந்தம் |

இப்படி சங்கீதத்தில் முழுகியுள்ள சிவகாந்தா (சிவனின் பத்தினிசாந்தாவாகவும், (அமைதி மயமாகவும்ம்ருதுள ஸ்வாந்தாவாகவும் (மென்மையான திரு உள்ளம் படைத்தவளாகவும்) இருக்கிறாள் என்கிறார் காளிதாஸர். அவளை நமஸ்கரிக்கிறேன் என்கிறார்.

சாந்தாம் ம்ருதுள ஸ்வாந்தாம்

குசபரதாந்தாம் நமாமி சிவகாந்தாம் ||

அவர் சுலோகத்தைச் செய்துகொண்டு போயிருக்கிற ரீதியைக் கவனித்தால், அம்பிகை ஸங்கீதத்தில் அமிழ்ந்திருப்பதாலேயே சாந்த ஸ்வரூபிணியாக ஆகியிருக்கிறாள் என்று தோன்றுகிறது. அதேபோல ஸங்கீத அநுபவத்தினால்தான் அவளுடைய உள்ளம் மிருதுளமாகபுஷ்பத்தைப்போல் மென்மையாக, கருணாமயமாக ஆகியிருக்கிறது என்று தொனிக்கிறது.

சாக்ஷாத் பராசக்தியை இப்படி ஸங்கீத மூர்த்தியாகப் பாவிக்கும்போது அவளுக்கு சியாமளா என்று பெயர். ஸங்கீதத்தில் தோய்ந்து ஆனந்த மயமாகவும், சாந்த மயமாகவும், குழந்தை உள்ளத்தோடும் உள்ள சியாமளாதேவியைத் தியானித்தால், அவள் பக்தர்களுக்குக் கருணையைப் பொழிவாள். அவளது மிருதுவான இதயத்திலிருந்து கருணை பொங்கிக் கொண்டேயிருக்கும். தெய்வீகமான ஸங்கீதம் ததும்பும் சந்நிதியில், சாந்தமும் ஆனந்தமும் தாமாகவே பொங்கும்; சிவகாந்தாவிடம் சரண் புகுந்தால் நமக்கு இந்தச் சாந்தமும் ஆனந்தமும் கைகூடும்.

இந்த சுலோகத்திலிருந்து ஸங்கீதமானது ஆனந்தம், சாந்தம், மிருதுவான உள்ளம், கருணை ஆகிய எல்லாவற்றையும் அளிக்கும் என்று தெரிகிறது.

வேத அத்யயனம், யோகம், தியானம், பூஜை இவற்றைக் கஷ்டப்பட்டு அப்பியசிப்பதால் கிடைக்கிற ஈசுவராநுபவத்தை தெய்வீகமான ஸங்கீதத்தின் மூலம், நல்ல ராக தாள ஞானத்தின்மூலம் சுலபமாகவும் சௌக்கியமாகவும் பெற்றுவிடலாம். இப்படி தர்ம சாஸ்திரம் எனப்படும் ஸ்மிருதியைத் தந்திருக்கும் யாக்ஞவல்கிய மகரிஷியே சொல்லியிருக்கிறார். வீணா கானத்தை அவர் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்.

அப்ரயத்னேன’—கடுமையான பிரயாசை இல்லாமலேஸங்கீதத்தால் மோக்ஷ மார்க்கத்தில் போய்விடலாம் என்கிறார். நம் மனஸைத் தெய்வீகமான ஸங்கீதத்தில் ஊறவைத்து அதிலேயே கரைந்துபோகச் செய்தால் கஷ்டமில்லாமல் ஈசுவரனை அநுபவிக்கலாம். நாம் பாடி அநுபவிக்கும் போதே, இந்த ஸங்கீதத்தைக் கேட்கிறவர்களுக்கும் இதே அநுபவத்தைத் தந்துவிடலாம். வேறு எந்த சாதனையிலும் பிறத்தியாருக்கும் இப்படி ஸமமான அநுபவ ஆனந்தம் தர முடியாது. சங்கீதம் என்ற மார்க்கத்தின் மூலம் தங்கள் இருதயங்களைப் பரமேசுவரனிடம் சமர்ப்பணம் செய்த தியாகராஜர் போன்ற பக்தர்கள், சங்கீதமே சாக்ஷாத்காரத்தைத் தரும் என்பதற்குச் சாட்சியாக இருக்கிறார்கள்.

அம்பாள்தான் பிரம்மத்தின் சக்தி. நாதம் ஈசுவரன் அல்லது பிரம்மம். அம்பாள் சங்கீதத்தில் சொக்கி ஆனந்தமாயிருக்கிறாள் என்றால், பிரம்மமும் சக்தியும் வேறு வேறாக இல்லாமல் ஒன்றிய அத்வைத ஆனந்தத்தையே குறிக்கும். அம்பாள் தன் இயற்கையான கருணையைப் பொழிந்து, ஸங்கீதத்தின் மூலம் அவளை உபாஸிப்பவர்களது ஆத்மா பரமாத்மாவிலேயே கரைந்திருக்குமாறு அருளுகிறாள்.