நாம மகிமை
தியானம், ஜபம், பூஜை, யக்ஞம், க்ஷேத்திராடனம் ஆகியவற்றைப் போலவே நம் தேசத்தில் நீண்ட காலமாக பகவந்நாமாக்களைக் கோஷ்டியாகப் பாடி பஜனை செய்கிற பழக்கமும் இருந்து வந்திருக்கிறது. இந்த ஜீவாத்மாவானது பரமாத்மாவுடன் தொடர்பு கொள்வதற்கு ஒரு பெரிய உபாயமாக நாம பஜனை தொன்று தொட்டு தேசத்தில் அநுஷ்டிக்கப்பட்டு வந்திருக்கிறது. அநேகமாகக் கிராமம், நகரம் எல்லாவற்றிலும் பஜனை மடம், அல்லது பஜனைக்கூடம் என்றே ஒன்று காணப்படுவதிலிருந்து, பஜனை பத்ததி நம் நாட்டில் எவ்வளவு செழிப்பாக இருந்திருக்கிறது என்று ஊகிக்கலாம். இந்த பஜனை மடங்களில் சனிக்கிழமை தோறும், ஏகாதசி தோறும் ஜனங்கள் எல்லோரும் சேர்ந்து பஜனை செய்வார்கள்.
கோயில்களில் பூஜையைப் பார்க்கிறோம்; தெய்வத்தைத் தியானிக்கிறோம். பஜனையிலோ நாமே வாய்விட்டுத் தெய்வத்தின் நாமங்களையும், குணங்களையும், லீலைகளையும், பாடி ஈசுவரபரமாக மனஸை ஈடுபடுத்துகிறோம். பலர் சேர்ந்து கொண்டு சமுதாய வாழ்க்கை அடிப்படையில் பக்தி செய்கிற சிறப்பு பஜனைக்கு உண்டு. அவரவரும் ஆத்ம க்ஷேமத்தை அடைந்து, அதனாலேயே ஜீவ கோடிகளுக்கு க்ஷேமத்தைத் தரவேண்டும் என்று, தனி மனிதர் அடிப்படையிலேயே (individual basis) ஹிந்து மதம் முக்கியமாக அமைந்திருந்தாலும், கோயில், உத்ஸவம், பஜனை இவற்றில் கூட்டு வழிபாட்டு முறை (congregational worship)யும் இருக்கிறது.
இன்னிசையுடனும், வாத்திய கோஷத்துடனும் செய்கிற பஜனை எல்லா உள்ளங்களையும் சுலபமாக இழுத்து பகவத் ஸ்மரணத்தில் செலுத்துகிறது. ‘ரகுபதி ராகவ ராஜாராம்’, ‘ஹரே ராம ஹரே ராம ராம ஹரே ஹரே’ என்பது போல் சுலபமான வார்த்தைகளை மதுரமான சங்கீதத்தோடு கலந்து செய்கிற பஜனையால் எளிதாகத் தெய்வத்தை நினைவு கொள்ள முடிகிறது.
பஜனைக்கூடம் என்ற ஓர் இடத்தில் அமர்ந்து பஜனை செய்வதோடு, நகர சங்கீர்த்தனம் செய்கிற பழக்கமும் உண்டு. வைகுண்ட ஏகாதசி போன்ற புண்ணிய காலங்களில் ஜனங்கள் எல்லோரும் பகவந்நாமாக்களை பஜனை செய்தபடி வீதி வீதியாகச் செல்வதுதான் நகர சங்கீர்த்தனம் எனப்படுவது. விசேஷமாக மார்கழி மாதத்தில் தினந்தோறும் அதிகாலையில் இப்படி வீதி வீதியாக பஜனை செய்து ஊர் முழுவதும் திவ்விய நாமங்களைப் பரப்புவதுண்டு.
இந்த நல்ல பழக்கம் மறுபடியும் நன்றாக உயிர் பெற்று வளரவேண்டும். கிராமங்களில் உள்ள பஜனை மடங்களில் பகவந்நாமம் இல்லாமல் வெறுமையாகப் போகவிடக்கூடாது. சமீப காலத்தில் பஜனை முறை நன்றாக விருத்தியடைந்து வருவதைப் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. நம் வேதம், ஆகமம், ஆசாரம் எல்லாம் ரொம்பவும் க்ஷீணமாகப் போயிருக்கிற இந்த நாளிலும் நம் மத அம்சமாக ஏதாவது ஒன்றாவது க்ஷீணிக்காமல், தினந்தினம் விருத்தியாகி வருகிறது என்றால் அது நாம பஜனைதான். இன்று நம் மதத்துக்காக ஒவ்வொர் ஊரிலும் இருக்கிற ஸத்சங்கமே பஜனைக் கோஷ்டிதான். அந்த மட்டும் சந்தோஷம்.
பகவானிடம் பக்தியை விருத்தி செய்வதில் பகவானின் நாம சங்கீர்த்தனமும், பகவத் குணங்களைப் பாடுவதும் முக்கியமான ஸ்தானம் பெற்றுள்ளது. ஸ்ரீபகவந்நாம போதேந்திரர்கள், “ஸதாநந்த ஸ்வரூபியான பரமாத்மா ஜகத்தின் க்ஷேமத்தைக் கருதித் தனிப்பெரும் கருணை கூர்ந்து ஸ்ரீ விஷ்ணு, ஸ்ரீ பரமேசுவரன் முதலிய ரூபங்களை எடுத்துக் கொண்டான். உலகை உய்விக்க அந்த மூர்த்திகள் மட்டும் போதாது என்று கருதி, ‘ஹரி’ ‘சிவ’, முதலிய நாமங்களாகவும் ஆகி, அவற்றில் எப்போதும் விழித்துக் கொண்டிருக்கிறான்” என்கிறார். அதாவது, நாமங்கள் வெறும் பெயர் மட்டுமல்ல. மூர்த்தியைப்போல அவையும் ஸாக்ஷாத் பகவானே. பகவானுக்கு உள்ள அத்தனை சக்தியும் நாமத்துக்கு உண்டு.
இவ்வாறு நாம சங்கீர்த்தனத்தின் மூலம் பகவத் ஸ்வரூபத்தை சாக்ஷாத்காரம் செய்த புண்ணிய புருஷர்களின் முகாரவிந்தத்திலிருந்து உற்பத்தியான புனித கீதங்களைப் பாடுவதால், பாபம் விலகி, புண்ணியம் கை கூடுகிறது. ஜயதேவர், தீர்த்த நாராயணர், ராமதாஸர், புரந்தர தாஸர், தியாகப்பிரம்மம், ஸதாசிவப் பிரம்மேந்திராள் ஆகியோரின் கீதங்கள், தமிழ்ப் பாடல்கள், ஹிந்தி, மகாராஷ்டிர பக்தி கீர்த்தனம் எல்லாம் மருதாநல்லூர் ஸத்குரு ஸ்வாமிகள் வகுத்துத் தந்த பத்ததியான சம்பிரதாய பஜனையில் பாடப்படுகின்றன. டோலோத்ஸவம், கொட்டனோத்ஸவம், வஸந்த கேளி என்றெல்லாம் பஜனையைப் பெரிய திருவிழாவாகக் கொண்டாடுவார்கள். கஷ்டமான சாதனையாக இல்லாமல், ஆனந்தமாக ஆடிப்பாடிக்கொண்டு பகவதநுபவத்தில் இருப்பதற்கு இதெல்லாம் வழிகள். பாகவதாதி சாஸ்திரங்களிலேயே, எந்தச் சிரமமான சாதனையும் செய்யச் சக்தியும் சௌகரியமும் இல்லாத கலிகாலத்தில், நாம ஸங்கீர்த்தனம்தான் மோக்ஷ உபாயம் என்று சொல்லியிருக்கிறது: கலௌ ஸங்கீர்த்ய கேசவம்.
பலர் சேர்ந்து பண்ணுகிற பஜனை ஒருபுறம் இருக்கட்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள அனைவரும் மாலை வேளைகளில் வீட்டிலேயே ஒரு பத்து நிமிஷமாவது பகவந் நாமங்களைப் பாடி பஜனை செய்ய வேண்டும். இதில் காரிய சாத்தியமில்லாத சிரமம் எதுவும் இல்லை. குடும்பத்தினர் எல்லோரும் பூஜை அறையில் – அல்லது பூஜைக்கென்று அறை இல்லாவிட்டால், ஒரு குத்து விளக்கை ஏற்றி வைத்து அதன் முன் உட்கார்ந்து கீர்த்தனங்களைப் பாடவேண்டும். நாமாவளிகளை கானம் செய்ய வேண்டும். அவரவர்களும் தங்களுக்குரிய நித்ய கர்மாநுஷ்டானங்களை விடாமல் செய்துவிட்டு, அதோடு பஜனையும் செய்ய வேண்டும். பகவானைப் பாடுவதற்கு வெட்கமே வேண்டாம். கருணையே உருவான கடவுளின் நாமத்தைச் சொல்வதில் வெட்கத்துக்கு இடம் ஏது? பெரிய சங்கீத ஞானம், ராக பாவம், சாரீர வசதி இல்லாவிட்டாலும் பரவாயில்லை. பக்தி பாவனைதான் முக்கியம். ஏதேதோ விளையாட்டுகளில் திரிந்து கொண்டிருக்கிற குழந்தை அம்மாவின் நினைப்பு வந்ததும், அவளிடம் வந்து, ‘அம்மா அம்மா’ என்று கத்துகிறதல்லவா? அதில் வெட்கமோ, சங்கீத அழகோ இல்லை. லோக மாதாவான பரமாத்மாவை லௌகிக வியாபாரங்களிடையே சிறிது நேரமாவது நினைத்து இப்படியே ராமா, கிருஷ்ணா, சிவா, அம்பா என்று கத்த வேண்டும். இந்தப் பழக்கம் ரொம்பவும் நல்லது. நம் நித்திய க்ஷேமத்தையும், ஆனந்தத்தையும் பெருக்கவல்ல பெரிய நிதி இது.
நமஸ்காரம்
பரமேசுவரன் மீது ஒரு சுலோகம் இருக்கிறது. அதில் பக்தர் இப்படிச் சொல்கிறார்.
“திரிபுர சம்ஹாரம் செய்த பிரபுவே! நீ என்னுடைய இரண்டு அபராதங்களை க்ஷமிக்க வேண்டும். அந்த இரண்டு அபராதங்கள் என்ன? போன ஜன்மத்தில் நான் உன்னை நமஸ்கரிக்காதது ஓர் அபராதம். வரப்போகிற ஜன்மத்தில் உன்னை நான் நமஸ்கரிக்காமல் இருக்கப்போவது இரண்டாவது அபராதம். போன ஜன்மத்தில் நான் உன்னை நமஸ்கரிக்கவில்லை என்று எப்படித் தெரிகிறது என்கிறாயா? எனக்கு இப்போது ஒரு ஜன்மம் ஏற்பட்டிருப்பதிலிருந்தே அது தெரிகிறது. போன பிறவியில் உன்னை நமஸ்கரித்திருந்தால் அப்போதே எனக்கு மோக்ஷம் கிடைத்திருக்கும். இந்த மறு பிறவியே ஏற்பட்டிராது. அது சரி, அடுத்த ஜன்மாவில் நமஸ்கரிக்கமாட்டேன் என்றது ஏன் தெரியுமா? இந்த ஜன்மாவில் உன்னை நமஸ்கரித்து விட்டேன் அல்லவா? அதனால் நீ இனி எனக்குப் பிறவியே தரமாட்டாய். மறு ஜன்மாவே இல்லாதபோது அப்போது உனக்குச் செய்ய வேண்டிய நமஸ்காரம் மட்டும் எப்படி இருக்கும்? இப்படியாக போன ஜன்மா, வருகிற ஜன்மா இரண்டிலும் உன்னை வணங்காத குற்றத்தை மன்னித்துவிடு.”
இந்த ஸ்லோகத்திலிருந்து என்ன ஏற்படுகிறது? மனப் பூர்வமாக ஈஸ்வரனை நமஸ்காரம் செய்துவிட்டால் போதும், அவர் நம்மை ஜனன மரண சக்கரத்திலிருந்து விடுவித்து விடுவார். நம் பாவங்களையெல்லாம் போக்கி முக்தி தந்து விடுவார். இந்த ஸ்லோகத்தைச் சொன்னவர் கவித்வ சமத்காரத்தில் பாடியவரில்லை. அவர் பழுத்த அநுபவசாலி, எனவே அவரது வார்த்தையை பரிபூர்ணமாக நம்பி நாமும் ஈசுவரனிடத்தில் சரணாகதி என்று விழுந்து நமஸ்காரம் பண்ணுவோம். நமஸ்கரித்தால் மோக்ஷம் நிச்சயம் என்ற நம்பிக்கையுடன் பண்ணினால் அப்படியே கிடைக்கும்! சந்தேகமில்லை.
நமஸ்காரம் செய்வதைத் தண்டம் சமர்ப்பித்தல் என்பார்கள். தண்டம் என்றால் கழி அல்லது கோல் என்று அர்த்தம். கையில் பிடித்திருக்கிற ஒரு கோலை விட்டுவிட்டால் அது அப்படியே தடாலென்று கீழே விழுந்துவிடும். அப்படியே இந்த சரீரத்தை நமதல்ல, இது ஈஸ்வரனுடையது என்கிற எண்ணத்துடன் கீழே போடுவதுதான் நமஸ்காரம். நம் சரீரம் வெறும் மரக்கோல்தான். உதவாத பொருளை ‘அது தண்டமாகி விட்டது’ என்கிறோம். அப்படி தண்டமான வஸ்துதான் நம் சரீரம். இதைத் தூக்கிப்பிடித்து நிறுத்தி வைத்து ஆட்டுகிற சக்தி ஈஸ்வரன் கொடுத்ததே ஆகும். இந்த உடம்பை ஏதோ நாமே தாங்கி நடத்துகிறோம் என்ற எண்ணத்தை ஒழித்துவிட்டு, அதாவது அகங்காரத்தை விலக்கிவிட்டு, அதற்கு அடையாளமாக ஈசுவரன் முன் இந்தச் சரீரத்தைக் கீழே போடவேண்டும். அதுதான் தண்டம் சமர்ப்பிப்பது. ஜுரம் வந்தால் நம் சரீரத்தால் நிற்கவும் நடக்கவும் முடிகிறதில்லை. இந்த ஜன்மாவே பெரிய ஜுரமாக வந்திருக்கிறது. இதிலிருந்து நம்மைக் கடைத்தேற்றுவதற்காக, நமக்கு வந்திருக்கிற சம்ஸார ஜுரத்தை புரிந்துகொண்டு, அதற்கு அடையாளமாக ஸ்வாமியின் முன் தண்டாகாரமாக விழுந்து நமஸ்கரிக்க வேண்டும்.
‘நாம் செய்கிறோம்’ என்கிற எண்ணம் போய்விட்டால் அதுவே ஸதாகால நமஸ்காரம். அந்த அநுபவம் நமக்கு ஸித்திக்காத போதிலும் ஈஸ்வர சந்நிதியிலாவது அப்படி பாவித்து வணங்கித் தரையோடு, தரையாக எளிமையாகக் கிடக்க வேண்டும். இங்கே வணங்கிவிட்டால், அப்புறம் வெளியே எங்கேயும் வணங்காமல் இருக்கலாம். ‘பொறுப்பை உன்னிடமே பூரணமாகக் போட்டேன்’ என்பதற்கு அடையாளம் சரீரத்தைத் தரையில் போடுவது, கொஞ்சம் பொறுப்பை நமக்கு என்று வைத்துக் கொண்டால்கூட ஸ்வாமி தம் பங்கைக் குறைத்துக் கொண்டு விடுவார். இதில் அரைகுறைக்கு இடமே இல்லை. நம்முடைய நல்லது பொல்லாதது அவ்வளவும் அவர் விட்டபடி என்று சகல பொறுப்பையும் அவரிடம் தள்ளுவதற்கு வெளி அடையாளமாக உடம்பைத் தரையில் தள்ளி நமஸ்காரம் பண்ணவேண்டும். அப்படிச் செய்தால் நம் பாரம் அனைத்தையும் கிருபா சமுத்திரமான ஸ்வாமியே ஏற்று அநுக்கிரகிப்பார்.
பக்தி
ஒரே பேரறிவுதான் இத்தனை பிரபஞ்சங்களாகவும், ஜீவராசிகளாகவும் தோன்றுகிறது. இந்தத் தோற்றத்தைப் போக்கடித்துவிட்டால், அந்த பேரறிவுதான் எஞ்சி நிற்கும். அந்த நிலையில் காரியம் எதுவுமே இல்லை. பிரபஞ்சம், ஜீவ ராசிகள் என்கிற தோற்றங்கள் இருக்கிற வரையில்தான் பல விதமான காரியங்கள் ஏற்படுகின்றன. இவற்றைக் கடந்து, இவற்றுக்கு மூலமான பேரறிவை அடைந்துவிட்டால், முடிவில் அறிகிறவன், அறிவு, அறியப்படுகிற வஸ்து என்கிற பேதங்கள்கூட இல்லாமல் எல்லாம் ஒன்றாகிவிடுகிறது. அதைத்தான் பிரம்ம ஸாக்ஷாத்காரம் என்பது, இதுதான் ஜீவாத்மாவின் மாறுபடாத, சத்தியமான நிலை.
ஆனால் இந்த சத்தியமான நிலையை நாம் தெரிந்து கொள்ளாமல், வெறும் தோற்றமான பிரபஞ்சத்தையும், ஜீவராசிகளையுமே மெய்யென நம்பி வாழ்கிறோம். இதற்குக் காரணம் மாயை. மாயாசக்தியால்தான் ஒரே பிரம்மம் இத்தனை வெவ்வேறு வஸ்துக்களைப்போல் தெரிகிறது. மாயப் பிரபஞ்சம் ஒர் அற்புதமான நியதியில் நடக்கிறது. பலவிதமான இயற்கை விதிகள் ஒழுங்காக வகுக்கப்பட்டு, அதன் பிரகாரமே பிரபஞ்சம் நடக்கிறது. காரியமே இல்லாத பிரம்மம் மாயையால் பிரபஞ்சமாகத் தோன்றுகிறபோது சிருஷ்டி, பரிபாலனம், சம்ஹாரம் முதலிய காரியங்கள் எல்லாம் நடக்கின்றன. காரியம் இல்லாத நிலையில் எதைப் பிரம்மம் என்கிறோமோ, அதையே இந்தக் காரியங்களைச் செய்கிறபோது ஈஸ்வரன் என்கிறோம். காரியம் இல்லாத பரம் பொருளை நிர்குணப் பிரம்மம் என்றும், அதுவே காரியத்தில் இருக்கிறபோது ஸகுணப் பிரம்மம் அல்லது ஈஸ்வரன் என்றும் அத்வைத சாஸ்திரங்களில் சொல்லியிருக்கும். ஈஸ்வரன், பகவான், கடவுள், தெய்வம், ஸ்வாமி என்று சொல்வதெல்லாம் இந்த ஸகுணப் பிரம்மத்தையே.
எப்போது பார்த்தாலும் காரியம் செய்து கொண்டிருப்பதே நமக்கு இயல்பாகிவிட்டது. உடம்பால் காரியம் செய்யாத போதும், வாக்கால் பேசி காரியம் செய்யாத போதும் கூட, நம் மனசு சதா எதையாவது நினைத்துக் கொண்டே இருக்கிறது. இதுவும் காரியம்தான். இந்தக் காரியம் நின்றால்தான், அதாவது மனஸில் எண்ணமே தோன்றாமல் இருந்தால்தான், எந்தக் காரியமும் இல்லாத பிரம்ம நிலையை அடைய முடியும். ஆனால் இந்த மனஸில் ஒரு க்ஷணம்கூட அதையும் நினைக்காமல் இருக்கமுடியவில்லையே! இதை எப்படி நிறுத்தப் பழகுவது?
இந்தப் பழக்கத்துக்கு வழிதான் பக்தி. காரியமில்லாத பிரம்மத்தை நாமும் காரியமில்லாமலிருக்கிற நிலையில்தான் அநுபவிக்க முடியும். அது முடியவில்லையா? அதே பிரம்மம் சகல பிரபஞ்சங்களையும் நடத்தி வைக்கிற – அதாவது காரியத்தைச் செய்கிற – ஈஸ்வரனாக இருக்கிறதல்லவா? இந்த ஈஸ்வரனையே ஸதா சிந்தனை பண்ணு. காரியத்தை எல்லாம் அதற்கே திருப்பு. உடம்பால் நமஸ்காரம் பூஜை, வாக்கால் ஸ்தோத்திரம், மனஸால் தியானம் என்று சகல காரியங்களையும் ஈஸ்வரனிடம் செலுத்து. அவற்றை ஈஸ்வரன் அங்கீகரித்து, உன்னை பிரம்ம ஞானத்தில் கொண்டுபோய்ச் சேர்ப்பான். இப்படிப்பட்ட இடையறாத ஈஸ்வர சிந்தனைக்குத்தான் பக்தி என்று பெயர். இதில் அன்பு ரொம்பவும் முக்கியம். அன்போடு அவனை நினைப்பதே பக்தி.
உலகத்திலுள்ள நல்லது – கெட்டது, அழகு – அவலக்ஷணம், இன்பம் – துன்பம் எல்லாமே பிரம்மத்திலிருந்து வந்தவைதாம். ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஐக்கியமாகி பிரம்மநிலை, அடையும்போது நல்லது கெட்டது, அழகு, அவலக்ஷணம், சந்தோஷம், துக்கம் என்கிற பேதமில்லை.
ஆனால் இப்போது நாம் இருக்கிற நிலையில் இவை எல்லாம் ஒன்றாகத் தோன்றவில்லை. இந்த நிலையில் ஈஸ்வரனை எல்லா அழகுகளுக்கும், எல்லா நன்மைகளுக்கும், எல்லா இன்பங்களுக்கும் உருவமாகப் பாவித்து அன்பு செலுத்த வேண்டும். குணமே இல்லாத பிரம்மத்தை நம்மால் நினைத்தே பார்க்க முடியாது. அந்த நிர்குணத்திலிருந்தே சகல குணங்களும் தேன்றியிருக்கின்றன. ஒரு நிறமும் இல்லாத சூரிய வெளிச்சம் கண்ணாடிப் ‘பிரிஸத்’தில் பட்டு ஒளிச்சிதறலில் (Refraction) சகல வர்ணங்களையும் வாரிக் கொட்டுகிறதல்லவா? அப்படியே நிர்குணப் பிரம்மம் மாயை என்கிற கண்ணாடியில் பட்டு ஈஸ்வரனாகி சகல குணங்களையும் வாரிக் கொட்டுகிறது. நிர்குணத்தை நம்மால் நினைக்க முடியாது. ஆனால் குணங்களை நினைக்க முடியும். ஆனால் கெட்ட குணங்களை நினைத்தால் அது நம்மை மேலும் கஷ்டத்தில், சம்ஸார சாகரத்தில்தான் இழுத்துக் கொண்டு போகும். அதனால் நல்ல குணங்களை கல்யாண குணங்களையே நினைக்க வேண்டும். வெறுமே குணத்தை நினைப்பதென்றால் முடியாது. அதனால் உயிரோடு, உருவத்தோடு, அந்த நல்ல குணங்கள் எல்லாவற்றையும்கொண்ட ஒருத்தனை நினைக்க வேண்டும். எல்லாக் குணங்களும் உயிர்களும் உருவங்களும் எதனிடமிருந்து வந்ததோ, எது இதையெல்லாம் ஆட்டிப்படைத்து வைத்துக்கொண்டிருக்கிறதோ, அதையே அனந்த கல்யாண குணங்களும் கொண்ட தெய்வ ரூபமாக அன்போடு நினைக்க நினைக்க அந்தக் கல்யாண குணங்கள் நமக்கும் வரும்.
மனசு எதைத் தீவிரமாக இடைவிடாமல் நினைத்தாலும் அதுவாகவே மாறுகிறது. இதை மனோதத்துவக்காரர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். தோஷங்கள் அற்ற கிருபா சமுத்திரனான பகவானைத் தியானம் செய்து கொண்டே இருப்பதால் நம்முடைய தோஷங்கள் விலகி, நாம் அன்பு மயமாகிறோம். உண்மையான பக்தி வைத்துவிட்டால் அப்புறம் மனசு அன்புமயமாகிவிட, அதன்பின் அது பாபத்தில் பிரவேசிக்கவே செய்யாது. உலகத்தில் பாப எண்ணங்கள் விலகுவதற்கு பக்தியைவிட வேறு வழி இல்லை. ஆனால் பக்தி செய்வதற்கு இது மட்டும் காரணம் இல்லை. நாம் சத்தியமான நிலையை அடைவதற்கு பக்தி வழி பண்ணுகிறது என்பதுதான் முக்கியமான காரணம். மனசு என்பதே நின்றுபோய், ஆத்ம ஜ்யோதிஸ் அப்படியே பளீரென்று அடிப்பதற்கு முன்னதாக அந்த மனதிலிருந்து பாப அழுக்கு போக வேண்டும். இப்படிப் பாபத்தைப் போக்குவதே பக்தி.