ஸ்வாமி
ஒரு வீட்டைப் பார்த்தால் அதைக் கட்டியவன் ஒருவன் இருக்க வேண்டும் என்று ஊகிக்கிறோம். இன்ன எஞ்சினீயர் கட்டினார் என அறிகிறோம். ஒரு வண்டியைப் பார்த்தால் அதைச் செய்த ஒருவன் இருக்க வேண்டும் என்று ஊகிக்கிறோம். விசாரித்துப் பார்த்தால் இன்ன தச்சன் செய்தான் என்று அறிகிறோம். ஒரு வீடு அல்லது ஒரு வண்டி என்றால் அதில் பல விஷயங்கள் ஒன்றுக்கொன்று இசைவாக சேர்ந்து அமைந்திருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட பிரயோஜனத்தை உத்தேசித்து அவை இவ்வாறு உருவாகியிருப்பது தெரிகிறது. எனவே, ‘இந்த வீடு, இந்த வண்டி ஏதோ தானாகவே அகஸ்மாத்தாக (accidental) உண்டாகிவிடவில்லை; இதை உத்தேசத்தோடு ஓர் அறிவே செய்திருக்கிறது’ என்று ஊகிக்கிறோம். ஒரு ஒழுங்குக்குக் கட்டுப்பட்டுப் பல வஸ்துக்களைப் சேர்த்து உண்டாக்கியிருக்கிற எதைப் பார்த்தாலும் அதைச் செய்தவன் ஒருவன் இருக்க வேண்டும் என்று ஊகிக்கிறோம்.
அப்படியானால் எத்தனையோ ஒழுங்குகளுக்குக் கட்டுப்பட்டிருக்கும் இந்தப் பிரபஞ்சத்தைச் செய்தவனாக ஒருவன் இருக்கத்தானே வேண்டும்? எத்தனையோ வேறு வேறு விதமான வஸ்துக்களைப் பலவிதங்களில் சேர்த்து வைத்து, பலவிதமான பிரயோஜனங்களை உண்டாக்கிக் கொண்டிருக்கிற இயற்கையை, லோக வாழ்க்கையைப் பார்க்கிறபோது, இவைகளை எல்லாம் இந்த உத்தேசத்துக்காகவே உண்டாக்கி, இவற்றை நடத்தி வருகிற ஒரு மகா பெரிய சக்தி இருக்கத்தான் வேண்டும் என்று தெரிகிறது.
நாம் உட்கார்ந்திருக்கும் இந்தக் கொட்டகையை யார் போட்டார்கள் என்றால் சொல்லத் தெரிகிறது. இந்த வாழை மரத்தை யார் செய்தார்கள்? கண்ணில் காட்டும்படியாக அதைச் செய்தவனைச் சொல்லத் தெரியவில்லை. ஆனாலும் ஒருவன் அதைச் செய்திருக்கிறான். அதனால்தான் இப்படி பட்டை பட்டையாகக் கணக்குப் பிசகாமல் உள்ளுக்குள்ளே அடுக்கிக்கொண்டே இந்த வாழை உண்டாகியிருக்கிறது. எந்த ஆயுதத்தை வைத்துக் கொண்டு அந்த ஒருவன் இத்தனை அழகாகப் பட்டைகளை அடுக்கினான் என்றால் தெரியவில்லை. இப்படியே அந்த மலையை, இதோ மேலே உள்ள நக்ஷத்திரங்களை, சந்திரனைச் செய்தவனை நம்மால் காட்ட முடியவில்லை. இவையெல்லாம் எத்தனையோ காலம் முன்னால் உண்டானவை. செய்தவனை எப்படிக் காட்டுவது, என்று கேட்கலாம். சரி, இந்த ரோஜாப் புஷ்பம் இருக்கிறதே, இது அந்த வாழையை விடச் சமீபத்தில் உண்டானதுதான். முந்தாநாள் சிறு மொட்டாக இருந்தது. இப்போது அழகிய பூவாகியிருக்கிறது. இதில் நூற்றுக்கணக்கான இதழ்கள், ஒவ்வொன்றிலும் நுண்ணிய நரம்புகள், வாசனை எல்லாம் வந்திருக்கின்றன. நம் கண்முன்னமே இது மலர்ந்தது. ஆனாலும் மலர்த்தினவனை நமக்குத் தெரியவில்லை.
மனிதன் எல்லாம் தெரிந்த கெட்டிக்காரன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஒரு காட்டு மிருகம் சென்னைப் பட்டணத்தைச் சுற்றி வந்தால் எதுவுமே தனக்குத் தெரியவில்லை என்று எப்படி ஆச்சரியப்பட்டுப் பார்க்குமோ, அப்படித்தான் இந்தப் பிரபஞ்சத்தில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம். மனிதனைவிடக் கெட்டிக்காரனாக ஒருவன் அவனை இப்படி வைத்திருக்கிறான்.
அத்தனை ரோஜாப் பூக்களும் ஒரே தர்மத்தில் மலர்வதால், அத்தனை மலைகளும் ஒரே தர்மத்தில் நிலைத்து இருப்பதால், அத்தனை நக்ஷத்திரங்களும் ஒரே தர்மத்தில் சுற்றுவதால், இந்தச் சகலத்தையும் செய்தவன் ஒரே எஞ்ஜினீயர் என்று தெரிகிறது. ஒரே ரீதியில், காரண காரிய விதியில், பிரபஞ்சம் முழுதும் கட்டுப்பட்டிருப்பதால், இதைச் செய்தது ஒரே அறிவு எனத் தெரிகிறது.
கெட்டிக்காரன் என்று தன்னை நினைத்துக் கொண்டிருக்கும் மனிதன், இத்தனையையும் இவனையும் செய்த அந்த மகா கெட்டிக்காரனைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், அவன் மகா கெட்டிக்காரன் மட்டுமல்ல, மகா நல்லவனுங்கூட, இத்தனையைத் திட்டமிட்டுப் படைத்த பேரறிவு என்பதோடு, இத்தனையையும் ரக்ஷிக்கும் பெரும் கருணையும் அவன். நமது கெட்டிக்காரத்தனம் அவன் தந்ததே என்று தெரிந்துகொண்டு அவனிடம் பிரார்த்தித்து கொண்டால் நமக்கு அவன் நல்லது செய்வான்.
அவன்தான் ஸ்வாமி, ஸ்வாமி என்பவன்.
இந்த நமது கெட்டிக்காரத்தனமே அவனுக்கு ஓர் அடையாளம்தான். கள்ளனைக் கண்டுபிடிக்க மண்ணில் பதித்த காலடிச் சுவடு இருக்கிறதுபோல், உள்ளம் கவர் ‘கள்வ’னான ஸ்வாமியின் காலடி, பிரபஞ்சத்தின் எல்லா இடத்திலும் பதிந்து கிடக்கிறது. நம் கெட்டிக்காரத்தனமும் அவனது காலடி அடையாளம்தான். இந்தக் கெட்டிக்காரத்தனத்துக்கெல்லாம் ஓர் ஆதாரம் இருக்க வேண்டும் என்று அது காட்டிக் கொடுப்பதால் அதுவே காலடியாகிறது.
சிருஷ்டிகார்த்தனாக ஒரு ஸ்வாமி இருப்பதற்கு நாமே அடையாளம். நாம் ஒவ்வொருவர் உள்ளங்கையிலும் அவன் தினுசு தினுசாகப் போட்டுள்ள ரேகை மாதிரி நம்மால் போட முடியுமா? இந்தப் பட்டணம் முழுவதிலும் அநேகம் மனிதர்களின் கெட்டிக்காரத்தனத்தால் செய்துள்ள காரியங்களைவிட அதிகமாக ஒரு சிறு இலையில் போட்டிருக்கிற ரேகைகளில் விசித்திரம் செய்திருக்கிறான் அவன். பிரபஞ்ச வஸ்து எல்லாமே அந்த மகா திருடனின் ரேகை அடையாளம்தான், திருடன் பதுங்கியிருப்பதுபோல் இவனும் பதுங்கியிருப்பவன்தான். அவன் குகைக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறான் என்றே வேதம் திரும்பத் திரும்பத் சொல்லும்.
நம் இதயம்தான் அந்தக் குகை. நமக்குள்ளேயே ஒளிந்து கொண்டு நமக்கு வெளியே இத்தனை அற்புதங்களைச் செய்து, நம்மை ஆச்சரியப்படுத்தித் தன்னை தேட வைக்கிறான் ஸ்வாமி. அப்படி அவனைத் தேடுகிறதுதான் பக்தி.
ஸ்வாமி என்றால் என்ன?
ஸ்வாமி என்றால் என்ன? ‘ஸ்வம்’ என்கிற வார்த்தைக்கு ‘உடைமை’, ‘சொத்து’ என்று அர்த்தம். ‘ஸ்வம்’ என்பதே தெலுங்கில் ‘ஸொம்மு’ என்றாகியிருக்கிறது. ‘ஸொம்மு’ என்றால் ‘சொத்து’. ஸ்வந்தம் – நமக்குச் சொந்தமானது – அதுவே நம் சொத்து. கோயிலைச் சேர்ந்த சொத்தைக் கேரளத்தில் ‘தேவஸ்வம்’ என்கிறார்கள் அல்லவா? உடைமைக்கு சொந்தக்காரர் யாரோ அந்த உடையவர்தான் ‘ஸ்வாமி’. ஸ்வாமி என்பதற்கு நேர் தமிழ் வார்த்தை ‘உடையார்’ என்பது. முன் காலத்தில் கோயில் சுவர்களில் வெட்டப்பட்ட கல்வெட்டுக்களிலெல்லாம் ‘திருச்சிற்றம்பலமுடையார்’, ‘திருவேங்கடமுடையார்’, ‘திருநாகேச்சுரமுடையார்’, ‘கபாலீசுவரமுடையார்’, என்பது போலவே ‘உடையார்’ என்ற பெயரில்தான் தெய்வங்களைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
குருவும் ஸ்வாமியும் ஒன்று என்பதால்தான் வைஷ்ணவர்கள் ஸ்ரீ ராமாநுஜரை ‘உடையவர்’ என்றே சொல்கிறார்கள்.
‘ஸ்வாமி’ என்றால் சொத்துக்கு உரிமைக்காரர் என்றேன். எந்தச் சொத்து? சகலப் பிரபஞ்ஜமும்தான். அதிலுள்ள நாமும் அவன் சொத்துத்தான். உள்ளதனைத்தும் அவன் ஒருவனுக்கே உடைமையாகும். ‘எல்லாம் என் உடைமையே’ என்று தாயுமானவரும் பாடினார். நம் சொத்து, பிறர் சொத்து என்றெல்லாம் பாத்தியதை கொண்டாடுகிறோமே, உண்மையில் இந்தச் சொத்தெல்லாம்– அவற்றுக்குப் பாத்தியதை கோரும் நாம், பிறர் எல்லோருமே – அவனுடைய சொத்துதான். அவன் இல்லாவிட்டால் இந்தப் பிரபஞ்சமும் இல்லை, நாமும் இல்லை. நாம் பாத்தியதை கோருகிற சொத்துக்களும் இல்லை.
நாம் வீடு, வண்டி போன்ற சில சொத்துக்களைப் புதிதாக உண்டாக்கினதாக நினைக்கிறோம். விஞ்ஞானிகள் புதிது புதிதாக இயந்திரங்கள் செய்கிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் அடிப்படையில் எந்த மூலப்பொருள்களை வைத்துக் கொண்டு செய்கிறோமோ, அவை ஸ்வாமி செய்ததுதான். நாம் அவர் சொத்தை எடுத்து வேறு ஒரு ரூபத்தில் மாற்றுகிறோமே தவிர புதிதாக எதுவும் செய்யவில்லை. ‘மூலப்பொருளை (element) செய்’. ‘அணுவை (atom) உண்டாக்கு’ என்றால் எந்த விஞ்ஞான நிபுணராலும் அது முடியாத காரியம். இத்தனை மெஷின்கள், குண்டுகள் செய்கிற விஞ்ஞானியால் ஒரு சின்னஞ்சிறிய இலையைச் செய்ய முடியுமா?
எல்லாவற்றையும் செய்கிற ஒரே ஒருத்தருக்குத்தான் அவையெல்லாம் சொந்தம். அதனால்தான் அவர் உடையவர், ஸ்வாமி என்று அழைக்கப்படுகிறார். நாமும் அவரது உடமைகள்தான். நம் சொத்து என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பதை நம் இஷ்டப்படி விநியோகிக்க உரிமை பெற்றிருக்கிறோம் அல்லவா? அப்படியே ஸ்வாமியின் சொத்தாகிய நாமும், நம்மை அவன் இஷ்டப்படி நடத்தட்டும் என்று விட்டுவிட்டால் நமக்கு எந்த பாரமும் இல்லை. ஒரே ஆனந்தம்தான்.
இப்போது, ‘நான், நான்’ என்று எதையோ சொல்லிக்கொண்டு அலைகிறோமே, உண்மையில் இது அவனுக்குதான் சொந்தம் என்று புரிந்து கொண்டுவிட்டால் அப்புறம் நாமாகக் கிடந்து அலையமாட்டோம். நமக்கென்று சொந்தமாக ஒரு ஆசையும் ஒரு துவேஷமும் பாராட்டுவதற்கு உரிமை இல்லை என்று தெரிந்து கொண்டு விட்டால், அப்புறம் ஒரு அலைச்சலும் இல்லை. ஒரே நிம்மதிதான்! ‘ஸ்வாமி’ என்கிற வார்த்தையே, நமக்கு நம்மிடமே எந்த சொந்தமும் இல்லை. நாம் அவன் தன்னிஷ்டப்படி விநியோகிக்க உரிமை பெற்றிருக்கிற அவனுடைய சொத்துத்தான் என்பதை உணர்த்துவதாக அமைந்திருக்கிறது. இப்படி உணர்வதுதான் பக்தியின் பரம லக்ஷியமான சரணாகதி என்பது.