34 . கர்ம மார்க்கம் – பகுதி இரண்டு

சீலம் உண்டாக வழி

நல்ல சீலம், குணங்கள் வரவேண்டுமென்றால் நம் வேத சாஸ்திரங்களில் சொல்லியுள்ள காரியங்களைச் செய்ய வேண்டும். நல்ல ஆசாரங்கள் இருக்க வேண்டும். நல்ல அநுஷ்டானம் இருக்க வேண்டும். மனசு நன்றாக இருந்தால்தான் சீலம் வரும். எல்லோருக்கும் நல்ல மனசாக இருக்க முடியவில்லை. கெட்டது என்பதே மனசில் புகாதபடி நல்லதே உள்ளம் முழுவதும் நிரம்பியிருந்தால்தான் சீலம் வந்ததாக அர்த்தம்.

எல்லோருக்கும் மனசு மிகவும் நன்றாக இருக்க முடியாது. இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டாலும் முடியவில்லை. வீட்டிலே இருக்கிற குழந்தை சதா ஏதோ விஷமம் பண்ணிக் கொண்டிருக்கிறது. கத்தரிக்கோலை எடுத்து நல்ல துணிகளை, முக்கியமான காகிதங்களை நறுக்கிவிடுகிறது. செடிகளை வெட்டிவிடுகிறது. இப்படித் துஷ்டத்தனம் பண்ணுகிறது. அதையே பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிவிட்டால், ‘இத்தனை மணிக்குள் போக வேண்டும். இன்ன இன்ன பாடங்களை அதற்குள் எழுதிவிட வேண்டும், திரும்ப இத்தனை மணிக்குத்தான் வரமுடியும், வந்தால் இதைச் செய்ய வேண்டும்என்று அதற்கு ஒரு கட்டுப்பாடு வந்துவிடுகிறது. முன்பு காணப்பட்ட விஷம குணங்கள் எங்கோ போய் விடுகின்றன. பள்ளிக்கூடம் இல்லை, லீவுநாள் என்றால் மறுபடியும் விஷம குணங்கள் தலைகாட்டுகின்றன. அதேபோல் நாம் கெட்ட எண்ணத்திலும் காரியத்திலும் ஈடுபட அவகாசம் இன்றி, நல்ல காரியங்களை ஒரு விதிப்பிரகாரம், ஒழுங்கு தப்பாமல் செய்வதுதான் முக்கியம். இதற்குத்தான் சாஸ்திரங்கள் நமக்கு விதிகள் போட்டிருக்கின்றன.

நல்ல சீலங்கள் உண்டாக வேண்டுமானால் துர்க்குணங்கள் நிவிருத்தியாக வேண்டும். துர்க்குணங்கள் நிவிருத்தியாக நல்ல கர்மாநுஷ்டானங்களைச் செய், பூஜை பண்ணு, (சகல ஜீவராசிகளுக்கும் ஆகாரம் கொடுப்பதான) சைச்வதேவம் பண்ணு, அதிதிகள் வந்தால் ஸத்காரம் (விருந்தோம்பல்) பண்ணு என்று பல விஷயங்களைச் செய்யச் சொல்கிறது சாஸ்திரம். இதன்படி செய்துவந்தால் கெட்ட காரியங்களுக்கு நேரமே இல்லாமல் போய்விடும். கர்மாநுஷ்டானங்களைப் பண்ணுகிறபோதும்நாம் பண்ணுகிறோம்என்ற அகம்பாவத்தோடு பண்ணக்கூடாது. பண்ணக்கூடிய சக்தியை நமக்கு ஈஸ்வரன் கொடுத்தான், பண்ண வேண்டும் என்ற புத்தியைக் கொடுத்தான். அதற்கு வசதியும் கொடுத்தான் என்று நினைத்து, ஈசுவரார்ப்பணமாகப் பண்ணு என்று நமது வைதிக மதாசாரியர்கள் விதித்து வழிகாட்டினார்கள். துளி அகம்பாவம் வந்துவிட்டால் போச்சு! அது எத்தனையோ வேஷங்களைப் போட்டுக்கொண்டு, நாம் கொஞ்சம் அசந்து மறந்து இருந்தாலும் வந்து பிடித்துக்கொண்டு விடும்.

கண்ணாடியில் பார்க்கிறோம். அழுக்காக இருந்தால் பார்க்க முடிகிறதா? சுத்தமாகத் துடைத்துவிட்டுப் பார்த்தால் நன்றாகத் தெரியும். சுத்தமாகத் துடைத்த கண்ணாடிதான் என்றாலும்கூட, அது ஆடிக் கொண்டிருந்தால் பிம்பம் விளங்காது. கண்ணாடி சுத்தமாகவும் இருக்க வேண்டும். ஆடாமல் நிலையாகவும் இருக்கவேண்டும். சுத்தமான ஆடாத கண்ணாடியாக இருந்தால்தான் உண்மை பிரகாசிக்கும்; சித்தம் என்பது கண்ணாடி போன்றது. பரம்பொருள் ஒன்றே உண்மை. கெட்ட எண்ணம் தோன்றாவிட்டால் சித்தக்கண்ணாடி சுத்தமாகும். ஒன்றிலேயே அதை ஈடுபடுத்தினால் அது ஆடாமல் நிலைத்த கண்ணாடியாகும். அப்போதுதான் பரமாத்மா அதில் பிரதிபலிப்பார்.

இந்த உலகத்தை எல்லாம் படைக்கிறவன் யார்? நமக்கெல்லாம் இவ்வளவு அன்ன, வஸ்திர, சௌக்கியங்களைக் கொடுக்கிறவன் யார்? அருட்கடலாக இருப்பவன் யார்? அவனைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நாம் விரும்பினால் நம்முடைய சித்தத்தை அழுக்கு இல்லாமல் ஆடாமல் வைத்துக் கொள்ள வேண்டும்.

தாமிரச் செம்பு கிணற்றில் பத்து வருஷங்கள் கிடந்து விட்டது என்றால் அதை எத்தனை தேய்த்தாக வேண்டும்? எவ்வளவுக்கு எவ்வளவு தேய்க்கிறோமோ, அவ்வளவுக்கு அது வெளுக்கிறது. சுத்தமாகிறது. இவ்வளவு வருஷ காலம் எத்தனை கெட்ட காரியங்களைச் செய்து நம்முடைய சித்தத்தில் அழுக்கை ஏற்றிக் கொண்டு விட்டோமோ, அந்த அழுக்கைப் போக்க அத்தனை நல்ல காரியங்களைச் செய்து தேய்க்க வேண்டும். நல்ல கர்மாநுஷ்டானங்களைச் செய்ய வேண்டும். அதனால் சித்த சுத்தி வரும். நல்ல சீலங்கள் உண்டாகும்.

சரி, இன்றைக்குச் செம்பைத் தேய்த்து வெள்ளை வெளேர் என்று ஆக்கிவிட்டோம் என்றால் சரியாகிவிட்டதா? நாளைக்கு அதற்கு மறுநாள் என்று மறுபடியும் அதைத் தேய்க்காமலிருந்தால் என்ன ஆகும்? மறுபடியும் அழுக்காகிறது. இதேபோல் நம் சித்தத்தையும் விடாமல் அநுஷ்டானத்தால் சுத்தம் செய்து கொண்டேயிருக்கவேண்டும். அப்புறம் ஒரு நிலை வந்துவிட்ட பின்தான் இந்தச் சித்தம் என்பதே ஓடிப்போய்விடும். ஆத்மா மட்டும் நிற்கும். சித்தமே இல்லாத அப்போதுதான் அதை சுத்தம் செய்கிற காரியமும் இல்லாமல் ஆகும். அதுவரை இந்தச் சுத்தப் படுத்துகிற காரியத்தைச் செய்து சீலங்களை வளர்த்துக் கொள்ள வேண்டியதே.

ஸம்ஸாரே கிம் ஸாரம்?

 ‘இந்த ஸம்ஸார வாழ்வில் என்ன சாரம் இருக்கிறது?’ என்று நம் ஆசாரியாள், ‘பிரச்னோத்தர ரத்ன மாலிகாவில் ஒரு கேள்வி போடுகிறார், ‘கிம் ஸம்ஸாரே ஸாரம்?’ என்று கேட்கிறார். (ஸம்ஸாரேஸம்ஸாரத்தில்; கிம்என்ன; ஸாரம்சாரம் இருக்கிறது?) அதற்குப் பதிலும் சொல்கிறார்: ‘அப்பா, இப்போது இப்படிக் கேள்வி கேட்டாய் அல்லவா? இதை எப்போதும் கேட்டுக்கொண்டே இரு. அதுவே ஸம்ஸாரத்தின் ஸாரம்என்கிறார்பஹுச: அபி விசிந்த்யமானம் இதம் ஏவ.

அதாவது, ‘நாம் பிறந்ததற்கு என்ன பிரயோஜனம்? எதற்காகப் பிறந்தோம்?’ என்று அடிக்கடி நினைக்க வேண்டும். அந்தப் பிரயோஜனத்தை அடைவோமா என்று நினைக்க வேண்டும். ‘நமக்கு ஏன் பாபம் வருகிறது? கோபம் வருகிறது? காமம் வருகிறது? இவையெல்லாம் ஏன் வர வேண்டும்? எப்போதும், ஆனந்தமாக, சந்தோஷமாக இருக்கக்கூடாதா’ — என்று தோன்றுகிறது. இதற்குப் பதில் ஒன்றும் நமக்குப் புரியவில்லை.

எல்லாம் நல்லதற்குத்தான். ஒரு மரத்திலே புஷ்பத்திலிருந்துதான் காயும் பழமும் உண்டாகின்றன. புஷ்பமாக இருக்கும்போது மூக்குக்கும் பழமாக இருக்கும்போது நாக்குக்கும் ரஸமாக இருக்கின்றன. பழம் நல்ல மதுரமாக இருக்கிறது. இந்த மதுரம் வருவதற்கு முன்பு எப்படி இருந்தது? பூவில் கசப்பாகவும், பிஞ்சில் துவர்ப்பாகவும், காயில் புளிப்பாகவும், பிறகு மதுரமாகவும் ஆகிறது. மதுரம் என்பதுதான் சாந்தம். சாந்தம் வந்தால் எல்லாப் பற்றும் போய் விடுகிறது. பழத்தில் மதுரம் பூராவாக நிரம்பிய உடனே கீழே விழுந்து விடுகிறது. அதுபோல் இருதயத்தின் எல்லா இடத்திலும் மதுரம் வந்துவிட்டால் தானாகவே எல்லாப் பற்றும் போய்விடும். புளிப்பு இருக்கும்வரை பற்று இருக்கும். அப்போது காயைப் பறித்தால் காம்பில் ஜலம் வரும். காயிலும் ஜலம் வரும். அதாவது மரமும் காயை விட்டுவிட விரும்பவில்லை; காயும் மரத்திலிருந்து விடுபட விரும்பவில்லை. ஆனால் நிறைந்த மதுரமாக ஆகிவிட்டால் தானாகவே பற்றும் போய்விடும்! பழம் தானே இற்று விழுந்துவிடும். மரமும் பழத்தை விடுகிறது; பழமும் மரத்தை விடுகிறது. இரண்டும் ஜலம் விடாமல்அதாவது அழாமல்ஆனந்தமாகப் பிரியும். படிப்படியாக வளர்ந்து மனம் முழுவதும் மதுரமயமான ஒவ்வொருவனும் இப்படியே ஆனந்தமாக சம்ஸார விருட்சத்திலிருந்து விடுபட்டு விடுவான். பழமாக ஆவதற்குமுன் ஆரம்ப தசையில் எப்படிப் புளிப்பும் துவர்ப்பும் வேண்டியிருக்கின்றனவோ அதுபோலக் காமம், வேகம், துடிப்பு எல்லாமும் வேண்டியவைதாம் போலிருக்கிறது!

இவற்றுக்கு நாம் ஆரம்ப தசையில் ஆட்படும்போதே, இவற்றிலிருந்து பூரணமாக விடுபட முடியாது. ஆனாலும், இவையெல்லாம் ஏன் வருகின்றன என்று அடிக்கடி நினைத்தாவது பார்க்க வேண்டும். ‘இப்போது இன்ன உணர்ச்சி வந்ததே! ஆசை வந்ததே! கோபம் வந்ததே! பெருமை வந்ததே! பொய் வந்ததே! இதனால் ஏதாவது பிரயோஜனம் உண்டா? இந்த உணர்ச்சி அவசியமாக வருகிறதா? அநாவசியமாக வருகிறதா?’ என்று நினைத்துப் பார்க்க வேண்டும். அப்படி நினைக்கவில்லையென்றால் அவை நம்மை ஏமாற்றி விடும். ஏமாந்து விடுவோம்.

புளிப்பு இருக்கவேண்டிய சமயத்தில் புளிக்க வேண்டும்; துவர்ப்பு இருக்கவேண்டிய சமயத்தில் துவர்க்க வேண்டும்.

ஆனாலும், அந்தந்த நிலையோடு நிற்காமல் பிஞ்சு அனவரதமும் பழமாகிக்கொண்டே இருப்பதுபோல் நாமும் மேலும் மேலும் மாதுரி்யமான அன்பையும் சாந்தத்தையும் நினைத்துக் கொண்டேயிருக்க வேண்டும். இப்படிச் செய்து வந்தால் நாமாகப் போய் மோக்ஷத்தைத் தேடவேண்டாம். எந்தக் காலத்தில் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருந்தால், தானாக மோக்ஷம் என்கிற மதுர நிலை வந்துவிடும். அப்படியில்லாமல் தகாத பருவத்தில் முயற்சி செய்தால் பிஞ்சிலே பழுத்த மாதிரிதான். அது வெம்பல்தான். அதில் மதுரம் இருக்காது. “வெம்பி விழுந்திடுமோ?” என்று இராமலிங்கர் பாடின மாதிரி நாம் வெம்பிப் போவதில் ஒரு பிரயோஜனமும் இல்லை.

இப்போது நாம் இருக்கிற மாதிரி, கண்டதே காட்சி என்று இருக்கிறதும் தப்பு; அதற்காக, நாம் தீர்க்க வேண்டிய கர்மா மூட்டை ஏகமாக இருக்கிற இப்போதே, நமக்கும் பரம ஞானம் உடனே வந்துவிட வேண்டும் என்று தவியாகத் தவித்து ஆத்திரப்படுவதும் தப்பு.

நாம் இப்போதே பரம ஞானம் வேண்டுமென்று அதைத் தேடிப்போக வேண்டாம். இந்த ஜன்மத்திலே வரவில்லை என்றால் எத்தனை ஜன்மம் கழித்தாவது வரட்டும் என்று கருதி, நம் கடமைகளைச் செய்து கொண்டிருப்போம். நம்முடைய வேதம் விதிக்கிறபடி தர்மத்தை அநுஷ்டானம் பண்ணுவோம். அப்படிச் செய்தால் படிப்படியாகப் பரம ஞானமும் தானே வந்துதான் ஆகவேண்டும். இப்போது நமக்கு வெளிக்காரியங்கள், வெளி வேஷங்கள்தானே தெரிகின்றன. அதனால் மத சம்பந்தமாகவும் வெளிக் காரியங்களாக இருக்கிற சடங்குகள், வெளியே போட்டுக்கொள்கிற சமயச்சின்னங்கள் இவற்றிலேயே ஆரம்பிப்போம். படிப்படியாக பக்குவமாகி, பிஞ்சாகி, காயாகி, கனியாகிய உள்ளேயிருக்கிற தத்துவத்துக்குப் போவோம்.