44. தேவதாமூர்த்திகள் – அவதார புருஷர்கள் – பகுதி மூன்று

கண்ணன் பிறந்த தினம்

ஸ்ரீ கிருஷ்ண பகவான் கீதையில், அஞ்ஞான உலகத்தினருக்குத் தெரியாத ஞானப் பிரகாசத்திலேயே ஞானியானவன் எப்போதும் இருக்கிறான் என்கிற அர்த்தத்தில், “உலகம் முழுவதும் தூங்கும் காலத்தில் ஞானி விழித்துக் கொண்டிருக்கிறான்என்கிறார். எங்கும் ஒரே இருட்டாக இருக்கும் காலத்தில் ஒரு வெளிச்சம் தோன்றினால் அதை வரவேற்கிறோம். ஒரு பாலைவனத்தின் நடுவில் கொஞ்சம் நீரும் நிழலும் தென்பட்டால் அளவிலா ஆனந்தத்தைத் தருகிறது. இருண்ட மேகங்களின் மத்தியில் தோன்றும் மின்னல் அதிகப் பிரகாசத்தோடு விளங்குகிறது. ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா தக்ஷிணாயனத்தில் ஆவணி மாதத்தில் ஸ்ரீ கிருஷ்ணபக்ஷ அஷ்டமியன்று நடுநிசியில் பிறந்தான். நமக்கு ஒரு வருஷம் தேவர்களுக்கு ஒரு நாள். நம் உத்தராயணம் அவர்களுக்குப் பகல்; தக்ஷிணாயனம் அவர்களுக்கு இரவு. ஆகையால் ஸ்ரீ கிருஷ்ணன் அவதரித்த காலம் தேவர்களுக்கு இரவு ஆகிறது. இம்மாதிரியே நமக்கு ஒரு மாதம் பித்ருக்களுக்கு ஒரு நாளாகும். நமது சுக்லபக்ஷம் அவர்களுக்குப் பகல்; கிருஷ்ணபக்ஷம் இரவு. ஆகையால் ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்த கிருஷ்ண பட்சம் பித்ருக்களுக்கும் இரவாகிறது. அஷ்டமி பக்ஷத்தின் நடுவில் வருவதனால் அன்று பித்ருக்களுக்கு நடுநிசியாகும். ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்தது அஷ்டமியன்று நடுநிசி. இதனால் என்ன ஏற்படுகிறது? ஸ்ரீ கிருஷ்ணன் அவதரித்த காலம் தேவர்கள், பித்ருக்கள், மனிதர்கள் எல்லோருக்கும் நிசி. எல்லா தினுசிலும் இருட்டு அதிகமாக இருக்கும் சமயம். ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்ததும் இருள் நிறைந்த சிறைச்சாலை. இப்படி ஸ்ரீ கிருஷ்ணாவதார காலத்தில் எல்லாம் இருள் மயமான சூழ்நிலை.

அவனுடைய பெயரும் கிருஷ்ணன்; ‘கிருஷ்ணஎன்றால்கறுப்புஎன்று பொருள். அவனது மேனியும் கறுப்பு.

இப்படி ஒரே கறுப்பான சமயத்தில் தானும் கறுப்பாக ஆவிர்ப்பவித்தாலும் அவனே ஞான ஒளி. நல்ல காளமேகங்களிடையே மின்னல் மாதிரி இத்தனை இருட்டுக்கு நடுவே தோன்றிய ஞான ஒளி. ஞான ஒளியானதால்தான் மங்காத பிரகாசமுடையதாய் இன்றும் என்றும் ஜ்வலித்துக் கொண்டிருக்கிறது. அஞ்ஞானத்தால் இருண்டிருக்கும் உலகத்தில்தான் ஞானத்தின் மகிமை அதிகமாக விளங்கும். அப்படியே கிருஷ்ணனின் பெருமை பிரகாசிக்கிறது. அவனுடைய கீதை உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவனுடைய லீலா விநோதங்கள் நிறைந்திருக்கும் ஸ்ரீமத் பாகவதம் புராண சிரேஷ்டமாக விளங்குகிறது.

உடலுக்கு ஒளியளிப்பது கண். உயிருக்கு ஒளி தருவது ஞானம். உலக உயிர்களுக்கெல்லாம் ஞான ஒளி தருகிற கண்ணாக இருப்பவனே கண்ணன். நம் தென்னாட்டில் அவன் கிருஷ்ணன் மாத்திரம் அல்லாமல் கண்ணனும் ஆகிவிட்டான். அகக்கண்ணையும் புறக்கண்ணையும் அம்ருதத்தில் மூழ்கடிக்கும் வடிவம் அவனுடையது. நம் காதின் வழியாக வேணுவினால் கீத அம்ருதத்தையும், உபதேச சாரமான கீதாம்ருதத்தையும் உட்செலுத்தி குளிர வைக்கும் அந்தக் கண்ணனே நம் உலகுக்குக் கண்; கறுப்பினிடையே விளங்கும் ஒளி காட்டும் கண்; அந்த ஒளியும் அவன்தான்.

ஸ்ரீ கிருஷ்ணன் ஒரே அவதாரத்தில் அநேக விதமான லீலைகளைச் செய்து நடித்திருக்கிறான். மிகவும் சேஷ்டை செய்யும் குழந்தை, பிறகு மாடு மேய்க்கும் பையன், குழலூதிக் கூத்தாடும் கலைஞன், இவற்றை அநுபவிக்கும் ரஸிகன், (சாணூரன், முஷ்டிகன் என்ற கம்ஸனைச் சேர்ந்த மகாமல்லர்களை ஜயித்தபோது) மல்யுத்தத்தில் தேர்ந்தவன், (நக்னஜித் என்ற ராஜாவின் பெண்ணான ஸத்யை என்பவளைக் கலியாணம் செய்துகொள்வதற்கு நிபந்தனையாக ஏழு காளைகளை அடக்க வேண்டும் என்ற போது) காளை மாடுகளை அடக்கிக் காட்டுபவன், ராஜதந்திர நிபுணன், தூது செல்பவன், சாரதி, துரௌபதி போல் தீர்க்க முடியாத கஷ்டத்தில் சிக்கிக் கொண்டவர்களைக் காக்கும் ஆபத்பாந்தவன், குசேலர் போன்ற அநாதர்களை ரக்ஷிக்கும் பக்த வத்ஸலன், பீஷ்மருக்கு முக்தியை அளித்தவன், பீஷ்மருக்கு மாத்திரமல்லதன்னையே கொல்லும்படியான அம்பைப் பிரயோகித்த வேடனுக்கும் முக்தி கொடுப்பவன்இப்படியெல்லாம் லீலை செய்திருக்கிறான்.

உலகத்தில் நல்லதும் பொல்லாததுமாக அநேக விதமான மனப்போக்கை உடையவர்களாக ஜீவர்கள் அமைந்திருக்கிறார்கள். வீரனும் சூரனும், திருடனும் ஸ்திரீலோலனும், பேதையும் உழைப்பாளியும், கிழவனும் குழந்தையும், இறுமாப்புடையவனும் பரோபகாரியும், மனமுருகியவனும் கல்நெஞ்சனும், கஞ்சனும் ஊதாரியும், மூடனும் கல்விமானும், யோகியும் ஞானியுமாகப் பலவிதமான மன நிலையை உடையவர்கள் உலகத்தில் இருக்கிறார்கள். இவர்களில் தீய அம்சம் உள்ளவர்களை முற்றிலும் நல்ல அம்சங்களைக் கொண்ட ஒரு மகாத்மா அல்லது தெய்வ அவதாரத்தால் ஆகர்ஷிக்க முடியாமலே போகலாம். ஒரு திருடனுக்கு இன்னொரு திருடனைப் பற்றிய கதையே ரஸமாயிருக்கும். ஓர் உல்லாஸ புருஷனுக்கு இன்னோர் உல்லாஸ புருஷனின் கேளிக்கைளே சுவாரஸ்யமாக இருக்கும். ஸ்ரீ கிருஷ்ணன் நல்லவர்களை மட்டுமின்றி மற்றோரையும் கவரவேண்டுமென்றே ஜாரசோர சிகாமணியாக, கபடனாக, மாயனாக, தந்திரசாலியாக எல்லா வேஷமும் போட்டான். பற்பல போக்குக்கொண்ட மக்கள் எல்லோரையும் தனது வகை வகைகளான லீலைகளால் தனித்தனியே ஆகர்ஷித்துத் தன்னுடைய கருணைக்கும் அதன் மூலம் ஞானத்துக்கும் பாத்திரமாக்கிக் கடைத்தேற வைத்த ஸ்ரீ கிருஷ்ணாவதாரமே பரிபூரணவதாரம்.

சிவராத்திரிக்கும் கிருஷ்ணாஷ்டமிக்கும் இடையே சரியாக 180 நாள் இடைவெளி இருக்கும். ஒன்றிலே ஞான ஜோதியான லிங்கம் உதித்தது. அதுவேதான் இன்னொன்றில் வெளியிலே எல்லாம் கருமையாக வைத்துக்கொண்டாலும், உள்ள ஞானத்திலும் கருணையிலும் ஜோதியான கண்ணனாக வந்தது.

ஸ்ரீ ராமன்

ராமன்என்றாலே ஆனந்தமாக இருப்பவன் என்று அர்த்தம்; மற்றவர்களுக்கு ஆனந்தத்தைத் தருகிறவன் என்று அர்த்தம். எத்தனை விதமான துக்கங்கள் வந்தாலும் அதனால் மனம் சலனம் அடையாமல், ஆனந்தமாக தர்மத்தையே அநுசரித்துக்கொண்டு ஒருத்தன் இருந்தான் என்றால், அது ஸ்ரீ ராமன்தான். வெளிப்பார்வைக்கு அவன் துக்கப்பட்டதாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள்ளேயே ஆனந்தமாகவே இருந்தான்.

சுக துக்கங்களில் சலனமடையாமல், தான் ஆனந்தமாக இருந்துகொண்டு, மற்றவர்களுக்கும் ஆனந்தத்தை ஊட்டுவது தான் யோகம். அப்படியிருப்பவனே யோகி. இவ்வாறு மனசு அலையாமல் கட்டிப்போடுவதற்குச் சாமானிய மனிதர்களுக்கான வழி வேத சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிற தர்மங்களை ஒழுக்கத்தோடு, கட்டுப்பாட்டோடு பின்பற்றி வாழ்வது தான். சொந்த விருப்பு வெறுப்புக்கு இலக்காகாமல் வேதம் விதிக்கிற தர்மப்படி வாழ ஆரம்பித்துவிட்டால், தானாகவே மனஸின் சஞ்சலம் குறைந்து, அது தெளிய ஆரம்பிக்கும். இந்தத் தெளிவால் மனசு எப்போதும் ஆனந்தமாக, லேசாக இருக்கும். இந்த சித்த சுத்தி மோக்ஷத்திலேயே கொண்டு சேர்த்துவிடும்.

ஜனங்களுக்கெல்லாம் ஒரு பெரிய உதாரணமாக வேத தர்மங்களை அப்படியே அநுசரித்து ஆனந்தமாக வாழ்ந்து காட்டுவதற்காக ஸ்ரீமந் நாராயணனே ராமனாக வந்தார். ராம வாக்கியத்தை எங்கே பார்த்தாலும், ‘இது என் அபிப்பிராயம்என்று சொல்லவே மாட்டார். ‘ரிஷிகள் இப்படிச் சொல்கிறார்கள்; சாஸ்திரம் இப்படிச் சொல்கிறதுஎன்றே அடக்கமாகச் சொல்வார். சகல வேதங்களின் பயனாக அறியப்படவேண்டிய பரமபுருஷன் எவனோ, அவனே அந்த வேத தர்மத்துக்கு முழுக்க முழுக்க கட்டுப்பட்டு, அப்படிக் கட்டுப்பட்டு இருப்பதிலேயே ஆனந்தம் இருக்கிறது என்று காட்டிக்கொண்டு, ராமனாக வேஷம் போட்டுக் கொண்டு வாழ்ந்தான்.

ராவணன் ஸீதையைத் தூக்கிக்கொண்டு போனபோது, ஒரே மைல் தூரத்திலிருந்த ராமனுக்கு ஸீதை போட்ட கூச்சல் காதில் விழவில்லையாம். அப்படிப்பட்டவனை இப்போது பக்தர்கள் கூப்பிட்டால் என்ன பிரயோஜனம்?” என்று கேலி செய்து கேட்டவர்கள், எழுதியவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் ராமனாக இந்த லோகத்தில் வாழ்ந்தபோது மனுஷ்ய வேஷத்தில் இருந்தான்; மநுஷ்யர்களைப் போலவே வாழ்ந்தான் என்பதை மறந்து பேசுகிறார்கள்.

ஒரு நாடகம் நடக்கிறது. ராமாயண நாடகம்தான். அதில் லவ குசர்களை வால்மீகி ராமனிடம் அழைத்து வருகிறார். ராஜபார்ட் ராமஸ்வாமி அய்யங்கார் ராமராக வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறார். அவருடைய சொந்தப் பிள்ளைகளே நாடகத்தில் லவ குசர்களாக நடிக்கிறார்கள். நாடக ராமன் வால்மீகியைப் பார்த்துஇந்தக் குழந்தைகள் யார்?’ என்று கேட்கிறார். ராமஸ்வாமி அய்யங்காருக்குத் தம்முடைய பிள்ளைகளையே அடையாளம் தெரியவில்லை என்று நாடகம் பார்க்கிறவர்கள் கேலி செய்யலாமா? நாடக வால்மீகி, ‘இவர்கள் ராஜபார்ட் ராமஸ்வாமி அய்யங்காரின் பிள்ளைகள்; நீங்கள் தானே அந்த ராமஸ்வாமி அய்யங்கார்!’ என்று பதில் சொன்னால் எத்தனை ரஸாபாஸமாக இருக்கும்? வாஸ்தவத்தில் இருப்பதை, வாஸ்தவத்தில் தெரிந்ததை, நாடகத்தில் இல்லாததாக, தெரியாததாகத்தான் நடிக்க வேண்டும். ஸ்ரீ ராமன் பூலோகத்தில் வாழ்ந்தபோது, இப்படித்தான் மநுஷ்ய வேஷம் போட்டுக் கொண்டு தம் வாஸ்தவமான சக்தியையும் ஞானத்தையும் மறைத்துக் கொண்டு வாழ்ந்தார்.

வேதப் பொருளான பரமாத்மா தசரதனின் குழந்தையாக வேஷம் போட்டுக்கொண்டவுடன், வேதமும் வால்மீகியின் குழந்தையாக, ராமாயணமாக வந்துவிட்டது. அந்த ராமாயணம் முழுக்க எங்கே பார்த்தாலும் தர்மத்தைத்தான் சொல்லியிருக்கிறது. ஊருக்குப் போகிற குழந்தைக்குத் தாயார் பட்சணம் செய்து தருகிற வழக்கப்படி கௌசல்யா தேவி காட்டுக்குப் போகிற ராமனுக்குப் பதினாலு வருஷங்களும் கெட்டுப்போகாத பட்சணமாக இந்தத் தர்மத்தைதான் கட்டிக் கொடுத்தாள். ‘ராகவா, நீ எந்த தர்மத்தை த்ருதியோடு, அதாவது தைரியத்தோடு, நியமத்தோடு அநுசரிக்கிறாயோ, அந்தத் தர்மம் உன்னை ரக்ஷிக்கும்என ஆசீர்வாத பட்சணம் கொடுத்தாள்.

நியமம், அதாவது தனது என்ற வெறுப்பு விருப்பு இல்லாமல் சாஸ்திரத்துக்குக் கட்டுப்படுவது முக்கியம். அதே போல் தைரியம் முக்கியம். ஒருத்தர் பரிகாசம் பண்ணுகிறார் என்று தர்மத்தை விடக்கூடாது. ராமனை சாக்ஷாத் லக்ஷ்மணனே பரிகசித்தான். ‘அண்ணா! நீ தர்மம், தர்மம் என்று எதையோ கட்டிக் கொண்டு அழுவதால்தான் இத்தனை கஷ்டங்களும் வந்திருக்கின்றன. அதை விட்டுத் தள்ளு. தசரதன் மேல் யுத்தம் செய்து ராஜ்யத்தை உனக்கு நான் ஸ்வீகரித்துத் தர அனுமதி தாஎன்று அன்பு மிகுதியால் சொன்னான். ஆனால் ராமன், யார் எது சொன்னாலும் பொருட்படுத்தாமல் தர்மத்தையே காத்தான். கடைசியில் அது அவனைக் காத்தது. தர்மம் தலை காத்தது. ராவணனுக்குப் பத்து தலை இருந்தும் அதர்மத்தால் கடைசியில் அத்தனை தலைகளும் உருண்டு விழுந்தன. ஸ்ரீராமன் இன்றும், ‘ராமோ விக்ரஹவான் தர்ம:’ என்றபடி தர்மத்தில் தலைசிறந்து தர்ம ஸ்வரூபமாக அநுக்கிரகம் செய்து வருகிறான்.

சாக்ஷாத் ஸ்ரீ ராமனை லட்சியமாகக் கொண்டுராம ராமஎன்று மனஸாரச் சொல்லிக்கொண்டே இருக்கிறவர்களுக்குச் சித்த மலங்கள் எல்லாம் விலகும். தர்மத்தை விட்டு எந்நாளும் விலகாமல் அவர்கள் ஆனந்தமாக வாழ்வார்கள்.