புராணத்தில் சதுரகிரி
சித்த புருஷர்களின் தலைமைப் பீடமாக இன்று கருதப்படுவது சதுரகிரிதான்! எண்ணற்ற சித்தர்கள் சதுரகிரி மலையில் கூடி ஆன்மிக விவாதங்கள் நடத்துவது உண்டாம். இதற்கென அவர்கள் பயன்படுத்தும் பல குகைகள் இன்றைக்கும் சதுரகிரி மலையில் பிரமிப்பை ஏற்படுத்தும் விதத்தில் விளங்கி வருகின்றன.
தவத்தின் பொருட்டுத் தாங்கள் நீராடுவதற்காக சித்தர்கள் ஏற்படுத்திய பல தீர்த்தங்களும் இன்றைக்கும் வனப் பகுதியில் இருக்கின்றன.
உண்மையான பல பக்தர்களுக்கு சித்தர்களின் ஆசியும் அவ்வப்போது கிடைத்து வருகின்றன.
‘‘சித்தர்கள் வசித்த குகைகள் இந்த மலைப் பிரதேசத்தில் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. பல குகைகள் இடம்பெற்றிருக்கும் கடினமான பகுதிகளுக்கு மனிதர்கள் எவரும் இப்போதும் செல்ல முடியாது. அத்தகைய பகுதிகளில் இன்றைக்கும் அவர்கள் சூட்சுமமாக வீற்றிருந்து நம்மை ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மலைகளின் உச்சியில் தினமும் நட்சத்திர ரூபத்தில் அவர்கள் வலம் வருகிறார்கள். சில நேரம் நட்சத்திரங்கள் சில திடீரென வானத்தில் வேகமாகப் பாய்ந்து செல்வதைக் காணலாம். அவை கீழிறங்கும்; மேலே போகும். வானத்தில் வண்ண ஜாலமே நடக்கும். அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் இது போன்ற அதிசயக் காட்சிகளை அடிக்கடி இங்கு காணலாம். நட்சத்திர வடிவில் சித்தர்களின் தரிசனம் எவரெவருக்குக் கிடைக்கிறதோ, அவர்கள் எல்லோரும் பெரும் பாக்கியசாலிகள்!’’ என்றார் சதுரகிரியில் வசிக்கும் பெரியவர் ஒருவர் நம்மிடம்.
வான்மீக, கோரக்கர், கமல முனி, சட்டை முனி, அகத்தியர், சுந்தரானந்தர், கருவூரார், அகப்பைச் சித்தர், கொங்கணர், தன்வந்திரி, பாம்பாட்டிச் சித்தர், ராமதேவர், இடைக்காட்டுச் சித்தர், திருமூலர், போகர், அழுகுணிச் சித்தர், காலாங்கிநாதர், மச்ச முனி ஆகியோர் பதினெண் சித்தர்கள் எனப்படுவர் (இவர்களை வேறு வரிசையிலும் சொல்வதுண்டு). மேற்குறிப்பிட்டோர் தவிர புசுண்டர், ரோமர், யூகி, பிரம்மர், நந்தி, புலஸ்தியர், தேரையர் முதலான சித்தர்களும் சதுரகிரியில் வாழ்ந்து பக்தி யோகத்தில் திளைத்தனர். உலகம் உய்யும் பொருட்டு எண்ணற்ற வேள்விகள் புரிந்தனர்.
மேரு முதலிய எட்டு வகை மலைகளுக்கும் தலைமையானது சதுரகிரிதான் என்கிறது ‘சதுரகிரி தல புராணம்’. கிழக்குத் திசையில் இந்திர கிரி; மேற்குத் திசையில் வருண கிரி; வடக்குத் திசையில் குபேர கிரி; தெற்குத் திசையில் எம கிரி. இப்படி ஒரு சதுரம் போல் அமைந்துள்ள மலைகளும் மத்தியில் சிவ கிரி, பிரம்ம கிரி, விஷ்ணு கிரி, சித்த கிரி ஆகிய நான்கு மலைகள். எனவே, இந்த மலைப் பிரதேசம் சதுரகிரி எனப்படுகிறது. சதுரகிரி மலையின் பரப்பளவு ஏறத்தாழ 66 ஆயிரம் ஏக்கர். இந்த மலைப் பகுதியில் பிரதானமாக அமைந்துள்ளன சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் ஆலயங்கள். தவிர பிலாவடி கருப்பர், ரெட்டை லிங்கம் ஆகிய தெய்வங்களும் குறிப்பிடத் தக்கவை. சதுரகிரியின் மையத்தில் சஞ்சீவி மலை இருக்கிறது. சஞ்சீவி மலை என்றதும் வாயு புத்திரனான ஆஞ்ச நேயர் நினைவுக்கு வருகிறாரா? ஆம்! சஞ்சீவி மலை இங்கு இருப்பதற்குக் காரணமே ஆஞ்சநேயர்தான்!
சுவாரஸ்யமான அந்தக் கதையைப் பார்ப்போமா? இலங்கையில் ஸ்ரீராமருக்கும் ராவணனுக்கும் இடையே நடந்த யுத்தத்தின்போது ஒரு நாள் ராவணனின் மகன் இந்திரஜித் எய்த பிரம்மாஸ்திரம், லட்சுமணனைத் தாக்கியது. அதனால் பேச்சு மூச்சில்லாமல் விழுந்தான் லட்சுமணன். தகவல் கேட்ட ஸ்ரீராமர் உடனே ஓடி வந்து லட்சுமணனை எழுப்புவதற்கு என்னென்னவோ முயற்சிகள் செய்தார். சில அவசர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றால் எந்தவிதமான பலனும் ஏற்படவில்லை! அதற்குள் செய்தியறிந்து சுக்ரீவன் உள்ளிட்ட மற்ற வானரப் படையினரும் அங்கு வந்து சேர்ந்தனர்.
நிலைமையை உணர்ந்த சுக்ரீவன் உடனே ஆஞ்சநேயரிடம், ‘‘ஆஞ்சயநேயா… லட்சுமணனை இப்போது இந்த மயக்க நிலையிலிருந்து மீட்க வேண்டியது அவசியம். எனவே, நீ விரைந்து சென்று அஷ்டகுல பர்வதங்களுக்கு அப்பால் இருக்கிற சஞ்சீவி மலையை எடுத்து வா. லட்சுமணனது மூர்ச்சையைத் தெளிவிக்கும் சக்தி வாய்ந்த மூலிகைகள் அங்கு உள்ளன. உடனே புறப்படு!’’ என்றார். அதைக் கேட்ட விநாடியில் ராம நாமத்தைத் துதித்தவாறு விண்ணில் பறந்தார் ஆஞ்சநேயர். அதிகம் தாமதிக்காமல் சஞ்சீவி மலையைக் கண்டுபிடித்து, அதை அப்படியே பெயர்த்து எடுத்தவாறு வானில் பறந்து வந்தார்!
குறிப்பிட்ட சஞ்சீவி மூலிகை எதுவென்று தெரியாமல் ஆஞ்ச நேயர் கொண்டுவந்த மலையிலிருந்து லட்சுமணனுக்குத் தேவையான மூலிகையைப் பறித்தெடுத்து உடனே உரிய சிகிச்சை வழங்கப்பட்டது. அதனால் சற்று நேரத்துக்குள் மயக்கத்திலிருந்து கண் விழித்து எழுந்தான் லட்சுமணன். அதைக் கண்டு அங்கிருந்த அனைவரும் மகிழ்ந்தனர். தக்க நேரத்தில் விரைந்து உதவிய ஆஞ்சநேயரது செயலைப் பெரிதும் பாராட்டிய சுக்ரீவன், ‘‘நன்றி வாயுபுத்திரா… நீ கொணர்ந்த சஞ்சீவி மூலிகை பயனளித்து விட்டது. இது போன்ற சந்தர்ப்பத்தில் இது உலகிலுள்ள ஏனையோருக்கும் பயன்படும் வகையில், இந்த மலையை நீ எங்கிருந்து கொண்டு வந்தாயோ… மீண்டும் அங்கேயே கொண்டு போய் வைத்து விட்டு வா!’’ என்றார்.
அந்த உத்தரவை சிரமேற்கொண்டு சஞ்சீவி மலையைத் தன் வலக் கரத்தில் ஏந்தியவாறு வட திசை நோக்கி விண்ணில் மீண்டும் பறந்து சென்றார் ஆஞ்சநேயர். சதுரகிரி எனப்படும் இந்தப் பகுதியை அவர் கடக்கும்போது, கையில் மலையுடன் பறக்கும் ஆஞ்சநேயரின் வடிவம், அந்த வனத்தில் தவம் செய்யும் முனிவர்களது கவனத்தைக் கவர்ந்தது. ஆஞ்சநேயர் சுமந்து செல்வது, மூலிகைகள் நிறைந்த சஞ்சீவி மலை என்பதைத் தங்களது தவ வலிமையால் உணர்ந்த அந்த முனிவர்கள், அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பினர். அந்த மலையில் உள்ள சஞ்சீவி மூலிகைகள் பிற்பாடு தங்களின் அருந்தவச் செயல்களுக்கு உதவும் என்று கருதினர்.
எனவே அவர்கள், ‘ஆஞ்சநேயர் சுமந்து செல்லும் சஞ்சீவி மலையின் ஒரு பகுதி இந்தச் சதுரகிரியின் மையத்தில் விழ வேண்டும்!’ என்று பிரார்த்தித்தனர். சக்தி வாய்ந்த முனிவர்களது வேண்டுகோள் என்பதால் உடனேயே அந்த மலையிலிருந்து சிறிய பகுதி ஒன்று பெயர்ந்து அசுர வேகத்தில் கீழே விழுந்தது. அதை கவனித்த ஆஞ்சநேயர், ‘அரும் தவம் செய்யும் முனிவர்களுக்கு என்னாலான உபகாரம் இது என்றால், அதற்காக பெரிதும் மகிழ்கிறேன் நான்!’ என்று மன மகிழ்ச்சியுடன் தொடர்ந்து பறக்க ஆரம்பித்தார். அதன் பின், சஞ்சீவி மலையை அது முன்பு இருந்த இடத்திலேயே வைத்துவிட்டுத் திரும்பினார் ஆஞ்சநேயர்.
இது போல் ஏராளமான உயிர் காக்கும் மூலிகைகள் அடங்கிய சதுரகிரி மலைப் பகுதியிலிருந்து வீசும் காற்று, நம் உடலில் பட்டாலே நமது நோய் நொடிகள் பறந்து விடாதா…என்ன!