‘உனக்கு ஆபத்து காத்திருக்கிறது!’
அடுத்துச் சொல்லப் போகிற அனுபவத்தை உணர்ந்தவர் – திருவனந்தபுரத்து அன்பர் ஒருவர். முதல் முறை இவர் சதுரகிரிக்குச் சென்று வந்த பின், தான் எப்போதும் தரிசிக்கும் சக்தி உபாசகியான ஒரு பெண்மணியைச் சந்தித்தார். அன்பரின் மனதில் ஏதாவது குழப்பங்கள் ஏற்படும்போதும், சில நல்ல வேளைகளின்போதும் சக்தி உபாசகியைச் சென்று தரிசிப்பது வழக்கம். உபாசகி சொல்லும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அன்பரைப் பொறுத்தவரை அப்படியே பலிக்கும். இதனால், அந்த உபாசகியை ஒரு ஆன்மிக குரு போலவே பாவித்து வந்தார்.
சதுரகிரி மகாலிங்கம் சந்நிதியின் விபூதி பிரசாதத்தை உபாசகியிடம் தந்த அன்பர், அவரது ஆசியைப் பெற்றார். சதுரகிரிக்குப் போய்ப் பழக்கம் இல்லாவிட்டாலும், அந்த மலையின் ஆன்மிகப் பெருமைகளையும், புராண மகிமைகளையும் நன்றாகவே அறிந்திருந்தார் உபாசகி. அன்பரின் மேல் உபாசகிக்கு ஏனோ தெரியவில்லை… அபரிமிதமான அபிமானம் கொண்டிருந்தார். அன்பரின் நல்லது கெட்டதுகளை ஓரளவுக்கு முன்கூட்டியே சொல்லி, அவ்வப்போது அவரைக் கொஞ்சம் நாசூக்காக உஷார்ப்படுத்தி வந்தார். இதனாலும், அன்பருக்கு உபாசகி மேல் அப்படி ஒரு பக்தி.
இரண்டாவது முறையாக சதுரகிரிக்குச் செல்ல வேண்டும் என்கிற ஆசை திருவனந்தபுரத்து அன்பருக்கு வந்தது. புனிதமான ஒரு மலைக்குப் பயணப்படப் போகிறோமே என்கிற ஆர்வத்தில் தான் பயணப்படுவதற்கு முதல் நாள் காலை உபாசகியைப் பார்க்க அவரது இல்லத்துக்குச் சென்றார்.
வழக்கமான புன்னகையுடன் அன்பரை வரவேற்ற உபாசகி, அமரச் சொன்னார். ‘‘என்ன விஷயம்?’’ என்று இயல்பாகக் கேட்டார். அதற்கு அன்பர், ‘‘அமாவாசை அன்று மகாலிங்கத்தைத் தரிசனம் செய்வதற்காக நாளை இரவு சதுரகிரிக்குப் பயணப்படப் போகிறேன். உங்களிடம் சொல்லிவிட்டு ஆசி வாங்கிச் செல்லலாம் என்று வந்தேன்’’ என்று சொன்னார்.
அன்பரின் முகத்தைத் தீர்க்கமாகப் பார்த்த உபாசகி, சட்டென முகம் மாறி, ‘‘சற்று நேரம் பொறுத்திரு…’’ என்று சொல்லிவிட்டு, தான் வழக்கமாக தியானம் செய்யும் அறைக்குச் சென்றார். ‘வழக்கமாகத் தன்னைப் பார்த்தவுடன், கலகலப்பாகப் பேசும் உபாசகி, திடீரென்று இன்று மட்டும், தன்னை இங்கு அமரச் சொல்லி விட்டு ஏன் தியானம் செய்யப் போகிறார்… இது எனக்குப் புது அனுபவமாக இருக்கிறதே?’ என்று அன்பர் குழம்பினார்.
நேரம் ஓடிக் கொண்டே இருந்தது. சில நிமிடங்கள் கழித்து உபாசகி திரும்பி வந்தார். ஆனால், அவருடைய முகத்தில் வழக்க மாக இருக்கும் பிரகாசம் இல்லை. ‘‘நாளை சதுரகிரிக்குப் போய்த்தான் ஆகவேண்டுமா?’’ என்று கேட்டார் அன்பரைப் பார்த்து.
அன்பர் என்ன பதில் சொல்வதென்று திணறி விட்டார். காரணம்– இவர் மட்டும் சதுரகிரிக்குச் செல்லவில்லை. தன்னுடன் வேறு சில நண்பர்களையும் கூட்டிச் செல்லலாம் என்று சில நாட்களுக்கு முன்னேயே திட்டம் போட்டு, எல்லாவற்றுக்கும் தயாராக இருந்தார். இந்த நேரத்தில் இவர் ஏன் இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறார் என்று குழம்பினார். பிறகு, ‘‘ஆமாம்மா… பலரோட சேர்ந்து போகலாம்னு இருக்கேன்’’ என்று பிசிறு தட்டிய குரலில் சொன்னார்.
‘‘உனது இந்த சதுரகிரி பயணத்தின்போது உனக்கு ஒரு கண்டம் காத்திருக்கிறது’’ என்றார் அமைதியாக.
‘‘கண்டமா… எனக்கா… அம்மா! நீங்க சொல்ல வர்றது எனக்குப் புரியலியே’’ என்று தடுமாறினார்.
‘‘ஆமாம்பா… இந்தப் பயணத்தின்போது உன்னுடைய உயிருக்கு ஓர் ஆபத்து காத்திருக்கிறது. அதனால்தான் பயணம் புறப்பட வேண்டும் என்று தீர்மானித்துவிட்டாயா என்று கேட்டேன்’’ என்றார்.
‘‘நிச்சயம்மா… என்னை நம்பி பல பேர் தயாரா இருக்காங்க. ரொம்ப நாளா பேசி, நாளைக்குப் புறப்படறதுன்னு முடிவெடுத்திருக்கோம்.’’
உபாசகி பதில் ஏதும் பேசவில்லை.
பிறகு, அன்பரே தொடர்ந்தார்: ‘‘அம்மா! நான் எவருக்கும் எந்தக் காலத்திலும் தீங்கு நினைக்காதவன். அமாவாசை தினத்தன்று மகாலிங்கத்தைத் தரிசிக்க வேண்டும் என்பது தீர்மானிக்கப்பட்ட ஒன்று. நான் மகாலிங்கத்தை முழு மனதாக நம்புகிறேன். எனது உள்ளுணர்வுகளை அவர் நன்றாகவே அறிவார். எனக்கு ஒரு கண்டம் இருந்து, சதுரகிரியில் என் உயிர் போக வேண்டும் என்பது மகாலிங்கத்தின் தீர்மானமாக இருந்தால், அதை நான் வரவேற்கிறேன். அவனது திருப்பாதங்களில் மனதார நான் இப்போது சரண் ஆகிவிட்டேன். அவன் முடிவு செய்யட்டும், என் கண்டத்தை…’’
அன்பரது குரலில் தெரிந்த உறுதியைக் கண்டு சற்றே பிரமித்தார் உபாசகி. பிறகு, அன்பரிடம் அருகில் உள்ள கடைக்குச் சென்று ஒரு எலுமிச்சம்பழம் வாங்கி வரச் சொன்னார்.
குழப்பத்துடனும் படபடப்பாகவும் உபாசகியின் வீட்டுக்கு அடுத்துள்ள கடைக்கு ஓடினார் அன்பர்.
எலுமிச்சம் பழத்தோடு உபாசகியின் வீட்டுக்குள் வேகவேகமாக நுழைந்தார் அந்த அன்பர். உபாசகியிடம் பழத்தைக் கொடுத்தார். அதைக் கையில் வாங்கியபோதும், ‘‘அவசியம் போய்த்தான் ஆகணும்னு நீ தீர்மானமாத்தான் சொல்றியா?’’ என்று மீண்டும் ஒரு முறை கேட்டார்.
‘‘ஆமாம்மா… நான் ஒருத்தன் மட்டும் செய்த முடிவு இல்லைன்னு சொன்னேன் இல்லையா… இறைவன் தீர்மானிக்கிற எந்த ஒரு வழிக்கும் நான் கட்டுப்படறதா இருக்கேன்’’ என்றார்.
எலுமிச்சம் பழத்தைத் தன் வலக் கையில் வைத்து உருட்டிக் கொண்டே கண்களை மூடி, சில மந்திரங்களை ஜபித்தார் உபாசகி. ஓரிரு நிமிடங்கள் கடந்த பின் அந்தப் பழத்தின் மேலே விரல்களால் பாவனையாக ஒரு கோடு போட்டார். பிறகு எலுமிச்சம் பழத்தையும், பிரசாதமாகக் கொஞ்சம் மஞ்சள் தூளையும் அன்பரின் கையில் கொடுத்தார். ‘‘சதுரகிரிக்கு நீ எடுத்திட்டுப் போற பையில இந்த எலுமிச்சம் பழம் இருக்கட்டும். பிரசாத மஞ்சள் தூளையும் அதுபோலவே பையில வெச்சுக்கோ. பயப்படாத… அம்மா எப்பவும் உன் கூடவே இருப்பா’’
என்றவர், புறப்பட ஆயத்தமான அன்பரிடம், ‘‘ஒரு நிமிஷம்…’’ என்றார்.
அன்பர் நின்றார். ‘‘நடக்கும்போதோ, சரிவான பாதையில் இறங்கும்போதே உனக்கு ஒரு சறுக்கல் வரலாம். அதற்காக இப்போதே கவலைப்பட ஆரம்பித்து விடாதே. எச்சரிக்கையாகவும், கூடுதல் கவனத்துடன் இந்தப் பயணம் இருக்கட்டும். யாத்திரை முடிந்து திரும்ப வந்தவுடன், இந்த எலுமிச்சம் பழத்தை என்னிடம் எடுத்து வா’’ என்றார் உபாசகி.
‘‘நிச்சயமா… உங்க ஆசீர்வாதம் எனக்கு இருந்தா போதும்’’ என்றவர், உபாசகியின் கால்களில் விழுந்து நமஸ்கரித்துவிட்டு, விடைபெற்றுப் புறப்பட்டார்.
நடக்கும்போது அன்பருக்கு ஒரு சந்தேகம் வந்தது. ‘இது போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வாகப் பலரும் எலுமிச்சம் பழத்தை மந்திரித்துத் தருவார்கள். அதோடு அது முடிந்துவிடும். ஆனால், இந்த எலுமிச்சம் பழத்தைத் திரும்பக் கொண்டு வா என்கிறாரே… ஒருவேளை – திரும்பி வருவேனோ, மாட்டேனோ என்கிற சந்தேகம் இவனுக்கு இருக்கக் கூடாது என்பதற்காக – ஒரு நம்பிக்கை ஊட்டுவதற்காக அப்படிச் சொல்லி இருப்பாரோ’ என்றெல்லாம் குழம்பி, தன் வீட்டுக்கு வந்தார் அன்பர். உபாசகி கொடுத்த எலுமிச்சம் பழத்தையும், பிரசாத மஞ்சள் தூளையும், சதுரகிரிக்குத் தான் எடுத்துச் செல்லும் தோள்பையில் (ஷோல்டர் பேக்) மறக்காமல் வைத்துக் கொண்டார்.
மறந்தும்கூட இந்த விஷயத்தைப் பற்றித் தன் குடும்பத்தாரிடம் மூச்சு விடவில்லை அன்பர். ஒருவேளை – வீட்டாருக்குத் தெரிந்தால், தேவை இல்லாமல் கலவரப்பட ஆரம்பித்து விடுவார்கள்… இதனால், நண்பர்களுக்காக அவர் செல்லும் பயணத் திட்டம் கலைக்கப்பட்டுவிடும். இதை எல்லாம் யோசித்தவர், ‘கண்டம்’ விஷயத்தை மறந்து இயல்பாகவே வீட்டில் நடந்து கொண்டார்.
அன்று இரவு… திருவனந்தபுரத்தில் இருந்து அரசுப் பேருந்து மூலம் பயணம் தொடங்கியது. ஆறு நண்பர்கள் அவருடன் புறப்பட்டார்கள். உபாசகி சொன்ன விஷயத்தை வீட்டில் மட்டுமல்ல… நண்பர்களிடமும் சொல்லவில்லை அன்பர். ‘எதற்குத் தேவை இல்லாத கலவரம்’ என்கிற நினைப்பு அன்பருக்கு.
பேருந்துப் பயணத்தின்போது முதலில் எதுவும் பேசாமல் அமைதி காத்து வந்தார் அன்பர். ‘வழக்கமான உற்சாகத்துடன் காணப்படுகிற இவர் ஏன் இன்று அமைதியாக இருக்கிறார்? ஏதாவது பிரச்னையா?’ என்று குழம்பிய நண்பர்கள் ஆளாளுக்கு ஒரு கேள்வி கேட்கத் தொடங்கியதும், சகஜ நிலைக்குத் தன்னை மாற்றிக் கொண்டார் அன்பர்.
தாணிப்பாறையில் இருந்து இவர்களது பயணம் துவங்கியது. மலை ஏறுவதற்கு முன் அடிவாரப் பகுதியில் ஒரு கற்பூரத்தை ஏற்றி வைத்து, மகாலிங்கத்தை மனமார வணங்கிவிட்டு நடை யாத்திரையைத் துவங்குவது அன்பரின் வழக்கம். அதுபோல் இந்த முறையும் அடிவாரத்தில் ஒரு கற்பூரத்தை ஏற்றிவிட்டு, ‘மகாலிங்கமே… உன்னை நம்பித்தான் உன் மலைக்கு வந்து கொண்டிருக்கிறேன். நீ என்னுடன்தான் இருக்கிறாய் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். உபாசகி சொன்னபடி எனக்கு ஏதாவது கண்டம் என்றால், அதில் இருந்து என்னைக் காப்பாற்று. ஒருவேளை விதிப் பயன்படி எனது ஆயுள் நிறைவடைய வேண்டும் என்று நீ தீர்மானித்திருந்தால் என்னை முழுமையாக எடுத்துக் கொள். எங்கேனும் சறுக்கி விழுந்து அரைகுறையாக அடிபட்டு, மற்றவர்களுக்கு பாரமாக என் வாழ்வை ஆக்கி விடாதே… எவருக்கும் பாரமாக இருக்க நான் விரும்பவில்லை. முடிவு உன் கையில்’ என்று மனமாரப் பிரார்த்தித்துக் கொண்டு பயணத்தைத் தொடங்கினார்.
‘மகாலிங்கத்துக்கு அரோஹரா’ என்கிற கோஷத்துடன் அன்பரும் அவருடன் வந்த ஆறு நண்பர்களும் சதுரகிரி யாத்திரையைத் தொடங்கினர். சலசலவென்று கொட்டும் அருவி நீரை வியந்து பார்த்தபடியே புதிதாக வந்தவர்கள் உற்சாகமாக நடக்கத் தொடங்கினர்.
ஆனால், அன்பருக்கு மட்டும் அன்று அந்த மலை பேரமைதியுடன் இருப்பதாகப் பட்டது. வழக்கமாகச் செல்லும் பக்தர்கள் கூட்டம் அன்றைய தினத்தில் இல்லை. ‘கீச் கீச்’சென்று உலவிடும் சில பறவைகளையும், எதைக் கொண்டு வந்தாலும் பிடுங்குவதற்கென்று ஓடி வரும் குரங்குக் கூட்டத்தையும் காணவில்லை. ‘இவை எல்லாம் நமக்கு ஏதோ ஒரு அமைதியை உணர்த்துகிறதோ’ என்று அன்பர் நினைத்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. கண்டத்தை மறந்தார்; கடவுளை நினைத்தார்.
ஒவ்வொரு இடத்தைக் கடக்கும்போதும் அந்த இடத்தின் பெயர் என்ன, அதற்கு என்ன விசேஷம் என்கிற கதைகளையும் புராண விஷயங்களையும் துல்லியமாக எடுத்துச் சொல்லி நண்பர்களை வழிநடத்திச் சென்று கொண்டிருந்தார்.
‘கோரக்கர் குகை’ எனப்படும் கோரகுண்டா பகுதி வந்தது. சதுரகிரி மலைப் பாதையின் மத்தியப் பகுதி இது. எவருமே இங்கு சற்று ஓய்வெடுத்துக் கொண்டே அதன் பிறகே யாத்திரையைத் தொடர்வார்கள். அதன்படி அன்பரும் அவருடன் வந்த நண்பர்களும் அங்கே சற்று அமர்ந்தனர். பொதுவாக, சதுரகிரி யாத்திரை செல்பவர்கள், ஆசுவாசத்துக்காக எங்கேனும் ஓரிடத்தில் அமர்ந்தால், அடுத்து உடனே எழுந்து நடக்க வேண்டும் என்றால், கொஞ்சம் அலுத்துக் கொள்வார்கள். ‘இன்னும் பத்து நிமிஷம் கழித்துக் கிளம்பலாமே’ என்று புறப்படுவதற்குத் தயாராக இருப்பவர்களையும் தாமதப்படுத்துவார்கள். இது இயல்பு. அதுபோல் ‘கால் மணி நேரம் உட்கார்ந்து விட்டுப் புறப்படலாம்’ என்று தீர்மானிக்கப்பட்டு உட்கார்ந்தவர்கள், அரை மணி நேரம் ஆகியும் புறப்படுவதாகக் காணோம்.
இந்த இடத்தில்தான் தனக்கான கண்டம் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்பது அப்போது அந்த திருவனந்தபுரம் அன்பருக்குத் தெரியாது.
கோரகுண்டா பகுதியில் பக்தர்கள் ஓய்வெடுக்கும் இடத்துக்குக் கீழே ஒரு பாதை இறங்கிச் செல்லும். இங்கே ஒரு குகை உண்டு. அதுதான் கோரக்கர் குகை. குகைக்குள் ஒரு லிங்கம் உண்டு. குகைக்குள் சென்று இந்த லிங்கத்தை வழிபட்டுச் செல்வதைப் பலர் பாக்கியமாகக் கருதுவார்கள். ஆனால், இந்தக் குகைக்குள் சாமான்யமாக எவரும் செல்ல முடியாது. காரணம், சலசலத்து ஓடும் அருவி நீரின் அருகே உள்ள சில பாறைகளை வாட்டமாகப் பிடித்துக் கொண்டும், அங்கிருக்கும் சில மரங்களின் வேர்களை நன்றாகப் பற்றிக் கொண்டும் குகைக்குள் ஒரு ‘ஜம்ப்’ செய்யவேண்டும். அப்படிப் போனால்தான், குகைக்குள் உள்ள அந்த லிங்கத்தைத் தரிசிக்க முடியும். விடலை வயது பசங்களுக்கு மட்டுமே இது சாத்தியம். எனவே, இங்கு வரும் பல பக்தர்களும் அருவி நீர்ப் பிரதேசத்தில் இருந்து சற்றுத் தள்ளியே நின்று மானசீகமாக லிங்கத்தைத் தரிசித்துச் செல்வார்கள்.
தவிர – முக்கியமான ஒன்று… குகைக்குள் ‘ஜம்ப்’ செய்யும்போது சிறிது தப்பினாலும் தண்ணீருக்குள் விழுந்து விட நேரும். இங்கே தண்ணீரின் ஆழம் என்பது சாதாரணம் இல்லை. சுமார் நாற்பதடி. இது பலருக்கும் தெரிவதில்லை. சில நேரங்களில் இங்கே எப்போதும் தென்படும் சில சுமையாட்கள் இது பற்றிச் சொல்வது வழக்கம். இங்கே விழுந்து அடிபட்டவர்கள் ஏராளம். வருடத்தின் அனைத்து நாட்களிலும் இங்கே இந்த அளவு தண்ணீர் பெரிய குளம் போல் இருப்பது வழக்கம்.
அரை மணி நேரம் உட்கார்ந்தவர்கள் அப்படியே கிளம்பிப் போயிருக்கலாம். கோரக்கர் குகையின் மகிமையைப் பற்றிச் சொன்ன திருவனந்தபுரம் அன்பரை ஆர்வமுடன் பார்த்த அவருடைய நண்பர்கள், ‘‘இவ்வளவு தூரம் வந்துவிட்டோம். குகைக்குள் போய் லிங்கத்தையும் தரிசித்து வந்துவிடுவோமே?’’ என்று ஆரம்பித்திருக்கிறார்கள்.
அன்பருக்கும் அன்றைக்கென்று பார்த்து, குகைக்குள் இருக்கும் அந்த லிங்கத்தைத் தரிசிக்க வேண்டும் என்று ஆவல் பிறந்தது. ஏற்கெனவே தரிசித்தவர்தான் அவர். இருந்தாலும், இன்றைக்கும் தரிசிக்க விருப்பம் கொண்டார்.
நடக்கப் போகும் விபரீதத்தை உணராமல், அன்பர் முன்செல்ல… அவருடைய நண்பர்கள் பின்தொடர்ந்தார்கள். திடீரென்று அன்பருக்கு ஒரு யோசனை… தான் மட்டும் குகைக்குப் போகவேண்டாம் என்று தீர்மானித்தார். தன் நண்பர்கள் உள்ளே சென்று லிங்கத்தை வழிபட்டு வர உதவலாம் என்று முடிவெடுத்தார். இதை அவர்களிடம் சொன்னார். சம்மதம் தெரிவித்தார்கள் நண்பர்கள்.
ஆனால், விதி என்று சொல்வார்களே… அது யாரை விடும்?
குகைக்குச் செல்லும் வழியில் சம தளத்தில் ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார். அவர், திருவனந்தபுரம் அன்பரைப் பார்த்துக் கைதட்டி அழைத்தார். உடன் வந்த நண்பர்கள் அந்தப் பெண்மணியை நோக்கிச் செல்ல… ‘‘உங்களை இல்ல… அதோ, காவித் துண்டு போர்த்திக்கிட்டுப் போறாரே… அவரை வரச் சொல்லுங்க’’ என்றார்.
விதி, பெண்மணியின் வடிவிலும் வரும் போலிருக்கிறது!
திருவனந்தபுரத்து அன்பரிடம் விஷயத்தைச் சொன்னார்கள் நண்பர்கள். குகைக்குள் போக வேண்டாம் என்று தீர்மானித்த அவர், தெய்வ சொரூபமாகத் திகழும் அந்தப் பெண்மணியிடம் போனார். ‘‘வாப்பா… குகைக்குள்ள இருக்கிற லிங்கத்தைத் தரிசிக்கற பாக்கியம் எல்லாருக்கும் கிடைக்காது. நீயும் போய் தரிசனம் பண்ணிட்டு வாப்பா…’’ என்று சொல்ல… அன்பர் திகைத்தார். சட்டென்று அந்த உபாசகிதான் அவரது நினைவுக்கு வந்தார்.
‘நடக்கும்போதோ, சரிவான பாதையில் இறங்கும்போதோ உனக்கு ஒரு சறுக்கல் வரலாம். எச்சரிக்கையாகவும் கூடுதல் கவனத்துடனும் இரு’ என்று உபாசகி சொன்னது சட்டென ஒரு மின்னல் போல் மனதுக்குள் தோன்றி மறைந்தது.
‘‘என்னய்யா… நான் கூப்பிட்டுக்கிட்டே இருக்கேன். ஏதோ யோசனைல இருக்கே… இந்தா, இதை வாங்கிக்க’’ என்று சொல்லி ஒரு பாட்டிலை நீட்டினார் அந்தப் பெண்மணி. பாட்டிலுக்குள் நெய் இருந்தது. ‘‘தண்ணியைத் தாண்டிப் போய், உள்ளே லிங்கத்துக்கு விளக்கு ஏத்தி வெச்சிட்டு வாய்யா’’ என்று சொல்லி விட்டு, வேறு வேலையில் மூழ்க ஆரம்பித்து விட்டார். அவரைப் பொறுத்த வரைக்கும் இந்த நெய் பாட்டில் குகைக்குள் உள்ள லிங்கத்தின் திருவுருவம் முன் அன்பர் எப்படியும் விளக்கேற்றி வைத்து விடுவார் என்று நம்பிக்கை.
அன்பரின் கையில் இப்போது நெய் பாட்டில். கொடுத்தபோதே மறுத்திருக்கலாம். ஆனால், மறுக்கத் தோன்றவில்லை. இப்போது லிங்கத்தின் சந்நிதிக்குப் போயே ஆகவேண்டிய கட்டாயம். ‘எல்லாம் மகாலிங்கம் விட்ட வழி’ என்று தீர்மானித்த திருவனந்தபுரத்து அன்பர், குகையை நோக்கி நகர ஆரம்பித்தார். அப்போது ஒரு சில இளைஞர்கள் குகைக்குள் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள்.
குளம் போல் தேங்கி இருக்கும் நீரின் (கவனம் – ஆழம் சுமார் நாற்பதடி) மேலேதான் குகை இருக்கிறது. இதனுள் செல்ல சில பாறைகளைப் பிடிமானமாகப் பிடித்துக் கொண்டும் அதனிடையே ஊடுருவிச் செல்லும் சில வேர்களைப் பிடித்துக் கொண்டும்தான் மேலே ஏறி, குகையை அடைய வேண்டும் (பார்க்க படம்).
திருவனந்தபுரத்து அன்பர் பாறையின் அருகே சென்று நின்று, மகாலிங்கத்தை மனமாரப் பிரார்த்தித்தார். அவரது தோளில் ஒரு பை. அதற்குள் செல்போன், விலை உயர்ந்த கேமரா, கொஞ்சம் பணம், ஒரு செட் டிரஸ் அயிட்டம் என்று இருந்தன. கையில் நெய் பாட்டில். நெய் பாட்டிலோடு உள்ளே செல்வது சற்றுச் சிரமம் என்று தோன்றியதாலோ, என்னவோ… அப்போது குகைக்குள் செல்ல முயன்ற இளைஞர்களைக் கைதட்டிக் கூப்பிட்டார். கிட்டத்தட்ட பாதி வரை ஏறிவிட்ட ஓர் இளைஞன் இவரைத் திரும்பிப் பார்த்தான். நெய் பாட்டிலை ஒரு சிலர் மூலமாகக் கை மாற்றி அவனிடம் கொடுத்துவிட்டு, ‘‘உள்ளே லிங்கத்தின் சந்நிதியில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் விளக்கில் ஊற்றி விடுங்களேன்’’ என்று சத்தமாகச் சொன்னார்.
அந்த இளைஞனும் வெகு லாகவமாக இதை வாங்கிக் கொண்டு, அசால்ட்டாக மேலே ஏறிவிட்டான். குகைக்குள் போனவன், ‘‘சாமீ… இங்கே விளக்குல நெய் ஃபுல்லா இருக்கு. இப்ப ஊத்தினா, கீழே வழிஞ்சிடும்’’ என்றவன், நெய் பாட்டில் தன் கைக்கு எப்படி வந்ததோ, அதே போலவே திருப்பி அனுப்பி விட்டான். அதோடு, அன்பர் மேலே ஏறுவதற்கு ஒரு பாதையையும் காண்பித்தான். பிறகு அவனும் அவனுடன் வந்தவர்களும் இறங்கி, தங்கள் யாத்திரையைத் தொடர்வதற்காக நகர ஆரம்பித்தனர். குகைக்குள் செல்வதற்காக வந்த திருவனந்தபுரத்து அன்பரின் நண்பர்கள், குகைக்குள் ஏறுவதை விட்டு விட்டு, இன்னொரு பகுதியில் அமர்ந்து சில காட்சிகளை கேமராவில் நிரப்பிக் கொண்டிருந்தனர். இப்போது குகைக்குள் செல்வதற்கு அன்பர் மட்டும் தனியாக விடப்பட்டார். இதுதான் சோதனை என்பதோ?
நெய் பாட்டிலைத் தன் தோள் பையில் பாதுகாப்பாக வைத்துக் கொண்டு, வேர்களைப் பிடித்துக் கொண்டு குகைக்குள் செல்ல முயலும் தன் சாகசத்தைத் தொடங்க ஆரம்பித்தார் அன்பர். அந்த வேகம் அன்பருக்கு எப்படி வந்ததோ, தெரியவில்லை… சட் சட்டென்று ஒரே பாய்ச்சலாகப் பாதி தொலைவு வரை ஏறிவிட்டார். கிட்டத்தட்ட குகையின் முகப்பைத் தொடும் விளிம்பை நெருங்க இருக்கும் நேரத்தில்… உபாசகி சொன்ன அந்த ‘சறுக்கல்’. ஒரு விநாடி நேரத்தில் இவரது பேலன்ஸ் தடுமாறி, கால் பிறழ… பிடித்துக் கொண்டிருந்த வேரையும் கைகள் விட…
தொபுக்கடீர் என்று பாறையில் உடல் நழுவி… கீழே இருந்த நாற்பதடி நீர்க் குளத்துக்குள் விழுந்து விட்டார் அன்பர். நெய் கொடுத்து அனுப்பிய அந்தப் பெண்மணிக்கு மட்டும் இந்த சத்தம் கேட்டிருக்கலாம்.
விதி, அவரைத்தானே தூண்டிவிட்டு நெய் தரச் சொன்னது!
தண்ணீருக்குள் விழுந்தவர், ஒரு சில விநாடிகளுக்கு நீரின் மேல் தத்தளித்தார். தோள்பை தண்ணீரின் மட்டத்தில் சிறிது நேரத்துக்கு அலை பாய்ந்தது. குரல் எழுப்ப முயன்றார்; முடியவில்லை. நீச்சல் அடிக்க முயன்றார்; இவருக்கு நீச்சலும் தெரியாது. தண்ணீரின் மேல் மட்டத்தில் தத்தளித்தது சில விநாடிகளுக்கு மட்டும்தான். உள்ளே… உள்ளே… என இவர் தண்ணீரின் அடியில் பயணமானார்.
ஓர் ஆச்சரியம் என்னவென்றால், அன்பர் சற்றும் கவலைப்படவில்லை. முழுக்க முழுக்க சுய நினைவுடன் இருந்தார். அவரிடம் ஒரு பரபரப்போ, பயமோ… தொற்றிக் கொள்ளவில்லை. சாவின் விளிம்பில் தான் இருக்கிறோம் என்பதையும் அந்த நேரத்தில் நினைத்துப் பார்த்தார்.
ஆனால், தான் சாக மாட்டோம் என்று திடீரென நினைத்தார். விநாடியை விடவும் குறைவான நேரத்தில் மகாலிங்கத்தைத் துதித்தார். ‘உன்னை விட பெரிய சக்தி எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். முடிவை நீயே தீர்மானித்துக் கொள். ஆனாலும், எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நான் உன் பக்தன்.’
யோகம் பழகி இருந்ததால், மூச்சை சில நிமிடங்களுக்கு அவரால் ‘தம்’ கட்ட முடிந்தது. கிட்டத்தட்ட அவர் தன்னை இழக்க இருந்த நேரத்தில் அவருடைய வலக் காலை யாரோ ஒருவர் தன் உள்ளங்கையால் தாங்கிப் பிடிப்பது போல் உணர்ந்தார். அதோடு, அந்த மாயக் கையானது அவருடைய வலக் காலை நீருக்குள் இருந்து மேல் நோக்கித் தள்ளுவது போல் உணர்ந்தார். ‘இதுதான் வாய்ப்பு. இறைவன் என் கணக்கை இன்னும் முடிக்கவில்லை போலிருக்கிறது’ என்று தீர்மானித்தவர், ஒரு கண நேரத்தில் ஏதோ வேகம் வந்தவர் போல் நீருக்குள் இருந்து மேலே எழும்பினார்.
அந்த விசை அன்பரை எப்படித்தான் மேலே கொண்டு வந்ததோ, தெரியவில்லை. தண்ணீர் மட்டத்துக்கு மேலே வந்து தத்தளித்தார். அப்போது கரையில் இருந்த ஒரு வாலிபன் இவரைப் பார்த்து அதிர்ந்தான். ‘யார் இவர்? திடீரென மேலே வந்து தத்தளிக்கிறாரே’ என்று குழம்பியவன், ஒரு ‘டைவ்’ அடித்துக் குதித்து அவரைப் பற்றி இழுத்து பாறைக்குக் கொண்டு வந்தான்.
பாறைப் பகுதியில் அமர்ந்தவர், நெடு நேரத்துக்குப் பெருமூச்சு விட்டுத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார். கண்களைத் திறக்கவே இல்லை. இவரைக் காப்பாற்றிய அந்த வாலிபன், ‘இவராகவே பேசட்டும்’ என்று அமைதி காத்தான். நாகரிகம் தெரிந்தவன். அந்த நேரத்தில் அவரது மனநிலை எப்படி இருக்கும் என்பதை ஓரளவு ஊகித்திருந்தான் போலிருக்கிறது. ஒரு துண்டால் அவருடைய முகத்தையும் தலையையும் அவனே துவட்டி விட்டான்.
சுமார் ஐந்து நிமிடங்கள் கடந்திருக்கும். மெள்ளத் தன் விழிகளைத் திறந்தார் திருவனந்தபுரத்து அன்பர். மகாலிங்கம் இருக்கும் திசை நோக்கிப் பார்த்தார். விழிகளில் ஈரம் கசிய… இரண்டு கைகளையும் கூப்பினார். ‘இறைவா… மகாலிங்கமே… என் ஆயுள் இன்னும் முடியவில்லை என்பதை எனக்கு உணர்த்தி விட்டாய்… உன் பாதக் கமலங்களுக்குப் பல கோடி நன்றி.’
அதன் பின் இளைஞனின் கைகளைப் பற்றிக் கொண்டார். அந்தக் கைகளைத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டார். ஒரு சில விநாடிகளுக்கு அவனே மகாலிங்கமாக அவருக்குத் தெரிந்தான். ‘‘பார்த்து சாமீ… சும்மா யதேச்சையா நான் இங்கே வந்தேன். நான் மட்டும் இங்கே வரலேன்னா… யோசிச்சுப் பாக்கவே பயமா இருக்கு’’ என்று பதறினான். அவன் முகத்தில் ஒரு பீதி அப்போது தெரிந்தது.
‘‘நீ வராம இருக்க முடியாதுப்பா…’’
‘‘என்ன சொல்றீங்க சாமீ..?’’
‘‘மகாலிங்கம்தான் உன்னை இங்கே அனுப்பி வெச்சிருக்கார்.’’
‘‘என்னவோ சாமீ… உன் நல்ல நேரம். பார்த்துக் கௌம்பு. நான் வர்றேன்’’ என்று அன்பரின் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் அங்கிருந்து புறப்பட்டுப் போனான்.
தோள்பை முழுக்க முழுக்க ஈரம். பொருட்கள் நனைந்திருந்தன. அவற்றை வெளியே எடுத்துக் காய வைத்தார். உபாசகி கொடுத்த எலுமிச்சம்பழத்தை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டார். பத்து நிமிடம் கழித்து எல்லாவற்றையும் சேகரித்துக் கொண்டு நடந்தார். இயல்பான நடை.
அவருக்கே வியப்பு. இத்தனை களேபரம் ஆகியும் உடலின் எந்த ஒரு இடத்தில்கூட சின்ன கீறலோ, ரத்தக் காயமோ இல்லை. வழக்கமான வேகம்.
அன்பர் நடந்து செல்லும்போது நெய் பாட்டில் கொடுத்த பெண்மணி, இவரைத் தொலைவிலேயே பார்த்து விட்டுத் தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார்.
அன்பரும் ஒரு கண நேரத்திலேயே இதைக் கவனித்து விட்டார். ‘விதி அனுப்பிய என்னையும் மீறி, நீ தப்பி விட்டாயே’ என்கிற தொனி, அந்தப் பார்வையில் இருப்பதாகப் புரிந்து கொண்டார் அன்பர்.
இறைவனின் தீர்ப்பில் என்ன எழுதப்பட்டிருக்கிறதோ, அதுதான் நடக்கும். இறைவனின் தீர்ப்புக்கு மட்டுமே விதியை மாற்றும் வல்லமை உண்டு.விதி வலியதுதான். ஆனால், அதையும் சில பிரார்த்தனைகள் மூலம் திருத்தி எழுதப்பட முடியும் என்பதைத்தான் இந்த நிகழ்வு உணர்த்துகிறது.