சதுரகிரி 10 – தவசியில் ஒரு தாண்டவம்

தவசியில் ஒரு தாண்டவம்!

துரகிரிக்கு மேலேஅதாவது சுந்தர மகாலிங்கம் ஆலயத்துக்கு மேலே உயர்ந்திருக்கும் மலையில் தவசி குகை இருக்கிறது. சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் ஆலயங்களில் இருந்தே இந்தக் குகையை ஒரு புள்ளி போல் பக்தர்கள் தரிசிக்க முடியும். மிகவும் புனிதமான குகை இது.

சதுரகிரி மலையில் இரவு வேளையில் தங்கி இருக்கும் பக்தர்களுக்கு சித்தர்கள் பல அற்புதங்களையும், வர்ண ஜாலங்களையும் இந்த தவசி குகையில் இருந்து செய்து காட்டி அருள் புரிவார்கள். திடீரென்று பிரகாசமான ஓர் ஒளி, இங்கிருந்து புறப்பட்டு வானத்தில் செல்லும். ஒரு கட்டத்தில் அது சட்டென்று மறைந்து விடும். அல்லது வெடித்துச் சிதறி வண்ணப் பூக்களாக வானத்தில் விரியும். நள்ளிரவில் சித்தர்கள் இந்தக் குகையில் நடமாடுவதை மலையின் கீழிருந்து தரிசித்த அன்பர்களும் இருக்கிறார்கள். இது போன்ற சிலிர்க்க வைக்கும் அற்புத நிகழ்வுகளைக் கண்டு தரிசிக்க நேரிடும் அன்பர்கள் பெரும் புண்ணியம் செய்தவர்கள். எல்லோருக்கும் இந்தப் பேறு வாய்க்காது. எவரெவருக்கு இவற்றை எல்லாம் அருள வேண்டும் என்று சித்தர்கள் தீர்மானிக்கிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே இது வாய்க்கும்.

சதுரகிரி மலைக்கு மேலே எண்ணற்ற குகைகள் இருக்கின்றன. சதுரகிரியில் சித்தர்கள் வசிக்கின்ற எல்லா இடங்களையும் நாமும் சென்று பார்க்க வேண்டும் என்று ஆசைப்படக் கூடாது. நாமெல்லாம் சென்று பார்ப்பதற்கு அது ஒரு மியூஸியமோ, பொழுதுபோக்கு இடமோ இல்லை என்பதை சதுரகிரிக்குச் செல்கிற ஒவ்வொரு பக்தரும் தங்கள் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். காரணம், அப்படி அங்கே செல்ல நேரிட்ட சில அன்பர்கள் மோசமான விளைவுகளையும் சந்தித்திருக்கிறார்கள்.

சித்தர்கள் இன்றும் வசித்து வரும் அதிசயமான குகைகள்தான், அவர்களது இருப்பிடங்கள். இது போன்ற குகைகளைப் பார்த்தால், மிகவும் பிரமிப்பாக இருக்கும். சாதாரண மனிதர்கள் உள்ளே செல்வதே சிரமம். அதாவது, அதன் வாயில் என்பது மிகவும் குறுகியதாக இருக்கும். ஒருவர் அதன் உள்ளே செல்ல வேண்டும் என்றால், ஒரு வீட்டுக்குள் நுழைவது போல் சாதாரணமாகச் செல்ல முடியாது. படுத்த வண்ணம், உடலைக் குறுக்கிக் கொண்டுதவழ்ந்தவாறுமிகுந்த பிரயத்தனப்பட்டுத்தான் செல்ல வேண்டும். உள்ளே போகப் போககுகையின் அளவுகள் மாறலாம்.

இது போன்ற குகைகள் சாதாரண மனிதர்கள் சென்று பார்ப்பதற்கு அல்ல. சில ஆன்மிக அன்பர்களுக்கு குகைக்குள் சென்று பார்ப்பதற்கு ஏதோ ஒரு வகையில் உத்தரவு கிடைக்கலாம். இதெல்லாம், ஒவ்வொருவரின் பக்குவத்தையும் பக்தியையும் பொறுத்தது. தியானம் கை கூடுபவர்கள் மற்றும் சித்தர்களின் அருளாசி கிடைக்கப் பெற்றால் செல்லலாம்.

இது போன்ற உத்தரவுகள் ஏதும் இல்லாமல், நண்பர்களுடன் ஒருஅட்வெஞ்ச்சர்ஆக இங்கே செல்ல முயன்றால், பதிலடி பலமாக இருக்கும். இதை நிரூபிப்பது போன்ற ஒரு சம்பவம்தான் இனி, நீங்கள் படிக்கப் போவது. விளையாட்டுப் போக்காகவும், சில தீய எண்ணங்களுடன் தவசிக் குகைக்குச் சென்ற அன்பர்கள் சிலர் எந்த அளவுக்குஅடி வாங்கித் திரும்பி இருக்கிறார்கள் என்பதை நினைத்தால், ஒரு பக்கம் பரிதாபமாகவும் இருக்கிறது.

இந்தச் சம்பவம் நடந்து சில வருடங்கள் ஆகிவிட்டன. சித்தர்களின் அனுமதி இல்லாமல் தவசிக் குகைக்குள் நுழைந்த சிலர், அங்கு ஒரு சித்த புருஷர் தவம் இருப்பதைக் கண்டு திகைத்துப் போனார்கள். ஒரு சித்த புருஷரின் தவத்துக்கு நாம் இடையூறாக இருக்கக் கூடாது என்று பதைத்துப் போய், அத்துடன் திரும்பியாவது இருக்கலாம். ஆனால், ‘தவம் இருந்தால் என்னகுகையின் உள்ளே என்னதான் இருக்கிறது என்று பார்க்கலாம்என்ற ஆவலின் விளைவாக, மேலும் தொடர்ந்து அவர்கள் செல்ல முயற்சித்தபோதுதான் அந்த விபரீதம் நிகழ்ந்தது. திடீரென அங்கே தோன்றிய மாயக் கரடி ஒன்று இவர்கள் மேல் பாய்ந்து கடித்துக் குதறி, ரத்தவிளாறாகத் திருப்பி அனுப்பியது.

இந்தக் கதையை விரிவாகத் தெரிந்து கொள்வதற்கு முன் தவசி குகை பற்றி ஓர் அறிமுகம். சில பக்கங்களுக்கு முன் படித்திருந்தாலும், ஒரு ஃபாஸ்ட் அறிமுகம்:

சித்தர்கள் இன்றைக்கும் சத்சங்கம் எனப்படும் ஆன்மிக விவாதங்களை, இந்தக் குகைக்குள் நடத்தி வருவதாக நம்பப்படுகிறது. தவசி குகைக்குள் சாதாரணமாக நுழைந்து விட முடியாது. தவழ்ந்துதான் உள்ளே நுழைய முடியும். பத்தடி தொலைவுக்குத் தவழ்ந்து சென்ற பின், அடுத்த ஐந்தடி தொலைவுக்கு உட்கார்ந்த நிலையிலேயே தத்தித் தத்திச் செல்ல வேண்டும். இதைத் தாண்டினால், சில அடிகளுக்கு நடந்து செல்லலாம். பத்துப் பேர் உட்காரும் அளவுக்கு வசதியான இடம். உள்ளே சில்லென்று இருக்கும்.

தவசி அறிமுகம் ஓவர். கதைக்கு வருவோம். அந்த ஆன்மிக அன்பரின் பெயர் சதாசிவம். ஊர்சென்னை (அன்பரின் வேண்டுகோளுக்கு இணங்க பெயரும் ஊரும் மாற்றப்பட்டுள்ளது). சதுரகிரிக்கு அடிக்கடி செல்லும் வழக்கம் உடையவர். மலையில் உள்ள பிலாவடி கருப்பர், சுந்தர மகாலிங்கம், சுந்தரமூர்த்தி, சந்தன மகாலிங்கம் போன்ற தெய்வத் திருமேனிகளை வழிபட்டு விட்டு, அந்தச் சூழலில் அமைதியான ஓரிடத்தில் அமர்ந்து தியானம் மேற்கொள்வார்.

ஒரு நாள் இப்படித்தான் தரிசனத்தை முடித்துக் கொண்டு அங்கே ஒரு இடத்தில் படுத்துத் தூங்கப் போயிருக்கிறார் சதாசிவம். திடீரென யாரோ ஒருவர் அவருடைய வலது தொடையைத் தட்டி எழுப்புவது போல் இருந்தது. திடுக்கிட்டு விழித்தெழுந்தார். அவரைத் தவிர, வேறு எவரும் அங்கு இல்லை. உள்ளுக்குள் ஏதோ ஓர் உணர்வு மேலெழும்பஎழுந்து வெளியே வந்தார். தன்னையும் அறியாமல், சதாசிவத்தின் கண்கள் தவசி குகைக்குச் சென்றது. அப்போது அவர் பார்த்த காட்சிஅவரது கண்களை வியக்க வைத்தது. தவசி குகையின் முகப்பில் பிரகாசமான ஒரு ஜோதி தெரிந்தது. இந்தத் தரிசனத்தை சதாசிவம் கண்டு இன்புற வேண்டும் என்பதற்காகவே, இறைவன் அவரை எழுப்பி இருக்கிறார் போலிருக்கிறது. ஜோதி வடிவில் சித்த புருஷர்களைத் தரிசித்து விட்டு, அந்தப் பரவசத்திலேயே மலையின் ஒரு பகுதியில் உட்கார்ந்து தியானத்தில் ஈடுபட்டார். அப்போது மணி நள்ளிரவு 2:30.

கண்களை மூடி தியானத்தில் இருந்தபோது, சதாசிவத்தின் முன் ஒரு காட்சி விரிந்தது.

தவசி குகைக்குள் நுழைகிறார் சதாசிவம். உள்ளே சென்ற பின் அந்தக் குகையின் அழகைப் பார்த்து வியக்கிறார். குகைக்குள் ஏதாவது தரிசனம் கிடைக்காதா என்று பார்வையை அங்கும் இங்கும் ஓட விடுகிறார். ஒரு சித்தர் தியானத்தில் இருக்கும் காட்சி யதேச்சையாக சதாசிவத்தின் கண்களுக்குப் படுகிறது. மெலிய உடல். வெண்ணிற தாடி. பின்பக்கம் அடர்ந்து தொங்கும் ஜடாமுடி. அமைதியே உருவாக அந்தக் குகை அப்போது சதாசிவத்துக்குக் காட்சி அளித்தது.

சித்தர் பெருமான் தியானம் செய்து கொண்டிருக்கும் காட்சியை வியந்து பார்த்துக் கொண்டிருக்கும்போது, திடீரென சித்தரின் தோள்பட்டையில் இருந்து பிரமாண்டமான ஒரு மாயக் கரடி தோன்றியது. எதிராளியை அச்சுறுத்தும்படி நின்றபடி, சதாசிவத்தையே குறி வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்தாலே உடல் நடுங்கும் வண்ணம் இருந்தது. சதாசிவம் திகைத்து நின்றிருந்தார். எதிராளியை அடித்துத் தாக்குவதற்குத் தன் இரண்டு முன்னங்கால்களையும் ஆக்ரோஷமாக விரித்தபடி பாய்ந்து வருகிறது கரடி.

சட்டென்று தியானம் அப்படியே கலைகிறது. சதுரகிரியில் அமர்ந்திருந்தார் சதாசிவம். சுய நினைவுக்கு வந்த பின்னர், தனக்கு ஜோதி தரிசனம் தந்த தவசி குகையை மீண்டும் ஒரு முறை பார்த்து வணங்கினார். பிறகு, தனக்கு ஏன் இப்படி ஒரு காட்சி தோன்றியது என்று யோசிக்கத் தொடங்கினார். இதன் மூலம், இறைவன் தனக்கு என்ன உணர்த்த வருகிறார் என்று குழம்பினார். ஒன்றே ஒன்று மட்டும் அவருக்குத் தெளிவாகப் புரிந்ததுஅதாவது, சித்தர்களின் வழிபாட்டுக்கு எவரும் எந்தக் குறுக்கீடுகளையும் ஏற்படுத்தக் கூடாது. ஆன்மிகத்தில் நன்கு ஊறியவரான அவருக்கு இது நன்றாகவே தெரியும்தான். இருந்தாலும், இதைத் தவிர வேறு என்ன உணர்த்த வருகிறார் இறைவன்?

ஒரு மாதம் போன பின்தான் இதன் பொருள் ஒரு சந்திப்பின் மூலம் சதாசிவத்துக்குப் புரிந்தது.

தனது தியானத்தில் வந்த காட்சி, வேறு ஒருவருக்குச் சில வருடங்களுக்கு முன் நேர்ந்திருக்கிறது என்பதை, அடுத்த முறை அவர் சதுரகிரிக்கு வந்தபோது கேட்க நேர்ந்தது.

திகைக்க வைக்கும் அந்த அனுபவம்…?

சதுரகிரியில் நள்ளிரவு வேளையில் தியானத்தின் மூலம் தனக்குக் கிடைத்த காட்சி, எதனோடு சம்பந்தப்பட்டது என்பதை சதாசிவம் உணர்வதற்கு ஒரு மாதம் காத்திருக்க வேண்டி இருந்தது. அதுவரை இன்னதென்று புரியாமல், அவர் மனம் புலம்பித் தவித்ததையும், அடைந்த மனக் குழப்பத்துக்கும் அளவே இல்லை.

சம்பவம் நடந்த அன்று உறங்கிக் கொண்டிருந்த சதாசிவம், அந்த நள்ளிரவு வேளையில் யாராலோ அல்லது ஏதோ ஒரு சக்தியாலோ தட்டி எழுப்பப்பட்டார். திடுக்கிட்டு எழுந்து அமர்ந்த அவர், யதேச்சையாகத் தவசி குகை இருக்கும் பக்கம் பார்வையை ஓட்டினார். அங்கு அவர் கண்ட காட்சி, அற்புதமான ஒரு தரிசனம். காலங்களைக் கடந்தும் வாழ்ந்து வருகிற சித்தர்களின் சிலிர்ப்பான தரிசனம் அது. ஞானக் கண்களைக் கொண்டுதான் இதைத் தரிசிக்க முடியும். சதாசிவத்துக்கு அது வாய்த்தது.

சித்தர்களின் தரிசனம் தந்த பரவசத்துடனேயே சதுரகிரியில் மகாலிங்கத்தின் சந்நிதியின் முன் தியானத்தில் உட்கார்ந்தார் சதாசிவம். தன்னையே மறந்து, இறை இன்பத்தில் கலக்கும் நிலை அது. தியானத்தில் திளைத்தார். ஒரு சில நிமிடங்களுக்குப் பின் தியானம் கலைந்தபோதுதான் திடுக்கிட வைக்கும் கேள்விகள் அவருள் எழுந்தன.

தியானத்தில் தான் இருந்தபோது தவசி குகைக்குள் செல்வது போல் ஏன் காட்சி விரிய வேண்டும்? அங்கு தவம் இருந்த ஜடாமுடி சித்தர் ஒருவர் தன் கண்களுக்கு ஏன் தெரிய வேண்டும்? அவருடைய தோள்பட்டையில் இருந்து மாயக் கரடி ஒன்று ஏன் தோன்ற வேண்டும்? எதிராளியைத் தாக்குவதற்குத் தன் இரண்டு முன்னங்கால்களையும் ஏன் ஆக்ரோஷமாக விரித்தபடி வர வேண்டும்? இவை எல்லாம் எதை உணர்த்தும் குறிப்புகள்? எனக்கும் இதற்கும் நேரடியாக ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா?

இதெல்லாம் அவரது ஒரு மாத குழப்பம். அதாவது, தியானத்தில் தான் கண்ட சம்பவத்தோடு சம்பந்தப்பட்ட நபரை சந்திக்கும் வரைதான் இதெல்லாம். அதன் பின்தான் பல உண்மைகளை உணர்ந்தார்.

ஒரு மாதத்துக்குப் பிறகு தன் தியானத்தோடு சம்பந்தப்பட்ட அந்த நபரைச் சந்திக்கும் வேளை வந்தது சதாசிவத்துக்கு. தியானத்தில் தான் கண்ட காட்சிகளை அந்த நபர் அட்சரம் மாறாமல் சொல்லச் சொல்ல.. பிரமிப்பின் விளிம்புக்கே போனார் சதாசிவம்.

மெய் சிலிர்க்க வைக்கும் அந்த நிகழ்வைப் பார்ப்போம்.

சதாசிவம் சதுரகிரியில் யதேச்சையாக சந்தித்த அந்த நபரின் பெயர் வேலன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சதுரகிரிக்கு அடிவாரத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவன். வயது சுமார் இருபதுகளின் மத்தியில் இருக்கலாம். ஏழ்மையான குடும்பம். அப்பா குடிகாரர். எனவே, வீட்டில் உள்ள குழந்தைகளின் வளர்ப்பு, சற்று முறை தவறி இருந்தது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்த வகையில் வேலனும் சற்று முரட்டுத்தனமாகவே வளர்ந்து வந்தான். நெறிமுறைகளுக்கு உட்பட்ட வாழ்க்கை எப்படி இருக்கும் என்று வேலனுக்கு எவரும் சொல்லிக் கொடுக்கவில்லை. ஆனால், சதுரகிரி மகாலிங்கம் அவனுக்குப் பின்னாளில் உணர்த்தினார்.

சதுரகிரிக்கு அருகில் இருந்தும், அந்த மலையைப் பற்றியோ, அங்கு இருக்கும் தெய்வங்களைப் பற்றியோ, சித்தர்களின் அரிய தரிசனம் பற்றியோ வேலன் எதுவும் அறிந்திருக்கவில்லை. இப்படிப்பட்ட ஒரு புனிதமான மலைக்கு அருகே, தான் வசித்துக் கொண்டிருக்கிறோம் என்பதுகூட அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. ‘ஏதோ, பாறைகளும் மரங்களும் சூழ்ந்த மலை அடிவாரதில் வசித்துக் கொண்டிருக்கிறோம்என்பது மட்டுமே அவனது நினைப்பாக இருந்தது.

இந்த நிலையில் அவனுக்குப் பழக்கமான ஒரு நண்பர், சதுரகிரி பற்றி ஒரு முறை எடுத்துச் சொல்லவேலனுக்கு அந்த மலையில் ஏறிப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை வந்தது. அதற்கான நாளும் வந்தது. ஒரு தினத்தில் மலையில் ஏறினான். கரடுமுரடான பயணத்துக்குப் பின், மலையின் அழகைக் கண்டு அதிசயித்தான். அங்கே உணர்ந்த தெய்வத் தன்மையில் பூரித்தான். மலைக்கு மேல் அருளும் தெய்வத் திருவடிவங்களைப் பார்த்து நெகிழ்ந்தான். எத்தனையோ பக்தர்கள் சிரமப்பட்டு மலை ஏறி வந்து, இறைவனைத் தரிசித்துச் செல்லும் காட்சியைப் பார்த்துப் பரவசப்பட்டான். ‘இனிமையான வாழ்க்கை என்பது இதுதானோஎன்று ஏங்கினான்.

வேலன் மனதில் அப்போது ஒரு வருத்தம் இழையோடியது. ‘இவ்வளவு கஷ்டப்பட்டுப் பலரும் மலை ஏறி வருகிறார்கள். ஆனால், அவர்களுக்குத் தேவையான வசதிகள் ஏதும் இங்கு இல்லையேஎன்று தவித்தான். மலைக்கு மேல் தண்ணீருக்காக ஏங்கித் தவிக்கும் சில பக்தர்களைப் பார்த்த வேலன், ‘எப்படியாவது ஒரு நாள் தண்ணீர் கொண்டு வந்து இவர்களின் தாகத்தைத் தணிக்க வேண்டும்என்று அங்கேயே முடிவெடுத்தான். அதன் பின் மலையில் இருந்து தன் ஊருக்கு இறங்கினான்.

மலைக்குச் செல்லும் வழியில் கோரக்கர் குகை எனப்படும் கோரகுண்டா பகுதியில் தண்ணீர் இருப்பதை அறிந்தான். இங்கிருந்து தண்ணீரை ரெட்டை லிங்கம் கோயிலுக்கு எடுத்துச் சென்று அங்கே விநியோகம் செய்தால் மலைக்கு வருகிற பக்தர்கள் பலரும் பலன் பெறுவார்கள் என்று முடிவெடுத்தான். ‘தண்ணீர் கொண்டு வர வேண்டும் என்றால், பிரமாண்டமான பீப்பாய்கள் வேண்டும். வருபவர்களுக்குத் தண்ணீரைத் தருவதற்கு பிளாஸ்டிக் டம்ளர்கள் வேண்டும். இதற்குக் காசு வேண்டுமே?’ – இப்படி எல்லாம் யோசித்தவன், முதல் கட்டமாக ஒருவரிடம் கூலிவேலைக்குச் சேர்ந்தான். முதல் முறையாக வேலைக்குப் போய் அந்த முதலாளியிடம் இருந்து கூலி வாங்கியபோதுதான் பணத்தின் அருமையும் அதன் மூலம் கிடைக்கும் சந்தோஷமும் அவனுக்குத் தெரிந்தது. பூரித்துப் போனான்.

அடுத்தடுத்த நாட்களிலேயே ஒரு அமாவாசை தினம் வந்தது. பொதுவாக, அமாவாசையின்போதுதான் சதுரகிரி மலைக்கு அதிக பக்தர்கள் வருவார்கள். கூலிவேலையின் மூலம் தான் சம்பாதித்த பணத்தைக் கொண்டு இரண்டு பீப்பாய்களில் கோரக்கர் குகையில் இருந்து ரெட்டை லிங்கம் சந்நிதிக்கு முதன்முதலாக மிகுந்த பிரயத்தனப்பட்டுத் தன் முதுகில் தண்ணீர் பீப்பாய்களைச் சுமந்து சென்றான் வேலன். தாகத்துடன் தவித்து மலை ஏறிய பக்தர்களுக்கு பிளாஸ்டிக் டம்ளர்களில் தண்ணீர் கொடுத்துப் பரவசப்பட்டான்.

இப்படித் தொடர்ந்து ஒரு அமாவாசை, இரண்டு அமாவாசை இல்லை. 61 அமாவாசைகளுக்குத் தண்ணீர் தானம் செய்தான் வேலன். இந்தக் காலகட்டத்தில் அவனுக்குத் திருமணம் ஆனது. குழந்தைகளும் பிறந்தன. ஒரு சந்தப்பத்தில் அவன் குடும்பத்தில் குழப்பம் வந்தது. வீட்டாருடனும் தகராறு.. மனைவியோடு பிரச்னைமனைவி கோபித்துக் கொண்டு தன் பிறந்த வீட்டுக்குப் போய் விட்டாள். தனி மரமானான் வேலன்.

விரக்தியின் விளிம்புக்குப் போனான். தன்னை ஓரளவுக்கு ஆளாக்கிய மகாலிங்கம் ஏன் இப்படி சோதிக்கிறார் என்று வேதனைப்பட்டான். எப்படி முயன்றும் அவனால் சமாதானம் ஆக முடியவில்லை. கடைசியில், சதுரகிரிக்குப் போய், உயரமான ஒரு மலைக் குன்றில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து தாணிப்பாறைக்கு வந்தான். திடமான முடிவுடன் மலைக்கு மேலே ஏற ஆரம்பித்த அவனை மகாலிங்கம் வேறு விதமாக ஆட்கொண்டார். இதை அந்த சதுரகிரிவாசனின் திருவிளையாடல் என்றுதான் சொல்ல வேண்டும்.

இவன் நடக்க ஆரம்பித்தபோது ஐந்து பேர் கொண்ட குழு, அவனோடு ஒட்டிக் கொண்டது. அவர்களும் சதுரகிரிக்குப் பயணப்படுவதாக அவனிடம் சொன்னார்கள். ‘‘இதுதான் எங்கள் அனைவருக்கும் முதல் யாத்திரை’’ என்றார்கள். அந்த ஐவரில் ஒருவர் குரு என்றும், அடுத்தவர் சீடர் என்றும் மற்ற மூவரில் ஒருவர் வியாபாரி; வியாபாரியின் நண்பர் ஒருவர்; மூலிகை வைத்தியர் ஒருவர் (இந்த ஐவருமே நல்ல எண்ணத்தோடு மலைக்கு வரவில்லை என்பது இந்த அனுபவத்தின் கடைசியில்தான் தெரியும். அதற்கான தண்டனையும் அவர்கள் பெற்றார்கள். இது மகாலிங்கத்தின் தீர்ப்பு!)

இரும்பைத் தங்கமாக்குகிற மூலிகையைக் கண்டறிவதற்காகவும், அரிய பல மூலிகைகளைப் பறித்துச் சென்று காசாக்குவதற்கும் வைத்தியரும் மற்ற இருவரும் பயணப்படுகிறார்கள் என்பது வேலனுக்குத் தெரியாது. ‘‘எங்களை உன்னுடன் மலைக்குக் கூட்டிப் போய் ஒவ்வொரு இடமாகக் காண்பி’’ என்று வேலனிடம் கேட்டுக் கொண்டார் குரு. மற்றவர்களும் இதே பல்லவியைப் பாடினார்கள். தான் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் மலை ஏறும்போது இதெல்லாம் தேவையா என்று யோசித்த வேலன், முதலில் இதற்கு சம்மதிக்கவில்லை. அதன் பின், ‘‘எல்லாம் முடிந்த பின் உனக்கு தாராளமாகப் பணம் தருகிறோம்’’ என்று ஆசை காட்டினார்கள்.

பணம் இல்லைஎன்பதற்காகத்தானே தற்கொலை செய்து கொள்ளும் முடிவுடன் வேலன் மலையில் ஏறிக் கொண்டிருக்கிறான். இப்போது அந்தப் பணமே வேறு ஏதோ ஒரு ரூபத்துடன் வந்து ஆட்கொள்ளும்போது வேலன் தடம் மாறினான். ‘சரிஇதுவும் மகாலிங்கத்தின் தீர்ப்புதான் போலிருக்கிறதுஎன்று தெளிந்தவன், அவர்களின் கோரிக்கைக்கு ஒப்புக் கொண்டான். வஞ்சகம் எண்ணம் கொண்ட அவர்களுடன் பயணம் துவங்கியது.

சதுரகிரி மலையில் உள்ள ரெட்டை மகாலிங்கம், பிலாவடிக் கருப்பர், சுந்தர மகாலிங்கம், சுந்தரமூர்த்தி, சந்தன மகாலிங்கம் போன்ற சந்நிதிகள் அனைத்தையும் காண்பித்து, தரிசனம் முடிந்த பின், ‘‘இவ்வளவுதான் சதுரகிரிநாம் கீழே புறப்படலாமா?’’ என்று கேட்டான் வேலன். அப்போது குரு, ‘‘தவசி குகைக்கு எங்களை அழைத்துச் செல்’’ என்றார் அவனிடம் உத்தரவாக.

வேலன் வெடவெடத்துப் போனான். அடுத்த விநாடியே, ‘‘தவசி குகையை நான் அறிவேன். ஆனால், சுற்றுலாப் பயணம் செல்வது போல் அங்கெல்லாம் செல்ல முடியாது. எவருக்கு அழைப்பு வருகிறதோ, அவர்தான் அங்கே பயணப்பட வேண்டும். சித்தர்கள் உலா வரும் இடம் அது. நாம் அங்கே சென்றால் அது அவர்களுக்கு இடையூறாக இருக்கும். அந்த எண்ணத்தைக் கைவிடுங்கள்’’ என்றான் தீர்மானமாக.

அப்போது உடன் இருந்த மற்ற நால்வரும்அதாவது சீடன், வியாபாரி, நண்பர், மூலிகை வைத்தியர் ஆகியோர், ‘‘மறுக்காதேப்பாஅந்த இடத்தை நாங்கள் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறோம். இந்த விருப்பத்தையே இறைவனின் அழைப்பாக நினைக்கிறோம். கூட்டிக் கொண்டு போப்பா’’ என்றனர்.

வேலன், ‘‘உங்களது எண்ணம் தவறு. நீங்கள் விருப்பப்பட்டதை எல்லாம் இறைவனின் அழைப்பாகக் கருதக் கூடாது. எவரோடு வேண்டுமானாலும் விளையாடலாம். ஆனால், சித்தர்களோடு விளையாடாதீர்கள். விளையாட்டுப் போக்காக அங்கே போனவர்கள் பட்ட அவஸ்தை எல்லாம் எனக்குத் தெரியும் என்பதால் உங்களுக்குச் சொல்கிறேன். வாருங்கள், தாணிப்பாறைக்குப் புறப்படுவோம்’’ என்று சொன்னான். வேலன் எதற்கு மயங்குவான் என்பதை அறிந்த குரு வெகு நைச்சியமாக, ‘‘வேலாஉனக்கு நிறைய பணம் தருகிறோம். எப்படியாவது எங்களை அழைத்துச் செல்’’ என்று விடாப்பிடியாக அவன் கைகளைப் பற்றிக் கொண்டு சொன்னார்.

சரி, ரெட்டை லிங்கம் சந்நிதியில் தனது தண்ணீர் சேவை தொடர வேண்டும் என்பதற்காக மகாலிங்கமே இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறார் போலிருக்கிறதுஎன்று தீர்மானித்த வேலன் அபாயகரமான அந்தப் பயணத்துக்கு உடன்பட்டான்.

ஐவரும் பெரிதும் மகிழ்ந்தனர். சுந்தர மகாலிங்கத்தின் பின்னால் உள்ள கரடுமுரடான மலையில் ஏறி தவசி குகைக்கு இவர்களின் பயணம் தொடர்ந்தது.

இந்த ஐவருக்கு மட்டுமல்லஇவர்களது பயணத்துக்கு உடன்பட்ட தனக்கும் தவசி குகையில் ஆபத்து காத்திருக்கிறது என்பதை வேலன் அப்போது உணரவில்லை.

சதுரகிரி தரிசனத்துக்குச் செல்பவர்கள், மகாலிங்கத்தை வணங்குவதைத் தவிர, மற்ற செயல்பாடுகளில் ஆர்வப்பட்டு இறங்கக் கூடாது என்பதை வலியுறுத்துவதற்காகத்தான் இந்த நிகழ்வு இங்கே விவரிக்கப்படுகிறது. ஒருவரின் வீட்டுக்குள் அனுமதியே இல்லாமல் புதிதாக வேறொருவர் நுழைந்தால், அந்த வீட்டுக்குள் இருப்பவர்கள் எப்படி எல்லாம் முகம் சுளிப்பார்கள்? ‘யார் இதுஅனுமதியே இல்லாமல்அறிவிப்பும் இல்லாமல் திடுதிப்பென்று நுழைகிறாரே?’ என்று அந்த வீட்டில் உள்ளவர்கள் யோசிப்பார்கள்தானே?! அதுபோல் சித்தர்களுக்கே உரித்தான மலைப் பகுதிகளில், அவர்கள் இன்றைக்கும் வாழ்ந்து வரும் குகைகளுக்குள் அவர்களின் அனுமதி இல்லாமல் பயணித்து உள்ளே செல்வது எத்தகைய ஆபத்து என்பதை இதைப் படிப்பவர்கள் உணர்வார்கள்; உணர வேண்டும்.

நாமெல்லாம் சாமான்யமானவர்கள்; ஆனால், சித்தர்களோ, அஷ்டமாஸித்திகளைக் கைக்கொண்டவர்கள். அவர்களிடம் எந்த விதமான விளையாட்டுகளையும் வைத்துக் கொள்ளக் கூடாது.

சமீப நாட்களில் சதுரகிரி மலைக்கு யாத்திரை செல்பவர்கள் அதிகமாகி விட்ட சூழ்நிலையில், தரிசனத்தை சுபமாக முடித்துக் கொண்டு பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்பது மட்டுமே ஒவ்வொரு பக்தரின் குறிக்கோளாக இருக்க வேண்டும்; அதை நடைமுறைப்படுத்தவும் வேண்டும்.

ஏற்கெனவே சொன்னது போல் தவசி குகையாகட்டும்அல்லது அது வேறெந்த குகையாகவும் ஆகட்டும். சம்பந்தப்பட்ட குகைக்குள் சென்று தரிசிப்பதற்கு இறையருள் பெற்ற சிலருக்கு மட்டுமே உத்தரவு கிடைக்கும். அவர்கள் சித்தர்களின் ஆசியோடு குகைக்குள் பயணிக்கலாம். மற்றபடி தவசி குகை போன்ற பிற குகைகளை ஒருபிக்னிக் ஸ்பாட்போல் என்றைக்குமே அணுகக் கூடாது.

கதைக்கு வருவோம்

சுந்தர மகாலிங்கம் சந்நிதியின் பின்புறம் உள்ள செங்குத்தானகரடுமுரடான மலைப் பாதையில் பயணித்து வேலனும், அந்த ஐந்து பேரும் தவசி குகைக்குச் செல்ல ஆரம்பித்தனர். இது ஆபத்தான பயணம் என்பதை அப்போது அவர்கள் உணரவில்லை. தாங்கள் எதிர்கொள்ளப் போகும் மோசமான பின்விளைவுகளை எவரும் அறிந்திருக்கவில்லை.

எங்கே, தவசி குகைக்கு அழைத்துச் செல்வதில் இருந்து பாதி வழியில் வேலன் பின்வாங்கி விடுவானோஎன்று மலை ஏறிக் கொண்டிருக்கும்போது ஐயப்பட்ட ஐவரும், ‘‘கவலைப்படாதே வேலாயாத்திரை நல்ல விதமாக முடிந்த பிறகு உனக்கு நிறைய பணம் தருகிறோம். சித்தர்கள் இன்றளவும் வாழ்கின்ற தவசி குகையையும் தரிசித்துச் செல்ல வேண்டும் என்பதே எங்கள் ஆவல்’’ என்றெல்லாம் வேலனுக்கு ஆசை காட்டி, அவன் பின்னால்பசுந்தோல் போர்த்திய புலி போல் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

வழியில் தென்பட்ட சில கற்களையும் பாறைகளையும், ‘‘இதெல்லாம் ஏன் இப்படி வித்தியாசமாக இருக்கிறது?’’ என்று, யாத்திரைக்குச் சம்பந்தமே இல்லாத சில கேள்விகளை அவர்கள் எழுப்பியபோது, தனக்கு அதெல்லாம் தெரியாது என்று மறுத்து, இறை சிந்தனையுடன் பயணித்துக் கொண்டிருந்தான் வேலன்.

ஒருவாறு சிரமப்பட்டு ஒரு மணி நேரப் பயணத்துக்குப் பிறகு அனைவரும் தவசி குகை இருக்கும் பகுதியை அடைந்தார்கள். குகைக்கு வெளியே நின்று வேலன் கண்களை மூடி வணங்கினான். ‘நிஷ்டைஎன்ற போர்வையில் அங்கேயே சம்மணமிட்டு அமர்ந்தார் குரு. அதன் பின் சீடனை அருகே அழைத்து, ‘‘வேலனுடன் நீ குகைக்குள் போய் வா. அங்கு இருக்கும் அற்புதங்களைக் கண்டு வா’’ என்றார் குரு. இதைக் கேட்டதும், வேலன் மறுத்தான். ‘‘நான் ஆரம்பத்திலேயே சொல்லி இருக்கேன். உள்ளே எல்லாம் போகக் கூடாது. தவசி குகையைப் பாக்கணும்னு சொன்னீங்கவெளியே இருந்து பாத்தாச்சு. வாங்க, புறப்படுவோம்’’ என்றான்.

பிறகு, சீடனும் விடாமல் வற்புறுத்தவேவேலன் இணங்க வேண்டியதாயிற்று. அரை மனதுடன் வேலன் குகைக்குள் செல்ல ஆயத்தமானான். அதாவது தரையில் படுத்து தவழ்ந்து உள்ளே செல்லும் முறையைத் தன்னைப் பின்தொடர்ந்து வரும் சீடனுக்கு விளக்கினான். இவர்கள் இருவரைத் தவிர, மற்ற நால்வரும் குகைக்குள் வரவில்லை. வெளியே அமர்ந்திருந்தனர்.

கொஞ்ச தூரம் தவழ்ந்து சென்ற பின், ஒரு கட்டத்தில் உட்கார்ந்த வண்ணம் பயணிக்க வேண்டும். பிறகு நின்ற வண்ணம் குகையைத் தரிசிக்கலாம். இப்படிக் கடந்த பின், ஒரு கட்டத்தில் வேலனுக்கு ஏதோ பொறி தட்டசீடனின் காதில் மிகவும் மெதுவாக, ‘‘குகைக்குள் இவ்வளவு தூரம் செல்வது எனக்குச் சரியாகப் படவில்லை. வா, போய் விடலாம்’’ என்றான். ஆனால், சீடனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. ‘இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு உள்ளே வந்து விட்டோம். குகைக்குள் இன்னும் என்னதான் இருக்கிறது என்று பார்த்து விடலாம்என்று விதி அவனை ஆசைப்பட வைத்தது. அப்போது குகையின் ஒரு மூலையை இவர்கள் இருவரும் யதேச்சையாகப் பார்க்கதுணுக்குற்றார்கள். திக்பிரமை பிடித்தாற்போல் ஆனார்கள்.

அங்கேஉடலில் ஆடையே இல்லாமல்அவதூத நிலையில் ஒரு துறவி தியானத்தில் இருந்தார். மீசையும் தாடியும் ஜடாமுடியும் வெண்ணிறத்தில் ஏகத்துக்கும் வளர்ந்து அச்சுறுத்துவது போல் இருந்தது அவரது தோற்றம். ஆனால், அந்த இடமே பெரும் இறை சாந்நித்தியத்துடன் திகழ்வதாக உணர்ந்தான் வேலன். ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகுவரக் கூடாத இடத்துக்கு வந்து விட்டோம் போலிருக்குஎன்று சிந்தித்த வேலன் மீண்டும் ஒரு முறை சீடனிடம், ‘‘வேண்டாம்இதற்கு மேல் நாம் முன்னேறிச் செல்லக் கூடாது. இது வரை நமக்கு அனுமதி கிடைத்ததே அதிர்ஷ்டம் என்று நினைக்கிறேன். வா, வெளியே போய் விடலாம். இது அவர்களுக்கான இடம்’’ என்றான், கிசுகிசுப்பாக.

ஆனால், விதி எப்படி எழுதி வைத்திருக்கிறது என்பதை யார் அறிவார்? வேலன் சொல்வதை சீடன் பொருட்படுத்தவே இல்லை. ‘‘இந்தக் குகைக்குள் இன்னும் என்னென்ன ஆச்சரியம் இருக்கிறது என்பதைப் பார்க்க நான் ஆசைப்படுகிறேன்’’ என்று சீடன் சொன்ன அடுத்த கணம் அந்த சம்பவம் அரங்கேறியது. துறவியின் பின்பக்கத்தில் இருந்து ஒரு மாயக் கரடி, கண் திறந்து கண் மூடும் நேரத்துக்குள்விருட்டெனத் தோன்றியது. அதுவரை அந்தக் கரடி அங்கேயே இருந்திருந்தால், நிச்சயம் இவர்கள் இருவரது பார்வையிலும் முன்னரே பட்டிருக்கும். ஆனால், அது படவில்லை.

அந்த மாயக் கரடியைத் திடீரெனப் பார்த்ததும் இருவரும் அரண்டு போனார்கள். பேசுவதற்கு எந்த வார்த்தையும் எழவில்லை. சாதாரண கரடியை விட இது மிகுந்த வளர்த்தியாகக் காணப்பட்டது. ஆபத்து தன்னை எதிர்நோக்குகிறது என்பதை உணர்ந்து கொண்ட சீடனின் உடல், குளிர்ஜுரம் வந்தவனைப் போல் பதறியது. ‘என்ன செய்யலாம்என்று சீடன் யோசிப்பதற்குள் அந்தக் கரடி பொசுக்கென அவன் மேல் வேகத்துடன் பாய்ந்தது. இதைப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர, வேலனால் அந்த நேரத்தில் ஒன்றுமே செய்ய முடியவில்லை. தன்னை நம்பி உள்ளே வந்த சீடனை விட்டு விட்டுத் தான் மட்டும் வெளியே தப்பிச் செல்லவும் அவனுக்கு மனமில்லை.

சீடனின் முகத்தைக் குறி வைத்துத் தாக்கிய கரடி, அவனுடைய தாவாங்கட்டையைப் பற்றி இழுத்துத் தாக்கியது. ஒரு சில விநாடிகளுக்குள் சீடனின் முகமெல்லாம் ரத்த மயம். ஆக்ரோஷத்துடன் கரடி அடித்த அடியில் சீடனின் தாடை தனியே கிழிந்து, நார் நாராகத் தொங்கியது. சீடனின் முகத்தில் ஆறாகப் பெருகிய ரத்தம், அவனது உடலெங்கும் கசிந்தது. நடக்கவே முடியாத நிலையில் ரத்தம் பெருககுகையின் வாசலை நோக்கி திக்பிரமை பிடித்தது மாதிரி தட்டுத் தடுமாறி ஓடினான் சீடன்.

இப்போது கரடியின் பார்வைவேலனின் மீது பாய்ந்தது. கண நேரத்தில் இதை உணர்ந்து கொண்ட வேலன், சீடனைத் தொடர்ந்து குகையின் வாசலை நோக்கி ஓட யத்தனித்தான். ஆனால், அந்த மாயக் கரடி புயல் போல் வேகமாகப் பாய்ந்து வேலனது தொடையைத் தாக்கி, அவன் உடுத்தி இருந்த வேஷ்டியைப் பற்றி இழுத்தது. உடல் நடுங்க, வேலன் அப்படியே நின்று விட்டான். பின்னர், கைகள் இரண்டையும் மேலே உயர்த்திக் கும்பிட்ட நிலையில் பெருங்குரல் எடுத்து, ‘‘முருகாஎன்னைக் காப்பாத்து’’ என்று அலறினான் (அதன் பிறகு நடந்ததை வேலன் இப்போது நினைத்தாலும், ஆச்சரியப்படுகிறான்). அடுத்த ஒரு சில விநாடிகளுக்குள், அந்த மாயக் கரடியே வேலனைத் தூக்கி, குகையின் வாசலை நோக்கித் தூர வீசியது.

குகைக்கு வெளியே நின்றிருந்த நால்வரும் பீதியில் பேதியாகி நின்றிருந்தார்கள். ரத்தம் சொட்டச் சொட்ட வெளியே ஓடி வந்த சீடனைப் பார்த்ததும் முதல் அதிர்ச்சி; அதன் பின், பொத்தென வெளியே தூக்கி வீசப்பட்ட வேலனைப் பார்த்ததும் அடுத்த அதிர்ச்சி!

வெளியே வந்து விழுந்த வேலனுக்கு ஆச்சரியமான ஆச்சரியம். தன் மேல் பாய்ந்த கரடி தன்னைத் தாக்கியதும், தொடைமேல் பாய்ந்து அடித்ததும் அவன் நினைவில் இருக்கிறது. ஆனால், அவன் உடலில் பொட்டுக் காயம் கூட இல்லை. சொட்டு ரத்தம் கூடக் கசியவில்லை. வியந்து போனான். ‘என்னைக் காப்பாற்றிய கடவுளுக்கு நன்றிஎன்று மனமார மலையை வணங்கி நின்றான். பிறகு, ‘‘இனி இங்கு ஒரு விநாடி கூட இருக்கக் கூடாது. நீங்கள் எல்லோரும் தவறான எண்ணத்துடன் இந்த மலைக்கு வந்திருப்பதாக எனக்குப் படுகிறது. அதன் விளைவுதான் இங்கு நடப்பதெல்லாம். உங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால், விரைந்து என்னுடன் வாருங்கள்’’ என்றான், அனைவரையும் நோக்கி.

சீடனின் உடலில் இருந்த வழிந்து கொண்டிருக்கும் ரத்தம் நிற்பதாகத் தெரியவில்லை. ஆனால், அங்கிருந்து நகர்வதற்கு குரு ஏனோ தயங்கினார். அப்போது வேலன், ‘‘உள்ளே இருக்கும் கரடி எப்போது வேண்டுமானாலும், வெளியே வந்து தாக்க முற்படலாம். நல்லவர்களுக்கு மட்டுமே இது நல்ல மலை. மற்றவர்களுக்கு இது பொல்லாத மலை’’ என்றான்.

இந்த நேரத்தில் அந்த மாயக் கரடி மீண்டும் பலத்த உறுமலுடன் குகையில் இருந்து வெளியே வந்தது.

குருவும் வெளியே அவருடன் அமர்ந்திருந்த மூவரும் அதிர்ந்து போனார்கள். உயரமான அந்த மலையில் ஓடுவதற்கும் ஒளிவதற்கும் இடமில்லை. கரடியின் வித்தியாசமான மிரட்டும் தோற்றம் வேறு அவர்களை பலமாக அச்சுறுத்தியது.

ரத்த சகதியில் குளித்தது போல் சீடன் ஒரு பக்கம் உயிருக்குப் போராடியபடி சுருண்டு கிடந்தான்.

வேலன் தனியே தவிப்புடன் நின்றிருந்தான்.

அவனுக்குத் தெரியும்அடுத்து என்ன நடக்கப் போகிறதென்று!

மாயக் கரடியின் அட்டகாசம் அதோடு நிற்கவில்லை. குகையில் இருந்து வெளியே வந்தது. குருவும் அவருடன் அமர்ந்து மற்ற மூவரும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த இடத்தின் அருகே பெரும் உறுமலுடன் பிரமாண்டமாக நின்றது. முதலில், இதைப் பார்க்க நேரிட்ட குருவும், அவருடன் இருந்த மற்ற மூவர்களும் விதிர்விதிர்த்து விட்டனர். இது போன்ற ஆக்ரோஷமான கரடியை அவர்கள் இதுவரை எங்குமே பார்த்ததில்லை.

மாயக் கரடி, குருவுடன் இருந்த மூவரையும் முதல் கட்டமாக சகட்டுமேனிக்குத் தாக்க ஆரம்பித்தது. முகத்திலும் உடலிலும் அது தாக்கிய தாக்குதலில் வியாபாரி, அவரது நண்பர், வைத்தியர் ஆகிய மூவரும் ரத்தக் குளியலிலே நனைந்தனர். ‘தான் மட்டும் தப்பித்தோம்என்று எண்ணிய குருவானவர் மெள்ளத் தப்பிக்க வழி பார்க்ககரடி இன்னும் ஆக்ரோஷமாக குருவைக் குறி வைத்து அவர் மேல் பாய்ந்தது. அவரது உடல் தசையைக் கிழித்தது. இதன் காரணமாக குருவின் உடல் உள்ளிருக்கும் எலும்பு வெளியே துருத்திக் கொண்டு தெரிந்தது. அந்த மாதிரியான பாய்ச்சலான ஒரு தாக்குதல். ஆனால், வேலன் இருக்கும் பக்கம் கரடி திரும்பவே இல்லை.

ஏற்கெனவே ரத்த விளாறாகக் காட்சி அளித்த சீடன் ஒரு பக்கம் உடல் உபாதையால் துடிதுடித்துக் கொண்டிருந்தான். தவிர குருவும், அவரோடு வெளியே காத்திருந்த மூவரும் கிட்டத்தட்ட சீடனின் நிலைக்கே இப்போது வந்து விட்டனர். அதாவது, அவர்கள் அனைவரும் படும் உடல் அவஸ்தை ஒரே மாதிரி இருந்தது.

தீய எண்ணங்களைக் கொண்டிருந்த அந்த குரு, வேலன் சொன்ன கருத்தை இப்போது நினைத்துக் கொண்டவராக, ‘எப்படியாவது இங்கிருந்து தப்பித்துச் செல்ல வேண்டும்ஒரு விநாடி கூடத் தாமதிக்கக் கூடாது. அப்படி இங்கேயே இருந்தால் இன்னும் என்னென்ன விபரீதங்கள் நிகழுமோ?’ என்று புலம்பித் தவித்தார். உடலெங்கும் ரத்தக் காயங்கள் இருந்தாலும், அந்த அவஸ்தைகளையும் தாங்கிக் கொண்டு தவசி குகையை விட்டுப் புறப்பட முற்பட்டார் அவர். ஆனால், சீடனின் நிலைமை அப்போது அங்கிருந்து புறப்படக் கூடிய நிலையில் இல்லை. எனவே, அவனைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல், மற்ற மூவரையும் தன் பின்னால் நடந்து வருமாறு சொல்லி ரொம்பவும் தளர்வாக நடை போட ஆரம்பித்தார் குரு.

‘‘சீடனை இப்படி விட்டு விட்டுச் செல்வது முறையா?’’ என்று வேலன் கேட்ட பிறகுதான், குருவும் மற்றவர்களும் அங்கேயே நின்றனர். ‘சீடன் இருக்கும் நிலையில், அவனால் நடந்து வர முடியாது. கரடியால் தாக்கப்பட்டவர்களில், சீடன்தான் ஏகத்துக்கும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறான். இவன் கீழே வருவதற்குப் பிறரது உதவி தேவைஎன்று குரு தீர்மானித்தார்.

பிறகு, குகையின் முகப்புக்கு வந்தார் குரு. அங்கிருந்து பார்த்தால், சுந்தர மகாலிங்கம் கோயில் பகுதியும் அங்கு நடமாடுபவர்களும் லேசாகத் தெரியும். எனவே, முகப்பில் ஜாக்கிரதையாக நின்று கொண்டு, கீழே சுந்தர மகாலிங்கம் கோயிலைப் பார்த்து, வேகமாகக் கைதட்டி, உதவிக்கு வருமாறு குரல் கொடுத்தார் குரு. ஆனால், மேலே தவசி குகையில் நடந்த களேபரங்கள் அனைத்தையும் சுந்தர மகாலிங்கம் கோயிலில் இருந்த பக்தர்கள் கேட்கத் தவறவில்லை. ஏதோ, விபரீதமான விளையாட்டால் சித்தர்களின் சோதனைகளுக்கு அவர்கள் உள்ளாகி இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்ட எந்த ஒரு பக்தரும், மலைவாசிகளும் இவர்களுக்கு உதவ முன்வரவில்லை. ‘தப்பு செய்தவர்களை ஆண்டவன் தண்டிக்கிறான். இதில் நாம் குறுக்கிடக் கூடாதுஎன்று அனைவரும் ஒதுங்கிக் கொண்டனர்.

அதன் பிறகு, வேலனின் உதவியுடன் இவர்கள் ஐவரும் மெள்ள மெள்ள நடந்து சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு வந்தனர். இவர்களுக்கு உதவுவதில் பலருக்கும் உடன்பாடில்லைதான். என்றாலும், மனிதாபிமானம் கொண்ட ஒரு சிலர்போனால் போகிறதுஎன்று காயங்களுக்கு ஏதோ மருந்துகளைத் தடவினர். அவர்கள் பசி ஆறுவதற்கு உணவு கொடுத்தனர்.

சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு வந்தாயிற்று. இனி, கீழே அடிவாரம் புறப்பட வேண்டுமே? ரொம்பவும் கெஞ்சிக் கூத்தாடி, இந்த ஐவருக்கும்டோலி’ (ஒரு கொம்பில் தூளி போல் கட்டி, அதில் சம்பந்தப்பட்டவர்களைப் படுக்க வைத்துக் கூட்டி வருவது. மலைவாசிகள் சிலர் இதற்கென இருக்கிறார்கள்) ஏற்பாடு செய்து, அவர்களைக் கீழே கொண்டு வர ஏற்பாடு செய்தான் வேலன். முக்கலும் முனகலுமாக இவர்களின் பயணம் தாணிப்பாறையை நோக்கி ஆரம்பமானது.

வழியில்கோரக்கர் குகை வரும்போது குரு மற்றும் சீடனுடைய உடல் அவஸ்தை அதிகமானது. வலியால் துடிக்க ஆரம்பித்தனர். மலைவாசிகளும் வேலனும் எவ்வளவோ சமாதானம் சொல்லியும், அவர்களால் வலியைப் பொறுக்க முடியவில்லை. கோரக்கர் குகையின் ஓரமாக அவர்களை இறக்கி வைத்துவிட்டு, சற்று ரிலாக்ஸ் ஆனார்கள் மலைவாசிகள். அப்போது வேலன் மட்டும் கோரக்கர் குகை இருக்கும் இடத்துக்கு விறுவிறுவென்று நடந்து சென்றான். அவரது குகைக்கு முன்னால் தியானத்தில் அமர்ந்தான். ‘என்னுடன் வருகிற இருவரது வலியையும் சித்த புருஷராகிய நீங்கள்தான் போக்க வேண்டும். அவர்கள் நல்லவர்களோகெட்டவர்களோஅவர்கள் படும் அவஸ்தையை என்னால் காண முடியவில்லை. அவர்கள் தவறே செய்திருந்தாலும், இந்த மலையை விட்டுக் கீழே இறங்கும்வரை தொந்தரவு தராதீர்கள்என்று கோரிக்கை வைத்தான்.

பிறகு, மானசீகமாக வணங்கிவிட்டு எழுந்து நடந்து வந்தான். எந்த இடத்தில் அமர்ந்து வேலன் தியானம் செய்தானோ, அந்த இடத்தில் இருந்து பிரகாசிக்கும் ஓர் ஒளி புறப்பட்டு அந்தரத்தில் பயணித்து, குருவையும் சீடனையும் அடைந்தது. வேலன் மட்டும் இதைக் காணும் விதமாக அவர்கள் இருவரின் உடலுக்குள்ளும் அந்த ஒளி புகுந்தது. உடலுக்குள் மறைந்தது. அதற்கடுத்த சில நொடிகளிலேயே குருவையும் சீடனையும் தூக்கம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்தது. டோலிக்குள் நன்றாக உறங்கினர். மலைவாசிகள் எந்த விதமான சிரமமும் இல்லாமல் இவர்களைத் தூக்கிக் கொண்டு வந்து தாணிப்பாறையில் இறக்கி விட்டனர். வேலனின் வேண்டுகோள்படி, இவர்கள் இருவரையும் நன்றாகத் தூங்க வைத்து, அந்த வலியை மறக்க வைத்து விட்டார் கோரக்கர்.

அடிவாரம் வந்த பிறகுதான் வேலனுக்குத் தெம்பு வந்தது. ஸ்ரீவில்லிபுத்தூரிலும் ராஜபாளையத்திலும் சிகிச்சை செய்து கொள்ள இவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. உடலில் இருக்கின்ற காயங்களைப் பார்த்து விட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்க, சம்பந்தப்பட்டவர்கள் மறுத்து விட்டனர். இதன் பின் வேலனே இவர்களை அழைத்துக் கொண்டு மதுரைக்குச் சென்று அங்கு ஒரு மருத்துவமனையில் சேர்த்து விட்டுத் திரும்பினான்.

இன்றைக்கும் அந்த வேலன் சதுரகிரியில்தான் தனது பணிகளைத் தொடர்ந்து வருகிறான். ஒவ்வொருவருக்குள்ளும் ஏதோ ஒரு சோகக் கதை இருக்கும். ஆனால், சோகமே வாழ்வாகிப் போனது வேலனுக்கு, ஆரம்ப நாட்களில்.

சரிவேலன் கதையை நாம் எங்கிருந்து துவங்கினோம் என்று நினைவிருக்கிறதா?

சதுரகிரிக்கு வந்த சதாசிவம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பக்தர், படுத்துக் கொண்டிருந்தபோது நள்ளிரவில் விழிப்பு வந்து தியானத்தில் அமர்ந்தார் என்று சொல்லி இருந்தோம்.

அவருடைய அந்த தவத்தின்போதுதான், தவசி குகையில் யாரோ சிலரை மாயக் கரடி தாக்குவதை உணர்ந்தார். தனக்கு இப்படி ஒரு நிகழ்வுஅதுவும் தியானத்தின்போது ஏன் வர வேண்டும் என்று அப்போது விடை தெரியாமல் விழித்தார் சதாசிவம். ஆனால், இந்த தியானத்துக்கு ஒரு மாதத்துக்குப் பின் வேலனை சந்தித்தபோதுதான், சில வருடங்களுக்கு முன் தனக்கு நேர்ந்த இந்த மாயக் கரடி நிகழ்வை சதாசிவத்திடம் சொல்லி இருக்கிறான் வேலன்.இறைவன் எதையும் காரணம் இல்லாமல் கொடுக்க மாட்டான். தியானத்தில் தான் உணர்ந்த சம்பவம் சில வருடங்களுக்கு முன் தவசி குகையில் உண்மையிலேயே நடந்ததுதான் என்பதை அறிந்த சதாசிவம் வெலவெலத்துதான் போனார்.