சிவராத்ரி
அநேகமாக எல்லா சிவாலயங்களிலும் கர்ப்பக் கிரஹத்தின் சுவரில் மேற்குப் பாகத்தில் லிங்கோத்பவ மூர்த்தியின் பிம்பம் இருக்கும். (சில கோயில்களில் மட்டும் இந்த இடத்தில் மஹா விஷ்ணு இருக்கிறார்) லிங்கோத்பவ மூர்த்தி என்பது பரமேசுவரனுடைய அறுபத்தி நான்கு மூர்த்திகளுக்குள் ஒன்று. விருஷபாரூடர், அர்த்தநாரீஸ்வரர், ஹரிஹரர், நடராஜர், காமாரி, பைரவர், தக்ஷிணாமூர்த்தி, ஸோமாஸ்கந்தர், பிக்ஷாடனர், ஊர்த்வதாண்டவர், ஜலந்தராஸுர சம்ஹாரர், கால ஸம்ஹாரர், இப்படி அறுபத்து நான்கு மூர்த்திகள் பரமசிவனுக்கு உண்டு. அவைகளுக்குள் ஒன்று லிங்கோத்பவ மூர்த்தி.
அந்த மூர்த்திதான் சிவாலயத்திலுள்ள லிங்கத்துக்குப் பின்புறம் காணப்படுவது. அதில், லிங்கத்துக்குள் ஒரு திவ்ய மூர்த்தியிருக்கும். அதன் ஜடா மகுடம் லிங்க வட்டத்துக்குள் முடியாமலே இருக்கும். அதன் பாதமும் லிங்கத்தின் அடியில் முடிகிற வரைக்கும் தெரியாது. இந்த மூர்த்திக்குக் கீழே ஒரு வராக மூர்த்தி இருக்கும். மேலே ஹம்ஸ ரூபத்தில் ஒரு மூர்த்தி இருக்கும்.
இந்த லிங்கோத்பவர் யார்?
ஸ்ரீ ருத்ராபிஷகம் பண்ணுவதற்கு முன்பு ஒரு சுலோகம் சொல்லிவிட்டு, அப்புறம்தான் அபிஷகம் பண்ணுவது வழக்கம். அந்த சுலோகம்:
ஆபாதால நப: ஸ்தலாந்த புவன
ப்ரஹ்மாண்டமா விஸ்புரத்
ஜ்யோதி: ஸ்பாடிக லிங்க மௌலி விலஸத்
பூர்ணேந்து வாந்தாம்ருதை:
அஸ்தோகாப்லுதம் ஏகம் அசம் அநிசம்
ருத்ராநுவாகான் ஜபன்
த்யாயேத் ஈப்ஸித ஸித்தயே (அ) த்ருதபதம்
விப்ரோ (அ)பிஷிஞ்சேத் சிவம் ||
இந்த ஸ்லோகத்தில் என்ன தெரியுமா சொல்லியிருக்கிறது? பாதாள முதல் ஆகாச பரியந்தம் எல்லையில்லாத ஜோதி ஸ்வரூபமாகப் பிரகாசிக்கிற ஸ்படிக லிங்கத்துக்கு அபிஷேகம் பண்ணவேண்டும் என்று சொல்லியிருக்கிறது.
ஸ்படிக லிங்கத்துக்கு ஒரு வர்ணமும் சொல்ல முடியாது. எந்த வஸ்துவை அதில் வைக்கிறோமோ அதனுடைய வர்ணத்தை அது பிரதிபலிக்கும். குண–தோஷம் இல்லாதது அது. ஞானம் எப்படிப் பரிசுத்தமாக இருக்கிறதோ, அப்படி அந்த ஸ்படிக லிங்கம் இருக்கிறது. அதன் பின் பச்சை வில்வத்தை வைத்தால், லிங்கமே, பச்சையாகத் தோன்றும். சிவப்பான அரளியை வைத்தால் சிவப்பாகத் தோன்றும். அது நிர்விகாரமானது. பரப் பிரம்ம ஸ்வரூபம் நிர்விகாரமாக இருந்தாலும், நம்முடைய மனோபாவத்தை எப்படி வைக்கிறோமோ அப்படித் தோன்றும் என்பதற்குத் திருஷ்டாந்தமாக, இந்த ஸ்படிக லிங்கம் இருக்கிறது. அது எதையும் மறைக்காது. அதற்குப் பின்னால் உள்ள வஸ்துக்களையும் அதன் வழியாகப் பார்க்கலாம். பரம சுத்தமாக நிஷ்களங்கமாக இருக்கும். நிர்குணமான பரமாத்ம வஸ்துவுக்கு அது திருஷ்டாந்தம். நினைக்கிற ரூபமாக அது தெரியும்.
மேலே சொன்ன சுலோகப்படி, அதன் சிரஸில் பூரண சந்திரன் இருக்கிறது. “பூர்ணேந்து” என்று சுலோகத்தில் வருவது, ‘பூரண இந்து!’; இந்து என்றாலும் சந்திரன் என்றாலும் ஒன்றுதான். ஈசுவரன் ஜடையும், கங்கையும், கண், காது, மூக்கு, கை, கால் முதலிய அவயவங்களும் கொண்ட “ஸகள” ரூபத்தில் வருகிறபோது, அவர் மூன்றாம் பிறையை வைத்துக்கொண்டு சந்திர மௌலியாக இருக்கிறார். ரூபமே இல்லாத பரமாத்மா ‘நிஷ்கள’ தத்வமாயிருக்கிற போது, அங்கே சந்திரன், கங்கை எதுவும் இல்லை. அரூபமாயும் இல்லாமல், ஸ்வரூபமாயும் அவயவங்களோடு இல்லாமல், லிங்கமாக சகள – நிஷ்களமாக இருக்கிறபோது அவர் பூர்ண சந்திரனை உச்சியில் வைத்திருக்கிறார். அதிலிருந்து அமிருதமே கங்கை மாதிரி கொட்டுகிறது.
யோகிகள் தமது சிரசுக்குள் ஸஹஸ்ரார கமலத்தில் உள்ள சந்திர மண்டலத்தில், ஜ்யோதி ஸ்வரூபத்தைத் தியானம் பண்ணுவார்கள். அந்தச் சந்திர பிம்பத்திலிருந்து அமிருதம் ஒழுகும். அதனால் அவர்களுக்குப் பரமானந்தம் உண்டாகிறது. ஸமஸ்த பிரபஞ்ச ஸ்வரூபமான ஜ்யோதிர் லிங்கம் குளிர்ந்தால், லோகமெல்லாம் குளிரும். இதனால்தான் சிவலிங்கத்துக்கு ஓயாமல் அபிஷேகம் செய்வது. ருத்திர அபிஷேகம் செய்வது. ருத்திர அபிஷேகத்துக்கு முன்பு சொல்லும் ஸ்லோகம், இதை எல்லாம் அறிவுறுத்துகிறது.
ஸகல பிரம்மாண்டமும் சிவலிங்கம்தான். ஸ்ரீ ருத்ரத்தில் இப்படியே சொல்லப்பட்டிருக்கிறது. ஸர்வ பதார்த்தங்களும், நல்லது கெட்டது எல்லாம் சிவ ஸ்வரூபம் என்று ஸ்ரீ ருத்ரம் சொல்லுகிறது.
லிங்கம் ஏன் வட்டவடிவமாயிருக்கிறது? வட்டமான ஸ்வரூபத்துக்குத்தான் அடி முடியில்லை; ஆதியில்லை, அந்தமுமில்லை. மற்றவர்களுக்கு உண்டு. முக்கோணத்துக்கு சதுரத்துக்கு உண்டு. ஆதியந்தம் இல்லாத வஸ்து சிவம் என்பதை லிங்காகாரம் காட்டுகிறது.
சரியான வட்டமான (circle) இல்லாமல், லிங்கம் நீள வட்டமாக (ellipse) இருக்கிறது. “பிரபஞ்சமே ‘எல்லிப்டிக்’காகத்தான் இருக்கிறது. நம் சூரிய மண்டலத்தை (Solar System) எடுத்துக்கொண்டாலும் கிரஹங்களின் அயனம் நீளவட்டமாகத்தான் இருக்கிறது” என்று நவீன விஞ்ஞானத்தில் சொல்வதும், பிரம்மாண்டமும் “ஆவிஸ்புரத்” என்று சாஸ்திரம் சொல்வதும் லிங்க ரூபத்துக்கு ரொம்ப ஒற்றுமையாக இருக்கிறது.
யாராவது பந்துவை நினைக்கிறோம். சந்தோஷமாயிருக்கிறது; ஆனால் அவருடைய உருவத்தையும் பார்த்தால்தான் சந்தோஷம் பூரணமாகிறது. அவ்வாறே உருவமற்ற சிவமும் ஒரு உருவத்தோடு வந்து அநுக்கிரகம் பண்ணினால்தான் ரொம்ப சந்தோஷமாக இருக்கும். ஞானிகளுக்கு மட்டுமே பரமாத்ம ஸ்வரூபத்தின் நிராகார (அருவ) உண்மை புரியும். உருவத்தைப் பார்த்து பார்த்து ஆனந்தம் அநுபவிக்கிற நமக்கு உருவத்தோடு கண்டால்தான் ஆனந்தம் உண்டாகும். அதற்காகத்தான் உருவமற்ற பரமேசுவரன், அருவுருவான லிங்கமானதோடு நில்லாமல், அந்த லிங்கத்துக்குளேயே திவ்யரூபம் காட்டும் லிங்கோத்பவ மூர்த்தியாக இருக்கிறார். இப்படி ரூபத்தைக் காட்டினாலும், வாஸ்தவத்தில் தமக்கு அடியும் இல்லை, முடியும் இல்லை, அதாவது ஆதியும் அந்தமும் அற்ற ஆனந்த வஸ்துவே தாம் என்று உணர்த்துவதற்காக, மேலே லிங்க வட்டத்துக்குள் ஜடாமுடி முடியாமலும், கீழே அந்த மாதிரித் தம் பாதம் அதற்குள் அடங்காமலும் இருப்பதாகக் காட்டுகிறார்.
அடிமுடி எல்லை இல்லாமல், அவர் ஜ்யோதி ஸ்வரூபமாக நின்றார். ஜ்யோதிர்லிங்கமாக, ஆகாயத்துக்கும் பூமிக்குமாக பரமசிவன் உத்பவித்த இரவே சிவராத்ரியாகும்.
அப்படி ஜோதி ஸ்வரூபமாகப் பரமேசுவரன் நின்ற பொழுது, விஷ்ணு அவரது பாதத்தைப் பார்க்க பாதாளத்துக்குப் போனார். பூமியைக் கல்லும் ஸ்வபாவம் வராஹத்துக்கு உண்டு. எனவே, அந்த ரூபத்தை எடுத்துக் கொண்டார். பிரம்மா ஹம்ஸ ஸ்வரூபமானார். பட்சிக்குப் பறப்பது ஸ்வபாவம். பட்சியாகப் பறந்து ஜோதிர்லிங்கத்தின் முடி தேடிப்போனார். இரண்டு பேருக்கும் தேடிப் போனவை அகப்படவில்லை. ஹம்ஸம் வந்தது. ‘நான் கண்டு விட்டேன்’ எனப் பொய் சொல்லியது. அதனால்தான் பிரம்மாவுக்குப் பிரத்தியேகமாகப் பூஜை இல்லாமற் போய் விட்டது. பரிவாரமாக மட்டும் வைத்துப் பூஜை செய்வதுண்டு. புராண ஐதிஹ்யத்தில் இப்படி இருக்கிறது.
பிரம்மா ஹம்ஸரூபமாகப் போய்ப் பார்த்தும் சிவ பெருமானின் சிரஸ் அகப்படவில்லை என்றும், விஷ்ணு வராஹ ரூபமாகப் போயும் பாதம் அகப்படவில்லை என்றும் சொல்வதன் தாத்பரியம் என்னவென்றால், பரமாத்மர் ஆதி அந்த ஹீனமான வஸ்து என்பதுதான்; சிருஷ்டி, பரிபாலனம் எல்லாவற்றையும் கடந்த வஸ்து அது என்பதுதான். இப்படி அடி முடி தேடி பிரம்மாவும் விஷ்ணுவும் பெற முடியாதவரையே, ‘என் சாமர்த்தியத்தால் அறிய முடியும்’ என்கிற அகங்காரமில்லாமல் அன்போடு பக்தி செய்து உருகினால், வெகு சுலபத்தில் அவர் நமக்கு அகப்பட்டுவிடுவார். அன்பினாலே மிகமிக விரைவில் திருப்தி பெற்று அநுக்கிரகிப்பவர் சிவபெருமான் என்பதாலேயே, அவருக்கு ‘ஆசுதோஷி’ என்று ஒரு பெயர் இருக்கிறது. ‘ஆஷுடோஷ் முகர்ஜி’ என்று ஒரு சீர்திருத்த (Reformist) முக்கியஸ்தரைச் சொல்வார்கள். ஆசுதோஷிதான் ‘ஆஷுடோஷ்’ என்றாயிற்று. ‘ஆசுகவி’ என்றால் கேட்டவுனேயே கவி பாடுகிறவர் அல்லவா? இப்படியே ஸ்மரித்த மாத்திரத்தில் சந்தோஷித்து அநுக்கிரகம் பண்ணுகிற வள்ளல்தான் ஆசுதோஷி.
சகல பிரபஞ்சமும் அடங்கியிருக்கிற லிங்க ரூபமானது ஆவிர்பவித்த சிவராத்திரி மகா சதுர்த்தசி இரவில், அவரை அப்படியே ஸ்மரித்து ஸ்மரித்து அவருக்குள் நாம் அடங்கியிருக்க வேண்டும். அதைவிட ஆனந்தம் வேறில்லை.
சிவ, விஷ்ணு அபேதம்
குணங்கள் மூன்று விதம். ஸத்வம், ரஜஸ், தமஸ் என்பன அவை. ஸத்வம் என்பது ஸமநிலை, சாந்தம், அன்பு. அதன் நிறம் வெண்மை. வெள்ளை வெளேரென்று வஸ்துவைப் பார்த்தாலே மனஸில் ஏற்படுகிற பரிசுத்த மலர்ச்சிதான் ஸத்வம். ரஜஸ் என்பது வேகம். இதில் நல்லது கெட்டது என்ற இரண்டும் கலந்து இருக்கும். இதன் நிறம் சிகப்பு அல்லது செம்மஞ்சள். செக்கச் செவேல் என்று இருப்பதில் அழகும் உண்டு. கண்ணைக் குத்துகிற மாதிரி பயப்படுகிற தினுசும் உண்டு. உதய சூரியனையும் செம்பருத்தியையும் பார்த்தால் சிவப்பே அழகாயிருக்கிறது. ரத்தத்தைப் பார்த்தால் பயமாயிருக்கிறது. தமஸ் என்பது முழுக்கவும் கெட்ட குணம். சோம்பல், தூக்கம் எல்லாம் இதைச் சேர்ந்தவை. இதன் நிறம் கறுப்பு. அதாவது அஞ்ஞான இருள் மயமானது.
ஸத்வ – ரஜோ – தமோ குணங்களில்தான் எல்லா மனிதர்களும் கட்டுண்டு கிடக்கிறோம். எல்லாம் ஒரே பரமாத்மாவிடமிருந்து வந்ததால், ஸத்வம், ரஜஸ், தமஸ் இவற்றுக்கும் ரூபகமாக பரமாத்மாவின் மூன்று மூர்த்தி பேதங்களைச் சொல்கிறார்கள்.
ஜனனம் என்பதில் நல்லதும் கெட்டதும் கலந்து இருக்கிறது. காம வேகத்தினால்தான் பிறப்பு உண்டாகிறது. எனவே, சிருஷ்டிக்கெல்லாம் காரணமாயிருக்கிற பிரம்மாவை பரமாத்மாவின் ரஜோ குணமூர்த்தி என்று வைத்தார்கள்.
அதில் யாருக்கும் அபிப்பிராய பேதமில்லை. பிரம்மா மஞ்சள் சிவப்பாக இருக்கிறவர்.
பரிபாலனம் செய்து ஸத்வ குணத்தால் நடப்பது, மகா பாவம் செய்கிற நமக்கு, ஒருவேளை சோறு பெறக்கூட லாயக்கில்லை. அப்படியிருந்தும் ஈ எறும்பிலிருந்து சகல ஜீவ ராசிகளுக்கும் உணவு கிடைக்கும்படி செய்து ரக்ஷிப்பவர் மஹாவிஷ்ணு. இவரை சத்வ மூர்த்தி என்று வைத்தார்கள்.
ஸம்ஹாரம் என்பது அழிப்பது. அழிக்கிற குணம் தமஸைச் சேர்ந்தது. இதனால்தான் ஸம்ஹாரமூர்த்தியாகிய சிவனைத் தமோ மூர்த்தி என்கிறார்கள்.
இதிலிருந்துதான் சைவ – வைஷ்ணவப் பிணக்குயாவும் வந்தது போலிருக்கிறது. மஹாவிஷ்ணுவின் பரிபாலனத்தை ஸத்வம் என்று சைவர்கள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். ‘இந்த நிலையற்ற இகலோக வாழ்க்கையைப் பரிபாலிப்பது என்பது மனிதனை மேலும் மேலும் அஞ்ஞானத்தில் தள்ளுகிற காரியம்தான். இதில் ஸத்வம் இல்லை. சிவன்தான் அஞ்ஞானம் நீங்க ஞானோபதேசம் செய்கிறவர். இந்த ஞானபதேசத்துக்குப் பக்குவமாக இல்லாதவர்களைக்கூட, அவர் பரமக்கிருபையோடு அவ்வப்போது கர்மக் கட்டிலிருந்து விடுவித்து, ஓய்வு தருவதற்கே சம்ஹாரம் செய்கிறார். பிறவிகளுக்கு நடுவே சம்ஹாரத்தின் மூலம் விச்ராந்தி தருகிற கருணாமூர்த்தியே சிவபெருமான். இத்தொழில் தமஸ் அல்ல. ஸத்வமே. ‘பரதெய்வமான பரமேசுவரன் ஆக்ஞைப்படிதான் விஷ்ணு பரிபாலனம் செய்கிறார்’ என்று சிவ பக்திர்கள் சொல்கிறார்கள். வைஷ்ணவர்களோ, ‘மஹா விஷ்ணு இவ்வுலகத்தைப் பரிபாலனம் பண்ணுவார். ஆனால் அது மட்டுமில்லை. அவரே பரமபதமான மோக்ஷமும் தருவார்; அவரே முழுமுதற் கடவுள்; பரமசிவன் அவருக்குக் கீழ்ப்பட்டுத்தான் சம்ஹாரம் செய்கிறார் என்கிறார்கள்.
ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதர்களின் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டிருக்கிற நாம் எல்லோரும் சைவரும் அல்ல; வைஷ்ணவரும் அல்ல; நமக்கு ஸ்மார்த்தர் என்று பெயர். ஸ்மிருதிகள் என்கிற தர்ம சாஸ்திரங்கள் சொல்வதை அநுசரிக்கிறவர்களே ஸ்மார்த்தர்கள். நமக்கு சிவன் விஷ்ணு இன்னும் மீதமுள்ள எல்லாத் தெய்வமுமே ஒரே பரமாத்மாவின் வெவ்வேறு ரூபங்கள்தான். இதில் ஏற்றத் தாழ்வே இல்லை.
இப்படி நாம் சொன்னால் மற்றவர்கள் விடுவார்களா? தங்கள் தங்கள் தெய்வத்தின் தொழிலைச் சொல்லி இதுதானே ஸத்வ மூர்த்தி என்று கேட்கிறார்கள். ஸத்வமூர்த்தியைத்தான் வழிபட வேண்டும்? இதனால்தான் இரு கட்சிக்காரர்களும் ஏகமனதாக ரஜோ குணமூர்த்தி என்று வைத்துவிட்ட பிரம்மாவுக்குக் கோவிலோ வழிபாடோ இல்லை.
நாம் நடு நிலையில் நின்று யோசித்துப் பார்ப்போம். பிரம்மாவின் தொழில் ரஜஸ்; நிறமும் ரஜஸ்!. அவர் வசிக்கிற தாமரையும் சிவப்பாக ரஜோ சம்பந்தமாகவே இருக்கிறது. ஆனால் சிவனையும், விஷ்ணுவையும் பாருங்கள். பரிபாலனம் என்கிற ஸத்வத் தொழிலைச் செய்கிற விஷ்ணு வெளுப்பாகத்தானே இருக்க வேண்டும்? ஆனால் இவரோ கரியவராக இருக்கிறார். இது தமஸின் நிறம். அதோடுகூட இவர் ஆதிசேஷன் மேல் நீள நெடுகப் படுத்துக்கொண்டு, எப்போது பார்த்தாலும் தூங்கிக்கொண்டிருக்கிறார். தூக்கமும் தமஸைச் சேர்ந்தது தான்.
சிவனைப் பார்ப்போம். அழிவு என்கிற தமோ துணத்தொழிலைச் செய்கிற இவர் கருப்பாக இல்லை! ‘சுத்த ஸ்படிக ஸங்காசம்’ என்றபடி சுத்த ஸத்வ வெள்ளையாயிருக்கிறார். இவர் இருக்கிற பனிமலையான கைலாஸமும் அப்படியே இருக்கிறது. விபூதிப்பூச்சு, ரிஷப வாகனம் எல்லாம் ஒரே வெளுப்பு. இவர் தூங்கவில்லை. ஒன்று சாந்த தக்ஷிணா மூர்த்தியாக இருக்கிறார். அல்லது நடராஜனாக ஆனந்தக் கூத்தாடுகிறார். இதெல்லாம் ஸத்வமாகவே இருக்கிறது.
இதிலிருந்து என்ன ஏற்படுகிறது? சிவனும் விஷணுவும் தனித்தனியாக ஸத்வமூர்த்தி, தமோ மூர்த்தி என்று பிரிந்திருக்கவில்லை. இருவரிடமும் ஸத்வம், தமஸ் இரண்டும் கலந்திருக்கின்றன. ஒருவர் ரூபத்தில் தமஸ், காரியத்தில் ஸத்வம்; இன்னொருத்தர் ரூபத்தில் ஸத்வம், காரியத்தில் தமஸ்; காரிய ஸத்வத்தை வைத்து வைஷ்ணவர் விஷ்ணுவை வணங்குகிறார்கள். ஸ்வரூப ஸத்வத்தால் சைவர் சிவனையே தெய்வமாககக் கொண்டாடுகிறார்கள். பட்சபாதமில்லாமல் யோசித்தால், இரு குணங்களும் இரு மூர்த்திகளிடமும் கலந்திருப்பதால் ஸாராம்சத்தில் இரண்டும் ஒன்றே என்று தெரியலாம். இரண்டையும் அன்போடு பக்தி செலுத்தி வழிபடலாம்.