ஸ்ரீசந்தன மகாலிங்கம்
சந்தன மகாலிங்கம் சதுரகிரியில் குடிகொண்ட கதையைப் பார்ப்போம்.
கயிலாய மலை கோலாகலமாக இருந்தது. பார்வதிதேவியும் பரமேஸ்வரனும் அருகருகே அமர்ந்து அனைவருக்கும் தரிசனம் தந்து கொண்டிருந்தனர். முப்பத்து முக்கோடி தேவர்கள் உட்பட முனிவர்களும் கந்தர்வர்களும் அம்மையையும் அப்பனையும் வலம் வந்து வணங்கி ஆசி பெற்றுச் சென்ற வண்ணம் இருந்தனர். இருவரையும் ஒரு சேர தரிசனம் செய்த திருப்தியில் அனைவரும் திளைத்திருந்தனர்.
அப்போது, அங்கு வந்து சேர்ந்தார் பிருங்கி முனிவர். மகா தபஸ்வியான அவரை, தேவகணங்கள் வரவேற்றனர். வந்தவர், பார்வதி – பரமேஸ்வரர் இருக்குமிடம் சென்றார். தேவியைத் தவிர்த்து, ஈசனை மட்டும் வலம் வந்து வணங்கினார் பிருங்கி முனிவர். இவரது செயல் தேவியைக் குழப்பியது. இதற்கான விளக்கத்தை அறியும் முகமாக பரமேஸ்வரரை நோக்கினாள். ‘என்ன தேவி?’ என்பதுபோல் சற்றே திரும்பிப் பார்த்தார் கயிலைவாசன்.
தனது சந்தேகத்தை அவரிடம் வெளியிட்டாள் பார்வதி. ‘‘ஸ்வாமி… இங்கு நம்மை தரிசிக்க வருபவர்கள் அனைவரும் நம் இருவரையும் சேர்த்தே வலம் வந்து வணங்கி ஆசி பெறுகின்றனர். ஆனால், இந்த பிருங்கி முனிவர் மட்டும் என்னைத் தவிர்த்துவிட்டு தங்களை மட்டும் வலம் வந்து, ஸ்தோத்திரங்கள் பாடி, நமஸ்கரிக்கிறாரே… இதன் காரணம் என்ன?’’
‘‘தேவி… வீடுபேறு எனும் மோட்சத்தை விரும்புபவர்கள் நம் இருவரையும் வணங்குகிறார்கள். இந்த பிருங்கி முனிவர் அப்படிப்பட்டவர் இல்லை. மோட்சத்தை மட்டும் எதிர்பார்ப்பவர். அதை அருள்பவன் நான் என்பதால், என்னை வலம் வந்துள்ளார். இதில் உனக்கு என்ன குழப்பம்?’’ என்று கேட்டார் பரமேஸ்வரர்.
தேவி சமாதானம் ஆகவில்லை. தன்னை ஒரு முனிவர் புறக்கணித்துவிட்டாரே என்று மருகினாள். பிறகு, ‘‘பிருங்கி முனிவரே… சக்தியையும் சிவத்தையும் அனைவரும் சேர்த்து வணங்கும்போது, நீர் மட்டும் என்னைப் புறக்கணித்ததை, எனக்கு ஏற்பட்ட அவமானமாகக் கருதுகிறேன். சக்தி இல்லை என்றால் உமது சரீரம் இல்லை. எனவே, எனது அம்சமான சக்தியை நீர் இப்போதே இழப்பீர். இனி, உம்மால் எப்படி எழுந்து நடமாட முடிகிறது என்று பார்க்கிறேன்…’’ என்று சொன்னவள், பிருங்கியிடம் இருந்த சக்தி – அதாவது பலம் அனைத்தையும் ஒரு விநாடி நேரத்தில் அபகரித்தாள்.
அவ்வளவுதான்… அடுத்த கணம் துவண்டு விழுந்தார் பிருங்கி முனிவர். உடல் துவண்டது. பிரயத்தனப்பட்டு எழ முயற்சித்தார். அதனால் இரண்டு அல்லது மூன்று முறை தடுமாறிக் கீழே சரியவும் செய்தார். தன் பக்தன், சக்தி இழந்து கண்ணெதிரே தவிப்பதைக் கண்டு சும்மா இருப்பாரா ஈசன்!
மனம் இரங்கினார் சிவனார். அதனால், ‘‘இந்தா, பெற்றுக்கொள்!’’ என்று அவரிடம் ஒரு ஊன்றுகோலைக் கொடுத்தார் இறைவன். அதைப் பெற்றுக்கொண்ட பிருங்கி முனிவர் தட்டுத் தடுமாறி, ஒரு குழந்தை நடைபழகுவதுபோல் நடந்தார். இறைவன் கொடுத்த ஊன்றுகோல் அப்போது அவருக்குப் பெரிதும் உதவியது. சிவனுக்குத் தனது நன்றியைத் தெரிவிக்கும் வண்ணம் மீண்டும் ஒரு முறை பரமனை… பரமனை மட்டும் வலம் வந்து நமசிவாய நாமம் பாடி அவரைத் துதித்தார். இப்படிப்பட்ட பிருங்கியின் சிவ பக்தியை என்னவென்பது!
காரண காரியமின்றி எதுவும் நடப்பதில்லை. அதனால், பிருங்கி முனிவரைக் காரணமாக வைத்து ஏதோ ஒன்று நிகழப் போகிறது என்று மகரிஷிகள் உணர்ந்தனர்.
ஏற்கெனவே கோபத்தில் இருந்த பார்வதிதேவிக்கு, பிருங்கி முனிவரின் செயல் மேலும் எரிச்சலைத் தந்தது மட்டுமின்றி, ‘ஈசனுக்கும் எனக்கும் நடுவில் இடைவெளி இருப்பதால்தானே பிருங்கி முனிவர் இப்படி தனியாக வலம் வர முடிகிறது? அந்த இடைவெளியே இல்லாமல் ஆகிவிட்டால்..? அப்படியானால், ஈசனின் திருமேனியில் பாதியைக் கேட்டுப் பெற வேண்டும். அதன் பிறகு, சக்தியான என்னை எவராலும் புறக்கணிக்க முடியாதல்லவா?’ என்று முடிவெடுத்தவள், ஈசனின் அருள் பெற விழைந்தாள்.
அதற்கு என்ன வழி? தவம்தான். எனவே, கடும் தவத்தின் மூலம் தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள விரும்பினாள். ‘தனிமையில் தவம் செய்வதற்கு ஏற்ற இடம் பூலோகமே!’ என்று தீர்மானித்து, கயிலாயத்திலிருந்து புறப்பட்டு வந்தாள். பூலோகத்தில் தவத்துக்குப் பொருத்தமான இடம் தேடி அலைந்தபோது, அவள் கண்களுக்கு இந்த சதுரகிரி தென்பட்டது. தேனருவிகளும் கற்பக விருட்சங்களும் நிறைந்த இந்த வனப் பகுதி, அன்னைக்கு மிகவும் பிடித்துப்போனது. அதன் இயற்கை அழகில் மெய்மறந்தாள் அன்னை. எண்ணற்ற தவசீலர்கள் இங்கு பக்தியுடன் தவத்திலும் வேள்வியிலும் மூழ்கியிருப்பதைக் கண்டாள்.
சதுரகிரியில் சட்டை முனிவரது ஆசிரமம் (சட்டை முனிவர் வாழ்ந்த குகை சந்தன மகாலிங்கம் சந்நிதி அருகே உள்ளது. இவரைப் பற்றி ஏற்கெனவே பார்த்தோம்) அருகே கல்லால மரத்தின் அடியில் அமர்ந்தாள் அன்னை பார்வதிதேவி தவத்தைத் துவங்கினாள்.
அன்னையின் வரவால் இயற்கையே புத்துணர்ச்சி பெற்றது. பூமழை தூவியது; செடி _ கொடிகள் பூத்துக் குலுங்கின. அன்னையின் ஆசியால் சதுரகிரியில் நிகழும் அற்புதங்களைக் கண்டு மகிழ்ந்தனர் அங்கு தவம் செய்துவந்த முனிவர்கள். சட்டை முனிவர், வால்மீகி போன்றோர் கல்லால மரத்தின் அருகே வந்து, தவம் புரியும் மலைமகளைப் பணிந்து வணங்கினர். அவளை வலம் வந்து போற்றித் துதித்தனர்.
பிறகு, ‘‘உலகைக் காத்து ரட்சிக்கும் அன்னையே… எங்களது தவப் பலனால் தாங்கள் இங்கு எழுந்தருளி இருப்பதாகக் கருதுகிறோம். எங்களை ஆசீர்வதிப்பதற்காக சதுரகிரியில் எழுந்தருளி இருக்கும் அகில லோக நாயகிக்கு அனந்தகோடி நமஸ்காரங்கள்!’’ என்று அவளின் திருவடி தொழுதனர்.
அனைவரையும் கனிவுடன் பார்த்த அன்னை புன்னகையுடன், ‘‘மலையே மகாலிங்கமாகக் காட்சி தரும் இந்த மகோன்னதத்தைக் கண்டு யாமும் வியந்தோம். உங்களது தவமும் அறப் பணிகளும் எக்காலமும் சிறந்து விளங்க ஆசீர்வதிக்கிறேன்!’’ என்றாள்.
அன்னையின் ஆசீர்வாதத்தை அகம் குளிர ஏற்றுக்கொண்ட சட்டை முனிவரும் வால்மீகியும், ‘‘தாயே… இந்தப் புனிதமான சதுரகிரியில் தாங்கள் எழுந்தருளி இருக்கும் காரணத்தை நாங்கள் தெரிந்துகொள்ளலாமா?’’ என்று கேட்டனர் பணிவுடன்.
‘‘எம்பிரானாம் ஈசன் சர்வ லோகங்களையும் தம் முக்கண்களால் காத்து வருகிறார். அந்தப் பெருமானின் செயல்பாடுகளில் எப்போதும் உடனிருந்து உறுதுணை புரிய விரும்புகிறேன். எனவே, முக்கண்ணனின் இட பாகம் பெற்று அர்த்தநாரீஸ்வரர் வடிவம் அடைவதற்காக தவம் புரிய வந்துள்ளேன். உறுதி குலையாத தவத்தின் மூலம் எந்த ஒரு வரத்தையும் ஈசனிடம் இருந்து பெறலாம். இதை அனுபவபூர்வமாக உணர்ந்தவள் நான். ஈசனை நினைத்து தவம் இருந்துதான் அவரை மணம் புரிந்துள்ளேன். நான் வேண்டும் வரங்கள் என் தவவாழ்க்கை எனக்குப் பெற்றுத் தரும் என்று பரிபூரணமாக நம்புகிறேன். தவத்தின் ஓர் அங்கமாக அங்கே, ஒரு லிங்கம் ஸ்தாபித்து வழிபாடுகளைத் துவக்கப் போகிறேன்!’’ என்றாள். அங்கு கூடி இருந்த முனிவர்கள் உளம் பூரித்தனர்.
தேவி, தன் திருவுளப்படி ஒரு புரட்டாசி மாதத்தில் வளர்பிறை தசமி தினத்தன்று, அங்கே பிரமாண்டமாக வளர்ந்திருந்த ஒரு சந்தன மரத்தின் அடியில் சிவலிங்கத் திருமேனி ஒன்றை ஸ்தாபித்தாள். தான் வடித்த உருவைக் கண்டு அந்த அன்னையே அதிசயித்தாள். அப்பனுக்கு அபிஷேகம் செய்வதற்காக ஆகாய கங்கையை அங்கே தருவித்தாள். இந்த ஆகாய கங்கையின் தீர்த்தம்தான் இன்றைக்கும் சந்தன மகாலிங்கம் அபிஷேகத்துக்குப் பயன்படுகிறது.
பல வகையான வாசனைத் திரவியங்களைக் கொண்டு லிங்கத் திருமேனிக்கு மணம் கூட்டினாள். சந்தனக் குழம்பைச் சார்த்தினாள். உயர்ரகத் திருநீறை அவன் மேனியில் பூசினாள்.
வனத்தில் இருந்து வாசனைப் பூக்களைப் பறித்தாள். வில்வங்களைச் சேகரித்தாள். அழகிய மலர் மாலையைத் தயார்செய்து, அவன் திருமேனியை அலங்கரித்தாள். சிவனின் திருநாமங்களைச் சொல்லி, புஷ்பங்களை எடுத்து லிங்கத் திருமேனிக்கு அர்ச்சித்தாள். பல விதமான பதார்த்தங்களைத் தன் கைப்படத் தயாரித்து நைவேத்தியம் செய்தாள். இத்தகைய பூஜை இருபத்தோரு நாட்கள் தொடர்ந்தது. முடிவில், முக்கண்ணனாம் சிவபெருமான் சதுரகிரியில் ரிஷபாரூடராக தேவிக்கு தரிசனம் தந்தான். பின்னர், அறிந்தும் அறியாத ஈசன் கேட்டான்: ‘‘உனது தவத்தால் யாம் மகிழ்ந்தோம். என்ன வரம் வேண்டும் கேள் தேவி?’’
ஈசனை நமஸ்கரித்து வணங்கிய பார்வதிதேவி சொன்னாள்: ‘‘நாதா! சிவம் இல்லையேல் சக்தி இல்லை; சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்னும் உண்மையை உலகுக்கு உணர்த்த நாம் இருவரும் ஒன்றிணைந்த ஒரு வடிவமாகக் காட்சியளிக்கும் வரத்தை எனக்குத் தந்தருள வேண்டும்.’’
‘‘அப்படியே ஆகட்டும்!’’ என ஈசனும் அருளினார். அதன் பின் ஈசனின் திருமேனியில் இடப் பாகம் பெற்று, அர்த்தநாரீஸ்வரராகி மகிழ்ந்தாள் அன்னை. அதன் பின்னர், அங்கு கூடி இருந்த சட்டை முனிவர் உட்பட அனைவருக்கும் ஆசி வழங்கினர் இருவரும்.
அந்த நேரத்தில் மகரிஷிகளைப் பார்த்து இறைவன் சொன்னார்: ‘‘அன்னை பார்வதிதேவியால் பூஜிக்கப்பட்ட இந்த லிங்க வடிவத்தை உங்களைத் தவிர வேறும் எவரும் பூஜிக்கலாகாது. தேவியால் பூஜிக்கப்பட்டதாயினும், சுகங்களை விரும்பாமல் என்னுடன் கலக்கும் முக்திப் பேற்றை எதிர்பார்த்தே அவள் என்னை வணங்கி உள்ளாள். எனவே, உலக இன்பத்தை விரும்புவோர் என்னை பூஜிக்கக் கூடாது.’’
ஆம்! அதுதான் இன்றைக்கும் பார்வதிதேவியால் ஸ்தாபிக்கப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்ட பெருமைக்குரிய சந்தன மகாலிங்கத்தை ஆராதிக்கும் தலைமைப் பூசாரி, பிரம்மசாரியாகவே இருந்து வருகிறார். இது வழி வழியாகத் தொடர்ந்து வருகிறது.
முனிவர்களுக்கும் மகரிஷிகளுக்கும் அருளிய இறைவனும் இறைவியும் அதன் பின் கயிலாயமலை புறப்பட்டுச் சென்றனர். சந்தன மரத்தின் அடியில் உமாதேவி பிரதிஷ்டை செய்தமையால் சந்தன மகாலிங்கம் என்று அழைக்கப்பட்டு வரும் இந்தப் பெருமானை, தேவிக்கு அடுத்ததாக பூஜை செய்யும் பேறு பெற்றவர் சித்த புருஷரான சட்டை முனிவர்!
தேவி தவம் புரிந்த பகுதி, ஆலயத்தின் அருகே தனியே அடையாளமிட்டு வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அந்த இடத்தை தரிசித்து பக்தியுடன் வணங்கிச் செல்கிறார்கள். சந்தன மகாலிங்கத்துக்கு, பார்வதிதேவி தற்போதும் தவம் மற்றும் வழிபாடுகளை இங்கிருந்து செய்வதாக ஓர் ஐதீகம் நிலவுகிறது. சந்தன மகாலிங்கத்தின் சந்நிதி அருகே அன்னையை நினைத்துச் செய்யப்படும் தவமும் தியானமும் மிகுந்த பலன் கொடுக்க வல்லது.
சந்தன மகாலிங்கம் ஆலயத்தின் அமைவிடம் பற்றி சித்த புருஷரான கோரக்கர் சொல்கிறார்:
‘சுந்தர மகாலிங்கம் திருக்கோயிலின் வட திசைப் பக்கம் செல்கிற பாதை வழியே கூப்பிடு தூரம் சென்றால், அங்கு ஓர் ஆறு குறுக்கிடும். அந்த ஆற்றைக் கடந்து வட திசையில் மேலும் சற்றுத் தொலைவு பயணித்தால், அம்பு விடுகிற தொலைவுக்கு அப்பால் அந்தப் பாதை, மேற்கு முகமாகச் செடிகள் அடர்ந்த காட்டுக்குள் போகும். அதையும் கடந்து அரை நாழிகை வழித் தொலைவு போனால் பெரிய காவு ஒன்று வரும். அந்தக் காவுக்குள் நுழைந்து சென்றால், சுமார் அரை நாழிகை வழித் தொலைவில் சந்தன மகாலிங்கம் ஆலயம் இருக்கிறது.
அந்தக் கோயிலுக்கு வட திசையில் காளி வாய்க்காலிலிருந்து தீர்த்தம் வந்து விழுகிறது. அதில் தீர்த்தமாடிய பிறகு, சந்தன மகாலிங்கத்தை தரிசிக்க வேண்டும். சந்தன மகாலிங்கத்துக்குக் கூப்பிடு தொலைவில் தென்மேற்கில் சட்டை முனிவர் குகை இருக்கிறது.’
ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கோரக்கர் சொன்ன அமைப்பு இன்றைக்கும் மாறாமல் கிட்டத்தட்ட அப்படியே இருப்பதை இயற்கையின் அதிசயம் என்றே சொல்ல வேண்டும். விமானங்கள், சந்நிதிகள், சட்டைநாதர் குகை என்று கொள்ளை அழகுடன் காட்சி தருகிறது சந்தன மகாலிங்கம் திருக்கோயில்.
18 சித்தர்களும் சேர்ந்து ஒரே சந்நிதியில் காட்சி தருவது சந்தன மகாலிங்கம் கோயிலில் மட்டுமே. வருடத்துக்கு ஒரு முறை இந்த சித்தர்களுக்கு விசேஷ அபிஷேக – ஆராதனைகள் நடைபெறும்.
சித்தர் சட்டைநாதர் வாழ்ந்த குகையை இப்போதும் இங்கு காணலாம். சந்தன மகாலிங்கம் சந்நிதியில் இருந்து கூப்பிடு தூரத்தில் அமைந்திருக்கிறது இந்த குகை.சதுரகிரியில் சந்தன மகாலிங்கம் கோயிலில் மட்டுமே அம்பாளுக்கு தனிச் சந்நிதி உண்டு.