காந்தர்வ வேதம்
‘அவன் என்ன புரட்டிவிட்டானா?’ என்று சாதாரணமாக ஒரு வழக்கு இருக்கிறது. புரட்டுவதற்கு என்ன இவ்வளவு முக்கியத்துவம்? யோசித்துப் பார்த்தால், முறைப்படி புரட்டுவது ரொம்பவும் பெரிய, அர்த்தமுள்ள விஷயம் என்று தெரிகிறது. அநேக கலைகள் புரட்டுவதினாலேதான் பிறந்திருக்கின்றன.
இத்தனை புஸ்தகங்கள் நம்மிடம் இருக்கின்றன. ஒரு சில எழுத்துக்களைப் புரட்டி புரட்டி வைத்து வார்த்தைகளாக்கியதால்தானே, இத்தனை புஸ்தகங்களும் வந்திருக்கின்றன! நம்மைவிட இங்கிலீஷ்காரர்களுக்கு எழுத்து இன்னும் குறைவு. இருபத்தாறே எழுத்துககளைப் புரட்டிவிட்டு ஏராளமாக எழுதிவிட்டார்கள்! அந்தப் புரட்டலில் ஒரு முறை, ஓர் அழகு இருந்துவிட்டால் கலையாகிறது. நமக்கும் வார்த்தைகள் தெரிகின்றன. கவியும் அதே வார்த்தைகளைத்தான் புரட்டி வைக்கிறான் — உடனே அதில் ரஸம் பிறக்கிறது, கவியைக் கொண்டாடுகிறார்கள்! நாம் வார்த்தையைப் புரட்டி எழுதினால் அதை யார் மதிக்கிறார்? தாகூர் மாதிரி ஒருவர் புரட்டுகிறபடி புரட்டினால் ஏக மதிப்பு உண்டாகிறது. அக்ஷர லக்ஷம் என்கிறார்கள்.
சித்திரக் கலையும் இப்படியேதான். வர்ண பாட்டிலையும் பிரஷ்ஷையும் வைத்துக்கொண்டு நாம் ‘புரட்டுவது’ ரஞ்சகமாக இல்லை. ஆனால் சைத்திரிகன் அதே வர்ணங்களைப் புரட்டுகிறபடி புரட்டினால் அது ஆனந்தம் தருகிறது.
சங்கீதமும் புரட்டல்தான். நாம் எல்லோரும் சத்தம் போடுகிறோம். அந்தச் சப்தத்தை ஸ்வரங்களாகப் பாகுபடுத்தி, இதற்கப்புறம் இது என்று அழகாகப் புரட்டி வைத்தால் இன்பம் உண்டாகிறது. நன்றாகப் புரட்டினால் நிறைய இன்பம்! புரட்டலில் நிபுணனாக இருப்பவனுக்கு ஒரு மணிக்கு இருநூறு முந்நூறு ரூபாய் தருகிறோம். நாம் சத்தம் செய்தால் ஓய வைப்பதற்கு பணம் கொடுக்கலாம்! புரட்டல் இன்பம் இப்படிப்பட்டது.
நமது தொண்டை என்கிற மாமிச வாத்தியத்தில் காற்றைப் புரட்டுகிறோம். தவிர சங்கீத வாத்தியங்கள் பல இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் இந்தப் புரட்டல் மாத்திரம் பொது. தவில், மிருதங்கம், கஞ்சிரா போன்ற சர்ம வாத்தியங்களில் தோலில் புரட்டுகிறார்கள். வீணை, தம்பூர், பிடில் போன்ற தந்தி வாத்தியங்களில் தந்தியில் புரட்டுகிறார்கள். இந்த வாத்தியங்களில் புரட்டுகளுக்கு நடுவே இழைந்து வரும் ‘அநுரணனம்’ என்ற இழைப்பு ஒலி நயமான இன்பம் தருகிறது. ஒருதரம் மீட்டினால் உண்டாகும் ஒலி இழுத்துக்கொண்டே நிற்கிறது. முதல் மீட்டில் உண்டான ஒலி நீடித்து, இரண்டாவது மீட்டில் எழுப்பும் ஒலியோடு கவ்வி நிற்கிறது. இதுவே, அநுரணனம். புல்லாங்குழல், நாயனம் போன்ற துவாரமுள்ள ரந்திர வாத்தியங்களில் காற்றைப் புரட்டுகிறார்கள். ஹார்மோனியமும் ஒருவிதத்தில் ரந்திர வாத்தியந்தான். அதில் வாய்க்குப் பதில் துருத்தி இருக்கிறது. புல்லாங்குழலிலும் நாயனத்திலும் துவாரங்களை விரலால் மாற்றி மாற்றி அடைத்துத் திறக்கிறார்கள் என்றால், ஹார்மோனியத்தில் பில்லைகளை மாற்றி மாற்றி அழுத்தி எடுக்கிறார்கள். தத்துவம் ஒன்றுதான்.
சப்தத்தைப் புரட்டுவதோடு, அங்கங்களைப் புரட்டி விட்டால் நாட்டியக் கலை உண்டாகிறது. சங்கீதத்தில் காதால் கேட்டு அர்த்த ஆனந்தமும், ஸ்வர ஆனந்தமும், பெறுகிறோம். நாட்டியத்தில் இவற்றோடு கண்களால் பார்த்து, ‘அங்கசர்ய ஆனந்தமும்’ (அங்கங்களைப் முறைப்படி அசைப்பதால், புரட்டுவதால் ஏற்படுகிற இன்பமும்) பெறுகிறோம்.
நவரஸ உணர்ச்சிகளை விளக்குகிற அங்க அசைவான அபிநயம் மட்டும் இல்லாமல், நவரஸமில்லாத வெறும் அங்கசரியை (அங்கப் புரட்டு) மட்டுமே ஆனந்தம் தருவது உண்டு என்பதால்தான் ‘நிருத்தம்’ என்ற கலை ஏற்பட்டிருக்கிறது. ஈஸ்வரனுக்குச் செய்கிற அறுபத்துநாலு உபசாரங்களில் சங்கீதத்தோடுகூட, நிருத்தமும் உபசாரமாக சொல்லப்படுகிறது. கீர்த்தனத்தில் சப்தம், அர்த்தம், லயம் யாவும் சேர்ந்து இன்பம் தருகின்றன. ஸ்வரம் பாடும்போது சப்தமும், லயமும் மட்டும் இன்பம் தருகின்றன. ராக ஆலாபனத்தில் வெறும் சப்தம் மாத்திரம் ஆனந்தம் தருகிறது அல்லவா? நிருத்தத்தில் வெறும் அங்கசரியை மட்டும் லயத்தோடு சேர்ந்து ஆனந்தம் தருகிறது.
இந்தக் கலைகள் யாவும் காந்தர்வ வேதம் எனப்படும். கந்தர்வர்கள் உற்சாகப் பிறவிகள். அவர்கள் எப்பொழுதும் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் இருப்பார்கள். மனதுக்கு உற்சாகம் தரும் கலைகளுக்கு இதனாலேயே காந்தர்வ வேதம் எனப் பெயர் ஏற்பட்டிருக்கிறது.
வாக்கின் பயன்
எத்தனையோ விதமான ஜீவராசிகள் இருந்தாலும் மனிதனுக்கு மட்டுமே பரமேசுவரன் பேசும் சக்தியைத் தந்திருக்கிறார். உலகத்தில் அநேக பாஷைகள் இருக்கின்றன. பேச்சிலிருந்து எழுத்துப் பிறந்து, உலகம் முழுவதும் பல லிபிகளும் இருக்கின்றன. வாக்கை மூலதனமாக வைத்தே எங்கு பார்த்தாலும் பள்ளிக்கூடம், காலேஜ், லைப்ரரி, பத்திரிகைகள் எல்லாம் பரவியிருக்கின்றன.
மிருகங்களின் உலகில் காலேஜ் இல்லை, லைப்ரரி இல்லை, பிரிண்டிங் பிரஸ் இல்லை. அவற்றுக்கு வாக்குக் கிடையாது. ஆனால் இவையெல்லாம் இல்லாததால் அவை மனிதனைவிட கஷ்ட நிலையில் இருக்கின்றனவா? அப்படித் தோன்றவில்லை. நமக்கு இருக்குமளவுக்கு அவற்றுக்கு வியாதி இல்லை; அவை சொத்துக்களைச் சேர்த்துக்கொண்டு தவிக்கிறதில்லை; நேற்று என்ன செய்தோம்; நாளைக்கு என்ன செய்வோம் என்ற விசாரம் அவற்றுக்கு இல்லை. அதற்கும் எப்படியோ ஆகாரம் கிடைக்கிறது. ஏதோ விதத்தில் வாழ்ந்து பிழைத்துப் போகிறது. ஒன்றையொன்று அடித்துச் சாப்பிட்டாலும் எல்லா விலங்கு இனங்களும் விருத்தியாகிக்கொண்டே தானிருக்கின்றன.
மனிதப் பிரபஞ்சத்துக்கே வந்தாலும்கூட காலேஜும் லைப்ரரியும், பிரிண்டிங் பிரஸும் இல்லாத ஆதிவாசிகளைப் பார்த்தால் அவர்கள் நம்மைவிட நிம்மதியாகவும் நல்லவர்களாகவும் இருப்பதாகவே தெரிகிறது. ஆப்பிரிக்கக் காடுகளிலும், அமெரிக்காவில் செவ்விந்தியக் காடுகளிலும் காலேஜும், லைப்ரரியும் இல்லாதது போலவே கோர்ட்டுகளையும் காணோம். அதாவது எழுத்தறிவற்ற காட்டுக்குடிகள், நாகரிகமடைந்த நம் போல் இவ்வளவு குற்றம் செய்வதில்லை. நாகரிகமும், அதிக புத்தியும் படைத்த நாம் செய்யத் தகாத செயல்களில் — அகாரியங்களில் — நூதன கற்பனையுடன் விருத்தியடைந்து கொண்டே வருகிறோம். படிப்பு எத்தனைக்கெத்தனை அதிகமோ அத்தனைக்கத்தனை பாபமும் அதிகமாகயிருக்கிறது. நாகரிகத்தால் எத்தனைக்கெத்தனை செல்வத்தைப் பெருக்கிக் கொண்டோமோ, அத்தனைக்கத்தனை அநவரதமும் அதிருப்திப்படும் மனோபாவமும் பெருகியிருக்கிறது. எத்தனை வந்தும் போதவில்லை. தேவை அதிகமாகவே இருக்கிறது. வாக்கும் எழுத்தும் எல்லாவித அகாரியங்களையும் பரப்புவதிலேயே தடபுடலாகப் பிரயோஜனமாகி வருகின்றன. படிப்பு முறை, பத்திரிகைகள், புஸ்தகங்கள் எல்லாம் மனிதனுக்கு நிம்மதியும், நிறைவும் தருவதற்குப் பதில் அவனை அதிருப்தியிலும் அகாரியத்திலும் கொண்டு விடுவதாகவே உள்ளன. மனிதனுக்கு மட்டும் ‘ஸ்பெஷ’லாக ஸ்வாமி தந்திருக்கும் வாக்குச் சக்தி அநுக்கிரகமா, சாபமா என்றே புரியவில்லை.
இதை யோசித்துப் பார்க்கும்போது ஏன் வாயில்லாத மிருக ஜன்மா தாழ்வானது, மனித ஜன்மா உயர்வானது என்று சொல்லி வந்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. ஒரு மிருகம் பிறந்ததிலிருந்து இறக்கிற வரையில் உள்ளுணர்ச்சி (INSTINCT) மீதே நடப்பதால் அதற்குப் புத்தி பூர்வமாகச் செய்கிற பாபம் எதுவும் இல்லை. மனிதன்தான் அவனை ஓயாமல் கணக்கெழுத வைக்கிறான். எவ்வளவுக்கெவ்வளவு படிப்பும் நாகரிகமும் அதிகமோ அவ்வளவுக்கவ்வளவு வஞ்சனை, மோசம், பொய் வேஷம் எல்லாவற்றிலும் நிபுணர்களாகி, சித்ரகுப்தனுக்கு நிறைய வேலை வைக்கிறோம்.
‘நர ஜன்மம் துர்லபம்; அதுவே உயர்ந்தது’ என்பது ஏன் என்று யோசித்தேன். யோசனை செய்ததில் மிருக ஜன்மத்தில் உள்ள பெரிய ஒரு குறை தெரிய வந்தது. மிருகங்களுக்குப் பாபம் இல்லாவிட்டாலும் பயம் இருக்கிறது. எப்போது யார் தன்னைக் கொல்வார்களோ என்ற பிராண பயம் கொடிய மிருகத்துக்கும்கூட நிறைய உண்டு. மனிதனுக்கும் பலவிதமான பயங்கள் உண்டு. ஆனால் பயமில்லாமல் செய்து கொள்ள மனிதனுக்கு மட்டுமே வழி இருக்கிறது. மிருகத்துக்கு இந்த வழி இல்லை. பயம் இல்லாமல் செய்து கொள்வது எப்படி? பிறவி இல்லாமல் செய்து கொண்டால் தான் பயம் இல்லாமல் இருக்கலாம். ‘எல்லாம் நாம்தான்’ என்கிற ஞானம் வந்துவிட்டால் எதனிடமும் பயம் இராது. அந்த ஞானத்துக்குப் பின் சரீரம் விழுந்தால் இன்னொரு சரீரம் எடுக்க மாட்டோம். இந்த ஞானத்தை, அபய நிலையை, ஜன்ம நிவிருத்தியை அடையவே மகான்கள் வாக்கைப் பயன்படுத்தினார்கள். வேத, வேதாந்த, இதிஹாஸ, புராண, தர்ம சாஸ்திரங்கள் எல்லாம் வாக்கு இருப்பதால்தானே உண்டாயின!
பாஷை, லிபி, புத்தி இவற்றுக்கு இப்பேர்ப்பட்ட உயர்ந்த பிரயோஜனம் இருப்பதைப் புரிந்துகொண்டபின் ஆறுதலாக இருந்தது.
பகவான் தந்திருக்கும் புத்தியால், வாக்கால், பிறருக்கோ தனக்கோ கெடுதல் உண்டாகாமல் எவ்வளவோ நல்லது செய்யலாம். பாபமும், துக்கமும், பயமும் நீங்க வாக்கைப் பயன்படுத்தலாம். நாம் அப்படியே செய்ய வேண்டும்.
இதற்கெல்லாம் அடிப்படை பக்தி வாக்கு தெய்வ சம்பந்தமாகப் பயனாக வேண்டும். இதனால்தான் அக்ஷராப்யாச காலத்தில், ஆரம்பிக்கும்போதே ‘நமோ நாராயணாய’ என்று விரலைப் பிடித்து எழுத வைக்கிறார்கள். பகவான், தான் கொடுத்திருக்கும் வாக்கை இவன் எப்படிப் பிரயோஜனம் செய்கிறான் என்று பார்த்துக்கொண்டே இருக்கிறான். லோக க்ஷேமத்துக்கும் ஆத்ம க்ஷேமத்துக்கும் அதைப் பயன் செய்யாவிட்டால், அடுத்த ஜன்மாவில் வாக்கைப் பிடுங்கிக் கொண்டுவிடுவார். அதாவது மிருகமாகப் படைப்பார்.
சொல்லுக்கும் பொருளுக்கும் மூலம் இறைவனே
நம்முடைய கண்ணுக்குத் தெரிவதும் காதுக்குக் கேட்பதுமே உண்மை. இதைத் தவிர வேறு எதுவும் உண்மை கிடையாது. வேத புராணங்களில் சொல்லியிருப்பதெல்லாம் பொய் என்று நினைப்பது மிகவும் தப்பு. இப்போது நம் கண்ணுக்குத் தெரிகிற வஸ்துக்களின் அளவை நம் கண்ணிலுள்ள லென்ஸினால் நிர்ணயித்துக் கொள்கிறோம். இந்த லென்ஸ் பெரியதாகவோ சிறியதாகவோ இருந்தால் நாம் பார்ப்பனவற்றின் அளவும் அதைப் பொறுத்து மாறித்தான் தெரியும். நம்முடைய லென்ஸுக்குள் பிடிபடாத ஒளி அலைகளும் (waves) இருக்கக்கூடும். நம்முடைய காதில் உள்ள டமாரத்துக்குப் (drum) பிடிபடாத ஒலிகளும் இருக்கக்கூடும். நமக்குத் தெரிவதையும் கேட்பதையும் தவிர பிரபஞ்சத்தில் ஏதுமே இருப்பதற்கில்லை என்று நாம் எப்படிச் சொல்ல முடியும்? தெய்வீக சக்திகளைப் பெற்ற மகாபுருஷர்கள் ஞானக் கண் கொண்டு, நமக்குத் தெரியாத திவ்விய காட்சிகளைப் பார்த்து அந்த தெய்வ மூர்த்திகளை வர்ணிக்கிறார்கள். நமக்குக் கேளாத திவ்விய சப்தங்களைக் கேட்டு மந்திரங்களாக்கித் தந்திருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட மகான்கள் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கம் முழுவதையும் பரமேசுவரனின் நாட்டியமாகவே பார்க்கிறார்கள். அதுதான் நடராஜனின் நடனம். ஆடிக்கொண்டிருக்கிற நடராஜனிடமிருந்துதான் சகல சப்தங்களும் பிறக்கின்றன. நடராஜா வெகு வேகமாக நர்த்தம் பண்ணுகிறார். ஆடி நிறுத்துகிற சமயத்துக்கு முந்தி ஜடை விழுதுகள் பாக்கவாட்டில் இருபுறமும் நீட்டி நிற்கின்றன. சலனத்தில் உள்ள வஸ்துவை இந்தக் காலத்தில் ‘ஸ்நாப் ஷாட்’ என்று பேட்டோ பிடிக்கிறார்கள் அல்லவா? அதுபோல் இந்த ஜடை இருபுறமும் நீட்டிக்கொண்டிருக்கும் அவசரத்தைத் தெய்வச் சிற்பி அப்படியே நடராஜ விக்கிரகமாகப் பண்ணி விட்டார். இது நம் கண்ணுக்குத் தெரிகிற நடராஜ மூர்த்தியின் ஸ்வரூபம்.
நம் காதுக்குப் புலனாகிற சப்தப் பிரபஞ்சமும் அவரிடமிருந்தே தோன்றியது. நடராஜா கையில் உடுக்கை இருக்கிறது. அது குடுகுடுப்பாண்டியின் உடுக்கையைவிடப் பெரியது. மாரியம்மன் கோவில் பூசாரி வைத்திருப்பதைவிடச் சிறியது. இந்த உடுக்கைக்கு ‘டக்கா’ மற்றும் ‘டமருகம்’ என்றும் பெயர். நாட்டியம் முழுவதிலுமே பலவிதமாக ஆடி முடிக்கிற சமயத்தில் ஜடை விரித்து நின்றதுபோல், இந்த உடுக்கானது நாட்டியம் முழுவதும் பாத தாளத்தை அநுசரித்துச் சப்தித்துவிட்டு, ஆடலை நிறுத்தின வேகத்தில் படபடவென ஒரு சாப்புத் தொனியை ஒலித்தது. ஸ்வரூபத்தை விஸ்வகர்மா விக்கிரகமாக வடித்ததுபோல் இந்தச் சாப்புத் தொனியை அப்படியே கிரகித்து நந்திகேசுவரர் “மகேசுவர சூத்திரம்” என்று பெயரிட்டார். அந்தச் சாப்புத் தொனியில் பதினாலு சப்தத் தொகைகள் இருந்தன. அவை ‘அ இ உண்’ என்று தொடங்கி ‘ஹல்’ என்று முடியும்.
இந்த ஒலிகளையே வியாகரணத்துக்கு—அதாவது மொழி இலக்கணத்துக்கு மூலமாக வைத்துப் பாணினி மகரிஷி ‘அஷ்டாத்தியாயி’ என்ற நூலை எழுதினார்.
வேதங்கள் நான்கு; அதன் அங்கங்கள் ஆறு; மீமாம்ஸை, நியாயம், புராணம், தர்ம சாஸ்திரம், என்று நாலு — மொத்தம் இந்தப் பதினான்குமே நமது ஸநாதன மதத்தின் ஆதார நூல்கள். இவற்றை சதுர்த்தச (பதினான்கு) வித்யா ஸ்தானம் என்பர். இதற்கு ஏற்றாற்போல் சர்வ வித்தைகளுக்கு ஈசுவரனான நடராஜாவின் டமருகத்திலிருந்தும் பதினாலு சப்தக்கோவைகளே வந்தன. இவை ‘அ’ வில் ஆரம்பித்து ‘ல்’—லோடு முடிவதாகச் சொன்னேன். இதனால் ‘அல்’ என்றாலே இலக்கணச் சாஸ்திரப்படி எல்லா எழுத்துக்களையும் குறிக்கும். இதில் குறிப்பிட வேண்டிய அம்சம், இந்த ‘அல்’ எல்லா பாஷைகளிலும் இருக்கிறது. உருதுவில் ‘அலீஃப்’ என்பது முதல் எழுத்து. கிரீக்கில் ‘அல்ஃபா’ என்பது முதல் எழுத்து. ‘ஆல்ஃபபெட்’ என்று ஆங்கிலத்தில் சொல்வதும் இந்த ‘அல்’லை வைத்துத்தான். இப்படியாக சகல பாஷைகளும் சகல சப்தங்களும் ஈசுவரனிடமிருந்தே பிறந்திருக்கின்றன.
இதைப்பற்றி யக்ஞ நாராயண தீக்ஷிதர் சமத்காரமாக ஒரு சுலோகம் செய்திருக்கிறார். ‘பாணி’ என்றால் கை, ‘நாதம்’ என்றால் ஒலி. ‘பாணி நிநாதம்’ என்றால் (நடராஜர்) கையால் செய்த ஒலி என்று அர்த்தம். அதுவே ‘பாணினி’ மகரிஷி செய்த (நாத பாஷை) சாஸ்திரமாயிற்று. வியாகரணத்துக்கு பாஷ்யம் செய்தவர் பதஞ்சலி. இவர் ஆதி சேஷ அவதாரம். ஆதிசேஷன் நடராஜரின் காலைப் பாதசரமாகச் சுற்றியிருக்கிறார். நடராஜாவின் கையிலுள்ள உடுக்கிலிருந்து சப்தம் வந்தது. அவரது காலில் உள்ள பதஞ்சலி அதற்கு விளக்கம் தந்திருக்கிறார். அதனால், நடராஜா கையையும் காலையும் ஆட்டினாலே ஸகல பாஷா சாஸ்திரமும் உண்டாகிவிடுகிறதென்று கவி சொல்கிறார்.
இதன் உட்பொருள் சப்தம், அதன் அர்த்தம் இரண்டுக்கும் ஈசுவரனே மூலம் என்பதேயாகும். இதை உணர்ந்து விட்டால் நாம் வாக்கை வீணாக்கமாட்டோம். நாம் எழுதுவது பேசுவது எல்லாம் நம்மையும் பிறரையும், ஈசுவர பரமாக நினைக்கச் செய்து உயர்த்தவே பயனாகும்.