39 . பக்தி – பகுதி ஐந்து

ஆலயமும் தெய்வீகக் கலைகளும்

இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன் இந்தியாவுக்கு வந்த மெகஸ்தனிஸ் அப்போது நம் ஜனங்கள் எவ்வளவு ஸத்துக்களாக வாழ்ந்தார்கள் என்பதைத் கூறியிருக்கிறான். ‘இந்திய மக்களுக்குப் பொய்யே சொல்லத் தெரியாது; தெருவில் போட்டுக் கிடக்கிற பணத்தைக்கூட எடுத்துச் செல்ல மாட்டார்கள்என்றெல்லாம் மெகஸ்தனிஸ் சொல்லியிருக்கிறான். அந்தக் காலத்து ஜனங்களின் மனசு மாதிரியே இப்போதும் இருக்கக்கூடாதா என்று ஆசையாக இருக்கிறது.

அன்றைக்கு அவர்கள் அவ்வளவு உயர்வாக இருந்ததற்குக் காரணம் என்ன? இன்று நாம் இவ்வளவு தாழ்ந்து போய்விட்டதற்கு காரணம் என்ன? அந்தந்தக் காலத்தின் சூழ்நிலையே அந்தந்த மனப்பான்மைக்கும் காரணமாக இருக்கிறது. பழங்காலத்தில் பொது ஜனங்கள் எல்லோரும் கோயிலுக்குப் போனார்கள். அங்கே அவர்களுக்கு நல்வழி கூறுவதற்காக மகாபாரதம் முதலிய ஸத் கதைகள் நடைபெற்றன. இதற்காகவே ராஜாங்கத்தில் மானியம் தரப்பட்டு வந்தது. நாடகம், கூத்து எல்லாமும்கூடத் தெய்வ சம்பந்தமாகவே இருந்தன. தங்கள் தொழிலைச் செய்வது, ஆலய தரிசனம், ஸத் கதை சிரவணம் இவற்றுக்கே மக்களின் பொழுது சரியாக இருந்தது. இதனால் யோக்கியர்களாகவே இருந்தார்கள். இப்போது ஜனங்களைக் கவர்ந்திழுப்பதற்கு என்ன என்னவோ ஆபத்துக்கள் எல்லாம் வந்து விட்டன. தர்மத்துக்கு விரோதமான படக்காட்சிகள், கதைப் புஸ்தகங்கள் எல்லாம் அதிகமாகி விட்டன. ஜனங்கள் இதற்கிடையில் தத்தளித்துக் கொண்டிருக்கும் போது பலவிதமான அரசியல் கட்சிகள் வேறு அவர்கள் புத்தியைக் கலக்கிக் கொண்டிருக்கின்றன. எங்கேயும் சஞ்சலம், அதிருப்தி, யோக்கியதைக் குறைவு, லஞ்சம் இவை அதிகரித்துவிட்டன.

பழைய காலத்தில் ராஜாவின் மானியத்துடன், பாரதம் முதலான ஸத் கதை நடந்தபோது, தலைமுறை தத்துவமாக அது செழித்து வளர்ந்தது. இப்போது ஹரிகதை, உபந்நியாசம் செய்கிறவர்கள் தங்கள் தலைமுறையோடு அது போகட்டும் என்று நினைக்கிறார்கள். அதேபோல் அர்ச்சகர்கள் தங்கள் தலைமுறையோடு அர்ச்சனைத் தொழில் போகட்டும் என்று எண்ணுகிறார்கள். முன்பு அரசர்கள் தெய்வ பக்தியை வளர்த்து எங்கு பார்த்தாலும் சாஸ்திரோக்தமாக ஆலயங்கள் கட்டியதால் ஆகம சாஸ்திர வித்வான்கள், சிற்பிகள், ஸ்தபதிகள் ஆகியோர் வம்சாவளியாக சுபிட்சமாக வாழ்ந்தனர். இன்றைய சூழ்நிலையிலோ இவர்கள் யாவரும் தங்களோடு இந்தத் தொழில் தொலையட்டும் என்று நினைக்கும்படியாகி விட்டது. ஈசுவர சம்பந்தத்துடனேயே ஆயிரம் காலப் பயிராக வளர்ந்த நாட்டுக்கலைகளும் இப்போது மங்குகின்றன. துரௌபதி அம்மன் கோயிலில் உடுக்கடித்து பாரதம் சொல்கிறவன், கரகம் ஆடுகிறவன், அரிச்சந்திரன் கூத்துப் போடுபவன் எல்லோரும் அடுத்த தலைமுறையை இந்தத் தொழிலில் பழக்கவில்லை. நாட்டுக் கலைஞர்களுக்கு, முன்பு ராஜாங்க மானியம் கிடைத்து வந்தது. இப்போதுபழைய கிராமப் பண்பாடு’ (Folk Culture) என்று பெரிதாகப் பேசினாலும், ஏதோ அவ்வப்போது மந்திரிமார்களே அந்த மாதிரி வேஷம் போட்டுக்கொண்டு கிராமிய நடனக்காரர்களோடு ஃபோட்டோ எடுத்துக்கொண்டு பத்திரிக்கையில் பிரசுரமாகிறது தவிர, இந்தக் கலைஞர்களுக்கு மானியம் மாதிரி எதுவும் இல்லாமல் இந்தக் கலைகளும் நசிகின்றன.

கோயில்களும் அவற்றைச் சேர்ந்த இந்தக் கலைகளும் ஓங்கி வளர்ந்த நாளில் தேசம் எப்படி இருந்தது என்று மெகஸ்தனிஸ்சர்டிஃபிகேட்கொடுத்திருக்கிறான். இவை எல்லாம் மங்கிப்போயிருக்கிற இன்றைக்குத் தேசம் எப்படி இருக்கிறது என்பதையோ பிரத்யக்ஷமாகவே பார்க்கிறோம். எங்கே பார்த்தாலும் பொய்யும், சஞ்சலமும், கலப்படமும், அதர்மமும் மிகுந்துவிட்டன.

இவை நிவிருத்தியாக வழி ஒன்றுதான்; பழைய காலத்தைப்போலக் கோயில்களைச் சமூக வாழ்வின் மத்திய ஸ்தானமாக்கிவிட வேண்டும். அன்றுபோல் இப்போதும் தெய்வ சம்பந்தமான பழங் கலைகளை வளர்க்க வேண்டும்.

க்ஷேத்திரங்களில் மகா புருஷர்கள் உண்டாக்கிய சாந்நித்யத்தை மந்திரங்களாலும் ஆகம சாஸ்திர விதிகளாலும் ரட்சித்து வரவேண்டும். ஆலயங்களில் சாந்நித்தியம், அங்கு ஆகம சாஸ்திரமறிந்த ஸ்தபதிகள் மூலம் திருப்பணி, கோயிலில் எப்போதும் ஸத்கதா சிரவணம், கிராம தேவதைக் கோயில்களில் பூசாரியின் பாரதக் கதை இவற்றை ஏற்படுத்தி விட்டால் அர்ச்சகர்களுக்கும் சிற்பிகளுக்கும் மற்றக் கலைஞர்களுக்கும் வாழ்வு தருவதோடு, தேசத்துக்கே நல்ல வாழ்வு தந்ததாகும். நம் தேசம் ஒன்று நன்றாய் இருந்து விட்டால் போதும். லோகம் முழுதும் அதனிடமிருந்து சகல க்ஷேமங்களையும் பெற்றுக் கொண்டு விடும்.

ஆலயமும் ஆஸ்பத்திரியும்

 ‘மனிதர்களுக்குச் சேவை செய்வதே பகவானுக்குச் செய்கிற பூஜை. தனியாக பகவத் தியானம், பூஜை எதுவும் வேண்டாம்என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சிலர் கோயில்கள் முதலிய வழிபாட்டிடங்கள் வேண்டியதில்லை என்றும், அவற்றை வைத்தியசாலைகளாகவும் பள்ளிக்கூடங்களாகவும் மாற்றிவிட வேண்டும் என்றும் சொல்கிறார்கள். மனிதர்களுக்கு ஆறுதல் தருவது, நோய்ப்பிணி போக்குவது, கல்வியறிவு தருவது எல்லாம் பரம உத்தமமான பணிதான். அதில் பகவான் நிச்சயமாக ப்ரீதி அடைகிறான் என்பதும் ரொம்ப உண்மைதான். ஆனால் யோசித்துப் பார்க்கும்போது மனித சேவையே பகவத் சேவைஎன்பதையே திருப்பி வைத்துச் சொல்வதும் ரொம்ப உண்மை தெரிகிறது. அதாவது பகவத் சேவை செய்வதும் மனிதர்களின் நன்மைக்காகத்தான் என்று தெரிகிறது. அதுவே மற்ற சமூக சேவைகளைவிட மனிதனுக்கு நிரந்தர நலனைத் தருவதுமாகும்.

ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளை சொஸ்தம் செய்து அனுப்புகிறோம். அப்புறம் அவர்கள் நல்லவர்களாக வாழ வேண்டாமா? லோகத்துக்குக் கெடுதல் செய்கிறவர்களாகவும், தங்களுக்கே அநர்த்தம் செய்து கொள்பவர்களாகவும், அவர்கள் இருந்தால் அவர்களை சொஸ்தப்படுத்தியதன் பயனை நாம் அடைய முடியுமா? புத்திக் கோளாறு உள்ளதாகச் சொல்லப்படும் பலரை என்னிடம் அழைத்து வந்து சொஸ்தப்படுத்த வேண்டும் என்று கேட்கிறபோது நான் இந்த ரீதியில்தான் உள்ளுக்குள் நினைத்துக் கொள்கிறேன். அதை அப்போது அவர்களிடம் சொன்னால், என்னிடம் ஆறுதல் தேடி வருகிறவர்களுக்கு மனசு கஷ்டப்படும், அதனால் சொல்வதில்லை. இப்போது பொதுவாகச் சொல்கிறேன்: புத்தி பூர்வமாக ஒரு தவற்றை செய்தால்தான் அது பாபமாகிறது. ஆனபடியால் புத்தி தங்கள் வசத்திலேயே இல்லாமல் சித்தப் பிரம்மம் பிடித்தவர்கள் செய்கிற எந்தச் செயலிலும் பாபம் இல்லை. ஏதோ பூர்வ பாபத்துக்காக அவர்கள் இப்படியாகியிருக்கிறார்கள். ஆனால் இப்போது அவர்களுக்குப் பாபமில்லை. நாம் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதுபோல் சித்தப் பிரம்மை பிடித்தவர்கள் பேசுவதில்லை. மனிசில் எது வருகிறதோ அதையே சொல்கிறார்கள். ஏன் இவர்களையும்சொஸ்தப் படுத்துவது என்கிற பெயரில் மற்றவர்களைப்போல் ஆக்கி, இவர்களுக்கு பாபம் சேரும்படியாகப் பண்ண வேண்டும் என்று எனக்குத் தோன்றுவதுண்டு.

ஆஸ்பத்திரி வைத்து உடல் வியாதியைத் தீர்ப்பது போதாது. நோயாளிகளது மனஸில் கெட்ட எண்ணங்கள் என்ற வியாதி இல்லாமல் செய்வதே அதைவிட முக்கியம். இவ்வாறேதான் பள்ளிக்கூடம் வைத்துப் படிப்பை விருத்தி செய்கிறோம். படித்து வெளிவந்தவர்கள் யோக்கியர்களாக இல்லாவிட்டால் பள்ளிக்கூடம் வைத்த பயன் நமக்கு ஏது! பக்தி, கட்டுப்பாடு, தியாகம் முதலானதுகள் இல்லாமல் படிப்பால் வெறும் புத்தியை மட்டும் வளர்த்துக் கொண்டால், சாதூரியமாக அயோக்கியத்தனங்கள் செய்தும் தப்பித்துக் கொள்வதற்குத்தான் வழியாகிறது. வித்யாசாலையோடும் வைத்யசாலையோடும் மநுஷ்யனின் வாழ்வு முடிந்து விடுகிறதில்லை. அவன் நல்லவனாக இருக்கவேண்டும் என்பதுதான் லட்சியம். இப்படி நல்லவவனாக்குகிற நிலையங்களாக ஆலயங்களும், ஆஸ்பத்திரி, ஸ்கூல் போலவேஆஸ்பத்திரியை, ஸ்கூலை விடவும்அவசியம் இருக்கத்தான் வேண்டும். நாம் நல்லவர் ஆவதற்காக பகவத் தியானம், பூஜை இவைதான் அவசியம் இருக்க வேண்டியவை.

மனிதனின் உடம்புக்கு ஆரோக்கியம் தருவது, புத்திக்குப் படிப்புத் தருவது அவனுடைய தரித்திரத்தை நீக்கிச் செல்வச் சுபிட்சம் தருவது எல்லாவற்றையும்விட அவனை பகவானிடம் சேர்ப்பதே பேருபகாரம். நாமும் பகவானிடம் மனஸைச் செலுத்தி, தியானம், பூஜை இவைகளை அநுஷ்டித்தால்தான் மற்றவர்களை இவற்றில் ஈடுபடுத்த நமக்கு யோக்கியதை உண்டாகும். அப்போதுதான் நாம் செய்கிற பரோபகாரம் சக்தியோடு பலன் தரும்.

மனிதனையே தெய்வமாக நினைத்து அவனுக்குச் சேவை செய்வது சிலாக்கியம்தான். ஆனால் நாம் அப்படி நினைப்பதோடு நிற்காமல் அவனே உண்மையாகத் தன் தெய்வீகத்தைக் கொஞ்சமாவது தெரிந்து கொள்ள நாம் ஆலயங்களை அவசியம் பேண வேண்டும்.

நல்லவனாவதற்குப் பக்தி தேவையில்லை என்று ஒரு வாதம். ஆனாலும் நடைமுறையில் பலவிதமான சுயநல ஆசைகளால் ஆட்டி வைக்கப்படுகிற ஜீவனைப் பரிசுத்தப்படுத்துவதற்கு பக்தியைப்போன்ற சாதனம் வேறு இல்லவே இல்லை. ‘பகவான் என்று ஒருவன் சர்வ சாட்சியாகவும் சர்வசக்தனாகவும் இருந்துகொண்டு நம் கர்மங்களுக்குப் பலன் தருகிறான்என்கிற பயபக்தி உணர்ச்சிதான் யுக யுகாந்திரமாக மனிதனைத் தர்ம மார்க்கத்தில் நிறுத்துவதற்குப் பெரிய ஊன்று கோலாக இருந்து வந்திருக்கிறது.

பக்தியின் லட்சியம் நல்லவனாக ஆக்குவது மட்டுமல்ல. நமக்குக் காரணமான சக்தியைத் தெரிந்துகொண்டு, அதற்கும் நமக்கும் பேதமில்லை என்ற பரம ஞானத்தை அடைந்து, சம்ஸாரச் சூழலிலிருந்தே தப்புவதே பக்தியின் லட்சியம். அதோடு, வெளி உலகத்துக்கு நல்லவனாக நடக்கவும்கூட அதுவே வேறெந்த உபாயத்தையும்விட மிகுந்த சக்தியுடன் உதவி புரிகிறது. கோபுரம் கட்டி எல்லார் கண்களிலும் படவைத்து பகவானை ஞாபகமூட்டுவதைவிட பெரிய சமூக சேவை இல்லை.

ஐம்புலன்கள் ஐந்து உபசாரங்கள்

பிரபஞ்சத்தில் உள்ள சகல வஸ்துக்களையும் அநுபவிப்பதற்காக மனிதனுக்குக் கண், காது, மூக்கு, நாக்கு, சருமம் ஆகிய ஐந்து இந்திரியங்கள் இருக்கின்றன. பஞ்ச இந்திரியங்கள் என்று இவற்றைச் சொல்வார்கள். ரூபத்தைக் கிரகிப்பது கண். சப்தத்தைக் கிரகிப்பது காது. கந்தத்தை (மணம்) கிரகிப்பது மூக்கு. ரஸத்தை (சுவை) கிரகிப்பது நாக்கு. ஸ்பரிசத்தைக் கிரகிப்பது சருமம். இந்த ஐம்புலன்களும் புதிதாக ஒன்றை உண்டாக்கவில்லை. வெளியே உண்டாகி இருக்கிற சப்த, ஸ்பரிச, ரூப, ரஸ, கந்தங்களை இவை உணர்கின்றன. ரேடியோ ஸெட் மின்ஸார சப்த அலைகளைப் பிடிப்பது போல் இவை எப்படியோ வெளியில் இருப்பவற்றை அறிந்து பிடித்துக்கொண்டு மூளைக்கு அனுப்பி வைக்கின்றன. காரியம் செய்து புதிதாக ஒன்றைப் படைக்காமல், வெறுமே கிரகித்து நமக்கு அறிவிப்பதால், இந்தப் புலன்களுக்கு ஞானேந்திரியங்கள் என்று பெயர். கை, கால் போல காரியம் செய்கின்ற புலன்களுக்கு கர்மேந்திரியங்கள் என்று பெயர். நாக்கு ஞானேந்திரியமாக இருந்து ரஸத்தை உணர்வதோடு, பேச்சு என்று காரியத்தால் புதிதாக சப்தத்தைப் படைக்கவும் செய்வதால் கர்மேந்திரியமாகவும் இருக்கிறது.

ஞானேந்திரியங்களான ஐம்புலன்களுக்கும் ஆசிரயமாக இருப்பனவே பஞ்ச பூதங்கள் என்கிற ஆகாயம், காற்று, தீ, நீர், மண் ஆகிய பிரபஞ்ச சக்திகள். சப்தம் மட்டுமே ஆகாசத்தில் உண்டு. ஓம்கார நாதமாகிய பிரணவம் ஆகாயத்தில் நிரம்பியிருக்கிறது. பலர் கூடியிருக்கிற இடத்தில் பல தினுசான பேச்சுச் சப்தம் உண்டானாலும்என்ற ஓசையொன்றே கேட்கிறது. சமுத்திரம்என்கிறது. ஒரு சங்கைக் காதில் வைத்துக் கொண்டால்சப்தம்தான் கேட்கும். “ஏன்என்று கத்துகிறாய்?” என்றுதான் கேட்கிறோம். ‘வுக்கு ஒரு புள்ளி வைத்து முடித்தால்ஓம்இதுதான் எங்கும் இருப்பது. வாயுவில் சத்தத்தோடு ஸ்பரிசமும் இருக்கிறது. நம்மீது காற்றுப்பட்டால் நமக்குக் காற்றுதான் படுகிறது என்று புரிகிறது அல்லவா? நெருப்புக்கு ஸ்பரிசத்தோடு ரூபமும் இருக்கிறது. தீயைக் கண்ணால் பார்க்க முடிகிறது. ஜலத்துக்கு இவற்றோடு ரஸம் (சுவை) என்பதும் உள்ளது. அதை நாம் நாக்கில் விட்டுக்கொண்டு குடிக்கிறோம். மண்ணுக்கு மணமும் உள்ளது. மண் என்றால் மண்ணில் விளைகிற எல்லாம் அதில் அடங்கும். நாம் கண்டும் கேட்டும், ருசித்தும், தொட்டும், முகர்ந்து பார்த்தும் இவற்றையெல்லாம் அநுபவிக்கிறோம்.

ஐம்புலன்களே நமக்கு வாழ்வின் சகல ஆனந்தத்தையும் சாத்தியமாக்குகின்றன. நல்ல சாப்பாடு, ரம்மியமான சங்கீதம், சுகந்தம், குளிர்ந்த தென்றல், பூரண சந்திரனின் காட்சி இவை நமக்கு ஐம்புலன்களாலே அநுபவத்துக்கு வருகின்றன. மனிதனுக்கு இந்த ஐம்புலன்களைத் தந்து, இவற்றுக்கு ஆகாரமாக வெளியே ஐம்பூதங்களிலிருந்து தோன்றும் சுவை, மணம் முதலிய அழகுகளையும் வைத்திருப்பவர் ஸ்வாமி. அவரது கிருபையால்தான் சகல இன்பங்களும் கிடைக்கின்றன. நம்மால் ஒரு மணி அரிசி சிருஷ்டிக்க முடியாது. ஸ்வாமியே இந்தப் பிரபஞ்சத்தை சிருஷ்டித்து, அதன் அழகுகளை நாம் அநுபவிப்பதற்காக நமக்கு பஞ்ச இந்திரியங்களையும் சிருஷ்டித்துத் தந்திருக்கிறார். ஆனபடியால் நமது புலன்களால் அநுபவிக்கும் இன்பங்களை ஸ்வாமியின் நினைவோடு அநுபவிப்பதே நமது கடமையும் தர்மமுமாகும்.

அவருக்கு இந்த இன்பங்களை முதலில் அர்ப்பித்து அவரது பிரஸாதமாகவே இவற்றை நாம் ஏற்க வேண்டும். இந்த வழக்கம் நிலைப்பட்டால் ஸ்வாமிக்கு அர்ப்பணம் செய்யத்தகாத எந்தப் பொருளையும் நமது புலன்களால் அநுபவிக்கக் கூடாது என்ற பக்குவம் உண்டாகும்.பஞ்சேந்திரியங்களால் அநுபவிக்கும் பிரபஞ்ச வஸ்துக்களைப் பரமேசுவரனுக்கு அர்ப்பணம் பண்ணும் மனோபாவனையில் பிறந்ததுதான் பஞ்சோபசாரம் என்கிற ஐந்து உபாசாரங்கள். கோயிலிலும் வீட்டுப் பூஜையிலும் ஸ்வாமிக்குக் குறைந்தது ஐந்து உபசாரம் செய்யவேண்டும். ஸ்வாமியின் விக்கிரகத்துக்குச் சந்தனமிடுவது, புஷ்பம் போட்டு அர்ச்சிப்பது, தூபம் காட்டுவது, தீபாராதனை செய்வது, நைவேத்தியம் பண்ணுவது ஆகியனவே பஞ்சோபச்சாரங்கள். இவற்றில் சந்தனமிடுவது கந்தம் – பிருதிவி தத்துவம் என்ற மண்ணைக் குறிப்பது. புஷ்பம் ஆகாயத்தைக் குறிப்பது. தூபம் வாயுவைக் குறிப்பது. தீபம் அக்னியைக் குறிப்பது. நைவேத்தியம் அமிருதமாகிய நீரைக் குறிப்பது, எனவே பஞ்ச பூதங்களும் பஞ்சோபசாரத்தில் அடக்கம். பஞ்ச பூதங்களிலிருந்துதான் பஞ்சேந்திரியங்களின் அத்தனை நுகர்ச்சி வஸ்துக்களும் உண்டாகின்றன. ஆகவே, பஞ்சோபசாரத்தில் ஈசுவரன், பிரபஞ்சம், ஜீவன் எல்லாம் ஒன்றுபடுத்தப் பெறுகின்றன.